Wednesday, 6 August 2025

முதலாளி - கவிஞர் யாழிசைசெல்வா

முதலாளி 

===========

கவிஞர் யாழிசைசெல்வா 

=========================

  

     முறைப்பொண்ணு கோபத்தோட மாமன் முகத்துல மஞ்சத் தண்ணி ஊத்தியது போல வீதி முழுவதும் வெயிலின் உக்கிரம் தாண்டவமாடியதில் கானல் நீர் காட்சி தந்தது. இதுக்கு மேல தேயிறதுக்கு செருப்புல இடமில்லனு தெரிஞ்சும் விடாம இழுத்து பிடிச்சமானிக்கு நடந்ததோட, இரண்டு கையிலையும் பெரிய பையத் தூக்கிக்கிட்டு வேகாத வெயிலுலேயும் ஓடத்தண்ணி மாறி பெருக்கெடுத்து உடம்பு முழுவதும் வேர்வைத் தண்ணி ஓடிக்கிட்டு இருந்தத ஒரு பொருட்டாவே நினைக்காம மாணிக்கம் ஒரு வழியா ஊருக்குள்ள நுழைஞ்சு அவன் வேலை பாக்குற மாரிச்சாமி கடைக்கு வந்து சேர்ந்திருந்தான். 


      ஊர் எல்லையிலிருந்த புளியமரம் ஊரோட அடையாளமா ஒரு காலத்தில் இருந்தது. மரத்துக்கு பக்கத்துல மாரிசாமி பொட்டிக்கடை ஒன்னு வச்சப் பிறகு காலப்போக்கில கடை பெருசாகி மளிகைக் கடையா மாறி இருந்தது. இப்ப எல்லாரும் மாரிச்சாமி மளிகை கடைய அடையாளமா சொல்ற அளவுக்கு கடையோட தேவை பெருகி இருந்தது. 


     மாரிச்சாமி மளிகை கடையில வேலைக்கு வந்து இந்த தை வந்தா ரெண்டு வருஷம் ஆகப்போகுது. வேலைக்கு சேரும்போது என்ன சம்பளம் வாங்கினோ அதே சம்பளம் தான் இதுவரைக்கும். கடையில விக்கிற பொருளோட விலை வாசி ஏறி இறங்கினாலும் அந்த காத்து மாணிக்கம் பக்கம் எப்பவும் வீசுனதே இல்லை. மாணிக்கமும் அது வேணும் இது வேணும் எப்பவுமே கேட்டது இல்லை. அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு சோலியப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படித்தான் அன்னைக்கும் பக்கத்து ஊர்லயிருந்து கடைக்கு வேண்டிய மளிகை பொருள வழக்கம் போல வாங்கிட்டு வந்தவன் கடை வாசலிலுலே பொருள வச்சுட்டு நிமிர்ந்தான். 

 

     "ஏன்டா மாணிக்கம்! இம்புட்டு நேரமா? அந்த பொருளை கொண்டு போய் உள்ளார வச்சிட்டு சீக்கிரம் வாடா.... கருப்புசாமி கடைக்கு பொருளை கொண்டு போய் கொடுத்துட்டு வரணும்.... ஏற்கனவே ரெண்டு தடவை பொருளைக் கேட்டு ஆள் அனுப்பி விட்டுட்டான். நீ வந்ததும் உன்கிட்ட கொடுத்து விடுரேன்னு சொல்லிட்டேன். நீ எப்ப வருவேன்னு அவனும் காத்துகிட்டு இருப்பான். மச மசனு நிக்காம வேலையப் பாரு. அரிசி மூட்டைக்கு பக்கத்துல அவன் கொடுத்த லிஸ்ட் வெச்சிருக்கேன். அதைப் பார்த்து அதுபடி எல்லாத்தையும் எடுத்து மூட்டை கட்டி கொண்டு போயி கருப்பசாமி கடையில கொடுத்துட்டு வந்துரு" கடையின் கல்லாப் பெட்டியில் உட்கார்ந்தபடியே கடுப்போடு மாணிக்கத்தை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான் மாரிச்சாமி. தலையில் கட்டி இருந்த உருமா கட்டை அவுத்து உதறி தோளில் போட்டுக்கொண்டு கடையின் வாசலில் வந்து நின்று கொண்டான். 


     மதிய சாப்பாடு சாப்பிடும் உச்சிப் பொழுது கடந்து மேலேறிக் கொண்டிருந்தது. மாணிக்கத்தை சாப்பிட அனுப்ப வேண்டும் என்ற நினைப்பு துளியுமில்லாமல் வெட்டி முறித்தது போல் வாசலில் நின்று சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான் மாரிச்சாமி. அப்போது பசி பொறுக்க முடியாமலும் வெகு தூரம் நடந்து வந்ததால் தொண்டை வறண்டு தாகம் எடுத்ததும் கடையின் வாசற்படி அருகேயிருந்த மண்பானையிலிருந்து சொம்பு நிறையத் தண்ணீர் எடுத்து மடமடவென்று குடித்தான் மாணிக்கம்.


   "மாணிக்கம்... சீக்கிரம் பொருளை எடுத்து வை. கருப்பசாமி திட்ட போறான்..." சொன்ன வேலையை செய்யாமல் நேரத்தை கடத்திக்கொண்டு மாணிக்கம் நிற்பதாக எண்ணியபடி மாரிச்சாமி சொன்னான். 


     "இதோ.... அஞ்சு நிமிஷத்துல எடுத்து வச்சிரேங்கையா...."


      "சரி !சரி !பேசிக்கிட்டே நிக்காத.... "


    லிஸ்டில் உள்ள பொருள்களை எல்லாம் எடுத்து மூட்டை கட்டி கடை வாசலுக்கு கொண்டு வந்தான் மாணிக்கம். 


    "எல்லா பொருளும் இருக்கா? அப்புறம் அதை மறந்துட்டேன் இத மறந்துட்டேன்னு சொல்ல கூடாது! கருப்புசாமி கிட்ட பொருளை கொடுத்துட்டு, போன வாரம் வாங்கிட்டு போனேன் பொருளுக்கு காசு வாங்கிட்டு வந்துரு. அவன் கிட்ட ஏற்கனவே நான் சொல்லிட்டேன். நீயும் கரராப் பேசி காசு வாங்கிட்டு வந்துரு. அவன் பாட்டுக்கு ஏதாவது சாக்கு சொல்லி இழுத்தடிச்சிடப் போறான்"


  "சரிங்கய்யா...." தலையைச் சொரிந்து கொண்டு சொன்னான் மாணிக்கம். 

 

    மாணிக்கம் என்ன சொல்ல வரப் போகிறான் என்பதை யூகித்த மாரிச்சாமி வேண்டுமென்றே வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டான்.


   "ஐயா..."என்றான் மாணிக்கம். 


    "பொண்ணு கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் கேட்டு இருந்தேங்க ஐயா.... பொருள் வாங்கிட்டு வந்த பிறகு தாரேன்னு சொல்லி இருந்தீங்க..."எனத் தயங்கிக் கொண்டே கேட்டான் மாணிக்கம். 


    "ஆமாம் மாணிக்கம். எனக்கு ஞாபகம் இருக்கு. வரவேண்டிய பணம் கொஞ்சம் சுணக்கமாக இருக்கு. இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள எப்படி நீ கேட்ட காசு வந்துரும்னு நினைக்கிறேன். வந்ததும் தந்துடறேன் டா.... கவலைப்படாம நீ போயி கருப்புசாமி கடையில பொருளைக் கொடுத்துட்டு அப்படியே வீட்டுக்கு போய் சாப்பிட்டு சட்டு புட்டுன்னு கடைக்கு வந்து சேரு. நீ வந்த பிறகுதே.. நான் போய் சாப்பிட்டு வரணும்"

    

    "சரிங்கய்யா...." மூட்டை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு கருப்பசாமி கடையிருந்த தெருவை நோக்கி நடந்து கொண்டிருந்தான் மாணிக்கம். 

(முடிந்தது)


கவிஞர் யாழிசைசெல்வா 

06/08/2025

கவிதைச்சாரல் சங்கமம் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுகதை இது.


     

No comments:

Post a Comment