சோழதேசம்….
1070 ஆம் ஆண்டின் பிற்பகுதியின் பின்மாலைப்போதில் ஒருநாள்…..
திடீரென வானம் இருள்போர்வையை போர்த்திக்கொள்ள தயாரானது. அதுவரை வெண்பஞ்சுப்பொதிமூட்டைகளை பிரித்து வானத்தில் இரைத்தததைப்போல் விரவிக்கிடந்த வெண்முகில் கூட்டம் சட்டென நிறமாறும் பச்சோந்தியாய்மாறி வானம் இருளைப்போர்த்திக்கொண்டது. கிளைகளில் தத்தித்தாவிக்கொண்டிருந்த அணில்களும் குயில்களும் , மைனாக்களும் அனல்மேல்விழுந்த பனித்துளியாய் பரபரவென பறக்கும் பட்டாப்பூச்சியாய் கிளைகளைவிட்டு கூடுதேடி குதித்தபடியும், சிறகை படபடவென அடித்தபடியும், விரவிவரும் இருளை கிழித்தபடி அனாசயமாக கிளம்பின.
காவேரிஅன்னையின் மற்றொரு இளவல் மட்டுமின்றி தான்தான் செல்லமகன் என்பதுபோல் சலசலவென பாய்ந்தும் தன்பிரவாகத்தை கொண்டு கரையோரங்களில் செழித்தும் பெருத்தும் ஓங்கி நிமிர்ந்த வாதநாராயணன், அரச, ஆல,நொச்சிமரங்களின் கிளைகளை முத்தமிட்டபடியும் நீருக்கு அருகாமையிலமைந்த நாணல்கூட்டங்களை வம்பிழுத்து உரசியபடி தனது ஓட்டத்திற்கு போட்டியாக வரும் கெண்டைமீனின் துள்ளலை நகைத்து கெக்கலித்து ஓடிக்கொண்டிருந்தது முடிகொண்டான் ஆறு. தழுவிச்செல்லும் முடிகொண்டானாற்றின் கரைகடந்து நெடுந்தூரம்வரை பச்சைப் பசேலன மரகதப்பாய்விரித்த நெற்சோலையின் இதம்தரும் குளுமையான மென்காற்று சாலையில் செழித்துவளர்ந்த ஆல,அரச,வேப்பமரங்களை கொஞ்சித் தவழ்ந்ததோடு கருமைநிற அரபுப்புரவியில் ஆரோகணித்துசெல்லும் இளவழுதியின் முகத்தை வருடிச்சென்றது.
சோழகுலவல்லிப்பட்டிணமென சோழவேந்தர்களால் போற்றப்பட்ட நாகைசெல்லும் அந்நீண்டசாலையில் இவைஎதைப்பற்றியும் கவலையின்றி சிறியநெற்றியில் கண்டபடிபுரளும் முரட்டுக் கருங்குழல்கள் வீசும் மழைவாடைக்காற்றிற்கு ஏற்ப தாளமிட்டுகொண்டிருந்ததையோ, விரவிக்கொண்டிருந்த இருளிலும் கொஞ்சமும் தொய்வின்றி சீரிய தாளத்தில் வாசிக்கும் கலைஞனைப்போல் ஒரே சீரான பாய்ச்சலில் பாய்ந்தோடிக்கொண்டிருந்த அரபுநாட்டு கரும்புரவியின் வாயில் விளாலி தள்ளிக்கொண்டிருந்ததையோ, இலட்சியமின்றி புரவியின் போக்கிற்கு இனணயாக இளவழுதி அதன்மேல் வீற்றிருந்ததோடு அவனதுமனவேகமும் கடந்தகால நிகழ்வுகளை எண்ணி எண்ணி பின்னோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. மேலும் அவனது கழுத்தில் புரண்ட ஆரத்தில் அமைந்த புலியின் உருவமும் பெரும் பாய்ச்சலில் இருந்தது. சிவந்த நிறம்கொண்ட பட்டுச்சட்டையும் அதற்கு இனணயான கால்சராயும் அவனது முகத்திற்கு கூடுதல் பொலிவைத் தந்ததென்றால் அளவில் சிறுத்துகிடந்த உதட்டின் மேலமைந்த இளம்மீசையின் துடிப்பும், கூடவே இடையில் அவனது வீரத்தை பறைசாற்றம் கூர்மையான நீண்டவாள் வாலிபனோடு உடன்பிறந்தது போல் உறவாடிக்கொண்டிருந்தது.
சடசடவென தீர்த்தமாரி மழைகொட்டத் தொடங்கியதும் தெப்பலாக நனைந்த இளவழுதி கடந்த கால நினைவிலிருந்து மீண்டதோடு விரைந்த பாய்ச்சலிருந்த அவனது புரவியின் கடிவாளத்தை சட்டென இறுக்கிப்பிடித்ததும் “பிளீளீ…” என கனைத்தபடி தனது முன்னங்கால்கள் இரண்டையும் உயரேதூக்கி பின் நின்றது. வீரம்செறிந்த அவ்வீரனின் விழிகள் நாற்புறமும் சுழன்று எங்கேனும் மழைக்கு ஒதுங்க இடம் கிடைக்குமாவென நோக்கின. கும்மிருட்டும் அடர்ந்த வனம்போல் காட்சிதந்த அந்த நெடுஞ்சாலையும் பார்ப்பதற்கு பயங்கரத்தோற்றத்தை அளித்தது. சாமானிய மனிதர்களென்றால் விழிபிதுங்கி நின்றுருப்பர். ஆனால் இயற்கையிலேயே இளவயதுக்குண்டான முரட்டுத்தனத்தையும் வேகத்தையும் கொண்ட அவ்வாலிபவீரனுக்கு எதிரேதெரிந்த இருள் பெரிதாக தோன்றவில்லை. மலையில்கொட்டும் அருவிபோல் மழைநீர் நம்இளைஞனையும் அவனதுபுரவியையும் தெப்பக்காடாக மாற்றிருந்தது. இருப்பினும் புரவியை மெல்ல பாதைவழியே விட்டுக்கொண்டு எங்கேனும் ஒதுங்க இடம்கிடைக்குமாவென விழிகளை சுழலவிட்டபடிசென்றான்.
திடிரென இருள்வானைக்கிழித்துக் கொட்டும் மழைத்தாரைகளுக்கிடையே சற்றுதொலைவில் உண்டான படீரென்ற மின்னல்ஒளியில் சாலையோரம் பெருத்த ஆலமரத்தின் அருகே சிதிலமடைந்த கட்டிடம் ஒன்று தெரியவே, புரவியைமுடிக்கி அதனருகே சென்றான். ஆங்காங்கே சுவர்கள் பெயர்ந்தும், மேற்கூரைகள் இப்போதோ அப்போதோ என இடிந்துவிழும் தருவாயில் கோட்டான்களும் விசப்பிராணிகளும் கூடிக்குலாவ மட்டுமே பயன்படும் சிதிலடைந்த கட்டிடமாய் காட்சியதந்தது. இதற்கும் இன்றைய சோழதேசத்திற்கும் பெரியவேறுபாடு ஒன்றுமில்லையென எண்ணினான். ஆம் ஆங்காங்கே மூண்டுவரும் கலகத்தையும் புரட்சிகளையும் சேர்த்து அரங்கேற்றும் நயவஞ்சகர்களின் கூடாரமாய் தான் இன்றைய சோழம் விளங்கியது. பெரும் மாவீரர்களும் பேரரசர்களுமான இமயவரம்பன் கரிகாலப்பெருவளத்தான், பராந்தகச்சோழன், இராஜராஜசோழன், அவன் மைந்தன் இராஜேந்திரச்சோழன் போன்றோரால் கட்டிஎழுப்பிய சோழதேசம் படிப்படியாக பல்வேறு மாற்றங்களை கண்டது .
'முதலாம் ராஜேந்திரசோழருக்கு பின் திறமையான வலிமையான அரசர் ஒருவருமில்லையே' என்ற ஏக்கத்தில்சிலரும், 'சோழதேசத்திற்கு இதென்ன சோதனையென' மனக்குக்குமுரலோடு பலரும் பேசியது காட்டுத்தீயாக தேசம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. தேசமெங்கும் பரவிவரும் இவ்விசநோயோடு சேர்த்து இன்னும் பலபல கதைகளை முன்னொட்டு பின்னொட்டாகசேர்த்து சதிகாரர்களின் சதிராட்டத்தின் கூடரமாக மாறிப்போனது சோழதேசம். இத்தககைய சூழலில்தான் சோழவேந்தனாக, கங்காபுரியின் காவலனாக ‘அபயன் ‘ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ‘ராஜேந்திரன்’ என்பான் “குலோத்துங்கன் “ என்ற விருதுபேரில் அரசுகட்டிலில் கொலுவீற்றிருந்தான். சாளுக்கியத்தை பூர்விகமாகவும் சாளுக்கிய இளவரசனாகவும் விளங்கிய அபயன் அரசுரிமைபெற்று செங்கோலேந்தியது பலருக்கு வேப்பிலையைச்சாரைக்குடித்ததுபோலும், சிலருக்கு நன்கு விளைந்த செங்கரும்பை சுவைத்ததுபோலுமாய் மாறிப்போனது.
செங்கரும்பின் சுவையே நாட்டிற்கு தேவையென உணர்ந்த கொலுமண்டபத்தின் காவலர்களும் நாட்டின் ஏவளர்களுமான சிலரில் குலோத்துங்கச்சோழரின் அருமைநண்பரும் தேசத்தின் தலைமைத்தளபதியுமான கருணாகரத்தொண்டைமான், இவருடன் அரும்பாக்கிழான், வாணகோவரையன் சுத்தமல்லன், முடிகொண்டானான வத்தராயன், மதுராந்தகன் மற்றும் பெரும்புலவர்களான செயங்கொண்டார், நெற்குன்றங்கிழார் போன்றோர் விளங்கினர். இந்நிகழ்வு பற்றிப்படரும் கொடிபோல் வளரவும்கூடாது, அத்தோடு செங்கரும்பின் அடியைவிட்டு நுனியைசுவைக்கும் மூடர்களின் முட்டாள்தனத்தை வேரறுக்க விளைந்தனர். அதன்விளைவுகளிலொன்றுதான் இளவழுதியின் நாகைப்பயணம்.
சோழப்படைகளின் முதன்மைத்தளபதி கருணாகரத்தொண்டைமானின் வலதுகரம், உற்ற தோழன், உபதளபதி ,அவனது மெய்க்காப்பாளன் மட்டுமின்றி, உடல்பொருள்ஆவி அத்தனையும் அவனுக்காக அர்ப்பணித்தவன் இளவழுதி. அத்தகையவனை அழைத்து எனக்கூறிவிட்டு இளவழுதியிடம் வேறு எதுவும் கூறாமல் விடுவிடுவென மாளிகையைவிட்டு வெளியேறினான் கருணாகரத்தொண்டைமான்.
அவன் போகும் திசையையே வெறித்துப்பார்த்தபடிநின்ற இளவழுதி புற உலகிற்குவந்தானில்லை. சிறிதுநேரம்கழித்து பித்துப்பிடித்தவன் போல்காணப்பட்டான். எப்போது தனது மாளிகைவந்தான் , தனது அரபுநாட்டு கரும்புரவியை அவிழ்த்துக்கொண்டு நாகைபுறப்பட்டானென அவனுக்கே ஞாபகம்மில்லை. ஏனெனில் எப்போதும் கலகலப்பாகவும் எத்தனை சிரமமெனினும் சிறிதும் அஞ்சாமல் துணிவோடு எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டவன் கருணாகரத்தொண்டைமான். ஆனால் இன்று அதற்கு மாறாக வெடுக்கென வெட்டிப்பேசி அனுப்பியது அவனால் தாளமுடியவில்லை. அவனோடு பழகிய நாட்களில் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக ஞாபகபேழையில் இல்லை. மேலும் மதுரை மாநகரின் அருகாமையிலமைந்த அவனியாபுரத்தின் முத்தங்காடியில் வைத்துதான் இளவழுதி முதன்முதலாக கருணாகரத்தொண்டைமானை சந்தித்தான். முதல்நிகழ்வு முத்தாய்ப்பாக அமைந்துபோனது. முத்தங்காடியொன்றில் முத்துக்களை பார்வையிட்டுக்கொண்டியிருந்தவேளையில் கருணாகரத்தொண்டடைமானை துரோகி ஒருவன் பின்னாலிருந்து குறுவாளால் குத்தமுயன்றான்.
அப்போது அருகினில் கிழேவிழுந்த முத்துக்களை பொருக்கி எடுக்க குனிந்த இளவழுதி அதைகண்ட அடுத்தகணமே, துரோகியின் கையிலிருந்த குறுவாளை லாவகமாக தட்டிவிழச்செய்ததோடு துரோகியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டதும் தடாலென வெட்டுண்ட மரமாய் கீழேசரிந்தான். சத்தம்கேட்டு திரும்பிய கருணாகரத்தொண்டைமானுக்கு நடந்து நிகழ்வை கணிக்க கணநேரம் போதுமானதாயிருந்தது.
” மிக்கமகிழ்ச்சி தம்பி , தக்கசமயத்தில் எனதுஉயிரைக்காப்பாற்றினாய், மிக்கநன்றி” எனக்கூறியதோடு இளவழுதியை கட்டித்தழுவிப் பாராட்டினான்.
முன்பின்தெரியாத தன்னிடம் செய்த சிறுஉதவிக்கு இத்தனை அன்பும் அரவனணப்பும் ஒருசேர கிட்டியதும் இளவழுதி சற்று திக்குமுக்காடிப்போனான். ஆம் வாழ்வில் இப்படியொரு அன்பினை உணர்ந்தவனில்லை. நினைவுதெரிந்த நாட்களிலிருந்து தாய்தந்தையை பார்த்ததில்லை.ஏனெனில் சிறுவதிலேயே அவர்களை இழந்துவிட்டிருந்தான். ஆகையால் அவர்களின் அண்மையும் அரவனணப்பும் எதுவும் அவனுக்கு தெரிய வழியில்லை. உற்றவனுக்கு ஒருவீடு, இல்லாதவனுக்கு ஊரேவீடு. கிடைத்தவேலையை , கிடைத்த உணவு, கிடைத்த இடமென மனம்போனபோக்கில் வாழ்ந்துவந்தான். வாழ்வின் பெரியதொரு லட்சியமின்றி வாழ்ந்து வந்தான் படைத்தலைவனை சந்திக்கும்வரையில்.
இளவழுதியின் விழிகள் நீர்கோர்த்து முத்துக்களை மாலையாக்கி நிலமகளைகுளிர்வித்தன. “தம்பி, ஏனப்பா…. அழுகின்றாய்….???” இளவழுதியின் கரங்களை இருக பற்றியபடி கேட்டான் கருணாகரத்தொண்டைமான். உணர்ச்சிமேலிட்டதால் வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டன இளவழுதிக்கு ” வாழ்வில் இத்தனை அன்பினை ஒரு நாளும் உணரும்பாக்கியம் இதுநாள்வரைகிட்டியது இல்லை அய்யா. நான் செய்த அற்ப காரியத்திற்கு இத்தனை அன்பிற்கு தகுந்தவனில்லை….”என்றான் கருணாகரத்தொண்டைமானைப்பார்த்து தலைவணங்கியபடி.
“உயிர் போனால் வராதப்பா… இதனை நீ அறியாத அசடனில்லை என்பதை அறிவேன்.”
“தாங்களும் அப்படியொன்றும் சாதாரண நபராக தெரியவில்லை…”என்றான் சூசகமாக இளவழுதி.
“ஏனப்பா. அப்படிகூறுகிறாய், என்னிடம் அப்படிஎன்ன அதிசியத்தை கண்டாய்..?”
“தங்களது முழங்கைக்கு கீழ் உள்ள வடுக்களே, தங்களது வீரத்தை பறைசாற்றுகின்றன. மேலும்….” என இழுத்தான்.
“மேலும் என்ன… சொல்லப்பா….?” என்றவன் இளவழுதியின் ஆராய்ச்சி எதுவரை செல்கிறது என்பதை அறியும் நோக்கில்.
"தாங்கள் புனைந்துள்ள முத்துவியாபாரி வேடம் பொருத்தமாகவும் இல்லை,அத்தோடு நீங்கள் கேட்ட விவரம் அனைத்தும் கொற்கை போன்ற இடங்களில் மட்டும்தான் கிடைக்கும். அங்குதான் நீங்கள் கேட்ட தரத்திலும் அளவிலும் முத்துக்கள் கிடைக்கும். அப்படியிருக்க அவனியாபுரத்தில் நீங்கள் தேடியது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.”
“யாரப்பா நீ..? தீட்சண்யமான உனதுவிழிகளில் வேறென்ன தெரிந்து. கொண்டாய்…??”
“வேறேதோ முக்கியப்பணியின் நிமித்தம் தாங்கள் வந்திருக்க வேண்டும். வேறேதும் தெரியாது அய்யா” என்றான் இளவழுதி.
“பலே ஆளப்பா நீ… இங்கு என்னபணி செய்கிறாய்?”
“கிடைக்கும் பணிசெய்து வாழ்க்கை பயணத்தை தொடர்கிறேன். தற்சமயம் முத்தங்காடியில் பணிசெய்துவருகிறேன்.”
“சரி தம்பி. சிறிது அப்படி வருகிறாயா… உன்னிடம் சிரிது உரையாடவேண்டும்” என்றான் கருணாகரத்தொண்டைமான்.
“சரிங்களய்யா… அங்காடி பெரியவரிடம் கூறிவிட்டு வருகிறேன்”என்றவன் என்னவாகயிருக்கும் என்றென்னியவாறே பெரியவரை அனுகலானான்.
நடந்த களேபரத்தில் கூட்டம் அங்காடியெங்கும் வழிந்ததை பயன்படுத்திக்கொண்டு கீழே கிடந்தவன் எப்போதோ நழுவி விட்டிருந்தான்.
கருணாகரத்தொண்டைமான் தொலைவில் தெரிந்த வேப்பமரத்தினருகே சென்று காத்திருந்தான் இளவழுதியின் வரவிற்காக.
சங்கம் வைத்து தமிழ்வளர்த்த பாண்டியவேந்தர்களின் தலைநகரிலிருந்த கூப்பிடும் தொலைவிலமைந்த ஊர்தான் அவனியாபுரம். கிராமத்தின் அழகையும் நகரின் செழுமையும் ஒருங்கேகொண்டது. நாற்திசையும் பரபரவென்று பம்பரமாய் சுழன்று வணிகம் செய்யும் வாணிபர்களும், அவர்களிடம் வம்பிழுத்துத்கொண்டும் வியாபாரத்தை சடுதியில்முடித்துக்கொண்டும் வேண்டிய பொருளை பெற்றுச்செல்லும் கோதையர் கூட்டம் ஒருபுறமும், காய்கறி அங்காடியில் பேரம்பேசி வேண்டியபொருளை வாங்கிக்கொண்டு விளக்குவைப்பதற்குள் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்ற முனைப்பில் விரைந்து செல்லும் மாதர்கள் ஒருபுறமும் , வயலில் வேலைமுடித்துக்கொண்டு தோளில் கலப்பையைதாங்கியதோடு, காளைமாடுகளிரண்டை முன்னால் ஓட்டியபடி அதன் தாம்புக்கயிற்றை சுண்டிக்கொண்டே”த்தே, த்தே” யென அதனை மெல்ல ஓட்டிச்செல்லும் காளையர்களும் கடந்து சென்ற வண்ணமிருந்தனர்.
அவனியாபுர வனிதையரின் முகம்அழகா? அல்லது அந்திவானின் சிவப்பு அழகா ? என யாரேனும் போட்டிவைத்தார்களா என்ன? பிறகேன் இத்தனை விரைவாக தன்னழகை மேற்கு மலைச்சரிவில் புதைத்துக்கொண்டான் - ஆதவன்.
அங்காடிப்பெரியவரிடம் சொல்லிவிட்டு கருணாகரத்தொண்டைமானின் அருகே வந்த இளவழுதி “சொல்லுங்கள் அய்யா” என்றான்.
“என்னுடன் பணிசெய்ய விருப்பமா தம்பி” என்றான் கருணாகரத்தொண்டைமான்.
“தாங்கள் தவறாக எண்ணாவிட்டால் ஒன்று கூறட்டுமா?.” என்றான் இளவழுதி.
“சொல்லு தம்பி…”
“தாங்கள் யாரெனத்தெரியவில்லை.ம்ம்ம்… பார்ப்பதற்கு வணிகர்போலிருந்தாலும் தாங்கள் வணிகர் இல்லை என்பதை அறிவேன். “
“என்னை சந்தேகிக்கிறாய். உனது சந்தேகமும் தவறென்றுமில்லை. நான் வணிகன் அல்ல. மேற்கொண்டு நான்சொல்வதை யாரிடமும் நீ தெரிவிக்க மாட்டாய் என்ற உறுதியைத் தந்தால். உரையாடலை தொடரலாம்.... உனக்கு ஒன்று மட்டும் இப்போதே தெரிவித்து விடுகிறேன் நானும் எனது நோக்கமும் தீயவையல்ல.” என உறுதியுடன் இளவழுதியின் முகத்தை கூர்ந்து நோக்கியபடிகூறினான்.“ஆகட்டும் அய்யா. தங்களை நம்புகிறேன், ஆகையால் உறுதியளிக்கிறேன். நான் தங்களைப்பற்றியும் தங்களது இரகசியத்தையும் மற்றவரிடம் எக்காரணம் கொண்டும் தெரிவிக்கமாட்டேன்.”என கருணாகரத்தொண்டைமான் கரத்தில் தனது வலதுகை வைத்து சத்தியம் செய்தான் இளவழுதி.
தனது கச்சையின் முடிப்பை அவிழ்த்தபடி சுற்றும் முற்றும் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்பதை விழிகளால் நோட்டமிட்டவன், தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை அறிந்தவேளையில் கருணாகரத்தொண்டைமானது வலதுகரத்தில் சோழ இலட்சினை மின்னியது. அதுவட்டவடிவத்தில் அமர்ந்த நிலையில் புலியொன்றும் அதன் முன்பு இரு மீன்கள் நின்றநிலையிலும் ,புலி மற்றும் மீன்களின் பக்கவாட்டில் நின்றநிலையில் குத்துவிளக்கும் அதன் அருகே நீண்ட வாட்களும் கத்திகளும் அமைந்த வடிவத்தில் விளங்கியது.அதனை கண்ட இளவழுதிக்கு வணிகர் வேடத்தில் உள்ளநபர் சோழதேசத்தின் பெருந்தனத்து அதிகாரி என்பது மட்டும் புரிந்தது.மற்றபடி இலட்சினையின் அமைப்பு விளக்கும் அரசியல் புரிந்தானில்லை.
இளவழுதியின முகக்குறிப்பை அறிந்ததுகொண்டவன்
“சோழப்பேரரசின் அதிகாரப்பூர்வ முத்திரை இலட்சினை இது தம்பி” என்றான் கருணாகரத்தொண்டைமான். மேலும் அவனே தொடர்ந்து “இப்போது சொல்லுதம்பி என்னுடன் பணி செய்ய விருப்பமா?” என்றான்.“தங்களை நம்புகிறேன் அய்யா, நான் ஏழை விவசாயி. என்னிடம் அப்படியென்ன சிறப்பைக்கண்டீர்கள்?”
“சிலரை பார்த்ததும் நம்மையரியாமலே ஒருவித ஈர்ப்பு வந்து அவனை நம்பு நம்புயென உள்ளுணர்வு சொல்லும்.அதுபோன்ற உணர்வு உண்னை கண்டபோதே உணர்கிறேன்.எல்லோரிடமும் இதுபோல் தோன்றியதில்லை.”
“நல்லது அய்யா . தங்களை கண்டமுதலே என்னுள்ளும் அதே உணர்வுதான் உள்ளது. என்ன ஒற்றுமை எல்லாம் எம்பெருமான் சிவனின் கருனையன்றி வேறென்ன..” என்றவன் ஆலவாய் அழகன் ஆலயமிருந்த திசைநோக்கி வணங்கி நிமிர்ந்தான் இளவழுதி.
சோழதேசத்தின் முதன்மை படைத்தலைவர் தானென்பதையும் , சோழத்தை வேரறுக்க முயலும் கயவர் கூட்டமொன்று சதியில் ஈடுபடுவதை கண்டறிந்ததையும் அதனை களையெடுக்கும் முயற்சியில் ஒன்றுதான் அவனியாபுர வருகையும் என விளக்கிக்கூறினான் இளவழுதியிடம் கருணாகரத்தொண்டைமான்.
“நல்லது அய்யா… இவற்றில் என் பணி என்ன?, நான் செய்யக்கூடிய பணி இருப்பதாக தெரியவில்லையே”.
“சோழதேசத்திற்கு இப்போது தேவை. நம்பகமான ஆட்கள். உன்னிடம் அதை காண்கிறேன். உன் வீட்டில் தகவலை கூறிவிட்டு வா, உனக்குவேண்டிய பயிற்சியை அளித்து உன்னை உயர்த்துகிறேன், சோழம்வளர நீ பணி செய்” என்றான் தீர்க்கமாக.
“எனக்கென யாருமில்லை அய்யா. நான் யாருமற்றவன்.” என்றவன் கண்கள் குளமாயின.“அடடா. நான் கூறியவை உன்னை வருத்தியிருந்தால் மன்னித்துவிடு. சம்பிரதாயமாக கூறினேன். இன்றுமுதல் சோழம் உன்னை காக்கும் சோழத்தை நீ உயர்த்து உன் பணியால்” எனக்கூறியபடி இளவழுதியின் தோள்களை இறுகப்பற்றி தழுவிக் கொண்டான் சோழப்படைத்தலைவன்.
அதன்பின் ஒரு திங்கள் கழித்து கங்காபுரி வந்தவனை உற்றவனாய் கொண்டாடி, நற்தவம் நீ என கொண்டாடிய படைத்தலைவன் இளவழுதிக்கு வேண்டிய ஏற்பாடுகளை தானே முன்நின்று பயிற்றுவித்தான். ஆயகலைகள் அத்தனையும் சிரமேற்கொண்டு நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக கற்றுத்தேர்ந்தான் இளவழுதி. நல்லதொருநாளில் இளவழுதியை உபதளபதியாகவும் உயர்த்தினான் கருணாகரத்தொண்டைமான்.
இருளைக்கிழித்துக்கொண்டு கொட்டித்தீர்த்த மழை ஒருவழியாக நிலமகளை விட்டு நீங்கியது. இளவழுதியின் அரபுநாட்டு கரும்புரவி உடலை சிலிப்பி போதும் போதும் கிளம்பு என சொல்லாமல் சொல்லியது.
அடிவயிற்றிலிருந்து பெருத்தவலியோடு “அம்மா….” என்றொரு தீனமான பெண்ணின்அலறல் அவ்விருளைகிழித்தபடி தொலைவில் கேட்டது.
(தொடரும்.... பாகம் 02 ல்)
No comments:
Post a Comment