மறுவாதி
==========
கவிஞர் யாழிசைசெல்வா
=========================
"என்னங்க... எங்க இருக்கீங்க....?"என்ற படியே வீட்டுக்குள் நுழைந்த சாந்தியின் கண்கள் எங்கே மாடசாமியெனத் தேடிக் கொண்டே கொல்லைப்புறமாக வந்து சேர்ந்திருந்தாள்.
மாமரத்தின் கீழே இருந்த சலவைக் கல்லில் தனது துணிகளை துவைத்துக் கொண்டிருந்தான் சாந்தியின் கணவன் மாடசாமி.
"நீங்க இங்க இருக்கீங்களா....? உங்கள வீட்டுக்குள்ள தேடிகிட்டு இருந்தேன். அங்க காணொண்டதும் உடனே கொல்லப்புறமா வந்துட்டேன். வீட்டுக்குள்ள இல்லன்னா நீங்க இங்கதான் இருப்பேங்கனு எனக்குத் தெரியும். உங்களப் பத்தி எனக்கு தெரியாதா என்ன?" இடுப்பில் கையை ஊன்றிக் கொண்டு இளக்காரமாக மாடசாமியைப் பார்த்தவளின் கண்களில் 'இதெல்லாம் உனக்குத் தேவையா?' என்ற கேள்வி அதில் தொக்கி நின்றது!
"என்ன இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட? இனிமே வீட்டுப் பக்கம் வரவே மாட்டேன்னு சொல்லிட்டு இருந்த? என்னடான்னா காலையில சொன்ன வார்த்தை காயறதுக்குள்ள சாயந்திரமே வந்து நிக்கிறே...! அவ்வளவுதானா உன்னோட வீம்பு எல்லாம்....?" சோப்பு போட்ட வேட்டியை சலவைக் கல்லில் படார் படாரென அடித்து துவைத்துக் கொண்டே அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்!
"அவ்வளவு வேகமா அடிக்காதீங்க....! உங்களோட புத்தம் புது வேட்டியில என் மேல இருக்கிற வெறுப்பைச் சேர்த்து வெளுத்தா... ஏற்கனவே கிழிஞ்சு தையல் போட்ட இடத்தில பொறுத்தது போதும்னு வேட்டி சல்லி சல்லியா கிழிஞ்சிடப் போகுது...."நானும் சளைத்தவள் இல்லையென பதிலுக்கு சூடாக பேசிவிட்ட மிதப்பில் மாடசாமியைப் பார்த்தாள் சாந்தி!
எதுவும் பேசாமல் வாளித்தண்ணீயில் நனைந்து ஊறிய பணியனை எடுத்து சலவைக் கல்லில் போட்டு சோப்பு போடத் தொடங்கி விட்டான்.
"ஆனால் உங்களுக்கு இவ்வளவு திமிரு ஆகாது...! நானா தேடி வர்றதுனால என்ன இளக்காரமா நினைச்சுட்டீங்கள்ளே.... இப்ப மட்டும் இல்ல.. எப்பவும் நான் ஒன்னும் குறைஞ்சவ இல்லை. என்னோட அப்பா அப்படி ஒன்னும் வளக்கல. அவர் இருக்கும் வரைக்கும் எனக்கு எந்த கவலையும் இல்லை. இத மட்டும் ஞாபகத்தில நல்லா வச்சுக்குங்க... இந்த வீராப்பெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு நானும் பாக்கத்தானே போறேன்" பட படன்னு வட சட்டியில் விழுந்த சோளம் மாதிரி பொரிந்து தள்ளி விட்டாள் சாந்தி!
"அவ்வளவுதானா....? இல்ல இன்னும் இருக்கா? மிச்சம் மீதி இருந்தால் அதையும் சொல்லிரு.... அப்புறம் அதுக்கொரு தடவை வர வேண்டி இருக்கும்"துவைத்த பணியினையும் வேட்டியையும் பக்கத்தில் இருந்த அண்டாத் தண்ணீரில் அலசிக்கொண்டபடியே கூறினான் மாடசாமி!
"துறைக்கு என்னப் பார்த்து பேசுறதுக்கு கூட புடிக்கல போலருக்கு. அதான்... உன்ன மாதிரி வெட்டியா நான் இல்லன்னு காட்டுறதுக்காக இதெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கீங்கேரது எனக்கு ஒன்னும் தெரியாம இல்ல..."
'அதுதான் தெரியுதில்ல பேசாம போக வேண்டியது தானே' என்பது போல பணியனையும் வேட்டியையும் உதறி எடுத்தவன் மாமரத்தையும் வேப்ப மரத்தையும் இணைத்து கட்டிருந்த கொடியில காயப் போட்டான் மாடசாமி!
"உங்க கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன். என்னனென்ன கிறுக்கின்னு நினைச்சிட்டீங்களா....?"
"நான் அப்படியெல்லாம் நினைச்சிடுவேனா... நீ யாருன்னு, நீதான் அடிக்கடி சொல்லுவியே... அப்படி இருக்கும்போது நான் மறந்துடுவேனு எப்படி நினைச்சே?" சொல்லிக்கொண்டே சாந்தி அருகே வந்து விட்டான் மாடசாமி!
"அப்புறம் எதுக்கு இத்தனை வீராப்பு வேண்டி கிடக்கு?"
"இதுக்கு பேரு வீராப்பு இல்லை. சுயமரியாதை இல்ல... மறுவாதி அப்படின்னு கூட வச்சுக்கலாம். இதெல்லாம் உனக்கு உங்க அப்பா சொல்லிக் கொடுக்காம வளர்த்து விட்டாரு போல.... எனக்கு இது மட்டும் தான் தெரியும்"
"இத வச்சு கடையில உப்பு புளி வாங்க முடியுமா....? இல்ல... ஒருவேளை கஞ்சிக்கு அரிசி தான் வாங்க முடியுமா? அப்புறம் எதுக்கு இதெல்லாம்? காலத்துக்கு ஏத்த மாரி நாமளும் மாறிக்கிடனும்.... இதச் சொன்னா உங்களுக்கு எங்க புரியுது"
"நீ சொன்னதெல்லாம் வாங்க முடியாது! ஆனா மானம் மறுவாதிங்கெறது அடுத்தவன் கிட்ட கையேந்தாத வரைக்கும் தான் சொந்தம். அப்புறம் அத நம்ம கிட்ட தேடுனாலும் கிடைக்காது. நாம நாமளா இருக்க வரைக்கும் நம்ம மரியாதை நமக்கு சொந்தம்! இது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது! ஓட்டு வீடு, யாரும் இல்லாத அனாதைப்பய, உரிமையின்னு சொல்லிக்கிறதுக்கு காணி நிலம்! இது மட்டுமே நெசமுன்னு தெரிஞ்சு தானே வந்த.... இதை எத்தனை தடவை சொல்லி இருந்தாலும்... உன்னோட அப்பா வீட்டுல இருக்கிற வசதியை எண்ணி சண்டை போட்டுக்கிட்டு வாரத்துல அஞ்சு நாளு அங்க போயிடுற...." என்றவன் சாந்தியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று திண்ணையில் அமர வைத்துவிட்டு சணல் சாக்கிலிருந்து மாம்பழத்தை எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் தந்தான்.
"நம்ம மரத்தில காய்ச்ச பழமா?"
ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினான்! மாம்பழத்தை கடித்து சப்புக்கொட்டி சாப்பிட்டவள் "நல்ல ருசியா இருக்குங்க...." என்றவள் மீதி மாம்பழத்தை தின்ன ஆரம்பித்து விட்டாள்.
"சாந்தி!"
"ம்... சொல்லுங்க...."என்றவள் கவனம் முழுவதும் மாம்பழம் தின்பதிலே இருந்தது!
"நம்ம வாழ்க்கைக்கு வேண்டியது, நாமளா உழைச்சு உருவாக்கினால் தான் நமக்கு நிம்மதி! அடுத்தவங்க கொடுக்கிறது அமிர்தமா இருந்தாலும் அது நம்மளுக்கு என்னைக்குமே அவ மரியாதைத்தான் தரும்... அதனால தான் சொல்றேன்! உங்க அப்பா கிட்ட நீ எதுவும் வாங்கிட்டு வராத...."
பொம்மை போல் தலையை ஆட்டிய சாந்தியின் விழிகளில் ஏனோ கண்ணீர் ததும்பிருந்தது!
(முடிந்தது)
"உழைப்பு ஒன்றே உயர்வு " என்ற கவிதைசாரல் சங்கமம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு இந்த கதை 07/09/2025 அன்று அனுப்பி வைக்கப்பட்டது!
No comments:
Post a Comment