Monday, 9 March 2026

(1)

சிதறிச் சிரிக்கும் 

மஞ்சள் வெயில் 

இருண்டு கிடக்கிறது 

ஏழையின் குடில்!

(2)

மலைகள் சிதைந்து 

மாளிகையாய் மாறின 

பறவையின் கூடு 

காணாமல் போனது! 


(3)

ஓடவும் வழியில்லாததால் 

ஒதுங்கவும் இடம் தெரிய வில்லை 

எலி வலைக்குள் அகப்பட்டு 

மரணத்தை யாசிக்கின்றது மனம்!


(4)

இருளின் மாயைக்குள் 

தெரியாமல் விழுந்த வெளிச்சப் புள்ளிகள் 

இரவையும் பகலையும்

எங்கே எனத் தேடுகின்றன!

(5)

ஒழுங்காக கற்றவர் எல்லாம் 

உறுத்தேரும் போராட்டத்தில் உள்ளனர் 

தடம் மாறிய அனைவரும் 

தாளாளராய் அதிகாரம் செய்கின்றனர்!


(6)

ஊர் தோறும் பள்ளிகள் 

கேட்டு போராட்டம் நடக்கிறது 

தெருவுக்கொரு சாராயக்கடை திறந்ததில்

தினமும் சாவுமணி ஒலிக்கிறது!


(7)

எழுதப் படிக்க வேண்டுமென

உழுதகாடு விலை போகிறது 

மாடி வீட்டுத் தோட்டத்தில் 

கற்ற கல்வி உரமானது!


(8)

வேண்டுதல்கள் சுமந்தபடியே

ஒவ்வொரு நவராத்திரியும் கடக்கிறது

தனக்கான இரவு தெரியாததால்

தனிமையில் இருக்கிறாள் முதிர்கன்னி!


(9)

நாளுக்கு நாள் நீளும் 

அரசியல் சதுரங்க ஆட்டம் 

தானே பலியாகும்

அப்பாவி மனிதர்கள்!

(10)

உழுதகாடு விற்று மகளுக்கு

தந்தை சீர்வரிசை கொடுக்கிறான்

மலடிப் பட்டம் சுமந்து

மகள் போனபடி திரும்புகிறாள்!


(11)

கன்னியின் ஊடல்

ரணமாய் இருக்கும்//

அவள் கண்ணிமைத்தால் போதும்

கவலைகள் பஞ்சாய்ப் பறக்கும்!

(12)

பெருகிக்கொண்டே இருக்கிறது

இரவின் நிழல் மட்டும்

அருவமின்றி நுழைந்ததால்

வலி அப்போது தெரியவில்லை!



Monday, 19 January 2026

கடந்து வந்த பாதை - யாழிசைசெல்வா

கடந்து வந்த பாதை

====================

எனக்கென மட்டும் 

உருவான ஒற்றைக் கனவிருந்தது -

ஒரு காலத்தில்!//


அதன் நிறத்தை

அதன் குணத்தை முழுவதும்

என்றாவது படித்திட வேண்டுமென்ற ஆவல் மட்டும் 

பசியோடு எழுந்த ஒரு பறவையின் தேடலை

ஒத்திருந்தது எனச் சொல்லலாம்...!//


ஆனால் வாய்த்ததெல்லாம் 

புறக்கணிப்பெனும்  பரிசு மட்டுமே....!//


புகழுக்காக போர்த்திக்கொள்ளவோ 

இரவிற்காக அணைத்துக்கொள்ளவோ

ஒருநாளும்  நான் முயன்று பார்த்ததில்லை!//


வழமையாய் கிடைத்ததெல்லாம்

உருப்படாத உபதேசம்

ஒன்றுக்கும் பயன்தராத நலவிசாரிப்புகளெனும்

நாடகம் மட்டுமே!//


இத்தனைக்கும் நடுவில்

எதிர்பாராமல் நீ இதயம் நுழைந்ததும்

கடந்த பாதையின் வலிகள் மொத்தமும்

தானே விடைபெறும் மாயம் நடக்கின்றது!//


பாதை ஒன்றுதான் 

அதன்பயணம்தான் வேறு 

புயலுக்கு பதில் 

வானவில்லோடு வலசை போகின்றது!//


யாழிசைசெல்வா

தேனி மாவட்டம் 

19/01/2026