👣 மண்ணும் மழையும் 👣
💞 யாழிசைசெல்வா 💞
வெடிச்ச வெள்ளரிப்பழம்போல கீத்துக்கீத்தா விரிசலோடி ரத்தம் சுண்டின கிழவிமுகமாட்டம் இரண்டுவருசமா மழைதண்ணியில்லாம காய்ஞ்சு கரடுதட்டிப்போய்கிடந்த மானாவாரிநிலத்துல அத்திபூத்தமாதிரி போனமாசம் போனாப்போகட்டும்னு பேய்ஞ்ச மழையை நம்பி நிலக்கடலையை விதைச்சு வச்சிருந்தாரு குருசாமிக்குடும்பர்.
வெதக்கல்லை வாங்குரதுக்கே பணமில்லாம என்னாடா செய்யரதுனு அள்ளாடினப்ப காதுலகிடந்த கம்மல கழட்டிக்கொடுத்தா அவரோட மக பழனியம்மா.
"வேணாந்தாயி.... பொட்டப்புள்ள போட்டுருக்கிர கம்மலகழட்டவேணாம். வேற எதாவது வழி பண்ணிக்குவோம்..."
"இருக்கட்டும்ப்பா... அவசரத்துக்கு பயன்படாத கம்மல் எதுக்கு...?"
"அதில்ல தாயி... படிக்கிரபுள்ள ... நாலுபேரு மின்னால பாக்க அசிங்கமா இருக்கும்..."
"தங்கத்துக்குபதிலா பிளாஸ்டிக்கம்மல போட்டுக்கிறேன். அறுவடை முடிஞ்சதும் திருப்பிக்கொடுங்க..." சொல்லிக்கொண்டே கம்மல கழட்டி எடுத்து தகப்பன்கையில திணிச்சா பழனி.
பொசுக்குனு கண்ணுலயிருந்து கண்ணீர் ததும்பி பழனி கம்மல கைல திணிச்சப்ப அவகைமேல பட்டு தெரிச்சு விழுந்தது. "ஏம்ப்பா... இதுக்கெல்லாம் போயி... நீங்க என்ன திருப்பி தராமலா போகப்போறீங்க..." தகப்பன் தோளுல சாஞ்சுக்கிட்டா பழனி.
பொட்டப்புள்ள காதுல கிடக்குற குண்டுமணி தங்கத்தயும் அடமாணம் வச்சுத்தான் இந்த பாழப்போன விவசாயம் பாக்கனுமானு ஒரு ஆட்டம் ஆடித்தீர்த்துவிட்டா அவரோட பொண்டாட்டி செல்லாயி.
எப்படியும் விளைச்சல் கைகுடுக்குங்கிர நம்பிக்கையோட விதைச்சதுல, கடலை மொளச்சு பூவும் பிஞ்சுமாகுற பருவத்துக்கு வந்துருச்சு. அப்படியே களைய வெட்டிவிட்டதும் ரெண்டு மழைபேய்ஞ்சா விளைச்சல் கண்டிடும்கிர நம்பிக்கை ஆத்தாளுக்கும் மகளுக்கும் தொத்திக்கிருச்சோ என்னவோ பக்கத்துவீட்டு பூரணியை மட்டும் கூட்டிக்கிட்டு வெள்ளனாவே களைவெட்ட மேலக்காட்டுக்கு வந்துருந்தாளுங்க.
உச்சிவெயிலு மண்டைபொளந்துகிட்டுயிருந்ததால மூஞ்சிமுகரை அம்புட்டும் வேர்த்து தண்ணி சொட்டு சொட்டா பூமிலவிழுந்தப்ப தீயிலவிழுந்த புளுவாட்டம் பொசுங்கி வெசுக்குனு காணமப்போச்சு, இத பாக்குரதுக்கோ விசனப்படுரதுக்கோ அவளுகளுக்கு நேரமில்லாதமாதிரியும் பொழுதுக்குள்ள களையவெட்டி முடிக்குனுங்கிர முடிவோட வந்ததுலயிருந்து எதுவும் பேசாம 'கட்டுகட்டுனு' கொத்தவச்சு களைய வெட்டிக்கிட்டுருந்தாளுங்க மூணுபேரும்.
நல்ல ஆகிருதியான மழைப்பாம்பு காட்டுமான முழுங்கிச்செரிக்கமுடியாம அப்படியே நெழுஞ்சிகிட்டு படுத்திருக்கிர தோரனணயில வளைஞ்சு நெழிஞ்சி, பரந்துவிரிஞ்சு கிடந்த மேற்குத்தொடர்ச்சிமலையில ஓங்கிஉயர்ந்த ஆலமரம், அரசமரம், புளியமரம், மாமரம், செம்மரம், ஈட்டி, கருங்காலி,வாதநாராயணன், புங்கமரம், பூவரசு, கொய்யாமரம், கொடிக்காமரம், மலைவேம்பு, இலந்தமரங்களும் நெருஞ்சி முள் புதர்களும், வெள்ளப்பூலான் பூதர்களும் செடிகளும் கொடிகளும் செழித்து கொழித்து காயும் கனியுமாக பாக்குறதுக்கே அவ்வளவு பசுமையா கண்ணுக்கு குளிச்சியா இருக்கிற மலை... காஞ்சுபோய் பாக்கவே பரிதாபமாகயிருந்துச்சு.
போதும் போதாதுக்கு வெறகு பெறக்கபோற ஆம்பளைங்களும் பொம்பளைங்களும் தங்களோட சுயலாபத்துக்காக நெருப்புவச்சதால முக்காவாசி காடே எரிஞ்சுபோச்சு. கொத்த தெரியாதவன் கிட்ட அம்மிய குடுத்தமாதிரி தூரத்துலயிருந்து பாக்கும்போதே மலைல எத்தனை மரம், செடினு எண்ணிடலாம் அவ்வளவு சுளுவாயிருந்துச்சு.
மழைதண்ணியில்லாததால கொஞ்சப்பேரு மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அந்தப்புறமிருக்க கேரளாவுக்குள்ள வேலைக்கு தினசரி போய்ட்டு வந்தாங்க. மலையைத்தாண்டி கேரளாவுக்குள்ள போகுறதுக்கு சாக்குலத்துமெட்டு ஒத்தையடிப்பாதை ஒன்னுயிருந்துச்சு அதுவழியா ஊர்க்காரங்க காலங்காலமாக கொஞ்சப்பேர் வேலைக்கு போகவும் கொஞ்சப்பேர் கால்நடையா கேரளாவுக்கு போற வழியாவும் பயன்படுத்திவந்தாங்க. தேயிலை பறிக்கிறது, தேயிலைக்கு கவாத்துவெட்டுறது, ஏலக்கா மூட்டை சுமக்கிறதுனு ஆம்பளைங்களும், களைபறிக்கிறது, தேயிலை பறிக்கிறது, ஏலக்காய்எடுக்க, காப்பிக் கெட்டை பெறக்க, மெளகு பறிக்கனு அவுங்கஅவுங்களுக்கு தோதுபட்ட வேலைய பாத்து அன்றாட பொலப்ப ஓட்டிக்கிட்டுயிருந்தாங்க.
மானாவாரி நிலத்துலகிடந்து மல்லுக்கட்டுரதவிட நாமளும் போய் அங்கிட்டு வேலசெஞ்சு நாளுகாசு பாக்கலானு பாத்தா இந்தமனுசனோட சேர்ந்து நாமளும் மல்லுகட்ட வேண்டியிருக்கேனு மனசுக்குள்ளயே மறுகிக்கிட்டா செல்லாயி.
என்னதான் ஆசையிருந்தாலும் அடுத்தவன்கிட்டபோய் கைகட்டி வேலபாக்குறத நெனைச்சுதும் நெஞ்சே அடைக்கிர மாதிரி இருந்துச்சு அவளுக்கு. சொந்த நிலத்துல பாடுபடுரதிலயிருக்க சந்தோசம் அதுல கிடைக்குமா.... ' நம்ம நிலம் நம்ம இஷ்டத்துக்கு எப்பவேணா வரலாம் போலாம்.... யாருகேப்பா.... 'னு நெனச்சுக்கிட்டா.
'கரட்டு கரட்டு'னு கொத்த வச்சு களைய வேகவேகமாக வெட்ட ஆரம்பிச்சா செல்லாயி. வேலனு வந்திட்டா அவகூட சரிக்குச் சரியா யாரும் வேலசெய்ய முடியாது. அவ்வளவு வெரசாவும் சரியாவும் வேலையை செய்யிறதோட கூட வேலபாக்குறவங்களப்பாத்து 'ப்பூ ' இம்புட்டுதானா உங்க திறமைனு கேலிபண்ணிச் சிரிக்கிர மாதிரி அத்தனை சுளுவ முடிச்சிட்டு அடுத்தவங்க நிறையில பாதிக்களைய வெட்டி முடிச்சி நிப்பா செல்லாயி. இதனாலேயே இவ தோட்டத்துக்கு வர்ரபொம்பளங்க சுதாரிப்பா வேல பாப்பாளுங்க...
காட்டோட எல்லைகளை அளந்துவச்சமாதிரி வேலிபூராவும் காட்டாமணக்கு செடிகளும் பூலான் புதர்களும் படர்ந்து பரவிக்கிடந்துச்சு. மேக்காலருந்து வீசின சுள்ளென்ற காத்து புழுதியச்சுருட்டி வேலசெஞ்சுகிட்டுருந்த செல்லாயி, பழனியம்மா, புரணி முகத்துமேல அடிச்சிட்டு போயிருச்சு. தூசியும் தும்புமா முகத்துல காத்தடிச்சதால " காத்துவாயில மண்ணல்லிப்போட..." னு சொல்லிக்கிட்டே வாயிலபுகுந்த மண்ணை "த்தூ...த்தூதூ"னு துப்பினா செல்லாயி.
ஆத்தாவோடவசவ கேட்டதும் பக்கத்துலவேல பாத்துகிட்டுயிருந்த பூரணிகிட்ட ஏதோ சொல்லிச் கெக்கேபிக்கேனு சிரிச்சுவச்சா பழனியம்மா.
"அங்க என்னடி பொல்லாத சிரிப்பு வேண்டிக்கிடக்கு... வேல நேரத்துல...." என்றாள் கடுப்பாக செல்லாயி.
"நீ சொன்னததான காத்து செஞ்சிட்டு போச்சு.... அததான் சொல்லி சிரிச்சேன்...." என்றாள் பழனி.
"நீ ஏண்டி சிரிக்கமாட்டே.... என் பொழப்பு அப்பிடிகிடக்கு...." என அலுத்துக்கொண்டவள் " சரி வாங்க ரெண்டு வா சாப்பிட்டுட்டு வேலைய பாப்போம்..." என்றாள் செல்லாயி.
"ஓன் புழப்புக்கென்ன... எங்கப்பன் நல்லாத்தானே வச்சிருக்கு. ஒன்னோட அண்ணன் தான் வெளையிர பம்புசெட் தோட்டத்த அவுரு வச்சுக்கிட்டு ஒன்னுக்கும் உதவாத மானாவரிகாட்ட ஓன்தலையில கட்டிட்டாரு " கேலி பண்ணி சிரித்தாள் பழனியம்மா.
"அடிசெருப்பால... ஆயிரந்தேன் இருந்தாலும் அவன்தான் ஒன்னோட தாய்மாமன். அவன் தயவு தேவை."
"ஒங்க அண்ணனப்பத்தி பேசுனா பொறுக்காதே... அப்படியென்ன சொல்லிட்டேன். இந்த சீறுசீறுற... நான் சொன்னதும் உம்மதான..."
"எல்லாம் சரிதாண்டி. என்னபண்றது.. பொம்பளச்சிரிக்கி நீ பொறந்திருக்கியே. சடங்கு, காதுகுத்து, கல்யாணம்னு ஒவ்வொன்னுக்கும் அவந்தான் முறைசெய்யனும் அதுக்கு அவங்கிட்ட சத்துவேணாமா... பூரத்தையும் நான் புடுங்கிட்டு வந்துட்டா அவன் எதப்போட்டு செய்வான். எல்லாம் ஒரு கணக்குதாண்டி".
"என்னமோ போ..." காட்டோட வலதுமூலைல ஓங்கியுயர்ந்து தகிக்கிற வெயிலுக்கு தோதா நிழல்குடைவிரிச்சிருந்த வேப்பமரத்துக்கிளை ஒன்னுல மாட்டிவச்சுருந்த தூக்குவாளிகளை எடுத்துவச்சு உக்காந்தா பழனியம்மா.
அதுக்குள்ள செல்லாயியும் பூரணியும் வந்து பழனியம்மா பக்கத்துல உக்காந்து தூக்குவாளிகள தொறந்தாளுங்க. ஆத்தாளும் மகளும் கொண்டுவந்திருந்த கம்மங்கூலக்கரச்சு எடுத்து வச்சிட்டு புளியோட மிளகா சேத்தரச்ச துவையல தூக்குவாளி மூடில அப்பிவச்சிருந்தாளுக. வலது ஆள்காட்டி விரலால நைசாதொட்டு நாக்குலவச்சு சப்புக்கொட்டிக்கிட்டே ரெண்டுபேரும் கூல மடமடனு குடிச்சிமுடிச்சாளுங்க.
தூக்குவாளிய தொறந்து அதுலயிருந்த பழயசோத்த பிசைஞ்சுவிட்ட பூரணி கடிச்சுக்கீர கொண்டு வராதத பாத்த பழனி தான்கிட்டமிச்சமிருந்த புளித்துவயல எடுத்துஅவகிட்ட கொடுத்ததும் மறுக்காம வாங்கி சப்புக்கொட்டி சாப்பிட்டா பூரணி.
மூணுபேரோட தூக்குவாளியயும் வேப்பமரக்கிளைல தொங்கவிட்ட பூரணி "ஏங்க்கா... நம்ம பழனியம்மா பன்னன்டாப்புல நல்லா படிச்சு நெறைய மார்க்வாங்கியிருக்கானு சொன்னயே மேல படிக்க வைக்கலியா....?"
"ஆமன்டி... நாந்தேன் படிக்கல, எம்மவளாச்சும் படிக்கவைக்கனுமிண்டு கொள்ள ஆசையிருக்கு... எல்லாம் அந்த மாரியாத்தா கைலதானிருக்கு..."
"பழனியும் நல்லா படிக்கிறா... உனக்கும் ஆசையிருக்குனு சொல்றெ, பெறகென்ன... படிக்க வைக்க வேண்டியதுதானே".
வருசமெல்லாம் இந்த மானவரியில எப்ப வேலயும்னு காத்து காத்து என் கண்ணே பூத்துப்போச்சு... அதுலவேற ரெண்டுவருசமா மழையுமில்ல... தண்ணியுமில்ல... ஏதோ போனமாசம் பேய்ஞ்ச மழையை நம்பி கடலையை விதைச்துல இன்னிக்கு கலைவெட்டுறோம். ரெண்டுரொரு நாளுல மழைபேய்ஞ்சா இந்த செடிகபொழச்சுக்கும்... இல்லாட்டி பூவும் பிஞ்சும் அடிக்கிர வெயிலுல காஞ்சு கருவாடப் போயிடும்." கவலையோட கடலைச்செடிகளை பார்த்தாள் செல்லாயி. தொடர்ந்து அவளே "அதுமட்டுமில்ல பூரணி, எம்மவ நல்லமார்க்குனு ஊரே சொல்லுது ... அவகாதுல கிடந்த கம்மலகழட்டி அடகுவச்சுத்தான் வெதக்கடலை வாங்கி இந்தகாட்டுல வெதச்சுயிருக்கு... வெளஞ்சாத்தான் ஆச்சு...." மகளை வாஞ்சையோடு பாத்தா செல்லாயி.
"ஏங்க்கா ஊருலயிருக்க தோட்டத்துல நெல் நல்ல விளைச்சல் தான பெறகென்ன....?" என்றாள் பூரணி.
"வயல்ல பூட்டபிரிஞ்சு கதிர் செழுச்சுத்தான் இருக்கு. அந்த விளைச்சல் வருசத்துக்கு சாப்பாட்டுக்கே சரியாபோகுது." என்றாள் செல்லாயி.
"வாழைதான் போட்டுயிருக்கியே பெறகென்ன.... கவலைய விடுக்கா ...." என்றாள் பூரணி.
"என்னடி இப்படி பொசுக்குனு சொல்லிட்டே. வாழைக்கண்டு வாங்கினது, கலைவெட்டினது மட்டுமில்லாம ஒரம் மருந்து எல்லாம் மருந்துக்கடையில கடனாவாங்கி வச்சுக்கெடக்கு... வருசக்கடைசில கணக்கு பாக்குறப்ப 'உழவன் கணக்குபாத்தா ஒழக்குகூட மிஞ்சாதுங்கிறது' சரியாத்தான கிடக்கு..... வயசுக்கு வந்த இவளுக்கொரு நல்லது கெட்டதும் பாக்கனும்லெ...." என்றவள் தொடர்ந்து "ஒண்ணுக்கும் விளங்காத இந்த காட்ட நம்பித்தான்யிருக்கு..." அலுத்துக்கிட்டவ கொத்த எடுத்துக்கிட்டு விட்ட இடத்துலயிருந்து கலைய வெட்ட ஆரம்பிச்சதும் அவபின்னாலேயே வந்த பழனியும் பூரணியும் ஆளுக்கொரு பக்கமா கலையவெட்ட தொடங்கினாளுங்க...
கொழுந்து வெத்தலயோட கொட்டபாக்கு சுண்ணாம்பு அளவோடசேர்த்து வாயிலபோட்டு மென்னு குதப்பி முறைமாமனோட வெள்ளைச்சட்டயில ஆசையா முறைப்பொண்ணு புளுச்சுனு துப்பிவச்ச குங்கும சிவப்புல கீழ்வாணம் சிவந்தப்ப வேலமுடிஞ்சு வெறசா எட்டுவச்சு ஊரப்பாத்து நடந்தாளுங்க மூணுபேரும்.
பக்கத்துலயிருந்த ஒவ்வொரு காட்டுலயும் கடலை, எள்ளு, உளுந்துனு தினுசு தினுசா மானாவரிப்பயிர் மழைய நம்பித் தவங்கிடந்துச்சு.
வேலிக்கருவேலய ஒட்டியிருந்த பூலான் புதருலயிருந்து நழுவி விழுந்த சாரைப்பாம்பு 'நெகு நெகு'னு ஊர்ந்து போனதப்பாத்த செல்லாயி வலது ஆள்காட்டிவிரல வாய்மேலவச்சு பழனி, பூரணிய பார்த்து சத்தபோடம அப்படியே நிற்கச்சொன்னா. நெலமய புரிஞ்சிக்கிட்டு சத்தமில்லாம மூணுபேரும் நின்னுகிட்டாளுக. நடக்கும்போது உண்டாகிற பூமி அதிர்வ வச்சுத்தான் பாம்பு தொறத்திவருங்கிறது தெரிஞ்சதால அப்படியே உயிரற்ற ஜடம்போல நின்னுகிட்டாளுக மூணுபேரும். செல்லாயி காலுக்கு பக்தத்தில ஊர்ந்து மெல்ல கடந்து போச்சு சாரைப்பாம்பு. நல்லா தடிச்சும் ஆறடிக்கும் மேல இருந்த பாம்பப்பாத்ததும் உள்ளுக்குள்ள 'வெட வெட'னு நடுக்கம் எடுத்தாலும் வெளியே அதக்காட்டாம இருந்தாலுங்க. கொஞ்சநேரம் தாமததுச்சி வெரசா நடந்தாளுங்க.
மேக்க விழுந்த சூரியன துரத்திக்கிட்டு இருட்டும் மெல்ல கவியத் தொடங்கியது.
பொட்டுபோல தொடங்கின வெளிச்சம் வரவர பட்டையா நீளமா பரப்பிய டார்ச்லைட் அடிச்சுக்கிட்டு வந்த குருசாமிக்குடும்பர் "ஏந்தாயி.... நேரத்துல கிளம்ப வேண்டியதுதானே...." என்றார் தன் மகளைப்பார்த்து.
"அதுதாண்ணே... எங்களதேடி நீ வந்திட்டேயில... பெறகென்ன கவலை..." என்றாள் பூரணி முந்திக்கிட்டு.
"ஆமாம்ப்பா... பூரணி அத்த சொல்றதுவும் சரிதானே...." என்றாள் பழனியம்மா.
"வெரசா கிளம்பனும்தான் பாத்தோம். கொஞ்சம்தான் இருந்துச்சு அதவெட்டிட்டா திரும்பவும் நாளைக்கு வரவேணாமேனுதான் ஓரேடியா கலைய வெட்டிட்டு வாரோம்." என்றாள் செல்லாயி.
"கலைய வெட்டி நம்ம கடமையை முடிச்சாச்சு... மாரித்தாயிதான் மனசு வைக்கனும்." என்றார் குருசாமிகுடும்பர்.
கொஞ்சநேரத்துக்கு மின்னால சாரைப்பாம்ப பாத்ததப்பத்தி ஒருவார்த்தைகூட குருசாமிக்குடும்பர் கிட்ட சொல்லவேயில்லை. காட்டுவேலக்கி போரவங்க அன்றாடம் பூச்சிபட்டை பாக்குறதெல்லாம் சாதாரணம். அதுக பொலங்குற இடத்துலதானே இவளுகளும் வேலபாக்குறதால அது பெருசாத்தெரியல.
காட்டவிட்டு கீழ இறங்கியதும் கொஞ்சதூரத்துலயிருந்த ஓடையில நிறுத்திவச்சுயிருந்த காளமாட்ட அவிழ்த்து நுகத்தடிலபூட்டி மாட்டுவண்டிய கிளப்பி தயார் பண்ணினார் குருசாமிக்குடும்பர்.
மூணுபேரும் வண்டியில ஏறுனதும் குருசாமி குடும்பர் 'த்தை த்தை'னு வெரட்டினதுல சும்மா தீ மாதிரி பாய்ஞ்சு ஓடுச்சு காளமாடுக.
கொஞ்ச நேரத்துல வீடு வந்து சேர்ந்ததும் நுகத்தடியிலயிருந்து களமாட்ட அவிழ்த்து கொண்டுபோய் கட்டுத்தரயில கட்டி காடியில வைக்கோலை அள்ளிப்போட்டுவிட்டு வந்தாரு குருசாமிக்குடும்பர்.
அதற்குள்ள அடுப்ப பத்தவச்சு கேப்பைக்களி கிண்ட தயார் ஆனா செல்லாயி. கருவாட்டு புளிகுழம்புக்கு தேவையான வெங்காயம், பச்சைமிளகா, தக்காளி, புளிகரைசல்னு வேண்டியத தயாரிக்கிர வேலயில ஆத்தாளுக்கு ஒத்தாசையாயிருந்தா பழனியம்மா.
கேப்பைக்களியோட கருவாட்டுக்குழம்ப ஊத்திச் சுடச்சுட சாப்பிட்டு முடிச்சிட்டு திண்ணையில வந்து அக்கடானு மூணுபேருமா உக்காந்தாங்க.
கிழக்காலே வாணம் இருட்டிக்கிட்டு கருமேகத்த பிழிஞ்சு மழைத்தண்ணிய கொட்டத்தயாருந்துச்சு. தூரலா தொடங்கின மழை போகப்போக வழுத்து கொட்டித்தீர்த்தது.
மழை தொடங்கியதும் வீட்டுக்குள்ளார புகுந்து கதவ சாத்திட்டு மாரியாத்தவ நினைச்சு கும்பிட்டுட்டு படுத்து தூங்கினாங்க மூணுபேரும்.
விடியவிடியப் பேய்ஞ்ச மழைல ஊர்முழுவதும் வெள்ளக்காடா ஆங்காங்கே தண்ணி திட்டுதிட்டா குளமாதிரி தேங்கிக்கிடந்துச்சு.
மழைவிட்டதும் தோட்டதுக்குவந்த குருசாமிக்குடும்பர் நெல்வயலையும் வாழைத்தோட்டத்தையும் பார்த்து திகைச்சுப் போய் நின்னார்.
நெல்வயல் மழைத்தண்ணியால நிரஞ்சுபோய் நெல்கதிருக தண்ணில முங்கிக்கிடந்துச்சு. வயலைத் தொடர்ந்திருந்த வாழைத்தோட்டம் மதயானை புகுந்ததுபோல சிதைஞ்சுபோய் கிடந்துச்சு.
அரக்கபரக்க ஓடிவந்த செல்லாயியும் பூரணியும் "அய்யோ... அய்யோ... எல்லாம் நாசமாப்போச்சே..."னு தலையில அடிச்சுகிட்டு கதறி அழுதாழுங்க.
" மழை பேய்ஞ்சும் கெடுக்கும் , ஓய்ஞ்சும் கெடுக்கும்" என்ற சொலவடைக்கு சாட்சியாகிப் போனது நேத்துப்பேய்ஞ்ச மழை.
(முடிந்தது)