Wednesday, 22 July 2026

கொஞ்ச(ம்) வேண்டும்!? - 01 (யாழிசைசெல்வா)

இருளின் மொத்தப் பரப்பையும் புறந்தள்ளி "மிணுக்... மிணுக்"கென ஒளியைச் சிந்திச் சிரித்துக் கொண்டிருந்தது, தூர கிழக்கில் தோன்றித் தெரியும் விடிவெள்ளி! அது புலரப்போகும் விடிபொழுதிற்கும் கழிந்து கொண்டிருக்கும் இரவிற்கும் இடையில் ஒரு பாலமாக இருந்தது. காலங் காலமாக மனிதன் தனக்குத்தானே கணக்கிட்டு கடந்து வந்த காலத்தின் மணிக்கணக்குகளில் ஒன்றுதான் அந்த விடிவெள்ளி! 

அப்படியான வாழ்வின் கணக்கிலிருந்து வழி தவறிப் போய் மீண்டும் பாதை தேடி வந்தடையும் ஒரு வேகத்தில் தான் ஆனந்திக்கு அன்றைய பொழுது விடியக் காத்திருந்தது.

அன்றைய இரவு முழுவதும் ஆனந்திக்கு ஒரு பொட்டு உறக்கம்கூட வரவில்லை. தன் வாழ்வில் இதுவரை நடந்ததை மறப்பதா? இனி நடக்கப் போவதை ரசிப்பதா? எனப் புரியாத பேதலிப்பில் இருந்தாள் அவள்.

அவள் பிறந்தது முதலே, அவள் கண்டதெல்லாம் கரடு தட்டிப்போன மண்ணோடும் காலம் அறியாத மழையோடும் பொழுதெல்லாம் புரண்டு நிமிர்ந்த மனிதர்களை மட்டுமே அவள் அறிவாள். அவள் வாழ்வு மொத்தத்தில் அறிந்தது, தெரிந்தது என அனைத்தும் இந்த ஊரின் எல்லைக்குள் மட்டுமே அடங்கியிருந்தது.

நேற்று சாவடியில் நடந்ததை நினைக்கும் போது அவளுக்கு நெஞ்சில் திக்கென்று இருந்தது. அப்படி எளிதாய் நடக்கும் என கனவிலும் நினைத்தும் பார்த்ததில்லை. "வலியும் வேதனையும் தனக்கு வரும் போது தான் உணர முடியும் என்பது எத்தனை உண்மை?" என  ஆனந்தி தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் வீட்டின் வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

அப்போது திடீரென வானத்தில் இடி இடித்து மழை கொட்டத் தொடங்கி இருந்தது. மழைத்தண்ணி வாசல் தாண்டி அவள்  வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தது கூடத் தெரியாமல். பழைய நெனைப்பில் இருந்தாள் ஆனந்தி. அவள் காலை நனைத்துக் கொண்டிருந்த மழைத்தண்ணியால் சுரணை வந்ததும் குடுகுடுவென ஓடிப்போய் வாசல் கதவை அடைத்து விட்டு அடுக்கலைக்கு ஓடிச்சென்று அங்கிருந்த பித்தளை பாத்திரங்களை எடுத்து வந்து கூரையில் இருந்து ஒழுகும் நீருக்கு நேராக பாத்திரங்களை வைத்தாள். கூரையின் ஓட்டை வழியாக மழைத்தண்ணீர் சொட்டு சொட்டாக பாத்திரத்தில் விழுந்து அந்த இருளை கிழித்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்த மழை ஆனந்தியை மீண்டும் பழைய நினைவுக்குள் பிடித்து தள்ளியிருந்தது.

எல்லாம் சுகமாய் நடக்கும் என எல்லோரும் போல் நம்பித்தான் ஆனந்தியின்  அம்மா வேலாயி தன் உறவுக்காரப் பையன்  காளியப்பனை தன் மகளுக்கு கல்யாணம் செய்து வைத்திருந்தாள். ஆனால் நடந்தது என்னவோ வேறு. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்ந்து கொண்டிருந்தான் காளியப்பன். உருப்படியாகச் சொல்லிக் கொள்ளும்படி எந்த வேலையும் இல்லாமல் ஊதாரி உதவாக்கரையாக  இருந்ததோடு மைனர் மிதப்பில் சுற்றி வந்து கொண்டிருந்தான் காளியப்பன். வளர்பிறையும் தேய்பிறையும் மாதங்களில் மாறி மாறி வந்து போனதே தவிர ஆனந்தியின் வாழ்க்கையில் வேறு மாற்றம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மகளின் துயரை எண்ணி எண்ணி மருகிக் கொண்டிருந்தாள் வேலாயி. அப்படியான நாளில் ஒருநாள். பக்கத்து ஊர் திருவிழாவில் கூட்டாளிகளோடு கும்மாளம் போட்ட காளியப்பன் கள்ளச்சாராயம் குடித்ததில் செத்துப் போனான். 

அடுக்களை தாண்டி இருந்த படுக்கை அறையில் வைத்திருந்த முக்காலியின் மேல் இரவு ஏற்றி வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு சன்னமாய் பரப்பிய ஒளியில் விரித்துப் போட்டிருந்த கோரப்பாய் கொஞ்சமும் கலையாமல் அப்படியே இருந்ததை காட்டியது. ஆனந்தி ஒரு கணம் அதை பார்த்துவிட்டு மீண்டும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். 



No comments:

Post a Comment