61) இதழோவியம்!
=================
நினைவின் சுடர்
என்னை இழுத்துப் போகிறது!
யாருமற்ற பொழுதுகள்
யாருமற்ற கணங்கள்
யாருமற்ற திசை நோக்கி நகர்ந்து
காத்திருக்கிறது காதலோடு!
பொழுதிருக்கும்போதே மலர்ந்த
பாரிஜாத மலரின்
கணக்கு தெரியாமல்
கைப்பக்குவத்தில் செய்த
அதிரசம் ஒன்றை சுவைத்துக் கொண்டு
அலுங்காமல் வரும்
எதிர்வீட்டு குழந்தையின் கன்னத்தில்
கனிந்து வழிகிறது
நீ புனைந்த அனுப்பிய உதட்டோவியம்!
நீ நெடுங்காலம் வளர்த்து வைத்ததை
வனைந்தும் புனைந்தும் எழுதிய அனுப்பிய
உதட்டு ஈரத்தின் வடுக்களில்
உன் இதயத்தின் துடிப்பை
இடமாற்றித் தந்தாயோ
அதனில்தான் எத்தனை தவிப்பு?
நீ வரைந்தனுப்பிய
உதட்டு ஈரத்தின்
வடுக்களின் வழியேதான்
என் இதயம் நுழைந்தாய்
அதை உன்னிடம் எப்படிச் சொல்வேன்?
என்னைப் புறந்தள்ளி
இன்னொருவனோடு மாலை மாற்றிய பிறகு..!
######################################|###
62) ஒரு பருவம் பகை முடிக்கிறது!
===========================
அந்த மழைக்காலத்து வெயில்
கொடும் அரக்கத்தனத்தோடு
எல்லோரையும் தழுவிச் சிரித்துக் கொண்டிருந்தது!
எங்கிருந்தோ வரும் காற்று
பொழுதெல்லாம் புழுதிக் காட்டில்
உழைத்துக் களைத்துப்போய்
வியர்த்துக்கிடந்த உடலெங்கும்
நண்டு ஊர்வதுபோல்
கடந்து சென்றது!
கொடும் வெயில் கொல்ல
கொடையாய் மழை பெய்யாதா?
வனம் விட்டு இறங்கி
எங்கள் உலைவாய் நிறைய
ஒர் உழவு மழை பெய்யாதா?
என்ற ஏக்கம் மேலோங்க
எதிர்வரும் காற்றையெல்லாம்
கட்டித்தழுவி காடே மணக்க
ஒரு கனமழை வேண்டி
காத்துக் கிடந்தது கரிசல் நிலம்!
ஊர் பார்த்துக் கொள்ளவோ
உறவு பார்த்துச் சொல்லவோ
குறி கேட்டு நிற்கிறதோ
அந்தக் கோடை மழை?
மழை தின்ற இரவுகள் போய்
ஒரு மாமங்கம் கடந்துவிட்டது!
மாயங்கள் செய்யும்
மாமழை மட்டும்
மருந்தாய்க்கூட பெய்ய
மனமிறங்கவில்லை
ஆமாம்...
எல்லாம் அந்த
பொல்லாத எல்நினோ என்னும்
சாத்தான் செய்த சதிவேலை!
உருமாறும் உருவங்கள் மத்தியில்
பருவம் மாறாத
நம் தமிழ் நிலம்
கதியற்று விதியற்று
வினைமுற்றானது எல்லாம்
அறிவற்ற மனிதனின் செய்த
அடாத அறிவியல் சூழ்ச்சியால்
புவி வெப்பம் கண்டு
பாலையாய் நிற்கிறது!
நிலம் பொழுது
நீர் பூமி என
நித்தமும் பார்த்ததெல்லாம்
கானல் நீராய்க் கழிவதே
பிழையான வாழ்வின்
பெரும் சுமையாய் போனபின்
பசுமையாய் ஒளிரும் பகல் வெளிச்சம் அத்தனையும்
இன்று பகையாய் ஆனது
யார் செய்த பிழை?
வானோ
மண்ணோ
வகையாய் இருக்கும் வரையில்
வாடாது பூமி!
சரியாய்
சமமாய்
சகலர்க்கும் வழங்கும்
தாய்நிலமிங்கே வாடியபின்
நாம் வாழ்வது எங்கே?
பருவம் பகை முடிக்க
எல்நினோ
லாநினோ என்ற
படையெடுப்பில் நிற்கிறது
பூமி எங்கும் பாலை நிலம் படைக்க...!
####################################
63) இமை உளி!
=============
ஓர் மழை நாள் இரவில்
சொற்கள் அற்ற மௌனத்தை
என்னிடம் பரிசாய்த் தந்தது
அவளின் மீன்கொத்திப் பார்வை!
பின்பொருநாள்
காற்றின் முனை பிடித்து
நகரும் பட்டம்
வானம் முழுவதும் அளந்து
போர் முடித்த களைப்போடு கீழிறங்கி
அவள் மருதாணி விரல்களை
மருந்தாய்ப் பூசியது!
முந்தாநாள்
வெளிர் நிற மஞ்சள் வெயிலினால்
அங்குமிங்கும் அலைபாய்ந்து
துடித்த தும்பியொன்று
அவளின் தாவணியின் நிழலில்
தஞ்சமடைந்தது!
இன்றோ
எதன் வழி கடந்து
என் இதழ் வழி மொழிவதென்ற
இலக்கணம் உடைகிறது
அவளின் இமை உளியில்!
#############################################
64)மெளனத்தின் வாசம்!
=====================
அவள் மௌனத்திற்கு
மழையின் வாசம்!
அது
தவறவிட்ட கணங்களின்
தடுமாறிய சொற்களை
தாங்கிக் கொண்ட குளமாக இருந்தது!
மழை விட்ட பின்பு பூசிய
மருதாணியின் குணம்
அவள் வெட்கத்திற்கு உரியது!
விடியலின் போது
புலரும் பரிதியிடம்
அவன் வராத நாட்களில்
விடுப்பு கடிதம் கொடுத்து
வீட்டுக்கு அனுப்புகிறாள்!
துளியாய் தொடங்கிய
அந்த தூறல் மழைக்கு மட்டும்
பொது மன்னிப்பு கொடுத்து
துவண்டு நனைந்து
தன் துக்கம் மறந்த நினைவில் சிரிக்கிறாள்!
பொல்லாத சமூகத்திடம்
போதும் நடிப்பென
அவளின் அர்த்தமற்ற குங்குமம்
அடித்துப் பெய்த மழையோடு கரைந்தது!
அன்று பெய்த மழைக்கு மட்டும்
அவள் மௌனத்தின் வாசம்!
######################################
65)நினைவுகளை தழுவிக் கொள்கிறேன்!
===================================
உன்னைப் பிடித்த மறதி
என்னைப் பிடிக்க வேண்டி நிற்கிறேன்!
கூட்டிப் பெருக்கிய குப்பைகளை
சோற்றுக் கூடையில்
நிரப்பி வைக்கிறேன்!
வதக்கி வைத்த
தக்காளி தொக்கிற்குள்
புளி கரைசலை ஊற்றி வைக்கிறேன்!
பழைய சாதம்
ஊறுகாய் எடுத்து
பரண்மேல் பதுக்கி வைக்கிறேன்!
சலவை செய்த உடைகளை
உதறி எடுத்து
கொடிகளில் காய வைக்கிறேன்!
கொதிக்கும் சாதத்தில்
கூடுதலாய் சர்க்கரை சேர்த்து
வடித்து வைக்கிறேன்!
மாலையில் அலுவலகம் செல்ல
தெருவாசல் கடந்து நிற்கிறேன்!
வெட்கத்தின் பூக்கள் தொடுத்து
உனக்கு விண்ணப்பம் ஒன்று
அனுப்பி வைக்கிறேன்!
உடைந்த பானையில்
நீர் குடிக்கும் காகத்திடம்
உந்தன் பெயர் சொல்லி கூப்பிடுகிறேன்!
உன்னைப் பிடித்த
மறதி மட்டும்
என்னை பிடிக்க மறுப்பதினால்
இறந்த உன்னை இறுகப் பிடிக்க
எப்போதும் உந்தன் நினைவுகளைத் தழுவிக் கொள்கிறேன்!
############################################################
66) நீயென் வளர்பிறை!
===================
தேய்பிறை முடிந்த பின்னும்
என் வளர்பிறை மட்டும்
ஏன் தூரத்தில் நிற்கிறது?
நீ என்னிடம் கேட்பதற்கும்
உன்னை பின்னி எழுதிய
நிறைய கவிதைகள் உண்டு!
ஆனால்
யாரோ சிலர்க்கு
விடுப்பு கடிதம் போல்
உன் சிநேகத்தை பரிசாய்த் தருகிறாய்..!
புயல் மழை கடந்த
வெற்று நிலம்போல்
ஸ்பரிசமற்றுக் கிடக்கும்
என் பாலை மனதிற்கு உகந்தது
உன் புன்னகை தானே?
கடும் தவம்
கடும் சொல்
கடும் தண்டனை
இவற்றில்
எது ஒன்றும் வேண்டுமானாலும்
நீ என்னிடம் தரலாம்...!
உன் புன்னகை மருந்தைப்
நான் பூசியபிறகு
பிற வசியம் எல்லாம்
வக்கற்றுப் போவது வாடிக்கை தானே?
#######################################
67) உன் புன்னகை போதுமடி!
=======================
பழைய மௌனங்கள்
பாக்கி இருக்கையில்
நீ ஏன் எப்போதும்
புதிய மௌனங்களோடு புறப்பட்டு வருகிறாய்?
உன் பக்கத்தில் நிற்கும் பாக்கியமற்று
வெட்கத்தின் விளிம்பில் கிடக்கிறது
என் வீராப்பு!
பெரும் குரலெடுத்து
அழுதிடும் வல்லமை அத்தனையும்
யாரோ சிலர்க்கு
தாரை வார்த்த பின்
கடுகாய் நின்று காட்சி தருகிறது
என் வீரம்!
தொடு வானத்திற்கும் கீழே
சலம்பல் அற்று
நழுவி ஓடுகிறது
என் பால்யகாலத்தின் விருப்பம்!
கக்கடைசியில் முடிந்த முடிவாய்
உன்னிலிருந்து உருண்டு விழுந்திடும்
புன்னகை ஒன்றே போதுமான
மீண்டும் இரந்து நிற்கிறது என் இதயம்!
###########################₹₹₹₹₹########
68) கடைசி இலை!
================
அது கடைசி இலையென
அந்த மரத்திற்கு எப்படித் தெரியும்?
வானேகிய காற்றிற்கு
அந்த மரத்தின் கனிகளை
தொட்டுத் தழுவியதும்
மோட்சம் கிடைத்தது!
யாருமற்ற வழிப்போக்கனாய்
நெடும் பாதையில் நின்றிருந்த மரத்திடம்
அன்று வந்தமர்ந்து கீச்சிட்டது ஆந்தை!
கடும் கோடை
கடும் பனி பலகடந்த மரத்திற்கு
மருதோன்றி வைத்தது அந்திவானம்!
அந்த கடைசி இலை உதிர்ந்த பின்னும்
யாவருக்கும் பொதுவாய்
யாதும் மற்று நிற்கிறது அந்த மரம்!
########################################
69)துலக்கம்!
===========
யாருமற்ற தனிமையை
குடித்துக் குடித்து நிரம்பிய
பழைய பாடலின் முகப்பு வரியை
தாங்கி நிற்கிறது
அவள் மௌனம்!
அதன் தாள லயத்தில்
ஒலிப்பது எல்லாம்
யாரோ ஒருவரின் வருகைக்கு
வந்தனம் செய்வது மட்டுமே...!
குரு வட்டங்களாய்
பேருந்து இருக்கைகளில்
அவள் வரைவது எல்லாம்
யாரோ சிலரின் மனப்பிறழ்வு!
துளிவிட்டுத் தொடங்கிய
தூவானத்திற்கு தெரியும்
அவள் புன்னகையில்
எரியக் கிடப்பது பெருங்காடென்று...!
இருட்டுக்குள் விழுந்து கிடக்கும் இரவிற்கு
எது இடுபொருள் என
எப்படித் தெரியும்?
ஒரு துயர காலத்தில்
துலக்கமாய் தெரியும் புன்னகை மட்டுமே
அவள் கை நீட்டும் வேண்டுதல்..!
#######################################
70)கஸல்!
========
உன்னிடம் பழகத்தான்
என்னிடம் ஒட்டிக்கொண்டது
எத்தனையோ பொய்கள்?
ஆனால்
மேல் வரி நீயும்
கீழ் வரி நானுமென
நம்மிடையே சிரிக்கிறது
கஸல்!
###########################
71) எதிரொலி!
==================
உலர் காகிதம் என
பலர் என்னை உதறிய போதும்
நான் உண்மையை எழுதுகிறேன்..!
இருக்கும் பொய்கள் ஒன்று கூடி
பொழுது போக்காய் என்னை இழுத்து
போங்காட்டம் போடுகையில்
என் வியர்வையில் நனைந்த காகிதத்திற்கு
வினாவெனும் சிறகு முளைத்தது!
என் இறகுகளின் நீளங்களில் தான்
எத்தனைபேரின் வன்மங்கள்
இளைப்பாறிக் கிடக்கிறது!
என் கனவுகளின் கையெழுத்து மட்டும்
இன்னொரு கரமாய்
என்னுடன் இருக்கையில்
என் குரல் என்பது எதிரொலி!
##########₹₹₹₹₹#######################
72) ஏலேலோ...!
================
அப்படி என்ன அவசரமென்று
என்னிலிருந்து விடைபெற்றுச்சென்றாய்?
விடிந்தது முதல்
விட்டு விட்டு பெய்துவரும் மழை
வீட்டு முற்றம் தாண்டி அனுப்புகிறது
உந்தன் ஞாபகத்தை...!
அடித்துப் பெய்த ஐப்பசி மழைக்கு இடையில்
மாடிவீட்டு ஜன்னலோரத்தில்
குளிர் வாடைக்காற்றுக்கு தோதாய்
ஸ்ரீவில்லிப்புத்தூர் காராச்சேவு கொறித்து தின்ற
உன் நூதன அழகுதான்
என்னைக் கொள்ளை கொண்டது!
நீ தொடு
நான் தொடுவென
சடுகுடு ஆடி வரும்
தென்றல் காற்றும்
நமக்கிடையிலான இடைவெளிகண்டு
இறுமாப்பு கொண்டது!
ககனம் முழுவதும்
உலவித்திரிந்த மேகப்பொதிகள் எழுதிய
புனையா ஓவியத்தில்
உன் முகம் தெரிந்ததும்
நீ விக்கலிட்டு சிரித்த ஞாபக அலைகள்
என் நெஞ்சோரம் எழுந்து
ஏலேலோப் பாடுவதை
நான் எப்படி நிறுத்துவேன்
என் இளமயிலே?
நீ நதி என்றால்
நான் தடம்!
நீ ஒளி என்றால்
நான் வளி!
நீ விழி என்றால்
நான் ஓவியம்!
உன்னை வார்க்கும்
புனையா கவிதை முடியுமுன்னே
அப்படி என்ன அவசரமென்று
என்னிலிருந்து விடைபெற்றாய்..?
நீயற்ற வாதைகள் பெருகிப்பெருகி
வழியற்ற கடலாய்த் தேம்புகிறது
என் வாழ்வென்னும் விடியலின் கிழக்கு புலர்ந்திட
ஒரே ஒரு ஏலேலோ பாட்டு இசைத்திடு?
அப்போதேனும்
உன் பிரிவை மறந்ததாய்
நான் நினைத்துக் கொள்கிறேன்!
##############################₹₹₹₹₹₹₹₹######
73) இரு இதயம்!
=============
நம்
இருவருக்கும் இடையில்
ஏன் இத்தனை தூரங்கள்?
இமைப் பீலி கடந்து
இதயம் நுழைந்த
இமைக்கா நொடிகள்
மறுபடியும் துளிர்க்கும் முன்
நமக்குள் விழுந்தது
அந்த இடைவேளை!
இரு இதயம் என்பது
ஒரு கனவு
இரு இதயம் என்பது
வாழ்வின் திறப்பு
இரு இதயம் என்பது
காலம் கையளித்த சாத்தியம்
இரு இதயம் என்பது
காற்றின் சிக்குகளில்
கவிதை செய்வது
இரு இதயம் என்பது
ஒரு வலைக்குள் பூத்த வாடாமல்லி
இரு இதயம் என்பது
அரும்பும் முன் பூத்த மனோரஞ்சிதம்
இரு இதயம் என்பது
உறவுக்கும் பிரிவுக்குமான ஊடலை சுமந்தலையும் உபாதை
இரு இதயங்கள் என்பது
தொடு வானின் அழகும்
தொலைதூர நிலவும்
தொட்டுக் கொள்ளும் ஏகாந்தம்
இரு இதயம் என்பது
இழை இழையாய்ச் சேரும் யாழிசை
மொத்தத்தில்
இரு இதயம் என்பது
இரு உணர்வுகள் ஒன்றான ஓவியம்!
நதிதேடும் கடலும்
கடல் கூடும் நதியுமாக
காலம் விதித்த காட்சிப் பிழைதான்
இரு இதயம்!
####################################
74) பூங்காத்து திரும்புமா...?
=======================
முந்தாநாள் பெய்த
மழையின் ஈரத்தை சுவைத்தபடி
கரிசல் நிலம் கடந்து போகும்
புழுதிக் காத்துக்கு போர்வையாய்
அப்பாவின் வியர்வை வாசம்!
பூனைக்கு பயந்து
அடுப்பங்கரைக்குள் அலைந்து திரியும்
எலியின் முதுகில் அப்பிக்கொண்டது
அம்மா சமைத்த கறிக் குழம்பு வாசம்!
நிரப்பிய பல்லாங்குழிகள் தாண்டி
இறைந்து கிடக்கும்
புளிய முத்துக்களில் கவிழ்ந்து கிடக்கிறது
அக்கா விரல் தீண்டிய மருதாணி வாசம்!
திண்ணைச் சுவர் முழுவதும்
புள்ளியில்லாக் கோலமாய்
தொத்திக் கிடக்கிறது
அம்மாச்சி சொல்லாயியம்மாள்
வெத்தலை எச்சிலோடு
குதப்பிக் கொடுத்த முத்தத்தின் வாசம்!
இப்படித்தான்
இல்லாத உறவுகளின் நினைவுகளை
எப்போதாவது இட்டு நிரப்புகிறது
படிவாசல் தாண்டி நுழையும் பூங்காத்து!
#########################################
75)இலைச்சருகு!
===============
நாளெல்லாம் உழைத்து உழைத்து
காயத்தின் வடுக்கள் மிகுந்து
களைப்புடன் அமரும்போது
எங்கிருந்தோ பறந்து வரும் இலைச்சருகு ஒன்று
என் மடியில் விழுந்து புரள்கிறது!
புரளும் சருகு உரசியதில்
என்மேல் மரத்தின் ஈரவாசம்
இறுகப் பற்றி
இலையின் துடிப்பை
பிரதிபலித்துச் சொன்னது!
இறுக்கம் சூழ்ந்த உலகில்
எதற்கெனத் தெரியாமலே
எல்லாம் முடிகையில்
யாரைக் கவர அல்லது
எதனைப்பெற
இந்த மூட மனிதர்கள்
ஆடுபுலி ஆட்டத்தை
அவனியில் நடத்துகிறார்கள்?
காய்ந்த சருகிற்கு
என் மாய்ந்த கனவின் வாசம்
இடம் பொருள் அற்ற உலகில்
வரும்பொருள் தேடி
வானலியில் விழுந்திடும்
வண்டுகளின் நிலைதான்
இந்தக் கோமாளிகன் கொண்டாட்டம்!
இதெல்லாம் உணராத வரை
உயிர் இருந்தும் இல்லாத ஜடம்தான்
இந்த ஜனம்!
################₹₹₹₹₹#########₹₹₹₹₹₹₹
76) இதயச் சிறை!
===============
எல்லோருக்கும் பொதுவாய்ப் பெய்யும் மழை
உனக்கு மட்டும்
துணையாய் வருவது எப்படியென
நெருங்கிய சிநேகிதி
அடிக்கடி கேட்டு
என்னை அதிசயமாய்ப் பார்ப்பாள்!
ஒருகாலத்தில்
குளிரும் மழையும்
அவள் மருதாணி விரலின் தீண்டலின் வழியே
என்னுள் மாமழை பொழிந்ததை
அவளிடம் எப்படிச் சொல்வேன்?
புயல் காற்றின் அறுவடையையும்
வேனல் காற்றின் வெக்கையையும்
ஒன்றாய்ச் சுமந்த
என் இதயம் நிலம்
இன்று இற்றுப்போனதால்
வழமைமாறாத வான்மழைமட்டுமே
என் தனிமை தின்ன
தாய் மழையாய்ப் பொழிந்து என்னிதயம் நனைப்பதை
உன்னிடம் எப்படிச் சொல்வேன் இளமயிலே?
துயரங்களைச் சுமந்து சுமந்து
என் தூக்கணாங்குருவிக்கூடு
பாரவண்டி கவிழ்ந்த பள்ளத்தாக்காய் கிடக்கையில்
அதுவரை புறக்கணிப்பில் பதுங்கிய
உன் வேல் விழி இதயத்தில் பாய்ந்து
என்னைக் கூராய்வு செய்கிறது!
###############₹₹₹₹₹#################
77) சுடும் நிலவு!
==============
நாளெல்லாம் வியர்க்க வியர்க்க
வெயிலில் உழைத்து முடித்து
வீடு திரும்பி
ராத்தலாய் திண்ணையில் அமர்ந்து
விட்டம் வெறித்துப் பார்த்தும்
முடியாத சோம்பலை
ஒரே அடியாய் சாய்த்துப் போட்டது
தூரத்தில் துலக்கமாய் ஒளிர்ந்த வெண்ணிலா!
அழுகின்ற இரவுக்கு ஆறுதலாகவும்
ததும்பும் கனவிற்கு விடுதலையாகவும்
இருக்கும் நிலவே
வழிகின்ற என் வருத்தத்தை மட்டும் கொன்று
சுடுகின்ற நிலவாய் நீ எரிவதும் ஏனோ?
விரிந்தகன்ற வானக்கூறையில்
சுகமாய் கோடி நட்சத்திரம்
ஒளி உமிழ்ந்து சிரிக்கையில்
நிலவே நீ மட்டும் நெருங்கி வந்து
என் தனிமையின் நெருப்பில்
எரிதழல் இட்டு என்னை எரிப்பதும் ஏனோ?
தூவும் பனிக்கு
என் நேசத்தின் வாசம்
அதனால்
என் கனவுகளின் சுவற்றில்
அதன் ஈரத்தை விதைத்து
ஒத்தடம் வைக்கிறது!
சிணுங்கும் காற்றிற்கு மட்டும்
என் இதயத்தின் நாளத்தில்
அடைபட்ட துளைகளை அகற்றிடும் ஆசையில்
உன் இமைப்பீலியை கடன் கேட்டு
ரட்சித்து நிற்கையில்
தூவும் சாரலை துணை பிடித்து
உலவும் மயிலாய் நீ வருகிறாய்
வெண்பனி வீதியில்
பொன் ஊஞ்சல் பவனியில்
நம் காதல் ஊர்வலம் நடக்கையில்
என் அதிகாலைக் கனவு அத்தனையும்
சுவடின்றி பனியாய் மறைந்தது
சுள்ளென்று சிரிக்கும் காலைச் சூரியனின் ஒத்தடத்தில்...!!
###################################################
78) சுடர் முகம்!
============
துக்கத்தின் வடுக்களால்
துவண்டு கிடந்த என்னை
தூக்கிச் சுமந்து
வானத் தூரியில்
வலசை இட்டவள் நீ!
அழுந்தப் படிந்த
உறவுப் சங்கிலியில்
கணத்திற்கொரு கண்ணியாய்
காலம் காவு வாங்கையில்
உன் இடம் பொருள் தேடி
இதயம் நகர்ந்தே
அது இற்றுப்போனது!
பெறும் பிழையாய்
பேச்சிழந்த மொழியாய்
வழியற்று நகர்ந்து
அனைவரும் போக்கிடம் தேடி புறப்பட்டபோது
உன் திசை நோக்கி
திரும்பும் என் இதயக் காந்தத்தை
என் செய்வாய்?
துயில் வாசம் மறந்த
என் அனாதை கனவு
இப்போது அடங்கிவிட்டது!
உன் சுடர் முகம் காண
என் மூச்சு
நீ கடந்த பாதையில் நாண்டு விட்டது!
என் விழியின் மொழியோ
விதியின் தண்டனையில்
விருப்பத்தை பலியிட்டு
வேதனைச் சுடரேற்றி
விருந்து வைக்கிறது!
கதி நீயெனக் கவிந்திருந்தவன்
மதி மறந்து
மடல் திறந்து
கவிமாலை தொடுக்கிறேன் நான்!
நீ மயக்கம் தெளிந்து
என்மீது மணமாலை தொடுத்திடு
என் மனதிற்கினிய மாமயிலே!
#####################################
79) யாதோ...??
============
விழுகின்ற ஒவ்வொரு முறையும்
அடுத்த முறையாவது
வெகு ஜாக்கிரதையாக
நடக்க வேண்டுமெனத்தான் நினைக்கிறேன்
ஆனால் அது ஒவ்வொரு முறையும்
சரியாக சறுக்கி விழுந்த பின்னே தான்
எனக்கு அது தோன்றுகிறது!
சரி இருக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற
நட்பின் வாசனையாவது
நம்மை வந்துரசிச்செல்லாதா என்ற ஏக்கம் மட்டும்
நிறைவேறாமல் நிற்கதியாய்
என் பாதி வாழ்வு முடிந்தபின்பும்
அது அன்டாமல் போனதுதான் புரியவில்லை!
இடையிடையே
உறவெனும் சொந்தம் சொல்லி
தன் விருப்பக் கனாக்களின் விளம்பரத்திற்காக
என் முகவரி பெயர்த்து
அவர்கள் மூர்த்தமானதும்
சந்தடி சாக்கில் என்னைத் துறந்து
தூற்றித் துதி பாடிய கணக்கு மொத்தமும்
வாராக் கடனின் வாசலில் வரவானது!
எனக்கென பெய்த
மழை நாள் மட்டும்
மரணத்தின் வாசலில் மறைந்த பின்னே
என் விடியலின் கிழக்கை
யார் தருவார்?
யாவும் பிழையாய்
யாதும் தீதாய்
யாமறிந்த பின்னே
யாதும் யாதும்
யாதோ??
#######################₹#₹₹₹#######
80) சுடும் நெருப்பு
==============
எரிப்பதற்கும்
சுகிப்பதற்குமான
"காம" நெருப்பை
எங்கிருந்து கற்றாய்?
ஆலயத்தில் தீண்டும் போது வரமாகவும்
சுடலையாத் தீண்டும் போது சாபமாகவும்
நெருப்பே உன்னால் மட்டும் எப்படி
இந்த உள்ளே வெளியே ஆட்டத்தை
ஒரு சேர ஆட முடிகிறது?
உழைத்துச் சிவப்பேறிய
எண்சாண் உடம்பிற்குள்
நீ காந்தலாய் பிறந்த
காரியம் என்னவோ?
விஷக்கனி உண்ட விருட்சமாய்
விதவையின் உடலை மாற்றிய
உன்மத்தம் நீ!
கொட்டும் தேளாய் மாறிடும்
சநாதான சந்தையை
உன் அக்னி அருவி
எப்போது அடித்துச் செல்லும்
சுடு நெருப்பே??
தீர்த்தங்கள் தீண்டினாலும்
மூர்த்தங்கள் வேண்டினாலும்
முற்றிப் பழுத்து
முதிர்கன்னி மூச்சில் குடியேறி
தீராத பெருநெருப்பாய்
உன் ஆவி அடங்க மறுத்த காரணத்தை
காட்சிப் பிழையாய் தோன்றிக் காட்டிடு
சுடு நெறுப்பே?
ஊழ்வினையாய்ப் பிறந்து
பெண்ணை உறுத்திடும் நீ
வினைப்பயன் பெற்ற
திருமகன் ஆணிடம்
உந்தன் மறுமுகம் காட்ட மறுப்பதேன்?
தீராத விணையாய்
தீர்ப்பு முறிந்த பேனாவாய்
எத்தர்களின் எலும்பில்லாத நாக்குகளின் வழியே
அரங்கேறும் நாடகத்தை
எரிக்க மறந்த திரிபுறமாய்
நீ இருப்பதேன் சுடுநெருப்பே?
ஆதியாய்
அந்தமாய்
நீ அவனியில் அவதரித்த நாளிலிருந்தே
உன் தீக்கனிகள்
ஆணின் ஆணவத்தை
பொசுக்க மறந்த ஞாயத்தை
இப்போதாவது புலப்படுத்த
புதிய போர்க்கருவியாய் பிறப்பாயா
பொல்லாத சுடு நெறுப்பே??
மறை பொருளும் நீ
மறைக்கும் பொருள் நீ
உன் திருவருள் வேண்டி
மாதர் தம் உடலை தீச்சட்டியாய் ஏந்தி
நாளும் நகர்வலம் நடத்தி
உன் புலரா விழிப்புலத்திடம்
போக்கிடம் தேடுவது
உணராமல் போனதேன்
மாய்மால நெருப்பே?
இன்று நீ
அழிப்பதும்
அணைப்பதுமாய் பொலிவுறும்
"காம" பெரு நெருப்பே
உன்னால் கடைத் தேற்றம் கொண்டிடவே
நீ தீண்ட மறுத்த நாட்கள்
நாதியற்றுக் கிடப்பதை
அறிவாயோ மூட நெருப்பே?
முடிவிலி நீ
உன் தீ விழி பட்டால்
இங்கு தீர்ந்து போகும்
அநேகரின் சனி!
ஆதியில் கனன்ற அடர்நெருப்பே
உன் பேய்விழிப் பார்வைகொண்டு
புல்லர்களின் ஏடு அறியாச் சட்டங்களை
நீ எரிப்பது எப்போது?
உன் தீ நாக்குகள் நீண்டு
சிறை செய்யும் மந்திரங்களையும்
வதம் செய்யும் சமூகத் தந்திரங்களையும்
நீ முடக்குவாதம் செய்திடும்
அற்புத அரங்கேற்றம்
அவனியில் ஆவது எப்போது?
திரிபுரம் எரித்த சடையனிடம் கடன்பெற்று
சமூகத் தீங்கு எரித்திட
எரிதழல் ஏகுவாயோ
என் இளநெருப்பே?
சுற்றும் பூமியில் தீமைகள் வற்றுமளவிற்கு
சுகமாய்த் படரட்டும்
உன் விழி நெருப்பு!
அதன் நிழலிருந்தாவது
எழுந்து நடக்கட்டும்
புதிய நீதிகளின் பொன்னெழுத்து!
########################################
No comments:
Post a Comment