01) அன்பென்பது அழகிய முத்தம்!
================================
தீராத விடயத்தை
இறுகப் பிடித்து
கண்ணாடிக் குடுவைக்குள்
பதுங்க வைத்துப் பாதுகாப்பது
அவளுக்கு பழகிய ஒன்று!
இருக்கும் நிமிடங்களில்
வரைந்து அனுப்பும்
வரைவோலை மொத்தமும்
வாராக் கடனில் வரவாய்ச்சேர்ந்தபின்
புதிய கனவு இலகுவாய் நுழையும் சாத்தியம் அவளுக்கு எப்படித் தோன்றும்?
மழை நின்ற பின்
குடை தேடும் பாக்கியம்
அனைவருக்கும் இங்கே
அடிக்கடி நடப்பதில்லை!
விழுங்கிய விடம்
நிதமாக இறங்கி
ஆழ்நிலை கடந்தபின்
மருந்தாய்ப் பூசும்
அக்கறை வார்த்தைகளால்
ஆவதென்ன?
கொடும் கோடைகாலத்திற்கும்
நெடும் மழைக்காலத்திற்கும்
இடையில் இருக்கும் காலமென்பது
சில கருப்பு வெள்ளைக் காதிகங்களால்
எழுதி முடித்த வரைவுக் குறிப்புகள் அவை!
அவைதரும் முடிவுகளால்
சில ஆசிர்வாதங்களும்
சில அவமரியாதைகளும்
எளிதாய் வந்து எழுந்தருள்வதால்
பெரிய மாற்றங்கள் எதுவும்
அவளது வாழ்வில் அரங்கேறுவதில்லை!
நாளெல்லாம் வதைபட்டு வதைபட்டு
மறதியாய் பகலில் உலவிடும்
வெளவால் மனநிலையில்
திடிரென கிடைக்கும்
ஒரு பட்டுக்கம்பள விரிப்பென்பது
இறுதி யாத்திரையின்
அறிகுறிகள் நிரம்பிய அவதானிப்பு!
சற்றுநேரம் மட்டுமே
தோன்றி மறையும் வானவில்
பழகிய குழந்தை அனுப்பும்
அழகிய முத்தம்!
அதுபோல் அன்பும்
பிறர்க்குத் தருவதும் பெறுவதும் கூட
அழகிய முத்தத்தில் சேர்த்தி..!
########################
02) மன்னிப்பாயா...??
===================
எப்போதாவது நிகழுமே என்ற
என் எதிர்பார்ப்பை எல்லாம் தின்ற
உன் மௌனத்தின் கொடும்பசி
என்னை விட்டு வெகுதூரம் கடந்து விட்டது!
நீ சொல்லாத வார்த்தையின்
சுழல் மட்டும்
ஒரு கணநேரம் நின்று
சுடராய் ஒளி முகம் காட்டி
என் வாதையின் ரணத்திற்கு
மருந்திட்ட மாயம்போல்
எப்போதும் இருக்கிறது!
வெகுவாய் பழகாத
இருளின் கொடி மட்டும்
அலையில் ஆடும் படகாய்
அங்கும் இங்கும் நகர்ந்து
தன் கொடுங்கை காட்டிச் சிரிக்கிறது!
பழகிய வாசம் போல்
பரிதவிப்போடு நீ கடந்த பாதையில்
காத்து கிடக்கிறது
நீ புறக்கணித்த மனம்!
இமையற்ற மீன் போல்
இதயமற்ற நீ
என் இதயம் தின்றது ஏனோ...??
வலிகள் போதுமென
அலையலையாய் வந்து தீண்டும்
உன் நினைவின் சுடருக்கு
ஆகுதியாய் என்னைத் தந்துவிட்டேன்
மன்னிப்பாயா...???
###########!!!!!!!!#########
03) தூதுபோ செல்லக்கிளியே..!
==========================
வீட்டுக் கொல்லையில் கிணறு இருந்தும்
தெருமுனையில் இருக்கும்
அடிபம்பு அடித்து
தண்ணீர் பானை சுமந்த
என் தவத்தின் பயன் என்ன?
வனம் விட்டு இறங்கிய
வான் மழை போல்
குதித்துக் குதூகலம் கொப்பளித்துச் சிரிக்கும்
குழந்தைகள் பல உடனிருந்தும்
நான் தெருமுனை பார்க்கும்
தேவை என்ன?
கருப்பட்டிப் பணியாரம் இனிதா?
கனிந்து வழியும்
கன்னக்கதுப்பு இனிதா என
நீ கன்னம் கிள்ளியது கனவில்லையா?
வடம் வடமாய் நீளும்
குழந்தைகள் நடத்தும்
தொடர்வண்டி பயணத்தில்
நீயும் நானும்
தொற்றிக் கொண்டது பொய்யா...?
விடை காணா
என் கனவின் மீது
நீ விருப்ப வில் எறிந்ததும்
அய்யனார் கோயிலின்
ஆலமர விழுது தொற்றி
ஆளும் பேருமாய்
ஆடியது கனவா...?
நீ என்னுள் அரங்கேற்றிடும்
ஆலாபனை மட்டும் போதுமெனத் தீண்டும்
அந்தக் காற்றுக்கு என்ன பதில்?
எல்லாம் கனவெனவே
என்னை மாற்றிட
அதனால் அவனிடம்
தூதுபோ செல்லக்கிளியே..!
############$###############
04) கோதையின் குரல்!
===================
இருக்கட்டும் என
அனுப்பி வைக்கிறேன்
ஒரு புன்னகையை
யாரும் வந்து சேரும் வருகை தெரியாமலே..!
பழக்கத்தில் இருப்பதெல்லாம்
பாதங்கள் நோகாமல்
பணிவுடன் நடந்து
கிழமைகள் கடத்தும்
விரதங்களைச் சுமப்பது மட்டுமே
எனக்கென விதிக்கப்பட்டது!
துளி புன்னகையோ அல்லது
அது சுமந்து வரும் மெல்லிசையோ
துலக்கமாய்க்கூட
என் தூங்காவனத்தில்
தன் துகில் உரித்ததில்லை!
விருப்பங்களை எரிக்கும்
விதியின் கரங்கள்
நான் விரும்பாமலே
என்னைச் சூடிக்கொண்டு
தன் சுடர் முகம் காட்டியதில்
வாழ்வின் திருப்பங்கள் அனைத்தும்
தேர்தல் வாக்குறுதியாய்
என் பிணையின்றி என்னை விட்டு
எப்போதோ கடந்து விட்டது!
கொடும் கூற்றின்
சன்னதச் சக்கரங்கள் நீண்டு கிடப்பதால்
என் விருப்பம் திண்ணும் கொடும்பாவி எரிவது மட்டும்
யார் அறிவார்...?
தன்னை அறியாமலே தொடரும் நிழலாய்
என் நித்திரை மறந்த
கனவுகளின்கொடி இப்போது
அரளி மலர் சுற்றிச் சிரிக்கையில்
கோதையின் குரல் மட்டும்
எப்படி ஒலிக்கும்?
சடங்குகளை சலங்கைகளாய்
சுமந்து ஒலிக்கும்
சட்டாம்பிள்ளை மனிதர்கள் மத்தியில்
விளக்குகளில் எரிவது
பெண்ணென்னும் விட்டில் பூச்சி தானே?
நடப்பதும் கடப்பதும்
நாளும் கிழமையும் தான்
துடிப்பதும் மறைவதும்
பெண்ணின் இயலாமை தான்
என்ற பேச்சுகளின் மொழியில்
மது உண்ட மங்கையராய் இருப்பதாலே
இன்று புரட்சியின் கொடியில்
கோதையின் குரல்
நெருப்பாய் தெரிவது
ஆதி முதல் சுமந்த எரிமலையின் தணல் அதென
எரித்தே சொல்கிறது!
சில தணல்
எரிவதும் சிரிப்பதும்
அவரவர் விருப்பத்தின் மொழியில்
அவரவர் விழியின் வழியில் என
தீம் தரிகிட தீம் தரிகிட ஒலிக்கையில்
கோதையின் குரல் மட்டும்
தன் விருப்பங்கள் சுமந்த
கோபுரமாய் நிற்கிறது!
######################
05) உதிரும் கனவுகள்!
====================
மௌனத்தின் பூச்சுகளோடு
மெல்ல விடிகிறது
ஓர் புலர் காலை!
அடர்த்தியாய் நீண்டு
கொடி பிடித்துக் கிடக்கும்
கோபுரங்களின் வரிசையில்
நீண்டு இடம்பிடிக்கும்
எத்தனிப்போடு எழுந்திடும்
ஓர் வலசை பறவையாய்
நானும் பறக்கத்தான் நெடுநாள் ஆசை!
முற்றத்தில் முகிழ்ந்து
சிதறிச் சிரிக்கும்
பன்னீர் புஷ்பங்களின்
நறுமணக்கூட்டில் இடம் தேட நகரும்
எத்தனிப்போடு எழுகிறது
வாழ்வென்னும் பாலை நிலம் கடந்திட முடியாத
இந்த ஏழை மனம்!
துளிக்காற்றில் கூட
தும்பியாய்ப் பறக்கும் இறகுகளின் லாவகத்தை
கடன் கேட்டு காத்திருக்கிறது
கைப் பொருள் கண்டிடாத என் கனவு!
சிதில் சிதிலாய் சிதறி சிரிக்கும்
வானத்தின் மேகத்தூரிகையில்
எப்போது சேர்ந்திடும்
எந்தன் வண்ணம்?
சிரிப்பதும்
சில்லென பூத்திருப்பதை ரசிப்பதுமான
இந்த வானவில் மனநிலை
யாருக்கும் வழமையாய் வந்ததில்லை என்னும் போது
தீராத வட்டிக் கடனாய்
வறுமையின் சுமை வரவில் இருக்கையில்
எனக்குள் கனவு மட்டும்
எப்படி பிறக்கும்?
தொடரும் புயல் காற்றில்
இறகுகள் எழுப்பும் இசைப் பாட்டு
எங்கிருந்து கேட்கும்?
ஒரு கண்ணை மூடி
மறுகண்ணைத் திறந்து
எதிர்காற்றில் நீந்தி
உன்னோடு நானும்
உறவாடிக் கடக்கிறேன்!
மீண்டும் பிறக்கும்
விடியலின் முதல் தீண்டலில்
என்னைக் கொன்று
எப்போதும் போல் நடக்கிறேன்!
உதிரும் கனவுகளோடு
உறக்கம் கலைகிறது!
==============================
06) கடவுள் தந்த பரிசு!
==================
யாருமற்ற பொழுதுகளோடு
இருப்பது எத்தனை சுகம்?
ஒரு நல்ல மூகூர்த்தநாளில்
அடித்துப் பிடித்து ஓடியாடி
கிடைத்த உடைகளில்
பிடித்தவை எத்தனை இருந்தும்
பிறர் கவனிக்க வேண்டுமென்பதற்காக
வெகுநேரம்
வெகு பொருள் செலவிட்டு
பிடிக்காத கலரில் அமைந்த உடைகளில்
விலையுயர்ந்ததை மட்டுமே வாங்கி
வீம்புக்கு அணிந்து
பார்ப்பவர்களிடமெல்லாம் பகட்டாய் காட்டிட
பம்மாத்து செய்ததில்
மூக்குடைந்து
பேச்சிழந்து
மொய் விருந்தில் ஒருவாய் உண்ணாமல்
வெறுப்பைச் சுமந்து
களைத்துப்போய் காணமல் போதலென
எவ்வித நெருக்கடியுமின்றி
தொலைவின் தொலைவில்
நாமாய்த் தொலையும் அதிர்ஷ்டம் எல்லாம்
யாருக்கு வாய்க்கும்?
யாருமற்ற பொழுதுகள் என்பது
கடவுளின் குழந்தைகளுக்கு மட்டுமே
கடவுள் தந்த பரிசு!
###$$$$$$$###########
07) அனிச்சம் பூ!
===============
தூர கிழக்கில் தெரிகிறது
ஒரு தொடு புள்ளி!
கணக்கற்ற கதைகளோடு
நாள்தோறும் நடைபயின்று
அவை அனுப்பி வைக்கும் சேதிகளில்தான்
எத்தனை ஆலாபனை?
வெகுநாள் கழித்து
என் விருப்பத்தின் வழியில்
மலர்ந்து நிற்கிறது
அனிச்சம் பூ ஒன்று!
புறப்பட்ட வேகத்தில்
மேடு பள்ளம் அறியாமல்
காற்றின் சிக்கில்
முட்டி மோதி எழுந்து பறக்கிறது
என் மனமென்னும் காற்றாடி!
ஒருநாள் ஒரு கனவில்
வழிந்தோடும் நதி நீரில் மிதந்து வருகிறது
நான் பார்க்க மறந்த
உன் புன்னகை!
இதுவரை எழுதிப் பார்க்காத
உன் பெயரை
அந்தியின் வண்ணத்தில் குழைத்து
தீட்டிப் பார்க்கிறேன்!
என்னிலிருந்து விடுபடும்
ஒவ்வொரு மூச்சுக் காற்றும்
உன் கொடுபடா முத்தத்தில் சேர்த்தி!
தொலை துரம் நீண்டு கிடக்கிறது
நீயும் நானும் மட்டும்
கடக்க நினைத்த காலடித் தடம்!
அதோ அந்த
தூர கிழக்கில் தெரியும்
தொடுபுள்ளி மட்டுமே அறியும்
என் விடை காணாக் கனவின் விருப்பங்கள்!
###############################################
08) அழகிய பொய்..!
=================
மழைக்கு பிந்திய இரவானது
அவ்வளவு மகோன்னதமானது!
முழுமூச்சாய் பெய்த மழையில்
ஒரு குழந்தையைப் போல
குதூகலத்துடன் நனைந்து கிடந்து
ஊறிய பாதங்களை
அப்படியே உலர்த்தாமல்
செல்லமாய் தலை சிலுப்பியதும்
தெறித்துப் பரவும்
மழைத்துளியின் ஈரம் ஏந்தும்
சுவற்றின் வாசம் சுவைத்து
கனமாய் ஊடுறுவும்
குளிரின் கதகதைப்பைக் கவ்விக்கொண்டு
நட்டுவாங்கம் சொல்லாத ஜதியில்
உன் கால்கள் நடனமிடும்
அந்த கொள்ளை இரவு
எப்போது வருமென்ற ஏக்கத்தை
இன்றும் என்னுள் கடத்துவதை
நீ அறிவாயா ஆனந்தமே...?
மகோன்னத இரவின் மகிமை
மகோன்னதமான மனிதர்மட்டுமே அறிவர்!
நான் உன்னால் மகிமை பெற்ற
மாமனிதன்!
பிறகு எனக்கேன் இல்லை
அந்த மகோன்னதம்?
சில பொய்கள் சுடும்
சில பொய்கள் சுட்ட பின் கெடும்!
நான் உன்னால் கெட்ட
உருப்படாதவன் என்பதை
உன்னிடம் எப்படிச் சொல்வேன்?
இந்தப் பொய்யும் அழகானது
உயிரே உன்னால்தானே...!!
########################
09) எழுதப்படாத காகிதம் என்ன செய்யும்?
==================================
எழுதப்படாத காகிதம்
இங்கே இன்னும் இருக்கிறது!
வெறும்தாள் என்பது
விலகிய மனதின் குரல்
அது குறைந்த அலைநீளமுள்ள
நீல நிறத்தை காற்று வானில் சிதறடித்து
நம்மை சிறைபிடிப்பதற்கு ஒப்பானது!
விடைபெறும் உறவுகளும்
விலகும் தருணங்களும்
தாமாகவே வெள்ளை வண்ணத்தைச் சூடி
சமாதானச்சங்கை சகலர்க்கும் ஒலித்திட
சரித்திரம் தேர்வுசெய்த சமிக்ஞை அது!
சில காகிதங்களில்
விருப்பங்களோடு எழுதப்படுகிறது
சில விதிகள்!
சில காகிதங்களில்
மறைவான உண்மை அத்தனையும்
இங்கு தெரிந்தே புதைக்கப் படுகின்றன!
தேவைகளின் தேதியில்
இங்கு தெரிந்தவர்க்கு மட்டுமே
சமமாக பகிரும்
சடங்கு நடக்கிறது!
விரும்பாத கனவாய்
வேடிக்கை உறவாய் இருப்பவர் அனைவரையும்
புதைகுழிக்கு அனுப்பிடும்
புண்ணியம் அத்தனையும்
இங்கு தெரிந்தவர்வழியே
தேதி குறிப்பிடாமல்
கணக்குத் தீர்க்கும் காரியம்
இந்தக் காகித்ததின் வழியேதான் கடத்தப்படுகிறது!
குறைந்த அலைநீளமாய் இருந்தும்
அனைத்தையும் சிறைபிடிக்கும்
நொண்டி மனம் கொண்ட
குள்ளநரிகளின் கூட்டத்தில்
வெறும் வெற்றுக் காகிதம் தான்
பாவம் என்ன செய்யும்?
#######################
10) நினைத்தாலே இனிக்கும்!
=========================
உனக்கும் எனக்குமான
சந்திப்பு நிகழ்ந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன?
முதல்முறை சந்திக்கும்போது
கடற்கரைதனில் கிளிஞ்சல்களை பொறுக்கும்
குழந்தையின் குதூகலம் அதில் ஒட்டியிருந்ததாய்
என் ஞாபகப்பேழை சொல்கிறது!
திடும்மென சந்தித்த
திருவிழாக்கூட்டத்தின் நடுவேயும்
நீ பால் ஐஸ் சாப்பிட்ட நூதனத்தின் வழியேதான்
என்னுள் நுழைந்தாய்!
தோழியோடு சேர்ந்து
நீ குடை ராட்டினம் சுற்றியவேளையில்
நான் உன்னைச்சுற்றி
நீ யென் உலகம் என்ற நாட்களின் ஞாபகம்
என்னுள் நதியாய்த் தீண்டுகிறது!
உனக்கும் எனக்குமான
உறவின் சாட்சி என்பது
நீ அடிக்கடி ஆசையோடு
தூரி விளையாடிய
காளியம்மன் கோவில் ஆலமரம்
போன புயல் காற்றில் சாய்ந்ததுபோலே
நம் காதலும் யாருக்கும் தெரியாமலே
முடிந்து போனது!
நினைத்ததும் இனிக்கும்
நினைவுகள் எத்தனை இருந்தும்
நம்மைப் பிடித்த நினைவுகள் மட்டும்
ஏன் நெஞ்சில் பசைபோல் ஒட்டிக்கிடக்கிறது?
உன்னிடம் கேட்க நினைத்த
எத்தனையோ விடயங்களில்
இதுவும் சேர்த்தி..!
அவ்வளவுதான் வாழ்க்கையென
அடுத்த நாள் விடிகிறது!
##################.
11) தேவதையின் தேவதை!
=======================
வாழ்வின் திருமுகம்
எதுவெனத் தேடுவது
அனைவரின் இயல்பு!
வாழ்வான வாழ்வில்
ஒரு நாளேனும்
ஒரு நொடியில்
ஒரு தரிசனமாவது பெறவே
திருமுகம் கண்டிட
அயராது தேடித்தேடி
அலைந்து திரிகிறது இங்கு
அனேக ஏழை மனம்!
மாமழையாய் கொஞ்சிடும்
மழலை வடிவிலோ
தெருமுனை தாண்டாத
தேவதைகள் வடிவிலோ என
அவரவர் தேவதை
அவரவர் அருகிலே
அன்பு காட்டிடும் அதிசயமிருந்தும்
எங்கே என் தேவதை
எனத் தேடுவது எதன் பொருட்டு?
வாழ்வின் வழியில்
ஒரு கணம்
ஒரு காட்சி
ஒரு கவிதை
அதன் ஆயுளின் அடர்த்தி தீருவதற்குள்
ஆராதனையாய் ஏற்றுக் கொள்வதற்கு
எப்போது நம் மனம் இறங்குமோ
அப்போதே அருளாய் அணுகிடும்
நம் தேவதை!
நம் தேவதையின் தேவதை
நம்மிடம் தேதி குறித்து வருவதில்லை
தேவையென்று அறியாமலே
தினமும் திருமுகம் காட்டிடும்
அனைவரும் தேவதை!
#####################
12) இருளின் கதை!
==================
அவள் நீங்கிய இரவுகள்
இருளுக்குள் வழிந்தோடி
இணைந்து விட்டது!
எது மாயம்?
எது நியாயம்?
என்று உணர்வதற்குள்
எல்லாம் முடிந்த உறவாய்
காதல் காற்றிடம்
இறுதி உரை வாசிக்கிறது!
எல்லாப் பயணமும்
எங்கோர் இடத்தில் முடிந்தே தீரும்
எல்லா நிகழ்வும்
ஏதோர் உரையில் முடிந்தே தீரும்
வாழ்வின் பயணமும் அதுபோலவே
இருளில் பிறந்து
இருளுக்குள் கலந்தே இனிதாய் முடிகிறது!
###########!!!!!!!#######
13) எது மெய்?
=============
நான் என்னும் மெய் மறந்து
காற்றில் அலைந்திடும்
ஓர் எளிய துண்டு போல்
இருந்திடத்தான் என்னாலும் ஆசை!
ஆனால் களித்திடவும்
கனமாய் அணைத்திடவும்
காத்துக் கிடக்கிறது
சிற்சில காதல் பொழுதுகள்!
வரமாய் நுழைந்த
வழக்காறுகளின் நூதனம் மட்டும்
கொடி தாங்கி நடக்கையில்
கோபுர நிழலில்
சுருண்டு கிடக்கிறது
நான் போகும் பாதை!
புனைந்து முடியாத காவியமொன்றின்
புதிய தரிசனம்போல் கரைகிறது
என்னுள் நான் என்னும் மெய்!
இருந்தும்
நாள்தோறும் நான் விழித்ததும் தொட்டிடும்
வாழ்வின் முதல் ஒளியை
என்ன செய்ய?
ஒளியற்ற ஒளிதானே மெய்!
######################
14) என் பழைய கனவு!
===================
எது வாழ்வு என்று
தீர்மானிக்கும் முன்பாகவே
தீர்ந்து போன வாழ்விது!
களத்தில் புதிதாய்
கவிழ்ந்து கொண்டிருக்கும்
காத்திருப்புகளுக்கு நடுவில்
காலாற இடம் தேடுகிறது
என் பழைய கனவு!
எது வழி சென்றால்
நுழைந்திடுவோம் என்ற அறியாமையின்
ஆவல் கடக்கும் முன்பே
சருகின் வாசனை பெருகி
என் தொண்டையை நனைக்கிறது!
கொடும் கூற்றாய்
எங்கோ ஓர் தொலைவில் தெரியும்
ஓர் சிற்றகல் ஒளியை
சமிக்ஞையாய் எண்ணி
என் இதயம் நகர்கையில்
வாழ்வின் பாதை இடம்வலம் போகிறது!
###########!!!!!####
15) ஆலாபனை!
===============
தொலைவின் தொலைவில்
தொடர்ந்து கேட்கிறது
தொலைபேசி அழைப்பாய் எதிரொலிக்கும்
ஓர் இதயச் சத்தம்!
சரம் சரமாய்
கவிழ்ந்து கொண்டிருக்கும்
பனித்துளிகளுக்கு நடுவே
கழற்றி வைக்கிறேன் என் கால் சலங்கையை!
புழக்கத்தில் உள்ள சொற்களை தவிர்த்து
மலர்வதற்குள் பறித்த
மல்லிகை மொட்டுகளை தொடுத்து மாலையாக்கி
என் மனச்சாந்திக்கு படைக்கிறேன்!
மாற்றுப் பாதை என்பது
அது மனமறியாத வெகு தூரம்!
மற்றபடி
தொழுதலும்
உன்னைத் தொடர்வதும்
ஆதியில் கை வரப்பெற்ற
அணுக்கத்தின் உராய்வு!
திருக்காட்சி என்பதோ
ஒரு கதவு மூடி
மறு கதவு திறக்கும் முன் தோன்றிடும்
காட்சிப் பிழை!
நீ என்னுள் அரங்கேற்றிடும்
ஆலாபனை மட்டும் போதுமென நுழைகிறது
அந்தக் காற்று!
##########!!!!!!######
16) பூங்காற்று திரும்புமா...?
=======================
முந்தாநாள் பெய்த
மழையின் ஈரத்தை சுவைத்தபடி
கரிசல் நிலம் கடந்து போகும்
புழுதிக் காத்துக்கு போர்வையாய்
அப்பாவின் வியர்வை வாசம்!
பூனைக்கு பயந்து
அடுப்பங்கரைக்குள் அலைந்து திரியும்
எலியின் முதுகில் அப்பிக்கொண்டது
அம்மா சமைத்த கறிக் குழம்பு வாசம்!
நிரப்பிய பல்லாங்குழிகள் தாண்டி
இறைந்து கிடக்கும்
புளிய முத்துக்களில் கவிழ்ந்து கிடக்கிறது
அக்கா விரல் தீண்டிய மருதாணி வாசம்!
திண்ணைச் சுவர் முழுவதும்
புள்ளியில்லாக் கோலமாய்
தொத்திக் கிடக்கிறது
அம்மாச்சி சொல்லாயியம்மாள்
வெத்தலை எச்சிலோடு
குதப்பிக் கொடுத்த முத்தத்தின் வாசம்!
இப்படித்தான்
இல்லாத உறவுகளின் நினைவுகளை
எப்போதாவது இட்டு நிரப்புகிறது
படிவாசல் தாண்டி நுழையும் பூங்காற்று!
####################
17) விநாயகா வினை தீர்ப்பாயா...?
=================================
யார் இவன் எனத் தெரியாமலே
எனக்குள் வந்தவன்!
ஊர் பெயர் அறியும் முன்னே
உறவாய் வந்தவன்!
கடக்கும் நொடிதோறும்
கணக்கற்ற கனவுகளை
என்னுள் கட்டிக் கொடுத்தவன்!
தொலைதூரம் நகர்ந்த பின்னும்
நகராமல் அமர்ந்து
எப்போதும் விழித்தே பார்ப்பான்!
வரிசை கட்டி வந்து
குடம் குடமாய் அவன்மேல் நீரூற்றியும்
வலம் வரும் தேவதைகளை
வக்கனையோடு பார்த்து ரசிப்பவன்!
தெத்துப் பல் காட்டி
நான் சிரிக்கும் அழகை
அவன் தொந்தி வயிறு குலுங்காமல்
மௌனமாய் பார்த்துச் சிரிப்பது
ஏன் என்ற கேள்வி என்னுள் எப்போதும் எழும்!
கும்பிட்ட கரங்களுக்குள்
குடியேறிக் கொண்டாலும்
அரச மரத்தடி விட்டு
அகலாது அசையாது
அங்கே வீற்றிருக்கும் அவன் அழகே தனி தான்!
யார் முகம் காண
இப்படி ஒரு தவமென
என் அறியா வயதில் அரும்பிய கேள்வி இது!
அவன் தாய் முக வடிவத்தில்
தேவதை வருவாளா என
தேடுகிறான் என்ற பதில்
எனக்குத் தாமதமாய் தெரிந்தபின்பும்
அவனைச் சுற்றி என் தேடுதல் தொடர்கிறது!
கணக்கற்ற கன்னிகள்
அவனைச் சுற்றி
காலம் தோறும் வலம் வந்தும்
ஊரில் முதிர்கண்ணிகள் எண்ணிக்கை மட்டும்
குறையாமல் இருப்பதும்
அவர்கள் அழுது வடிக்கும் கண்ணீர்
ஆறாய் ஓடுவதும்
அவன் அறியாமலா இருப்பான்?
இருந்தும் ஏனோ
அவனுள் இரக்கம் வரவில்லை!
வினை தீர்க்கும் விநாயகா
அவர்கள் வினை தீர்த்திட
இன்றாவது வருவாயா?
###############################################
18) கடலிலே ஒரு தோணி காத்துக் கிடக்கிறது!
=====================================
ஒரு கடலைப் போல்
விருப்பத்தின் நூல்
பெருகிக்கொண்டே போகிறது!
நதி தான் தூரம் என்று
நம்பும் மனம்
இன்னும் இங்கே இருக்கிறது!
இருளைக் கிழித்துக்கொண்டு
அலையின் சத்தம் அடிக்கடி கேட்பதால் ஆர்ப்பரித்து எழுகிறது
என் அன்பின் குரல்!
உள்ளுக்குள் ஏனோ
வெகுநாள் ஊறிப் கிடந்த
வலி மட்டும்
அதன் வாசலைத் தேடுகிறது!
ரெட்டைக் கிளி மனதிற்காக
கடலிலே ஒரு தோணி
காத்துக் கிடக்கிறது
தன் விருப்பத்தின் கொடியைப் பறக்க விட்டு...!
நம்புங்கள்
விருப்பம் என்பது கடல் தான் என
ஒவ்வொரு கதை முடியும் போதும்
காலம் வழமையாச் சொல்லும் வந்தனம்!
#####################
19) அன்பின் வலி! - 01
====================
உன் உதிரத்தின் கிளையில் இருந்து
முதலில் துளிர்த்தது
நான் என்பதால் தானோ
முதலில் என்னை முறித்தாய்?
நீ அடிக்காமல் கடத்திய அன்பும்
வலிக்காமல் சொன்ன நீதியும்
இன்று உன்னிடமிருந்து வக்கற்று
திசை அறியாத திக்கற்று
எவ்விடம் போனது அம்மா?
ஒரு கண்ணில் வெண்ணையும்
மறு கண்ணில் சுண்ணாம்பையும்
உன்னால் மட்டும் எப்படி வைக்க முடிகிறது?
இன்று
அடிக்கிளை துளிர்ப்பதற்காக
நீயோ முதல் கிளை முறிக்கிறாய்...!
நீ அன்போடு முறித்து இருந்தால்
ஒருவேளை வலிக்காமல்
என் வாதை கடந்திருக்கும்...!
வேரில் வெந்நீர் ஊற்றி விட்டு
ஐயோ வாடுதே என்று
இன்று பாரில் கண்ணீர் வடித்தால்
உந்தன் பாவ கணக்கு தீர்ந்திடுமோ?
உன் அன்பென்னும் விதையில்
முதலில் துளிர்த்தது
நான் என்பதால் தானோ
என்னை அடிக்கடி முறுக்குகிறாய்?
நீ அன்போடு முறித்திருந்தால்
முதல் கிளையின் கதை
அன்றோடு முடிந்திருக்கும்
நீயோ வேடிக்கை காட்டுவதற்காக அல்லவா
என்னை வீம்புக்கு முறித்தாய்!
உன்னால் உருவான
ஊராரின் புயல் காற்று
தீண்டும் போதெல்லாம்
என்னுள் தேளாய்க் கொட்டுகிறது!
இன்று நீ அதிகமாய் அடிக்கிறாய்
அதில் அன்பு என்னும் வலி
துளியும் இல்லாததால்
என்னுள் துக்கம் மிகுந்து
தூங்காத இரவுகளாய்த் தொடர்கிறது!
அம்மா இது நீ அறியாத வட்டிக்கணக்கு
அதனால் வலிகள் கூடுதலாய் பெருகி
என்னை வாட்டி வதைக்கிறது!
ஓரிடத்தில் மட்டும் அதித அன்பு தருவதும்
மற்றவருக்கு அது அதித வலிதருமென
நீ மறந்தாயோ அம்மா???
அன்பும் வலிதான்
அது அறிந்தவர்க்கு தெரியும்!
உனக்கம்மா??????
#############################################
20) அன்பின் வலி - 02
===================
இன்னும் எவ்வளவு தூரம்
நான் ஓட வேண்டும் தந்தையே?
ஊருக்காக நீங்கள் உழைத்தீர்கள்
நானோ உந்தன் பெயருக்காக
உழைத்து எல்லாம்
இன்று பெரும் பிழையாகி நிற்கிறதே
அது நீங்கள் அறியாமல் நடந்ததா?
இல்லை
ஆவது ஆகட்டும்
வேரில் ஊற்றிய வெந்நீர்
அது விழுது வரை பரவி
வீழ்ந்து போகட்டும் என்று
விருப்பத்தோடு ஊற்றினீர்களோ?
கொடிமத்தின் உயரத்தை
அந்த கோபுரம் அறியும்!
நானோ உங்கள் பாதையின் வழிக்கல்லாய் இருந்ததால்
எந்தன் வலி அறியாமல் போனதோ?
உங்களை மட்டுமே எண்ணி
கதியாய்க் கிடந்து
காலமெல்லாம் உழன்று
நான் கணக்கற்றுக்கடந்த திசைகள் எல்லாம்
இன்று என்னை தேளாய்க் கொட்டுவதை
நீவீர் அறிவீரோ???
என்மீது பழி போடும் வழி மொத்தமும்
இன்று உங்கள் குண திசையில்
கூடி விட்டதால்
உங்களின் பாசாங்கு எல்லாம்
பகல் வேஷம் என்று அறியாத அளவிற்கு
சிறுபிள்ளை என்று
என்னை நம்புவது சரியா??
முடிந்தால் முடியட்டும்
முதலில் துளிர்த்தது முதிர் கணக்கு
என்று தானோ
என்னை முதலில் முறித்தீர்கள்?
ஓரிடத்தில் மட்டும்
ஒன்றாய்க் குவிந்திடும் அன்பும்
அதன் சுவை அறியாதவர் மனதிற்கு
அதீத வலி தருமென
அறிவீரோ தந்தையே?
அடிக்கடி நடக்கும்
இந்த ஆடு புலி ஆட்டத்தில்
உங்களால் வீம்புக்கு பலியான
ஆடு நான்!
அதனால் நான் சுமந்த வலியும்
என் தூக்கம் இழந்த இரவுகளையும்
யார் அறிவார் தந்தையே?
இருக்கட்டும் இவனுமென
என்றாவது எண்ணியது உண்டா?
முதலில் உதித்தது
என் பிழை என்றால்
முதலில் முறித்தது யார் பிழை???
ஓரிடத்தில் மட்டும்
பேரன்பு கட்டுவதும்
பெரும் பிழை தான்
அது அறிந்தவர்க்கு தெரியும்!
உங்களுக்கப்பா????
#########################################
21) ஏதிலி!
=============
இறுக்கிப்பிடித்த கையிலிருந்து
மெல்ல நழுவிக் கொண்டிருந்தது
அன்பின் கதகதப்பு!
கிழக்கு வாசலின் முற்றத்தில்
வந்து வந்து கரையும்
காகமாய் நான் இருந்தேன்!
சொல்லின் சுருக்கு பையிலிருந்து
தெறித்து விழும்
சொலவடை போல்
உன்னிலிருந்து விலகுகிறேன்!
என்றேனும் ஓர் நாள்
பிடி பிடி என பெய்து தீர்க்கும்
உன் அடை மழை அன்பு
என்னை நனைக்கும்..!
அதுவரை
கதிர் முற்றி அறுவடைக்கு பின்
காய்ந்து கிடக்கும் நிலம்போல்
நானும் காத்துக் கிடக்கிறேன்!
ஏதுமற்ற ஏதிலியாய்
உன் புறக்கணிப்பைச் சுமந்து கொண்டு..!
#############################################
22) வாராயோ கண்ணா..?
=============================
வாராத கண்ணனுக்கு தான்
எத்தனை வரவேற்பு?
தூங்காமல் கொள்ளாமல்
துதி பாட காத்திருக்கும் கனவோடு
ஆணிப்பொன் வயிறு தொட்டுப் பார்த்தபடி
தினந்தோறும் நிற்கிறாள்
பிள்ளை வரம் கிட்டாத ராதை!
இரவிற்கும் இருளுக்கும்
இடையில் நிற்கிறது
அவளின் கருணை மனு!
ஓர் உருவில்
ஓர் வடிவில்
கணநேரம் அவள் காதோரம்
மழலைப் பூக்களை
மலர விட்டு பார்க்கத்தான்
மை தடம் கண்ணனுக்கு
மனம் இல்லையோ??
எத்தனை இரவுகள்?
எத்தனை கனவுகள்?
அத்தனையிலும் அவள் வடித்த கண்ணீர்
ஆறா வடுவாய்
அடங்கிக் கிடக்கிறது
அவள் தலையணைக்கடியில்...!
இதம் தான்
நிதம் தான்
மழலை மொழி சுகம் தான்
அது நிலவை குடித்த வரம் தான்
அவளுக்கு வழங்கவில்லை
கார்மேகக் கண்ணன் வரம் தான்!
பேருக்கு ஒன்று
பெருமைக்கு ஒன்று
எனப் பெரிதாய்
அனேகர் சிரிக்கையில்
உரிமைக்கு ஒன்றாய்
அவள் உயிரை மலர்த்திட
வாராயோ கண்ணா...?
இருந்தும்
வாராத கண்ணனுக்கு தான்
இங்கு எத்தனை வரவேற்பு?
##################################
23) உதிரும் பூக்கள்!
=====================
எல்லாத் தேவைகளும்
ஓர் நாள் தீர்ந்து போகுமென்ற
நம்பிக்கையில் தான்
இந்த உலகம் சுழல்கிறது!
அதனால்
ஒவ்வொரு கவலைகளும்
கவனம்கொண்டு காத்திருக்கிறது
யாரோ ஒருவரின் வருகைக்காக...!
எல்லாம் முடிந்து
மூன்றாம் கண் திறக்கும்போது
இந்த உலகில்
நம் பயணம் முடிகிறது!
வாழ்க்கை என்பது
வாழும்வரைதான்
இதில் உறவும் பிரிவும் என்பது
பயணச் செலவென
உதிர்ந்து சொல்கிறது பூக்கள்!
###
No comments:
Post a Comment