Tuesday, 24 August 2021

சண்முகம் யாழிசைசெல்வா

   சண்முகம்  01  

                           👣 யாழிசைசெல்வா👣


      ஊருக்கிட்ட வந்தாச்சு….

     அழுத்தமான போர்வைய வச்சு மூடின மாதிரி…  மையிருட்டுப்போல  சூழ்ந்துக்கிட்டு வானம் இருளப்பரப்பி வந்ததால… எதுக்காலெ தெரிஞ்ச ரோடு சுத்தமா கண்ணுக்குத்தெரியல…. 

    வருசமெல்லாம் வந்து பழகினதால மாடுகரெண்டும் வண்டிய இழுத்துக்கிட்டு ஒரே சீரானவேகத்துல போய்க்கொண்டுருந்துச்சு. மாட்டுவண்டில அடுக்கிவச்ச நெல் மூட்டைமேல ஒய்யாரமா உருமாக்கட்டி ராசாமாதிரி உக்காந்தபடி பாரவண்டிய ஓட்டிக்கிட்டு வந்தான் வேலய்யா.

     எப்படியாப்பட்ட ரோடாயிருந்தாலும் சமாளிச்சு பதமா மாடுகள பத்திக்கிட்டு சரக்குகள பத்திரமா சேரவேண்டியயிடத்துல சேர்த்துடுவான். தேவையில்லாம மாடுகள விரசமாட்டான். பத்துவருசமா இந்த காளமாடுக வேலய்யாகிட்ட இருக்கு. பெத்த புள்ளயப்போல கண்ணுக்குகண்ணா அதப்பாத்துக்கிட்டான். அவனுக்கும் அவன் பொண்டாட்டிகருப்பாயிக்கும் சண்ட வாரதே இந்த மாடுகளவச்சுத்தான்.

    “எப்பப்பாரு மாமா… இந்த காளமாடுகள கட்டிக்கிட்டு மாரடிக்கிறியே தவிர உனக்கொரு பொண்டாட்டி இருக்கத மறந்தேபோற... ஆமா…” 

    “அறிவில்லாம பேசாத… அதுக ஒளச்சுப்போட்டாத்தான் நீயும் நானும் சோறு தின்ன முடியும்… ஞாபமிருக்கட்டும் …”

    “ஆமா. எப்பப்பாரு இதேயே சொல்லு… அதுகமேல காட்டுற பாசத்துல கொஞ்சத்த எம்மேலயும் காட்டலாமுல… “ ஏக்கத்தோட சொன்னா கருப்பாயி.

    “அப்படி இல்ல கருப்பி.” அவகிட்டவந்து கருப்பாயி குழிவிழுந்த கண்ணத்த வலதுகைவிரலால ஆசையா தடவிக்கொடுத்தான் வேலய்யா.

    வெட்கப்பட்டு நாணுணவ வேலய்யா தோளுமேல சாஞ்சுக்கிட்டா.

    “கருப்பி…” என்றதும் தோளிலிருந்து முகத்தை உயர்த்தி  வேலய்யாவோட கண்ணையே பாத்தா கருப்பாயி.

    கருநாகம் போல பரவிக்கிடந்த தலைமுடிய அள்ளிஎடுத்து கோடாலி கொண்ட போட்டிருந்தா . கொண்ட முடியசுத்தி துளியுண்டு மல்லிகை சரத்தை சொருகி வச்சியிருந்தா. அதுலயிருந்த வாசம் கம்மென்று பரவி நாசியில் ஏதேதோ செய்திருக்கவேண்டும் வேலய்யாவுக்கு… கருப்பாயிய அள்ளி அனைத்து நெத்தியில முத்தமிட்டான். 

   “ மாமா…” என்றாள் . 

   “ம் .. சொல்லு”

    “கொஞ்சும் போது கூட ஓன் மாடுகள கொஞ்சிறமாதிரி தான் தெரியுது…”

    “அப்படியா … எனக்கு அப்படித்தெரியிலியே…”

   “ஒனக்கெப்படித்தெரியும். நீ தான் எப்பப்பாத்தாலும் மாடுககூடவே மாடுகமாதிரி திரியுற…”

    “மறுபடியுமா…”

    “போ... மாமா … உண்மையத்தான சொன்னேன்…” 

    “அடி கருப்பி … ஒன்ன… “ கையை ஓங்கிக்கொண்டு ஓடிவந்தவனை வாரி எடுத்து நெஞ்சோடு அனணத்துக்கொண்டாள்.

  “  மாமா … என்ன அவ்வளவு பிடிக்குமா…?” ஆவலுடன் கேட்டாள். 

   “ஆமா புள்ள…ஏன் கேட்குற…?”

   “கல்யாணமான புதுசுல எப்பலாம் எம்மேல பாசம் வருதோ அப்பலாம் கருப்பினு சொல்லுவேனு சொன்னியே…” என்று சொல்லி ஏக்கமுடன் பாத்தா.

   “அதுக்கென்ன இப்ப…”

   “இப்ப அடிக்கடி கருப்பினு சொன்னியே…”

   “ஓ…அதுவா…” என்றான் வேணுமிண்டே அவளை வம்புக்கிழுக்கும் விதமாக.

    “என்ன  மாமா… அப்ப சொன்னதெல்லாம் பொய்யா…?” என்றாள் கண்ணை கசக்கிக்கிட்டு .

   “யே.. லூசுக்கழுத … சும்மனாச்சும் சொன்னேன்டி…” என்றான் பதறிக்கொண்டு அவளை தேத்த முயன்றான்.

    “நல்லா ஏமாந்தியா…”னு அலகு காட்டி சிரிச்சா கருப்பாயி.

   “உன்ன…” என்றவன் அவளைப்பார்த்து “நேரமாகுது. சண்முகம் மாமா வெரசா வரச்சொன்னார். சீக்கிரம் சோத்தப்போடு.” வாசலில் வச்சிருந்த வாளியிலிருந்து தண்ணிய அள்ளி ஊத்தி கை கால கழுவிட்டு வந்து உக்காந்தான். வெங்கல கும்பாவுல சோத்துப்போட்டு மோரஊத்தி அதுமேல நாட்டுவெங்காயத்தப்போட்டு அவன் கிட்ட கொடுத்ததும் நறுபுறுனு பிசைஞ்சு வெங்காயத்த கடிச்சுக்கிட்டு விறுவிறுனு அள்ளிச்சாப்பிட்டுட்டு கை கழுவிட்டு கிளம்பினான். 

     “கருப்பி….  நான் கிளம்புறேன் புள்ள…” மாடுகள அவுத்துக்கிட்டு கிளம்பினான். 

    “பாத்து சுதானமா போங்க… வர நாளாகுமா… மாமா…”

    “கோட்டிக்காரி எங்க போற, எப்ப வருவேணு கேட்காம கேக்குறியா…” என்றவன் தொடர்ந்து “எனக்கெப்படித் தெரியும். சண்முகம் மாமா என்ன திட்டத்துல இருக்காரோ… அவருக்கு வேண்டிய மட்டும் நெல்லு வாங்கினப்பதான் எப்ப வருவோம்னு தெரியும். அவரு எப்பவுமே போறதப்பத்தி சொல்ல மாட்டார்… பாத்துக்கபுள்ள வாரேன்.”

    “போய்ட்டு வாரேனு சொல்லுமாமா…”

   “சரிபுள்ள… போய்ட்டு வாரேன்…” சொல்லிக்கொண்டே அவளை ஆசையோடு பாத்தபடி வண்டியில் மாடுகளை பூட்டி சண்முதத்தோட வீட்டநோக்கி முடுக்கினான்.

    காலைல நடந்தத நினைச்சு நினைச்சு சிரித்துக்கொண்டே வண்டிய ஓட்டிக்கிட்டுயிருந்தான் வேலய்யா.

    ஏறுநெத்தி, முட்டைக்கண்கள், அருவாமீசை,  இளந்தொந்தி ,ஒழைச்சு காச்சுப்போன சாட்டையா நீளமான கை காலுக்கு போட்டியா வைரம் பாஞ்சமாதிரி நெஞ்சு , அதுமேல புசு புசுனு அடர்த்தியான வனம் மாதிரி ரோமக்காடு, அஞ்சடிக்கு சற்று குறைவாகயிருந்தாலும் வஞ்சனையில்லாம ஒழைக்கப் பெறந்த தேகமுனு சொல்லாமசொல்லுச்சு உரமான உடல்கட்டு. கிராப்பு வெட்டுன கேசம் அடிக்கிற ஊதக்காத்துல அலங்கோலமா களைஞ்சு கிடந்துச்சு. எதயும் சட்டபண்ணாம கருமமே கண்ணாக வண்டிய ஓட்டிக்கிட்டுருந்தான் வேலய்யா.

    ஒரு வேலய எடுத்துக்கிட்டா அதமுடிக்கிறவரைக்கும் பொறுப்பா இருப்பான். தேவையில்லாம பாரவண்டிகள விரட்டி ஓட்டுறதோ மாடுகள அடிச்சு துன்புறுத்துறதோ செய்யமாட்டான். மாடுகள பதமா தட்டிக்கொடுத்து வண்டியிலயிருக்கிற பொருள சேதமாகாம கொண்டு வந்து சேர்க்கிறதுல  பெரிய கில்லாடி. அதனாலதானோ என்னவோ சண்முகத்திற்கு வேலய்யாவ ரெம்பப்புடிச்சுபோச்சு. வேல எவ்வளவு சுத்தமோ அவ்வளவு சுத்தம் பேச்சுலயுமிருக்கும். வேலய்யா ஒருவகையில தூரத்துச்சொந்தம்…  அதுவுமில்லாம சண்முகத்தோட அப்பா அய்யனாரோட கூட்டாளி மருதையன் மகன். வேலய்யாவோட அப்பா காலமான பெறகு வண்டி மாடு வாங்கி தேனி சந்தைக்கு நெல்லு, கம்பு, கேப்பை, சோளம் ஏத்திக்கிட்டு போய்ட்டு வார வேல பாத்து வந்தான். வேலய்யாவோட நேர்மையைக்கண்டு அவன தன்னோட ஏவாரத்துக்கு தொனையா சேர்த்துக்கிட்டான் சண்முகம். அதுலயிருந்து ஊர் ஊராப்போய்  சின்னச்சின்ன வெவசாயிங்ககிட்ட நயந்து பேசி நெல்லுமூட்டைகள வாங்கிச்சேர்த்து அத வாரத்துக்கொருமுறை தேனி சந்தைக்கு வேலய்யாவோட மாட்டுவண்டில பாரம் ஏத்தி அனுப்பி வித்து ஏவாரம் பாத்து வந்தான்.

    சிலநேரங்களில சண்முகம் ஏவாரத்துக்காக வெளியூர் போனப்ப வேலய்யாவ நம்பி நெல்லுமூட்டைகள ஏத்தி தேனி சந்தைக்கு அனுப்பி வச்சான். அவனும் தேனி சந்தையில வழக்கமா விக்கிர ஏவாரிகிட்ட வித்து பணத்த எண்ணிவாங்கி  இடுப்புவேட்டியிலவச்சுக்கிட்டு, அதோட பணம் தெரியாமயிருக்க தலைக்கு கட்டின துண்ட எடுத்து அதுமேலகட்டினான் வேலய்யா. ஊர் திரும்புறப்ப களவாணிபயலுக யாரும் பரிச்சுடக்கூடாதுங்கிற முன்யோசனையில அப்பிடி பண்ணிக்கிட்டான். 

    சந்தையிலயிருந்து ஊருக்கு வந்ததும் சண்முகத்தோட பொண்டாட்டி அலமேலுகிட்ட பணத்தை சரியா  எண்ணிக்கொடுத்த பெறகுதான் வண்டியப் பத்திக்கிட்டு வீட்டுக்கு போவான் வேலய்யா.

    வேலய்யா மேல அதிதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் சேர்த்தே சண்முகம் வச்சிருந்தான். அதுல ஒருநாளும் குறையாதபடி பாத்துக்கிட்டான் வேலய்யாவும்.

    ரெண்டு நாளா அளஞ்சி பெறக்கி ஒருவழியா பத்துமூட நெல்ல வாங்கியிருந்தான் சண்முகம். அடுத்தவாரச் சந்தைக்கு தேவையான நெல்லுகிடைச்ச தைரியத்துலயிருந்த சண்முகத்தோட நம்பிக்கையை சோதிக்கிறமாதிரி ஒரு சம்பவம் அன்னக்கி நடந்துச்சு அதப்பாத்த சண்முகத்திற்கு கையும் ஓடல காலும் ஓடல…

(தொடரும்…)


Wednesday, 28 July 2021

மண்ணும் மழையும் - யாழிசைசெல்வா

         👣    மண்ணும் மழையும்  👣

                       💞 யாழிசைசெல்வா 💞

    வெடிச்ச வெள்ளரிப்பழம்போல கீத்துக்கீத்தா விரிசலோடி ரத்தம் சுண்டின கிழவிமுகமாட்டம் இரண்டுவருசமா மழைதண்ணியில்லாம காய்ஞ்சு கரடுதட்டிப்போய்கிடந்த மானாவாரிநிலத்துல அத்திபூத்தமாதிரி போனமாசம் போனாப்போகட்டும்னு பேய்ஞ்ச மழையை நம்பி நிலக்கடலையை விதைச்சு வச்சிருந்தாரு குருசாமிக்குடும்பர்.   

    வெதக்கல்லை வாங்குரதுக்கே பணமில்லாம என்னாடா செய்யரதுனு  அள்ளாடினப்ப காதுலகிடந்த கம்மல கழட்டிக்கொடுத்தா அவரோட மக பழனியம்மா.

    "வேணாந்தாயி.... பொட்டப்புள்ள போட்டுருக்கிர கம்மலகழட்டவேணாம். வேற எதாவது வழி பண்ணிக்குவோம்..."

     "இருக்கட்டும்ப்பா... அவசரத்துக்கு பயன்படாத கம்மல் எதுக்கு...?"

    "அதில்ல தாயி... படிக்கிரபுள்ள ... நாலுபேரு மின்னால பாக்க அசிங்கமா இருக்கும்..."

    "தங்கத்துக்குபதிலா பிளாஸ்டிக்கம்மல போட்டுக்கிறேன். அறுவடை முடிஞ்சதும் திருப்பிக்கொடுங்க..." சொல்லிக்கொண்டே கம்மல கழட்டி எடுத்து தகப்பன்கையில திணிச்சா பழனி.

    பொசுக்குனு கண்ணுலயிருந்து கண்ணீர் ததும்பி பழனி கம்மல கைல திணிச்சப்ப அவகைமேல பட்டு தெரிச்சு விழுந்தது. "ஏம்ப்பா... இதுக்கெல்லாம் போயி... நீங்க என்ன திருப்பி தராமலா போகப்போறீங்க..." தகப்பன் தோளுல சாஞ்சுக்கிட்டா பழனி.

     பொட்டப்புள்ள காதுல கிடக்குற குண்டுமணி தங்கத்தயும் அடமாணம் வச்சுத்தான் இந்த பாழப்போன விவசாயம் பாக்கனுமானு ஒரு ஆட்டம் ஆடித்தீர்த்துவிட்டா அவரோட பொண்டாட்டி செல்லாயி. 

     எப்படியும் விளைச்சல் கைகுடுக்குங்கிர  நம்பிக்கையோட விதைச்சதுல, கடலை மொளச்சு பூவும் பிஞ்சுமாகுற பருவத்துக்கு வந்துருச்சு. அப்படியே களைய வெட்டிவிட்டதும் ரெண்டு மழைபேய்ஞ்சா விளைச்சல் கண்டிடும்கிர நம்பிக்கை ஆத்தாளுக்கும் மகளுக்கும் தொத்திக்கிருச்சோ என்னவோ பக்கத்துவீட்டு பூரணியை மட்டும் கூட்டிக்கிட்டு வெள்ளனாவே களைவெட்ட மேலக்காட்டுக்கு வந்துருந்தாளுங்க.

    உச்சிவெயிலு மண்டைபொளந்துகிட்டுயிருந்ததால மூஞ்சிமுகரை அம்புட்டும் வேர்த்து  தண்ணி சொட்டு சொட்டா பூமிலவிழுந்தப்ப தீயிலவிழுந்த புளுவாட்டம் பொசுங்கி வெசுக்குனு காணமப்போச்சு, இத பாக்குரதுக்கோ விசனப்படுரதுக்கோ அவளுகளுக்கு நேரமில்லாதமாதிரியும் பொழுதுக்குள்ள களையவெட்டி முடிக்குனுங்கிர முடிவோட வந்ததுலயிருந்து எதுவும் பேசாம 'கட்டுகட்டுனு' கொத்தவச்சு களைய வெட்டிக்கிட்டுருந்தாளுங்க மூணுபேரும்.

     நல்ல ஆகிருதியான மழைப்பாம்பு காட்டுமான முழுங்கிச்செரிக்கமுடியாம அப்படியே நெழுஞ்சிகிட்டு படுத்திருக்கிர தோரனணயில வளைஞ்சு நெழிஞ்சி,  பரந்துவிரிஞ்சு கிடந்த மேற்குத்தொடர்ச்சிமலையில ஓங்கிஉயர்ந்த ஆலமரம், அரசமரம், புளியமரம், மாமரம், செம்மரம், ஈட்டி, கருங்காலி,வாதநாராயணன், புங்கமரம், பூவரசு, கொய்யாமரம், கொடிக்காமரம், மலைவேம்பு, இலந்தமரங்களும் நெருஞ்சி முள் புதர்களும், வெள்ளப்பூலான் பூதர்களும் செடிகளும் கொடிகளும் செழித்து கொழித்து காயும் கனியுமாக  பாக்குறதுக்கே அவ்வளவு பசுமையா கண்ணுக்கு குளிச்சியா இருக்கிற மலை...  காஞ்சுபோய் பாக்கவே பரிதாபமாகயிருந்துச்சு. 
போதும் போதாதுக்கு வெறகு பெறக்கபோற ஆம்பளைங்களும் பொம்பளைங்களும் தங்களோட சுயலாபத்துக்காக நெருப்புவச்சதால முக்காவாசி காடே எரிஞ்சுபோச்சு. கொத்த தெரியாதவன் கிட்ட அம்மிய குடுத்தமாதிரி தூரத்துலயிருந்து பாக்கும்போதே மலைல எத்தனை மரம், செடினு எண்ணிடலாம் அவ்வளவு சுளுவாயிருந்துச்சு.

    மழைதண்ணியில்லாததால கொஞ்சப்பேரு மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அந்தப்புறமிருக்க கேரளாவுக்குள்ள வேலைக்கு தினசரி போய்ட்டு வந்தாங்க. மலையைத்தாண்டி கேரளாவுக்குள்ள போகுறதுக்கு சாக்குலத்துமெட்டு ஒத்தையடிப்பாதை ஒன்னுயிருந்துச்சு அதுவழியா ஊர்க்காரங்க காலங்காலமாக கொஞ்சப்பேர் வேலைக்கு போகவும்  கொஞ்சப்பேர் கால்நடையா கேரளாவுக்கு போற வழியாவும் பயன்படுத்திவந்தாங்க. தேயிலை பறிக்கிறது, தேயிலைக்கு கவாத்துவெட்டுறது, ஏலக்கா  மூட்டை சுமக்கிறதுனு ஆம்பளைங்களும்,  களைபறிக்கிறது, தேயிலை பறிக்கிறது, ஏலக்காய்எடுக்க, காப்பிக் கெட்டை பெறக்க, மெளகு பறிக்கனு அவுங்கஅவுங்களுக்கு தோதுபட்ட வேலைய பாத்து அன்றாட பொலப்ப ஓட்டிக்கிட்டுயிருந்தாங்க.

     மானாவாரி நிலத்துலகிடந்து மல்லுக்கட்டுரதவிட நாமளும் போய் அங்கிட்டு வேலசெஞ்சு நாளுகாசு பாக்கலானு பாத்தா இந்தமனுசனோட சேர்ந்து நாமளும் மல்லுகட்ட வேண்டியிருக்கேனு மனசுக்குள்ளயே மறுகிக்கிட்டா செல்லாயி.

    என்னதான் ஆசையிருந்தாலும் அடுத்தவன்கிட்டபோய் கைகட்டி வேலபாக்குறத நெனைச்சுதும்  நெஞ்சே அடைக்கிர மாதிரி இருந்துச்சு அவளுக்கு.  சொந்த நிலத்துல பாடுபடுரதிலயிருக்க சந்தோசம் அதுல கிடைக்குமா....  ' நம்ம நிலம் நம்ம இஷ்டத்துக்கு எப்பவேணா வரலாம் போலாம்.... யாருகேப்பா.... 'னு நெனச்சுக்கிட்டா.

    'கரட்டு கரட்டு'னு கொத்த வச்சு களைய வேகவேகமாக வெட்ட ஆரம்பிச்சா செல்லாயி. வேலனு வந்திட்டா அவகூட சரிக்குச் சரியா யாரும் வேலசெய்ய முடியாது. அவ்வளவு வெரசாவும் சரியாவும் வேலையை செய்யிறதோட கூட வேலபாக்குறவங்களப்பாத்து 'ப்பூ ' இம்புட்டுதானா உங்க திறமைனு கேலிபண்ணிச் சிரிக்கிர மாதிரி அத்தனை சுளுவ முடிச்சிட்டு அடுத்தவங்க நிறையில பாதிக்களைய வெட்டி முடிச்சி நிப்பா செல்லாயி. இதனாலேயே இவ தோட்டத்துக்கு வர்ரபொம்பளங்க சுதாரிப்பா வேல பாப்பாளுங்க...

     காட்டோட  எல்லைகளை அளந்துவச்சமாதிரி வேலிபூராவும் காட்டாமணக்கு செடிகளும் பூலான் புதர்களும் படர்ந்து பரவிக்கிடந்துச்சு.  மேக்காலருந்து வீசின சுள்ளென்ற காத்து புழுதியச்சுருட்டி வேலசெஞ்சுகிட்டுருந்த செல்லாயி, பழனியம்மா, புரணி முகத்துமேல அடிச்சிட்டு போயிருச்சு.  தூசியும் தும்புமா முகத்துல காத்தடிச்சதால " காத்துவாயில மண்ணல்லிப்போட..." னு சொல்லிக்கிட்டே வாயிலபுகுந்த மண்ணை "த்தூ...த்தூதூ"னு துப்பினா செல்லாயி.

    ஆத்தாவோடவசவ கேட்டதும் பக்கத்துலவேல பாத்துகிட்டுயிருந்த பூரணிகிட்ட ஏதோ சொல்லிச் கெக்கேபிக்கேனு சிரிச்சுவச்சா பழனியம்மா.

    "அங்க என்னடி பொல்லாத சிரிப்பு வேண்டிக்கிடக்கு...  வேல நேரத்துல...." என்றாள் கடுப்பாக செல்லாயி.

    "நீ சொன்னததான காத்து செஞ்சிட்டு போச்சு.... அததான் சொல்லி சிரிச்சேன்...." என்றாள் பழனி.

    "நீ ஏண்டி சிரிக்கமாட்டே.... என் பொழப்பு அப்பிடிகிடக்கு...." என அலுத்துக்கொண்டவள் " சரி வாங்க ரெண்டு வா சாப்பிட்டுட்டு வேலைய பாப்போம்..." என்றாள் செல்லாயி.

    "ஓன் புழப்புக்கென்ன... எங்கப்பன் நல்லாத்தானே வச்சிருக்கு. ஒன்னோட அண்ணன் தான் வெளையிர பம்புசெட் தோட்டத்த அவுரு வச்சுக்கிட்டு ஒன்னுக்கும் உதவாத மானாவரிகாட்ட ஓன்தலையில கட்டிட்டாரு  " கேலி பண்ணி சிரித்தாள் பழனியம்மா.

     "அடிசெருப்பால... ஆயிரந்தேன் இருந்தாலும் அவன்தான் ஒன்னோட தாய்மாமன். அவன் தயவு தேவை."

     "ஒங்க அண்ணனப்பத்தி பேசுனா பொறுக்காதே... அப்படியென்ன சொல்லிட்டேன். இந்த சீறுசீறுற... நான் சொன்னதும் உம்மதான..."

     "எல்லாம் சரிதாண்டி. என்னபண்றது.. பொம்பளச்சிரிக்கி நீ பொறந்திருக்கியே. சடங்கு, காதுகுத்து, கல்யாணம்னு ஒவ்வொன்னுக்கும் அவந்தான் முறைசெய்யனும் அதுக்கு அவங்கிட்ட சத்துவேணாமா... பூரத்தையும் நான் புடுங்கிட்டு வந்துட்டா அவன் எதப்போட்டு செய்வான். எல்லாம் ஒரு கணக்குதாண்டி".

    "என்னமோ போ..."  காட்டோட வலதுமூலைல ஓங்கியுயர்ந்து  தகிக்கிற வெயிலுக்கு தோதா  நிழல்குடைவிரிச்சிருந்த  வேப்பமரத்துக்கிளை ஒன்னுல மாட்டிவச்சுருந்த தூக்குவாளிகளை எடுத்துவச்சு உக்காந்தா பழனியம்மா.

    அதுக்குள்ள செல்லாயியும் பூரணியும் வந்து பழனியம்மா பக்கத்துல உக்காந்து  தூக்குவாளிகள தொறந்தாளுங்க.  ஆத்தாளும் மகளும் கொண்டுவந்திருந்த கம்மங்கூலக்கரச்சு எடுத்து வச்சிட்டு புளியோட மிளகா  சேத்தரச்ச துவையல தூக்குவாளி மூடில அப்பிவச்சிருந்தாளுக. வலது ஆள்காட்டி விரலால நைசாதொட்டு  நாக்குலவச்சு சப்புக்கொட்டிக்கிட்டே ரெண்டுபேரும்  கூல மடமடனு குடிச்சிமுடிச்சாளுங்க.

    தூக்குவாளிய தொறந்து அதுலயிருந்த பழயசோத்த பிசைஞ்சுவிட்ட பூரணி கடிச்சுக்கீர கொண்டு வராதத பாத்த பழனி தான்கிட்டமிச்சமிருந்த புளித்துவயல எடுத்துஅவகிட்ட கொடுத்ததும் மறுக்காம வாங்கி சப்புக்கொட்டி சாப்பிட்டா பூரணி. 

    மூணுபேரோட தூக்குவாளியயும் வேப்பமரக்கிளைல தொங்கவிட்ட பூரணி "ஏங்க்கா... நம்ம பழனியம்மா பன்னன்டாப்புல  நல்லா படிச்சு நெறைய மார்க்வாங்கியிருக்கானு சொன்னயே மேல படிக்க வைக்கலியா....?"

   "ஆமன்டி... நாந்தேன் படிக்கல, எம்மவளாச்சும் படிக்கவைக்கனுமிண்டு கொள்ள ஆசையிருக்கு... எல்லாம் அந்த மாரியாத்தா கைலதானிருக்கு..."

    "பழனியும் நல்லா படிக்கிறா... உனக்கும் ஆசையிருக்குனு சொல்றெ, பெறகென்ன... படிக்க வைக்க வேண்டியதுதானே".
   
     வருசமெல்லாம் இந்த மானவரியில எப்ப வேலயும்னு காத்து காத்து என் கண்ணே பூத்துப்போச்சு... அதுலவேற  ரெண்டுவருசமா மழையுமில்ல... தண்ணியுமில்ல... ஏதோ போனமாசம் பேய்ஞ்ச மழையை நம்பி கடலையை விதைச்துல இன்னிக்கு கலைவெட்டுறோம். ரெண்டுரொரு நாளுல மழைபேய்ஞ்சா இந்த செடிகபொழச்சுக்கும்... இல்லாட்டி பூவும் பிஞ்சும் அடிக்கிர வெயிலுல காஞ்சு கருவாடப் போயிடும்." கவலையோட கடலைச்செடிகளை பார்த்தாள் செல்லாயி.  தொடர்ந்து அவளே "அதுமட்டுமில்ல பூரணி, எம்மவ நல்லமார்க்குனு ஊரே சொல்லுது ... அவகாதுல கிடந்த கம்மலகழட்டி அடகுவச்சுத்தான் வெதக்கடலை வாங்கி இந்தகாட்டுல வெதச்சுயிருக்கு... வெளஞ்சாத்தான் ஆச்சு...." மகளை வாஞ்சையோடு பாத்தா செல்லாயி.

    "ஏங்க்கா ஊருலயிருக்க தோட்டத்துல நெல் நல்ல விளைச்சல் தான பெறகென்ன....?" என்றாள் பூரணி.

    "வயல்ல பூட்டபிரிஞ்சு கதிர் செழுச்சுத்தான் இருக்கு. அந்த விளைச்சல் வருசத்துக்கு சாப்பாட்டுக்கே சரியாபோகுது." என்றாள் செல்லாயி.

   "வாழைதான்  போட்டுயிருக்கியே பெறகென்ன.... கவலைய விடுக்கா ...." என்றாள் பூரணி.

    "என்னடி இப்படி பொசுக்குனு சொல்லிட்டே. வாழைக்கண்டு வாங்கினது,  கலைவெட்டினது மட்டுமில்லாம ஒரம் மருந்து எல்லாம் மருந்துக்கடையில கடனாவாங்கி வச்சுக்கெடக்கு... வருசக்கடைசில கணக்கு பாக்குறப்ப 'உழவன் கணக்குபாத்தா ஒழக்குகூட மிஞ்சாதுங்கிறது' சரியாத்தான கிடக்கு.....  வயசுக்கு வந்த இவளுக்கொரு நல்லது கெட்டதும் பாக்கனும்லெ...." என்றவள் தொடர்ந்து "ஒண்ணுக்கும் விளங்காத இந்த காட்ட நம்பித்தான்யிருக்கு..." அலுத்துக்கிட்டவ கொத்த எடுத்துக்கிட்டு விட்ட இடத்துலயிருந்து கலைய வெட்ட ஆரம்பிச்சதும் அவபின்னாலேயே வந்த பழனியும் பூரணியும் ஆளுக்கொரு பக்கமா கலையவெட்ட தொடங்கினாளுங்க...

    கொழுந்து வெத்தலயோட கொட்டபாக்கு சுண்ணாம்பு அளவோடசேர்த்து வாயிலபோட்டு மென்னு குதப்பி முறைமாமனோட வெள்ளைச்சட்டயில ஆசையா முறைப்பொண்ணு புளுச்சுனு துப்பிவச்ச குங்கும சிவப்புல கீழ்வாணம் சிவந்தப்ப வேலமுடிஞ்சு வெறசா எட்டுவச்சு ஊரப்பாத்து நடந்தாளுங்க மூணுபேரும்.

    பக்கத்துலயிருந்த ஒவ்வொரு காட்டுலயும் கடலை, எள்ளு, உளுந்துனு  தினுசு தினுசா  மானாவரிப்பயிர் மழைய நம்பித் தவங்கிடந்துச்சு.

      வேலிக்கருவேலய ஒட்டியிருந்த பூலான் புதருலயிருந்து நழுவி விழுந்த சாரைப்பாம்பு 'நெகு நெகு'னு ஊர்ந்து போனதப்பாத்த செல்லாயி வலது ஆள்காட்டிவிரல வாய்மேலவச்சு பழனி, பூரணிய பார்த்து சத்தபோடம அப்படியே நிற்கச்சொன்னா. நெலமய புரிஞ்சிக்கிட்டு சத்தமில்லாம மூணுபேரும் நின்னுகிட்டாளுக. நடக்கும்போது உண்டாகிற பூமி அதிர்வ வச்சுத்தான் பாம்பு தொறத்திவருங்கிறது தெரிஞ்சதால  அப்படியே உயிரற்ற ஜடம்போல நின்னுகிட்டாளுக மூணுபேரும்.  செல்லாயி காலுக்கு பக்தத்தில  ஊர்ந்து மெல்ல கடந்து  போச்சு சாரைப்பாம்பு. நல்லா தடிச்சும் ஆறடிக்கும் மேல இருந்த பாம்பப்பாத்ததும் உள்ளுக்குள்ள 'வெட வெட'னு நடுக்கம் எடுத்தாலும் வெளியே அதக்காட்டாம இருந்தாலுங்க. கொஞ்சநேரம் தாமததுச்சி வெரசா நடந்தாளுங்க.

    மேக்க விழுந்த சூரியன துரத்திக்கிட்டு இருட்டும் மெல்ல கவியத் தொடங்கியது.

    பொட்டுபோல  தொடங்கின வெளிச்சம் வரவர பட்டையா நீளமா பரப்பிய டார்ச்லைட் அடிச்சுக்கிட்டு வந்த குருசாமிக்குடும்பர் "ஏந்தாயி.... நேரத்துல கிளம்ப வேண்டியதுதானே...." என்றார் தன் மகளைப்பார்த்து.

    "அதுதாண்ணே... எங்களதேடி நீ வந்திட்டேயில... பெறகென்ன கவலை..." என்றாள் பூரணி முந்திக்கிட்டு.

    "ஆமாம்ப்பா... பூரணி அத்த சொல்றதுவும் சரிதானே...." என்றாள் பழனியம்மா.

    "வெரசா கிளம்பனும்தான் பாத்தோம். கொஞ்சம்தான் இருந்துச்சு அதவெட்டிட்டா திரும்பவும் நாளைக்கு வரவேணாமேனுதான் ஓரேடியா கலைய வெட்டிட்டு வாரோம்." என்றாள் செல்லாயி.

    "கலைய வெட்டி நம்ம கடமையை முடிச்சாச்சு... மாரித்தாயிதான் மனசு வைக்கனும்." என்றார் குருசாமிகுடும்பர்.

     கொஞ்சநேரத்துக்கு மின்னால சாரைப்பாம்ப பாத்ததப்பத்தி ஒருவார்த்தைகூட குருசாமிக்குடும்பர் கிட்ட சொல்லவேயில்லை. காட்டுவேலக்கி போரவங்க அன்றாடம் பூச்சிபட்டை பாக்குறதெல்லாம் சாதாரணம். அதுக பொலங்குற இடத்துலதானே இவளுகளும் வேலபாக்குறதால அது பெருசாத்தெரியல.

    காட்டவிட்டு கீழ இறங்கியதும்  கொஞ்சதூரத்துலயிருந்த ஓடையில நிறுத்திவச்சுயிருந்த காளமாட்ட அவிழ்த்து நுகத்தடிலபூட்டி மாட்டுவண்டிய கிளப்பி தயார் பண்ணினார் குருசாமிக்குடும்பர்.

    மூணுபேரும் வண்டியில ஏறுனதும் குருசாமி குடும்பர் 'த்தை த்தை'னு  வெரட்டினதுல சும்மா தீ மாதிரி பாய்ஞ்சு ஓடுச்சு காளமாடுக.

    கொஞ்ச நேரத்துல வீடு வந்து சேர்ந்ததும் நுகத்தடியிலயிருந்து களமாட்ட அவிழ்த்து கொண்டுபோய் கட்டுத்தரயில கட்டி காடியில வைக்கோலை அள்ளிப்போட்டுவிட்டு வந்தாரு குருசாமிக்குடும்பர்.

    அதற்குள்ள அடுப்ப பத்தவச்சு கேப்பைக்களி கிண்ட தயார் ஆனா செல்லாயி. கருவாட்டு புளிகுழம்புக்கு தேவையான வெங்காயம், பச்சைமிளகா, தக்காளி, புளிகரைசல்னு வேண்டியத தயாரிக்கிர வேலயில ஆத்தாளுக்கு ஒத்தாசையாயிருந்தா பழனியம்மா.

    கேப்பைக்களியோட கருவாட்டுக்குழம்ப ஊத்திச் சுடச்சுட சாப்பிட்டு முடிச்சிட்டு திண்ணையில வந்து அக்கடானு மூணுபேருமா  உக்காந்தாங்க.

    கிழக்காலே  வாணம் இருட்டிக்கிட்டு கருமேகத்த பிழிஞ்சு மழைத்தண்ணிய கொட்டத்தயாருந்துச்சு. தூரலா தொடங்கின மழை போகப்போக வழுத்து கொட்டித்தீர்த்தது. 

    மழை தொடங்கியதும் வீட்டுக்குள்ளார புகுந்து கதவ சாத்திட்டு மாரியாத்தவ நினைச்சு கும்பிட்டுட்டு படுத்து தூங்கினாங்க மூணுபேரும்.

    விடியவிடியப் பேய்ஞ்ச மழைல ஊர்முழுவதும் வெள்ளக்காடா ஆங்காங்கே தண்ணி திட்டுதிட்டா குளமாதிரி தேங்கிக்கிடந்துச்சு.
    
     மழைவிட்டதும் தோட்டதுக்குவந்த குருசாமிக்குடும்பர் நெல்வயலையும் வாழைத்தோட்டத்தையும் பார்த்து திகைச்சுப் போய் நின்னார்.

    நெல்வயல் மழைத்தண்ணியால நிரஞ்சுபோய் நெல்கதிருக தண்ணில முங்கிக்கிடந்துச்சு. வயலைத் தொடர்ந்திருந்த வாழைத்தோட்டம் மதயானை புகுந்ததுபோல சிதைஞ்சுபோய் கிடந்துச்சு.

    அரக்கபரக்க ஓடிவந்த செல்லாயியும் பூரணியும் "அய்யோ... அய்யோ... எல்லாம் நாசமாப்போச்சே..."னு தலையில அடிச்சுகிட்டு கதறி அழுதாழுங்க.

   " மழை பேய்ஞ்சும் கெடுக்கும் , ஓய்ஞ்சும் கெடுக்கும்" என்ற சொலவடைக்கு சாட்சியாகிப் போனது நேத்துப்பேய்ஞ்ச மழை.

(முடிந்தது)


    

    

    

    

     



Saturday, 3 July 2021

இளம்வழுதி - யாழிசைசெல்வா

  💕இளம்வழுதி 💕

                                   👣 யாழிசைசெல்வா 👣


     சித்திரை முழுநிலவின் தன்னொளி காவிரியாற்றின் வடகரையிலமைந்த **இடவை பெருவெளியை நோக்கியதும் சற்று அதிர்ந்துதான் போனாள்.  ஆம்., அலைகடலென திரண்டு பெரும் பெரும் கூடாரமடித்து  தங்கியிருந்த பாண்டியமகாசேனையின் திறல்கண்டு  ஒரு கணம் விக்கித்துப்போனாள் வெண்ணிலவு.


    ***பாண்டியமன்னன் மாறவர்மன் பரசக்கரகோலாகலன் கி.பி.862யில் திடிரென இறக்கவே அவன் மைந்தன் இரண்டாம் வரகுணபாண்டியன் அரசுக்கட்டில் ஏறியதோடு  பல்லவ-சோழ மன்னர்களிடம் இழந்த பகுதிகளை மீட்டு,  பாண்டியநாட்டுப் பகுதிகளை பேணவேண்டியும் பாண்டியவீரத்தின் மாண்பை காட்டவேண்டிய அவசியம் உணடானதால் இடவையில் படைதிரட்டி தண்டுயிறங்கியிருந்தது பாண்டியமகாசேனை.


     பாண்டியர்களின் படைத்தலைவன் இளம்வழுதி தன் கூடாரத்தில் அப்படியும் இப்படியுமாக நடந்தவண்ணம் பெரும் யோசனையிலிருந்தான்.


    சித்திரை முழுநிலவின் தன்னொளி கூடாரவாயிலைத்தாண்டி இளம்வழுதியின் முகத்தில் பட்டையாக அடித்ததால் அவனது சுந்தரமுகத்திற்கு கூடுதல் அழகை தந்து கம்பீரமாக்கியது.


    குணக்கடலில் தோன்றிய சீதளத்தென்றல் அவன் குழலை மெல்ல வருடியவண்ணமிருந்தது. நிலவின் தன்னொளியும் சீதளத்தென்றலின் ஸ்பரிசமும் கூட அவனது சிந்தனையை அகற்றவில்லை போலும்.


     சாதாரண நாட்களாய் இருந்தாள் இயற்கையின் அழகை பருகுவதில் வஞ்சனையின்றி இருப்பவன்தான் ஆனால் எதிரே விரிந்து காட்சிதந்த கோட்டையில் உள்ள எதிரியை எவ்வாறு தோற்கடிப்பது என்ற பலமான யோசனையில் ஈடுபட்டியிருந்தான்.


     பாண்டியவேந்தன் இரண்டாம் வரகுணபாண்டியனுக்கு இவ்வெற்றி மிக அவசியம் என்பதை நன்கு அறிவான் இளம்வழுதி.  மேலும் பாண்டியமன்னன் வெற்றியை பெற்றுத்தரும் பொறுப்பை இவனிடத்தில் அளித்திருந்ததால் எப்படியும் சாதித்தே தீருவது என்ற தீர்மானத்தில் இருந்தான் இளம்வழுதி.


     உருண்டுதிரண்ட தனது பெரிய கண்களை அப்படியும் இப்படியுமாக சுழற்றியபடி நீண்டநேரம்,  யோசனையுடன் கூடாரத்தில் உலவியபடி இருந்தான் இளம்வழுதி.


     சோழர்களைபற்றி ஒற்று அறிவதற்கு சிலநாட்களுக்கு முன்பே சென்ற ஒற்றன் மாறன் ஏன் இன்னும் வரவில்லை, அவன் கொண்டுவரும் தகவல் அடுத்தகட்ட நகர்வுக்கு உதவியாக இருக்ககூடுமென்ற எண்ணத்தில் உலவினான் இளம்வழுதி.  மாறன் பாண்டிய ஒற்றர்களின் தேர்ந்தவன் மட்டுமின்றி இளம்வழுதியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன்.


அப்போது….


     விரைந்து பாண்டியசேனாதிபதியின் கூடாரத்தை அடைந்தவன் “வணக்கம் படைத்தலைவரே” என்று கூறியபடி வணங்கிநின்றான் மாறன்.


     “வா மாறா..!, போன காரியம் ஜெயம் தானே!?” என்றான் இளம்வழுதி.


    “நமக்கு வேண்டிய விவரங்களை சேகரித்து விட்டேன் படைத்தலைவரே”

    “நல்லது மாறா”

    “சோழமன்னன் விஜயாலயன் வயது மூப்பின் காரணமாக உடல்நலமின்றி இருப்பதால் அவரது சிகிச்சைக்கு வேண்டிய மூலிகைகளை வாரமிருமுறை கோட்டைக்கு எடுத்து சென்றுவரும் வைத்தியரின் சீடனிடம் சினேகம் பிடித்துக்கொண்டேன். அவனின் உதவியால் கோட்டைக்குள்ளே எளிதாத சென்று வரமுடிந்தது.  தற்போது நிர்வாகத்தை சோழ இளவல் ஆதித்தன் தான் மேற்கொண்டு வருகிறார்.  இளம்வயது, அனுபவமின்மை  ஆகியவற்றால் சரியான முறையில் நிர்வாகத்தை மேற்கொள்ள முடியவில்லை.  அனுபவம் மிகுந்த அமைச்சர் பெருமக்களின் யோசனைகளை புறந்தள்ளிவிட்டு எதையும் எடுத்தோம் கவிழ்த்தோமென்று முடிவெடுக்கிறார். ஆகவே உள்ளுக்குள் புகைச்சல் உண்டாகி எனக்கென்ன வந்ததது என உள்ளார்கள்.  கோட்டையின் பாதுகாப்பிற்கு ஆயிரம் வீரர்கள் தான் இருக்கக்கூடும் , நமது இந்த திடீர் படையெடுப்பு அவர்களுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியுள்ளது, எனவே விரைந்து தாக்குதல் நிகழ்த்தினால் நமக்கு சாதகமாக இருக்கக்கூடும்” என்றான் மாறன்.


     “ஆகட்டும் மாறா, நீ சென்று ஓய்வெடு “ எனக்கூறி மாறனை அனுப்பிவிட்டு இருக்கையில் கிடந்த சீலை ஒன்றை எடுத்து விடுவிடுவென அதில் சிலகோடுகளையும் சில புள்ளிகளையும் வைத்துவிட்டு நேர்கோடாக சிலகோடுகளை ஆங்காங்கே வரைந்துவிட்டு பின்பு ஒருமுறை சீலையை உற்றுநோக்கியவன் “நன்று!நன்று!” என தனக்குள் சமாதானம் செய்து கொண்டான் இளம்வழுதி.


     வாயில் காவலனை அழைத்து உபசேனாதிபதிகள் நால்வரையும் உடனே விரைந்து தன்னை வந்து காணும்படி உத்தரவை பிறப்பித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தான் இளம்வழுதி.


    ‘வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு’போல் உபசேனாதிபதிகள் நால்வரும் படைத்தலைவரின் கூடாரத்திற்கு வந்து சேரந்தார்கள்.  அவர்களை இருக்கையில் அமரும்படி கண்ஜாடைகாட்டிவிட்டு, தான் தீட்டிவைத்திருந்த சீலையை எடுத்து அவர்களிடம் கொடுத்து “இந்த சீலையை பாருங்கள், திட்டத்தில் குறையிருந்தால் கூறலாம்” எனறான் இளம்வழுதி.


    சிறிது நேரம் நால்வரும் சீலையை மாறிமாறி பார்த்ததோடு தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள், “திட்டம் தெளிவாக உள்ளது படைத்தலைவரே” நால்வரும் ஒருசேர ஆமோதித்தனர்.


    “வேறு ஏதேனும் சந்தேகமிருந்தால் கேட்கலாம்” என்றான் இளம்வழுதி.

   “  படைத்தலைவரின் திட்டத்தில் அப்பழுக்கில்லாமல் தெளிவாக உள்ளது . எனவே வெற்றி நம்வசம்தான்.” என நால்வரும் ஒருங்கே கூறினார்கள்.


     “இந்தக் கோட்டையின் ஒருபகுதி பலமே கிழக்குபுறம் அமைந்துள்ள அடர்ந்தகாடுதான்.  அந்தக்காட்டுக்குள் நேற்று ஆராய்ந்தபோது கோட்டைக்கு செல்லும் ரகசியவழி ஒன்றுயிருப்பதை அறிந்தேன்.  ஒருவேளை முற்றுகை நீடித்தால் அதன் வழியே கோட்டைக்குள் உணவுப் பொருள்களும் மருத்துவ உதவிகளும்  கிடைக்குமாயின் முற்றுகை பலமாதங்கள் நீடிக்கும் நம்மால் சோழர்களை வெற்றி கொள்வதென்பது கனவாகிவிடும். அத்தோடு கோட்டைக்குள்ளேயிருப்பவர்கள் தப்பிவெளியேறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.  எனவே சிறுபடை ஒன்றை அங்கு நிறுத்தி அதனை நமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சாலச்சிறந்தது” என்றபடி தன் திட்டத்தை விரிவாக எடுத்துரைத்ததோடு  அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியங்களை கூறி அவர்களை அனுப்பிவிட்டு படுக்கையில் சாய்ந்தபோது சீதளத்தென்றல் சுகமாக வீச விரைவில் உறங்கிப்போனான் இளம்வழுதி.


     குணபுலத்தில் குதித்தெழுந்த ஆதவனும் அன்று தனது உதயத்தை தாமதமாகவே இடவை பெருவெளியில் தடம் பதித்தான்.


    ஆர்த்தெழுந்த பாண்டியமகாசேனையின் முகப்பில் சிறு யானைப்படையின் துதிக்கையில் பெறும் காட்டுமரங்களை தந்ததோடு யானைப்படைக்கு உதவியாக வில்படையும், காலாட்படையும் அதன் பின்னே குதிரைப்படையும் கொண்டு அணிவகுத்து பாண்டியபடைகளை நிறுத்தியதோடு மேற்கு வாயிலுக்கு தலைமைதாங்கி பாண்டியசேனாதிபதி இளம்வழுதி அரிமாவென தனது அரபுநாட்டு கரும்புரவியில் அமர்ந்தவண்ணம் எதிரே விரிந்த கோட்டையை பார்வையிட்டபடி இருந்தான்.


     தேவையற்ற இழப்புகளை தவிர்க்கும் பொருட்டு சோழ இளவல் ஆதித்தனை சரணடைய சொல்லி தூதுஅனுப்பியும் பணியமறுக்கவே போர் தவிர்க்கமுடியாமல் போயிற்று.


    கோட்டைக்குள்ளே ஒரே அதிரிபுதிரியாக படைவீரர்கள் தங்கள் நிலைநோக்கி நகர்ந்தவண்ணமிருந்தனர்.  அவர்களின் செயல்களில் காணப்பட்ட தொய்விலிருந்தே இப்போரை அவர்கள் எதிர்நோக்கவில்லை என கட்டியம் கூறியது.


    இளம்வழுதி தனது வாளை உயர்த்திக்காட்டியதும் பெரும் முரசுகள் அதிரத்தொடங்கின.  அதற்காகவே காத்திருந்த உபதளபதிகள் தங்களது கொம்புகளை முழக்கியதும் திட்டமிட்டபடி படைகள் நகரத்தொடங்கின.


    பாண்டியசேனைகளை பலவாறாக பிரித்து அதன் ஒருபகுதியினை வலதுபுறவாயிலுக்கும் தெற்குவாயிலுக்கும் அனுப்பியதோடு மேற்கு வாயிலுக்கு தானே தலைமையேற்று நடத்தியதோடு ஒரேநேரத்தில் பன்முகத்தாக்குதலை அரங்கேற்றி எதிரியை நிலைகுலைய வைக்கதிட்டமிட்டிருந்தான், மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி கிழக்கே அமைந்த ரகசிய வழிக்கு மாறன் தலைமையில் சிறுபடைஒன்னறையும் அனுப்பி வைத்திருந்தான் இளம்வழுதி.


     பெரும் மரத்துண்டுகளை ஏந்தியபடி மேற்கு வாயில் கதவினை தகர்க்கத் தொடங்கின களிறுகள் . யானையின் மீதிருந்த பாகர்கள் விரைந்து செலுத்தியும் கோட்டைக்கதவுகள் அசைந்து கொடுக்க மறுத்தன.  அதேநேரத்தில் கோட்டையின் மீதிருந்த சோழவீரர்கள் யானைப்படையின் மீது சரமென அம்புமழைதொடுத்து சாய்த்தனர்.  தொடர்ந்த தாக்குதலில் யானைப்படையின் முன்னேற்றம் தடைப்படவே விரைந்து கொம்புகளை ஊதி யானைப்படையை பின் நகர்த்தாவிடில் தனது சேனையின் பெரும்பகுதி தமது யானைகளாலே நாசம் அடைவது திண்ணம் என உணர்ந்து செயலாற்றியதோடு உபசேனாதிபதிக்கு சங்கேத ஒலி ஒன்றை எழுப்பவே அதற்க்காகவே காத்திருந்ததுபோல் பெரும் கல் கவன் வண்டிகளை நகர்த்தி படையின் முகப்பு பகுதியை அடைந்ததோடு கல்கவன் கற்களுக்கு பதிலாக நூல்பந்து உருண்டைகள் எண்ணையில் நனைத்து மேற்கு வாயில் கதவினை நோக்கி எறிந்ததோடு முன்னணி வில்வீரர்களைவிட்டு  நெருப்பு கனைகளால் நூல்பந்துருண்டைகளை தாக்கும்படி செய்தான்.   அவ்வளவுதான் குபீரென வாயில் கதவுகள் பற்றி எரிய தொடங்கியது .


    வாயில் கதவு எரிவது கண்டு அதனை அனைக்க முற்பட்ட  சோழவீரர்களை பாண்டிய  வில்விரர்கள் கொன்று குவிக்கத் தொடங்கினர்.


    தொடர்ந்த கல்கவன் எரி உருண்டைகள் கோட்டைக்குள்ளும்  வீசி எறிந்ததால் அங்கிருந்த குடிசைகள் பற்றி எரியத்தொடங்கியபோது அங்கிருந்த மக்களின் அலறல் சத்தம் கேட்டு சோழவீரர்களின் கவனம் சிதறத்தொடங்கின.  குடிசைகளின் தீயை அனைக்காவிடில் விரைவில் கோட்டையின் குடியிருப்பு முழுவதும் நாசமாகிவிடும் என்பததை உணர்ந்த சோழ இளவல் ஆதித்தன் நெருப்பை அனைக்க வீரர்களை ஏவினான்.


     பற்றி எரிந்த மேற்குவாயில் கதவின் மேல் பெரும்மரங்களைக்கொண்டு யானைப்படை தாக்கியதும் நொறுங்கி விழுந்த வாயில் கதவின் வழியாக காலாட்படையும் குதிரைப்படையும் புகுந்து எதிர்பட்ட அனைவரையும் வெட்டி சாய்த்தபடி ஒருபுறம் முன்னேறியதோடு நிலைக்கூண்டிலிருந்தவர்களை வில்வீரர்களின் துனைகொண்டு கொன்று குவித்தபடி பாண்டியப்படை முன்னேறத்தொடங்கின.


    இதற்கிடையே ரகசியவழியின் வழியே உள்ளே புகுந்த மாறன் தலைமையிலான பாண்டியபடை வீரர்கள் கோட்டையின் மீதிருந்த என்னைகொப்பரைகளை சோழப்படையின் மீது சாய்த்து அங்கிருந்த தற்காப்பு படையினை அடியோடு அழித்தனர்.


     இதேபோல் கோட்டையின் மற்ற வாயில்களும் திறம்பட செயல்பட்ட பாண்டிய உபசேனாதிபதிகளின் தாக்குதலுக்கு முன் நிற்காமல் வலுவிழந்து சரணடையும் நிலைக்கு சோழர்கள் தள்ளப்பட்டனர்.  ஏற்கனவே பற்றி எறிந்துகொண்டிருந்த கோட்டையில் மக்களின் அலறல் ஒலியோடு பாண்டியவீரர்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எழுப்பிய மரண ஒலியும் சேர்ந்து வானைப்பிளந்தன.


    இனியும் தாமதித்தால் கோட்டை முழுவதும் அழிந்துவிடும் , சரண் அடைவதை தவிர வேறு வழியில்லை எனபதை உணர்ந்த ஆதித்த சோழன் சரணாகதி சங்கினை எழுப்பியதோடு பாண்டியசேனாதிபதி இளம்வழுதியை வரவேற்கத் தயாரானான்.


    விடிந்த ஒரு ஜாமத்திற்குள் வெற்றி அன்னை பாண்டியர் வசம் தஞ்சம் புகுந்திருந்தாள்.


    ஆதவனின் பொன்ஒளியைத் தூக்கி விழுங்குவதுபோல் ரத்த ஆறாக காட்சி தந்தது இடவைக்கோட்டை.


அடிக்குறிப்புகள்:


**இடவை – கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு ஊர் என சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.


*** பிற்கால சோழர் வரலாறு – தி.வை. சதாசிவபண்டாரத்தார் பக்கம்:46,47


ஆதார நூல்கள்:

1.பிற்கால சோழர் வரலாறு – தி.வை.சதாசிவபண்டாரத்தார்

2.தென்னாட்டு போர்க்களங்கள் – க. அப்பாதுரை



###இந்தக்கதை கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டி - 2020க்கு அனுப்பியது.###