Sunday, 15 November 2026

வசியக்காரி - 24 முதல் 45

 24) மவுனம் ஒரு தவம்!

===================

மவுனம் 

ஒரு 

முடிவுறாத் தவம்!


சில பொழுதுகள் 

கட்டற்ற புன்னகையைச் சுறுக்கி

காலாவதியான கருணையின் கணக்கை

அது நேர்செய்து கொள்ளத் துடிக்கிறது!


சில பொழுதுகள் 

வழி துறந்த வலியின் வழியை

அது பிடித்திழுத்து

மடைமாற்றிக் கொள்ள எத்தனிக்கிறது!


புன்னகை தோய்ந்த மனிதர்கள்

கணக்கற்ற பொய்களோடு

காததூரம் கடந்த பின்

அவர்களின் காதுமடல் கவ்வி 

மவுனம் தன் ரகசியத்தை உடைக்கையில்

முடிவுறாத்தவம் கண்ட முனிவனின் பொய்யாய்

அது முடிந்து போனது!



#################!!!!#####


25) தூரத்தில் நிற்கிறேன்! 

===========================

முடிந்தும் முடியாத 

ஒரு கனவினை போல் 

என்னை நான் எனக்குள்ளே 

ஒழித்துக் கொள்கிறேன்! 


யாரேனும் அருகில் வந்து 

நலமா என்று கேட்ட போதிலும் 

வெகு தூரம் விலகி நின்று 

பதில் சொல்லாத பாவியாய் 

என்னைக் காட்டிக் கொள்கிறேன்! 


ஆம்

அழகாய் தம்மைப் புனைந்து 

அகில் சந்தன வாசனை மிகுதியில் 

நெருக்கத்தில் நின்றும்

அவர்கள் பலியிட்ட மனிதர்களின் 

வேர்வை வாடை 

என் சங்கை நெரிப்பதால்

எனக்குள் இத்தனை தூரம்..!


###########!!!!!!##########


26) முடிவுறாக் கனவு!

================== 

நான் 

ஒரு முடிந்தும் முடியாத 

கனவுதனை பிடித்திழுக்க

பெரும்பாடு பட்டு 

என்னைத் தவிப்பில் கிடத்துகிறேன்! 


நீ விலகிய நொடியை 

கடத்த முடியாமல் 

பொங்கும் கண்ணீர் திரைக்குள் 

அதனை பலியிட்டு 

என் ரணத்தின் ஈரத்தை

வெகு நாளாய் மறைக்கிறேன்! 


என்னுள் பிறவாத நதியின்

கால் தடம் தேடி 

காத தூரம் கடந்த பின் 

கற்சிலை வடிவிலான 

காதலாய்த் என் எதிரில் தெரிகிறது!


வெகுநாள் கடந்து வேதனை பழகிய பின் 

விரும்பிய உணவோ 

பழகிய நினைவோ 

பாலோ தேனோ 

எதுவென்று அறியாத 

மூன்றாம் நிலையில் முடிவுறாத கனவாய் 

தொலைவில் நிற்பது 

நீயென்று ஏற்க 

ஏனோ மனம் மறுக்கிறது!


இப்போதுதான் 

பலியான ஆடாய் பந்திக்கு வந்தது

நான் என்றும் தெரிகிறது! 


##################!!!!


27) அவள் பெயர் ஆம்பல்!

=====================

அவள் 

புதிதாக மலர்ந்த 

ஆம்பல் மலர் போல் அன்றிருந்தாள்!


பெயருக்கு கூட

மழை வராத நாட்களில்

குடையோடு காத்திருக்கும் 

தத்தியாய் அன்று சாலையோரம் 

நான் நின்றிருந்தேன்!


ஒரு கையில் துப்பாக்கியோடு

என் எதிரே வந்து

பிறக்காத புன்னகையை 

என்னிடம் பரிசாய்க்கேட்டதும்

அவளின் வெட்கத்தின் விரல்களை

துணையாய்க் கேட்டேன்!


ஓங்கிப்பெய்த மழையில்

நனைந்து நனைந்து

சேறு வழிந்த நிலம் முழுவதும் 

உன் கால்தடம் தீட்டிய கவிதையில்

என் பெயர் கோர்த்துச் சிரிக்கிறது 

புதிதாய் மலர்ந்த வானவில்!



##########################


28)சங்ககாலக் காதல் 

===================

சொற்களின் நோவுகளை

தூரி பிடித்துக் கொண்டு 

என்னுள் சன்னமாய் ஆடிக்கடந்தது 

அவன் வாராத நாட்கள்! 


ஊரை மறந்து 

உறவைத் துறந்து

உடன் போக்கில் தானே நாம் ஒன்றானோம்!


திரைகடல் கடந்து 

திரவியம் தேடும் வழியை மட்டும் 

உன்னுள் வழமையாய் கொண்டதேன்?


குதித்தும் கொப்பளித்தும் 

வெண்ணுரை பூசிய

கட்டறுந்த காலங்கன்றாய்

வறண்ட நிலமனைக்கும் பரவசத்தில் 

இறுகத் தழுவி

பிறவிப் பயன் போக்கும் 

பேரின்ப சங்கமத்தில்

கதிர்முற்றிக் காய்ந்து கிடந்த

நம் வாழ்வென்னும் பெரும் நிலத்தின்வாசம்

உன் காது மடல் தீண்டவில்லையா?


வறண்ட வானமும்

சுருண்ட நிலமும்

அதன் கருப்பையை நிரப்ப

ஏரும் போருமாய் எந்நாளும் உழலும்

உழுகுடி மாந்தன் அடிக்கும் உடுக்கைச் சத்தத்தில் 

சித்திரை பெருவிழாவின் காப்புக்கட்டுதலுக்குள்

சுருக்காய் வருவதென 

நீ சொன்ன சொல் நினைவில்லையா?


நீ உதிர்த்த சொற்கள் 

நிலம் சுமந்த நெல் மணியாய்

என் நெஞ்சில் எழுந்து

நாற்றாங்காலாய் நிற்பதை

எப்படி மறந்தாய்

என் ஆசை மச்சானே?


முனை மழுங்கிய கோடாரிகளாய்

என் காதுமடல் கிழித்துக்கொண்டு 

தினமும் இறங்குகிறது 

ஊராரின் ஏச்சுகள்!


நிறைபானைச்சோறில்

கருவாட்டுக் குழம்பு பிசைஞ்சு

உன் திசை தேடி 

நான் அனுப்பிய வாசம்

உன் இரைப்பை நிரப்பி

என் உயிரின் துடிப்பை 

உன்னுள் உணர்த்த வில்லையா?


நீயும் நானும் மட்டுமே கடந்துவந்த

பாதையின் சுவடுகளாய்

பெரு நிலத்தின் வறண்ட கோடுகளில் தாங்கி

வாராத மழை வருமென்று எண்ணியே

வானோக்கி பார்த்திருக்கிறாள்

என்போல் அந்த நிலமென்னும் நல்லாள்!


############################################


29) நினைவோ ஒரு பறவை!

=========================

உன் நினைவென்னும்

தீராத் தீக்கனவு 

என்னை துயரப் பெருங்கடலில் ஆழ்த்துகிறது!


உன் நினைவு மந்திரம் போல்

என் காதில் ஒலிப்பதால்

கவளம் கவளமாய் 

நான் உண்ட சோறு அனைத்தும் 

கடும் விஷம் போல் 

உள்ளே கிடந்து கசக்கிறது!


விசையோடு சுண்டிய பம்பரத்தின் 

சுழற்சியாய்

உன் நினைவு ஓர் பறவைபோல் எழுந்தும்

வாழ்வென்னும் தெளிவற்ற வானிலையால்

புறப்பட்ட இடத்திலே 

புதைந்து விட்டது!


நான் அனுதினமும் 

கிடந்து உன்னிடம் மன்றாடியதில்

மனம் சிறகொடிந்த பறவையாய்

சிறைப்பட்டு நிற்கிறது!


தொடுவானம் அழகுதான்

தூறல் மழை அழகுதான்

விடிவானம் அழகுதான்

விண்மீன் சிரிப்பும் அழகுதான்

கலையாத மேகமும் அழகுதான்

கவிதையாய் உன்னை எழுதுவதும் கூட

எப்போதும் பேரழகுதான் 

உன் நினைவென்னும் பறவை 

என்னுள் நீந்தும்போதுதான்

உன் குத்தீட்டிப் பார்வை

என்னைக் கொல்கிறது!


அதுவரை 

நினைவு ஓர் பறவையெனத்தான்

நானும் நம்பினேன்...!!



########$$#############


30)எப்போது வரும் என் கைகாட்டி மரம்?

======================================

எப்போது வரும் 

என் கைகாட்டி மரம்?


கொல்லையில் பூத்திருக்கும் 

மல்லிகைப் பூவின் வாசம் 

என் சிண்டு பிடித்திழுக்கிறது!


இருளை மிரட்டி 

எழுந்த நிலவு 

முற்றத்தில் கொடை சாய்ந்த 

என்னை நோக்கி 

கொள்ளென்று சிரிக்கிறது! 


எதிர்வீட்டு அடுப்பங்கரையில் 

பாத்திரங்களை உருட்டிவிட்டு

சாளரம் வழியாக குதித்து வெளியேறுகிறது

திருட்டுப்பூனை ஒன்று!


இருந்தும்....


இருக்கும் நிலையிலேயே 

அழுங்காமல் குலுங்காமல் 

அதிராமல் அரற்றி அழுகையில்

கொல்லையில் வைத்திருந்த அரளிப்பூ நோக்கியே

என் விழிகள் ஆலவட்டம் போடுகிறது!


இளங்கன்னி என் நினைவு 

எதிர் காற்றில் தேய்கிறது! 


என் புயல் கரை ஒதுங்கும் 

கரை தேடியே கரைகிறது 

என் புலராத காலங்கள்...!


எனக்கே எனக்கான 

என் திசையைக் காட்டிடும் 

கைகாட்டி மரம் எப்போது வரும்?


வசமாகும் பொழுதிற்காக 

நிதமும் வாசலில் காத்திருக்கிறது 

குலை தள்ளாத இந்த வாழை மரம் 

ஒரு கோமகன் வரவிற்காக...!!


####################################


31) நினைவுப் பாதை!

========================

உன் நினைவைச் சுமந்து கொண்டு 

கால் வலி தெரியாமலே

நான் வெகு தூரம் கடந்து விட்டேன்!


உன்னோடு கழித்து நாட்களை

முத்து மாலை கோர்த்து 

விண்மீனுக்கு பரிசளித்துவிட்டேன்!


நிலவின் புளகாங்கித

சிரிப்பு மழை காணூம்போதெல்லாம் 

என் விழியோரம் துளிர்க்கும் 

கண்ணீர் சரம் மட்டும் எனக்கு 

உந்தன் காணிக்கையாய் இருக்கிறது!


அதன்பின்

என் வாழ்வென்ற மரத்தை

யார் சாய்த்தால் என்ன

எனக்குத் தெரியவா போகிறது?


அன்பென்பது அறம்!

அதனை ஆதூரமாய் தாங்குவது ஓர் வரம்!


தொலைந்த மனங்களை 

இருண்ட இருளில் தேடுவதும்

அலைந்த பாடுகளை 

அதிராமல் கோர்த்து

வாழ்க்கை பாதைகளை

வலசையாக்குவதும் தானே இங்கு வழமை!


அதனால் 

உன் நினைவின் சுமையோடு 

நீள்கிறது என் பாதை...!


##########################


32) கிளி ஆற்றுப்படை!

====================

அவள் வாராத நாட்களில்

எனது கிழக்கின் திசை மட்டும் 

எப்போதும் போல் இருள்மண்டிக்கிடந்தது!


புளி மிட்டாய் கடித்த 

குறுகுறுப்பு லேசாய் அரும்பிநின்று 

அரவமில்லாமல் தோன்றி

அவளின் திசை நோக்கி

என் விருப்பத்தின் மனுவை 

வழி அனுப்பிக் காத்திருக்கிறது!


அவளின் இதழ் அசையாத புன்னகையை 

பிரசவிக்கத் துடிக்கும்

எதிர் வீட்டு ரோஜா

எதற்கும் என்னருகில் இருக்கட்டுமே...!


வடம் ஜல்லிக்கட்டு போல்

அவளை வலம்வரும் என் இதயத்தை ஏந்தி

ஒருநாள் அவள் ஒத்திசைத்ததும்

எங்கள் மணநாள் காணும் மார்க்கம் பிறக்கலாம்

அதுநாள் வரை

நான் கிளி ஆற்றுப்படை இயற்றி

அவள் ஜீவன் சமைப்பேன்!


######################################


33) பிரிவெனும் பெருநோய்...!

=========================

உன் பிரிவின் நெருப்பு 

பெரும் சுடராய் 

என்னை எரிக்கிறது!


நீ பிரியும் ஒவ்வொரு முறையும்

எளிதாய் ஒட்டிக்கொள்ளும்

காய்ச்சலின் சூடு

இப்போது அளவு கடந்து

என்னைத் தொலைவில் கூட்டிப் போகிறது

உன் பிரிவைப் போலவே..!


நீயின்றி கடக்கும்

ஒவ்வொரு மழைக்காலமும்

மறக்காமல் 

உன் பெயரை உச்சரிக்கும்

தொலைபேசி சிரிப்புபோல்

என்னைக் கொள்ளாமல் கொல்கிறது!


நட்பு,

துரோகம்,

பாசம்,

பரிவு,

பகை,

வஞ்சம்,

காமம் என

எல்லோரையும் ஏதோ ஒன்று கொல்வதைப்போல்

என்னை உன் பிரிவெனும் பெருநோய் கொல்கிறது!


##########################


34) என் விருப்பம் என்னும் வினாக்குறி?

======================================

ஒரு விடுமுறை நாளிற்கான

விருப்பம் போல் தான் 

என்னுள் நீ வந்து போனாய்! 


கசியும் கண்ணீரை வழியவிட்டு

கதவடைக்கும் சத்தம் கேளாமல் 

நெஞ்சை இறுக்கிப்பிடித்து 

இன்னும் எத்தனை நாள் 

வாழும் என தெரியாமலே 

வந்து போகிறது உந்தன் நினைவு!


ஒரு வெயிலில்

தலைகீழாய் வந்து விழும் 

பறவையின் நிழலாய் 

உன் படிமம் என்னுள் 

பதுங்கிக் கிடக்கிறது! 


உன் புதிர் விழிகளில்

உதிரா மை கொண்டு 

உன்னை என்னுள் ஊற்றியதால் 

விலகாத திரையாய் 

என் விருப்பம் வளர்ந்து

விடுமுறை முடிந்தும்

விடைபெறாமல் உன்னைச் சுற்றுவதை மறந்தாயோ?


ஏறு பொழுது போல் நுழைந்த நீ

இறங்கு பொழுது கடந்த பின்னும்

இடம் நகராமல் இருப்பதால்

என் கனவுகளின் தோணியில் கேட்கிறது

உன் கால் சலங்கையின் ஒலி!


என் விருப்பம் என்னும் வினாக்குறி

உன்னைப் பற்றுக் கோடாய் பற்றிக்கொண்டு

நீ விடையெழுதிடவே

விலகாமல் கிடக்கிறது!


#########################


35)கருப்பட்டிக் கன்னம்!

===================

அளப்பரிய அளவில்

அகண்டு விரிந்த

உலகின் சோதனைச் சாவடிக்கு முன்னால்

எவர் கண்ணுக்கும் தெரியாமல்

எப்படி கடத்திப் போனாய் 

என் இதயத்தை?


அதனால்

நெடு நேரத் தேடல்

நெடுந் தொலைவு பயணம் செய்தும்

நெஞ்சம் வேண்டுவது

உன் புன்னகை தானே?


சில நாட்களாக தொலைந்துபோன 

உன் முகந்தேடி அலைந்தவன் 

தெருமுனைக்கருகில் நிழலாய்ப் படரும்

ஓவியச் சிதறலில் 

உன் முகத்தைப் பார்க்கிறேன்!


எதுவெனத் தெரியாத

பழக்கமும் இல்லாத பாதைதனில்

நடந்து நடந்து கால்கள் தேய்ந்தபின்

எப்படியோ உருண்டும் புரண்டும் 

என்னிடம் கக்கடைசியில் வந்து சேர்கிறது 

உன் கருப்பட்டிக் கன்னத்தின்

குழி விழுந்த சிரிப்பு!


அடைபட்ட கதவினைத் தாண்டி

நீ அனுப்பிய முத்தம் சுமந்த காற்றைக்குடித்து

நான் காய்ச்சல் கண்டு 

கண்ணுரங்கவில்லை என 

உன்னிடம் எப்படிச் சொல்வேன்?


உன் நினைவுகளின் நெடி உயர்ந்து

கருக்கொண்ட மேகம் போல் பாய்விரித்து

பால்வெளி மண்டலம் தாண்டி பயணிக்கிறது

நீ ஒழித்து வைத்த புன்னகை காண...!


##############################################


36) என் வாழ்வின் பாதை!

=====================

என் எண்ணங்கள் இடறும்போதெல்லாம் 

எனக்குள் ஒரு வெற்றிடமாய் 

வந்து விழுகிறது ஒரு கவிதை! 


இலக்கற்ற இலக்கை 

இரு கை பிடித்து 

இழுத்து வந்து விடுகிறது 

நோன்பு மனம்! 


கருணையின் கொடி 

எப்போதெல்லாம் அவிழ்ந்து கொள்கிறதோ 

அப்போதெல்லாம் அடை மழையாய் 

நனைத்திடும் அன்பைத் தேடியே 

அரூவமற்ற கண்ணீர் 

என்னுள் அரும்பி நிற்கிறது!


பேசாத கதைகளோடு 

பேச்சற்ற உறவுகளோடு 

பேசிக்கொள்ளத் துடிக்கும் 

இதயத்தை எடுத்துக்கொண்டு 

பெரும் கூட்டத்தில் பேசுவதற்கு சென்ற வேகத்தில் 

பொறுமையற்று புறந்தள்ள பட்டதால்

இப்போதெல்லாம் இடம் நகர்ந்து கொள்கிறேன் 

உறவுகளோடு இருப்பவர் பேசட்டுமென...!


என் இறுதி உரையாவது

இலக்கைத் தொடுமா எனத் தெரியாமலே 

எப்போதும் போல் 

பயணித்துக் கொள்கிறேன் 

வழமை போல் பாதை தெரியாமலே..!


படிக்காத கவிதைக்குள் 

நிரம்பிய படிமமாய் நிற்கிறது 

என் வாழ்வின் பாதை!



######################


37) மெளனமே அழகு!

==================

எல்லாம் எளிதாக 

எல்லோருக்கும் அமைந்துவிட்டால்

எவ்வளவு நல்லது?

ஆனால் 

அப்படியொரு அதிசயம்

அமைவதுதோ 

அமைந்திட இயலாதோ

எல்லாம் யார் கையிலுமில்லை!


வெகு நாளாய் 

வெகு தொலைவில் 

தனித்து விடப்பட்ட

இருண்ட வீட்டின்

இரவுகள் எப்படி இருக்கும்?


அதுபோல்

வாழ்வின் சலனம் குறித்து

தெரிந்தவர் செல்வதும்

தெரியாதவர் விலகுவதும் எனச்

சடங்குபோல் நடக்கையில் 

எதுவும் இங்கே

இயல்பில்லை தானே?


புனைய மறந்த கதைகளாய் 

புதுமை சுமந்த நினைவுகளாய் 

இருந்திடவே 

இருக்கும் வாழ்வின் இலக்கணம் சொல்கிறது!


இருந்தும் ஏனோ

விலகாத துயராய் விருப்பங்கள் நிற்கையில்

இங்கு எதுவும் எளிதாய் நடப்பதில்லை தானே?


அவரவர் மெளனம்

அவரவர்க்கு அழகு!


தனிமையின் நிழல்

ஊதிப்பெருகி வளர்வதும்

பின் வாடி வதங்கிச் சுருங்குவதும்

வழக்கம் மறந்த வழக்காறு!


இடையில் 

அவுல்பொரியோடு கலந்த 

கடலையாய் இருந்திடவே 

அனைவரும் துடிக்கையில் 

இடராய் நுழைகிறது 

விதி என்னும் விடம்!


அதனால் 

மெளனம் தான் அழகென

மனமே நம்பு!



##########$$$$$##########


38) மனமென்னும்சோலை!

======================

எல்லாம் கடந்தபிறகும்

ஏனோ மனம்

இறுக்கத்தை இழுத்துப் பிடித்து

நிறுத்தி வைக்கிறது!


தானென்ற கர்வம்

உடையும் காலங்களில்

வீணேன்ற மாயை விலகிப் போகிறது!


துளியாய் விழுந்து 

நிரம்பும் குளத்தில் 

எது முதல் துளி என்பது

நீருக்குள் தெரியாது!


விழி முனையோ 

விலகும் மாயைகளை 

விடைபெறும் உறவாய் எண்ணி

வாழ்த்தி வழியனுப்பி வந்தனம் சொல்கிறது!


பொழியும் நிலவு!

படரும் பனி!

நகரும் நதி!

நடக்கும் தென்றல்!

பேசும் மூங்கில்!

கமழும் மலர்!

என காத்திருந்த காலத்தில்

கனியாய் நீ!

காதலாய் நான்!

அதனால் தானே 

நம்மிடம் கால் முளைத்தது காதல்!


இருந்தும் 

தடையாய் விழுந்த உனது தடுமாற்றத்தால்

தடமிழந்து கிடக்கிறது 

என் மனமென்னும்சோலை!


அதனால் 

எல்லாம் கடந்தபிறகும்

ஏனோ மனம் 

இறுக்கத்தை இழுத்துப் பிடித்து 

நிறுத்தி வைக்கிறது

உன் நினைவால்...!



########################


39) மார்கழித் திங்கள்!

===================

1)

தெருவெங்கும் கோயில் மணியை உலுப்பியதுபோல்

கலகலவென்ற சிரிப்புச் சத்தம்கேட்கும்

அந்த மார்கழி மாதம் முழுவதும்

உன் பெயர் சொல்லித்தான் 

இதயத்தின் கதவுகளை தாழிட்டுக் கொள்கிறேன்!


2)

எனக்கான கண்ணன்

எப்போது வருவான் எனத்தெரியாமலே

வாசல் முழுவதும் வளமான 

கண்ணன் கால்தடம் வரைவதோடு

எப்போதும்போல் கழிகிறது

அந்த மார்கழித் திங்கள்!


3)

இருக்கட்டுமென ஏற்றிவைத்த விளக்கு

விடியும்வரை அணையவில்லை

அவன் வரவிற்காக...!


4)

நீளும் இரவுகளால் 

உள்ளத்தில் நெருப்பு எரிவதால்

நீரோடையில் மிதக்கிறது என் இதயம்!


5)

வாசல் தெளித்து 

வண்ணமாய் கோலமிட்டு

அதில் வகையாய் பூசணிப்பூ வைத்ததும்

உள்ளம் ததும்பிக்கொள்கிறது

வாராத கண்ணணை எண்ணி!


இன்னும்... இன்னும்... 

எத்தனை நாட்களுக்கு

இறுக்கி முடிந்த இதயத்தை

பாகாய் இளக்காமல் 

பார்வையில் பூ வளர்க்காமல்

கொல்லையில் குழுங்கி அழுதே நீள்கிறது 

சந்திக்கு வராத ராதையின் வழக்குகள்!


வாராத கண்ணனால் 

வழங்காத நீதியால் 

பெண்ணெனும் கங்கை பிரவாகமெடுத்து

புதிய பாதை தேடி பயணம் நடக்கிறது!


இனி கண்ணன்கள் காத்திருக்கட்டும்

ராதைகளின் வரவிற்காக...!!


அதோ புதிய பெண்ணியத்தின்

பூபாளம் ஒலிக்கிறது 

மார்கழி மறந்த மகிழ்ச்சியில்...!!


#####################################


40) செந்தூரப் பூவே!

==================

என் வாழ்க்கை 

புதிதாக அச்சிடப்பட்ட புத்தகம்போல்

யாரும் வந்து பிரிக்காமல்

அப்படியே தான்

வெகு நாட்களாக அங்கேயே இருந்தது!


மடிப்பு கலையாத

பொன்னிறச்சேலைகட்டி 

மான்போல் துள்ளி நடந்து

மருதாணி பூசிய பூங்கரம்தனை வீசியபடி 

எட்டிப்பறந்த வண்ணத்துப்பூச்சியை தொட்டுக்கொள்ள

நீ துடியாய் எழுந்து

துறத்திப் பிடிக்க முயன்று 

தோற்றுப்போய் துவண்டு சிரித்த 

உன் வேடிக்கை பார்த்த நாள் முதலாய்

என் வாழ்வென்னும் புரட்டாத பக்கங்கள் முழுவதும் 

உன் பெயரே ததும்பி வழிகிறது!


நமக்கென யாருமற்ற பொழுதுகளோடு 

உழலும் வாழ்வு தன்னை தள்ளி நகர்த்தும்

மாய விளையாட்டு இப்படித்தான்

அறிதாய் நடக்குமென 

அப்போது நான் அறிந்திருக்கவில்லை!


எனக்கான விடியல்

எனக்கான நிலவு

எனக்கான காதல்

எனக்கான வாழ்வென

எல்லாம் எனக்கானதாகவே

இப்பூமியில் பிறந்தது என்ற நம்பிக்கையோடு

நான் பறந்து திரிகையில்

நாள்காட்டியில் நாட்கள் தேயும் 

மாயம் நடந்தது!


பறக்கப் தெறியாத வானில்

பிடிக்கத் துடித்த கிளியோடு

என் காதல் அன்று

மிக உயரத்தில் பறந்தது!


என்ன கிழமையென்று தெரியாத நாட்களில் 

புரியாத வேண்டுதல்களை

அறியாமல் அசடு வழிந்துகொண்டே

அரங்கேற்றம் செய்து

உன்னிடம் சரியாய் அகப்பட்ட சங்கடத்தின்போதுதான்

நான் புதிதாய் பிறந்தேன் என

உன்னிடம் எப்படிச் சொல்வேன் என் இளமயிலே?


சில விருப்பங்கள் அப்படித்தான் 

வினா அறியாத நுட்பத்திலும்

விடை தெரியாத குழப்பத்திலும் நடந்து விடுகிறது!


என் வாழ்வென்னும் பாலை செழிக்க

சிருங்காரத்தேனை விழி வழி கடத்திய 

என் செந்தூரப் பூவே!


அறிதாய் மலரும் குறிஞ்சிப்பூ போலில்லாமல்

என்னுள் எளிதாய் நுழைந்த ஏகாந்தம் நீ!


என் வாழ்வென்னும் பேழையில்

புதிதாய் நுழைந்த பேரானந்தம் நீ!


அதனால்

எனது புரட்டாத வாழ்வின் பக்கங்களில்

புன்னாகவராளி பண் இப்போது புதிதாய் ஒலிக்கிறது!


இனி யாரிடம் எப்படிச் சொல்வேன்?

என் வாழ்வு.... புரட்டாத புத்தகமென...???


##################################


41) மைனா!

==============

தவறவிட்ட நிதானங்களோடு 

வெகு தூரம் கடந்து நிற்கிறேன்.!


பழகிய நிலத்தில் 

பாதுகாப்பற்ற உறவு 

பயனற்று போனபின்

நடுக்கத்தோடு வந்து அருகில் அமரும் 

மைனாவின் கண்களில் வழிகிறது கருணை!


அதிரும் வெடி சத்தத்தில் 

விருட்டெனப் பறந்த மைனா

என் தனிமையின் நிழலுக்கு 

இறகைத் துணையாய் விட்டுப் போனது!


என் தனிமை என்பது 

மைனாக்கள் மட்டுமே அறிந்த 

மௌன மொழி! 


###################################|####


42) என்னை அறிந்தால்..!

======================

என்னைப்பற்றி உன்னிடம் 

எப்படிச் சொல்வது?


நாள்தோறும் 

நீ வரும் வழியில் 

பொறுமையோடு காத்துக்கிடக்கும்

வெயில் என்பதா...??


நாளெல்லாம் சலிக்காமல்

சலசலத்துப் புரண்டு ஓடி

சரிகமபத நீயென

சரணாகதி மந்திரத்தை

சமர்ப்பணம் செய்யும் நதியென்பதா...?


குளுகுளுவென நகர்ந்து 

உன் கூந்தல் இழை கோதி

பகலெல்லாம் போதாகி

மாலையில் மலரும்

மனோரஞ்சிதம் என்பதா...??


எது நீ

எது நானென்ற இடைவெளி எரித்து

உன் இதழிவழி பிறக்கும் 

முதல்மொழிக்காகவே

என்னிதயம் துடிப்பதை

எப்படி உரைப்பேன் என் அன்பே?


சில மெளனம் கலையாமலும்

சில மெளனம் உடையாமலும் இருப்பதே

சகலர்க்கும் சரியாய் இருக்கையில் 

எந்தன் சமாதானக் கொடிகள் 

உயரப் பறப்பதில் வியப்பென்ன உனக்கு?



#############$##########


43) வசியக்காரி!

===============

இருளுக்கும் விடியலுக்கும் இடையிலான 

கருக்கல் பொழுதில் 

நீயும் நானும் 

ஊரிலிருந்து விடைபெற்றோம்!


யாரும் அணுகாத 

தொலைவின் தொலைவில் 

தொடு வானத்துக்கு அருகில் துளிர்த்த

தும்பைப் பூ நம் வாழ்வு!


வலுத்த உறவுகளுக்கு இடையே 

வதைபட்டும் உதைப்பட்டும் 

வளர்ந்தது நம் கனவு!


சுருக்கிட்ட கயிறாய்

வறுமையின் கரம் 

நம் வாயிற்றுப்பசியை இறுக்கியது!


இரக்கமற்ற காலம் 

இடி விழுந்த நிலம் போல்

உன்னைக் கொன்று என்னை வாழ விட்டது!


தூறல்களுக்கு பின்னே 

தோன்றும் வானவில்லாய் 

நீ இருந்தாய்!


நிலவற்ற நாட்களில் 

உன் கைத்தடம் பற்றிக் கொண்டு 

வானேகிப் பார்க்கிறேன் 

உன் வணங்காமுடிச்சுருளைப் பற்றி இழுக்க..!


நீ உதிர்த்த சொற்களை மாலையாக்கி 

மந்திரம் போல் ஜெபித்து 

என் காய்ந்த மனதிற்குள்ளே

ஒரு கவிதை வடிக்கிறேன்..!


நிலையற்ற பொழுதொன்றில் 

நீர் சுமந்த வானம் 

யாவருக்கும் பொதுவாய் 

மழையாய் இறங்கி 

என்னை முத்தமிட்டது 

நீயென்று அறிவேன்!


துக்கத்தின் சுமையோடு

தொலைதூரம் கடந்தபின்னும்

தொலைய மறுக்கிறது 

என் பயணம்! 


சமூகத்தின் பாடுகள் 

வசியக்காரியென

என் மீது சாட்டையாய்ச் சொடுக்கும்போது

இரு புருவங்களுக்கு மத்தியில் 

நீ தீட்டிய திலகம் 

நீ இல்லாத போதும் 

கர்ணன் தந்த கவசமாய்

என்னைக் காக்கிறதென 

உன்னிடம் எப்படிச் சொல்வேன்?


############$$$#########


44) பரிசுத்த பரிசு!

===============

இந்த உலகில் 

எதுவும் எளிதாய்

எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை!


சிலநேரம்

தன் விருப்பங்களை கொன்று

பிள்ளைகளைப் பேணும் தாயாய்மாறும்

தருணம் நடக்கும் என்பதை

எப்போதும் மறவேன்..!


தெருமுனை ஓரத்தில் 

பூக்கடை வைத்துள்ள செல்லாயியம்மாள் பாட்டியிடம்

ஒருநாளும் பூ வாங்காமலே 

நான் தினமும் மாலையில் கடக்கும்போது

மறவாமல் என்னை நோக்கி 

புன்னகை அனுப்புவதை 

அவள் மறந்ததேயில்லை!


மாதக் கடைசியில் 

தேதி கடந்தபின்பும்

எதுவும் கேளாமல் எப்போதும் போல்

பாலூற்றும் மாரியப்பன் அண்ணனுக்கு

மருந்தாய்க்கூட அவரிடம் 

மன்னிப்பு கேளாத 

என் மனநிலை குறித்தும்

நான் மறுங்கியதும் இல்லை!


மாதத்தின் முதல் தேதியில்

மறக்காமல் வீட்டு வாடகை தந்தும்

மனிதனாய் கூட

மதிக்காத இடத்தில் 

கடந்த ஏழு வருடமாக

வசிக்கும் நிலையில் தான்

என் ஜீவனம் இருக்கிறது!


யாரும் கடக்கமுடியாத 

பாதையில் பயணித்து

இரவோ இருளோ

எதுவும் புரியாமல்

எதிர் நீச்சல் அடித்து

இன்னுயிர் வளர்க்கும்

ஒப்பற்ற வாழ்வின் உன்னதப் போராட்டம் 

ஒவ்வொருவர் வாழ்விலும் 

ஒரே மாதிரி நடப்பதில்லை!


வேண்டும் விடுதலை 

வேண்டும் நேரத்தில் 

அனைவருக்கும் சமமாய்

அமைந்து விட்டால்

வாழ்வின் பொருள்

அனைவருக்கும் வசப்பட்டு விட்டால்

ஆண்டவன் தேவை எதுவும் 

இவ் அவணியில் அவசியமில்லை!


அதனால்தானோ

அப்படியொரு அதிசயம் 

இங்கு அரும்பியதே இல்லை!


நாளெல்லாம் வதைபட்ட எனக்கு

அதிகாலை அமைதியில்

பால்கனியில் அமர்ந்து 

விடிகாலைச் சூரியனை வட்டமிடும் வண்டாகமாறியே

சூடாக பருகிடும் 

ஒரு குவளைத் தேனீர் சுகமே

என் அன்றையத் தேடலுக்கான

விட்டமின் மாத்திரை!


சற்று நேரம் மட்டுமே அமையும்

இந்த விடிகாலையில் 

எனக்கான பொழுதென்பது

பால் வடியும் குழந்தை 

பரிசாய்த் தந்தனுப்பும்

பச்சை முத்தத்தின் வாசனைக்கு ஒப்பா

னது!


பால் வடியும் குழந்தையின்

பரிசுத்த முத்தங்களே 

பாவங்களைத் தீர்க்கும்...!


அந்த குழந்தை மனம் வேண்டியே

தினமும் கும்பிடுகிறேன்

என்குலசாமி வழிவிட்ட அய்யனார் சாமியை..!


########################

45) முழுமதி!

===========

கணம் நேரம் தான் 

நிகழ்ந்த சந்திப்பு 

என் காதோரம் கேட்கிறது! 


இருவருக்கும் இடையில் 

இடைப்பட்ட தூரத்தை 

உன் துப்பட்டாவின் நிழல் தொட்டு 

இணைத்து விட்டது!


அதுவரை அநாதையாய்

ஆருவமற்றுக் கிடந்த

ஆழிச் சங்கின் மனநிலை துவைத்துத்தள்ளி

என்னை மலர்த்திய முழுமதி நீ!


அதனால் 

நம் இருவருக்கும் இடையில் 

குறுமுகில் துளிர்த்த

நிம்மதி!


இருந்தும்

ஊரார் ஏற்றிய உலைத் தீயில் 

சருகுகளாய் தள்ளியதும்

சட்டென எரிந்து சாம்பலானது 

நம் காதல்!


கணநேரம் துளிர்த்து 

காலாவதியான புயல் மழையோ...?

முதல் மொழி எது எனத் தெரியாமலே 

மூச்சடங்கிய புல்லாங்குழலோ..?


இல்லை இல்லை...


எது வழி?

எது மொழியென

இமை வழி கடப்பதற்குள் 

இருள்வழி சேர்ந்த 

இலக்கண பிழை இது!


அதனால் தானோ 

பேச்சற்ற மௌனத்தை கடத்திப்

பேசுகிறாளோ முழுமதி!


No comments:

Post a Comment