Tuesday, 24 August 2021

சண்முகம் யாழிசைசெல்வா

   சண்முகம்  01  

                           👣 யாழிசைசெல்வா👣


      ஊருக்கிட்ட வந்தாச்சு….

     அழுத்தமான போர்வைய வச்சு மூடின மாதிரி…  மையிருட்டுப்போல  சூழ்ந்துக்கிட்டு வானம் இருளப்பரப்பி வந்ததால… எதுக்காலெ தெரிஞ்ச ரோடு சுத்தமா கண்ணுக்குத்தெரியல…. 

    வருசமெல்லாம் வந்து பழகினதால மாடுகரெண்டும் வண்டிய இழுத்துக்கிட்டு ஒரே சீரானவேகத்துல போய்க்கொண்டுருந்துச்சு. மாட்டுவண்டில அடுக்கிவச்ச நெல் மூட்டைமேல ஒய்யாரமா உருமாக்கட்டி ராசாமாதிரி உக்காந்தபடி பாரவண்டிய ஓட்டிக்கிட்டு வந்தான் வேலய்யா.

     எப்படியாப்பட்ட ரோடாயிருந்தாலும் சமாளிச்சு பதமா மாடுகள பத்திக்கிட்டு சரக்குகள பத்திரமா சேரவேண்டியயிடத்துல சேர்த்துடுவான். தேவையில்லாம மாடுகள விரசமாட்டான். பத்துவருசமா இந்த காளமாடுக வேலய்யாகிட்ட இருக்கு. பெத்த புள்ளயப்போல கண்ணுக்குகண்ணா அதப்பாத்துக்கிட்டான். அவனுக்கும் அவன் பொண்டாட்டிகருப்பாயிக்கும் சண்ட வாரதே இந்த மாடுகளவச்சுத்தான்.

    “எப்பப்பாரு மாமா… இந்த காளமாடுகள கட்டிக்கிட்டு மாரடிக்கிறியே தவிர உனக்கொரு பொண்டாட்டி இருக்கத மறந்தேபோற... ஆமா…” 

    “அறிவில்லாம பேசாத… அதுக ஒளச்சுப்போட்டாத்தான் நீயும் நானும் சோறு தின்ன முடியும்… ஞாபமிருக்கட்டும் …”

    “ஆமா. எப்பப்பாரு இதேயே சொல்லு… அதுகமேல காட்டுற பாசத்துல கொஞ்சத்த எம்மேலயும் காட்டலாமுல… “ ஏக்கத்தோட சொன்னா கருப்பாயி.

    “அப்படி இல்ல கருப்பி.” அவகிட்டவந்து கருப்பாயி குழிவிழுந்த கண்ணத்த வலதுகைவிரலால ஆசையா தடவிக்கொடுத்தான் வேலய்யா.

    வெட்கப்பட்டு நாணுணவ வேலய்யா தோளுமேல சாஞ்சுக்கிட்டா.

    “கருப்பி…” என்றதும் தோளிலிருந்து முகத்தை உயர்த்தி  வேலய்யாவோட கண்ணையே பாத்தா கருப்பாயி.

    கருநாகம் போல பரவிக்கிடந்த தலைமுடிய அள்ளிஎடுத்து கோடாலி கொண்ட போட்டிருந்தா . கொண்ட முடியசுத்தி துளியுண்டு மல்லிகை சரத்தை சொருகி வச்சியிருந்தா. அதுலயிருந்த வாசம் கம்மென்று பரவி நாசியில் ஏதேதோ செய்திருக்கவேண்டும் வேலய்யாவுக்கு… கருப்பாயிய அள்ளி அனைத்து நெத்தியில முத்தமிட்டான். 

   “ மாமா…” என்றாள் . 

   “ம் .. சொல்லு”

    “கொஞ்சும் போது கூட ஓன் மாடுகள கொஞ்சிறமாதிரி தான் தெரியுது…”

    “அப்படியா … எனக்கு அப்படித்தெரியிலியே…”

   “ஒனக்கெப்படித்தெரியும். நீ தான் எப்பப்பாத்தாலும் மாடுககூடவே மாடுகமாதிரி திரியுற…”

    “மறுபடியுமா…”

    “போ... மாமா … உண்மையத்தான சொன்னேன்…” 

    “அடி கருப்பி … ஒன்ன… “ கையை ஓங்கிக்கொண்டு ஓடிவந்தவனை வாரி எடுத்து நெஞ்சோடு அனணத்துக்கொண்டாள்.

  “  மாமா … என்ன அவ்வளவு பிடிக்குமா…?” ஆவலுடன் கேட்டாள். 

   “ஆமா புள்ள…ஏன் கேட்குற…?”

   “கல்யாணமான புதுசுல எப்பலாம் எம்மேல பாசம் வருதோ அப்பலாம் கருப்பினு சொல்லுவேனு சொன்னியே…” என்று சொல்லி ஏக்கமுடன் பாத்தா.

   “அதுக்கென்ன இப்ப…”

   “இப்ப அடிக்கடி கருப்பினு சொன்னியே…”

   “ஓ…அதுவா…” என்றான் வேணுமிண்டே அவளை வம்புக்கிழுக்கும் விதமாக.

    “என்ன  மாமா… அப்ப சொன்னதெல்லாம் பொய்யா…?” என்றாள் கண்ணை கசக்கிக்கிட்டு .

   “யே.. லூசுக்கழுத … சும்மனாச்சும் சொன்னேன்டி…” என்றான் பதறிக்கொண்டு அவளை தேத்த முயன்றான்.

    “நல்லா ஏமாந்தியா…”னு அலகு காட்டி சிரிச்சா கருப்பாயி.

   “உன்ன…” என்றவன் அவளைப்பார்த்து “நேரமாகுது. சண்முகம் மாமா வெரசா வரச்சொன்னார். சீக்கிரம் சோத்தப்போடு.” வாசலில் வச்சிருந்த வாளியிலிருந்து தண்ணிய அள்ளி ஊத்தி கை கால கழுவிட்டு வந்து உக்காந்தான். வெங்கல கும்பாவுல சோத்துப்போட்டு மோரஊத்தி அதுமேல நாட்டுவெங்காயத்தப்போட்டு அவன் கிட்ட கொடுத்ததும் நறுபுறுனு பிசைஞ்சு வெங்காயத்த கடிச்சுக்கிட்டு விறுவிறுனு அள்ளிச்சாப்பிட்டுட்டு கை கழுவிட்டு கிளம்பினான். 

     “கருப்பி….  நான் கிளம்புறேன் புள்ள…” மாடுகள அவுத்துக்கிட்டு கிளம்பினான். 

    “பாத்து சுதானமா போங்க… வர நாளாகுமா… மாமா…”

    “கோட்டிக்காரி எங்க போற, எப்ப வருவேணு கேட்காம கேக்குறியா…” என்றவன் தொடர்ந்து “எனக்கெப்படித் தெரியும். சண்முகம் மாமா என்ன திட்டத்துல இருக்காரோ… அவருக்கு வேண்டிய மட்டும் நெல்லு வாங்கினப்பதான் எப்ப வருவோம்னு தெரியும். அவரு எப்பவுமே போறதப்பத்தி சொல்ல மாட்டார்… பாத்துக்கபுள்ள வாரேன்.”

    “போய்ட்டு வாரேனு சொல்லுமாமா…”

   “சரிபுள்ள… போய்ட்டு வாரேன்…” சொல்லிக்கொண்டே அவளை ஆசையோடு பாத்தபடி வண்டியில் மாடுகளை பூட்டி சண்முதத்தோட வீட்டநோக்கி முடுக்கினான்.

    காலைல நடந்தத நினைச்சு நினைச்சு சிரித்துக்கொண்டே வண்டிய ஓட்டிக்கிட்டுயிருந்தான் வேலய்யா.

    ஏறுநெத்தி, முட்டைக்கண்கள், அருவாமீசை,  இளந்தொந்தி ,ஒழைச்சு காச்சுப்போன சாட்டையா நீளமான கை காலுக்கு போட்டியா வைரம் பாஞ்சமாதிரி நெஞ்சு , அதுமேல புசு புசுனு அடர்த்தியான வனம் மாதிரி ரோமக்காடு, அஞ்சடிக்கு சற்று குறைவாகயிருந்தாலும் வஞ்சனையில்லாம ஒழைக்கப் பெறந்த தேகமுனு சொல்லாமசொல்லுச்சு உரமான உடல்கட்டு. கிராப்பு வெட்டுன கேசம் அடிக்கிற ஊதக்காத்துல அலங்கோலமா களைஞ்சு கிடந்துச்சு. எதயும் சட்டபண்ணாம கருமமே கண்ணாக வண்டிய ஓட்டிக்கிட்டுருந்தான் வேலய்யா.

    ஒரு வேலய எடுத்துக்கிட்டா அதமுடிக்கிறவரைக்கும் பொறுப்பா இருப்பான். தேவையில்லாம பாரவண்டிகள விரட்டி ஓட்டுறதோ மாடுகள அடிச்சு துன்புறுத்துறதோ செய்யமாட்டான். மாடுகள பதமா தட்டிக்கொடுத்து வண்டியிலயிருக்கிற பொருள சேதமாகாம கொண்டு வந்து சேர்க்கிறதுல  பெரிய கில்லாடி. அதனாலதானோ என்னவோ சண்முகத்திற்கு வேலய்யாவ ரெம்பப்புடிச்சுபோச்சு. வேல எவ்வளவு சுத்தமோ அவ்வளவு சுத்தம் பேச்சுலயுமிருக்கும். வேலய்யா ஒருவகையில தூரத்துச்சொந்தம்…  அதுவுமில்லாம சண்முகத்தோட அப்பா அய்யனாரோட கூட்டாளி மருதையன் மகன். வேலய்யாவோட அப்பா காலமான பெறகு வண்டி மாடு வாங்கி தேனி சந்தைக்கு நெல்லு, கம்பு, கேப்பை, சோளம் ஏத்திக்கிட்டு போய்ட்டு வார வேல பாத்து வந்தான். வேலய்யாவோட நேர்மையைக்கண்டு அவன தன்னோட ஏவாரத்துக்கு தொனையா சேர்த்துக்கிட்டான் சண்முகம். அதுலயிருந்து ஊர் ஊராப்போய்  சின்னச்சின்ன வெவசாயிங்ககிட்ட நயந்து பேசி நெல்லுமூட்டைகள வாங்கிச்சேர்த்து அத வாரத்துக்கொருமுறை தேனி சந்தைக்கு வேலய்யாவோட மாட்டுவண்டில பாரம் ஏத்தி அனுப்பி வித்து ஏவாரம் பாத்து வந்தான்.

    சிலநேரங்களில சண்முகம் ஏவாரத்துக்காக வெளியூர் போனப்ப வேலய்யாவ நம்பி நெல்லுமூட்டைகள ஏத்தி தேனி சந்தைக்கு அனுப்பி வச்சான். அவனும் தேனி சந்தையில வழக்கமா விக்கிர ஏவாரிகிட்ட வித்து பணத்த எண்ணிவாங்கி  இடுப்புவேட்டியிலவச்சுக்கிட்டு, அதோட பணம் தெரியாமயிருக்க தலைக்கு கட்டின துண்ட எடுத்து அதுமேலகட்டினான் வேலய்யா. ஊர் திரும்புறப்ப களவாணிபயலுக யாரும் பரிச்சுடக்கூடாதுங்கிற முன்யோசனையில அப்பிடி பண்ணிக்கிட்டான். 

    சந்தையிலயிருந்து ஊருக்கு வந்ததும் சண்முகத்தோட பொண்டாட்டி அலமேலுகிட்ட பணத்தை சரியா  எண்ணிக்கொடுத்த பெறகுதான் வண்டியப் பத்திக்கிட்டு வீட்டுக்கு போவான் வேலய்யா.

    வேலய்யா மேல அதிதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் சேர்த்தே சண்முகம் வச்சிருந்தான். அதுல ஒருநாளும் குறையாதபடி பாத்துக்கிட்டான் வேலய்யாவும்.

    ரெண்டு நாளா அளஞ்சி பெறக்கி ஒருவழியா பத்துமூட நெல்ல வாங்கியிருந்தான் சண்முகம். அடுத்தவாரச் சந்தைக்கு தேவையான நெல்லுகிடைச்ச தைரியத்துலயிருந்த சண்முகத்தோட நம்பிக்கையை சோதிக்கிறமாதிரி ஒரு சம்பவம் அன்னக்கி நடந்துச்சு அதப்பாத்த சண்முகத்திற்கு கையும் ஓடல காலும் ஓடல…

(தொடரும்…)