Wednesday, 18 December 2024

பிள்ளைநிலா - யாழிசைசெல்வா

      கிழக்கே வானம் வெளுத்த போது, இரவு முழுவதும கொட்டித்தீர்த்த பேய் மழையால் ஊர் முழுவதும் 'நச நச வென' ஒரே வெள்ளக்காடாக மாறிப்போய் ஆங்காங்கே இருந்த  குடிசைகள் தனித்தனி தீவாக மாறி கிடந்தது. 

      ஊரின் கிழக்கு பகுதியில் மொத்தம் ஐம்பது வீடுகள் சொச்சம் கொண்ட குடியிருப்பு பகுதி அது.   அதில் மூனாவது தெருவின் கடைசியிலெ  இருந்தது  வள்ளியின் குடிசைவீடு. கருப்பா குட்டையா இருந்தாலும் எந்த வேலையையும் தாட்டியமா செய்ற துணி கொண்ட பொம்பளதான். ஆனா.... அவ கெட்ட நேரமோ என்னவோ,  அவளோட வீட்டுக்காரன் போனமாதம் நொங்கு வெட்டப்போனவன் பனைமரத்துலயிருந்து கீழ விழுந்தப்ப, கழுத்தெழும்பு முறுஞ்சு செத்துப்போனான்.   போதும் போதாதுக்கு அவளோட கெட்ட நேரம் விடாம உடும்பு பிடியா புடிச்சமாதிரி அவ ஒரேமக  வேம்புவும் போனவாரம் கொண்டவனோட சண்ட பிடிச்சு கோவிச்சுட்டு வீட்டுல வந்து அடைகாக்கிற பொட்டக்கோழி மாதிரி எப்பவும் மூலையிலெ முடங்கி கெடக்கா. என்ன ஏதுனு கேட்டா எறிஞ்சு விழுந்து பிடுங்கிறா... "என்னத்த சொல்ல எல்லாம் ஏன் தலையில கோணமானயா ஆண்டவன் கிறிக்கி வச்சுட்டான் போல.... நாய் பொலப்பா இருக்கு " என தனக்குதானே பிச்சி மாதிரி பேசிக்கிட்டா.


    காலையிலேயே வெள்ளனா எழுந்திரிச்சு சோறப் பொங்கி வச்சு அதுக்கு தோதா நெத்திலி கருவாட்டோட சின்ன வெங்காயம் , பச்சமிளகா, தக்காளி சேர்த்து கடலை எண்ணெயில வதக்கி தாளிச்சு வச்சிருந்தா . அதன் மனமும் சுவையும் எப்ப சாப்பிடுறெனு கூவி கூவி அழைக்கிற மாதிரி இருந்துச்சோ என்னவோ.... படக்குனு எந்திரிச்ச வேம்பு சுத்தும் முத்தும் வெறிக்க பார்த்தவ "யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சே.... அட அது ஆத்தாவோட குரல் தான் " என ஒருவழியா கண்டுபிடிச்சு முடிச்சததும்தான் தாமதம், "ஏன்டி, காலையில இருந்து நான் கத்திக்கிட்டு கிடக்கேன், நீ பாட்டுக்கு எனக்கென்ன வந்ததுனு கிடந்து உறக்கமே கதியா கிடந்தா போதுமா....?? "


    "இப்ப என்னங்கிறெ.... எந்திரிச்சு என்ன செய்யப்போறேன். வெட்டி முறிக்கிற வேல எதுவும் பாக்கியிருக்கா... என்ன?". வள்ளியைப்போலவே கருப்பாயிருந்தாலும் அம்மன் கோவில் செல மாதிரி இருப்பா; வேம்பு,  குணத்திலும் செயலிலும் .


    "இப்படித்தான் , உன்னோட வீட்டுலயும் படுத்தே கிடப்பியா.... ? அதனாலதான் உன் மாமியாகாரிக்கு உன்ன பிடிக்கலியோ....??"


     "ஆமா, நான் படுத்துக்கிடக்கிறத நீ பாத்தியா..... சும்மா எதாச்சும் பேசனுமிண்டு பேசி, என்ன கடுப்பேத்தாத.... போயிரு ஆமாம்...." விட்டால் வள்ளியின் மீது விழுந்து பிராண்டியிருப்பாள் வேம்பு.


     "சரி, சரி .... ஏன்மேல விழுந்து பிரண்டாத..... நானும் நீ வந்ததுலெயிருந்து கேட்கிறேன். ஒருநாளும் உண்ம வார்த்த சொல்லமாட்டேன்கிற...."என கூறிபடி மக கிட்டபோய் அவதலய ஆதரவா நெஞ்சுல சாச்சுகிட்டா.


    "ஏன் பிள்ளை சந்தனத்தை ஏன் கிட்டயிருந்து பரிச்சுக்கிட்டா யேன் மாமியா. கல்யாணம் முடிஞ்சு இந்த பங்குனி வந்தா யெம் பேரன் சந்தனதுக்கு ரெண்டு வயசு ஆகுது, கல்யாணம் போசினப்ப போடுறதா சொன்ன நகையில ரெட்டவட சங்கிலி  ஒன்னு பாக்கியிருக்கு அத வாங்கிட்டு வந்தா, வீட்டுக்கு வா .... இல்லெனா உன்னோட ஆத்தா வீட்டுலேயே இருந்துக்கனு சொல்லி என்ன வீதியில பிடிச்சு தள்ளிவிட்டுட்டா யேன் மாமியா...." என்றபடி தேம்பி அழுதாள் வேம்பு.


    " நான் , அப்பவே நெனச்சேன். இதுதான் இருக்குமுனு.... "

     " அப்பன் போனபிறகு நீ படுற சிரமத்துல, நான் உனக்கு சுமையா மாறிட்டேனே" என தேம்பி அழுதாள்.


     "நான் பாத்துக்கிறேன். நீ நாளைக்கு கிளம்பு , நான் உங்கூட வரேன்" என்றாள் வீராப்பாக.

     "வந்து"

    "எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கும் மகளே....." 

    "என்ன செய்யப்போற....??"

    "நம்ம புஞ்சைய வேலுச்சாமிக்கு வெல பேசியிருக்கேன். ரெண்டொரு நாளுல பணம் வந்ததும் உனக்கு போட வேண்டிய ரெட்டவடத்த எடுத்து வந்து உன்னோட மாமியாகிட்ட தாரேன், சரியா...."

     "இருக்கிற புஞ்சைய வித்துப்புட்டு நீ என்ன பண்ணுவ..... அப்ப சோத்து பாட்டுக்கு....." என்றவள் கண்ணுலருந்து  கண்ணீரு பெருக்கெடுத்து ஓடியது.

    "எனக்கென்ன மகளே, நீயும் எம்பேரன் சந்தனமும் சிரிச்ச மானக்கி இருந்தா போதும்."

    "ஏன் புள்ள என்ன பண்றானோ தெரியலியே..... நான் ஊட்டாட்டி அவன் திங்திர ரெண்டு வா சோறும்  சரியா சாப்பிட மாட்டானெ...." கிடந்து கதறுனா....

    "வந்து இத்தனை கழிச்சு இப்பதான் புள்ள நெனப்பு வருதா..... உனக்கு."

    "நீ வேற வகுத்தெரிச்சல கெளப்பாத.... பச்சப்பய அவன் நெனப்பு ஒருபுறம், நாதியத்துப்போன நீ ஒருபுறம் ரெண்டையும் மனசுல போட்டு மருகிகிட்டு எத்தனை நேரம் உக்காந்தே கெடக்கிறது. உன்கிட்ட சொல்வும் முடியல, மெல்லவும் முடியல " என்றாள்  தேம்பியபடி வேம்பு.

    "பொம்பள வாங்கியந்த வரம் இதுதானோ" என எண்ணியதோ என்னவோ  மீண்டும் அட மழை தன் பங்கிற்கு அழ  ஆரம்பித்தது.

(முடிந்தது)

    


     

No comments:

Post a Comment