Friday, 18 April 2025

இணையாத இரு கோடுகள் யாழிசை செல்வா

 இணையாத இரு கோடுகள் - யாழிசை செல்வா 

============================================

        பட்டாம்பூச்சி பரபரப்பில் வளமையாய் கல்லூரிப் பூங்காவில் அங்குமிங்கும் குறு முகிலைக் கொய்த புன்னகையில் காதல் மலர்கள் சிரித்துக் கொண்டிருந்தன!  


       தனித்துக் கிளை பரப்பி செழித்து நின்றிருந்த வேப்பமரத்திற்கு துணையாக அமைந்த இருக்கையில் மடிமேல் முகம் புதைத்து  கன்னக்குழி கவி நிலா கோதை வீற்றிருந்தாள்! அவளருகே இருந்த மு. மேத்தாவின் கண்ணீர் பூக்கள் கவிதைப் புத்தகம் சிறகு விரித்துப் படபடத்தது!  


     "கோதை! உன்னை எங்கே எல்லாம் தேடுவது! தினமும் உன்னைத் தேடுவதே எனக்கு பெரும் வேலையாகப் போய்விட்டது! ஏன் இப்படி என்னை அலைய விடுகிறாய்? அதில் உனக்கு அப்படியென்ன ஆனந்தம்?" எனக்கோதையின் விழிகளைப் பார்த்துக் கேட்டான் மாறன்! 


   மௌனத்தை முத்தமிட்டுக் கொண்டவள் மறு வார்த்தை பேசவில்லை! 


      "ஏன் கோதை? என்னிடம் பேச அப்படி என்ன தயக்கம்?"


      "நான் பலமுறை சொல்லி விட்டேன். நீ மீண்டும் மீண்டும் கேட்பதால் எதுவும் மாறப் போவதில்லை! ஆகவே என்னை விட்டுவிடு!"


       "யாரோ சொன்னதற்காக என்னை ஏன் வதைக்கிறாய்....? நீ செய்வது உனக்கே சரியாகப் படுகிறதா?"


       "சொன்னது உனது அக்கா என்பதை மறந்து விட்டாயா?  உன்னால் மட்டும் எப்படி உன் வீட்டிற்கும் நல்லவனாகவும் எனக்கு மன்மதனாகவும் நடிக்க முடிகிறது?"


      "அது வந்து கோதை,,, " தொண்டையில் சிக்கிக் கொண்ட வார்த்தையை வெளியே தள்ள முடியாமல் தவிப்பில் கிடந்தான்  மாறன்!


      "என்னோடு காதல் செய்த காலங்களில் வரதட்சணை என்பதெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்களின் மோசடி விளையாட்டு என்றாய்.... உன் அக்காவை பேச வைத்து அத்தனையும் பொய்யாக்கி விட்டாய்!"


      "நான் எதுவும் கேட்கவில்லையே.... அதற்காக என்னை ஏன் விரட்டுகிறாய்....?"


       "நீ கேட்கவில்லை! அதே நேரத்தில் உன்னொட அக்கா பேசுவதையும் தடுக்கவில்லை!  உன் அக்கா பேசியது ஒன்றா இரண்டா....?  நாங்கள் ஏழையாக இருந்தாலும் எவரிடமும் கையேந்தியது இல்லை! கூலி வேலை பார்த்தாலும் உழைத்து தான் பிழைக்கின்றோம்! என்னையும் எனது மூன்று சகோதரிகளையும் சந்தையில் விலை போகாத மாடுகளாக எண்ணிக் கொண்டு உன்னை வளைத்து போட்டு விட்டதாக பேசும்போது நீயும் வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருந்தாய்! நானாகவா உன்னைத் தேடி வந்து பிடித்தேன்! நீதானே என்னைவிடாமல் பேருந்து நிறுத்தத்திலும், சந்தைகளிலும், அதோடு விடாமல் கடை வீதிகளிலும் தேடித் தேடி வந்து ஆசை வார்த்தை பேசி என்னை மயக்கினாய்! இதையெல்லாம் கனவாக மறந்து விட்டாயா என்ன? போதும் போதாததிற்கு உன் அம்மாவும் என் தாய் தகப்பனைப் பற்றி தவறாக பேசும் போதும் நீ எதுவும் கூறவில்லை! இப்போதே‌ அப்படியென்றால் காலம் முழுவதும் என் வாழ்க்கை கடலில் கொட்டிய உப்பாக அல்லவா மாறிவிடும். இத்தனையும் தெரிந்த பின்பு எந்த முகத்தை வைத்துக்கொண்டு என்னைப் பார்க்க வருகிறாய்? கொஞ்சமும் உனக்கு வெட்கமாக இல்லையா?" என்றவள் முகம் குங்குமமாய் சிவக்க மாறனை பார்த்து பொரிந்து தள்ளினாள் கோதை!


      "நீ யேன் அப்படி எண்ணிக் கொள்கிறாய்! இந்த ஊர் உலகத்தில் யாருமே வரதட்சணை கேட்டதில்லையா? என் அம்மாவும் அக்காவும் மட்டும் புதிதாக ஏதோ கேட்பது போல் யேன் இப்படி பேசுகிறாய்! எல்லா இடத்திலும் நடப்பதைத்தானே அவர்கள் கூறினார்கள்! அப்படியிருக்க இதில் என்ன தவறைக் கண்டாய். நீ பேசுவது உனக்கே சரியாகப் படுகிறதா? வாழ்க்கை என்றால் அப்படி இப்படி இருக்கத்தானே செய்யும். இதையெல்லாம் பெரிதாக எண்ணிக் கொண்டால் யாருமே வாழ இயலாது! ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்தவள் போல் பேசிக்கொண்டு இருக்கிறாய்" என்றான் மாறன்! 


     "நாங்கள் ஒன்றும் சந்தையில் விலை போகும் அடிமாடுகள் அல்ல.... பெண்ணைப் பொன்னாகப் பார்க்கும் உன் போன்ற நயவஞ்சகர்களுக்காக கழுத்தை நீட்டும் காரியத்தை ஒரு நாளும் நான் செய்ய மாட்டேன். உன் பாதை வேறு என் பாதை வேறு. இருவரும் என்றுமே இணை சேராத கோடுகள்! வீணாக என்னோடு வாதம் செய்யாமல் இங்கிருந்து புறப்படு! இனியும் என்னைத் தேடி கொண்டு எப்போதும் வராதே! முடிந்த பயணத்தின் முற்றுப் புள்ளி நீ! தொடர்கதையாக்க  முனையாதே!" என எரிமலைபோல் கொந்தளித்து பிரவாகமாய்  மாறனிடம் கொட்டினாள் கோதை! 


      "அப்படி என்றால் இதுதான் உனது இறுதி முடிவா? நன்றாக யோசித்துக் கொள்! வீணாக வாழ்க்கையை தொலைத்துக் கொள்ளாதே! அப்புறம் திரும்பவும் நீ நினைத்தாலும் ஒரு நாளும் கிடைக்காது!"


      "இப்போதுதான் தெரிகிறது! பெண்ணை வெறும் பொருளாகப் பார்க்கும் புத்தி உன் அக்கா அம்மாவிற்கு மட்டுமல்ல உனக்கும் அதேதான் உள்ளது என்பதை இப்போது நீ நிரூபித்து விட்டாய்! இப்போதாவது உனது உண்மை முகத்தை எனக்கு காட்டியதற்கு ரொம்ப நன்றி மாறா! எனது கனவு கலைந்து விட்டது" என அவன் முகத்தில் அடித்தார் போல் கூறிவிட்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தாள் கோதை!


       விழிகளில் துளிர்த்த ஈரத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு இடி விழுந்த வீடாய் மாறிப் போனான் மாறன்! 


       





No comments:

Post a Comment