Wednesday, 27 August 2025

ராஜ நிலா 01 - யாழிசைசெல்வா

அரங்கேற்றத்தில் அனர்த்தம் 

============================

இறைத்து விட்ட சோழி போல் வானக் கூரையெங்கும் வியாபித்து "மினுக்...மினுக்கென" ஒளியை பூமியை நோக்கிச் சிந்திய நட்சத்திரங்கள் ஒரு கணம்  திகைத்து அப்படியே நின்று விட்டது.


தில்லை நடராஜர் சிவாலயம்  முன்னாலிருந்த மேடையில்

"கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்ட

கனவென்ற வாழ்வை நம்பி

காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே

கட்டுண்டு நித்த நித்தம்

உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி

ஓயாமலிரவு பகலும்

உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது

ஒருபயனுமடைந்திலேனை

தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்

தாவரம் பின்னலிட்டு

தாயென்று சேயென்று நீயென்று நானென்று

தமியேனை இவ்வண்ணமாய்

இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது

இருப்பதுனக்கழகாகுமா?

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!" (நடராசப் பத்து என்ற பாடல் தொகுப்பில் மூன்றாவதாக அமைந்த பாடல் இது)


கணீரென்று ஒலிக்கும் பாடலுக்கேற்ப  பரதநாட்டிய முத்திரைகளை அபிநயத்தில் பிடித்ததோடு நாட்டிய திறமையால்  கூடியிருந்த கூட்டத்தை மெய் மறக்கச் செய்து கட்டிப்போட்டிருந்தாள் வண்ணக்கொடி!


அலைபாயும் கெண்டை விழிகள், காற்று கொஞ்சும் கார்கூந்தல், வெட்கம் ஒட்டிக் கொள்வதற்கு ஏங்கும் கனிந்து சிவந்த கன்னம், பாலாடை போல் பரவி மினுங்கும் சிவந்த அதரம்,  இலவம் பஞ்சுபோல் நூலாடையின் எடை தாங்காத சிறுத்த இடை,  முகிலை பெயர்த்துத் தளிர்களாக்கிய விரல்கள், பூக்களின் புன்னகையை வரவு செய்யும் செம்பஞ்சு குழம்பு  பூசிய பாதங்கள்! சித்திரத்தின் வண்ணங்களை மெருகேற்றும் சந்தனமும் குங்குமம் சரி விகிதத்தில் கலந்த கலிங்கப் பட்டுச்சேலையில், காற்றோடு மிதந்தபடி நாட்டியமெனும் கவிதையை நெய்து கொண்டிருந்தாள் வண்ணக் கொடி!


பாடல் அழகா? நாட்டியம் அழகா? இல்லை பாடலுக்கேற்ற இவளின் நாட்டியத்தால் பாடல் அழகானதா? என்ற விவாதம் கூடியிருந்த கூட்டத்தில் சன்னமாய்ப் பரவிக் கொண்டிருந்தது !


வண்ணக் கொடியின் ஒவ்வொரு முத்திரைகளும் அதற்கேற்ப அவளது விழியசைவும் உடல் மொழியும் ஒன்றாய்ச் சேர்ந்து மிரட்டியதால் நட்சத்திரங்கள் இமைப்பதை நிறுத்தி விட்டது போலும்!


தீப்பந்த வெளிச்சத்தில் ஒளிர்ந்த மேடையில் காற்றில் சுழன்று சுழன்று மிதந்தபடி வண்ணக் கொடியின் நாட்டியம் அரங்கேறிக் கொண்டு இருந்தது!  எத்தனை லாவகமாக அபிநயம் பிடித்து ஆடிக்கொண்டிருந்தாலும் அவளது ஒவ்வொரு துள்ளலிலும் விழியசைவிலும் ஒருவித தேடல் பரவி இருந்தது! அதனை அங்கிருந்த கூட்டத்தார் யாரும் கவனிக்க வில்லை! அதுவே அவளுக்கு மிகுந்த மன நிம்மதியைத் தந்திருக்க வேண்டும்.... அது அவளது வதனத்திற்கு கூடுதல் அழகைக் கொடுத்திருந்தது!


அதனை மேடையில் இடது புறமாக அமர்ந்து கணீரென்ற குரலில் பாடிக்கொண்டே, கூடியிருந்த கூட்டத்தை ஒரு கணம் நோட்டமிட்டு, வியப்போடும் மகிழ்வோடும் வண்ணக் கொடியைப் பார்த்தாள், அவள் தோழி அன்னமயில்!


"ஆகா! அற்புதம்...."மென பாடல் முடிந்தபோது குழமியிருந்த மக்கள் அனைவரும் கைகொட்டி மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவாரம் செய்யத் தொடங்கிருந்தார்கள்! ஒவ்வொரு வரியையும் சிலாகித்து பாடி வண்ணக் கொடியின் அபிநயத்தை தாமும் செய்து பார்த்தபோது, அது சரிவர அவளைப் போல் அமையவில்லை என்பதால் ஒருவரை ஒருவர் கேலி செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்!


அப்போது புளிய மரத்தின் பின்னால் இருவர் பதுங்கிருந்தார்கள்! ஆடலையும் பாடலையும் அதற்கு மக்கள் செய்யும் ஆரவாரத்தையும் கண்டு மிகுந்த வெறுப்பு அவர்கள் உடல் முழுவதும் பரவி இருந்தது! பற்களை இருவரும் நரநரவென்று கடித்ததோடு, தமது கைகளை தொடைகள் மீது ஓங்கிக் குத்தி ஆத்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள். உடல் முழுவதும் பரவிய வெறுப்பு கனலாக மாறியதோடு,  அவர்கள் மறைந்திருந்த இருளிலும் முகத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.


இருவரில் பரமன் மட்டும் சற்று முன்னால் வந்து "ஆகா... என்னவொரு நாட்டியம்! ஒவ்வொரு வரிகளுக்கும் அவள் பிடிக்கும் அபிநயம் கண்டு தில்லை நடராஜரே நேரில் வந்து வாழ்த்துக் கூறினாலும் ஆச்சரியம் இல்லை! அப்படி ஒரு அற்புதமான நடனத்தை அரங்கேற்றி விட்டாள்! இதுவரையில் இப்படி ஒரு நாட்டியத்தைப் பார்த்ததே இல்லை!  அதிலும் தில்லைவாழ் எம்பெருமான் நடராஜன் மீது பாடப்பட்ட பாடலை எத்தனையோ முறை உருகி உருகி பாடி உள்ளேன்! அப்போதெல்லாம் இல்லாத பேரானந்தம், இவள் நாட்டியத்தின் வழியாக அரங்கேற்றிக் கடத்திய பாவனையால் எனக்கு என்றுமே சிந்தை விட்டு அகலாது"  மெய்மறந்து சற்று உரக்கவே பேசி விட்டான்!


"அடேய் மூடா! அப்படி என்ன? காணாததை கண்டு விட்டாய்? இதுவரையில் நீ எந்த ஒரு நாட்டிய நிகழ்ச்சியும் பார்த்ததில்லையா? இப்படிக் கிடந்து உருகி உருகி உளறிக்  கொட்டிக் கொண்டிருக்கிறாய்..." பரமனைப் பார்த்து எரிச்சலோடு கூறினான் நாராயணன்!


"அண்ணே! நான் எத்தனையோ நாட்டியத்தைப் பார்த்திருக்கிறேன்! ஆனால் இதுபோல் நாட்டியத்தை பார்த்ததில்லை" மேடையில் ஆடிக் கொண்டிருந்த வண்ணக் கொடி மீது வைத்த விழியை அகற்றாது பார்த்துக் கொண்டிருந்தான் பரமன்.


"உனக்கு நாட்டியத்தை விட, அதை ஆடும் நங்கையின் மீதுதான் அதீத அக்கறை போல் தெரிகிறது! அதனால்தான் பைத்தியம் போல் அவளைப் பார்த்து உளறிக் கொண்டிருக்கிறாய்..."


"நீங்கள் கூறுவது ஒரு வகையில் உண்மைதான்! சொக்க வைக்கும் பேரழகு! எப்படி விழியை அகற்ற முடியும்! அத்தோடு பாடலுக்கு அவள் காட்டும் அபிநயமும், அவளது கெண்டை விழிகளின் துள்ளலும் ஒருங்கே சேர்ந்து என்னைக் கட்டிப்போட்டு விட்டது"


"இப்படி ஒரு பெண் பித்தனாக இருப்பாய் என நான் நினைக்கவில்லை! நினைக்கவே வெட்கமாக உள்ளது" முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தபடி கூறினான் நாராயணன்!


"அடப் போ... அண்ணே! இந்தச் குட்டி! என்னம்மா துள்ளுறா...! பாக்குறதுக்கே அவ்வளவு அழகா இருக்கா! அவ மேல வச்ச கண்ண எடுக்க முடியல.... உண்மையிலே இன்றைய ராப்பொழுது சுகமாத்தான் போகுது! இப்படிப் போகும்னு தெரிஞ்சிருந்தா.... கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கலாம். இந்தக் குட்டி எத்தனை நேரம் ஆடுவாளோ தெரியல... "  தீப்பந்தத்தின் வெளிச்சம் தன் மேல் படாதவாறு மிகுந்த எச்சரிக்கையோடு அடர்ந்து அகன்று கிளைபரப்பிருந்த புளியமரத்தின் பின்னால்  மறைந்து  நின்றபடி கூறினான் பரமன்!


"அடேய் முட்டாளே! மறுபடியும் உன் வேலையை ஆரம்பித்து விட்டாயா? எப்பொழுதும் இடம் பொருள் பார்த்து பேசும் யோக்கியதை என்றுமே உனக்கு இருந்ததில்லை! அதனாலயே நிறைய முறை அடி உதை வாங்கினாய்! இருந்தும் உனக்கு  திருந்தும் புத்தி  கிடையாதென்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறாய்! எப்பொழுதுதான் நீ திருந்துவாயோ தெரியவில்லை! உன்னைக் கூட்டிக் கொண்டு வந்ததற்கு நான் வெட்கப்பட்டு தலை குனியும் படி ஏதாவது செய்து தொலைத்து விடாதே! அதனால் தான் கூறுகிறேன்! சிறிதாவது ஒழுக்கமாக பேசக் கற்றுக்கொள்! இல்லையெனில் கூட்டத்தாரிடமிருந்து உதை வாங்குகிறாயோ இல்லையோ என்னிடம் வாங்குவது நிச்சயம்! பெண்களிடத்தில் எப்போதும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்! முதலில் அதற்கொரு பெரிய பாடத்தை உனக்கு கற்பிக்க வேண்டும்" புளிய மரத்தின் பின்னால் நன்றாக மறைந்து நின்றபடி பரமனை எச்சரித்துக் கொண்டிருந்தான் நாராயணன்!


"அண்ணே! இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கடந்து குதிக்கிற.... இந்தக் குட்டி நல்ல ஆடுறான்னு சொன்னது குத்தமா....?" என்றவன் வார்த்தையை முடிக்க விடாமல் "அடேய்! இன்னொரு முறை மரியாதை குறைவாக அந்தப் பெண்ணை பேசினால் நானே இங்கு கூடியுள்ள கூட்டத்தில் உன்னைப் பிடித்துக் கொடுத்து விடுவேன்! எச்சரிக்கையோடு இருந்து கொள்! இதுவே உனக்கு முதலும் கடைசிமாக இருக்கட்டும்" பல்லை நர நரவென்று கடித்தபடி கூறினான் நாராயணன்!


"சரிண்ணே! இனிமே அந்த மாதிரி சொல்ல மாட்டேன்" என்றவனை எதுவும் பேசாதபடி வண்ணக் கொடியின் நாட்டிய அழகு கட்டிப் போட்டதா? அல்லது நாராயணனின் எச்சரிக்கை இழுத்துப் பிடித்து நிறுத்தியதா...? தெரியவில்லை! அதன் பிறகு பரமன் வாய் திறந்து பேசவில்லை...


பாடல் முடிந்ததும் புறப்பட ஆயுத்தமானள் வண்ணக் கொடி! நாதம், மிருதங்கம், பக்கவாத்தியமென அத்தனை வாத்தியதாரர்களும் ஒருங்கே எழுந்தார்கள்!


"இந்தப் பாடலுக்கு மீண்டும் ஒருமுறை நடனமாட  வேண்டும்! இது எங்கள் தாழ்மையான விண்ணப்பம்" எனக் கூறிக் கொண்டே மேடை நோக்கி பட்டு வேட்டி சட்டையில் மிளிர்ந்து கொண்டிருந்த வயதான நபர் வண்ணக் கொடியின் அருகே வந்து விட்டார்.


"இல்லை ஐயா! நாங்கள் அனைவரும் புறப்பட வேண்டும்! மிகுந்த நேரம் ஆகிவிடும்! அப்புறம் எங்கள் பாடு பெரும் திண்டாட்டமாக போய்விடும்! வாய்ப்பிருந்தால் மீண்டும் ஒரு முறை நீங்கள் கேட்காமலே நாங்களே செய்திருப்போம்! தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள்!" சொல்லிக்கொண்டே வயதான மனிதரின் அருகினில் வந்திருந்தாள் அன்னமயில்!


"இங்கு நான் கூறியது எனது விருப்பம் மட்டுமல்ல! இங்கு உள்ள அனைவரின் விருப்பமும் அதுதான்! அதனை நான் உங்களிடம் வெளிப்படுத்தும் கருவி மட்டுமே! எனவே மறுக்காது நீங்கள் ஆடித்தான் தீர வேண்டும்! இது எங்கள் அன்பு கட்டளை! எம்பெருமான் நடராஜன் மீது அளப்பரிய காதலை உருகி  வெளிப்படுத்தும் இந்தப் பாடலும் அதற்கேற்ற நடனமும் இறைவனின் காலடியை இதமாகப் பற்றிக்கொள்ளும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குகிறது!" என்றவர் கூட்டத்தின் பக்கமாக திரும்பி "நான் கூறியது உண்மை என்றால் நீங்கள் அனைவரும் ஒரு சேர உங்கள் கருத்தை ஆமோதித்துக் கூறுங்கள்" கூட்டத்தைப் பார்த்து அவர் கூறியதும், கூட்டத்தார் முழுவதும் ஒரே குரலில் "ஆமாம் மீண்டும் ஒருமுறை நீங்கள் ஆடித்தான் தீர வேண்டும்" என சத்தமிடத் தொடங்கி விட்டார்கள். அதனைத் தொடர்ந்து "வேண்டும்.... வேண்டும்" என்ற குரல் பலமாக ஒழிக்கத் தொடங்கியிருந்தது!


மிகுந்த ஆவலோடும் அன்போடும் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் வேண்டுதலை புறக்கணிக்க முடியாமல் மறுபடியும் ஆடுவதற்கு ஆயத்தமானதும், வேறு வழியின்றி அன்னமயில் மீண்டும் பாடுவதற்கு தயாரானதும், நிலையை புரிந்துகொண்ட வாத்தியதாரர்களின் இசைக்கருவிகளின் இசை மிதந்த போது வண்ணக் கொடியின் நாட்டியம் மீண்டும் அரங்கேற்றமாகிருந்தது!


இம்முறை  முன்பு தவற விட்டிருந்தவர்கள் வண்ணக் கொடியின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் பார்த்தார்கள். இறைவனை உருகி ஆராதிக்கும் வண்ணக் கொடியின் பாவ அசைவுகள் தத்ரூபமாக எடுத்துக்காட்டுவதை எண்ணி ஆரவாரத்தில் குதித்துக் கொண்டாடிக் தீர்த்து விட்டார்கள்!  பாடலின் ஒவ்வொரு அடியும் கடந்து கொண்டிருக்கும் போது இன்னும் கொஞ்சம் நீளாதா? என்ற ஏக்கம் அங்கிருந்த அத்தனை பேரின் இதயங்களிலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது!


"எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே"என்ற இறுதி வரிப் பாடலுக்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தபோது மேடையின் இடதுபுறத்தில் அலங்காரம் செய்வதற்கும் ஆடை மாற்றிக் கொள்வதற்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டிருந்த ஓலை குடிசை திகதிகுவென பற்றி எரியத் தொடங்கி விட்டது! குடிசை அருகே இருந்தபடி நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த சில பேர் தப்பித்தால் போதும் என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள்! திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கூடியிருந்த மக்கள் கூட்டம் கல்லடிப்பட்ட தேனீ கூட்டம் போல் கலகலத்துப்போய் வெருண்டோடிக் கொண்டிருந்தது!


மேடையில்  பாடிக் கொண்டிருந்த அன்னமயிலும் வாத்தியம் இசைத்துக்கொண்டிருந்த இசை கலைஞர்களும்  எவ்வித சுணக்கமுமின்றி தொடர்வதையும் வெருண்டோடும் மக்கள் கூட்டத்தையும் கணநேரம் கூட கவனிக்காது இறைவனின் மீதான அளவற்ற பக்தியின் காரணமாக செவ்வனே பாடலின் இறுதி அடிவரை சரியாக இசைத்தும் பாடியும் துணை செய்ததால் வண்ணக்கொடி முத்தாய்ப்பாக தில்லை நடராஜனே வணங்கி எழுந்தவள் உடை மாற்றும் ஓலைக் குடிசை முழுவதும் பற்றி எரிவதைக் கண்டு அவள் விழிகள் துளிர்க்கத் தொடங்கியிருந்தன!

(நிலா வளரும்)






No comments:

Post a Comment