Wednesday, 18 December 2024

இராஜமோகினி - 03 யாழிசைசெல்வா

 🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

🌾அத்தியாயம் - 03 சூலிகாம்பாள் 🌾


       சோழகுலவல்லிப்பட்டிணத்தின் நீண்ட தெருக்களில் கூட்டம் வழிந்து கொண்டிருந்தது.  கீழைதேசங்களிலிருந்து  வரும் பெரும் நாவாய்களுக்காக காத்திருந்த சிறிய படகுகள்,  அவை வந்ததும் ஈ கூட்டம் போல் நாவாய்களை சுற்றிவளைத்துக்கொண்டு  அதில் வந்த பொருட்கள் அனைத்தையும் கரைக்கு மாற்றி கொண்டு செல்ல யத்தனித்தன. அவற்றை முறைப்படுத்த நாவாய்களிலிருந்த ஊழியர்களின் ஒருவன் படகுகளை நோக்கி "ஏய்....  இப்பிடி வாருங்கள்... இன்னும் சிறிது தள்ளி.... அப்படித்தான்.... போதூம்..போதூம் "  என்றவன் " பொருட்களை பார்த்து, கவனமாக இறக்குங்கள்...."  என சத்தமாக கத்திக்கொண்டிருந்தான். 

    வெள்ளியை உறுக்கி ஊற்றியதுபோல் கடல் அன்னையை முத்தமிட்டு கொண்டிருந்தாள் வெண்மதி .
அலைகளை கிழித்துக்கொண்டு வந்த பாய்மரபடகுகளின் அணுவகுப்பு கரைக்கு  முன்பாக ஒரே சீராக வந்து நின்றன. ஏற்கனவே வந்த நாவாய்களிலிருந்து பொருட்களை படகுகளுக்கு மாற்றிக்கொண்டிருந்தவர்கள் தங்கள் படகுகளை கரையைநோக்கிச் ஒருபுறமாகவும்,  மற்றொருபுறம் கரையிலிருந்து நாவாய் நோக்கி இன்னொரு வரிசையாச சென்றன. இந்த அணிவகுப்பை ஆங்காங்கே முறைப்படுத்தி கண்காணித்தபடி  இருந்தனர் சோழத்தின் இரவாடிகள்.

     கரையில் இறங்கிய பொருட்களை சுமைதூக்கும் ஊழியர்கள் தூக்கிக்கொண்டும் ஓடிக்கொண்டும் நகரத்திற்கு உள்ளே எடுத்துச்செல்ல காத்திருக்கும் மாட்டுவண்டிகளில் முறைப்படி ஏற்றிக்கொண்டுமிருந்தவர்கள் "இந்தாப்பிடி .... ம்ம்ம்... அப்படித்தான்...." என அவர்கள்போட்ட இரைச்சல் வானைக்கிழித்துக்கொண்டிருந்தன.  இதற்கு ஊடாக ஒவ்வொரு பொருளையும் முறையாக மதிப்பிட்டதோடு அவற்றின் தரத்திற்கும், எடைக்கும் ஏற்ப உல்குவரி எனும் சுங்கவரி விதித்துக்கொண்டிருந்தார் சுங்கச்சவாடி அதிகாரி.

     கீழைதேசத்திலிருந்து வந்திறங்கிய சீனச்சூடம், அகில், சந்தனம், ஆம்பர், இலவங்கம், குங்குமம் போன்றவைகளை பெரும் மரப்பெட்டிகளில் அடைத்து அவை தனித்தனியே முத்திரையிடப்பட்டிருந்ததை அடுக்கிக் கொண்டிருந்தனர் சுமைதூக்கும் ஊழியர்கள். தங்களது முத்திரையிடப்பட்ட சரக்குகளை கண்டறிந்து மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டிருந்தனர் , கடற்கரைபட்டிணங்களில் வணிகம் செய்யும்  மணிகிராமத்தார்.

    இன்னொருபுறம் மாட்டுவண்டிகளிலும் கூட்டுவண்டிகளிலும் உள்நாட்டுப்பகுதிகளுக்கு வணிகப்பொருட்களை ஏற்றிக்கொண்டும் அதனை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார் வணிகர்களின் தலைவன் எட்டிச்சாத்தன். கூட்டம் கூட்டமாக செல்லும் வணிகச்சாத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அவர்கள். பறவைகள் வலசைபோதல் போன்று  தொன்று தொட்ட வழக்கம் அது.

     சரம்சரமாக வெளியேறிக்கொண்டிருந்த வாணிகசாத்தினைக் கடந்து நகரத்தில் நுழைந்த மாட்டுவண்டி  எதிரே பெரிய ஆலமரத்தின் கிளைபோல பரவிக்கிடந்த ஆதூரசாலை வாயிலை கடந்து உள்ளே நுழைந்தது.

    பல்வேறு பகுதிகளாக வகை பிரித்த அறைகளைக்கொண்டதும், சுண்ணாம்புச் சுதைவைத்த அடிக்கட்டுமணத்தையும், சுற்றுச்சுவரையும் எழுப்பியவர்கள் அதன்மேல்    மூங்கில்கழிகளை குறுக்காக வைத்து விரவி அதன்மேல் தென்னவோலையால் கூரைவேய்ந்து  கட்டப்பட்டிருந்தது  இராஜராஜர் ஆதூரசாலை.  

     ஆதூரசாலையைச் சுற்றி  மூங்கில்வேலி  அமைக்கப்பட்டிருந்தது. வேலிக்கும் ஆதூரசாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் மூலிகைதோட்டமும் ஆங்காங்கே நிழல்தரும் புன்னை, வேப்ப, மா மரங்களும் மட்டுமின்றி, ஆதூரசாலை முகப்பருகே குழைதள்ளிய வாழைமரக்கூட்டம் ஒருபுறமும் அதன் அருகாமையிலேயே பசிப்பிணி போக்கும் வைத்தியசாலையும் ஒருசேர இயங்கி கொண்டிருந்தது.

     திடுமென வந்துநின்ற மாட்டுவண்டியையும் அதிலிருந்து பரபரப்பாக கீழிறங்கி வேகமாக ஆதூரசாலைக்குள் போன செங்கமலம் கையோடு வைத்தியர் இருளப்பமள்ளரை  வண்டியருகே அழைத்துவந்தார்.

    கட்டையாகவும் குட்டையாகவும் நீண்டவெண்தாடியுடன் கூர்மையான விழியுடனும் , விழிகளுக்கு மேலமைந்த நெற்றியில் பட்டையாக திருநீறும் , இடையில் பச்சைநிற பருத்திஆடையும்,  நெஞ்சில் எப்போதும் மணக்கும் சந்தன பூச்சும்  அதற்கு மேல் பச்சை வண்ண பருத்தி தூண்டை தோளில் பரவவிட்டவரின்,   முகத்தோற்றத்தைகொண்டோ இதழில் பரவும் புன்னகையைகொண்டோ அவரின் உணர்வுகளைகண்டறிதல் அவ்வளவு எளிதல்ல என்பதுபோல் வண்டி அருகே வந்தவர், " எப்போது மயக்கமானார் இவர்.?" என செங்கமலத்தை பார்த்து கேட்டார்.

     "என்ன அய்யா சொல்கிறீர்கள்.... அவள் உறங்குவதாக அல்லவா நினைத்தேன்." என்றவர் தேம்பி அழுதபடி " சூலிகாம்பாள் தாயே.... என் மகளைக் காப்பாற்று ...."

    இதற்கிடையே ஆதூரசாலையில் பணிசெய்யும் இருபெண்களை அழைத்து வைத்தியர் இருளப்பமள்ளர்,  அடுத்ததாக நிறைசூலி பெண்ணிற்கு செய்யவேண்டி பணிகள்குறித்து ஆலோசனை கூறிவிட்டு செங்கமலம் அருகே வந்தார், "அம்மா ... வருந்தாதீர்கள்.....  சூலிகாம்பாள்தாயின் கருனை இருக்கும் போது வருந்துவானேன்" என்றார். வயதான முதிய ஆடவர் இருவரும் நிறைசூலியின் மாமியாரும் செங்கமலத்திற்கு தேறுதல் மொழி கூறிக்கொண்டிருந்தவேலையில், ஆதூரசாலை பணிமகளிருவரும் நிறைசூலிப்பெண்ணை தூக்கிக்கொண்டு நிறைசூலிப்பெண்கள் வைத்திய பகுதிக்கு கொண்டு சென்றிருந்தனர். அவரும் அவர்களை பின் தொடர்ந்தார்.

     புரவியை ஆதூரசாலையில் உள்ள கொட்டடியில் பினணத்துவிட்டு வண்டியருகே வந்த இளவழுதி " அம்மா , வைத்தியர் என்ன சொன்னார்? தங்கள் பெண் நலம்தானே?" என்றான்.

    "இல்லை தம்பி. நாம் நினைத்தது போல் என்மகள் உறங்கவில்லை. மயக்கமாக இருந்திருக்கிறாள்."என்றார் தேம்பி அழுதபடி.

    செங்கமலத்தின் கணவர் "அழதே, செங்கமலம். சூலிகாம்பாள்தாய் மேல் பாரத்தை அப்போதே போட்டுவிட்டாயே, பிறகேன் கவலை உனக்கு. எல்லாம் அவள் பார்த்துக்கொள்வாள்.... கவலையை விடு"என்றபடி செங்கமலத்தின் நீர்தாரையை துடைத்துவிட்டார்  தோளில் போட்டிருந்த பருத்தியில் நெய்த  துண்டினை வைத்து. அப்படியே அவரின் நெஞ்சில் ஆதரவாக சாய்ந்து கொண்டார் செங்கமலம்.

    " ஆமாம் அம்மா, வழியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு தென்திசை நோக்கி சூலிகாம்பாள்தாயை குறிப்பிட்டு  வேண்டிகொண்டபின் தைரியமாக இருந்தீர்கள் இப்போது ஏன் வருந்துகிறீர்கள் ."

   " நீ , சொல்வது சரிதானப்பா. சூலிகாம்பாள்தாயை வணங்கிகொண்டாள் நிறை சூலிக்கு எந்த ஆபத்தும் வராது என்பது எங்கள் நம்பிக்கை, அது இதுவரை பொய்த்ததே இல்லை. ஆனால் என்மகள் மயக்கமாக இருந்தாள் என்பதுதான் கவலை தருகிறது."

    "எல்லாம் நல்லபடியாக நடக்கும் அம்மா. வருந்தாதீர்கள். " என்றவன்,  அவர்களை அழைத்தப்போய் நீர் பருகச்செய்து ஆதுரசாலை வாசலில் போடப்பட்டிருந்த நீண்ட மர ஆசனங்களில் அமரவைத்தான்.

    "தாங்கள் தவறாக என்ன வில்லை என்றால் சூலிகாம்பாள் தாயைப்பற்றி சொல்லுங்கள் எனக்கும் ஆவலாக உள்ளது" என்றான்.

   அதுவரை சோகமே வடிவாக இருந்த செங்கமலம் முகமலர்ச்சியுடன் "சூலிகாம்பாள்தாயைப் பற்றி கூறுகிறேன் தம்பி." என்றவர் விழிகளில் ஒருவித பொலிவும் தைரியமும் பிறந்ததிருக்கவேண்டும்.
"அன்னை சூலிகாம்பாள், திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள எம்பெருமான்அக்னிபுரிசுவர் இல்லாள் கருந்தார்குழலி ஆவார். முன்பொரு காலத்தே இன்றுபோல் அன்றைக்கு எந்தவிதமான வசதியும் இல்லாத காலம் அது. சுற்றிலும் எப்போதும் வாய்க்கால் வரப்பும் கொண்ட வளர்ச்சியில்லாத கிராமம் புகலூர். ஒன்றுமில்லாத அந்த கிராமத்தில் எம்பெருமான் அக்னிபுரிசுவரும் கருந்தார்குழலி அன்னையும் எழுந்தருளினர். அதன்பின்தான் கிராமம் ஆள்போல் தழைத்து அருகுபோல் செழித்து வளர்ந்தது.  அதன்பின் தான் புகலூர், திருப்புகலூர் எனக் கொண்டாடப்பட்டது. திடீரென ஒருநாள் வடதிசையிலிருந்து நிறைசூலியும் அவரது தாயும் கொட்டும் மழையில் நனைந்தபடி போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது நிறைசூலிக்கு பேறுகால வழி வந்து துடித்து கதறினாள். மகளின் நிலைகண்டு தாளாமல் கதறியபோது அவ்வேளையில்  வெண்மைநிற  பருத்தி ஆடையணிந்த வடிவான இளம்பெண் ஒருத்தி வந்து நிறைசூலியின் உயிர் மட்டுமின்றி அவளது குழந்தையையும் சேர்த்து காப்பாற்றினாள். தாயும்சேயும் நலம்பெற்றமையால் அவளுக்கு சூல் காணிக்கையாக நிலம் வழங்கப்பட்டது. இன்றும் அந்நிலம் எம்பெருமான் அக்னிபுரிசுவரர், கருந்தார்குழலி அன்னை ஆலயத்தருகே உள்ளது. அந்த இளம்பெண் வேறுயாருமல்ல அன்னை கருந்தார்குழலி தான்.  அன்றுமுதல் கருந்தார்குழலி அன்னை சூல் காத்தமையால் சூலிகாம்பாள் என போற்றப்பட்டாள். இதுவரை இப்பகுதியில் நிறைசூலிப்பெண் எவரும் பேறுகாலத்தில் இறந்ததாக சரித்திரம் இல்லை. எல்லாம் அவள் அன்பும் அருளுமே சாட்சி" என்றவர் கோவிலமைந்த திசை நோக்கி வணங்கி நிமிர்ந்தார்.
ஏனையவரும் அவரைப்பின்பற்றி வணங்கி நிமிர்ந்தனர்.

     ஆதூரசாலையின் கிழக்கு பகுதியிலமைந்த நிறைசூலியின் அறையில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளின் நாக்குகள் சுடர்விட்டு ஒளி உமிழ்ந்தபோது "ம்ம்மா.... "என்று இளம்பெண்ணின் அலறலும் அதனைத்தொடர்ந்து "வீல்"லென்ற குழந்தையின் சத்தம் ஒருசேர கேட்டததும் தான் தாமதம் , ஆசனத்திலிருந்து துடித்தெழுந்த செங்கமலம் "தாயே....சூலிகாம்பாள்..." என உரக்க சத்தமிட்டு அழுதவரின் கண்கள் குளமாயின.

    ஒருநாழிகை கடந்தபோது,  வானில் வெள்ளிநிலவின் ஒளியில் ஆதுரசாலைக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்தது. அந்த இதமான வருடலில் சூலியின் பேறுகால வலி மயில்தோகையால் ஒத்தடமிட்டது போலிருந்தது.

    வெண்தாடியை வருடிக்கொண்டு  பேறுகால அறையிலிருந்து வெளியே வந்தார் வைத்தியர் இருளப்பமள்ளர் . அவரை அனுகி செங்கமலம் " அய்யா என் மகள்..."

     "தாயும் சேயும் நலமாக உள்ளனர் அம்மா " என்றதும், அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணங்கியபடி " மிகுந்த நன்றி அய்யா." மனதிற்குள் 'எல்லாம் தாயின் கருனை' என சூலிகாம்பாள் அன்னையை கொண்டாடிய முதிர்ந்த முகத்தில் வழிந்தோடிய விழிகளின் ஈரம் சாட்சியானது.

     தாயின் முகத்தை நோக்கிய வைத்நியர் இருளப்பமள்ளர் " அம்மா , இருநாழிகை கடந்தபின் தாயையும் சேயையும் காணலாம்" எனக்கூறி திரும்பியவர் வயதானவர்களோடு புதிதாக யாரோ ஒரு இளைஞன் இருப்பதை உணர்ந்தார் போலும்  " தம்பி யாரப்பா...நீ? " என வினவியதும், வைத்தியர் அருகே விரைந்து சென்ற செங்கமலம், வரும்போது சாலையில் ஏற்பட்ட இன்னல்களையும் அதிலிருந்து தங்களை காத்து இங்குவந்த நிகழ்வை தெளிவாக அவரிடம் விளக்கி கூறலானார்.

     செங்கமலத்தின் உரையாடலை கேட்டுக்கொண்டு வந்தவர் ஆதூரசாலைவாசலில் எறிந்துகொண்டிருந்த விளக்கின் ஒளி சிறுத்து மங்கலாக தோன்றியது. விளக்கை கூர்ந்து நோக்கியதும் எங்கிருந்ததோ வந்த ஊழியர் ஒருவர்  எண்ணையை  வேண்டுமட்டும் ஊற்றிச்சென்றார். அதுவரை சுணங்கி சிறித்த ஒளிவிளக்கு மெல்ல பற்றிப்பரவி பளிச்சென ஒளிர்ந்ததும் அதன் ஒளியின் பிரவாகத்தில் வாசலில் பெரியவர்களோடு உரையாடிக்கொண்டிருந்த இளவழுதியின் முகம் நன்கு தெரியலாயிற்று.

     அவனது முகத்தை கண்ணுற்ற வைத்தியர் இருளப்பமள்ளர் ஒரு கணம் விழி சுருங்கி விரிந்தபோது செங்கமலம் இளவழுதியுடனான சந்திப்பை விளக்கி முடிக்கவும் சரியாக இருந்தது.

     இளவழுதி அருகே சென்றவர் அவனது முகத்தை ஆராய்ந்தபடி "தம்பி ,  யாரப்பா...நீ...? "  என மீண்டும் அதே கேள்வியை அவனிடம் கேட்டார்.

     இப்போதுதானே அவரிடம் ஆதியோட அந்தமாக அனைத்தும் கூறினோம். மீண்டும் ஏன் வைத்தியர் அந்த தம்பியிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்கிறார் என செங்கமலமும் மற்ற முதியவர்களும் குழப்பத்துடன் பார்க்கலாயினர்.

      "அய்யா, இப்போதுதானே.... நடந்த அனைத்தையும் கூறினேன். மீண்டும் அதே கேள்வியை கேட்டு அந்த தம்பியை வருத்துகிறீர்கள்" என்றார் செங்கமலம்.

      மற்றவர்களும் "செங்கமலம் சொல்வது சரிதானே " என்றனர் ஒரேநேரத்தில்..

    "இந்த வாலிபனின் பெயர் என்னவென்று யாரேனும் சொல்லுங்கள் பார்ப்போம்." என்றுதும் , அனைவரும் ஒரே குரலாக "அதானே, நாம ஒருத்தரும் இந்த தம்பியோட பெயரை கேட்கவில்லையே " என வருத்தமுடன் இளவழுதியை பார்க்கலாயினர்.

    "எனது பெயர் இளவழுதி" என்றவன் இந்த பெயர் தெரியாததது  அப்படி ஒன்றும்  பெரிய குற்றமில்லை என்பதுபோல் முதியவர்களை பார்த்து"நீங்கள் இருந்த துயரத்திலும் அவசரத்திலும் யாருக்குமே கேட்கவேண்டும் எனத் தோன்றவில்லை. அதேபோல் தான் நானும் உங்களது பெயரை கேட்பதற்கு முயற்சிக்கவில்லை" என்றான் வெளிப்படையாக.

     இளவழுதியின் பெயரை கேட்டதும் மறுபடி அவனது ஒருமுறை முகத்தை நோக்கியவர், முதியவர்களை பார்த்து "நீங்கள் அனைவரும் சென்று ஓய்வெடுங்கள். நான் சொன்னதுபோல் இரண்டு நாழிகைகழிந்த பின் தாயையும் சேயையும் காணலாம்" எனக்கூறி அவர்களைஅனுப்பி வைத்ததோடு , இளவழுதியை பார்த்து "தம்பி என்னுடன் வா " என்றார்.

     திடீரென ஏன் இவர்  முதியவர்களை அனுப்பி வைத்துவிட்டு நம்மை மட்டும் தனியாக எங்கு அழைக்கிறார், என எண்ணியவன் அவரிடமே "அய்யா , என்னை எங்கு அழைக்கிறீர்கள்.?  நான் முக்கிய பணி நிமித்தமாக வந்துள்ளேன், ஆகவே அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட வேண்டும்" எனக்கூறிக்கொண்டு புறப்பட யத்தனித்தான் இளவழுதி.

    "அப்படியா தம்பி. அப்படியென்றால் சென்று வா..." என கூறிவிட்டு நகர்ந்தவர் மறுபடியும் "என்ன பணி என கூற இயலுமா...?" என்றார்.

    " இல்லை அய்யா. எனக்கே தெரியாது..."

    "உனது தோற்றமே உனது பணியின் தன்மையை கூறிவிடுகிறது. அதனால்தான் தனியாக பேச அழைத்தேன்.  நீ அதனை வெளிகாட்ட விரும்பவில்லை எனத் தெரிகிறது. நல்லது சென்று வா" எனக்கூறி விடை கொடுத்தார்.

     இளவழுதியும் சரியென தலையசைத்து விடைபெற்றான் அவரிடமிருந்து.

    ஆனால் இவர்கள் இருவரையும் இணைக்கும் நாடகம் ஏற்கனவே தொடங்கிவிட்டதை இருவருமே அறியவில்லை. அதன் வாசலைத்தேடி போய்கொண்டிருந்தான் இளவழுதி எனலாம்.  இல்லை... அவன் அபாயத்தின் கதவை தட்டுகிறானோ....?? நமறியோம்....,  காத்திருந்தான் விடியலுக்காக.....

(தொடரும்..... பாகம் 4ல்)



No comments:

Post a Comment