கலையாத மௌனங்கள்
========================
ஓர் அதிகாலை நேரம்!
புள்ளிகள் ஒன்று கூட்டி
புதுக் கோலம் வாசலில் தீட்டிக்கொண்டே
எதிர் வீட்டு முற்றத்தில்
குட்டி போட்ட பூனையாய்
அங்குமிங்கும் நடை பயின்ற என்னை
வேல்விழியால் சாய்த்திறுந்தாள்...!!!
குளித்த தலையின் ஈரம் சொட்டியதில்
பூமிக்கு வேர்த்து விட்டதாய்
இடம் நகர்ந்து
அவள் இடது கையால்
குழல் நகர்த்திய போது
மேகம் விலகி
பூமிக்கு வந்த நிலவாகத் தெரிந்தாள்!
மருதாணி இட்ட விரல்களில்
பூமிக்கு மகரந்தம்
பூசிக்கொண்டு இருந்தாளோ என்னவோ
கோலத்துப் பூக்களின்
வண்ணம் அனைத்தும்
வானவில்லைக் குடித்து மலர்ந்திருந்தன!!!
தினமும் மாறும்
வானிலை போலே
அவளது கனவுகளுக்கு
கற்பனை சிறகு தந்து
வாசலில் கோலமாய்
உருவம் தீட்டியதெல்லாம்
என் இதயத்தோடு பேசிக்கொள்ளத் தான்
என்பதை எப்படி மறக்க முடியும்?
கருவாகி உருவாகி
காற்றோடு கதை பேசி
நேற்று கூட முடிந்து போன
கதையெல்லாம் பூ பூத்து
வீச்சருவாள் கம்போடு
வேலிப்படல் கடந்து
இல்லாத கௌரவத்தை
இருப்பதாகப் பேசிக்கொண்டு
வெட்டி சாய்த்த வாழை மரங்களின் சருகோடு
அவள் மீதான காதலும் முறிந்து போனதாய்
வீராப்பு பேசிய போதாவது மௌனம் கலைந்திருக்கலாமென
குருத்துக்களில் துளிர்த்திருந்த
வாழைக் கன்றாய்
என்னிதயம் இருந்ததை எப்படி மறந்தாய்?
காலங்கள் உருண்டோடி
இருளைத் துவைத்துக் கொண்டு
ஒளிர்ந்து கொண்டிருந்த
சித்திரை நிலவில் ஒரு நாள்
அரிதாய்ப் பார்த்த போது
கணவனோடு கடந்து சென்ற நீ
விழி மலர்த்தியது ஏன்?
சில மௌனங்கள்
கலையாமல் இருப்பதே
காற்றுக்கும் காதலுக்கும்
சாசுவாதமாக எழுதப்பட்டது போலும்....!!!
உடைந்த மௌனங்கள்
கலையாமல் இருப்பதே நன்று!
கவிஞர் யாழிசைசெல்வா
16/08/2025
No comments:
Post a Comment