Wednesday, 17 September 2025

தேனீர் பதிப்பகம் போட்டிக் கதைகள்

மொத்தம் 13 சிறுகதைகள் 

==========================

கதை எண்:01

================

தாய்மாமன் சீர்வரிசை - 

===========================

யாழிசைசெல்வா

==================

      "ஏண்டி காளியம்மா.... அப்படி உள்ளார என்னாடி பண்ணிட்டு இருக்க...? நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் ரொம்ப நேரமா... விடிய விடிய உள்ளார கிடந்து மாத்தி மாத்தி உருட்டிக்கிட்டு இருந்த...  எப்பத்தாண்டி முடியும்....? ஏண்டி... நான் சொல்றது உன் காதுல கேக்குதா இல்லையா? இல்ல அவ பாட்டு கத்திக்கிட்டு இருக்கட்டும்னு உன் பாட்டுக்கு உள்ளார இருக்கியா?"

     "இப்ப எதுக்கு வெளியே கிடந்து கத்திக்கிட்டு கெடக்க?  எப்ப பாரு எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பியா? என்னக் கொஞ்சம் என்னுடைய வேலையைப் பார்க்க விடேன். நானே எத எங்க வச்சேன்னு தெரியாம திக்குத் தெரியாம அலைஞ்சுகிட்டு இருக்கேன். இதுல இடையில ஒருத்தி கொடையறேன்னு கெடந்து நீ என்ன வாட்டி வதைக்கிறியா? பேசாம அந்த பக்கம் ஒக்காந்து வெத்தலய எடுத்து மென்னுட்டு திரி..." வட சட்டியில போட்ட கடுகு மாதிரி பொரிஞ்சு தள்ளிட்டு வீட்டுக்கு உள்ளார போயிட்டா காளியம்மா. 

       செல்லம்மாளோட ஒரே மக தான் காளியம்மா. இந்த ஆவணி வந்தா இருபத்திரண்டு வயசு ஆகப்போகுது. சொந்த மாமன் மகனைக் கல்யாணம் கட்டிகிட்டா. கருகருன்னு கருநாகம் போல நீண்ட தலை முடிய கோடாலிக் கொண்ட போட்டு கிட்டவ, தரையில் பரவிக்கிட்டுயிருந்த சேலையைத் தூக்கி முட்டிக்காலுக்கு மேல சொருகிக்கிட்டு அறக்கப் பறக்க வீடு முழுவதும் பரவிக் கெடந்த பொருள்களை நோக்கிப் போய்க் கொண்டிருந்தா. மாநிறம், அவ்வளவா அதிக சத்துமில்லாமல் ஒல்லியும் இல்லாம நடுத்தரமா பார்க்க லட்சணமா இருப்பா. பன்னிரண்டாவதுக்கு மேல படிக்கல. வீட்டு வேலை தோட்டத்து வேலைன்னு பம்பரமா சுழலண்டு கிட்டு எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத பொம்பள தான் காளியம்மா! எதையும் தாட்டியமாச் செஞ்சு முடிக்கிற திறமை கொண்டவதேன் காளியம்மா!  இந்த சின்ன வயசுல இவளுக்கு எவ்வளவு தைரியம் பாருன்னு அடிக்கடி ஊருக்குள்ள பேசிக்குவாங்க. 


      தள்ளாத வயதில் அசைந்து அசைந்து வரும் தேர் போல வீட்டுக்குள்ளார வந்து தன்னோட மகளேயே உத்துப் பார்த்துக் கொண்டிருந்தா செல்லம்மா! 

     "தாயி.... இன்னும் எத்தனை நேரம் டி பார்த்துகிட்டு இருப்ப! திரும்பத் திரும்பப் பார்த்தாலும் இருக்கிறது தாண்டி இருக்கும்! அதுக்கு மேல என்ன செய்ய முடியும்! நமக்கு என்ன முடியுமோ அதை மட்டும் செய்! அதுக்கு மேல நடக்கிறது  நடக்கட்டும்!" எனத் தன் மகள் காளியம்மா கிட்டப்போன செல்லம்மா அவ தலையைக் கோதிவிட்டுக் கொண்டே சொன்னாள்!

     "ஏம்மா.... கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேங்கறியே. இப்பதானே சொன்னேன். கொஞ்ச நேரம் திண்ணையில் உட்கார்ந்து உன் பாட்டுக்கு வெத்தலையை போட்டுக்கிட்டு இருனு சொல்லிட்டு இப்பத்தேன்  உள்ளார வந்தேன்! அதுக்குள்ளே நீ மறுபடியும் வந்து பழைய குருடி கதவைத் திறடினு ஆரம்பிக்கிறியே... கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே...."என செல்லமாளைப் பார்த்துக் கூறினாள் காளியம்மா! 

      "நான் என்ன சொன்னாலும் நீ கேட்க மாட்டேங்கிற.... இதெல்லாம் எங்க கொண்டு போயி முடியப் போகுதோ.... கடைசியில நீ தானே கஷ்டப்பட்டுகிட்டு இருப்ப? அதை எப்படி நான் பார்த்துகிட்டு நிக்க முடியும்.... ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு கருவேப்பிலை கொத்து மாதிரி நான் பெத்து வச்சிருக்கேன்! எம் மனசு கெடந்து அடிச்சிக்குதடி...."

      "பேசாம போயிரு அந்த பக்கம். நான் எத்தனை தான் சொன்னாலும் நீ கேட்க மாட்டேங்கிற... எனக்கே ரெம்ப லேட் ஆயிடுச்சுன்னு கடுப்புல இருக்கேன். நீ வேற வந்து என்னை வெறுப்பேத்தாம போயிடு...."

      தான் பக்கத்துல கெடந்த நோட்டை எடுத்து அதுல எழுதி வச்சிருந்த லிஸ்ட பார்த்துகிட்டு இருந்தவ, மறுபடியும் அங்கு இருந்த பொருளெல்லாம் உத்து பார்த்துக்கிட்டே இருந்தா ரெம்ப நேரமா. என்ன நெனச்சாலோ தெரியல விடு விடுனு வாசல நோக்கி வெளியே வந்தவ "நீ போயி மாரியம்மா அக்கா வீட்ல கொடுத்திருக்க பழங்கள் எல்லாத்தையும் வாங்கிக் கொண்டு வந்து, அத எல்லாத்தையும் உள்ளார வச்சிருக்க பையில போட்டு வை"எனச் சொல்லிவிட்டு மீண்டும் வீட்டுக்குள்ளாற போய்விட்டாள். 

     "ஏண்டி... கருப்பாயிகிட்ட பணம் கேட்டிருந்தியே அதை வாங்கிட்டியா...?"என்றாள் செல்லம்மா தன் மகள் வீட்டுக்குள்ளாறபோனது தெரியாம....

    போன வேகத்திலேயே வெளியே வந்து "என்ன பெத்தவளே! நல்ல வேலை ஞாபகப்படுத்தின. மாரியம்மா அக்கா வீட்டுக்கு போய் பழங்கள் வாங்கிட்டு அப்படியே மறக்காம வார வழியில கருப்பாயி அக்கா வீட்டுல போயி பணத்தையும் வாங்கிட்டு வந்துரு" வெத்தலை குதப்பி உப்பியிருந்த கன்னத்த பிடிச்சுக் கொஞ்சியதோடு சிட்டாக  வீட்டுக்குள் போய்ட்டா காளியம்மா.

       விடிகாலை வெயிலு பொடனில அடிச்சு பொளந்துள்ளிக் கொண்டியிருந்தது... மேலக்கடைசியில இருந்த கருப்பாயி வீட்டத்தேடி செல்லம்மா வாழ்கையின் கடைசி நாளத் தேடிக்கிட்டுயிருக்கிற  பசுமாடு மாதிரி அசைந்து நடந்து வருவழியா கருப்பாயி வீடு வந்து சேர்ந்திருந்தாள்.

       வாசலில் கட்டி இருந்த கன்னுக்குட்டி துள்ளித் துள்ளி விளையாண்டுக்கிட்டு இருந்துச்சு.  அப்ப வீட்டுக்குள்ளாரயிருந்து வெளியே வந்த கருப்பாயி "என்ன சின்னம்மா! தங்கச்சி காசு வாங்கிட்டு வர சொல்லுச்சாக்கும். நானே வரலாம்னு இருந்தேன்! அதுக்குள்ளார நீயே வந்துட்ட. ஏன் அப்படி கெடந்து மூச்சு வாங்குகிறே! இந்த வயசான காலத்துல பெசாம வீட்டில உட்கார வேண்டியதுதானே!"என்றாள்.

     "என்ன எங்கடி உக்கார விடுறா உன் தங்கச்சி! விடிய விடிய விட்டுக் கொள்ளாற கெடந்து  பூணை உருட்டுற மாதிரி உருட்டிக்கிட்டே திரியுறா. சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா. நான் என்ன செய்ய முடியும் சொல்லு?"

     "சரி விடு சின்னம்மா! யாருக்குச் செய்றா... எல்லாம் உன் அண்ணன் மக விசேஷத்துக்கு தானே செய்றா. ஏதோ ஊர்க்காரிக்கு செய்யற மாதிரி இப்படி பேசுற. இதெல்லாம் நல்லா வா இருக்கு? "

    "நல்ல அண்ணே மகடி... அந்த வீணாப் போன பையலுக்கு என் புள்ளையை கொடுத்தாலும் கொடுத்தேன் ஒரு நாள் கூட என் புள்ள நிம்மதியா ஒரு வா சோறு உட்கார்ந்து தின்னதில்லை. மாஞ்சி மாஞ்சி வேலை பாக்குறா . நேரத்துக்கு சோறு தண்ணி சாப்பிட மாட்டேங்குறா. ஆனாலும் அவ கஷ்டம் பாடு குறைஞ்ச மாதிரி தெரியல. இதுல அவள் சத்திக்கு மீறி தேவையில்லாம இழுத்து போட்டு அத்தனையும் செய்யுறா.... சொன்னா எங்க கேக்குறா...."

      "நீதான சின்னம்மா, என் புள்ளைய ஏன் அண்ணன் மகனுக்குக்தான் தருவேன். வேற யாருக்கும் தர மாட்டேன்னு ஒரேடியா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு. வாரவங்ககிட்ட எல்லாம் அடிச்சுப் பேசி விரட்டி விட்டுட்ட. இப்ப என்னடா என்றால் இப்படி கெடந்து அழுத்துகிற"

     "நீ சொல்றதெல்லாம் வாஸ்தவந்தாண்டி.... அப்படியே ஒப்புக்கிறேன். அன்னைக்கு என்னவோ கூறுகெட்ட சிறுக்கி மாதிரி ஒரு முறுக்குல பேசிட்டேன். என் மக இப்படிக் கெடந்து கஷ்டப்படுவானு தெரிஞ்சிருந்தா சத்தியமா நான் பொண்னு கொடுத்திருக்கவே மாட்டேன்டி. எல்லாம் என் தலையெழுத்து. நான் செஞ்ச பாவத்துல என் புள்ள கெடந்து கஷ்டப்படுறா.... "எனப் பொங்கி வந்த கண்ணீரை முந்தானை சேலையால துடைத்துக் கொண்டு பேசிக்கிட்டு இருந்தா செல்லம்மா. 

     "விடு  சின்னம்மா. உன் மருமகன் நல்ல பையன் தானே. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு கெடந்து பாடுபடுறான். இந்த மாதிரி மாப்பிள்ளை யாருக்கு அமையும். இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தானே உன் புள்ளைய உன் அண்ணன் மகனுக்கு கட்டி வச்சே. இப்ப என்னடானா இப்படி பேசுற"

     "அந்தப் பையன் நல்லவன் தாண்டி. யாரும் இல்லைன்னு சொன்னா. அதுக்காண்டி அவன் தங்கச்சிக்கு இத்தனை கஷ்டப்பட்டு சீர் செய்யணும்னு தலையில இருக்கா என்ன? இருக்கத வச்சு செஞ்சாப் போதாதா....? எதுக்காக இப்படி ஊரெல்லாம் கடன உடன வாங்கி அப்படியெல்லாம் சீர் செய்யணும்னு எதுவும் இருக்கா என்ன? அதைச் சொன்னா எங்க புரிஞ்சுக்கரா....உன் தங்கச்சி"

     "உனக்கு தெரியாதா சின்னம்மா. ஊர்ல எத்தனை பேரு சீர் கொண்டு போனாலும் தாய்மாமன் சீர் மாதிரி வேற ஒன்னு வருமா என்ன? அதைச் செய்யறதுக்கும் ஒரு தாட்டியும் வேணும். ஊரு முன்னால நம்ம மரியாதையை விட்டுக் கொடுக்கிற முடியுமா என்ன?  இதை சரியா செய்யாம விட்டுட்டா ஊருக்குள்ளற தலைநிமிர்ந்து நடக்க முடியுமா என்ன? "

      "ஊரு என்னடி ஊரு..... நம்ம வாழ்ந்தாலும் ஏசும் , தாழ்ந்தாலும் ஏசும்... இந்த மானங்கெட்ட ஊருக்காக எதையாவது பண்ணி வச்சிட்டு.... காலமெல்லாம் கெடந்து கஷ்டப்படப் போறது என் புள்ள தானே.... அதை எப்படி நான் பார்த்துக்கிட்டு நிக்க முடியும்..."

     "நீ சொல்றதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது.... ஆனாலும் இத ஊரு சனம் ஏத்துக்குமா....ம்ம்... சரி இரு... நான் உள்ளார போய் பணம் எடுத்துட்டு வந்து தாரேன்"என்றவள் வீட்டுக்குள்ளாற போனா மாரியம்மாள்.

      மடிப்பு கலையாத நோட்டுக்களை எண்ணி கட்டு கட்டாக மஞ்சப்பைக்குள் வைத்துக் கொண்டு வாசலை தாண்டி வெளியே வந்து செல்லம்மா கையில் கொடுத்துவிட்டு "சின்னம்மா மறக்காம மாசம் பிறந்ததுமே வட்டி வந்துரும்னு சொல்லிரு. இல்லாட்டி உன் மருமகன் கெடந்து சலம்பிக்கிட்டு திரிவாப்புல... பெறகு சொந்தக்காரங்களுக்குள்ள சடவா போய்டும் "எனச் சிரித்துக் கொண்டே கூறினாள்.

    "சரிடி அம்மா! உனக்கு எந்த கஷ்டமும் வராமல் மாசம் பிறந்த உடனே எப்படியாவது கொண்டு வந்து வட்டியைக் கொடுக்கச் சொல்டுறேன் தாயி. சரி வாரேன். அங்கு அவ ஒருத்தியாக் கெடந்து கஷ்டப்பட்டு கேட்டு இருப்பா..."என சொல்லிக்கொண்டே தள்ளாத வயதிலும் மஞ்சப்பையை மடியில் கட்டிக்கொண்டு வீட்டை நோக்கி போய்க்  கொண்டிருந்தாள்.

      சிறகு மொளச்ச பட்டு பூச்சிப் போல  பட்டுச்சேலைகட்டி எதுக்கே வந்து கொண்டிருந்தாள் காளியம்மா. 

      "ஏம்மா.... உன்கிட்ட ஒரு வேலையை சொன்னா..... சீக்கிரமா செய்ற பழக்கமே கிடையாதா?"எனக் கூறிக்கொண்டே தன்னோட அம்மா பக்கத்துல வந்தாள் காளியம்மாள்.

      "என்ன என்னடி பண்ணச் சொல்ற? வயசான காலத்துல என்னால முடிஞ்ச வரைக்கும் தானே நடந்து போயி வர முடியும்"

      "பணம் வாங்கிட்டியா?"

     "அதெல்லாம் வாங்கிட்டேன் டி! ஆனா மனசுதான் கெடந்து  அடிச்சிக்குது! அந்த மாரியம்மா மாசமான வட்டி கரெக்டா கொடுத்திரணுமா. அப்படி தரல்லைனா அவளோட புருஷன்  கெடந்து சலம்புவானு இவளாவே சொல்லிக்கிறாடி. இதெல்லாம் உனக்கு தேவைதானாடி. கண்டவக் கிட்ட எல்லாம் கெடந்து அசிங்கப்படணும்னு உனக்கு என்ன தலையிலையா எழுதிருக்கு!" தன் மகளைப் பார்த்து பொறுக்கமாட்டாமல் கூறினாள் செல்லம்மா.

     "பணம் கொடுத்தவங்க அப்படித்தான்மா பேசுவாங்க. இதெல்லாம் உனக்கு தெரியாதா என்ன? ஏதோ புதுசா நடக்குற மாதிரி பேசுறியே. அதை விடு. வா வீட்டுக்கு போகலாம் நேரம் ஆயிருச்சு" எனப் பேசிக்கொண்டே வீட்ட நோக்கி  நடந்ந்தார்கள் இருவரும்.

       பூந்தோட்டத்தை மொத்தமாக பெயர்த்தெடுத்து வாசலில் கொட்டியது போல் வண்ண வண்ண சேலைகளில் கூட்டமாக பெண்கள் காளியம்மா வாசலில் கூடியிருந்தார்கள். 

      "எல்லாரும் வந்துட்டாங்கம்மா. வெரசா போய் நீயும் கிளம்பி வா"எனது தன் தாயைப் பார்த்து கூறிவிட்டு அங்கு கூடியிருந்த பெண்களை நோக்கி நகர்ந்தாள் காளியம்மாள்.

      "என்ன காளியம்மா ஒரே தடபுடல செய்யுற பொறுக்க.  நாத்துனா அமைஞ்சா உன்ன மாதிரி அமையனும்னு, ஊரெல்லாம் உன்ன பத்தி தான் பேச்சா கெடக்கு! தாட்டியம்மா எல்லாத்தையும் செஞ்சி சாதிச்சுக் காட்டிப்புட்டையே "என்றாள் கூட்டத்தில் ஒருத்தி.

     "தேர் கிளம்பறது முக்கியமில்லடி. அது ஊரெல்லாம் சுத்தி எந்தப் பொல்லாப்பும் இல்லாம திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கு வந்து சேரணும் அதுல தாண்டி அதோட அழகு இருக்கு! இப்பவே திருஷ்டி கழிச்சாப்லே பேசினா எப்படி?"என்றாள் அவள் அருகே இருந்த மற்றொருத்தி. 

     அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் "எல்லாரும் வந்து ஆளுக்கு ஒரு தட்டா எடுத்துக்கிட்டு கிளம்புங்க"கூடியிருந்த பெண்களைப் பார்த்துக் கூறினாள் காளியம்மாள்.

      இனிப்பைத் தேடிச் செல்லும் எறும்புக் கூட்டம் போல் சாரை சாரையாக வீட்டுக்குள் சென்ற பெண்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு தட்டாக எடுத்துக் கொண்டு திருவிழா தேர் போல் அசைந்தாடி கிளம்பத் தயாரானார்கள். செல்லமாவும் அதற்குள் கிளம்பி வாசலுக்கு வந்து விட்டிருந்தாள்.

     " டிடும் டிடும்" என மேளச் சத்தம் வானைப் பிளந்து கொண்டியிருந்தது, அதற்கு இணையாக நாதமும் வாசித்தபடி  வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு முன்பாக அய்யனார் பட்டு வேட்டி சட்டையில் ஊருக்கு வெளியே நிற்கும் கருப்புசாமி போல் கையை வீசிக்கொண்டு முன்னால் வந்து கொண்டிருந்தான்.

     "வந்துட்டீங்களா.... எங்கடா இன்னும் ஆளக் காணமேனு பாத்துக்கிட்டு இருந்தேன்! கரெக்டா சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்துட்டீங்க.... மத்த ஏற்பாடு எல்லாம் பாத்துட்டீங்கல்லெ.... இங்க என்னால முடிஞ்சா எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். நீங்க சொன்னா புறப்பட வேண்டியதுதான்"தன் புருஷன் அய்யனாரை பார்த்துக் கேட்டாள் காளியம்மாள்.

     "புறப்பட வேண்டியது தான் காளி. நீ சொன்ன மாதிரி எல்லாத்தையுமே ரெடி பண்ணிட்டேன். சரி வாங்கப் போகலாம்" எனக் கூறியபடி அய்யனாரும் காளியம்மாவும் முன்னால் நடந்து கொண்டிருந்தார்கள்.

 
     அடுத்த வீதியில்தான் விசேஷ வீடு. மைக் செட்டில் இளையராஜாவின் இசை காற்றைக் கொஞ்சிக் கொண்டு பரவி வரும் தென்றல் போல் இனிமையாக வழிந்து கொண்டிருந்தது!

     ஏற்கனவே வந்திருந்த அத்தனை பேரும் தாய் மாமன் சீர்வரிசையை பார்ப்பதற்காக வீட்டின் வாசலில் தெரு முனையை வெறித்துப்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். 

      அப்போது டிடும் டிடும் மென வெளுத்து வாங்கிக் கொண்டு மேளக்காரர்கள் வாசிக்க அதற்குப் பக்க வாத்தியமாக நாதம் பொழிந்து தள்ளிக் கொண்டிருந்தது.  மேளச் சத்தத்தின் ஓசையால் ஒலித்துக் கொண்டிருந்தா மைக் செட் அணைக்கப்பட்டிருந்தது! தெருவின் முனையைக் கடந்ததும் அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஒருவன் முன்னால் வந்து பையில் இருந்த நீண்ட பத்தாயிரம் வாலா பட்டாசை தெருவை நோக்கி உருட்டி விட்டு அதன் திரியைப் பற்ற வைத்ததும் மின்னலைக் கிழிக்கும் ஓசையுடன் பட்டாசு வெடிக்கத் தொடங்கியது. 

     சில நிமிடங்கள் காற்றில் கரைந்து ஓசை அடங்கியதும் அய்யனாரோடு காளியம்மாள் அவள் தாய் செல்லம்மாள்  முன்னாள் வர மற்ற பெண்கள் அதனைத் தொடர்ந்து விசேஷ வீட்டை  நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

      விசேஷ வீட்டின் வாசலிலிருந்த பெண்களில் நடு வயதைக் கடந்திருந்த குட்டையாகவும் இருந்ததோடு பக்கவாட்டில் வளர்ந்திருந்த பெண்மணி "அடேங்கப்பா. இது என்னடி பெரிய கூத்தா இருக்கு. நூறு தட்டுக்கும்  அதிகமாயிருக்கும் போல இருக்கே. பாக்குறவங்களெல்லாம் வாயப் பிளக்கிற மாதிரிலே இருக்கு.... எத்தனை வகையான பழங்கள் இருக்குமோ அத்தனையும் இருக்கு. போதும் போதாக்குறைக்கு சட்டை துணிமணிக  மட்டுமே பத்து தட்டுக்கு மேல இருக்கும் போல இருக்கு. அதுவும் இல்லாம நகை நட்டு, காசு, பணம் எல்லாமே பெரிய டாப்பு ஜோலியாவுல  இருக்கு. ஓவர் பவுசா இருக்கே. இப்படி எல்லாம் கிளம்பி வந்தா இல்லாத பட்டவுங்க எல்லாம் எங்கன போய் முட்டிக்கிறது" முதலை வாயை பிளந்தது போல் அந்த பெண்மணி திறந்த வாயை மூடாமல் பேசிக் கண்டே இருந்தார்.

     வாசலில் இருந்து வரவேற்பதற்கு எந்த நாதியும் இல்லாமல் வெறிச்சோடிக் கெடந்தது.

       சீர்வரிசை மொத்தமும் வீட்டின் பட்டா சாலையில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பார்க்கும் ஊர்சனம் அனைத்தும் மெச்சுக்கொட்டி பேசிக் கொண்டிருந்தது. 

     "அதான் தாய் மாமன் சீர் கொண்டு வந்துட்டாருலெப்பா பெறகென்ன முதல்ல அவர மொய் எழுதச் சொல்லிட்டு சட்டுபுட்டுனு சோத்தை போடுங்கய்யா. இன்னும் எத்தனை நேரம் தான் காத்துக் கெடக்கிறது. உள்ளார இருந்து வெள்ளாட்டம் கறிக் கொழம்பு எப்ப வந்து என்ன ரசிச்சு கடிச்சுத் திண்பேன்னு ரொம்ப நேரமா கூப்பிட்டுக்கிட்டே இருக்குப்பா...." என்றார் அங்கு கூடி இருந்த கூட்டத்திலுள்ள முறுக்கு மீசை மனிதர். 

      "ஏண்டா.... கஞ்சிக்கு செத்த பயலாட்டம் நாக்கதொங்கப் போட்டுக்கிட்டு இப்படி முன்னால வந்து துடிச்சுக்கிட்டு நிக்கிறீங்க.... யேன் மகளோட சொத்தை அழிக்கிறதுக்கே பொறப்பெடுத்து வந்தீங்களா.... பேசாம போயிருங்க.... யேன்  வாயில வேற மாதிரி வந்துரும்...."என சுர்ருன்னு கடிச்ச சுள்ளெறும்பாட்டம் எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் சோலையம்மாள். 

      "இப்ப எதுக்கு மேல விழுந்து புடுங்கி திங்கிற மாதிரி எல்லாரையும் வெரசிக்கிட்டு இருக்க?"என்றான் அய்யனார். 

      "ஆமாண்டா.... நீ கொண்டு வர்ற சீர்வருசைய வச்சுத்தான் யேன் மக வாழனும்னு இல்ல.... யாருக்கு வேணும் பத்து காசு பெறாத இந்த சீர்வரிசை"என்று பொறிந்தாள் சோலையம்மாள். 

      "என்ன சின்னம்மா இப்படி சொல்லுற. அண்ணன் கொண்டு வந்த சீர்வரிசை மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா.... சட்ட துணிமணி இல்லாம,  அஞ்சு லட்ச ரூபா மதிப்புள்ள நகை நட்டு, பண்டபாத்திரம், கருப்பு வெள்ளாடு, இரண்டு லட்ச ரூபாய் மொய்னு அத்தனையும் பத்தாதுன்னு வேட்டு வெடி, மேல தாளம்னு ஊரே அமர்க்களம் படற மாதிரி செஞ்சுபுட்டாருலெ.... நீ என்னடான்னா.... இங்க இப்படி கெடந்து கொதிக்கிற...." என்றான் கூட்டத்திலிருந்து வெளியே வந்த அய்யனாரின் சித்தி மகன் பாண்டியன். 

      "அட போடா வெறும் பயலே. உனக்கு வேணும்னா இது ஒசத்தியா இருக்கலாம். இது எல்லாம் யேன் மகளோட  கால் தூசிக்கு வருமா? பத்து காசு பெறாத இதையெல்லாத்தையும் எடுத்துட்டு ஓடிப் போயிடுங்க. இத வச்சுட்டு யேன் மக வாழனும்னு இந்த அவசியமும் இல்லை. என் மருமகனோட சொத்தே கோடிக்கணக்கில் இருக்கு" என இளக்காரமாகப் பேசினால் சோலையம்மாள். 

      "யேன் சித்தி. தெரியாம தேன் கேட்கிறேன். உன் மகன் தானே அய்யனாரு. கொஞ்சம் கூட மகேங்கிற பாசம் இல்லாம ஒரேடியா மருமகனைத் தூக்கி வச்சு கொண்டாடுறியே. பணத்துக்கு முன்னால மக்க மனசங்க எல்லாம் ஒன்னுமில்லாமப் போயிருச்சில்ல... இத்தனை சீர் செனத்திய நம்ம வகையறா யாராவது இதுக்கு முன்னால கொண்டு வந்து இருக்காங்களா.... வாய் இருக்குன்னு பேசிக்கிட்டு இருக்க.... இதெல்லாம் நல்லாத் தெரியலெ...."என்றான் பாண்டியன். 

     "ஏன்டா.... பிச்சைக்கார பயல்கள எல்லாத்தையும் ஏவி விட்டு என் மகளோட விசேஷத்தை கேவலப்படுத்துவதற்கே கூட்டத்தைக் கூட்டி வந்திருக்கியா. நீ எல்லாம் வரலைன்னு யாருடா அழுதா... மரியாதையா எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு ஓடிப் போயிருங்க.... இந்த குப்பைகள் எல்லாம் என் மகளோட வீட்ட அடைச்சுக்கிட்டு பெரிய தொந்தரவா இருக்கு" என படபடவென மூஞ்சியில் அடித்த மாதிரி பேசினாள் சோலையம்மாள்.

      அதற்குள் செல்லம்மாள் முன்னால் வந்து "இந்தாடி... புதுப் பணக்காரி! நீ பொழைச்ச பொழப்பெல்லாம் மறந்திரிச்சா....? வசதியான மாப்பிள்ளை கெடைச்சதும் பெத்த புள்ளனு கூட பாக்காம வாசல்ல வச்சு ஊரு  முன்னால கேவலப்படுத்திட்டெயிலெ.... நீயெல்லாம்...." எனச் சொல்லிக்கொண்டிருந்த செல்லம்மாவின் வாயைப் பொத்திக்கொண்டு அவளை பின்னால் அழைத்துக் கொண்டு வந்துவிட்டாள் காளியம்மாள். 

       அய்யனாரும் அவனோடு வந்த ஊர்க்கார ஆண்களும் பெண்களும் கூட்டம் மொத்தமும்  எதுவும் பேசாமல் அவன் பின்னாலையே விசேஷ விட்டைவிட்டு வெளியேறிச் சென்று கொண்டிருந்தார்கள். 

      "பாத்தியாடி.... அந்த புதுப் பணக்காரி போடுற ஆட்டத்த. இவளுகளுக்கு செய்யறதுக்காக ஊரெல்லாம் கடன உடன வாங்கி,  ஊரைத் திரட்டிக்கிட்டு போயி அவகிட்ட செருப்படி வாங்கிக்கிட்டு வந்ததுதேன் மிச்சம். வந்தவங்கள ஒரு நிமிஷம் கூட உட்காருனு சொல்ல நாதியில்ல... ஒருவா தண்ணி கூட குடிக்கல.... சுவத்துல எரிஞ்ச பந்து மாதிரி நம்மள அசிங்கப்படுத்தி திருப்பி விட்டுட்டாளுங்க. மரியாதை தெரியாத மண்டக்கருவம் புடிச்சவளுகளுக்காகப் போயி தூங்காமல் கொள்ளாம பார்த்துப் பார்த்து அத்தனை பணத்தை கொட்டி செஞ்ச. உனக்கு இப்ப என்னடி கிடைச்சுச்சு"  பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் காளியாம்மாளைப் பார்த்து கேட்டாள் அவள் தாய் செல்லம்மாள். 

      "ஊர் முன்னால என் புருஷனோட கௌரவம் குறைஞ்சிரக்கூடாது. தாய்மாமன் சீர் செய்யாம போயிட்டானு ஒருத்தரும் என் புருஷனப் பேசிடக்கூடாது. எனக்கு அது போதும். மத்ததப் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை"  என  தன் தாயின் கண்ணீரைத் துடைத்துவிட்டவள், தனது கண்களில் பொங்கி வந்த கண்ணீரை முந்தானையால் மறைத்துக் கொண்டு தைரியத்தை வளர்த்து நடை போட்டாள் காளியம்மாள். அவளது நடையில் ஒரு துடிப்பும் நிறைவான துணிச்சலும் அதிலிருந்தது.

(முடிந்தது)
############################################


கதை எண்: 02

===============

இழவு - யாழிசைசெல்வா

=======================

      திடீரென வானம் இருட்டிக் கொண்டிருந்தது. மேற்குப் பக்கமாக திரண்டிருந்த கருமேகக் கூட்டம் மழையைக் கொட்டுறதுக்கு அப்பவோ இப்பவோ எனக் காத்திருந்தது.


      சுட்டெரிக்கிற மொட்ட வெயிலு பொறுக்க முடியாம மேல் மூச்சு வாங்கினதால வரப்போரம் அணைகட்டி கொளுத்து வளர்ந்து கெடந்த பூலாம் புதரோட நிழலுல நிக்கிறதுக்காக வந்திருந்தான் கருப்பையா. 


     வானம் பார்த்த பூமி. பெய்கிற மழைய நம்பி பொலப்பு நடந்து கொண்டிருந்தது. நிலக்கடலையோ, எள்ளுப் பயிறோ ஏதாவது விதைச்சு விட்டா சாமி புண்ணியத்துல மழகிழ பேஞ்சு விளைஞ்சதுனா நாலு காசு பாக்கலாமுன்னு  நெனச்சான்  கருப்பையா. விடியக்கருக்களிலே  காட்டுக்கு வந்தவன் நேத்து உழுத நிலத்துல வரப்பையும் ஓரக்காலையும் மாங்கு மாங்குன்னு மாம்பட்டிய வச்சு வேகாத வெயிலுல வெட்டிக்கிட்டு இருந்தான் கருப்பையா. ஏதோ ஒரு வீராப்புல   சோறு தண்ணி கொண்டு வராமல் மம்பட்டியை மட்டும் தோளில் போட்டுக்கிட்டு ராசா கனக்கா காட்டுக்கு  வந்திருந்தான். வேட்டிய வரிஞ்சு கட்டி காட்டோட வரப்ப ஒழுங்கு பண்ணி முடிச்சபோது சுரீர்னு சாட்டைக் கம்பால முதுகில அடிச்ச மாதிரி உச்சி வெயிலு மண்டைய பொளந்துட்டு இருந்தது.  காலையில வெறும் நீச்சத்தண்ணி மட்டும் குடிச்சுட்டு வந்தததுனால ஒரு மாதிரி தல கிர்ருன்னு இருந்துச்சு கருப்பையாவுக்கு. உழுத புழுதிக் காடு முழுவதும் கானல் நீர் மேலே எழுந்து கொண்டிருந்தது. தண்ணியில்லாம மேல் நாக்கு வறண்டு தடித்துப் போய் இரும்பு மாறி கெட்டியா   இருந்தது கருப்பையாவுக்கு .  வறண்ட தொண்டையில எச்சில் ஊற  வச்சு ஒரு வழியா முழுங்கினான்.

     கருப்பையா உடம்பிலிருந்து வியர்வை பெருக்கெடுத்து ஓடத் தண்ணியா உருண்டோடி உழுத நிலத்துல விழுந்ததும் வெயில் சூட்டுக்கு பட்டுன்னு காணாமப் போனது.‌ உடம்பு முழுவதும் வியர்வை பெருக்கெடுத்து அது  உப்புத்தண்ணியா வழிஞ்சு ஓடினாலும் ஒரு சொட்டு தண்ணீர் குடிக்க முடியாத கொடுமைதான் உழவனோட பொழப்பு.  

      எதையும் சட்டை பண்ணாம மம்பட்டிய எடுத்துக்கிட்டு ஓரக்கால சரி பண்ண நடந்தான் கருப்பையா. ஓரக்கால் முழுவதும் அருகம் புல்லும் கோர புல்லுமா சடைச் சடையா வளர்ந்து கெடந்தது. 'உழைக்கிறதுக்கே பிறந்த உடம்பு இது, பொழுதுக்குள்ள கொழுப்பெடுத்து வளர்ந்து கெடக்கிற இந்த புல்லா நானானு ஒரு கை பாத்திர வேண்டியது' தான்னு தனக்குத் தானே பேசிக் கொண்டு ஓரக்கால வெட்டிக்கிட்டு இருந்தான் கருப்பையா. காட்டோட நாலு மூலையில ரெண்டு மூலையச் சரி பண்ணியிருந்தான். 

      வெடிச்ச வெள்ளரிப் பழமாட்டம் இருந்த கருப்பையாவோட பாதம் வெயில் சூடு பொறுக்க முடியாம தீயில விழுந்த புழு மாதிரி, கால மாத்தி மாத்தி வச்சுக்கிட்டே வேலை செய்துகொண்டிருந்தான்.  'இன்னும் கொஞ்சம் தான் இருக்குது. கொஞ்ச நேரம் பூலாம்புதரோட நிழல்ல தகுப்பாரிட்டு வேலையப் பாக்கலாம்னு' ஓட்டமும் நடையுமா பூலாம் புதரோட நிழலுக்கு வந்து சேர்ந்தான் கருப்பையா. அப்போதுதான்  வானம் இருட்டுக் கட்டத் தொடங்கியிருந்தது.

      'இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்தா, மீதி இருக்கிற ஓரக்காலையும் வெட்டி வீசிடுவேன். அதுக்குள்ளற நாசமாப் போன மழை வந்துரும் போலருக்கே... கருமேகம் திரண்டு மப்பெடுத்து இருக்கிறத பாத்தா இன்னைக்கு மழை வெளுத்து வாங்காமப் போகாது போலருக்கு. இன்னையோட வேலையா முடிச்சிடலாம்னு ஆசையா இருக்கு ஆனா அதுக்குள்ளார இந்த மழை வந்தே வந்தேன்னு வந்துகிட்டுருக்கு. இந்த வருஷமாவது வெள்ளாம விளைஞ்சு நாலுகாசு  பாத்துரலாம்னு ஆசைப்பட்டா அதுக்கொரு நேரம் காலம் கூடி வர மாட்டேங்குது' வெறுப்போடு கருமேகத்தை பார்த்து வாடிப்போனான் கருப்பையா.மேற்குத் தொடர்ச்சி மலையிலருந்து புறப்பட்டு வந்த மழக்காத்து, சூடான அவனோட உடம்புக்கு ஒத்தடம் கொடுக்கிற மாதிரி தொட்டுப் போனது.

       காட்டுக்கு பக்கத்துலயிருந்த ஓடக்குள்ளிருந்து மேலேறி, உழுத காட்டுக்குள்ள தத்தக்கா புத்தக்கானு ஓட்டமும் நடையுமா வந்து சேர்ந்தான் மாடசாமி. 

      "என்னடா.. பாரவண்டி இழுத்துக் கலைச்சு போன மாடு மாதிரி மூசு மூசுனு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்திருக்க....? அப்படி என்ன தல போற அவசரம்? கொஞ்ச நேரம் பொறுத்திருந்தா நானே வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்திருப்பேன். அதுக்குள்ள தொரைக்கு அப்படி என்ன அவசரம்? ஏன் பேசாம அப்படியே தெகைச்சுப் போயி நிக்கிற? கண்ணு வேற ரத்தமா செவந்து கிடக்கு. எதுனாலும் வாயைத் தொறந்து சொன்னாத் தானே தெரியும்டா. வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க? வாயத் தொறந்து சொல்லேண்டா...!" கருகருன்னு திரண்டு இருட்டிக்கிட்டு வந்த வானத்தையும் மாடசாமியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே கேட்டான் கருப்பையா. 

    "சித்தப்பா....!"

     "சொல்லுடா காது கேக்குது!" கடுப்பாகச் சொன்னான் கருப்பையா. 

     "நம்ம வீட்டு பெரிய மனுஷன் நம்மளையெல்லாம் தனியாத் தவிக்க விட்டுட்டு போயிட்டாரு...." மடை திறந்த வெள்ளம் மாதிரி மாடசாமி கண்ணிலயிருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டியிருந்தது.

     "என்னடா சொல்ற....? நேத்து தானே ஆட்டுக்கறி குழம்பு தின்னுட்டு நல்லா சுனையா யேன் பொஞ்சாதி சோலையம்மா வச்ச மாதிரி இன்னைக்கு தான்டா குழம்பு வச்சிருக்க யேன் மருமக. நீ கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த இத்தனை வருஷத்துல அவ கையால வயிறார இன்னைக்கு தான்டா சோறு தின்னுருக்கேன். சோலையம்மாவோட கைப்பக்குவத்த திரும்பவும் என் நாக்குல உன் பொண்டாட்டி ஊரவச்சுடானு மதினிய பாராட்டுனதா அண்ணன் ராத்திரி சொல்லிச் சந்தோஷப்பட்டாரு.... உண்ட சோறு உடம்புல சேர்றதுக்குள்ள இப்படி வந்து சொல்லி நிக்கிற.... பொய்யி கிய்யி பேசாம உண்மையைச் சொல்லுடா.... ஏன் ஈரக் கொலையை வகுந்து போட்ட மாதிரி இருக்கு. என்னால நம்ப முடியல....! இதெல்லாம் பொய்யா இருக்காதான்னு நெஞ்சு பட படன்னு அடிக்குதுடா....! ஏற்கனவே நாசமா போன மழை வேற இன்னைக்கு வந்து யேன் பொழப்புல மண்ணள்ளி போடப்போகுது, அது பத்தாதுன்னு நீ வேற நெருப்பள்ளி கொட்டாதே...!" என்ற கருப்பையாவின் முகம் பேய் அடிச்ச மாதிரி மாறியிருந்தது.

      "எனக்கு மட்டும் இது நிசமா இருக்கணும்னு என்ன வேண்டுதலா என்ன சித்தப்பா! நானும் இந்த செய்தி கேட்ட உடனே இதெல்லாம் பொய்யா இருக்கக் கூடாதானு நம்ம குல சாமி அய்யனார வேண்டிக்கிட்டு , நம்ம மேற்கு வீட்டுக்குப்போய் பார்த்தப்ப..... நம்ம வீட்டு பெரிய மனுஷன்....  சாமி வீட்டு வாசல்ல மல்லாக்கா விழுந்தவரு  உத்திரத்தையே வெரிச்சுப் பார்த்த மானக்கி கெடந்தாப்புல.... அதைப் பார்த்தபோது என்னால நம்ப முடியல. அதுக்குள்ளார நம்மளோட சொந்த பந்தங்களெல்லாம் செய்தி கேட்டு ஒன்னு கூடிட்டாங்க. நம்ம பங்காளி கூட்டத்து  மூத்த மனுஷன், நம்ம வீட்டு பெரிய மனுஷனோட நாடித்துடிப்பை பார்த்து உறுதிப்படுத்துன பிறகுதான் உன் கிட்ட சேதி சொல்ல அப்பன் என்ன அனுப்பி வச்சாரு...." பொங்கி வந்த கண்ணீரோடு கருப்பையா தோளில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழுதான் மாடசாமி.

     வானமே இடிஞ்சு தலையில விழுந்து பூமிக்குள்ள கருப்பையாவ போட்டுப் புதைச்ச மாதிரி இருந்தது, மாடசாமி சொன்னத கேட்டதும்.

     தாகத்தில் தவிச்சு தொண்டையை நனைக்க முடியாம எச்சில விழுங்கிட்டு இருந்தவன் உடம்பு முழுவதும் உருண்டு பெருக்கெடுத்து வழிந்தோடிக்  கொண்டிருந்தது மழைதண்ணி. தாகம் மறக்கடிக்க ஈரம் வந்தும் நெஞ்சில் பாரம் மட்டும் துளியும் குறையவிடாம, அதுல பாரங்கல்ல வச்ச மாதிரி கனத்துக் கெடந்தது.

     மேலக் காட்டுலயிருந்து ஒரு வார்த்தை கூட பேசாம பித்து பிடித்தவன் போல இழவு வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான் கருப்பையா. மாடசாமியும் அழுத மேனக்கி அவன் கூடவே வந்து சேர்ந்திருந்தான். 

     மேற்கு வீட்டு வாசல் முழுவதும் தென்னை ஓலைக்கீத்துல பந்தல் போடப்பட்டிருந்தது .இழவு வீட்டுக்கு வந்தவங்க  தேனடைய  மொய்க்கிற தேனீக் கூட்டம் மாதிரி கூட்டமா ஆங்காங்கே சோகமே வடிவாய் நின்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பந்தல் முழுவதும் பரப்பி வைத்திருந்த இரும்பு நாற்காலிகளில் ஊரு சனம் ஆக்கிரமித்திருந்தது. 

     தூரத்திலே நின்னு அப்பனோட முகத்தை பார்த்து தேம்பித் தேம்பி அழுதுகிட்டு இருந்தான் கருப்பையா. 

    "ஏம்பா ஆளாளுக்கு இப்படி கூடிக் கூடி பேசிக்கிட்டு இருந்தா.... மத்த வேலைகளெல்லாம் யாருப்பா பார்க்கிறது. அதததுக்கு வேண்டிய ஆள அனுப்புனா தானே காரியம் நடக்கும். இப்படியே சிலை மாறி நின்னுகிட்டிறுந்தா யாருப்பா இதெல்லாம் பாக்குறது" சத்தம் வந்த திசைப்பக்கம் ஒரே நேரத்துல இழவு வீட்டில் கூடியிருந்தவர்கள் எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். உழைச்சு காய் காய்த்து உரமேறிய வலுவான உடம்பு. அறுபது வயது கடந்தும் குறைய கம்பீரம். எதையும் ஆராய்ந்து நிதானமாக பேசும் ஒளி பொருந்திய கண்கள். பார்த்ததும் வணங்கும் தோற்றம். எப்பொழுதும் அவரோடு இணை பிரியாமலிருக்கும் தோளில் பச்சைநிறத் துண்டோடு ஊரோட தலைவர் குருசாமி அங்கு நின்றிருந்தார்.

      "ஊர்த்தலைவர் கேட்கிறாருலே.... எல்லாரும் மசமசனு நின்னுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்? ஏதாவது பதில் சொல்லுங்கப்பா!" ஐந்தடி உயரத்தோடு வெள்ளையும் சொல்லையுமாக இருந்த ஊர்த் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி அங்கிருந்தவர்களைப் பார்த்துக்கேட்டார். 

      "என்னப்பா இது? ஊரோட தலைவர் கேக்குற கேள்விக்கு இதுதான் நீங்க கொடுக்கிற மரியாதையா....? நல்லா இருக்குதுப்பா... ஏதாச்சும் ஒரு முடிவுக்கு வாங்கப்பா. பெரிய தலக்கட்டு தவறிப் போயிருக்கு. அதுக்கான மரியாதையோட அவர அனுப்பி வைக்கணுமா? இல்லையா? இப்படியே ஆளாளுக்கு மாறி மாறி நின்னு பேசிகிட்டு இருந்தா எல்லாம் சரியா போகுமா? சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா..." என்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

     "ஊரோட பெரிய மனுஷன் நீங்க.... உங்களுக்கு தெரியாதா என்ன? ஆக வேண்டியது பாருங்க..."அழுது கொண்டே ஊர்த்தலைவர் குருசாமி நோக்கி  வந்தான் சின்னப்பாண்டி.

     "பெரியவர் அய்யனாருக்கு ரெண்டு பசங்க. அதுல மூத்த பையன் சின்னப் பாண்டிதே சொல்லிட்டான்லெ... பிறகென்ன... ஆக வேண்டியத பாருங்க...." என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

    "எல்லாம் சரிப்பா. செலவுகளெல்லாம் யார் பாக்குறது? அதுக்கு ஒரு முடிவு பண்ணனுமில்ல. நாம பாட்டுக்கு எடுத்தோம் கவுத்தோம்முன்னு செஞ்சிர முடியாதுல? அப்புறம் தேவையில்லாம சண்டை சச்சரவாயிருமில்லப்பா...." துணைத்தலைவர் வெள்ளைச்சாமி பக்கத்திலிருந்த சின்னப் பாண்டி பொண்டாட்டியோட கூடப்பிறந்த அண்ணன் மாரியப்பன் கேட்டான். 

      "நீ என்னப்பா எழவு வீட்டுல இப்படி பேசிக்கிட்டு இருக்க? எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறியா?"என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

      "எல்லாம் தெரிஞ்சுதே பேசுறேன். ரெண்டு பசங்க இருக்கும்போது செலவும் இரண்டாத் தானே போடணும். அதுதானே முறை. அதைத்தான் நான் சொல்றேன். இதில் என்ன குத்தமிருக்கு....?" தன்னோடு சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சின்ன பாண்டிக்கு நடக்கவிருந்த பெரிய குற்றத்தை  நடக்கவிடாம தடுத்துவிட்ட தெனாவெட்டோடு பேசினான் சின்னப்பாண்டி. 

      "நீ கேக்குறதுலயும் ஒரு நியாயம் இருக்கு. ஆனா பாரு... உன்னோட மச்சினன். அதே சின்னப் பாண்டி உன் தங்கச்சியை கட்டி குடும்பஸ்தனா இருக்கான். மேற்கொண்டு வயக்காடு முழுவதையும் அவன்தே பார்த்துக்கிட்டு இருக்கான். பம்பு செட்டு மோட்டாருங்கிறதால தண்ணிப் பிரச்சனை எதுவும் இல்லாம விவசாயம் பண்ணி வசதியா வாழ்ந்துகிட்டு வாறான். ஆனா கருப்பையா வானம் பார்த்த பூமியை நம்பி ஒண்டிக்கட்டையா பொழப்பு ஒட்டிக்கிட்டு இருக்கான். ரெண்டும் எப்படிப்பா சரியாகும். கருப்பையா என்னைக்காவது எனக்கு அதைக் கொடு இதை கொடுனு கேட்டிருப்பானா? அவனுக்கு இருந்த ஒரே ஆதரவு அவங்க அப்பன் அய்யனாரும் போயிட்டாரு. இப்ப நாதியத்து போய் கருப்பையா நிக்கிறான். முறைப்படி பார்த்தா எல்லா செலவையும் சின்ன பண்டி தானே எடுத்து நடத்தணும். நீ என்னடான்னா இப்படி பேசிக்கிட்டு நிக்கிற. இதெல்லாம் சரி கிடையாது தம்பி" ஊர்த் தலைவர் குருசாமி கட்டந் திட்டமாக மாரியப்பனையும் சின்ன பாண்டியையும் பார்த்துக் கூறினார். 

     "இதென்னாங்க அணியாம இருக்கு. எதா இருந்தாலும் இரண்டாத் தானே போடணும். ஊரில் இல்லாத வழக்கமாலே இங்க நடக்குது. இது மாதிரி நான் எங்கேயும் பார்த்ததே இல்லை. நீங்க என்னோடன்னா எல்லா செலவையும் ஒரையாடிய யேன் மச்சினே தலையில கட்டி வச்சி ஓட்டாண்டி ஆக்குறதுக்கு திட்டம் போட்டு இருக்கீங்க போலருக்கு. இதெல்லாம் ஒத்துக்க முடியாது" கொதித்துப் போய் பேசினான் மாரியப்பன் .

     "ஏம்பா சின்னப்பாண்டி. உன்னோட மச்சினனை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறியா...? இதெல்லாம் நல்லா இல்லப்பா! பெரிய மனுசன் சாஞ்சு கெடக்காரு அவர முறைப்படி அனுப்பி வச்சிட்டு எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். இப்படியே பேசிக்கிட்டு போனா.... பேச்சு வளருமே தவிர, இதுக்கு உடனடித் தீர்வு உடனே கெடைக்காது. என்ன நான் சொல்றது சரிதானே....?"என்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

    எதுவும் பேசாமல் மௌனமாய் தலையை மட்டும் சின்ன பாண்டி ஆட்டியதும் விருட்டென மாரியப்பன் அங்கிருந்து போய்ட்டான். கோபித்துக் கொண்டு போகும் மாரியப்பனையே பார்த்துக் கொண்டிருந்தான் சின்னப்பாண்டி. 

     "அவன் எங்கப்பா போயிடப் போறான்.  ஆகிற வேலையைப் பாருங்கப்பா"துணைத்தலைவர் வெள்ளைச்சாமி கூறினார்.

      "சரி! இழவு சொல்றதுக்கு ஆள் அனுப்பியாச்சா?" எனக் கேட்டபடி வந்தான் ஈஸ்வரன்.

      "என்னடா ஆளக் காணோம்னு பார்த்தேன். சரியான சமயத்துல வந்து சேர்ந்திட்டப்பா. இழவு சொல்றதுக்கு உன்ன அடிச்சுக்க ஆள் கிடையாதுப்பா...."என்றார் ஊர்த் தலைவர்   குருசாமி.

     "அது என்ன பெரிய கம்ப சூத்திரமா... நாலு ஊருக்கு போயி இறந்தவங்க ஆளுகள பாத்து சொல்லிட்டா போயிருச்சு. இது என்னவோ... பெரிய வேலை மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க. நாலு காசு கொடுத்தா யாரு வேணாலும் போய் சொல்லிட்டு வருவாங்க"எனச் சொல்லிக்கிட்டே பேசிக்கொண்டிருந்தவங்க பக்கத்துல திரும்பி வந்திருந்தான் மாரியப்பன். 

     "பெறகென்னப்பா.... கைவசந்தே. உருப்படியான ஆளு வச்சிருக்கீங்க. அப்புறம் எனக்கு என்ன வேலை? செத்த நேரம் இழவு வீட்டில உட்கார்ந்திட்டு கிளம்ப வேண்டியதுதான்..."அங்கிருந்தவர்கள் காதல் விழும் படி சொல்லிக்கிட்டே நகர்ந்து போயி பந்தலில் போட்டிருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் ஈஸ்வரன்.

      "யேம்ப்பா சின்னப்பாண்டி! உன்னோட மச்சினன்! எப்ப வாய தொறந்தாலும் ஏதாவது எடக்கு மடக்கா பேசிக்கிட்டே இருக்கானப்பா. இந்த காரியம் முடியுற வரைக்கும் அவன் வாயக் கொஞ்சம் கட்டிப் போடு! ஒரு இடத்தில் இருக்கிற மாதிரி ஒரு இடத்துல இருக்காது...."என்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

      "அப்படி நான் என்னத்த சொல்லிட்டேன்னு இப்படி கிடந்து குதிக்கிறீங்க? ஊர் உலகத்துல இல்லாதயா நான் சொல்லிட்டேன்?" பேசியதை ஞாயப்படுத்த முயன்றான் மாரியப்பன். 

     "மச்சான்.... கொஞ்ச நேரம் சும்மா இருய்யா..." மாரியப்பனை கையமர்த்தினான் சின்னப் பாண்டி.

     "இங்க பாருப்பா சின்னப்பாண்டி! நீ நினைக்கிற மாதிரி இழவு சொல்றது அப்படி ஒன்றும் லேசுப்பட்ட காரியமில்ல. நம்ம பாட்டுக்கு எடுத்தோம் கவுத்தொம்முனு எதையும் செஞ்சுற முடியாது. அதுததுக்குனு ஒரு முறை இருக்கு. அதுபடி தான் செய்ய முடியும். என்ன நான் சொல்றது புரியுதா?" சின்ன பாண்டியின் தோளில் வாஞ்சையோடு கைவைத்தபடி கூறினார் ஊர்த் தலைவர் குருசாமி.

      "தலைவர் சொல்றதும் நியாயம் தானப்பா. போன வருஷம் உன்னோட கூட்டாளி காளிமுத்தோட அப்பா இறந்து போனப்ப இந்த பைய ஈஸ்வரன் அதான்பா.. அங்க ஒக்காந்து இருக்கானுல இவன் ஊர்ல இல்ல. வேற வழி இல்லாம காளிமுத்தோட சொந்தக்கார பையன் ஒருத்தன் இழவு சொல்றதுக்கு அனுப்பி வச்சப்ப, பெரிய ஏழரை இழுத்துட்டு வந்துட்டான். அப்புறம் அதை சரி பண்றதுக்கு பெரும்பாடா போயிருச்சு"என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

      "அப்படி என்ன நடந்துச்சு? சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவமில்லே....?"என்றான் மாரியப்பன். 

     "நல்லா கேட்டுக்கப்பா. இழவு சொல்லப் போன பைய புதுசு. அதனால அவனுக்கு தெரிஞ்சத சொல்லிட்டு வந்துட்டான். அவன் வந்த பிறகு அவன விசாரிச்சப்ப, எல்லார்கிட்டயும் தகவல் சொல்லிட்டேனு அவன் பாட்டுக்கு காசு வாங்கிட்டு போயிட்டான். வினையே அவன் போன பிறகுதான வந்து நின்னுச்சு"என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

     "அப்படி யேன் பாக்குறீங்க....? நடந்தத முழுசா சொல்லுங்க.... அப்பத்தான என்னானு விளங்கும்?"

      "சரி சொல்றேன் கேளுப்பா. காளிமுத்தோட அப்பா பேரு முருகன் இறந்து போனாருன்னு, இழவு சொல்லப் போன பய சொல்லிட்டு வந்துட்டான்..." எனச் சொல்லி நிறுத்தினார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

      "எல்லாம் சரியாத்தான சொல்லி இருக்கான். பிறகு எங்கிருந்து வந்துச்சு பிரச்சனை? நீங்களா ஏதாச்சும் கிளப்பி விடுறீங்களா?"

     "கொஞ்சம் பொறுப்பா. மேலோட்டமா பார்த்தா எல்லாம் சரியாத்தான் இருக்கும். விவகாரம் வினையா போனது இழவு விசாரிக்க அந்த ஊர்க்காரங்க வந்த பிறகு தானே தெரிந்தது. நம்ம ஊருல ஒரே பேர்ல நிறைய பேர் இருக்காங்க. அது உங்களுக்கு எல்லாருக்கும் தெரியுமுன்று நினைக்கிறேன்?"

     "ஆமா! இது என்ன புதுசா....?"

       "இது ஒன்னும் புதுசு இல்லதே.... ஆனா இது தானே அங்க வினையா மாறிப்போச்சு...."

      "எப்படி?"

      "இறந்து போன காளிமுத்தோட அப்பா பேரு முருகன், அதே மாதிரி பேருல இன்னொருத்தரும் இந்த ஊர்ல இருக்காங்க. எழவு சொல்லப் போன பய, இறந்தவங்க வீட்டோட சொந்தக்காரங்க கிட்ட சொல்லாம. இழவு செய்தியை மாத்தி உசுரோட இருக்கிற சொந்தக்காரங்க வீட்டில சொல்லிட்டு வந்துட்டான். எழவு செய்தி கேட்ட வீட்டுக்காரங்களும் மாலை மரியாதை எழவுச் சீர் வரிசையோடு ஊருக்கு வந்து பார்த்த பெறகுதே ஆள் மாறிப் போனது தெரிஞ்சப்ப அது பெரிய கலவரத்தில் போய் முடிஞ்சிருச்சு. வந்தவங்களுக்கும் எழவு வீட்டுக்காரங்களுக்கும் ஒரேயடியா சண்டையில போயி நின்னுச்சு. அதுக்குப் பிறகு நம்ம ஊர்த்தலைவர் அதை ஒரு வழியா சரி பண்ணுறதுக்கு போதும் போதும்னு ஆயிருச்சு. இப்ப சொல்லு பாப்போம், இது சுளுவான வேலையான்னு....?"

      "இத அவன் மட்டும் எப்படி சரியா சொல்லுவானு சொல்றீங்க?"

      "அத நான் சொல்றேன்" அவர்களருகே வந்தான் ஈஸ்வரன்.

      "தூரத்தில் உட்கார்ந்து இருந்தாலும் காத கழட்டி இங்கே வச்சிட்டு போனயாக்கும். சரியான பாம்பு காதுப்பா உனக்கு! சரி நீயே வந்துட்ட. எப்படினு நீயே விளக்கமா சொல்லிடு!" என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

      "ஊருக்குள்ளற ஒரே பேருல எத்தனை பேர் இருந்தாலும் சரியா சொல்றதுக்கு ஒரு கணக்கு இருக்கு"பொடி வைத்துப் பேசினான் ஈஸ்வரன். 

     "அது என்னன்னுதே சொல்லேன்பா....?" என்பது போல் ஈஸ்வரனை பார்த்தான் மாரியப்பன். 

     "சரி கவனமா கேளு! பொதுவா இறந்து போன ஆளு இருக்க தெரு, அவங்க அப்பா பேரு, அவர் பொண்ணு எடுத்த இடம், அவங்க தோட்டம் தொரவு இருக்கிற இடம், ஆளோட உசரம், வீட்டோட அமைப்பு, அவங்க கும்பிடுற குலசாமி, அவங்க அண்ணன், தம்பி, அக்கா, இல்ல தங்கச்சி பேரு, அவுங்க வாக்கப்பட்ட ஊரு, இதுகள் எல்லாம் வச்சுக்கிட்டு இடத்துக்கு தக்க மாதிரி இழவு சொல்லப் போற இடத்துல கேள்விகளை கேட்டு நாமளே ஒரு அனுமானத்துக்கு வந்து, அதுக்கு பிறகு தான் எழவு சொல்லணும். இதுல தப்பு வாறதுக்கே வாய்ப்பே கிடையாது. என்னோட இத்தனை வருஷம் சர்வீஸூல ஒரு இழவு செய்தி கூட தப்பா முடிஞ்சதே கிடையாது...." பெரும் சாதனை செய்ததுபோல முறுக்குமீசைய தடவிக்கொண்டே பேசினான் ஈஸ்வரன். 

     "என்னப்பா ஈஸ்வரன் சொன்னது விளங்குச்சா....? இப்ப சொல்லு? இவனை அனுப்பலாமா வேணாமா?"

     "இவனையே அனுப்பி வைங்க!" வேண்டா வெறுப்பாக கூறினான் மாரியப்பன். 

     "சரிப்பா! ஈஸ்வரன் கையில ஆயிரம் ரூவா காசு கொடுத்து அனுப்புங்க" என்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

     "என்னது ஆயிரம் ரூவாயா....? இழவு சொல்றது இம்புட்டு காசா? இது பகல் கொள்ளையாலேயிருக்கு? இந்த மாதிரி நான் எங்கேயும் பார்த்ததே இல்லை?" மாரியப்பன் போட்டோ கூச்சலில் எழவு வீட்டுக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் வெறுப்போடு இது இழவு வீடாதானாங்கிற தொனியோடு திரும்பிப் பார்த்தார்கள்.

     "மாரியப்பா....! கொஞ்சம் அமைதியா பேசுப்பா! இது இழவு வீடுங்கிறத அடிக்கடி மறந்து போயிடுற..." மாரியப்பனை அமைதிப்படுத்த முயன்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

    "இருந்தாலும் இது ரொம்ப அதிகம்! போயும் போயும் இழவு சொல்றதுக்கு யாராவது ஆயிரம் ரூவா தருவாங்களா? அந்தக் காசை சம்பாதிக்க ஒவ்வொரு நாளும் நம்ம என்ன பாடு பட வேண்டியதா இருக்கு! நீங்க என்னடான்ன சுளுவாத் தூக்கி கொடுக்க சொல்றீங்க? என்னால இதை ஏத்துக்கவே முடியாது"

     "சரி அப்ப நீங்க வேற ஆள பாத்துக்கங்க. யேன் சோலி பாட்ட நான் பாத்துக்கிட்டு போறேன்" துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டான் ஈஸ்வரன். 

    "ஈஸ்வரா இருப்பா....! "அவன் நின்றதும் "மாரியப்பா, நீ மாட்டுக்கு ஏதாவது எடுத்தேன் கவுத்தேனு எதாவது பேசிகிட்டு இருக்காத... இவன் போயிட்டான்னா.... அப்புறம் நம்ம வேற ஆள பாக்க முடியாது" என்றார் ஊர்த் தலைவர் குருசாமி. 

      "என்னங்க நீங்க எப்ப பாரு இவனுக்கே ஆதரவா பேசிக்கிட்டு இருக்கீங்க?"

      "தம்பி! எழவு சொல்ல போகுற இடத்துக்கு சில சமயம் பஸ்ஸூ இருக்கும் இருக்காது. அந்த மாதிரி நேரத்துல அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி ஏதாவது ஒரு யோசனை பண்ணி செய்தியைக் கொண்டு போய் சேர்க்கப் பாக்கணும். சரி செய்தி சொல்லிட்டோம், அடுத்த ஊருக்கு போகலாம்னு திரும்பும் போது அதே பிரச்சனை வேற ஒரு ஊருக்கும் வரலாம். அதையும் சமாளிக்கணும். இழவு சொல்லப்போறதுனால போகிற இடத்தில கை நனைக்க முடியாது. அதனால கிடைக்கிற இடத்துல சாப்பிடனும், அதே நேரத்தில சரியான சமயத்துல இழவு செய்தியும் சொல்லணும். இந்த மாதிரி நிறைய நெளிவு சுளிவு இருக்கும். அதையெல்லாம் சமாளிச்சிட்டு இழவு செய்தியை சொல்லிட்டு வரணும். அத்தனையும் நாமலே நேர்ல போய் சொல்லிட்டு வர முடியாது. இங்க இறந்தவங்களுக்கு வேண்டிய சடங்கு சம்பிரதாயம். எல்லாத்தையும் முறைப்படி நாமதே பாக்கணும். நம்மோட கவனம் இதுல இருக்குமா? இல்ல சொந்தக்காரங்களுக்கு இழவு சொல்றதுல இருக்குமா?. அதனாலதே.... இந்த மாதிரி இழவு விஷயத்துல கணக்கு பாக்காம செலவு பண்ணாத்தே நாம நெனச்ச காரியம் முடியும். இதெல்லாம் வாழ்க்கையில எல்லாரும் அனுபவிச்சு தெரிஞ்சுக்க முடியாது. ஒரு சிலதை மூத்தவங்க சொன்னாச் சரின்னு கேட்டுக்கணும்" மாரியப்பனுக்கு புரியும்படி எடுத்துக் கூறினார் ஊர்த் தலைவர் குருசாமி.

     மாரியப்பன் எதுவும் சொல்லாமல் தலைகவிழ்ந்தபடி நின்றான். 

     "ஐயா வணக்கமுங்க" வணங்கியபடி நின்றான் வெட்டியான் கணேசன். 

     "சொல்லு கணேசா... என்ன விஷயம்?"

      "ஊரோட பெரிய தலைக்கட்டு அய்யனார் இறந்து போயிருக்காரு. ஆனா அவர இன்னும் படுக்கையிலேயே வச்சிருக்காங்க. நம்ம வழக்கப்படி குளிக்க வச்சு சந்தனம், சவ்வாது, பன்னீர் தொளிச்சு, மாலை மரியாதையோடு ராசா கணக்குல மர நாற்காலியிலே தானே உக்கார வைப்பீங்க... வாசல்ல இன்னும் விளக்கு கூட வைக்கல. மரக்கா நெல்லை காணோம். அவர் காலுக்கு பக்கத்துல ரெண்டு ஊதுபத்தி மட்டும் எரிஞ்சுக்கிட்டு இருக்கு. இது எல்லாம் சரியாப் படல.  எதுவுமே நடக்காம இருக்கது, அவருக்கு செய்ற அவமரியாதை! நல்லா வாழ்ந்த மனுசன இப்படியா போட்டு வச்சிருப்பாங்க? எனக்கு தோணுச்சு நான் கேட்டுட்டேன்" கவலையோடு கேட்டான் வெட்டியான் கணேசன்.

     "பாத்தியாப்பா.... பேச்சு வாக்குல நாம நம்மளோட வழக்கத்தையும் மறந்துட்டு நின்னுக்கிட்டு இருக்கோம். இன்னும் ஒரு வேலை கூட நடக்கல. அது அப்படியே கெடக்கு.... மழை வேற மறுபடியும் வர்ற மாதிரி இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி வந்தவங்க சாப்பிடுவதற்கும் ஒதுங்குறதுக்கும் , உறங்குறதுக்கும்  இன்னும் எதுவுமே பண்ணல. அதுக்கப்புறம் நாளைக்கு அய்யனார் சுடுகாட்டுக்கு கொண்டு போறதுக்கு வேண்டிய பொருள் எல்லாம் வாங்க வேண்டி இருக்கு. கொட்டு காரங்களுக்கு சொல்லிவுடனும், கப்பல் தேர் கட்டுவதற்கு ஆள ரெடி பண்ணனும். அதுக்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயம் பாக்கணும். அதுக்கு முதல்லே வள்ளுவர் வேணுமுல்லே....‌ ஏம்பா சின்னப்பாண்டி! வள்ளுவருக்கு தகவல் சொல்லியாச்சா....?"சின்னப் பாண்டியப் பார்த்துக் கேட்டார் ஊர்த் தலைவர் குருசாமி.

     துக்கம் தொண்டை அடைத்துக் கொண்டதால சின்னப்பாண்டி பேசவில்லையா? இல்லை பேசுவதற்கு தகுந்த பதில் இல்லாததால் மௌனமாக நின்றானா எனப் புரியாதபடி விழித்துக் கொண்டிருந்தான். 

     அனுபவம் தந்த பாடத்தால் இழவு வீட்டில்  சத்தமாக சிரிக்க கூடாது என்பதால் மௌனப் புன்னகை சின்னப் பாண்டி மீது வீசிவிட்டதோடு ஈஸ்வரனின் கையில் ஆயிரம் ரூபாய் பணத்தை திணிச்சதோட மற்ற வேலைகளை கவனிக்க ஆயத்தமானர் ஊர்த் தலைவர் குருசாமி. ஏதேச்சையாக திரும்பிப் பார்த்தபோது தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருப்பது எதுவும் தெரியாமல் அய்யனார் காலை இருகக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தான் கருப்பையா. 


(முடிந்தது)


##################################################


கதை எண்:03

==============

இணையாத இரு கோடுகள்

========================

யாழிசைசெல்வா

=================

         கல்லூரிப் பூங்காவில் குறுமுகிலை கொய்த புன்னகையில் பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் வட்டமிட்டுத் திரிந்தன; நாணத்தில் காதல் மலர்கள் சிரித்துக் கொண்டிருந்தன!  


       தனித்துக் கிளை பரப்பிச் செழித்து நின்றிருந்த வேப்பமரத்திற்குத் துணையாக அமைந்த இருக்கையின் மடிமேல் முகம் புதைத்து  கன்னக்குழி கவி நிலா கோதை வீற்றிருந்தாள்! அவளருகே இருந்த மு. மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் கவிதைப் புத்தகம் சிறகு விரித்துப் படபடத்தது!  


     "கோதை! உன்னை எங்கே எல்லாம் தேடுவது! தினமும் உன்னைத் தேடுவதே எனக்கு பெரும் வேலையாகப் போய்விட்டது! ஏன் இப்படி என்னை அலைய விடுகிறாய்? அதில் உனக்கு அப்படியென்ன ஆனந்தம்?" எனக்கோதையின் விழிகளைப் பார்த்துக் கேட்டான் மாறன்! 


   மௌனத்தை முத்தமிட்டுக் கொண்டவள் மறு வார்த்தை பேசவில்லை! 


      "ஏன் கோதை? என்னிடம் பேச அப்படி என்ன தயக்கம்?"


      "நான் பலமுறை சொல்லி விட்டேன். நீ மீண்டும் மீண்டும் கேட்பதால் எதுவும் மாறப் போவதில்லை! ஆகவே என்னை விட்டுவிடு!"


       "யாரோ சொன்னதற்காக என்னை ஏன் வதைக்கிறாய்....? நீ செய்வது உனக்கே சரியாகப் படுகிறதா?"


       "சொன்னது உனது அக்கா என்பதை மறந்து விட்டாயா?  உன்னால் மட்டும் எப்படி உன் வீட்டிற்கும் நல்லவனாகவும் எனக்கு மன்மதனாகவும் நடிக்க முடிகிறது?"


      "அது வந்து கோதை,,, " தொண்டையில் சிக்கிக் கொண்ட வார்த்தையை வெளியே தள்ள முடியாமல் தவிப்பில் கிடந்தான்  மாறன்!


      "என்னோடு காதல் செய்த காலங்களில் வரதட்சணை என்பதெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்களின் மோசடி விளையாட்டு என்றாய்.... உன் அக்காவை பேச வைத்து அத்தனையும் பொய்யாக்கி விட்டாய்!"


      "நான் எதுவும் கேட்கவில்லையே.... அதற்காக என்னை யேன் விரட்டுகிறாய்....?"


 "நீ கேட்கவில்லை! அதே நேரத்தில் உன்னோட அக்கா பேசுவதையும் தடுக்கவில்லை!    நாங்கள் ஏழையாக இருந்தாலும் எவரிடமும் கையேந்தியது இல்லை! கூலி வேலை பார்த்தாலும் உழைத்து தான் பிழைக்கின்றோம்! என்னையும் எனது மூன்று சகோதரிகளையும் சந்தையில் விலை போகாத மாடுகளாக எண்ணிக் கொண்டு, உன்னை வளைத்து போட்டு விட்டதாக பேசும்போது நீயும் வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருந்தாய்! நானாகவா உன்னைத் தேடி வந்து பிடித்தேன்! நீதானே என்னைவிடாமல் பேருந்து நிறுத்தத்திலும், சந்தைகளிலும், அதோடு விடாமல் கடை வீதிகளிலும் தேடித் தேடி வந்து ஆசை வார்த்தை பேசி என்னை மயக்கினாய்! இதையெல்லாம் கனவாக மறந்து விட்டாயா என்ன? போதும் போதாதற்கு உன் அம்மாவும் என் தாய் தகப்பனைப் பற்றி தவறாக பேசும் போதும் நீ எதுவும் கூறவில்லை! இப்போதே‌ அப்படியென்றால் காலம் முழுவதும் என் வாழ்க்கை கடலில் கொட்டிய உப்பாக அல்லவா மாறிவிடும். இத்தனையும் தெரிந்த பின்பு எந்த முகத்தை வைத்துக்கொண்டு என்னைப் பார்க்க வருகிறாய்? கொஞ்சமும் உனக்கு வெட்கம் இல்லையா?" என்றவள் முகம் குங்குமமாய் சிவக்க மாறனை பார்த்து பொரிந்து தள்ளினாள் கோதை!


      "நீ யேன் அப்படி எண்ணிக் கொள்கிறாய்! இந்த ஊர் உலகத்தில் யாருமே வரதட்சணை கேட்டதில்லையா? என் அம்மாவும் அக்காவும் மட்டும் புதிதாக ஏதோ கேட்பது போல் யேன் இப்படி பேசுகிறாய்!  ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்தவள் போல் பேசிக்கொண்டு இருக்கிறாய்" என்றான் மாறன்! 


     "நாங்கள் ஒன்றும் சந்தையில் விலை போகும் அடிமாடுகள் அல்ல.... பெண்ணைப் பொன்னாகப் பார்க்கும் உன் போன்ற நயவஞ்சகர்களுக்காக கழுத்தை நீட்டும் காரியத்தை ஒரு நாளும் நான் செய்ய மாட்டேன். உன் பாதை வேறு என் பாதை வேறு. இருவரும் என்றுமே இணை சேராத கோடுகள்! வீணாக என்னோடு வாதம் செய்யாமல் இங்கிருந்து புறப்படு! இனியும் என்னைத் தேடி கொண்டு எப்போதும் வராதே! முடிந்த பயணத்தின் முற்றுப் புள்ளி நீ! தொடர்கதையாக்க  முனையாதே!" என எரிமலைபோல் கொந்தளித்து பிரவாகமாய்  மாறனிடம் கொட்டினாள் கோதை! 


      "அப்படி என்றால் இதுதான் உனது இறுதி முடிவா? நன்றாக யோசித்துக் கொள்! வீணாக வாழ்க்கையை தொலைத்துக் கொள்ளாதே! அப்புறம் திரும்பவும் நீ நினைத்தாலும் ஒரு நாளும் கிடைக்காது!"


      "இப்போதுதான் தெரிகிறது! பெண்ணை வெறும் பொருளாகப் பார்க்கும் புத்தி உன் அக்கா அம்மாவிற்கு மட்டுமல்ல உனக்கும் அதேதான் உள்ளது என்பதை இப்போது நீ நிரூபித்து விட்டாய்! இப்போதாவது உனது உண்மை முகத்தை எனக்கு காட்டியதற்கு ரொம்ப நன்றி மாறா! எனது கனவு கலைந்து விட்டது" என அவன் முகத்தில் அடித்தாற் போல் கூறிவிட்டுக் கல்லூரி நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் கோதை!


       விழிகளில் துளிர்த்த ஈரத்தைக் கைக்குட்டையாள் துடைத்துக் கொண்டு இடி விழுந்த வீடாக மாறிப் போனான் மாறன்! 

(முடிந்தது)

#############################################

கதை எண் :04

===============

ஆள் மயக்கும் பணம் 

====================

கவிஞர் யாழிசைசெல்வா 

======================

      கீழ் வானத்தைப் புரட்டிக்கொண்டு மஞ்சளை வாரி இறைத்தபடி புலர்காலை புலர்ந்தபோது....

      ஊர் எல்லையில் இருக்கும் கருப்பசாமி கோவில் ஊர்த் திருவிழாவை மிஞ்சும் அளவில் ஒரே பரபரப்பில் மிதந்து கொண்டிருந்தது. ஊரையே காக்கும் கருப்பசாமி வெள்ளைக் குதிரையில் நீண்ட அருவாளோடு கம்பீரமாக காவல் காத்து வந்தார்! எல்லைக் கருப்பு நீயே எங்கள் காப்பு என்பது அந்த ஊரில் எழுதப்படாத சட்டம்!

     கருப்பசாமி கோவிலில் இருந்த பெரிய ஆலமரக் கிளையில் கருப்பசாமிக்கு வெட்டிய இரண்டு கருத்த வெள்ளாட்டுக் கிடாயை கட்டித் தொங்கவிட்டு தோலுரித்துக் கொண்டிருந்த ஆண்கள் கூட்டம் ஒரு பகுதி என்றால், பெரிய பெரிய பாத்திரங்களில் வந்திருந்த விருந்தாளிகளுக்கு தன் கைப்படவே சோறு சமைத்துக் கொண்டிருந்தான் சண்முகம்! 

     "அண்ணே அண்ணே...." மை பூசிய கண்கள், மருதாணி விரல்கள், செயற்கையாக வரவழைத்த புன்னகை அணிகலனோடு அரக்கப் பறக்க கூப்பிட்டபடி ஓடி வந்தாள் சிவகாமி!

     "ஏம்மா இப்படி ஓடி வர.... என்னாச்சு? எதுவும் பிரச்சனையாப்பா?" அடுப்பில் வெந்த சோறின் பதம் பார்த்தபடியே கேட்டான் சண்முகம்! 

     "எல்லோரும் உன்ன எங்கன்னு கேட்டுகிட்டு இருக்காங்க? நீ என்னடான்னா சோறு சமைச்சுட்டு திரியுற? இந்த வேலையைச் செய்யறதுக்கு ஆளவிடென்று அப்பவே சொன்னேன்! நீ தான் கேட்கவே இல்லை" என மூச்சு வாங்கியபடி சொன்னாள் சிவகாமி!

     "இது வேண்டுதலுனு சொல்லி ஏற்கனவே சொல்லிட்டேன்! நீ எத்தனை தடவை கேட்டாலும், நா என்னோட முடிவ‌ மாத்திக்கப் போறதில்ல...."

     "சரி வானே! வந்தவங்கள வான்னு கூப்பிட வேண்டாமா?"

    "அது தான் உங்க அண்ணி ஈசுவரி இருக்காளே....‌ பிறகென்ன? " சண்முகம் சட்டென சொன்னதும் சிவகாமியின் முகம் குப்பென்று வியர்த்துப் சுண்டிப்போனது! எதுவும் பேசாமல் வந்த வழியே திரும்பி விட்டாள்! 

     "ஏண்டி சிவகாமி! விசேசத்துல உன்னோட அலப்பறை தான் பெருசா இருக்கும்போல...." என்ற கருப்பாயிடம் எதுவும் சொல்லாமல் தலை குனிந்த படி விலகிச் சென்று விட்டாள்! 

    "உனக்கு சங்கதியே தெரியாதா? போன வருசம் வரைக்கும் சண்முகத்தோட பேச்சு வார்த்தை எதுவும் இல்லாம தான் இருந்தா...." என்றாள் சித்ரா!

     "பிறகென்ன? சொல்லு சித்ராக்கா...."

      " பழைய பாத்திரத்துக்கு ஈயம் பூசுற மாதிரி வந்து ஒட்டிக்கிட்டா....."

    "நீ சொல்ற எதுவுமே எனக்கு புரியலக்கா...."

    "அடியே கூறுகெட்ட சிறுக்கி! சொல்லுறத நல்லாக் கவனமா கேளு! சிவகாமியை கட்டிக் கொடுத்த பெறகு கொஞ்ச நாள்லே விவசாயத்தில் தொடர்ந்து பெருத்த அடி வாங்கி கடனாளியா போயிட்டான் சண்முகம்! அதனால அண்ணனோடயிருந்த உறவ சட்டுனு துண்டிச்சுகிட்டா சிவகாமி! அதுக்குப் பெறகு இந்தக் கருப்பசாமி மேல பாரத்தை போட்டு வேண்டுதல வச்சதோட நிக்காம சண்முகமும் அவன் பொஞ்சாதி ஈசுவரியும் ராப்பகலா உழைச்சு‌ ஒரு வழியா முன்னேறி, இருக்கிற கடனெல்லாம் அடைச்சு முடிச்சுட்டாங்க. பழையபடி நல்ல நிலைக்கு சண்முகம் வந்தவுடனே ஓடி வந்து ஒட்டிகிட்ட...."தூரத்தில் துவண்டு நிற்கும் சிவகாமியைப் பார்த்தபடி சொன்னாள் சித்ரா! 

     "பாத்தியா அக்கா! ஒரு மனுசிய பணம் என்னா பாடு படுத்துதுன்னு பாரு....." தவாங்கட்டையில் கையை வைத்தபடி அங்கலாய்போடு சிவகாமியைப் பார்த்துக் கொண்டியிருந்தாள் கருப்பாயி.

(முடிந்தது)

======================================

கதை எண்: 05

===============

உதயமும் அஸ்தமமும் 

====================

கவிஞர் யாழிசைசெல்வா 

=======================

     இருள் தனது இழையை இறுகப்பற்றிக் கொண்டு பதுக்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கருக்கல் பொழுதின் ஊடாக மென்மையாகத் தழுவிக் கொஞ்சும் காற்றில் அலையடித்து மிதந்தபடி அருகே நடந்து வந்த பாரதியின் தோள்களை இறுகப்பற்றி அணைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தான் பரிதி! 


     "யேங்க.... இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்?" வார்த்தைகள் தந்தியடிக்க கேட்டாள் பாரதி!


    "இதோ வந்து விட்டோம்! இன்னும் சிறிது தூரம் தான் நேற்று மாலை தானே இது வழியாக போய் வந்தோம் அதற்குள் மறந்து விட்டாயா...?"என்றவன் அவளது விழிகளை வட்டமிடும் பருந்தாக கொத்திக் கொண்டிருந்தான் பரிதி!


      தூரத்தில் இருளின் இழையை கண்ணின் இமை விலகுவது போல் மெல்ல மெல்ல அலைகளின் மடியில் தவழ்ந்த படி, மகரந்தப் பொடியைத் தொடுவானில் விதைத்தபடி, ஆழியிலிருந்து மஞ்சள் ஞாயிறு கொடியேற்றியபடி, மங்கலமாய் எழுந்து மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்!


       எழிலார்ந்து விரிந்த இயற்கைக் காட்சியின் அழகில் மெல்ல இதயத்தைப் பறி கொடுத்த பாரதியின் அழகிய வதனத்தின் ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்த பரிதியைச் சட்டென இறுகத் தழுவி நச்சென்று இதழ் முத்தம் தந்துவிட்டு, ஞாயிறின் புலர் காலை அழகை வியந்து ரசித்துக் கொண்டிருந்தாள்! அவளையும் அறியாமல் அவளது அஞ்சன விழிகள் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்துச் சிரித்தன!


      பரிதியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு இயற்கையின் இன்ப மாயங்களை அணு அணுவாகப் பருகிக் கொண்டிருந்தாள் பாரதி!


      காற்றில் அலை அடிக்கும் அவளது கார் கூந்தலை கோதியபடி "பாரதி"என்றான்...


     "ம்ம்ம்"என்ற ஒலி மட்டும் அவளது உதட்டிலிருந்து உதித்தது! 


     "நேற்று மாலை ஞாயிறின் மறைவையும் இன்று உதயத்தையும் பார்த்து விட்டாய் இப்போது உனக்கு திருப்தி தானே?"


     "இது என்ன கேள்வி?"என அவனது விழிகளை நன்றியோடு பார்த்தாள்!


     "அப்படிப் பார்க்காதே பாரதி! இது எனது கடமை"


     பாரதியின் விழிகளிலிருந்து மீண்டும் துளிர்த்துச் சிரித்தன கண்ணீர்! 


     "உனக்குள் ஏன் மீண்டும் வேதனை! வேண்டாம் அவை!"எனக் கூறிய படி அவளை இருகத் தழுவிக் கொண்டான் பரிதி!


     "கன்னியாகுமரியில் ஆதவனின் உதயத்தையும் மறைவையும் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனது சிறு வயது முதலே விடாமல் தொற்றிக் கொண்டது! அதற்காக பள்ளி, கல்லூரியில் படிக்கும் நாட்களிலிருந்து பலமுறை பார்க்க ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போயிருக்கிறது! ஒரு கட்டத்தில் வாழ்க்கைத் தேடலில் அது மறந்தே போய்விட்டது!"எனக் கூறியபடி அலை கடலில் மிதக்கும் ஞாயிறின் பொன்னொளியை ரசித்துக் கொண்டிருந்தவள் "ஆமாம்... எனது இந்த ஆசை உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" அவனது விழிகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே கேட்டாள்!


      "உன்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக உனது தோழி செல்வியிடம் கேட்டேன்"


      "கண்ணான கணவனோடு கவின்மிகு காட்சியைக் காதலோடு பார்க்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பமதுவாக இருந்தால் யார் மாற்ற இயலும்?"என்றவள் மீண்டும் பரிதியை இறுகத் தழுவிக் கொண்டாள் பாரதி!


       இருவருக்கும் இடையில் நுழைய முயன்ற காற்றும் தோற்றுப் போய் திரும்பிக் கொண்டிருந்தது!


(முடிந்தது)


###############################################

கதை எண்:06

===============

கிழவி அழுத்து ஏன்?

==================

கவிஞர் யாழிசைசெல்வா 

======================

     வெள்ளை ஆடையை உலர்த்திப் போட்டது போல் வானம் வெளுத்துக் கெடந்தது! ஈயத்தகடுகளை ஒரே நேர்கோட்டில் முறுக்கு பிழிந்தது போல் நீண்டு கிடந்த மின்சார வயர்களில் அமர்ந்திருந்த மைனாக்கள் தமது இணையைக் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தது!

    

      பூந்தென்றல் காற்றாக வருடிக்கொண்டு இசைஞானியின் இன்னிசை மண்டபத்தில் இருந்த அத்தனை பேர் இதயங்களையும் ஆக்கிரமித்திருந்தபோது கெட்டி மேளச் சத்தத்தில் மண்டபம் கிடுகிடுக்க பொற்கொடியாள் கழுத்தில் குமரன் மங்களநாண் பூட்டியதுதான் தாமதம் மண்டபத்திலிருந்த பாதிப்பேர் உணவருந்த எழுந்து சென்று விட்டார்கள்! இதுதான் சமயமென்று மணமக்களோடு உற்றார் உறவினர்கள் ஒட்டிக்கொண்டு புகைப்படம் எடுக்கும் காட்சி இனிதாய் அரங்கேறிக் கொண்டிருந்தது! 


       இவை அத்தனையும் வச்சகண் எடுக்காமல் தன் பேரணையே பார்வதியம்மாள்  பார்த்துக் கொண்டிருந்தாள்! வந்திருந்த கூட்டம் ஒரு வழியாக புகைப்படம் எடுத்துக் கொண்டு புறப்பட்டதுதான் தாமதம்... மேடையிலிருந்து செவலக் காளைபோல் துள்ளி குதித்து தன் அம்மாச்சி அருகே வந்தவன் "நீ வா அம்மாச்சி"யெனப் பார்வதியம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு மேடைக்கு அழைத்துச் சென்றான் குமரன்! 


     மணமக்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நின்று பார்வதியம்மாளின் காலில் விழுந்து வணங்கி நிமிர்ந்தார்கள்! 


       பார்வதியம்மாள் மணமக்களை வாழ்த்தி அவர்களது நெத்தியில்  காய்த்து தழும்பேறிய தனது முதிர்ந்த விரல்களால் பொட்டு வைத்து ஆசி வழங்கியபோது  அவரையும் அறியாமல் விழிகள் கண்ணீர் மல்கின! 


     "யேன் அம்மாச்சி  அழுகுற...?" குமரன் தனது கைக்குட்டையால் பார்வதியம்மாளின் விழிகளைத் துடைத்து விட்டபடி கேட்டான்! 


      "நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்! ஆயுசு பெலக்க பொண்டு புள்ளைகளோட நூறு வருசம் வாழனும்.... அந்த அய்யனாரப்பன் உங்களுக்கு துணையா இருப்பாரு...."என்ற போது விழிகள் பொங்கி வழிந்து கொண்டிருந்தன! 


    பார்வதியம்மாளின் விழிகளைத் துடைத்து விட்டவன் அவரது தோள்களில் கைவைத்து நெருக்கமாக நின்று கொண்டே "இப்பதானே சொன்னேன் அம்மாச்சி! ஏன் அழுகிறேன்னு  கேட்டா சொல்ல மாட்டேங்குற..." என்றான் குமரன்! 


     "உங்க தாத்தா இறந்துட்டாருன்னு என்ன எந்த நல்ல காரியத்துக்கும் உங்க ஆத்தா கூப்பிட மாட்டா...."


    "யேன் கூப்பிட்டா என்னவாம்?" என்றாள் மணமகள் பொற்கொடியாள்!


    "தாலி அறுத்தவ நல்ல காரியத்துக்கு வந்தா.... வெளங்காம போயிருமாம்.... அதனால யாரும் கூப்பிட மாட்டாங்க...." நெஞ்சு முழுவதும் யெறக்கி வைக்க முடியாத வலியோடு கூறினார் பார்வதியம்மாள்!


    "சுமங்கலி பொண்ணுக எல்லாம் சேர்ந்து தானே நம்ம கருப்பாயி அக்காவுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க.... ஆனா.... அஞ்சாறு மாசத்திலேயே... அந்த அக்காவோட வீட்டுக்காரன்... தாலியப் புடுங்கிட்டு தொரத்தி விட்டுட்டான்.... அதுக்கு என்ன சொல்லுறது?"


     "நீ சொல்லுறதெல்லாம் நாயந்தேன்... ஆனா ஊர்க்காரங்க அத பெருசா எடுத்துக்க மாட்டாங்க...."


     "அவனுங்க கெடக்குறானுக.... நம்ம எது பண்ணாலும் ஏதாவது சொல்லிக்கிட்டு தான் இருப்பானுக... அது தான் அவங்களோட வேளை.... யென்ன சின்ன வயசுலெருந்து தூக்கி வளர்த்து ஆளாக்கினது நீதானே அம்மாச்சி! நீ இல்லாத கல்யாணத்த என்னால நெனச்சுக்கூட பார்க்க முடியல... அதனாலதான் உன்னை முதல் ஆளா கல்யாணத்துக்கு வர வச்சு... யேன் முன்னால தெரியற மாறி உட்கார வச்சேன்...." என்றான் குமரன்.


    தனது கணவன் குமரனையே பார்த்துக் கொண்டிருந்த பொற்கொடியாள் விழிகளில் ஒரு கம்பீரம் தெரிந்தது!

(முடிந்தது)

###############################################

கதை எண்:07

=============

மறுவாதி

==========

கவிஞர் யாழிசைசெல்வா 

=========================

"என்னங்க... எங்க இருக்கீங்க....?"என்ற படியே வீட்டுக்குள் நுழைந்த சாந்தியின் கண்கள் எங்கே மாடசாமியெனத் தேடிக் கொண்டே கொல்லைப்புறமாக வந்து சேர்ந்திருந்தாள்.


மாமரத்தின் கீழே இருந்த சலவைக் கல்லில் தனது துணிகளை துவைத்துக் கொண்டிருந்தான் சாந்தியின் கணவன் மாடசாமி.  


"நீங்க இங்க இருக்கீங்களா....? உங்கள வீட்டுக்குள்ள தேடிகிட்டு இருந்தேன். அங்க காணொண்டதும் உடனே கொல்லப்புறமா வந்துட்டேன்.  வீட்டுக்குள்ள இல்லன்னா நீங்க இங்கதான் இருப்பேங்கனு எனக்குத் தெரியும். உங்களப் பத்தி எனக்கு தெரியாதா என்ன?" இடுப்பில் கையை ஊன்றிக் கொண்டு  இளக்காரமாக  மாடசாமியைப் பார்த்தவளின் கண்களில் 'இதெல்லாம் உனக்குத் தேவையா?' என்ற கேள்வி அதில் தொக்கி நின்றது!


"என்ன இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட? இனிமே வீட்டுப் பக்கம் வரவே மாட்டேன்னு சொல்லிட்டு இருந்த? என்னடான்னா காலையில சொன்ன வார்த்தை காயறதுக்குள்ள சாயந்திரமே வந்து நிக்கிறே...! அவ்வளவுதானா உன்னோட வீம்பு எல்லாம்....?" சோப்பு போட்ட வேட்டியை சலவைக் கல்லில் படார் படாரென அடித்து துவைத்துக் கொண்டே அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்!


"அவ்வளவு வேகமா அடிக்காதீங்க....! உங்களோட புத்தம் புது வேட்டியில என் மேல இருக்கிற வெறுப்பைச் சேர்த்து வெளுத்தா... ஏற்கனவே கிழிஞ்சு தையல் போட்ட இடத்தில பொறுத்தது போதும்னு வேட்டி சல்லி சல்லியா கிழிஞ்சிடப் போகுது...."நானும் சளைத்தவள் இல்லையென பதிலுக்கு சூடாக பேசிவிட்ட மிதப்பில் மாடசாமியைப் பார்த்தாள் சாந்தி!


எதுவும் பேசாமல் வாளித்தண்ணீயில் நனைந்து ஊறிய பணியனை எடுத்து சலவைக் கல்லில் போட்டு சோப்பு போடத் தொடங்கி விட்டான்.


"ஆனால் உங்களுக்கு இவ்வளவு திமிரு ஆகாது...! நானா தேடி வர்றதுனால என்ன இளக்காரமா நினைச்சுட்டீங்கள்ளே.... இப்ப மட்டும் இல்ல.. எப்பவும் நான் ஒன்னும் குறைஞ்சவ இல்லை. என்னோட அப்பா அப்படி ஒன்னும் வளக்கல. அவர் இருக்கும் வரைக்கும் எனக்கு எந்த கவலையும் இல்லை. இத மட்டும் ஞாபகத்தில நல்லா வச்சுக்குங்க... இந்த வீராப்பெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு நானும் பாக்கத்தானே போறேன்" பட படன்னு வட சட்டியில் விழுந்த சோளம் மாதிரி பொரிந்து தள்ளி விட்டாள் சாந்தி!


"அவ்வளவுதானா....? இல்ல இன்னும் இருக்கா? மிச்சம் மீதி இருந்தால் அதையும் சொல்லிரு.... அப்புறம் அதுக்கொரு தடவை வர வேண்டி இருக்கும்"துவைத்த பணியினையும் வேட்டியையும் பக்கத்தில் இருந்த அண்டாத் தண்ணீரில் அலசிக்கொண்டபடியே கூறினான் மாடசாமி! 


"துறைக்கு என்னப் பார்த்து பேசுறதுக்கு கூட புடிக்கல போலருக்கு. அதான்... உன்ன மாதிரி வெட்டியா நான் இல்லன்னு காட்டுறதுக்காக இதெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கீங்கேரது எனக்கு ஒன்னும் தெரியாம இல்ல..."


'அதுதான் தெரியுதில்ல பேசாம போக வேண்டியது தானே' என்பது போல பணியனையும் வேட்டியையும் உதறி எடுத்தவன் மாமரத்தையும் வேப்ப மரத்தையும் இணைத்து கட்டிருந்த கொடியில காயப் போட்டான் மாடசாமி!


"உங்க கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன். என்னனென்ன கிறுக்கின்னு நினைச்சிட்டீங்களா....?"


"நான் அப்படியெல்லாம் நினைச்சிடுவேனா... நீ யாருன்னு, நீதான் அடிக்கடி சொல்லுவியே... அப்படி இருக்கும்போது நான் மறந்துடுவேனு எப்படி நினைச்சே?" சொல்லிக்கொண்டே சாந்தி அருகே வந்து விட்டான் மாடசாமி! 


"அப்புறம் எதுக்கு இத்தனை வீராப்பு வேண்டி கிடக்கு?"


"இதுக்கு பேரு வீராப்பு இல்லை. சுயமரியாதை இல்ல... மறுவாதி அப்படின்னு கூட வச்சுக்கலாம். இதெல்லாம் உனக்கு உங்க அப்பா சொல்லிக் கொடுக்காம வளர்த்து விட்டாரு போல.... எனக்கு இது மட்டும் தான் தெரியும்"


"இத வச்சு கடையில உப்பு புளி வாங்க முடியுமா....? இல்ல... ஒருவேளை கஞ்சிக்கு அரிசி தான் வாங்க முடியுமா? அப்புறம் எதுக்கு இதெல்லாம்? காலத்துக்கு ஏத்த மாரி நாமளும் மாறிக்கிடனும்.... இதச் சொன்னா உங்களுக்கு எங்க புரியுது"


"நீ சொன்னதெல்லாம் வாங்க முடியாது! ஆனா மானம் மறுவாதிங்கெறது அடுத்தவன் கிட்ட கையேந்தாத வரைக்கும் தான் சொந்தம். அப்புறம் அத நம்ம கிட்ட தேடுனாலும் கிடைக்காது. நாம நாமளா இருக்க வரைக்கும் நம்ம மரியாதை நமக்கு சொந்தம்! இது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது! ஓட்டு வீடு, யாரும் இல்லாத அனாதைப்பய, உரிமையின்னு சொல்லிக்கிறதுக்கு காணி நிலம்! இது மட்டுமே நெசமுன்னு தெரிஞ்சு தானே வந்த.... இதை எத்தனை தடவை சொல்லி இருந்தாலும்... உன்னோட அப்பா வீட்டுல இருக்கிற வசதியை எண்ணி சண்டை போட்டுக்கிட்டு வாரத்துல அஞ்சு நாளு அங்க போயிடுற...." என்றவன் சாந்தியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று திண்ணையில் அமர வைத்துவிட்டு சணல் சாக்கிலிருந்து மாம்பழத்தை எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் தந்தான். 


"நம்ம மரத்தில காய்ச்ச பழமா?"


ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினான்! மாம்பழத்தை கடித்து சப்புக்கொட்டி சாப்பிட்டவள் "நல்ல ருசியா இருக்குங்க...." என்றவள் மீதி மாம்பழத்தை தின்ன ஆரம்பித்து விட்டாள்.


"சாந்தி!"


"ம்... சொல்லுங்க...."என்றவள் கவனம் முழுவதும் மாம்பழம் தின்பதிலே இருந்தது! 


"நம்ம வாழ்க்கைக்கு வேண்டியது, நாமளா உழைச்சு உருவாக்கினால் தான் நமக்கு நிம்மதி! அடுத்தவங்க கொடுக்கிறது அமிர்தமா இருந்தாலும் அது நம்மளுக்கு என்னைக்குமே அவ மரியாதைத்தான் தரும்... அதனால தான் சொல்றேன்! உங்க அப்பா கிட்ட நீ எதுவும் வாங்கிட்டு வராத...."


பொம்மை போல் தலையை ஆட்டிய சாந்தியின் விழிகளில் ஏனோ கண்ணீர் ததும்பிருந்தது!

(முடிந்தது)

=================================================

கதை எண்:08

==============

உயில்

=======

கவிஞர் யாழிசைசெல்வா 

========================

      இருள் சூழ்ந்து நீண்ட காலமாக படிந்த தூசியும்,  எங்கும் ஒரே நூலாம்படையாகத் தேங்கிக் குப்பைத் தொட்டியாக பராமரிப்பின்றி கெடந்த நிலவறைக்குள் நுழைந்த செல்லம்மாள் போன வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்து போல் வெளியே வந்தவள் "ம்அச்சு.... ம்அச்சு..... ம்அச்சு "யென விடாமல் தும்மிக் கொண்டிருந்தவள் "எத்தனை முறை சொன்னாலும் அந்தப் பய  முருகன் கேட்கவே மாட்டேங்குறான்! ரொம்ப நாளா பூட்டிக் கெடக்கு! அதை சுத்தம் பண்ணுடா எத்தனை தடவை சொல்லி இருப்பேன்! கேட்டானா.... இன்னும் ரெண்டு நாள்ல சென்னையிலிருந்து பொற்கொடி வந்துருவா... அவ மட்டும் இத பார்த்தா.... அவ்வளவுதான்.... வீட்ட ரெண்டாக்கிருவா..... அதுக்குள்ளற  இத சரி பண்ணப் பாக்கணும்"எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டு வீட்டின் பட்டாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தவள் "டேய் முருகா....! எங்கடா போன? இங்க இருக்கியா இல்லையா? "என்றவள் ஒரு வழியாக பட்டாசலைலிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கைவிசிரி எடுத்து வீசிக் கொண்டிருந்தாள்! 


     கொல்லைப்புறத்திலிருந்து பட்டாசலை நோக்கி வந்த முருகன் துண்டை உதறி முகத்தை துடைத்துக் கொண்டு செல்லம்மாள் அருகே வந்து நின்றவன்"அம்மா கூப்பிட்டியா?" எனச் சொல்லிக்கொண்டே அவளருகே மர நாற்காலி எடுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்! 


     "யேண்டா...  ஒருவேளை நீ வேணும்ன்டே காது கேட்காத மாதிரி நடிக்கிறியா என்ன?" என்ற செல்லம்மாள் முருகனை வினையமாகப் பார்த்தாள்!


     "என்னம்மா.... என்னப் பத்தி தெரிஞ்சுக்கிட்டும் இப்படி கேக்குறியே! இது உனக்கே நல்லா இருக்கா?"என்றவன் தலையைக் குனிந்து கொண்டான்! 


      "தெரியும்டா...! சும்மா சொன்னேன் டா! நீ பாட்டுக்கு எதுவும் நினைச்சுக்காத!"என்றவள் முருகன் தலையைக் கோதிவிட்டாள்! 


     "சரி சரி! மதிய நேர மாத்திரயை சாப்பிட்டியா இல்லையா? "


    "இல்லடா...! நிலவறைக்கு போனேன் அப்படியே மறந்துட்டேன்!" என்றவள் விழிகள் நிலவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன!


     "நேரம் நேரத்துக்கு மாத்திரை சாப்பிடலனா தங்கச்சி என்னத் தான் திட்டும்! அது தெரிஞ்சும் நீ இப்படி செய்யலாமா? சரி இரு" என்றவன் செல்லம்மா படுக்கையறைக்குள் நுழைந்து அங்கிருந்து அலமாரியில் மாத்திரையும் செம்பு நிறையத் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தான்! எதுவும் பேசாமல் முருகனிடம் மாத்திரை வாங்கி முழுங்கிவிட்டு செம்பைக் கீழே வைத்தாள்!


     "முருகா..."என்றாள் செல்லம்மா. "இப்ப என்ன சொல்ல வாறேன்னு எனக்குத் தெரியும்! நிலவரைய சுத்தம் பண்ணிடுறேன், அதுக்கு மின்னால உன்னப் பத்தி எத்தனை தடவை கேட்டு இருக்கேன் ஒரு தடவையாவது அதைப் பத்தி சொல்லி இருக்கியா? இன்னைக்கு நீ சொல்லியே ஆகணும்!"என்றான் பிடிவாதமாக முருகன்! 


     " நீ வேலைக்கு வந்து அஞ்சு வருஷமாச்சு! நீயும் வந்ததிலிருந்து அத விடாமக் கேட்டு கிட்டுத்தானிருக்க!  அதப்பத்தி கேட்காதன்னு சொல்லிட்டேன் உனக்கு புரியுதா இல்லையா? இல்ல வேணுமின்டே கேக்குறியா?"


     "நீ சொல்றதெல்லாம் உண்மைதான்! நிலவறை பக்கம் போனாலே திட்டுற நீ!  எப்பவும் இல்லாம இந்த வருஷம் நிலவறைய சுத்தம் பண்ணச் சொல்றியே அதுதான் ஏன்? "


     "சரி சொல்றேன்" என்றவள் ஏதோ கனவுலகத்தில் மிதப்பது போல் நாற்காலியில்  சாய்ந்து கொண்டவள் "இந்த வீட்லதான் நானும் எங்க அண்ணன் குருசாமியும் பொறந்தோம்!  தோட்டத்துல வெளையறது தேவைக்கு அதிகமா வருமானத்தை கொடுத்ததால , வீட்ல பணப் பிரச்சனை வந்ததேயில்லே!  எங்க அண்ணன் நல்லா படிச்சு மாவட்ட ஆட்சித் தலைவராயிட்டான்! அதனால அவனுக்கு எங்க சொந்தக்காரப் பொண்ணப் பார்த்து கல்யாணம் கட்டி வச்சுட்டாங்க!  ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்தான்! அப்பத்தான் நான் கல்லூரியில வரலாறு மூன்றாமாண்டு படிச்சுக்கிட்டு இருந்தேன்! அந்த ஆண்டு நடந்த கலை நிகழ்ச்சியில சுந்தரபாண்டியனப் பாக்குற வரையிலும் என் வாழ்க்கை இயல்பா தான் போய்கிட்டுருந்துச்சு! "என்றவள் முகம் தாமரையாய் மலர்ந்தது! 


     "அப்புறமென்ன நடந்துச்சு! சீக்கிரம் சொல்லுமா? "


     "இருடா... சொல்லாம என்ன செய்யப் போறேன்" என்றவள் தொடர்ந்து "ஆடல் பாடல் முடிந்த பின்பு நான் நடிச்ச நாடகத்தைப் பார்த்த  எல்லாரும் அமைதியா இருந்தப்ப அவர் மட்டும் விசிலடிச்சு கொண்டாடித் தீர்த்திட்டாரு...."


     "அப்புறம் என்ன?"


      "பெறகு என்ன? நானும் சும்மா இருக்காம அவரைப் பத்தி அவரோட கல்லூரி பொண்ணுக கிட்ட வெவரம் கேட்கும் போது அவரே முன்னால வந்து 'உன்ன எனக்கு புடிச்சிருக்கு! கல்யாணம் கட்டிக்க சம்மதமானு' கேட்டுட்டாரு.... ஒரு நிமிஷம் எனக்கு படபடன்னு ஆயிருச்சு..... அதுக்குப் பெறகு ரெண்டு மாசம் அவர அலையவிட்டு, அவருக்கு சம்மதம் சொன்னேன்! ஒரு நாள் ரெண்டு பேரும் நம்ம ஊரு முருகன் கோயிலுல மாலைமாத்தியதோட பதிவுத் திருமணம் செஞ்சு, எங்க வீட்டுக்கு வந்தப்ப, எங்க அப்பா எங்களச் சேர்த்துக்காம வீட்டை விட்டு விரட்டிட்டாரு! ரொம்ப நாளா அவரோட பேச்சு வார்த்தையே இல்ல... எங்க அப்பா யெறந்த பெறகு இந்த வீட்டை எங்கண்ணன் எனக்கு கொடுத்துட்டாரு"என்றவள் விழிகள் குளமாயின! 


      அப்போது "செல்லம்மா! இந்த வீட்ட உங்க அப்பா உன் பேர்ல எழுதி வச்ச உயில உங்க அண்ணன் இப்பதான் பதிவுத்தபாலுலே  அனுப்பியது வந்துச்சு"என்றபடி உள்ளே வந்தார் சுந்தரபாண்டியன்! 


      எதுவும் பேசாமல் உயிலை கையில் வாங்கியவள் சிறுவயதில் ஓடி விளையாடிய நிலவரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மா!

(முடிந்தது)

################################################

கதை எண்:09

=============

நாட்காட்டியின் நினைவலைகள் 

===========================

கவிஞர் யாழிசைசெல்வா 

======================

        பரபரப்பைக் பற்றி கொண்டு சதுரக் கண்ணாடியின் வழியே விழியில் நலம் விசாரித்து"இந்த ஆண்டு வரலாற்றுத் துறை ஆண்டு விழாவில் யாரெல்லாம் பேசப் போறீங்க? விருப்பம் இருக்கவங்க பேர் கொடுக்கலாம்"எனப் புதிய விடியலுக்கு கட்டியம் கூறினார் பேராசிரியர் துரைச்சாமி!

       ஒவ்வொருவரும் வகையாய் மாட்டிக் கொண்ட திருடன் போல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்தார்களே தவிர யாருமே பதில் தரவில்லை! 

     "நீங்களா பேர் சொல்றீங்களா? இல்ல நானே பேர எழுதிக்கவா?"என பேராசிரியர் கரடியாய் கத்தினாலும் யாரிடமும் எந்தவித பதிலுமில்லை! "வேற வழியே இல்ல... செவ்வந்தி, செல்வகுமார், ரவிக்குமார் நீங்க மூணு பேரும் பேசுறீங்க"எனச் சொல்லிவிட்டு பாடவேளை முடிந்ததால் வகுப்பறை விட்டு வெளியேறிச் சென்றார் துரைசாமி! 

       "என்னடா இப்படி பண்ணிட்டாரு! இப்ப என்ன பண்ணப் போற? இதுவரைக்கும் ஏதாவது மேடையில பேசி இருக்கியா?"என செல்வகுமாரைப் பார்த்துக் கேட்டான் மாரியப்பன்! 

     "இல்லடா... பள்ளிக்கூடம் படிக்கும் போது ஒன்னு ரெண்டு மேடையில பரிசு வாங்குவதற்கு மட்டும்தேன் மேடை ஏறி இருக்கேன்! இதுவரைக்கும் எந்த மேடையிலும் பேசுனதில்ல..." பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் மாரியப்பனிடம் பேசினான் செல்வகுமார். 

     "இப்ப என்ன செய்யப் போற?"

     "அதுதாண்டா தெரியல எனக்கு?"

     "பேசாம அவர் கிட்ட போயி உண்மையை சொல்லிரலாமா?"தலையை ஆட்டிய  செல்வக்குமார் மாரியப்பனுடன் வரலாற்றுத் துறை அலுவலகத்திற்குள் நுழைந்து பேராசிரியர் துரைச்சாமி முன்பாக நின்றுந்தார்கள்!

     "என்னையா வந்திருக்கீங்க?"என்றவர் அவர்கள் முகத்தை பார்த்தார்! 

     "பேச்சுப் போட்டிக்கு என்னோட பேர சொல்லிட்டீங்க... என்ன பேசுறது? எப்படி பேசுறது? எதுவுமே தெரியாது ஐயா!" தொண்டையில் சிக்கிக்கொண்ட வார்த்தையை மெல்லக் கொட்டினான் செல்வகுமார்!

      "அது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரமில்ல... நாலு மேடை ஏறிப் பேசினா எல்லாமே தானா வந்துரும்... நீ பேசுற அவ்வளவுதான். உனக்கு ஏதாவது புத்தகம் வேணும்னா நூலகத்தில் எடுத்துப் படிச்சுக்கோ!  நான் நூலகத்துல சொல்லிடுறேன். வாழ்க்கையில வாய்ப்பு எப்போதுமே தானா அமையாது! நாமதேன் அமைச்சுக்கிறணும்! கிடைச்சது புடிச்சு மேல போக பழகிக்க! போயிட்டு வா!" என்றவர் அருகிலிருந்த புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கி விட்டார் பேராசிரியர் துரைசாமி!

    "என்னடா இப்படி சொல்லிட்டாரு? இப்ப என்ன பண்ண போற?" என மாரியப்பன் செல்வகுமாரை பார்த்துக் கேட்டான்! 

      அதற்கிடையே....

     இவர்களைக் கடந்து சென்ற சக மாணவர்களில் ஒருவன் "வகுப்புல ஒரு நாளும் பாடத்தைத் தவிர வேறு எதுவும் சந்தேகம் கேட்க மாட்டான்! இவன் எல்லாம் என்ன பேசிக் கிழிக்கப் போறனோ? "என செல்வக்குமாரைப் பார்த்து கைதட்டி நண்பர்களிடம் சிரித்தான்!

    எதுவும் பேசாமல் இருவரும்   நூலகத்திற்கு வந்திருந்தார்கள்! வெகு நேரம் தேடிய பின்பு கிடைத்த புத்தகம் 'நொறுக்கப்பட்ட மனிதர்கள்' அதனைப் படித்த செல்வகுமார் முகத்தில் மின்னலாய் தலைப்பு தோன்றியது!

     ஆண்டு விழா பேச்சுப் போட்டியில் வென்ற புத்தகத்தையும், நாட்குறிப்பையும் செல்வகுமார்  திறந்த போது கல்லூரி ஞாபகம் நிழலாடியது!

(முடிந்தது)

#################################################₹

கதை எண்: 10

===============

உண்ணா நோன்பு 

=================

யாழிசைசெல்வா

===============

        சுருக்கெனக் குத்தும் மொட்ட வெயில் பிட்டத்தை சுட்டெரிச்சு பொசுக்கும் நடு மதியான வேளையில் கடலைச் செடிக்கு களைவெட்டிக் கொண்டிருந்தாள்  பூரணி!  பொடனில அடிச்ச மாதிரி "ஏண்டி பூரணி...! வாடி சாப்பிட்டு வேலை செய்யலாம்", சத்தம் வந்த தெசப்பக்கம் திரும்பாமலே "இல்ல சின்னம்மா நீ சாப்பிடு!"


     "அப்படி என்னடி சாப்பிடாம கொள்ளாம வேலை செய்ய வேண்டிக் கெடக்கு! அப்படி மிச்சம் பண்ணி நீ என்னத்த அள்ளிக்கட்டப் போற! கூலிக்கு மாரடிக்கிற நானே சாப்பிடுறேன். காட்டுக்கு சொந்தக்காரி நீ ஏண்டி இப்படி கெடந்து உன்ன வருத்திக்கிற" என்றாள் சீலக்காரி!


     "அட நீ வேற... வெவரம் புரியாம பேசாத...! அவ உண்ணா நோன்பு இருக்கா..." என சீலக்காரி அருகில் களைவெட்டிக்கிட்டுயிருந்த கருப்பாயி சொன்னாள்.


    "என்னடி சொல்ற கருப்பாயி?"


    "ஆமா உனக்கு ஒன்னும் தெரியாது! ஏன் வாயை கெலராம சும்மா இரு!"


      "உண்மையில தாண்டி கேக்குறேன் எனக்கு அந்த வெவரம் தெரியாது!"


    "பூரணி கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சுனு அவ மாமியா கெடந்து தெனமும் புடுங்கித் திங்கிறா, அது பொறுக்க முடியாமத்தான் நம்ம வீரபாண்டி மாரியம்மன் சாமிக்கு வேண்டுதல் வச்சி உண்ணா நோன்பு இருக்கா... நீ அது தெரியாம ஏதேதோ பேசிக்கிட்டு இருக்க"


    "எனக்கு உண்மையிலேயே இந்த வெவரம் தெரியாதுடி! தெரிஞ்சா நான் எதுக்கு கேட்கப் போறேன்..."


     "ரெண்டு நாளைக்கு முன்னால வந்த பூரணியோட நாத்தனாளும் பத்தாக்கொறைக்கி அவ பங்குக்கு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஆத்தாள ஏத்தி விட்டுட்டு போயிட்டா.... சங்குச் சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு குதிச்ச மாதிரி தெருவுல நின்னு ஒரே ஆட்டத்தை ஆடி பூரணியை கேவலப்படுத்தி புட்டா மாமியாகாரி! பாவம் எதுவும் பேசாம தேம்பித் தேம்பி அழுதுகிட்டே நின்னுகிட்டு இருந்தா.... வேடிக்கை பாத்த சனம் ஒன்னு கூட என்னா ஏதுன்னு கேட்கவே இல்லையே"


     "கேட்டா பூரணியோட மாமியா, அவங்கள சும்மா விட்ருவாளா....? மேல விழுந்து நாய் மாதிரி கடிச்சு கொதறிற மாட்டா...."


       "ஆமா.... அதுவும் உண்மைதான்" என்றாள் கருப்பாயி!


     களைவெட்டியதை நிறுத்திவிட்டு   சோர்ந்து போய் வேப்பமரம் அருகே அமர்ந்து கொண்டாள் பூரணி! அதப் பாத்ததும் சீலக்காரியும் கருப்பாயியும் அவளருகே போனார்கள்! எங்கிருந்தோ கெளம்பி வந்த இளங் காற்று முகம் முழுவதும் வேர்த்துகெடந்த பூரணியோட முகத்தை முத்தமிட்டு சென்றது! 


      "பாவம் புள்ள சொனங்கிப் போயிட்டா.... " எனக் கூறிக்கொண்டே பூரணியின் முகத்தை தன்னோட முந்தானைச் சேலையால் விசிறி விட்டுக் கொண்டே "ஏண்டி ஆத்தா! கொஞ்சம் பச்ச தண்ணியாவுது குடியேண்டி...."என்றாள் சீலக்காரி!


      "வேணாம் சின்னம்மா! சாயங்காலம் வரைக்கும் நாக்குல பச்ச தண்ணி படாம இருக்கணும்! இல்லாட்டி வேண்டுதல் வீணாப் போயிரும்!" 


     "தாயில்லாத புள்ள இப்படி தவிச்சு கெடக்கிறதை பார்க்கும் பொழுது மனசு பொறுக்கலடி"


      "வாங்கி வந்த வரம் அப்படி இருக்கு சின்னம்மா!" என்றவளின் விழிகள் துளிர்த்தன! "சரி வாங்க போய் வேலையைப் பார்க்கலாம்! இல்லாட்டி அதுக்கும் என் மாமியார் கெடந்து கத்துவா"என்றவள் மீண்டும் களைவெட்ட புறப்பட்டாள் பூரணி!

(முடிந்தது)

=================================================

கதை எண்:11

==============

அவளோடு போனவை 

====================

கவிஞர் யாழிசைசெல்வா 

=======================

       மேற்குத் தொடர்ச்சி மலையில் விழுந்து கொண்டிருந்தது சூரியன். அணையும் விளக்கின் பிரகாசத்தோடு அந்திவானம் சிவந்திந்தது. மாடுகளை குளிப்பாட்டுவதற்காக குளத்தில் இறக்கியிருந்தான் சந்தனம். ஒரு வாரமாக மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டுமென்று நினைத்தது இன்று தான் கை கூடியது. இடுப்பாலத்தில் நின்று கொண்டு குளத்தின் நீரை ரெண்டு கைகளாலும் வாரி வாரி மாட்டின் மீது இறைத்தான். தண்ணீர் பட்டதும் உடலை சிலிர்த்துக் கொண்டன மாடுகள். வைக்கோல் பிரிவைத்து உடல் முழுவதும் சந்தனம் தேய்த்து விட்டதும் மாடுகள் பார்ப்பதற்கு அழகாய்த் தெரிந்தன. பொழுது மேலேறி இருளின் ஆதிக்கம் மெல்லப் பரவி வந்து கொண்டிருந்தது. குளிப்பாட்டி முடிந்ததும் மாடுகளை கரையிலிருந்த ஆலமரத்தின் விழுதுகளில் கட்டி வைத்தான். 

    "ஏலே சந்தனம்.... நீ வரலையா....?" பக்கத்தூர் காளியம்மன் கோவில் திருவிழாவுக்கு போய்க்கொண்டிருந்த தங்கப்பாண்டி கேட்டான். 

     "வெள்ளையும் சொல்லையுமா எங்கடா கிளம்பிட்ட? பாக்குறதுக்கு மாப்பிள்ளை கணக்கால இருக்க? வேற ஏதும் விசேஷமாடா? என்கிட்ட கூட சொல்லாம அப்படி என்னடா ரகசியம்? ரெண்டு பேரும் ஒன்னாத் தானே எங்க போனாலும் போவோம். இப்ப என்னடான்னா நீ மட்டும் தனியாப் போய்கிட்டு இருக்க? இதெல்லாம் உனக்கு நல்லவா இருக்கு? அம்புட்டுத்தேன் நம்ம கூட்டோட லட்சணம் போலருக்கு.... சரி! நீயொரு முடிவோட கிளம்பிட்ட.... நல்லபடியாப் போயிட்டு வாடா..." எனச் சொல்லிக்கொண்டே சந்தனம் குளத்தை நோக்கி நடந்தான். 

      "இருடா. நீ பாட்டுக்கு என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்க. உன்ன விட்டு நான் எங்கேயும் போகல. உன்னத் தேடி வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டிக் கிடந்துச்சு. அப்பத்தான் பக்கத்து வீட்டு காளியம்மாப் பாட்டி, நீ மாட்ட புடிச்சுகிட்டு குளத்து பக்கம் போனதா சொன்னாங்க. அதுதான் உன்னைத் தேடி இங்க வந்தேன். இது தெரியாம நீ பாட்டுக்கு என் மேல கோபப்பட்டுட்டு இருக்க" எனச் சொல்லிக் கொண்டே சந்தனம் அருகே வந்தான் தங்கப்பாண்டி. 

     "என்ன மன்னிச்சுக்கடா. நீ வெள்ளையும் சொல்லையுமா கிளம்பி வந்ததை பார்த்ததும் எனக்கு அப்படித் தோனிருச்சு. அதுக்காண்டி என்ன கோவிச்சுக்காத. சரி இப்பச் சொல்லு? எங்க போறதுக்காக இப்படி கிளம்பி வந்து இருக்க?"

     "உன்னோட அம்மா பிறந்த ஊருல காளியம்மா கோவில் திருவிழா நடக்குதுடா. அது உனக்கு தெரியாதா? இல்ல நீ மறந்துட்டியா? எதுனாலும் பரவாயில்லை வா ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்"

    "இல்லடா நான் வரல. நீ போயிட்டு வா"

     "ஏண்டா வரல? உன்னோட அம்மா ஊரு தானடா அது. பெறகெதுக்கு வர மாட்டேங்குற?"

     "என்னைக்கு என்னோட அம்மா யெறந்து போச்சோ. உறவு அருந்த மாதிரி அன்னையோட எங்கப்பனும் என்னத் தலைமுழுகிட்டு வேற கல்யாணம் கட்டிக்கிட்டான். அந்த ஊருக்கும் எனக்குமான சம்பந்தம் விட்டுப் போயிடுச்சு. அதுக்கு பிறகு அந்த ஊரோட எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்ல..."

      "அதுக்கு சாமி என்னடா பண்ணும்?"

      "எங்க அம்மாவை விட பெரிய சாமி எனக்கு எதுவும் இல்லடா....! எல்லாம் எனது அம்மாவோட போயிருச்சுடா...." எனச் சொல்லிக்கொண்டே‌ குளிப்பதற்கு குளத்தில் இறங்கினான் சந்தனம்.

(முடிந்தது)

################################################

கதை எண்:12

==============

ஞாயிற்றுக்கிழமை மாலை 

========================

கவிஞர் யாழிசைசெல்வா 

=======================

     வீட்டுக்குள்ளிருந்து எழுந்து வாசலில் வந்து சோம்பல் முறித்தவளின் மேனி முழுதும் செந்தூரச்சாரளொளி சிதறி விழுந்தது! 


     "இதென்னடி கூத்து! செத்த நேரம் கண்ணசந்தேன்! அதுக்குள்ளற மயங்கிப் போச்சு" நகர்ந்த போது மந்திரிச்சு விட்டது போல் மாமர இலைகள் வாசல் முழுவதும் இறைந்து கெடந்தது!


     திண்ணையில் கெடந்த வெளக்குமாறை எடுத்துக்கொண்டு மாமரக் குப்பைகளை 'பரட் பரட்டென' கூட்டிப் பெருக்கி கொண்டிருந்தபோது "முனியம்மாக்கா...." என்ற சத்தம் கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்தாள்!


     "யென்னடி மசங்குன நேரத்துல வந்திருக்கே....? நீ சும்மா வர மாட்டியே...?"யெனக் காளியம்மாளைப் பார்த்துக் கேட்டாள் முனியம்மாள்! 


    "அது ஒன்னுமில்லக்கா.... ஒரு சேதி கேள்விப்பட்டேன்...! அதுதேன் உனக்கு தெரியுமா... இல்லையான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு போயிடலாம்னு வந்தேன்...." யென்றாள் காளியம்மாள்! 


    "யென்னடி பேச்சுல நீ போட்ட நெடி மூக்குல நுழைஞ்சு மூளையக் கொளப்புது...! சொல்ல வந்தத நேரடியாச் சொல்லுடி.... வீட்டுக்குள்ளார வேலை வெட்டி அப்படியே கெடக்கு...."


     "ஆமா... யெல்லாம் வக்கனையாத்தான் பேசுற.... ஆனா உன் வீராப்பு எல்லாம் யெங்க போகும்னு தானே பாக்கப் போறேன்" முனியம்மாளின் விழிகளைக் கொத்தும் பருந்துபோல் பார்த்துக் கொண்டே பேசினாள் காளியம்மாள்!


     "யேண்டி... எதுக்கு இப்படி வடசட்டில விழுந்த புளு மாதிரி கெடந்து துடிக்கிறவ.... யென்ன விசயமுன்னு ஒன்னத்தையும் சொல்லாம... பேச்சுக்கு பேச்சு பொடி வச்சுப் பேசிக்கிட்டே போறயடி...."


     "க்கும்ம்..." மென வாயை கொனட்டி இழுத்துக் கொண்டே "உனக்கு யெல்லாம் தெரியும்! யேன்கிட்ட தெரியாத மாதிரி நடிக்கிற.... அந்த வேலையெல்லாம் யேன்கிட்டக் காட்டாத.... உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா?"


     "அடியே....! இன்னைக்கு நீ ஒரு மார்க்கமாத் தாண்டி வந்திருக்கே.... யென்ன விசயமுண்ணு சொல்லுவியா மாட்டியா.... யெனக்கு வேலை கெடக்குடி"


    "சரி சரி! சொல்லுறேன்.... சின்னமனூருக்காரி வார ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் விசேசம் வச்சிருக்காளாம்... அதுதேன் உனக்கு தெரியுமா இல்லையான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு போலாம்னு வந்தேன்..." யென்றவள் முனியம்மாள் முகத்தை உற்றுப் பார்த்தபடி சொன்னாள் காளியம்மாள்! 


    "நீ யாரடி சொல்ற....?"


     "அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரி கேட்காத..."


     "இதென்னடி வம்பாப் போச்சு.... நீயா வந்த... எதையோ சொன்ன... என்ன வெவரம்னு கேட்டா... ஒழுங்கா சொல்ல மாட்டேங்குற..."


     "உனக்கு சின்னமனூருல்ல ஆயிரம் பேரா இருக்காங்க...." யென்றவள் முனியம்மாளின் முகம் மாறுதலை கவனித்து விட்டாள்! 


     "அதுக்கென்னடி இப்ப?"


     "இல்ல.... விசேசத்துக்கு உன்னக் கூப்பிட்டாளா இல்லையா....?"


     சிறிது நேரம் தயங்கி விட்டு "இல்லடி"


     "அப்ப நீ போக மாட்டயில்ல...."


      "அது எப்படி டி போகாம இருக்க முடியும்"


     "யென்னக்கா சொல்ற? உன் கூடத்தேன் எந்த ஓட்டு உறவும் இல்லாம இருக்காளே...."


     "அவ வேணுமெண்டா இருக்கலாம்! அதுக்காக அண்ணன் பெத்த மகங்கிற உறவ அழிக்க முடியுமா? யெனக்குன்னு இருக்கிற ஒரே சொந்தம் அவ தாண்டி.... அடிச்சாலும் புடிச்சாலும் யெனக்கு அவ தான்! அவளுக்கு நான் தான்.... சரி! அது கெடக்கட்டும்! அவ எங்க விசேசம் வச்சிருக்கா?"


    "நம்ம ஈசுவரன் கோயில்ல நாளைக் கழிச்சு வாரே ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் விசேசம் வச்சிருக்கா...."


    முனியம்மாளின் விழிகளில் பட்டாம்பூச்சி சிறகடித்தது!


(முடிந்தது)

##################################################

கதை எண்: 13

===============

பூத்தது வாழ்க்கை 

================

யாழிசைசெல்வா 

===============

      அந்தி வானத்தைத் துரத்திக் கொண்டு இருள் கவிழ்ந்து கொண்டிருந்த மாலை வேளை! வேப்பமரமருகே இருந்தது செல்லாயி குடிசைவீடு! 

     வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு மண்ணெண்ணெய் விளக்கைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் செல்லாயி மகள் மீனாட்சி! அலை அலையாய் பரவியிருந்த கருங்கூந்தல் முகத்தின் முன்னால் பரவி முத்தமிட்டு கொண்டிருந்தபோது "தாயி! அம்மா இல்லையா...?" என்றபடி வாயில் போட்டிருந்த வெத்தலையைக் குதிப்பிக் கொண்டே கேட்டாள் செல்லம்மா! 

      "வாங்க பெரியம்மா....! அம்மா வீட்டுக்குள்ளற தான் இருக்காங்க. செத்த பொருங்க...."என்றவள் வீட்டிற்குள் திரும்பி "அம்மா.... அம்மா..." என்றாள் மீனாட்சி! 

     "உள்ளாற தானே இருக்கேன்! அதுக்கேண்டி இப்படி கெடந்து கத்துற..."என்றபடி வாசலில் வந்த செல்லாயி, "வாக்கா.... இப்பத்தான் யேன் வீடு இருக்க நெனப்பு தெரிஞ்சதாக்கும்....  திடீர்னு அதிசயமா வந்திருக்கியே.... காரணமில்லாம வரமாட்டியே... சொல்லுக்கா..." என்றவள் திண்ணையில் அமர்ந்து கொண்டு செல்லம்மாவையும் கையைப் பிடித்து அருகே அமர வைத்தாள் செல்லாயி!

      சிறிது நேரம் மீனாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மாவைப் பார்த்து "என்ன? காணாததை கண்டது போல புள்ளையை அப்படி வெரச்சுப் பார்க்குற...? என்ன விவரமுனு சொல்லுக்கா?" 

       "நேத்து சந்தைக்கு போயிருந்தேன். அப்ப நம்ம தூரத்துச் சொந்தம் மகாலிங்கம் அண்ணனைப் பார்த்தேன்!" 

     "சரி அதுக்கென்ன இப்ப?"என வெடுக்கெனக் கேட்டாள் செல்லாயி!

     "கொஞ்சம் பொறுடி, முழுசா என்னச் சொல்ல விடு!"

      "சரி சரி! நான் எதுவும் சொல்லல"

      "மகாலிங்க அன்னை மகன் கருப்பசாமிக்கு ரொம்ப நாளா பொண்ணு தேடிக்கிட்டு இருக்க தா சொன்னாரு. ஒரு இடமும் நல்லபடியா அமையல. உனக்கு தெரிஞ்ச பொண்ணு ஏதாவது இருந்தா சொல்லுனு சொன்னாரு.  உடனே மீனாட்சி பத்தி அவர்கிட்ட சொன்னேன்" என்றவள் செல்லாயி முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்! 

     "மகாலிங்கம் அண்ணே! ரொம்ப நல்லவருதான்!  ஆனா என்னோட நெலமை உனக்குத்தான் தெரியுமில்ல! அந்த மனுசன் போன பிறகு என் உசுர கையில புடிச்சு வச்சிருக்கதே மீனாட்சிக்காகத்தான்! அவள நல்லவன் கையில புடிச்சு கொடுத்துட்டா...."  என்றவள் தேம்பி அழத் தொடங்கி விட்டாள் செல்லாயி!

     "இப்ப நீ எதுக்கு கெடந்து மனசப் போட்டுக் குழப்பிக்கிற,  மகாலிங்க அண்ணனோட பையன் நல்லா படிச்சு, கை நிறையச் சம்பாதிக்கிறான்! எந்தக் கெட்ட பழக்கமுமில்லை! பெறகு உனக்கென்ன கவலை?"

     "நான் இருக்க நெலமையில மீனாட்சிய எப்படி கட்டிக் கொடுக்கப் போறேன்?"

     "மீனாட்சிக்கு ஏற்கனவே குடிகார சடையாண்டியோட கல்யாணமாகி அவன் கொடுமை பொறுக்க முடியாம,   ஊரைக் கூட்டி  சபையில வச்சு அவனோட வாழ்ந்தது போதுமுனு அத்து விட்ட நாளே நாளுல  மகளுக்கு ஏற்பட்ட துக்கம் தாங்காமல் மீனாட்சி அப்பா யெறந்தது எல்லாத்தையும் தெளிவாச் சொல்லிட்டேன். அது மட்டுமில்லாம கல்யாணத்த ஆடம்பரமில்லாம மாரியம்மன் கோயில்ல, நம்ம சொந்தக்காரங்களை மட்டும் அழைச்சு வச்சு நடத்துறதுக்கும் அவர் சம்மதிச்சுட்டாரு... இப்ப சொல்லு இதுல கவலைப்பட என்ன இருக்கு?" என்ற போது  மீனாட்சி விளக்கேற்றியதில்  வெளிச்சத்தில்  வீடு நிறைந்திருந்தது!

     பூத்தது வாழ்க்கையென தாயும் மகளும் சிரித்தார்கள்!

    (முடிந்தது)

##################################################


Saturday, 6 September 2025

மூக்குப்பொடி வாத்தியார் - கவிஞர் யாழிசைசெல்வா

மூக்குப்பொடி வாத்தியார் 

========================

யாழிசைசெல்வா

=================

ஊருக்குள் நுழைந்த உடனே முதலில் வரவேற்பது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி‌‌ பாடசாலை! அதன் இடது புறம் வளைந்து ஓடும் ஓடைத் தண்ணீரில்  இரண்டு சிறுவர்கள் குதித்துக் கும்மாளம் இட்டுக் கொண்டிருந்தார்கள்! கரையோரம் வளர்ந்திருந்த பூவரச மரத்தின் வளைந்த கிளையென்று ஓடையை நோக்கி வாகாக வளைந்து எப்படியாவது  தண்ணீரை முத்தமிட்டு விடவேண்டுமென்ற முயற்சி ஈடுபடுவதற்காக மேற்கு தொடர்ச்சி மலையின் காற்றின் உதவியை நாடியிருந்தது! அது தெரியாமல் மரத்திலேறிய சிறுவர்கள் தண்ணீரில் தொபுக்கென்று விழுந்து சிரித்தபோது வளைந்த கிளையின் தலை தண்ணீரில் மூழ்கி பிறவிப் பயன் அடைந்திருந்தது!

"டேய்! மறுபடியும் மரத்து மேல ஏறி தண்ணியில குதிப்போமாடா.... இந்த விளையாட்டு நல்லா இருக்குடா.. வாடா போகலாம்" பக்கத்திலிருந்த மாடசாமி கையைப் பிடித்து இழுத்தபடி கூறினான் பாண்டி! 

"போடா... இதோட எட்டு தடவை மரத்திலிருந்து குதிச்சாச்சு! கெண்டைக்காலு எல்லாம் வலிக்குது! நான் வரமாட்டேன்! இப்படியே தண்ணிகுள்ள கொஞ்ச நேரம் இருக்கப் போறேன்! அடிக்கிற வெயிலுக்கு சுகமா இருக்கு!" கழுத்து வரை ஓடைத் தண்ணீரில் நின்றபடி கூறினான் மாடசாமி!

"டேய் இன்னும் ஒரே ஒருவாட்டி... வாடா குதிப்போம்! ஆசையா இருக்குடா! நேத்து மட்டும் நீ சொன்னேன்னு பதினைந்து வாட்டி  குதிச்சோமில்ல..." என மாடசாமியைப் பார்த்து கெஞ்சத் தொடங்கி விட்டான் பாண்டி! 

"சரி சரி! அதுக்காக அழுதுறாத....! இந்த ஒருவாட்டி தான். அதுக்கப்புறம் நீ வராட்டியும் நான் என்னோட வீட்டுக்கு போயிருவேன்"

சரி என்பது போல் தலையை ஆட்டிக் கொண்டே இருவரும் பூவரசம் மரத்திலேறி தண்ணீரை நோக்கி குதிக்க தயாரானார்கள். "நான் இப்ப ரெடி! இப்ப ஒன்னு ரெண்டு மூணு சொன்ன உடனே குதிச்சிடுவேன்! யாரு முதல்ல குதிக்கிறாங்களோ... அவங்கதான் நாளைக்கு எத்தனை தடவை தண்ணில குதிச்சு விளையாடுறதுங்கிறத முடிவு பண்ணலாம். இது உனக்கு சம்மதம் தான....?" ஓடைத் தண்ணி நோக்கி வளைந்திருந்த கிளைகளில் நின்றபடி கேட்டான் மாடசாமி! 

"சரி டா... நீ சொன்னபடியே செஞ்சிடலாம்..."

"ஒன்னு ரெண்டு மூணு" சொல்லிக்கிட்டே ஓடையில் குதித்தவன் "அம்மாவென...."அலறத் தொடங்கி இருந்தான் மாடசாமி! 

"டேய் மாடா! என்னடா ஆச்சு" எனச் சொல்லிக்கொண்டே மாடசாமி குதித்த இடத்தில் பாண்டியும் குதித்து தண்ணீரில் மாடசாமியை தேடத் துவங்கிவிட்டான்.

ஓடைத்தண்ணி முழுவதும் சிறிது நேரத்தில் ரத்த நிறமாக மாறத் தொடங்கிருந்தது கண்டு "டேய் மாடா.... எங்கடா போயிட்ட...."ஷபெரும் குரலெடுத்து ‌ கத்தி அழத் தொடங்கி விட்டான் பாண்டி! 

ஊருகால சாமி கோயில் தாண்டி போய்க் கொண்டிருந்த ரெண்டு பேரு பாண்டிபோட்ட சத்தம் கேட்டு திரும்பினார்கள்! இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் ஓடையை நோக்கி ஓடி வந்து சேர்ந்திருந்தார்கள்! 

"அதோ அந்தப் பக்கம்! தண்ணிக்குள்ள ஒரு பையன் எதையோ தேடிக்கொண்டு இருக்கான். அவன் தே சத்தம் போட்டு இருக்கணும்! இங்க வேற யாரும் இல்ல"என்றான் இரண்டு பேரில் தட்டை குச்சி போல் ஒல்லியாக வளர்ந்திருந்த குமார்!

"சரி! பேசிக்கிட்டே நிக்காம.... வா போகலாம்"என்றான் செல்வம்! 

இருவரும் பாண்டி அருகே வந்து சேர்ந்தபோது தண்ணீரிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததை பார்த்ததும் சிறிதும் யோசிக்காமல் இருவரும் தண்ணீரில் மூழ்கி மாடசாமியை தேடத் துவங்கி இருந்தார்கள்! சிறிது நேரத்திற்குள்ளாக குமார் மாடசாமியைத் தூக்கிக்கொண்டு கரையேறி இருந்தான்! குமாரும் பாண்டியும் அவனோடு வெளியேறிய கரை சேர்ந்தார்கள். அழுது அழுது ரத்தச்  சிவப்பேரிய விழிகளோடு மாடசாமி அருகே அழுதபடி நின்று கொண்டிருந்தான் பாண்டி! 

செல்வம் தான் கொண்டு வந்திருந்த பையை எடுத்துக் கொண்டு வந்து குமாரிடம் கொடுத்தான்! பையைத் திறந்து பஞ்சை எடுத்து மாடசாமியின் தலையில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை துடைத்து சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டினான் குமார்! 

"அண்ணே மாடசாமிக்கு என்ன ஆச்சு!"அழுது கொண்டே கேட்டான் பாண்டி! 

"உன்னோட கூட்டாளிக்கு பெருசா ஒன்னும் ஆகல.... மரத்திலிருந்து தலைகீழா தண்ணியில குதிச்சதுல தண்ணிக்குள்ள இருந்த கல்லுல முட்டி ரத்தம் வந்ததால மயக்கமா இருக்கான்.‌ கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவான்"என சொல்லிக்கொண்டே பையிலிருந்து மருந்துப் பாட்டிலை எடுத்துக் குலுக்கி அதிலிருந்து மருந்தை ஊசி மூலம் எடுத்து மாடசாமிக்கு போட்டுவிட்டு எழுந்தான் குமார்! 

"ஊசி போட்ட இடத்தை நல்லா தேய்ச்சு விடனும்னு எங்க அம்மா சொல்லுவாங்க.... நீங்க தேய்ச்சு விடாம விட்டுட்டீங்க"

"அப்படியா....! அப்ப நீயே உன் கூட்டாளிக்கு தேய்ச்சு விடு!"சிரித்துக் கொண்டே கூறினான் குமார்! 

மாடசாமிக்கு ஊசி போட்ட இடத்தை பாண்டி தனது பிஞ்சு வலது உள்ளங்கையால் அழுத்தி தேய்த்து விட்டான்.

"போதும் தம்பி! ரொம்ப தேய்க்காத.... சீக்கிரமா சரியாயிருவான்...."பாண்டியின் தோளைத் தொட்டபடி கூறினான் குமார்!

மாடசாமியின் பாதங்களை தேய்த்து சூடாக்கி விட்டுக் கொண்டிருந்தான் செல்வம்! சிறிது நேரத்தில் கண் விழித்த மாடசாமி தன்னைச் சுற்றி இருவர் புதியதாக நிற்பதையும் அழுது சிவப்பேறிய விழிகளோடு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பாண்டியையும் மாறி மாறி பார்த்து ஒன்றும் விளங்காமலே எழுந்து விட்டான் மாடசாமி! 

"பாத்தியா... உன்னோட கூட்டாளி எந்திரிச்சு நின்னுட்டான். இதுக்கு போய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டே, அவ்வளவுதான் எல்லாம் சரியாப் போயிடும்" பாண்டியின் கண்களை துடைத்துக் கொண்டே கூறினான் குமார்! 

"ஆமா! அதெப்படி மரத்திலருந்து தான் தண்ணில குடிச்சோம்ன்னு அவ்வளவு சரியாச் சொன்னீங்க...." குழப்பத்தோடு குமார் செல்வம் இருவரையும் பார்த்தபடி கேட்டான் பாண்டி! 

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள்!

"நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே"

"இதே மாதிரி சம்பவம் எங்க வாழ்க்கையிலும் நடந்திருக்கு! இல்லையாடா செல்வம்?"எனக் கேட்டுக் கொண்டே தன் தலையில் காயமான தழும்பைத் தடவிக் கொண்டான் குமார்! 

"அப்படின்னா.... நீங்க ரெண்டு பேரும் எங்களை மாதிரி தண்ணில விளையாண்டு இருந்திருக்கீங்க.... அதுல அந்த அண்ணன் தலையில காயமாயிருக்கு. அதுதான் அந்த அண்ணன் அவருடைய தலையை தொட்டு பாக்குறாரு..... நான் சொல்றது சரிதானே!"எனச் சிரித்துக் கொண்டே குமாரைப் பார்த்தான் பாண்டி!

"புத்திசாலிப் பய... இல்லையாட செல்வம்?"

"ஆமா நீ சொன்னா சரிதேன்... அன்னைக்கு நடந்தது இன்னைக்கும் அப்படியே பச்சை மரத்துல எழுதின எழுத்து மாதிரி பசுமையா இருக்கு"

"எத்தனை ஞாபகங்கள்! அன்னைக்கு மட்டும் மூக்குப்பொடி வாத்தியார் வரலைன்னா இன்னைக்கு நான் உசுரோடவே இருந்திருக்க முடியாது"என்ற குமாரின் விழிகள் குளமாமாய்த்  தேங்கியிருந்தது!

"மூக்குப்பொடி வாத்தியாராருனா சொன்னிங்க....."என அழுத்தமாக கேட்டான் பாண்டி! 

"ஏண்டா அப்படி கேக்கற தம்பி"என்றான் குமார்! 

"எப்ப பார்த்தாலும் எங்க அப்பாவும் மூக்குப்பொடி வாத்தியாரு... அப்படிச் செய்வாரு இப்படிச் செய்வாரு, அவர் மட்டும் இல்லைன்னா நானெல்லாம நாலு எழுத்து படிச்சிருக்கவே முடியாது! ஒரே பெனாத்தலா எப்பவுமே இருக்கும். அவரோட தொல்லை தாங்க முடியாது! நீங்க என்னடாண்ணா‌ போதாக்குறைக்கு அதேபேரை நீங்களும் சொல்லிக்கிட்டு திரியுறிங்க.... ஆமா உங்களை இதுக்கு முன்னால இந்த ஊர்ல பார்த்ததே கிடையாதே... நீங்க இந்த ஊருக்கு புதுசா?"என்ற பாண்டி அவர்கள் முகத்தை சந்தேகத்தோடு பார்த்தான்! 

"இந்த பயலோட முகத்தை நல்லா உத்துப் பாரு... அப்படியே நம்ம சடையாண்டி முகம் ஞாபகத்துக்கு வருது..."என்றான் செல்வம்! 

"அட ஆமாண்டா! நீ சொல்றதும் சரிதான்! இப்பத்தான் பார்க்கிறேன் சின்ன வயசுல நம்ம கூட படிச்ச சடையாண்டி முகத்தை அப்படியே உரிச்சு வச்சிருக்கான்" என்றான் குமார்! 

"சடைண்டியோட மகன் அவர மாதிரி இல்லாம வேற எப்படி இருப்பான்" கீழே கிடந்த தனது சட்டையை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டே கூறினான் மாடசாமி! அவன் உதறி போட்டதில் சட்டையில் இருந்த மண்ணெல்லாம் காற்றில் பறந்து பழைய நினைவுகளின் சுழலில் பிடித்து தள்ளியிருந்தது குமாருக்கும் செல்வத்திற்கும்! 

வேப்ப மரத்தின் கீழே இருந்த கரும்பலகையில் 

"கற்க கசடற கற்பவை கற்றபின் 

நிற்க அதற்குத் தக"

     திருவள்ளுவர் 

என எழுதி முடித்துவிட்டு மூக்கின் கீழே சரிந்த சதுரக் கண்ணாடியை பழையபடி மேலே ஏற்றிவிட்டு "எல்லாரும் இத சத்தமா படிங்க" நாற்காலி மேல் வைத்திருந்த பிரம்புக்குச்சியை எடுத்துக்கொண்டே கீழே தரையில் அமர்ந்து பாடம் கவனித்துக் கொண்டிருந்த மாணவர்களைச் சுத்தி வட்டம் அடிக்க தொடங்கி இருந்தார் திருநாவுக்கரசு! 

மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி சட்டையோடு கொரட்டு கொரட்டென இதோ வாரேன் எல்லாரும் தயாரா இருந்துக்கங்கனு எச்சரிக்கை கொடுத்தபடி மிதிவண்டி மிதித்து வரும் சத்தம் கேட்டால் பள்ளிக்கூட வாசல் உள்ள தெருவில் மூக்குப் பொடி வாத்தியார் நுழைந்து விட்டார் என்று பொருள்! மணி சரியாக எட்டரையிலிருந்து எட்டே முக்காலுக்குள் இருக்கும் என்பது ஊர் மக்களின் நம்பிக்கை! தனியாக நேரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை! இருபது ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கும் வழமை அது! புயல் மழை! கோயில் திருவிழா ஆண்டு விடுமுறை என சொற்ப நாட்கள் வேண்டுமானால் அந்த சத்தம் கேட்காமல் இருக்கலாம்!  தான் கற்றதை நாலு பேருக்கு பயிற்றுவிக்கவே பிறவி பயன் எடுத்ததாக அவரிடம் படித்தவர்கள் சொல்லிக் கொள்வதாக ஊருக்குள் ஒரு பேச்சு இருந்தது!  நாற்பதை கடந்தால் நாய் குணம் என்பார்கள் அதில் எல்லாம் இவரை சேர்க்க முடியாது! அன்போடு கலந்த அக்கறை, அக்கறையோடு கலந்த அன்பு எனப் பிரித்தறிய முடியாமல் பேரன்பு கொண்டவர் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு! அப்படிப்பட்ட அவருக்கு இருந்த ஒரே கெட்ட பழக்கம் மூக்குப்பொடி போடுவது! கற்றல் பணிகளுக்கு ஊடாக வெள்ளி டப்பாவிலிருந்து  பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் உள்ளே நுழைத்து ஒரு பிடி மூக்கு பொடியை எடுத்து மூக்கில் வைத்து ஒரு இழுப்பு இழுத்து விட்டாரென்றால் அவ்வளவுதான் மனடதிறந்த வெள்ளமாக‌ பாடங்களை வாழ்க்கை எதார்த்தங்களோடு கலந்து கட்டி நடத்தத் தொடங்கி விடுவார்! நேரம் போவதே தெரியாது!  

"ஏண்டா.... அவரோட மூக்குப்பொடி டப்பாவில்ல அப்படி என்னடா இருக்கு? அடிக்கடி அதைப் போடுறாரு ?" சிலேட்டில் எழுதிக் கொண்டே பக்கத்தில் இருந்த செல்வத்திடம் கேட்டான் குமார்.

"எங்க அண்ணன் சொல்லுவாண்டா... மூக்குப்பொடி போட்ட பிறகு புத்தகத்தை பாக்காம அப்படியே அருவி மாதிரி பாடத்த கொட்டத் தொடங்கிடுவாராம்...... பொழுது போறதே தெரியாம நடத்திக்கிட்டே இருப்பாராம்" என்றான் செல்வம்! 

"அப்படிதாண்டா இருக்கணும் போல இருக்கு! மனுஷன் என்னமா நடத்துறாப்புல...  பாடம் கவனிக்கும்போது சில சமயம் டவுசரிலே ஒன்னுக்கு போயிருவேன்" மேல் அன்னத்திலிருந்த ஓட்டப்பல் தெரியச் சிரித்தபடி கூறினான் குமார்!

"அதுதானே பார்த்தேன்! அடிக்கடி என் பக்கத்துல என்னடா ஈரமா கிடக்குன்னு தோணும்! அதோட ரகசியம் எல்லாம் நீ செஞ்ச சேட்டை தானா....?"குமாரின் முதுகில் படீரென அடித்தபடி கூறினான் செல்வம்! 

"அங்க என்னடா சத்தம்?" என அவர் கேட்டபோது "டேய் மூக்குப்பொடி வாத்தியாரு.... பாத்துட்டாரு டா"என்றான் குமார்! 

"டேய் அதுக்கு ஏன்டா கவலைப் படுற" என்றான் செல்வம்!

"அவர் கையில் எத்தன்தண்டி பெரம்பு வச்சிருக்காரு... விட்டு விளாசுனாருனா சதை எல்லாம் பிஞ்சு போயிரும்"தனது முட்டை கண்களை பயத்தோடு உருட்டியபடி கூறினான் குமார்! 

"அவர் யாரையும் அடிக்க மாட்டார் டா...."

"அது உனக்கு எப்படி தெரியும்?"

"இதுக்கு முன்னாடி படிச்ச அண்ணன்கள் எல்லாம் சொல்லி இருக்காங்க..."

"போடா.... போய் கூட சொல்லி இருக்கலாம்"

"போடா லூசு பயலே! அவர் அப்படி அடிக்கிறதா இருந்தா  போன மாசம் ஓடத் தண்ணியில விழுந்து உன்னோட மண்டையில அடிபட்டப்பவ அவர் தானே தேடி வந்து காப்பாத்துனாரு ...."

"ஆமா...."

"அப்பவே வச்சு வெளுத்து இருப்பாரு.... ஆனா அப்படி செஞ்சாரா....? இத்தனைக்கும் நம்ம ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற நேரத்துல சொல்லாமல் கொள்ளாமல் ஓடையில் குளிக்க போயிட்டோம்"

"ஆமாண்டா நீ சொல்றது சரிதாண்டா.... எனக்கு இப்பதான் ஞாபகம் வருது"  தன் தலையில் காயமாறிய தழும்பைத் தடவிக் கொண்டே சொன்னான் குமார்! 

"அது மட்டும் இல்லடா.... மூணாம் வகுப்பு படிக்கிறப்ப முழுப் பரிச்ச நேரத்துல பரிட்சைக்கு வராம நாம ரெண்டு பேரும் வயக்காட்டுல நெல்லு பொறுக்க போயிட்டோம். அப்ப நம்மளத் தேடி வயக்காட்டுக்கு வந்து ரெண்டு பேரு கிட்டையும் படிப்போட அவசியத்தை மணிக் கணக்குல எடுத்துச் சொல்லி கூட்டிட்டு வந்து பரீட்சை எழுத வச்சுது மறந்து போயிருச்சா என்ன?"

"ஆமா எனக்கு இப்பதேன் ஞாபகம் வருது"

"உண்மையிலேய மூக்குப்பொடி வாத்தியார் ரொம்ப நல்லவரு தாண்டா.... போனாப் போகுதுன்னு விடாம நம்மள துரத்தித் துரத்தி படிக்க வைக்கிறதுக்காக படாத பாடுபடுறாரு...."சிரித்துக் கொண்டே கூறினான் செல்வம்! 

" நின்னுக்கிட்டே தூக்கமாண்ணே! குமாரின் கையைப் பிடித்து உலுக்கியபடி கேட்டான் மாடசாமி! 

"பாத்தியா இந்த பையனுக்கு எவ்வளவு கொழுப்புன்னு?"என்றான் செல்வம்! 

"அதெல்லாம் கிடக்கட்டும். இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே..."என்றவன் அதற்கான பதிலைத் அவர்கள் முகத்ததில் தேடிப் பார்த்தான் பாண்டி! 

" பள்ளிக்கூட நேரத்தில ரெண்டு பேரும் பள்ளிக்கூடம் போகாம ஓடத் தண்ணில என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கு?" என குமார் கேட்டதும் பாண்டியும் மாடசாமியும் அகப்பட்டுக் கொண்ட திருடர்கள் போல் தலை குனிந்து நின்றார்கள்! 

"அந்த பசங்கள போட்டு மிரட்டினது போதும்! அவங்க வயசுல நாமளும் இதே வேலையத் தான செஞ்சோம்! இவனுங்கள மட்டும் குறை சொல்ல நமக்கு என்ன யோக்கியதை இருக்கு?"என்றான் செல்வம்!

"நீங்க டாக்டரா....?"என்ற பாண்டியின் குரலில் இப்போது தைரியம் வந்திருந்தது!

"அதை இப்பதான் நீ கண்டுபிடிச்சியா...." பாண்டியைப் பார்த்து கேட்டான் செல்வம்! 

"அது வந்து.... அந்த அண்ணன் மாடசாமிக்கு ஊசி போடும் போதே தோணுச்சு... "என்றவன் மாடசாமி அருகே போய் அவனைக் கட்டிக்கொண்டான்!

"இப்பவாச்சும் சொல்லுங்க? எதுக்காக எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க?"என்றான் மாடசாமி! 

"மூக்குப்பொடி வாத்தியார் ஞாபகம் வந்தது, இன்னைக்கு பள்ளிக்கூட வேலை நாள், கண்டிப்பாக அவரும் பள்ளிக்கூடம் வந்திருப்பாரு, அப்படியே அவரைப் பார்த்துட்டு நாங்க படிச்ச பள்ளிக்கூடத்தையும் பாக்கலாம்னு வந்திருக்கோம்" என்ற குமாரின் கண்களில் மூக்குப்பொடி வாத்தியாரை பார்க்க போகும் ஆனந்தம் கண்களில் பொங்கி வழிந்தது! 

பாண்டியும் மாடசாமியும் எதுவும் பேசிக் கொள்ளாமல் ஊறுகாலசாமி கோயில் தாண்டி ஓடி மறைந்து விட்டார்கள். "டேய் தம்பிகளா! இருங்கடா நாங்களும் வாரோம்"எனச் சொல்லிக் கொண்டே குமாரும் செல்வமும் அவர்கள் பின்னால் ஓடியும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை!

ஊருகாலசாமி கோயில் தாண்டியதும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஓட்டுக் கட்டிடம் வாவென அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டிருந்தது!

வாசலில் நின்று பள்ளிக்கூடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் நோக்கி பள்ளிக்கூடத்திலிருந்து வாத்தியார் ஒருவர் வெளியே வந்தார் "நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்? எனக் கேட்டார்! 

"மூக்குப்பொடி வாத்தியாரே பார்க்கணும்"குமாரும் செல்வமும் ஒரு சேரக் கூறினார்கள்!

"யாராவது ஒருத்தர் சொல்லுங்க"

"நாங்க ரெண்டு பேரும் இந்த பள்ளிக்கூடத்திலே ரொம்ப வருஷத்துக்கு முன்னால மூக்குப்பொடி வாத்தியார் கிட்ட பாடம் படிச்சோம்! அவரப் பாக்குறதுக்காக வந்திருக்கோம்" என்றான் குமார்! 

"ஓகோ.... அப்படியா! சொல்றதுக்கு வருத்தமா தான் இருக்கு...."என்று தயங்கியவர் "போன வருஷம் அவரு மாரடைப்பால இறந்துட்டாரு"என்றவர் விழிகள் வேப்ப மரத்தையே பார்த்தது! 

குமாரும் செல்வமும் எதுவும் பேசாமல் வேப்ப மரத்தின் கீழே தரையில் அமர்ந்தவர்களின் விழிகள் அருவியாய் கொட்டத் தொடங்கிருந்தது! அதற்குள் அங்கு வந்த வாத்தியார் "இங்கதான் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதே அவர் உயிர் போயிருச்சு!"என்றார்!

"அவர் நினைச்ச மாதிரியே வாழ்ந்து முடிச்சிட்டார்" அவ்விருவர் விழிகளில் அவரது மாணவர்கள் என்ற பெருமிதம் வழிந்தபோது.....

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மதியான நேர வகுப்பு மணி கடகடவென அடித்ததும் வழமையாய் பள்ளி இயங்கத் தொடங்கியது!


மறுவாதி - கவிஞர் யாழிசைசெல்வா

மறுவாதி

==========

கவிஞர் யாழிசைசெல்வா 

=========================

"என்னங்க... எங்க இருக்கீங்க....?"என்ற படியே வீட்டுக்குள் நுழைந்த சாந்தியின் கண்கள் எங்கே மாடசாமியெனத் தேடிக் கொண்டே கொல்லைப்புறமாக வந்து சேர்ந்திருந்தாள்.


மாமரத்தின் கீழே இருந்த சலவைக் கல்லில் தனது துணிகளை துவைத்துக் கொண்டிருந்தான் சாந்தியின் கணவன் மாடசாமி.  


"நீங்க இங்க இருக்கீங்களா....? உங்கள வீட்டுக்குள்ள தேடிகிட்டு இருந்தேன். அங்க காணொண்டதும் உடனே கொல்லப்புறமா வந்துட்டேன்.  வீட்டுக்குள்ள இல்லன்னா நீங்க இங்கதான் இருப்பேங்கனு எனக்குத் தெரியும். உங்களப் பத்தி எனக்கு தெரியாதா என்ன?" இடுப்பில் கையை ஊன்றிக் கொண்டு  இளக்காரமாக  மாடசாமியைப் பார்த்தவளின் கண்களில் 'இதெல்லாம் உனக்குத் தேவையா?' என்ற கேள்வி அதில் தொக்கி நின்றது!


"என்ன இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட? இனிமே வீட்டுப் பக்கம் வரவே மாட்டேன்னு சொல்லிட்டு இருந்த? என்னடான்னா காலையில சொன்ன வார்த்தை காயறதுக்குள்ள சாயந்திரமே வந்து நிக்கிறே...! அவ்வளவுதானா உன்னோட வீம்பு எல்லாம்....?" சோப்பு போட்ட வேட்டியை சலவைக் கல்லில் படார் படாரென அடித்து துவைத்துக் கொண்டே அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்!


"அவ்வளவு வேகமா அடிக்காதீங்க....! உங்களோட புத்தம் புது வேட்டியில என் மேல இருக்கிற வெறுப்பைச் சேர்த்து வெளுத்தா... ஏற்கனவே கிழிஞ்சு தையல் போட்ட இடத்தில பொறுத்தது போதும்னு வேட்டி சல்லி சல்லியா கிழிஞ்சிடப் போகுது...."நானும் சளைத்தவள் இல்லையென பதிலுக்கு சூடாக பேசிவிட்ட மிதப்பில் மாடசாமியைப் பார்த்தாள் சாந்தி!


எதுவும் பேசாமல் வாளித்தண்ணீயில் நனைந்து ஊறிய பணியனை எடுத்து சலவைக் கல்லில் போட்டு சோப்பு போடத் தொடங்கி விட்டான்.


"ஆனால் உங்களுக்கு இவ்வளவு திமிரு ஆகாது...! நானா தேடி வர்றதுனால என்ன இளக்காரமா நினைச்சுட்டீங்கள்ளே.... இப்ப மட்டும் இல்ல.. எப்பவும் நான் ஒன்னும் குறைஞ்சவ இல்லை. என்னோட அப்பா அப்படி ஒன்னும் வளக்கல. அவர் இருக்கும் வரைக்கும் எனக்கு எந்த கவலையும் இல்லை. இத மட்டும் ஞாபகத்தில நல்லா வச்சுக்குங்க... இந்த வீராப்பெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு நானும் பாக்கத்தானே போறேன்" பட படன்னு வட சட்டியில் விழுந்த சோளம் மாதிரி பொரிந்து தள்ளி விட்டாள் சாந்தி!


"அவ்வளவுதானா....? இல்ல இன்னும் இருக்கா? மிச்சம் மீதி இருந்தால் அதையும் சொல்லிரு.... அப்புறம் அதுக்கொரு தடவை வர வேண்டி இருக்கும்"துவைத்த பணியினையும் வேட்டியையும் பக்கத்தில் இருந்த அண்டாத் தண்ணீரில் அலசிக்கொண்டபடியே கூறினான் மாடசாமி! 


"துறைக்கு என்னப் பார்த்து பேசுறதுக்கு கூட புடிக்கல போலருக்கு. அதான்... உன்ன மாதிரி வெட்டியா நான் இல்லன்னு காட்டுறதுக்காக இதெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கீங்கேரது எனக்கு ஒன்னும் தெரியாம இல்ல..."


'அதுதான் தெரியுதில்ல பேசாம போக வேண்டியது தானே' என்பது போல பணியனையும் வேட்டியையும் உதறி எடுத்தவன் மாமரத்தையும் வேப்ப மரத்தையும் இணைத்து கட்டிருந்த கொடியில காயப் போட்டான் மாடசாமி!


"உங்க கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன். என்னனென்ன கிறுக்கின்னு நினைச்சிட்டீங்களா....?"


"நான் அப்படியெல்லாம் நினைச்சிடுவேனா... நீ யாருன்னு, நீதான் அடிக்கடி சொல்லுவியே... அப்படி இருக்கும்போது நான் மறந்துடுவேனு எப்படி நினைச்சே?" சொல்லிக்கொண்டே சாந்தி அருகே வந்து விட்டான் மாடசாமி! 


"அப்புறம் எதுக்கு இத்தனை வீராப்பு வேண்டி கிடக்கு?"


"இதுக்கு பேரு வீராப்பு இல்லை. சுயமரியாதை இல்ல... மறுவாதி அப்படின்னு கூட வச்சுக்கலாம். இதெல்லாம் உனக்கு உங்க அப்பா சொல்லிக் கொடுக்காம வளர்த்து விட்டாரு போல.... எனக்கு இது மட்டும் தான் தெரியும்"


"இத வச்சு கடையில உப்பு புளி வாங்க முடியுமா....? இல்ல... ஒருவேளை கஞ்சிக்கு அரிசி தான் வாங்க முடியுமா? அப்புறம் எதுக்கு இதெல்லாம்? காலத்துக்கு ஏத்த மாரி நாமளும் மாறிக்கிடனும்.... இதச் சொன்னா உங்களுக்கு எங்க புரியுது"


"நீ சொன்னதெல்லாம் வாங்க முடியாது! ஆனா மானம் மறுவாதிங்கெறது அடுத்தவன் கிட்ட கையேந்தாத வரைக்கும் தான் சொந்தம். அப்புறம் அத நம்ம கிட்ட தேடுனாலும் கிடைக்காது. நாம நாமளா இருக்க வரைக்கும் நம்ம மரியாதை நமக்கு சொந்தம்! இது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது! ஓட்டு வீடு, யாரும் இல்லாத அனாதைப்பய, உரிமையின்னு சொல்லிக்கிறதுக்கு காணி நிலம்! இது மட்டுமே நெசமுன்னு தெரிஞ்சு தானே வந்த.... இதை எத்தனை தடவை சொல்லி இருந்தாலும்... உன்னோட அப்பா வீட்டுல இருக்கிற வசதியை எண்ணி சண்டை போட்டுக்கிட்டு வாரத்துல அஞ்சு நாளு அங்க போயிடுற...." என்றவன் சாந்தியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று திண்ணையில் அமர வைத்துவிட்டு சணல் சாக்கிலிருந்து மாம்பழத்தை எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் தந்தான். 


"நம்ம மரத்தில காய்ச்ச பழமா?"


ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினான்! மாம்பழத்தை கடித்து சப்புக்கொட்டி சாப்பிட்டவள் "நல்ல ருசியா இருக்குங்க...." என்றவள் மீதி மாம்பழத்தை தின்ன ஆரம்பித்து விட்டாள்.


"சாந்தி!"


"ம்... சொல்லுங்க...."என்றவள் கவனம் முழுவதும் மாம்பழம் தின்பதிலே இருந்தது! 


"நம்ம வாழ்க்கைக்கு வேண்டியது, நாமளா உழைச்சு உருவாக்கினால் தான் நமக்கு நிம்மதி! அடுத்தவங்க கொடுக்கிறது அமிர்தமா இருந்தாலும் அது நம்மளுக்கு என்னைக்குமே அவ மரியாதைத்தான் தரும்... அதனால தான் சொல்றேன்! உங்க அப்பா கிட்ட நீ எதுவும் வாங்கிட்டு வராத...."


பொம்மை போல் தலையை ஆட்டிய சாந்தியின் விழிகளில் ஏனோ கண்ணீர் ததும்பிருந்தது!

(முடிந்தது)


"உழைப்பு ஒன்றே உயர்வு " என்ற கவிதைசாரல் சங்கமம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு  இந்த கதை 07/09/2025 அன்று அனுப்பி வைக்கப்பட்டது!