மூக்குப்பொடி வாத்தியார்
========================
யாழிசைசெல்வா
=================
ஊருக்குள் நுழைந்த உடனே முதலில் வரவேற்பது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பாடசாலை! அதன் இடது புறம் வளைந்து ஓடும் ஓடைத் தண்ணீரில் இரண்டு சிறுவர்கள் குதித்துக் கும்மாளம் இட்டுக் கொண்டிருந்தார்கள்! கரையோரம் வளர்ந்திருந்த பூவரச மரத்தின் வளைந்த கிளையென்று ஓடையை நோக்கி வாகாக வளைந்து எப்படியாவது தண்ணீரை முத்தமிட்டு விடவேண்டுமென்ற முயற்சி ஈடுபடுவதற்காக மேற்கு தொடர்ச்சி மலையின் காற்றின் உதவியை நாடியிருந்தது! அது தெரியாமல் மரத்திலேறிய சிறுவர்கள் தண்ணீரில் தொபுக்கென்று விழுந்து சிரித்தபோது வளைந்த கிளையின் தலை தண்ணீரில் மூழ்கி பிறவிப் பயன் அடைந்திருந்தது!
"டேய்! மறுபடியும் மரத்து மேல ஏறி தண்ணியில குதிப்போமாடா.... இந்த விளையாட்டு நல்லா இருக்குடா.. வாடா போகலாம்" பக்கத்திலிருந்த மாடசாமி கையைப் பிடித்து இழுத்தபடி கூறினான் பாண்டி!
"போடா... இதோட எட்டு தடவை மரத்திலிருந்து குதிச்சாச்சு! கெண்டைக்காலு எல்லாம் வலிக்குது! நான் வரமாட்டேன்! இப்படியே தண்ணிகுள்ள கொஞ்ச நேரம் இருக்கப் போறேன்! அடிக்கிற வெயிலுக்கு சுகமா இருக்கு!" கழுத்து வரை ஓடைத் தண்ணீரில் நின்றபடி கூறினான் மாடசாமி!
"டேய் இன்னும் ஒரே ஒருவாட்டி... வாடா குதிப்போம்! ஆசையா இருக்குடா! நேத்து மட்டும் நீ சொன்னேன்னு பதினைந்து வாட்டி குதிச்சோமில்ல..." என மாடசாமியைப் பார்த்து கெஞ்சத் தொடங்கி விட்டான் பாண்டி!
"சரி சரி! அதுக்காக அழுதுறாத....! இந்த ஒருவாட்டி தான். அதுக்கப்புறம் நீ வராட்டியும் நான் என்னோட வீட்டுக்கு போயிருவேன்"
சரி என்பது போல் தலையை ஆட்டிக் கொண்டே இருவரும் பூவரசம் மரத்திலேறி தண்ணீரை நோக்கி குதிக்க தயாரானார்கள். "நான் இப்ப ரெடி! இப்ப ஒன்னு ரெண்டு மூணு சொன்ன உடனே குதிச்சிடுவேன்! யாரு முதல்ல குதிக்கிறாங்களோ... அவங்கதான் நாளைக்கு எத்தனை தடவை தண்ணில குதிச்சு விளையாடுறதுங்கிறத முடிவு பண்ணலாம். இது உனக்கு சம்மதம் தான....?" ஓடைத் தண்ணி நோக்கி வளைந்திருந்த கிளைகளில் நின்றபடி கேட்டான் மாடசாமி!
"சரி டா... நீ சொன்னபடியே செஞ்சிடலாம்..."
"ஒன்னு ரெண்டு மூணு" சொல்லிக்கிட்டே ஓடையில் குதித்தவன் "அம்மாவென...."அலறத் தொடங்கி இருந்தான் மாடசாமி!
"டேய் மாடா! என்னடா ஆச்சு" எனச் சொல்லிக்கொண்டே மாடசாமி குதித்த இடத்தில் பாண்டியும் குதித்து தண்ணீரில் மாடசாமியை தேடத் துவங்கிவிட்டான்.
ஓடைத்தண்ணி முழுவதும் சிறிது நேரத்தில் ரத்த நிறமாக மாறத் தொடங்கிருந்தது கண்டு "டேய் மாடா.... எங்கடா போயிட்ட...."ஷபெரும் குரலெடுத்து கத்தி அழத் தொடங்கி விட்டான் பாண்டி!
ஊருகால சாமி கோயில் தாண்டி போய்க் கொண்டிருந்த ரெண்டு பேரு பாண்டிபோட்ட சத்தம் கேட்டு திரும்பினார்கள்! இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் ஓடையை நோக்கி ஓடி வந்து சேர்ந்திருந்தார்கள்!
"அதோ அந்தப் பக்கம்! தண்ணிக்குள்ள ஒரு பையன் எதையோ தேடிக்கொண்டு இருக்கான். அவன் தே சத்தம் போட்டு இருக்கணும்! இங்க வேற யாரும் இல்ல"என்றான் இரண்டு பேரில் தட்டை குச்சி போல் ஒல்லியாக வளர்ந்திருந்த குமார்!
"சரி! பேசிக்கிட்டே நிக்காம.... வா போகலாம்"என்றான் செல்வம்!
இருவரும் பாண்டி அருகே வந்து சேர்ந்தபோது தண்ணீரிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததை பார்த்ததும் சிறிதும் யோசிக்காமல் இருவரும் தண்ணீரில் மூழ்கி மாடசாமியை தேடத் துவங்கி இருந்தார்கள்! சிறிது நேரத்திற்குள்ளாக குமார் மாடசாமியைத் தூக்கிக்கொண்டு கரையேறி இருந்தான்! குமாரும் பாண்டியும் அவனோடு வெளியேறிய கரை சேர்ந்தார்கள். அழுது அழுது ரத்தச் சிவப்பேரிய விழிகளோடு மாடசாமி அருகே அழுதபடி நின்று கொண்டிருந்தான் பாண்டி!
செல்வம் தான் கொண்டு வந்திருந்த பையை எடுத்துக் கொண்டு வந்து குமாரிடம் கொடுத்தான்! பையைத் திறந்து பஞ்சை எடுத்து மாடசாமியின் தலையில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை துடைத்து சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டினான் குமார்!
"அண்ணே மாடசாமிக்கு என்ன ஆச்சு!"அழுது கொண்டே கேட்டான் பாண்டி!
"உன்னோட கூட்டாளிக்கு பெருசா ஒன்னும் ஆகல.... மரத்திலிருந்து தலைகீழா தண்ணியில குதிச்சதுல தண்ணிக்குள்ள இருந்த கல்லுல முட்டி ரத்தம் வந்ததால மயக்கமா இருக்கான். கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவான்"என சொல்லிக்கொண்டே பையிலிருந்து மருந்துப் பாட்டிலை எடுத்துக் குலுக்கி அதிலிருந்து மருந்தை ஊசி மூலம் எடுத்து மாடசாமிக்கு போட்டுவிட்டு எழுந்தான் குமார்!
"ஊசி போட்ட இடத்தை நல்லா தேய்ச்சு விடனும்னு எங்க அம்மா சொல்லுவாங்க.... நீங்க தேய்ச்சு விடாம விட்டுட்டீங்க"
"அப்படியா....! அப்ப நீயே உன் கூட்டாளிக்கு தேய்ச்சு விடு!"சிரித்துக் கொண்டே கூறினான் குமார்!
மாடசாமிக்கு ஊசி போட்ட இடத்தை பாண்டி தனது பிஞ்சு வலது உள்ளங்கையால் அழுத்தி தேய்த்து விட்டான்.
"போதும் தம்பி! ரொம்ப தேய்க்காத.... சீக்கிரமா சரியாயிருவான்...."பாண்டியின் தோளைத் தொட்டபடி கூறினான் குமார்!
மாடசாமியின் பாதங்களை தேய்த்து சூடாக்கி விட்டுக் கொண்டிருந்தான் செல்வம்! சிறிது நேரத்தில் கண் விழித்த மாடசாமி தன்னைச் சுற்றி இருவர் புதியதாக நிற்பதையும் அழுது சிவப்பேறிய விழிகளோடு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பாண்டியையும் மாறி மாறி பார்த்து ஒன்றும் விளங்காமலே எழுந்து விட்டான் மாடசாமி!
"பாத்தியா... உன்னோட கூட்டாளி எந்திரிச்சு நின்னுட்டான். இதுக்கு போய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டே, அவ்வளவுதான் எல்லாம் சரியாப் போயிடும்" பாண்டியின் கண்களை துடைத்துக் கொண்டே கூறினான் குமார்!
"ஆமா! அதெப்படி மரத்திலருந்து தான் தண்ணில குடிச்சோம்ன்னு அவ்வளவு சரியாச் சொன்னீங்க...." குழப்பத்தோடு குமார் செல்வம் இருவரையும் பார்த்தபடி கேட்டான் பாண்டி!
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள்!
"நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே"
"இதே மாதிரி சம்பவம் எங்க வாழ்க்கையிலும் நடந்திருக்கு! இல்லையாடா செல்வம்?"எனக் கேட்டுக் கொண்டே தன் தலையில் காயமான தழும்பைத் தடவிக் கொண்டான் குமார்!
"அப்படின்னா.... நீங்க ரெண்டு பேரும் எங்களை மாதிரி தண்ணில விளையாண்டு இருந்திருக்கீங்க.... அதுல அந்த அண்ணன் தலையில காயமாயிருக்கு. அதுதான் அந்த அண்ணன் அவருடைய தலையை தொட்டு பாக்குறாரு..... நான் சொல்றது சரிதானே!"எனச் சிரித்துக் கொண்டே குமாரைப் பார்த்தான் பாண்டி!
"புத்திசாலிப் பய... இல்லையாட செல்வம்?"
"ஆமா நீ சொன்னா சரிதேன்... அன்னைக்கு நடந்தது இன்னைக்கும் அப்படியே பச்சை மரத்துல எழுதின எழுத்து மாதிரி பசுமையா இருக்கு"
"எத்தனை ஞாபகங்கள்! அன்னைக்கு மட்டும் மூக்குப்பொடி வாத்தியார் வரலைன்னா இன்னைக்கு நான் உசுரோடவே இருந்திருக்க முடியாது"என்ற குமாரின் விழிகள் குளமாமாய்த் தேங்கியிருந்தது!
"மூக்குப்பொடி வாத்தியாராருனா சொன்னிங்க....."என அழுத்தமாக கேட்டான் பாண்டி!
"ஏண்டா அப்படி கேக்கற தம்பி"என்றான் குமார்!
"எப்ப பார்த்தாலும் எங்க அப்பாவும் மூக்குப்பொடி வாத்தியாரு... அப்படிச் செய்வாரு இப்படிச் செய்வாரு, அவர் மட்டும் இல்லைன்னா நானெல்லாம நாலு எழுத்து படிச்சிருக்கவே முடியாது! ஒரே பெனாத்தலா எப்பவுமே இருக்கும். அவரோட தொல்லை தாங்க முடியாது! நீங்க என்னடாண்ணா போதாக்குறைக்கு அதேபேரை நீங்களும் சொல்லிக்கிட்டு திரியுறிங்க.... ஆமா உங்களை இதுக்கு முன்னால இந்த ஊர்ல பார்த்ததே கிடையாதே... நீங்க இந்த ஊருக்கு புதுசா?"என்ற பாண்டி அவர்கள் முகத்தை சந்தேகத்தோடு பார்த்தான்!
"இந்த பயலோட முகத்தை நல்லா உத்துப் பாரு... அப்படியே நம்ம சடையாண்டி முகம் ஞாபகத்துக்கு வருது..."என்றான் செல்வம்!
"அட ஆமாண்டா! நீ சொல்றதும் சரிதான்! இப்பத்தான் பார்க்கிறேன் சின்ன வயசுல நம்ம கூட படிச்ச சடையாண்டி முகத்தை அப்படியே உரிச்சு வச்சிருக்கான்" என்றான் குமார்!
"சடைண்டியோட மகன் அவர மாதிரி இல்லாம வேற எப்படி இருப்பான்" கீழே கிடந்த தனது சட்டையை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டே கூறினான் மாடசாமி! அவன் உதறி போட்டதில் சட்டையில் இருந்த மண்ணெல்லாம் காற்றில் பறந்து பழைய நினைவுகளின் சுழலில் பிடித்து தள்ளியிருந்தது குமாருக்கும் செல்வத்திற்கும்!
வேப்ப மரத்தின் கீழே இருந்த கரும்பலகையில்
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"
திருவள்ளுவர்
என எழுதி முடித்துவிட்டு மூக்கின் கீழே சரிந்த சதுரக் கண்ணாடியை பழையபடி மேலே ஏற்றிவிட்டு "எல்லாரும் இத சத்தமா படிங்க" நாற்காலி மேல் வைத்திருந்த பிரம்புக்குச்சியை எடுத்துக்கொண்டே கீழே தரையில் அமர்ந்து பாடம் கவனித்துக் கொண்டிருந்த மாணவர்களைச் சுத்தி வட்டம் அடிக்க தொடங்கி இருந்தார் திருநாவுக்கரசு!
மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி சட்டையோடு கொரட்டு கொரட்டென இதோ வாரேன் எல்லாரும் தயாரா இருந்துக்கங்கனு எச்சரிக்கை கொடுத்தபடி மிதிவண்டி மிதித்து வரும் சத்தம் கேட்டால் பள்ளிக்கூட வாசல் உள்ள தெருவில் மூக்குப் பொடி வாத்தியார் நுழைந்து விட்டார் என்று பொருள்! மணி சரியாக எட்டரையிலிருந்து எட்டே முக்காலுக்குள் இருக்கும் என்பது ஊர் மக்களின் நம்பிக்கை! தனியாக நேரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை! இருபது ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கும் வழமை அது! புயல் மழை! கோயில் திருவிழா ஆண்டு விடுமுறை என சொற்ப நாட்கள் வேண்டுமானால் அந்த சத்தம் கேட்காமல் இருக்கலாம்! தான் கற்றதை நாலு பேருக்கு பயிற்றுவிக்கவே பிறவி பயன் எடுத்ததாக அவரிடம் படித்தவர்கள் சொல்லிக் கொள்வதாக ஊருக்குள் ஒரு பேச்சு இருந்தது! நாற்பதை கடந்தால் நாய் குணம் என்பார்கள் அதில் எல்லாம் இவரை சேர்க்க முடியாது! அன்போடு கலந்த அக்கறை, அக்கறையோடு கலந்த அன்பு எனப் பிரித்தறிய முடியாமல் பேரன்பு கொண்டவர் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு! அப்படிப்பட்ட அவருக்கு இருந்த ஒரே கெட்ட பழக்கம் மூக்குப்பொடி போடுவது! கற்றல் பணிகளுக்கு ஊடாக வெள்ளி டப்பாவிலிருந்து பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் உள்ளே நுழைத்து ஒரு பிடி மூக்கு பொடியை எடுத்து மூக்கில் வைத்து ஒரு இழுப்பு இழுத்து விட்டாரென்றால் அவ்வளவுதான் மனடதிறந்த வெள்ளமாக பாடங்களை வாழ்க்கை எதார்த்தங்களோடு கலந்து கட்டி நடத்தத் தொடங்கி விடுவார்! நேரம் போவதே தெரியாது!
"ஏண்டா.... அவரோட மூக்குப்பொடி டப்பாவில்ல அப்படி என்னடா இருக்கு? அடிக்கடி அதைப் போடுறாரு ?" சிலேட்டில் எழுதிக் கொண்டே பக்கத்தில் இருந்த செல்வத்திடம் கேட்டான் குமார்.
"எங்க அண்ணன் சொல்லுவாண்டா... மூக்குப்பொடி போட்ட பிறகு புத்தகத்தை பாக்காம அப்படியே அருவி மாதிரி பாடத்த கொட்டத் தொடங்கிடுவாராம்...... பொழுது போறதே தெரியாம நடத்திக்கிட்டே இருப்பாராம்" என்றான் செல்வம்!
"அப்படிதாண்டா இருக்கணும் போல இருக்கு! மனுஷன் என்னமா நடத்துறாப்புல... பாடம் கவனிக்கும்போது சில சமயம் டவுசரிலே ஒன்னுக்கு போயிருவேன்" மேல் அன்னத்திலிருந்த ஓட்டப்பல் தெரியச் சிரித்தபடி கூறினான் குமார்!
"அதுதானே பார்த்தேன்! அடிக்கடி என் பக்கத்துல என்னடா ஈரமா கிடக்குன்னு தோணும்! அதோட ரகசியம் எல்லாம் நீ செஞ்ச சேட்டை தானா....?"குமாரின் முதுகில் படீரென அடித்தபடி கூறினான் செல்வம்!
"அங்க என்னடா சத்தம்?" என அவர் கேட்டபோது "டேய் மூக்குப்பொடி வாத்தியாரு.... பாத்துட்டாரு டா"என்றான் குமார்!
"டேய் அதுக்கு ஏன்டா கவலைப் படுற" என்றான் செல்வம்!
"அவர் கையில் எத்தன்தண்டி பெரம்பு வச்சிருக்காரு... விட்டு விளாசுனாருனா சதை எல்லாம் பிஞ்சு போயிரும்"தனது முட்டை கண்களை பயத்தோடு உருட்டியபடி கூறினான் குமார்!
"அவர் யாரையும் அடிக்க மாட்டார் டா...."
"அது உனக்கு எப்படி தெரியும்?"
"இதுக்கு முன்னாடி படிச்ச அண்ணன்கள் எல்லாம் சொல்லி இருக்காங்க..."
"போடா.... போய் கூட சொல்லி இருக்கலாம்"
"போடா லூசு பயலே! அவர் அப்படி அடிக்கிறதா இருந்தா போன மாசம் ஓடத் தண்ணியில விழுந்து உன்னோட மண்டையில அடிபட்டப்பவ அவர் தானே தேடி வந்து காப்பாத்துனாரு ...."
"ஆமா...."
"அப்பவே வச்சு வெளுத்து இருப்பாரு.... ஆனா அப்படி செஞ்சாரா....? இத்தனைக்கும் நம்ம ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற நேரத்துல சொல்லாமல் கொள்ளாமல் ஓடையில் குளிக்க போயிட்டோம்"
"ஆமாண்டா நீ சொல்றது சரிதாண்டா.... எனக்கு இப்பதான் ஞாபகம் வருது" தன் தலையில் காயமாறிய தழும்பைத் தடவிக் கொண்டே சொன்னான் குமார்!
"அது மட்டும் இல்லடா.... மூணாம் வகுப்பு படிக்கிறப்ப முழுப் பரிச்ச நேரத்துல பரிட்சைக்கு வராம நாம ரெண்டு பேரும் வயக்காட்டுல நெல்லு பொறுக்க போயிட்டோம். அப்ப நம்மளத் தேடி வயக்காட்டுக்கு வந்து ரெண்டு பேரு கிட்டையும் படிப்போட அவசியத்தை மணிக் கணக்குல எடுத்துச் சொல்லி கூட்டிட்டு வந்து பரீட்சை எழுத வச்சுது மறந்து போயிருச்சா என்ன?"
"ஆமா எனக்கு இப்பதேன் ஞாபகம் வருது"
"உண்மையிலேய மூக்குப்பொடி வாத்தியார் ரொம்ப நல்லவரு தாண்டா.... போனாப் போகுதுன்னு விடாம நம்மள துரத்தித் துரத்தி படிக்க வைக்கிறதுக்காக படாத பாடுபடுறாரு...."சிரித்துக் கொண்டே கூறினான் செல்வம்!
" நின்னுக்கிட்டே தூக்கமாண்ணே! குமாரின் கையைப் பிடித்து உலுக்கியபடி கேட்டான் மாடசாமி!
"பாத்தியா இந்த பையனுக்கு எவ்வளவு கொழுப்புன்னு?"என்றான் செல்வம்!
"அதெல்லாம் கிடக்கட்டும். இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே..."என்றவன் அதற்கான பதிலைத் அவர்கள் முகத்ததில் தேடிப் பார்த்தான் பாண்டி!
" பள்ளிக்கூட நேரத்தில ரெண்டு பேரும் பள்ளிக்கூடம் போகாம ஓடத் தண்ணில என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கு?" என குமார் கேட்டதும் பாண்டியும் மாடசாமியும் அகப்பட்டுக் கொண்ட திருடர்கள் போல் தலை குனிந்து நின்றார்கள்!
"அந்த பசங்கள போட்டு மிரட்டினது போதும்! அவங்க வயசுல நாமளும் இதே வேலையத் தான செஞ்சோம்! இவனுங்கள மட்டும் குறை சொல்ல நமக்கு என்ன யோக்கியதை இருக்கு?"என்றான் செல்வம்!
"நீங்க டாக்டரா....?"என்ற பாண்டியின் குரலில் இப்போது தைரியம் வந்திருந்தது!
"அதை இப்பதான் நீ கண்டுபிடிச்சியா...." பாண்டியைப் பார்த்து கேட்டான் செல்வம்!
"அது வந்து.... அந்த அண்ணன் மாடசாமிக்கு ஊசி போடும் போதே தோணுச்சு... "என்றவன் மாடசாமி அருகே போய் அவனைக் கட்டிக்கொண்டான்!
"இப்பவாச்சும் சொல்லுங்க? எதுக்காக எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க?"என்றான் மாடசாமி!
"மூக்குப்பொடி வாத்தியார் ஞாபகம் வந்தது, இன்னைக்கு பள்ளிக்கூட வேலை நாள், கண்டிப்பாக அவரும் பள்ளிக்கூடம் வந்திருப்பாரு, அப்படியே அவரைப் பார்த்துட்டு நாங்க படிச்ச பள்ளிக்கூடத்தையும் பாக்கலாம்னு வந்திருக்கோம்" என்ற குமாரின் கண்களில் மூக்குப்பொடி வாத்தியாரை பார்க்க போகும் ஆனந்தம் கண்களில் பொங்கி வழிந்தது!
பாண்டியும் மாடசாமியும் எதுவும் பேசிக் கொள்ளாமல் ஊறுகாலசாமி கோயில் தாண்டி ஓடி மறைந்து விட்டார்கள். "டேய் தம்பிகளா! இருங்கடா நாங்களும் வாரோம்"எனச் சொல்லிக் கொண்டே குமாரும் செல்வமும் அவர்கள் பின்னால் ஓடியும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை!
ஊருகாலசாமி கோயில் தாண்டியதும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஓட்டுக் கட்டிடம் வாவென அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டிருந்தது!
வாசலில் நின்று பள்ளிக்கூடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் நோக்கி பள்ளிக்கூடத்திலிருந்து வாத்தியார் ஒருவர் வெளியே வந்தார் "நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்? எனக் கேட்டார்!
"மூக்குப்பொடி வாத்தியாரே பார்க்கணும்"குமாரும் செல்வமும் ஒரு சேரக் கூறினார்கள்!
"யாராவது ஒருத்தர் சொல்லுங்க"
"நாங்க ரெண்டு பேரும் இந்த பள்ளிக்கூடத்திலே ரொம்ப வருஷத்துக்கு முன்னால மூக்குப்பொடி வாத்தியார் கிட்ட பாடம் படிச்சோம்! அவரப் பாக்குறதுக்காக வந்திருக்கோம்" என்றான் குமார்!
"ஓகோ.... அப்படியா! சொல்றதுக்கு வருத்தமா தான் இருக்கு...."என்று தயங்கியவர் "போன வருஷம் அவரு மாரடைப்பால இறந்துட்டாரு"என்றவர் விழிகள் வேப்ப மரத்தையே பார்த்தது!
குமாரும் செல்வமும் எதுவும் பேசாமல் வேப்ப மரத்தின் கீழே தரையில் அமர்ந்தவர்களின் விழிகள் அருவியாய் கொட்டத் தொடங்கிருந்தது! அதற்குள் அங்கு வந்த வாத்தியார் "இங்கதான் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதே அவர் உயிர் போயிருச்சு!"என்றார்!
"அவர் நினைச்ச மாதிரியே வாழ்ந்து முடிச்சிட்டார்" அவ்விருவர் விழிகளில் அவரது மாணவர்கள் என்ற பெருமிதம் வழிந்தபோது.....
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மதியான நேர வகுப்பு மணி கடகடவென அடித்ததும் வழமையாய் பள்ளி இயங்கத் தொடங்கியது!
No comments:
Post a Comment