Thursday, 28 August 2025

நடராஜர் பத்து

 

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

நடராஜர் பத்து


நடராஜரின் அருளைப் பெற நடராஜர் பத்து பாடல்

நடராஜ பத்துதிருவாசகத்திற்கு இணையாக தில்லை நடராஜரின் மீது பாடப்பட்ட நடராஜ பத்து ஆகும்.. சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலமாகத் திகழ்கின்றதுமிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள்செறிவு நிறைந்த கருத்துக்கள்அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள் ஆகும்ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனேஎன்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியதுஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும்இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு.

Written by the great Sri. Chirumanavoor Muniaswamy Mudaliar over 300years ago, the Natarajar Patthu is an appeal to Lord Shiva in his dancer form - Lord Nataraja residing in Chidambaram. It is a great poem bringing glory to the mystic dancer, praising his very essence and his powerful dance, for there is none to excel him when it comes to the art of dancing. Listen to this special collection of songs singing the glory of Lord Natarajar and get his blessings.

Singer: Rahul

Music: K.V. Balakrishnan

From: https://www.youtube.com/watch?v=gdvDhymXTkQ&ab_channel=EmusicAbirami

நடராஜப் பத்து

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ

மறைநான்கின் அடிமுடியும் நீ

மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ

மண்டலமிரண்டேழு நீ

பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ

பிறவும் நீ யொருவ நீயே

பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ

பெற்றதாய் தந்தை நீயே

பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ

போதிக்க வந்த குரு நீ

புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ

யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ

எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே

என் குறைகள் யார்க்குரைப்பேன்?

ஈசனே சிவகாமி நேசனே!

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே !

 

மானாட மழுவாட மதியாட புனலாட

மங்கை சிவகாமி யாட

மாலாட நூலாட மறையாட திறையாட

மறைதந்த பிரமனாட

கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட

குஞ்சர முகத்தனாட

குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட

குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி

அட்ட பாலகருமாட

நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட

நாட்டியப் பெண்களாட

வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை

விரைந்தோடி ஆடி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! 

 

கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு

கனவென்ற வாழ்வை நம்பி

காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே

கட்டுண்டு நித்த நித்தம்

உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி

ஓயாமலிரவு பகலும்

உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது

ஒருபயனுமடைந்திலேனை

தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்

தாவரம் பின்னலிட்டு

தாயென்று சேயென்று நீயென்று நானென்று

தமியேனை இவ்வண்ணமாய்

இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது

இருப்பதுனக்கழகாகுமா?

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

 

வம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம்

தம்பனம் வசியமல்ல

பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேசம்

அதுவல்ல ஜாலமல்ல

அம்பு குண்டுகள் விலக மொழியு

மந்திரமல்லஆகாய குளிகையல்ல

அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல

அரிய மோகனமுமல்ல

கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி

கொங்கணர் புலிப்பாணியும்

கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம்

கூறிடும் வயித்தியமல்ல

என்மனம் உன்னடிவிட்டு விலகாது

நிலைநிற்கவே உளது கூறி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற

தில்லைவாழ் நடராஜனே! 

 

நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்

நின்செவியில் மந்தமுண்டோ!

நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்

நோக்காத தந்தையுண்டோ!

சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்

தளராத நெஞ்சமுண்டோ!

தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ

தந்தை நீ மலடுதானோ!

விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே

வினையொன்றும் அறிகிலேனே

வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே

வேடிக்கை இதுவல்லவோ

இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு

இனியுன்னை விடுவதில்லை

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! 

 

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்

வாஞ்சையில்லாத போதிலும்

வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்

வஞ்சமே செய்த போதிலும்

மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்

மூர்க்கனே முகடாகினும்

மோசமே செய்யினும் தேசமே தவறினும்

முழு காமியே ஆயினும்

பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ

பார்ப்பவர்கள் சொல்லார்களோ

பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்த நீ

பாலகனைக் காக்கொணாதோ

எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ

என் குறைகள் தீர்த்தல் பெரிதோ

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! 

 

அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ

அறிவிலாததற்கழுவனோ

அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ

ஆசை மூன்றுக்கழுவனோ

முற்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ

என் மூட அறிவுக்கழுவனோ

முன்னில் என் வினைவந்து மூளும் என்றழுவனோ

முத்தி வருமென்று உணர்வனோ

தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ

தவமென்ன என்றழுவனோ

தையலார்க்கழுவனோ மெய்வளர்க்க அழுவனோ

தரித்திர தசைக்கழுவனோ

இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ

எல்லாமுரைக்க வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! 

 

காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ

கன்னியர்கள் பழிகொண்டனோ

கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ

கிளைவழியில் முள்ளிட்டனோ

தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ

தந்தபொருளிலை யென்றனோ

தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ

தவசிகளை ஏசினேனோ

வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ

வாணரைப் பழித்திட்டனோ

வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ

வந்தபின் என் செய்தனோ

ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ

எல்லாமும் பொறுத்தருளுவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! 

 

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன

தன்பிறவியுறவு கோடி

தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன

தாரணியையாண்டுமென்ன

சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன

சீடர்கள் இருந்துமென்ன

சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்

செய்தென்ன நதிகளெல்லாம்

ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை

ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ!

இதுவெல்லாம் சந்தை உறவென்று தான்

உந்தனிருபாதம் பிடித்தேன்

யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்

கண்பார்வையது போதுமே

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! 

 

இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ

இரும்போ பெரும்பாறையோ

இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ

இது உனக்கழகு தானோ

என் அன்னை மோகமோ இதுஎன்ன கோபமோ

இதுவே உன்செய்கை தானோ

இருபிள்ளைதாபமோ யார்மீது கோபமோ

ஆனாலும் நான் விடுவனோ

உன்னை விட்டெங்கெங்கு சென்றாலும் விழலாவனோ

உனையடுத்துங் கெடுவனோ

ஓஹோ இது உன்குற்றம் என்குற்றம்

ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா

என் குற்றமாயினும் உன் குற்றமாயினும்

இனியருள் அளிக்க நினைவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! 

 

சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு

சந்திரன் சூரியன் இவரை

சற்றெனக் குள்ளாக்கி ராசி பன்னிரண்டையும்

சமமாய் நிறுத்தி யுடனே

பனியொத்த நட்சத் திரங்களிரு பத்தேழும்

பக்குவப் படுத்திப் பின்னால்

பகர்கின்ற கரணங்கள் பதினொன்றையும் வெட்டிப்

பலரையும் அதட்டி

என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற

கசடர்களையும் கசக்கி

கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத் தொண்டரின்

தொண்டர்கள் தொழும்ப னாக்கி

சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும்

எமை அருள்வது இனி யுன்கடன் காண்

ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

தில்லைவாழ் நடராஜனே.

Wednesday, 27 August 2025

ராஜ நிலா 01 - யாழிசைசெல்வா

அரங்கேற்றத்தில் அனர்த்தம் 

============================

இறைத்து விட்ட சோழி போல் வானக் கூரையெங்கும் வியாபித்து "மினுக்...மினுக்கென" ஒளியை பூமியை நோக்கிச் சிந்திய நட்சத்திரங்கள் ஒரு கணம்  திகைத்து அப்படியே நின்று விட்டது.


தில்லை நடராஜர் சிவாலயம்  முன்னாலிருந்த மேடையில்

"கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்ட

கனவென்ற வாழ்வை நம்பி

காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே

கட்டுண்டு நித்த நித்தம்

உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி

ஓயாமலிரவு பகலும்

உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது

ஒருபயனுமடைந்திலேனை

தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்

தாவரம் பின்னலிட்டு

தாயென்று சேயென்று நீயென்று நானென்று

தமியேனை இவ்வண்ணமாய்

இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது

இருப்பதுனக்கழகாகுமா?

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!" (நடராசப் பத்து என்ற பாடல் தொகுப்பில் மூன்றாவதாக அமைந்த பாடல் இது)


கணீரென்று ஒலிக்கும் பாடலுக்கேற்ப  பரதநாட்டிய முத்திரைகளை அபிநயத்தில் பிடித்ததோடு நாட்டிய திறமையால்  கூடியிருந்த கூட்டத்தை மெய் மறக்கச் செய்து கட்டிப்போட்டிருந்தாள் வண்ணக்கொடி!


அலைபாயும் கெண்டை விழிகள், காற்று கொஞ்சும் கார்கூந்தல், வெட்கம் ஒட்டிக் கொள்வதற்கு ஏங்கும் கனிந்து சிவந்த கன்னம், பாலாடை போல் பரவி மினுங்கும் சிவந்த அதரம்,  இலவம் பஞ்சுபோல் நூலாடையின் எடை தாங்காத சிறுத்த இடை,  முகிலை பெயர்த்துத் தளிர்களாக்கிய விரல்கள், பூக்களின் புன்னகையை வரவு செய்யும் செம்பஞ்சு குழம்பு  பூசிய பாதங்கள்! சித்திரத்தின் வண்ணங்களை மெருகேற்றும் சந்தனமும் குங்குமம் சரி விகிதத்தில் கலந்த கலிங்கப் பட்டுச்சேலையில், காற்றோடு மிதந்தபடி நாட்டியமெனும் கவிதையை நெய்து கொண்டிருந்தாள் வண்ணக் கொடி!


பாடல் அழகா? நாட்டியம் அழகா? இல்லை பாடலுக்கேற்ற இவளின் நாட்டியத்தால் பாடல் அழகானதா? என்ற விவாதம் கூடியிருந்த கூட்டத்தில் சன்னமாய்ப் பரவிக் கொண்டிருந்தது !


வண்ணக் கொடியின் ஒவ்வொரு முத்திரைகளும் அதற்கேற்ப அவளது விழியசைவும் உடல் மொழியும் ஒன்றாய்ச் சேர்ந்து மிரட்டியதால் நட்சத்திரங்கள் இமைப்பதை நிறுத்தி விட்டது போலும்!


தீப்பந்த வெளிச்சத்தில் ஒளிர்ந்த மேடையில் காற்றில் சுழன்று சுழன்று மிதந்தபடி வண்ணக் கொடியின் நாட்டியம் அரங்கேறிக் கொண்டு இருந்தது!  எத்தனை லாவகமாக அபிநயம் பிடித்து ஆடிக்கொண்டிருந்தாலும் அவளது ஒவ்வொரு துள்ளலிலும் விழியசைவிலும் ஒருவித தேடல் பரவி இருந்தது! அதனை அங்கிருந்த கூட்டத்தார் யாரும் கவனிக்க வில்லை! அதுவே அவளுக்கு மிகுந்த மன நிம்மதியைத் தந்திருக்க வேண்டும்.... அது அவளது வதனத்திற்கு கூடுதல் அழகைக் கொடுத்திருந்தது!


அதனை மேடையில் இடது புறமாக அமர்ந்து கணீரென்ற குரலில் பாடிக்கொண்டே, கூடியிருந்த கூட்டத்தை ஒரு கணம் நோட்டமிட்டு, வியப்போடும் மகிழ்வோடும் வண்ணக் கொடியைப் பார்த்தாள், அவள் தோழி அன்னமயில்!


"ஆகா! அற்புதம்...."மென பாடல் முடிந்தபோது குழமியிருந்த மக்கள் அனைவரும் கைகொட்டி மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவாரம் செய்யத் தொடங்கிருந்தார்கள்! ஒவ்வொரு வரியையும் சிலாகித்து பாடி வண்ணக் கொடியின் அபிநயத்தை தாமும் செய்து பார்த்தபோது, அது சரிவர அவளைப் போல் அமையவில்லை என்பதால் ஒருவரை ஒருவர் கேலி செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்!


அப்போது புளிய மரத்தின் பின்னால் இருவர் பதுங்கிருந்தார்கள்! ஆடலையும் பாடலையும் அதற்கு மக்கள் செய்யும் ஆரவாரத்தையும் கண்டு மிகுந்த வெறுப்பு அவர்கள் உடல் முழுவதும் பரவி இருந்தது! பற்களை இருவரும் நரநரவென்று கடித்ததோடு, தமது கைகளை தொடைகள் மீது ஓங்கிக் குத்தி ஆத்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள். உடல் முழுவதும் பரவிய வெறுப்பு கனலாக மாறியதோடு,  அவர்கள் மறைந்திருந்த இருளிலும் முகத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.


இருவரில் பரமன் மட்டும் சற்று முன்னால் வந்து "ஆகா... என்னவொரு நாட்டியம்! ஒவ்வொரு வரிகளுக்கும் அவள் பிடிக்கும் அபிநயம் கண்டு தில்லை நடராஜரே நேரில் வந்து வாழ்த்துக் கூறினாலும் ஆச்சரியம் இல்லை! அப்படி ஒரு அற்புதமான நடனத்தை அரங்கேற்றி விட்டாள்! இதுவரையில் இப்படி ஒரு நாட்டியத்தைப் பார்த்ததே இல்லை!  அதிலும் தில்லைவாழ் எம்பெருமான் நடராஜன் மீது பாடப்பட்ட பாடலை எத்தனையோ முறை உருகி உருகி பாடி உள்ளேன்! அப்போதெல்லாம் இல்லாத பேரானந்தம், இவள் நாட்டியத்தின் வழியாக அரங்கேற்றிக் கடத்திய பாவனையால் எனக்கு என்றுமே சிந்தை விட்டு அகலாது"  மெய்மறந்து சற்று உரக்கவே பேசி விட்டான்!


"அடேய் மூடா! அப்படி என்ன? காணாததை கண்டு விட்டாய்? இதுவரையில் நீ எந்த ஒரு நாட்டிய நிகழ்ச்சியும் பார்த்ததில்லையா? இப்படிக் கிடந்து உருகி உருகி உளறிக்  கொட்டிக் கொண்டிருக்கிறாய்..." பரமனைப் பார்த்து எரிச்சலோடு கூறினான் நாராயணன்!


"அண்ணே! நான் எத்தனையோ நாட்டியத்தைப் பார்த்திருக்கிறேன்! ஆனால் இதுபோல் நாட்டியத்தை பார்த்ததில்லை" மேடையில் ஆடிக் கொண்டிருந்த வண்ணக் கொடி மீது வைத்த விழியை அகற்றாது பார்த்துக் கொண்டிருந்தான் பரமன்.


"உனக்கு நாட்டியத்தை விட, அதை ஆடும் நங்கையின் மீதுதான் அதீத அக்கறை போல் தெரிகிறது! அதனால்தான் பைத்தியம் போல் அவளைப் பார்த்து உளறிக் கொண்டிருக்கிறாய்..."


"நீங்கள் கூறுவது ஒரு வகையில் உண்மைதான்! சொக்க வைக்கும் பேரழகு! எப்படி விழியை அகற்ற முடியும்! அத்தோடு பாடலுக்கு அவள் காட்டும் அபிநயமும், அவளது கெண்டை விழிகளின் துள்ளலும் ஒருங்கே சேர்ந்து என்னைக் கட்டிப்போட்டு விட்டது"


"இப்படி ஒரு பெண் பித்தனாக இருப்பாய் என நான் நினைக்கவில்லை! நினைக்கவே வெட்கமாக உள்ளது" முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தபடி கூறினான் நாராயணன்!


"அடப் போ... அண்ணே! இந்தச் குட்டி! என்னம்மா துள்ளுறா...! பாக்குறதுக்கே அவ்வளவு அழகா இருக்கா! அவ மேல வச்ச கண்ண எடுக்க முடியல.... உண்மையிலே இன்றைய ராப்பொழுது சுகமாத்தான் போகுது! இப்படிப் போகும்னு தெரிஞ்சிருந்தா.... கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கலாம். இந்தக் குட்டி எத்தனை நேரம் ஆடுவாளோ தெரியல... "  தீப்பந்தத்தின் வெளிச்சம் தன் மேல் படாதவாறு மிகுந்த எச்சரிக்கையோடு அடர்ந்து அகன்று கிளைபரப்பிருந்த புளியமரத்தின் பின்னால்  மறைந்து  நின்றபடி கூறினான் பரமன்!


"அடேய் முட்டாளே! மறுபடியும் உன் வேலையை ஆரம்பித்து விட்டாயா? எப்பொழுதும் இடம் பொருள் பார்த்து பேசும் யோக்கியதை என்றுமே உனக்கு இருந்ததில்லை! அதனாலயே நிறைய முறை அடி உதை வாங்கினாய்! இருந்தும் உனக்கு  திருந்தும் புத்தி  கிடையாதென்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறாய்! எப்பொழுதுதான் நீ திருந்துவாயோ தெரியவில்லை! உன்னைக் கூட்டிக் கொண்டு வந்ததற்கு நான் வெட்கப்பட்டு தலை குனியும் படி ஏதாவது செய்து தொலைத்து விடாதே! அதனால் தான் கூறுகிறேன்! சிறிதாவது ஒழுக்கமாக பேசக் கற்றுக்கொள்! இல்லையெனில் கூட்டத்தாரிடமிருந்து உதை வாங்குகிறாயோ இல்லையோ என்னிடம் வாங்குவது நிச்சயம்! பெண்களிடத்தில் எப்போதும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்! முதலில் அதற்கொரு பெரிய பாடத்தை உனக்கு கற்பிக்க வேண்டும்" புளிய மரத்தின் பின்னால் நன்றாக மறைந்து நின்றபடி பரமனை எச்சரித்துக் கொண்டிருந்தான் நாராயணன்!


"அண்ணே! இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கடந்து குதிக்கிற.... இந்தக் குட்டி நல்ல ஆடுறான்னு சொன்னது குத்தமா....?" என்றவன் வார்த்தையை முடிக்க விடாமல் "அடேய்! இன்னொரு முறை மரியாதை குறைவாக அந்தப் பெண்ணை பேசினால் நானே இங்கு கூடியுள்ள கூட்டத்தில் உன்னைப் பிடித்துக் கொடுத்து விடுவேன்! எச்சரிக்கையோடு இருந்து கொள்! இதுவே உனக்கு முதலும் கடைசிமாக இருக்கட்டும்" பல்லை நர நரவென்று கடித்தபடி கூறினான் நாராயணன்!


"சரிண்ணே! இனிமே அந்த மாதிரி சொல்ல மாட்டேன்" என்றவனை எதுவும் பேசாதபடி வண்ணக் கொடியின் நாட்டிய அழகு கட்டிப் போட்டதா? அல்லது நாராயணனின் எச்சரிக்கை இழுத்துப் பிடித்து நிறுத்தியதா...? தெரியவில்லை! அதன் பிறகு பரமன் வாய் திறந்து பேசவில்லை...


பாடல் முடிந்ததும் புறப்பட ஆயுத்தமானள் வண்ணக் கொடி! நாதம், மிருதங்கம், பக்கவாத்தியமென அத்தனை வாத்தியதாரர்களும் ஒருங்கே எழுந்தார்கள்!


"இந்தப் பாடலுக்கு மீண்டும் ஒருமுறை நடனமாட  வேண்டும்! இது எங்கள் தாழ்மையான விண்ணப்பம்" எனக் கூறிக் கொண்டே மேடை நோக்கி பட்டு வேட்டி சட்டையில் மிளிர்ந்து கொண்டிருந்த வயதான நபர் வண்ணக் கொடியின் அருகே வந்து விட்டார்.


"இல்லை ஐயா! நாங்கள் அனைவரும் புறப்பட வேண்டும்! மிகுந்த நேரம் ஆகிவிடும்! அப்புறம் எங்கள் பாடு பெரும் திண்டாட்டமாக போய்விடும்! வாய்ப்பிருந்தால் மீண்டும் ஒரு முறை நீங்கள் கேட்காமலே நாங்களே செய்திருப்போம்! தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள்!" சொல்லிக்கொண்டே வயதான மனிதரின் அருகினில் வந்திருந்தாள் அன்னமயில்!


"இங்கு நான் கூறியது எனது விருப்பம் மட்டுமல்ல! இங்கு உள்ள அனைவரின் விருப்பமும் அதுதான்! அதனை நான் உங்களிடம் வெளிப்படுத்தும் கருவி மட்டுமே! எனவே மறுக்காது நீங்கள் ஆடித்தான் தீர வேண்டும்! இது எங்கள் அன்பு கட்டளை! எம்பெருமான் நடராஜன் மீது அளப்பரிய காதலை உருகி  வெளிப்படுத்தும் இந்தப் பாடலும் அதற்கேற்ற நடனமும் இறைவனின் காலடியை இதமாகப் பற்றிக்கொள்ளும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குகிறது!" என்றவர் கூட்டத்தின் பக்கமாக திரும்பி "நான் கூறியது உண்மை என்றால் நீங்கள் அனைவரும் ஒரு சேர உங்கள் கருத்தை ஆமோதித்துக் கூறுங்கள்" கூட்டத்தைப் பார்த்து அவர் கூறியதும், கூட்டத்தார் முழுவதும் ஒரே குரலில் "ஆமாம் மீண்டும் ஒருமுறை நீங்கள் ஆடித்தான் தீர வேண்டும்" என சத்தமிடத் தொடங்கி விட்டார்கள். அதனைத் தொடர்ந்து "வேண்டும்.... வேண்டும்" என்ற குரல் பலமாக ஒழிக்கத் தொடங்கியிருந்தது!


மிகுந்த ஆவலோடும் அன்போடும் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் வேண்டுதலை புறக்கணிக்க முடியாமல் மறுபடியும் ஆடுவதற்கு ஆயத்தமானதும், வேறு வழியின்றி அன்னமயில் மீண்டும் பாடுவதற்கு தயாரானதும், நிலையை புரிந்துகொண்ட வாத்தியதாரர்களின் இசைக்கருவிகளின் இசை மிதந்த போது வண்ணக் கொடியின் நாட்டியம் மீண்டும் அரங்கேற்றமாகிருந்தது!


இம்முறை  முன்பு தவற விட்டிருந்தவர்கள் வண்ணக் கொடியின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் பார்த்தார்கள். இறைவனை உருகி ஆராதிக்கும் வண்ணக் கொடியின் பாவ அசைவுகள் தத்ரூபமாக எடுத்துக்காட்டுவதை எண்ணி ஆரவாரத்தில் குதித்துக் கொண்டாடிக் தீர்த்து விட்டார்கள்!  பாடலின் ஒவ்வொரு அடியும் கடந்து கொண்டிருக்கும் போது இன்னும் கொஞ்சம் நீளாதா? என்ற ஏக்கம் அங்கிருந்த அத்தனை பேரின் இதயங்களிலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது!


"எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே"என்ற இறுதி வரிப் பாடலுக்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தபோது மேடையின் இடதுபுறத்தில் அலங்காரம் செய்வதற்கும் ஆடை மாற்றிக் கொள்வதற்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டிருந்த ஓலை குடிசை திகதிகுவென பற்றி எரியத் தொடங்கி விட்டது! குடிசை அருகே இருந்தபடி நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த சில பேர் தப்பித்தால் போதும் என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள்! திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கூடியிருந்த மக்கள் கூட்டம் கல்லடிப்பட்ட தேனீ கூட்டம் போல் கலகலத்துப்போய் வெருண்டோடிக் கொண்டிருந்தது!


மேடையில்  பாடிக் கொண்டிருந்த அன்னமயிலும் வாத்தியம் இசைத்துக்கொண்டிருந்த இசை கலைஞர்களும்  எவ்வித சுணக்கமுமின்றி தொடர்வதையும் வெருண்டோடும் மக்கள் கூட்டத்தையும் கணநேரம் கூட கவனிக்காது இறைவனின் மீதான அளவற்ற பக்தியின் காரணமாக செவ்வனே பாடலின் இறுதி அடிவரை சரியாக இசைத்தும் பாடியும் துணை செய்ததால் வண்ணக்கொடி முத்தாய்ப்பாக தில்லை நடராஜனே வணங்கி எழுந்தவள் உடை மாற்றும் ஓலைக் குடிசை முழுவதும் பற்றி எரிவதைக் கண்டு அவள் விழிகள் துளிர்க்கத் தொடங்கியிருந்தன!

(நிலா வளரும்)






Friday, 15 August 2025

கலையாத மௌனங்கள் - கவிஞர் யாழிசைசெல்வா

கலையாத மௌனங்கள்

========================

ஓர் அதிகாலை நேரம்! 

புள்ளிகள் ஒன்று கூட்டி 

புதுக் கோலம் வாசலில் தீட்டிக்கொண்டே 

எதிர் வீட்டு முற்றத்தில் 

குட்டி போட்ட பூனையாய் 

அங்குமிங்கும் நடை பயின்ற என்னை 

வேல்விழியால் சாய்த்திறுந்தாள்...!!!


குளித்த தலையின் ஈரம் சொட்டியதில்

பூமிக்கு வேர்த்து விட்டதாய்

இடம் நகர்ந்து 

அவள் இடது கையால் 

குழல் நகர்த்திய போது 

மேகம் விலகி 

பூமிக்கு வந்த நிலவாகத் தெரிந்தாள்!


மருதாணி இட்ட விரல்களில் 

பூமிக்கு மகரந்தம் 

பூசிக்கொண்டு இருந்தாளோ என்னவோ 

கோலத்துப் பூக்களின் 

வண்ணம் அனைத்தும் 

வானவில்லைக் குடித்து மலர்ந்திருந்தன!!!


தினமும் மாறும் 

வானிலை போலே

அவளது கனவுகளுக்கு 

கற்பனை சிறகு தந்து 

வாசலில் கோலமாய் 

உருவம் தீட்டியதெல்லாம் 

என் இதயத்தோடு பேசிக்கொள்ளத் தான் 

என்பதை எப்படி மறக்க முடியும்? 


கருவாகி உருவாகி 

காற்றோடு கதை பேசி 

நேற்று கூட முடிந்து போன 

கதையெல்லாம் பூ பூத்து 

வீச்சருவாள் கம்போடு

வேலிப்படல் கடந்து

இல்லாத கௌரவத்தை 

இருப்பதாகப் பேசிக்கொண்டு 

வெட்டி சாய்த்த வாழை மரங்களின் சருகோடு 

அவள் மீதான காதலும் முறிந்து போனதாய் 

வீராப்பு பேசிய போதாவது மௌனம் கலைந்திருக்கலாமென

குருத்துக்களில் துளிர்த்திருந்த

வாழைக் கன்றாய் 

என்னிதயம் இருந்ததை எப்படி மறந்தாய்? 


காலங்கள் உருண்டோடி 

இருளைத் துவைத்துக் கொண்டு 

ஒளிர்ந்து கொண்டிருந்த 

சித்திரை நிலவில் ஒரு நாள் 

அரிதாய்ப் பார்த்த போது 

கணவனோடு கடந்து சென்ற நீ

விழி மலர்த்தியது ஏன்?


சில மௌனங்கள் 

கலையாமல் இருப்பதே 

காற்றுக்கும் காதலுக்கும் 

சாசுவாதமாக எழுதப்பட்டது போலும்....!!!


உடைந்த மௌனங்கள்

கலையாமல் இருப்பதே நன்று! 


கவிஞர் யாழிசைசெல்வா 

16/08/2025


Wednesday, 6 August 2025

முதலாளி - கவிஞர் யாழிசைசெல்வா

முதலாளி 

===========

கவிஞர் யாழிசைசெல்வா 

=========================

  

     முறைப்பொண்ணு கோபத்தோட மாமன் முகத்துல மஞ்சத் தண்ணி ஊத்தியது போல வீதி முழுவதும் வெயிலின் உக்கிரம் தாண்டவமாடியதில் கானல் நீர் காட்சி தந்தது. இதுக்கு மேல தேயிறதுக்கு செருப்புல இடமில்லனு தெரிஞ்சும் விடாம இழுத்து பிடிச்சமானிக்கு நடந்ததோட, இரண்டு கையிலையும் பெரிய பையத் தூக்கிக்கிட்டு வேகாத வெயிலுலேயும் ஓடத்தண்ணி மாறி பெருக்கெடுத்து உடம்பு முழுவதும் வேர்வைத் தண்ணி ஓடிக்கிட்டு இருந்தத ஒரு பொருட்டாவே நினைக்காம மாணிக்கம் ஒரு வழியா ஊருக்குள்ள நுழைஞ்சு அவன் வேலை பாக்குற மாரிச்சாமி கடைக்கு வந்து சேர்ந்திருந்தான். 


      ஊர் எல்லையிலிருந்த புளியமரம் ஊரோட அடையாளமா ஒரு காலத்தில் இருந்தது. மரத்துக்கு பக்கத்துல மாரிசாமி பொட்டிக்கடை ஒன்னு வச்சப் பிறகு காலப்போக்கில கடை பெருசாகி மளிகைக் கடையா மாறி இருந்தது. இப்ப எல்லாரும் மாரிச்சாமி மளிகை கடைய அடையாளமா சொல்ற அளவுக்கு கடையோட தேவை பெருகி இருந்தது. 


     மாரிச்சாமி மளிகை கடையில வேலைக்கு வந்து இந்த தை வந்தா ரெண்டு வருஷம் ஆகப்போகுது. வேலைக்கு சேரும்போது என்ன சம்பளம் வாங்கினோ அதே சம்பளம் தான் இதுவரைக்கும். கடையில விக்கிற பொருளோட விலை வாசி ஏறி இறங்கினாலும் அந்த காத்து மாணிக்கம் பக்கம் எப்பவும் வீசுனதே இல்லை. மாணிக்கமும் அது வேணும் இது வேணும் எப்பவுமே கேட்டது இல்லை. அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு சோலியப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படித்தான் அன்னைக்கும் பக்கத்து ஊர்லயிருந்து கடைக்கு வேண்டிய மளிகை பொருள வழக்கம் போல வாங்கிட்டு வந்தவன் கடை வாசலிலுலே பொருள வச்சுட்டு நிமிர்ந்தான். 

 

     "ஏன்டா மாணிக்கம்! இம்புட்டு நேரமா? அந்த பொருளை கொண்டு போய் உள்ளார வச்சிட்டு சீக்கிரம் வாடா.... கருப்புசாமி கடைக்கு பொருளை கொண்டு போய் கொடுத்துட்டு வரணும்.... ஏற்கனவே ரெண்டு தடவை பொருளைக் கேட்டு ஆள் அனுப்பி விட்டுட்டான். நீ வந்ததும் உன்கிட்ட கொடுத்து விடுரேன்னு சொல்லிட்டேன். நீ எப்ப வருவேன்னு அவனும் காத்துகிட்டு இருப்பான். மச மசனு நிக்காம வேலையப் பாரு. அரிசி மூட்டைக்கு பக்கத்துல அவன் கொடுத்த லிஸ்ட் வெச்சிருக்கேன். அதைப் பார்த்து அதுபடி எல்லாத்தையும் எடுத்து மூட்டை கட்டி கொண்டு போயி கருப்பசாமி கடையில கொடுத்துட்டு வந்துரு" கடையின் கல்லாப் பெட்டியில் உட்கார்ந்தபடியே கடுப்போடு மாணிக்கத்தை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான் மாரிச்சாமி. தலையில் கட்டி இருந்த உருமா கட்டை அவுத்து உதறி தோளில் போட்டுக்கொண்டு கடையின் வாசலில் வந்து நின்று கொண்டான். 


     மதிய சாப்பாடு சாப்பிடும் உச்சிப் பொழுது கடந்து மேலேறிக் கொண்டிருந்தது. மாணிக்கத்தை சாப்பிட அனுப்ப வேண்டும் என்ற நினைப்பு துளியுமில்லாமல் வெட்டி முறித்தது போல் வாசலில் நின்று சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான் மாரிச்சாமி. அப்போது பசி பொறுக்க முடியாமலும் வெகு தூரம் நடந்து வந்ததால் தொண்டை வறண்டு தாகம் எடுத்ததும் கடையின் வாசற்படி அருகேயிருந்த மண்பானையிலிருந்து சொம்பு நிறையத் தண்ணீர் எடுத்து மடமடவென்று குடித்தான் மாணிக்கம்.


   "மாணிக்கம்... சீக்கிரம் பொருளை எடுத்து வை. கருப்பசாமி திட்ட போறான்..." சொன்ன வேலையை செய்யாமல் நேரத்தை கடத்திக்கொண்டு மாணிக்கம் நிற்பதாக எண்ணியபடி மாரிச்சாமி சொன்னான். 


     "இதோ.... அஞ்சு நிமிஷத்துல எடுத்து வச்சிரேங்கையா...."


      "சரி !சரி !பேசிக்கிட்டே நிக்காத.... "


    லிஸ்டில் உள்ள பொருள்களை எல்லாம் எடுத்து மூட்டை கட்டி கடை வாசலுக்கு கொண்டு வந்தான் மாணிக்கம். 


    "எல்லா பொருளும் இருக்கா? அப்புறம் அதை மறந்துட்டேன் இத மறந்துட்டேன்னு சொல்ல கூடாது! கருப்புசாமி கிட்ட பொருளை கொடுத்துட்டு, போன வாரம் வாங்கிட்டு போனேன் பொருளுக்கு காசு வாங்கிட்டு வந்துரு. அவன் கிட்ட ஏற்கனவே நான் சொல்லிட்டேன். நீயும் கரராப் பேசி காசு வாங்கிட்டு வந்துரு. அவன் பாட்டுக்கு ஏதாவது சாக்கு சொல்லி இழுத்தடிச்சிடப் போறான்"


  "சரிங்கய்யா...." தலையைச் சொரிந்து கொண்டு சொன்னான் மாணிக்கம். 

 

    மாணிக்கம் என்ன சொல்ல வரப் போகிறான் என்பதை யூகித்த மாரிச்சாமி வேண்டுமென்றே வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டான்.


   "ஐயா..."என்றான் மாணிக்கம். 


    "பொண்ணு கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் கேட்டு இருந்தேங்க ஐயா.... பொருள் வாங்கிட்டு வந்த பிறகு தாரேன்னு சொல்லி இருந்தீங்க..."எனத் தயங்கிக் கொண்டே கேட்டான் மாணிக்கம். 


    "ஆமாம் மாணிக்கம். எனக்கு ஞாபகம் இருக்கு. வரவேண்டிய பணம் கொஞ்சம் சுணக்கமாக இருக்கு. இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள எப்படி நீ கேட்ட காசு வந்துரும்னு நினைக்கிறேன். வந்ததும் தந்துடறேன் டா.... கவலைப்படாம நீ போயி கருப்புசாமி கடையில பொருளைக் கொடுத்துட்டு அப்படியே வீட்டுக்கு போய் சாப்பிட்டு சட்டு புட்டுன்னு கடைக்கு வந்து சேரு. நீ வந்த பிறகுதே.. நான் போய் சாப்பிட்டு வரணும்"

    

    "சரிங்கய்யா...." மூட்டை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு கருப்பசாமி கடையிருந்த தெருவை நோக்கி நடந்து கொண்டிருந்தான் மாணிக்கம். 

(முடிந்தது)


கவிஞர் யாழிசைசெல்வா 

06/08/2025

கவிதைச்சாரல் சங்கமம் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுகதை இது.


     

Short story contest

உயில்

=======
கவிஞர் யாழிசைசெல்வா
========================
      இருள் சூழ்ந்து நீண்ட காலமாக படிந்த தூசியும்,  எங்கும் ஒரே நூலாம்படையாகத் தேங்கிக் குப்பைத் தொட்டியாக பராமரிப்பின்றி கெடந்த நிலவறைக்குள் நுழைந்த செல்லம்மாள் போன வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்து போல் வெளியே வந்தவள் "ம்அச்சு.... ம்அச்சு..... ம்அச்சு "யென விடாமல் தும்மிக் கொண்டிருந்தவள் "எத்தனை முறை சொன்னாலும் அந்தப் பய  முருகன் கேட்கவே மாட்டேங்குறான்! ரொம்ப நாளா பூட்டிக் கெடக்கு! அதை சுத்தம் பண்ணுடா எத்தனை தடவை சொல்லி இருப்பேன்! கேட்டானா.... இன்னும் ரெண்டு நாள்ல சென்னையிலிருந்து பொற்கொடி வந்துருவா... அவ மட்டும் இதப் பார்த்தா.... அவ்வளவுதான்.... வீட்ட ரெண்டாக்கிருவா..... அதுக்குள்ளற  இத சரி பண்ணப் பாக்கணும்"எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டு வீட்டின் பட்டாசாலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தவள் "டேய் முருகா....! எங்கடா போன? இங்க இருக்கியா இல்லையா? "என்றவள் ஒரு வழியாக பட்டாசாலைலிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கைவிசிரி எடுத்து வீசிக் கொண்டிருந்தாள்!

     கொல்லைப்புறத்திலிருந்து பட்டாசாலை நோக்கி வந்த முருகன் துண்டை உதறி முகத்தை துடைத்துக் கொண்டு செல்லம்மாள் அருகே வந்து நின்றவன் "அம்மா கூப்பிட்டியா?" எனச் சொல்லிக்கொண்டே அவளருகே மர நாற்காலி எடுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்!

     "யேண்டா...  ஒருவேளை நீ வேணும்ன்டே காது கேட்காத மாதிரி நடிக்கிறியா என்ன?" என்ற செல்லம்மாள் முருகனை வினையமாகப் பார்த்தாள்!

     "என்னம்மா.... என்னப் பத்தி தெரிஞ்சுக்கிட்டும் இப்படி கேக்குறியே! இது உனக்கே நல்லா இருக்கா?"என்றவன் தலையைக் குனிந்து கொண்டான்!

      "தெரியும்டா...! சும்மா சொன்னேன் டா! நீ பாட்டுக்கு எதுவும் நினைச்சுக்காத!" என்றவள் முருகன் தலையைக் கோதிவிட்டாள்!

     "சரி சரி! மதிய நேர மாத்திரயை சாப்பிட்டியா இல்லையா? "

    "இல்லடா...! நிலவறைக்கு போனேன் அப்படியே மறந்துட்டேன்!" என்றவள் விழிகள் நிலவரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன!

     "நேரம் நேரத்துக்கு மாத்திரை சாப்பிடலனா தங்கச்சி என்னத் தான் திட்டும்! அது தெரிஞ்சும் நீ இப்படி செய்யலாமா? சரி இரு" என்றவன் செல்லம்மாள் படுக்கையறைக்குள் நுழைந்து அங்கிருந்து அலமாரியில் மாத்திரையும் செம்பு நிறையத் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தான்! எதுவும் பேசாமல் முருகனிடம் மாத்திரை வாங்கி முழுங்கிவிட்டு செம்பைக் கீழே வைத்தாள்!

     "முருகா..." என்றாள் செல்லம்மாள். "இப்ப என்ன சொல்ல வாறேன்னு எனக்குத் தெரியும்! நிலவரையை சுத்தம் பண்ணிடுறேன், அதுக்கு மின்னால உன்னப் பத்தி எத்தனை தடவை கேட்டு இருக்கேன் ஒரு தடவையாவது அதைப் பத்தி சொல்லி இருக்கியா? இன்னைக்கு நீ சொல்லியே ஆகணும்!" என்றான் பிடிவாதமாக முருகன்!


     " நீ வேலைக்கு வந்து அஞ்சு வருஷமாச்சு! நீயும் வந்ததிலிருந்து அத விடாமக் கேட்டு கிட்டுத்தானிருக்க!  அதப்பத்தி கேட்காதன்னு சொல்லிட்டேன் உனக்கு புரியுதா இல்லையா? இல்ல வேணுமின்டே கேக்குறியா?"

     "நீ சொல்றதெல்லாம் உண்மைதான்! நிலவறை பக்கம் போனாலே திட்டுற நீ!  எப்பவும் இல்லாம இந்த வருஷம் நிலவறைய சுத்தம் பண்ணச் சொல்றியே அதுதான் ஏன்? "

     "சரி சொல்றேன்" என்றவள் ஏதோ கனவுலகத்தில் மிதப்பது போல் நாற்காலியில்  சாய்ந்து கொண்டவள் "இந்த வீட்லதான் நானும் எங்க அண்ணன் குருசாமியும் பொறந்தோம்!  தோட்டத்துல விளையறது தேவைக்கு அதிகமா வருமானத்தை கொடுத்ததால , வீட்ல பணப் பிரச்சனை வந்ததேயில்லே!  எங்க அண்ணன் நல்லா படிச்சு மாவட்ட ஆட்சித் தலைவராயிட்டான்! அதனால அவனுக்கு எங்க சொந்தக்காரப் பொண்ணப் பார்த்து கல்யாணம் கட்டி வச்சுட்டாங்க!  ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்தான்! அப்பத்தான் நான் கல்லூரியில வரலாறு மூன்றாமாண்டு படிச்சுக்கிட்டு இருந்தேன்! அந்த ஆண்டு நடந்த கலை நிகழ்ச்சியில சுந்தரபாண்டியனப் பாக்குற வரையிலும் என் வாழ்க்கை இயல்பா தான் போய்கிட்டுருந்துச்சு!" என்றவள் முகம் தாமரையாய் மலர்ந்தது!

     "அப்புறமென்ன நடந்துச்சு! சீக்கிரம் சொல்லுமா? "

     "இருடா... சொல்லாம என்ன செய்யப் போறேன்" என்றவள் தொடர்ந்து "ஆடல் பாடல் முடிந்த பிறகு நான் நடிச்ச நாடகத்தைப் பார்த்த  எல்லாரும் அமைதியா இருந்தப்ப அவர் மட்டும் விசிலடிச்சு கொண்டாடித் தீர்த்திட்டாரு...."

     "அப்புறம் என்ன?"

      "பெறகு என்ன? நானும் சும்மா இருக்காம அவரைப் பத்தி அவரோட கல்லூரி பொண்ணுக கிட்ட வெவரம் கேட்கும் போது அவரே முன்னால வந்து 'உன்ன எனக்கு புடிச்சிருக்கு! கல்யாணம் கட்டிக்க சம்மதமானு' கேட்டுட்டாரு.... ஒரு நிமிஷம் எனக்கு படபடன்னு ஆயிருச்சு..... அதுக்குப் பெறகு ரெண்டு மாசம் அவர அலையவிட்டு, அவருக்கு சம்மதம் சொன்னேன்! ஒரு நாள் ரெண்டு பேரும் நம்ம ஊரு முருகன் கோயிலுல மாலைமாத்தியதோட பதிவுத் திருமணம் செஞ்சு, எங்க வீட்டுக்கு வந்தப்ப, எங்க அப்பா எங்களச் சேர்த்துக்காம வீட்டை விட்டு விரட்டிட்டாரு! ரொம்ப நாளா அவரோட பேச்சு வார்த்தையே இல்ல... எங்க அப்பா இறந்த பெறகு இந்த வீட்டை எங்கண்ணன் எனக்கு கொடுத்துட்டாரு" என்றவள் விழிகள் குளமாயின!

      அப்போது "செல்லம்மா! இந்த வீட்ட உங்க அப்பா உன் பேர்ல எழுதி வச்ச உயில உங்க அண்ணன் இப்பதான் பதிவுத் தபாலுலே  அனுப்பியது வந்துச்சு"என்றபடி உள்ளே வந்தார் சுந்தரபாண்டியன்!

      எதுவும் பேசாமல் உயிலைக் கையில் வாங்கியவள் சிறுவயதில் ஓடி விளையாடிய நிலவரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மா!

(முடிந்தது)

#############################################

கதை 02 

========

நாட்காட்டியின் நினைவலைகள் 

===========================

கவிஞர் யாழிசைசெல்வா 

======================

        பரபரப்பைக் பற்றி கொண்டு சதுரக் கண்ணாடியின் வழியே விழியில் நலம் விசாரித்தபடி வகுப்பறைக்குள் நுழைந்தவர் "இந்த ஆண்டு வரலாற்றுத் துறை ஆண்டு விழாவில் யாரெல்லாம் பேசப் போறீங்க? விருப்பம் இருக்கவங்க பேர் கொடுக்கலாம்"எனப் புதிய விடியலுக்கு கட்டியம் கூறினார் பேராசிரியர் துரைச்சாமி!

       ஒவ்வொருவரும் வகையாய் மாட்டிக் கொண்ட திருடன் போல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்தார்களே தவிர யாருமே பதில் தரவில்லை! 

     "நீங்களா பேர் சொல்றீங்களா? இல்ல நானே பேர எழுதிக்கவா?"எனப்பேராசிரியர் கரடியாய் கத்தினாலும் யாரிடமும் எந்தவித பதிலுமில்லை! "வேற வழியே இல்ல... செவ்வந்தி, செல்வகுமார், ரவிக்குமார் நீங்க மூணு பேரும் பேசுறீங்க" எனச் சொல்லிவிட்டு பாடவேளை முடிந்ததால் வகுப்பறை விட்டு வெளியேறிச் சென்றார் துரைசாமி! 

       "என்னடா இப்படி பண்ணிட்டாரு! இப்ப, என்ன பண்ணப் போற? இதுவரைக்கும் ஏதாவது மேடையில பேசி இருக்கியா?" என செல்வகுமாரைப் பார்த்துக் கேட்டான் மாரியப்பன்! 

     "இல்லடா... பள்ளிக்கூடம் படிக்கும் போது ஒன்னு ரெண்டு மேடையில பரிசு வாங்குவதற்கு மட்டும்தேன் மேடை ஏறி இருக்கேன்! இதுவரைக்கும் எந்த மேடையிலும் பேசுனதில்ல..." பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் மாரியப்பனிடம் பேசினான் செல்வகுமார். 

     "இப்ப என்ன செய்யப் போற?"

     "அதுதாண்டா தெரியல எனக்கு?"

     "பேசாம அவர் கிட்ட போயி உண்மையை சொல்லிரலாமா?"தலையை ஆட்டிய செல்வக்குமார் மாரியப்பனுடன் அதை வேகத்துடன் வரலாற்றுத் துறை அலுவலகத்திற்குள் நுழைந்து பேராசிரியர் துரைச்சாமி முன்பாக இருவரும் நின்றுந்தார்கள்!

     "என்னையா வந்திருக்கீங்க?" என்றவர் அவர்கள் முகத்தை பார்த்தார்! 

     "பேச்சுப் போட்டிக்கு என்னோட பேர சொல்லிட்டீங்க... என்ன பேசுறது? எப்படி பேசுறது? எதுவுமே தெரியாது ஐயா!" தொண்டையில் சிக்கிக்கொண்ட வார்த்தையை உருவி எடுத்து வெளியே மெல்லக் கொட்டினான் செல்வகுமார்!

      "அது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரமில்ல... நாலு மேடை ஏறிப் பேசினா எல்லாமே தானா வந்துரும்... நீ பேசுற அவ்வளவுதான். உனக்கு ஏதாவது புத்தகம் வேணும்னா நூலகத்தில் எடுத்துப் படிச்சுக்கோ! நான் நூலகத்துல சொல்லிடுறேன். வாழ்க்கையில வாய்ப்பு எப்போதுமே தானா அமையாது! நாமதேன் அமைச்சுக்கிறணும்! கிடைச்சது புடிச்சு மேல போக பழகிக்க! போயிட்டு வா!" என்றவர் அருகிலிருந்த 'ரொமிலா தாப்பர் எழுதிய பண்டைக் கால இந்தியா' புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கி விட்டார் பேராசிரியர் துரைசாமி!

    "என்னடா இப்படி சொல்லிட்டாரு? இப்ப என்ன பண்ண போற?" என மாரியப்பன் செல்வகுமாரை பார்த்துக் கேட்டான்! 

      அதற்கிடையே....

     இவர்களைக் கடந்து சென்ற சக மாணவர்களில் ஒருவன் "வகுப்புல ஒரு நாளும் பாடத்தைத் தவிர வேறு எதுவும் சந்தேகம் கேட்க மாட்டான்! இவன் எல்லாம் என்ன பேசிக் கிழிக்கப் போறனோ? "என செல்வக்குமாரைப் பார்த்து கைதட்டி நண்பர்களிடம் சிரித்தான்!

    எதுவும் பேசாமல் இருவரும் நூலகத்திற்கு வந்திருந்தார்கள்! வெகு நேரம் தேடிய பின்பு கிடைத்த புத்தகம் 'நொறுக்கப்பட்ட மனிதர்கள்' அதனைப் படித்த செல்வகுமார் முகத்தில் மின்னலாய் தலைப்பு தோன்றியது!

     ஆண்டு விழா பேச்சுப் போட்டியில் வென்ற புத்தகத்தையும், நாட்குறிப்பையும் செல்வகுமார் திறந்த போது கல்லூரி ஞாபகம் நிழலாடியது!

(முடிந்தது)

################################################

கதை 03

=========

பூத்தது வாழ்க்கை 

================

யாழிசைசெல்வா 

===============

      அந்தி வானத்தைத் துரத்திக் கொண்டு இருள் கவிழ்ந்து கொண்டிருந்த மாலை வேளை! வேப்பமரமருகே இருந்தது செல்லாயி குடிசைவீடு! 

     வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு மண்ணெண்ணெய் விளக்கைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் செல்லாயி மகள் மீனாட்சி! அலை அலையாய் பரவியிருந்த கருங்கூந்தல் முகத்தின் முன்னால் பரவி முத்தமிட்டு கொண்டிருந்தபோது "தாயி! அம்மா இல்லையா...?" என்றபடி வாயில் போட்டிருந்த வெத்தலையைக் குதிப்பிக் கொண்டே கேட்டாள் செல்லம்மா! 

      "வாங்க பெரியம்மா....! அம்மா வீட்டுக்குள்ளற தான் இருக்காங்க. செத்த பொருங்க...."என்றவள் வீட்டிற்குள் திரும்பி "அம்மா.... அம்மா..." என்றாள் மீனாட்சி! 

     "உள்ளாற தானே இருக்கேன்! அதுக்கேண்டி இப்படி கெடந்து கத்துற..."என்றபடி வாசலில் வந்த செல்லாயி, "வாக்கா.... இப்பத்தான் யேன் வீடு இருக்க நெனப்பு தெரிஞ்சதாக்கும்.... திடீர்னு அதிசயமா வந்திருக்கியே.... காரணமில்லாம வரமாட்டியே... சொல்லுக்கா..." என்றவள் திண்ணையில் அமர்ந்து கொண்டு செல்லம்மாவையும் கையைப் பிடித்து அருகே அமர வைத்தாள் செல்லாயி!

      சிறிது நேரம் மீனாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மாவைப் பார்த்து "என்ன? காணாததை கண்டது போல புள்ளையை அப்படி வெரச்சுப் பார்க்குற...? என்ன விவரமுனு சொல்லுக்கா?" 

       "நேத்து சந்தைக்கு போயிருந்தேன். அப்ப நம்ம தூரத்துச் சொந்தம் மகாலிங்கம் அண்ணனைப் பார்த்தேன்!" 

     "சரி! அதுக்கென்ன இப்ப?"என வெடுக்கெனக் கேட்டாள் செல்லாயி!

     "கொஞ்சம் பொறுடி, முழுசா என்னச் சொல்ல விடு!"

      "சரி சரி! நான் எதுவும் சொல்லல..."

      "மகாலிங்க அண்ணன் மகன் கருப்பசாமிக்கு ரொம்ப நாளா பொண்ணு தேடிக்கிட்டு இருக்க தா சொன்னாரு. ஒரு இடமும் நல்லபடியா அமையல. உனக்கு தெரிஞ்ச பொண்ணு ஏதாவது இருந்தா சொல்லுனு சொன்னாரு. உடனே மீனாட்சி பத்தி அவர்கிட்ட சொன்னேன்" என்றவள், செல்லாயி முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்! 

     "மகாலிங்கம் அண்ணே! ரொம்ப நல்லவருதான்! ஆனா என்னோட நெலமை உனக்குத்தான்.... தெரியுமில்ல...! அந்த மனுசன் போன பிறகு என் உசுர கையில புடிச்சு வச்சிருக்கதே மீனாட்சிக்காகத்தான்! அவள நல்லவன் கையில புடிச்சு கொடுத்துட்டா...." என்றவள் தேம்பி அழத் தொடங்கி விட்டாள் செல்லாயி!

     "இப்ப நீ எதுக்கு கெடந்து மனசப் போட்டுக் குழப்பிக்கிற, மகாலிங்க அண்ணனோட பையன் நல்லா படிச்சு, கை நிறையச் சம்பாதிக்கிறான்! எந்தக் கெட்ட பழக்கமுமில்லை! பெறகு உனக்கென்ன கவலை?"

     "நான் இருக்க நெலமையில மீனாட்சிய எப்படி கட்டிக் கொடுக்கப் போறேன்?"

     "மீனாட்சிக்கு ஏற்கனவே குடிகார சடையாண்டியோட கல்யாணமாகி அவன் கொடுமை பொறுக்க முடியாம, ஊரைக் கூட்டி சபையில வச்சு அவனோட வாழ்ந்தது போதுமுனு அத்து விட்ட நாளே நாளுல மகளுக்கு ஏற்பட்ட துக்கம் தாங்காமல் மீனாட்சி அப்பா இறந்தது எல்லாத்தையும் தெளிவாச் சொல்லிட்டேன். அது மட்டுமில்லாம கல்யாணத்த ஆடம்பரமில்லாம மாரியம்மன் கோயில்ல, நம்ம சொந்தக்காரங்களை மட்டும் அழைச்சு வச்சு நடத்துறதுக்கும் அவர் சம்மதிச்சுட்டாரு... இப்ப சொல்லு இதுல கவலைப்பட என்ன இருக்கு?" என்ற போது மீனாட்சி விளக்கேற்றியதில் வெளிச்சத்தில் வீடு நிறைந்திருந்தது!

     பூத்தது வாழ்க்கையென தாயும் மகளும் சிரித்தார்கள்!

    (முடிந்தது)


##################################################