🐾இராஜமோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 05 🌾இருளில் ஒரு யுத்தம்🌾
இருளின் பூரண ஆதிக்கம் எங்கும் பரவிக்கிடந்தது. அதனின் நீண்ட பெரும் நாக்குகள் எனும் கொடும் கரங்களை பரப்பி மாளிகை முழுவதும் அந்தகாரத்தை தோற்றுவித்திருந்தது. "ஆனால் இவை யாவற்றையும் துனணயாக கொண்டு செயலாற்றும் மனிதன் யாரராயினும் அவன் அத்தனை சளைத்தவனாக இருக்கமுடியாது.
நாகையின் பெரும் புகழுக்கு சொந்தக்காரர் சூரியவர்மரின் மாளிகையே சதியின் உறைவிடமாக மாறி இருக்கும் நிலை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டறிவது துர்லாபமே.
சூரியவர்மர் என்ன ஆனார்.? அவருக்கும் இங்கே மாளிகையில் நடைபெரும் களபரத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்க வாய்ப்புண்டா? அல்லது அவர் சதிகார்களின் கரங்களில் எக்கு தப்பாக அகப்பட்டுக்கொண்டாரா....? குழப்பங்களுக்கு விடை சதிகார்களை கையும் களவுமாக பிடித்தாலின்றி வேறு வாய்ப்பில்லை.. ஆனால் அது அவ்வளவு எளிதாக நடைபெறுமாவெனவும் தெரியவில்லை. இவை எத்தனை தூரம் போகிறது என்று ஒரு கை பார்த்து விட வேண்டியதுதான்." என யோசித்தபடி நகர்ந்தான் இளவழுதி.
மாடத்திற்கு உள்ளே வநத சில கணங்களுக்குள்ளாக கதவை சாத்தியதோடு "வகையாக மாட்டிக்கொண்டாயா...." வென இறுமாப்புடன் பேசியவன் ஏளனமாக சிரிக்கவும் செய்தான்.
"நடந்தவை அனைத்தும் முன்கூட்டியே தீர்மாணிக்கப்பட்டவை, எனது வருகையும் கவனித்ததோடு நான் அடுத்ததாக யாரை சந்திக்கவிருக்கிக்றேன் என்பதை அறிந்துள்ளனர் எனில் எதிரிகளின் திட்டம் பலமாக இருக்கவேண்டும்." மெல்ல முன்நகர்ந்தான்.
அப்போது , இளவழுதியை நோக்கி சிலர் வரும் அரவம் கேட்டது. அவனது இடது புரமாக வந்தவன் சட்டென வாளை இளவழுதியின் நெஞ்சில் பாய்ச்ச முற்பட்டான், அதிலிருந்து இலாவகமாக பின்நகர்ந்து தனது வாளால் தடுத்ததும் மர்மநபரும் தன்பங்கிற்கு வாளை சுழற்றினான். இதுதான் சமயம் என இளவழுதியின் பின்புறம் தாக்கி சாய்க்கும் நோக்கோடு இரண்டாவது மர்மநபர் விரைவதை அவனது பாதக்குறடுகளின் ஓசையைக்கொண்டு கவனித்த இளவழுதி முதல் மர்மநபரின் தாக்குதலை சட்டென முடிக்க எண்ணி இருக்க வேண்டும் தனது வாளால் மர்மநபரை இரண்டொரு தாக்குதலால் தட்டி பறக்கவிட்டதோடு சரக்கென மர்மநபரின் நெஞ்சில் பாய்ச்சி இழுத்ததும் வெட்டுண்ட மரமாக சரிந்தான். தங்களில் ஒருவன் கதையை முடித்ததோடு தம்மையும் எதிர்கொள்ள தயாராகி விட்ட எதிரி நோக்கி விரைந்தான் இரண்டாவது மர்மநபர்.
முதல்நபரை முடித்த கையோடு அடுத்தவனை எதிர்கொள்ள தயாராக இருந்தான் இளவழுதி. இரண்டாமவன் வாளை சுழற்றியபடி இளவழுதியை நோக்கி நகர்ந்தான். இரண்டாவது மர்மநபரின் வரவிற்காக ஏற்கெனவே தயாராக இருந்தவன் அவன் அருகே வரட்டுமென காத்திருந்து தாக்குதலை தொடங்கினான்.இருவரின் வாட்களும் "படீர், படீர்" என தாக்கிக்கொண்டதால் நெருப்பு பொறி பறக்க தொடங்கின. இளவழுதி எவ்விதமான முகபாவத்தையும் காட்டாமல் தாக்குலை நடத்தியவன் இரண்டாவது மர்மநபரின் ஆவேசமான தாக்குதலை அனாசயமாக தடுத்ததோடு அதற்கு மேலும் சண்டையை வளர்க்க விரும்பாமல் அவனது வாளை தட்டி பறக்கவிட்டதோடு இரண்டுமுறை மர்மநபரின் நெஞ்சில் இளவழுதியின் கூர்வாளிரங்கவே "ஆஆ" என்ற அரற்றலோடு கீழே சரிந்தான்.
இரண்டாவது மர்மநபரின் கதையை முடித்த அடுத்த கணமே, நாற்புறமும் எண்மர் கொண்ட கூட்டம் இளவழுதியை சுற்றி வளைத்தனர். " இருவரை சாய்த்து விட்டதால் இருமாப்பு கொள்ளாதே.... இத்தோடு உன் கதை முடிந்தது" என கொக்கரித்தான் அவர்களின் தலைவன் போன்றவன். எண்மர் கூட்டம் நகர்வது, அவர்களின் பாதக்குறடுகளிலிருந்து எழும்பும் ஒலி அலைகள் அந்த இருள்சூழ்ந்த அறை முழுவதும் எதிரோலித்தன. அத்தோடு அவர்களின் வாட்களை உருவும் ஒளியும் ஒருசேர கேட்டன. அனைத்தையும் கூர்ந்து கேட்டுக்கொண்டதோடு அடுத்து தான் செயலாற்ற வேண்டியதையும் ஒருவாராக முடிவு செய்திருந்தான். அறைக்கு உள்ளே வந்த சிறுது நேரத்திலேயே அங்கிருந்த இருளுக்கு இளவழுதியின் விழிகள் பழகியிருந்தது.
தன்னை சுற்றி வளைத்து இருக்கும் எண்மரை எதிர்கொள்ள தயாரானான் இளவழுதி. எண்மரின் தாக்குதலையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டான். தான் நின்ற இடத்திலிருந்தபடியே சக்கரவட்டமாக சுழன்று சுழன்று தாக்கினான். "படீர், படீர்" என அவன் தாக்கியவேகத்தில் தனது முன்பாக இருந்த மூவரின் கதையை கணநேரத்தில் முடித்து விட்டிருந்தான். அதே வேகத்தில் அரைவட்டமாக சுழன்று பின்னால் நெருங்கியவர்களை தாக்கினான். சிலகணம் நிகழ்ந்த தாக்குதலில் அவர்களை பின்னடைய செய்ததோடு அவர்களில் மேலும் இருவரை சாய்த்திருந்தான்.
எதிரிகளின் எண்ணிக்கை மூன்றாக குறைந்திருந்தது. நடந்துகொண்டிருந்த தாக்குதலில் எதிரிகளை தன்னைநோக்கி இழுத்துக்கொண்டிருந்தானே ஒழிய இளவழுதி அவர்களை நோக்கி நகர்ந்தானில்லை. அவன் நின்ற இடத்திலேயே சுழன்று சுழன்று தாக்கினான். தொடர்ந்த அவனது தாக்குதலால் கணநேரத்தில் மேலும் இருவரின் கதை முடித்துவிட்டதோடு மூன்றாம் நபரின் வாளை தட்டி காற்றில் பறக்கவிட்ட, இளவழுதியின் வாள் அவனது கழுத்தை தடவியபடி "நகர்ந்தால் மற்றவர்களுக்கு ஏற்பட்டதுதான் உனக்கும் ஏற்படும் " என எச்சரித்தவன் மர்மநபரே அப்படியே வாள் முனையில் நகரத்தூண்டினான்.
ஒரு தனி மனிதனால் இவ்வளவு விரைவாக செயலாற்ற முடியுமா.....? உண்மையில் மனிதன் தானா...? இல்லை. இரத்தம் குடிக்கும் மிருகமா போல் அல்லவா இவன் வாள்சுழலுகிறது.இவண் வாள் சுழலும் பக்கமெல்லாம் வரிசையாக நமனுலகிற்கு போய்விடுகிறார்கள், நமது வீரர்கள். இனியும் இங்கு வீண் வாய்ச்சவடால் பேசிக்கொண்டு நேரத்தை கடத்தினால் நமது உயிர் அரைக்காசு பெறாது" என எண்ணியதாலோ என்னவோ மர்மநபர்களின் தலைவன் சண்டையின் இடையே மாளிகைவிட்டு தப்பி ஓடிவிட்டிருந்தான். வாயில் கதவு டமாலென சாத்தும் சத்தம் மாளிகை முழுவதும் எதிரொலித்தது.
சத்தத்தை கேட்டதும் என்ன நடந்திருக்குமென ஊகித்துக் கொண்டனர் இளவழுதியும் அகப்பட்டுக்கொண்ட மர்மநபரும் . மர்மகும்பலின் தலைவன் காரியம் கைமீறி போனதும் கம்பி நீட்டி விட்டதை உணர்ந்தவன் சற்றும் தாமதிக்காமல் தன் கழுத்தில் தடவியபடி இருந்த இளவழுதியின் வாளால் சரக்கென சங்கை அறுத்துக்கொண்டு கீழே சரிந்தான். உதிரம் குபுகுபுவென கொட்டிக்கொண்டிருந்தது. "அடடே... இப்படி ஆகிவிட்டதே. கையில் அகப்பட்ட ஒரு நபரையும் இப்படி பரிகொடுத்து விட்டமே...." என எண்ணியபடி மாடத்தின் சாளரமருகே கவனமுடன் சென்று தெருவினை நோட்டமிட்டவன் அதன் கதவுகளை நீக்கினான். குளுமையான இளம்காற்று உள்ளே நுழைந்தது, நன்றாக மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.
கையில் வாளை ஏந்தியபடி மாடத்தை சுற்றி வந்தான். அப்போது மாடத்தின் கீழ் பகுதியில் அமைந்த அறையிலிருந்து யாரோ ஒருவர் "ம்ம்ம்" மென முனகும் சத்தம் மெல்ல கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி வாளை நீட்டியபடி எதற்கும் தயாராகி விடுவிடுவென கதவு அருகே நின்று அமைதியாக வேறெதுவும் சத்தம் வருகிறதா என கூர்ந்து கேட்டான். சில கணங்கள் கடந்தபின்பும் அந்த அறையிலிருந்து யாரோ ஒருவர் "ம்ம்ம்" மென அரற்றுவது மட்டுமே கேட்டது . வேறெந்த ஒலியும் உணரவில்லை. "சரி, வருவது வரட்டும் " என உணர்ந்தவன் கதவருகே சென்று தாழ்ப்பாளை துளாவியபோது, கதவு வெளிப்புறம் தாளிட்டுருப்பதை கண்டதும் வலது கரத்திலிருந்த வாளை இடது கரத்திற்கு மாற்றியதோடு இடையில் இருந்த குருவாளை உருவி தாழ்ப்பாளை பெயர்த்து எடுத்தான். அப்படியொன்றும் பெரிய சிரமம் தாழ்ப்பாளை அகற்றுவதில் இருக்கவில்லை. அவனது குறுவாளின் ஒரே முயற்சிக்கு தாழ்ப்பாள் பணிந்து வழிவிட்டது. கதவை நீக்கி உள்ளே நுழைந்தான். அப்படியொன்றும் பெரிய அறையில்லை. அச்சிறிய அறையின் மூலையிலிருந்து தான் சத்தம் வந்தது. சத்தம் வந்த பக்கமாக மெதுவாக சென்று கீழே குனிந்து பார்த்தபோது ஒரு இளம்பெண்ணின் கை, கால்களை கயிற்றால் இறுக பினணத்ததோடு அவளது வாயில் துணியை திணித்து கட்டப்பட்டு கீழே உருட்டி விட்டிருந்தனர்.
வாளை இடையில் செருகிக்கொண்டு குறுவாளால் அந்த பெண்ணின் வாயை கட்டி இருந்த கட்டை நறுக்கி விட்டதோடு அவளது வாயில் திணித்திருந்த துணியை அகற்றினான். பெரிய நீளமான துணியை அவளது வாயில் திணித்திருந்தார்கள். துணியை அகற்றியதும் "அம்மா " வென கத்த தொடங்கினாள். "சிறுது, பொறுத்து கொள்ளுங்கள், தங்களது மற்ற கட்டுக்களை அகற்றுகிறேன்" என கூறியதோடு மளமளவென கை, கால்களை கட்டியிருந்த கட்டுக்களை குறுவாளால் அறுத்தெறிந்தான். எத்தனை நேரம் கட்டப்பட்டு கிடந்தாளோ தெரியவில்லை. கட்டுக்களை அவிழ்த்தும் அவளால் சரிவர கை மற்றும் கால்களை இயக்க முடியவில்லை. இளவழுதியை மிரட்சியுடன் பார்த்தாள். நீண்டநேரமாக இருளில் இருந்ததாள் இருள் இருவருக்கும் பழகியிருந்தது.
"நீங்களே , எழுந்து விடுவீர்களா.... இல்லை .... உதவ வேண்டுமா" என்றான் தயங்கியபடி இளவழுதி.
அந்தப்பெண்ணிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. "இவன் நல்லவனா, இல்லை கெட்டவனா..... யாதொன்றும் புரியவில்லை." குழப்பத்துடன் மளங்க மளங்க விழித்தபடி பயத்துடன் காணப்பட்டாள்.
"தங்களிடம் ஒன்று கேட்டேன். ஆனால் தாங்கள் எந்த பதிலும் கூறவில்லை" என்றவன் இளம்பெண்ணை கூர்ந்து கவணித்தான். அதன் பின்பும் அவள் எந்த பதிலும் கூறாததால் "தாங்கள் வருந்த வேண்டாம். எண்ணால் தங்களுக்கு எந்தவிதமான இன்னலும் உண்டாகாது. நான் தங்களுக்கு வாக்களிக்கிறேன்." என்றான்.
தனது கை, கால்களை நீட்டியவள், சிறுது நேரத்திற்கு பின்பு எழுந்து கை, கால்களை உதறி ஆசுவாசப்படுத்திக்கொண்டவள் "தங்களுக்கு உதவிக்கு நன்றி அய்யா" வென தலைவணங்கி சொன்னாள்.
"ஆபத்தில் இருந்த உங்களை காப்பாற்றியது எனது கடமை " என்றவன் அறையைவிட்டு வெளியேறினான். அவனைத்தொடர்ந்து இளம்பெண்ணும் வெளியேறினாள்.
அதன்பின் சிலகணங்கள் அங்கு அமைதி மட்டுமே நிலவியது. அந்த அமைதியை இளவழுதியே உடைத்தான். "தாங்கள் யார்? சூரியவர்மர் எங்கே? என்றான்.
"நான் சாதாரண பணிப்பெண் அய்யா, நானும் எனது அம்மாவும் சூரியர்மரை காணவே இம்மாளிகைக்கு வந்தோம்....." என்றவள் சற்று தயங்கியபின் "இங்கு வந்து இக்கட்டில் சிக்கிக்கொண்டோம்...." என்றாள் தேம்பி அழுதபடி.
"உங்கள் உடன் வந்த தங்கள் தாயார் எங்கே?"
"என்னோடு வந்தது எனது தாயார் அல்ல..." என்றாள் தயங்கியபடி.
"பின். யார்?"
"அது வந்து....." என இழுத்தவள் " என்னுடன் வந்தவரின் பணிப்பெண் நான்" என்றாள் இளம்பெண். "உடன் வந்த பெண்மணி குறித்த இரகசியத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை""என்பதை உணர்ந்ததால் மேற்கொண்டு அதுகுறித்து அவன் வினவில்லை.
தீடிரென "அய்யோ.... அம்மா... தாங்கள், எங்கு உள்ளீர்கள்?" என்றவள் உரக்க கத்தியபடி, அறை முழுவதும் தேடி ஓடினாள்.
"சிறிது, பொருத்தருளுங்கள். முதலில் விளக்கை ஏற்றுவோம், அதன்பின் அவரை தேடுவோம்." சொன்னவன் ஒருவழியாக சிறிய விளக்கு ஒன்றை கண்டுபிடித்து ஒளியேற்றினான். விளக்கின் ஒளியில் அறை முழுவதும் இப்போது தெளிவாக காண முடிந்தது.நீண்டநேரம் இருளிலே உலவியதால் வெளிச்சத்தை கண்டதும் விழிகள் கூசின இருவருக்கும்.
வெளிச்சத்தில் அங்கு இளவழுதியால் வெட்டி சரிக்கப்பட்ட மர்மநபர்கள் பிணமாக ஆங்காங்கே உதிரத்தால் குழித்து கிடந்தார்கள். பார்க்கவை பயங்கரமாக இருந்தது. எண்ண நடந்திருக்குமென ஒருவாராக இளம்பெண் ஊகித்துக்கொண்டாள்.
விளக்கை இளம்பெண் தன் கையில் எடுத்துக்கொண்டு மாடத்தை நோக்கி நகர்ந்தவள் அங்கு சிறிய துண்டுகளாக உடைந்த வளையல்கள் மாடத்தை அடையும் படிகளில் கிடந்தன. "அம்மா....அம்மா" வென பெரும் குரலெடுத்து கத்த தொடங்கினாள். இளம்பெண்ணின் சத்தம் கேட்டு பின்னால் வந்தவன் "என்ன ஆயிற்று, ஏன் கத்துகிறீர்கள்?" என்றான்.
அவள் எதுவும் பேசாமல் தேம்பி அழுதபடியே படிகளில் கிடந்த வளையல் துண்டுகளை நோக்கி கரத்தை நீட்டினாள்.
"இதன் வழியாக தானே நாம் வந்தோம், இருளாக இருந்ததால் நமக்கு தட்டுப்படவில்லை போலும்" என நினைத்தவன் இளம்பெண்ணின் கையிலிருந்து விளக்கை வாங்கிக்கொண்டு படிகளில் இறங்கிவந்தான். மாளிகைக்கு வந்து மாடத்திற்கு செல்வதற்கு முற்பட்டபோது, "எனது காலில் இங்குதானே பெண்கள் தலையில் அணியும் ஆபரணம் கிடைத்தது" என எண்ணியதோடு தனது இடையில் பாதுகாப்பாக வைத்திருந்ததை தடவி, அது அங்கிருப்பதை உணர்ந்தவன் விளக்கை கொண்டு மாளிகையை சுற்றி தேடலானான்.
ஒன்றுக்கு மேற்பட்ட அறைகள் அங்கு இருந்தன. மாளிகை நல்ல உயர்தரமான வேலைப்பாடுகள் நிறைந்த தேக்கு மரக்கதவுகளை கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. அறை முழுவதும் வண்ணமயமான அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவற்றை ஒருகணம் கவனித்தவன் மேற்கு பகுதியில் அமைந்த அறைகளை நோக்கி சென்றான். அங்கு உதிரம் திட்டுதிட்டாக சிறிய அளவில் பரவிக்கிடந்தன. உதிரம் பட்டையாகவும் கோடாகவும் அங்கிருந்த அறைநோக்கி இருந்தது.
உதிரத்தை தாண்டி அந்த அறையை அடைந்தபோது இளம்பெண்ணும் அவனருகே வந்தவள் உதிரத்தை கண்டவள் பதறி மீண்டும் கத்த ஆரம்பித்தாள். சற்றும் யோசிக்காமல் அறையை மூடியிருந்த தாழ்ப்பாளை குறுவாளால் இளவழுதி உடைத்தான். இருவரும் உள் நுழைந்தபோது அங்கு இடைப்பகுதி உதிரத்தால் தெப்பலாக நனைந்தபடி அறைவாசலை நோக்கி கிடந்தாள் சொப்பனத்திலும் கண்டிராத பேரழகு மங்கை ஒருத்தி. உடன் வந்த இளம்பெண் அதை பார்த்ததும் மூர்ச்சையாகி கீழே சரிந்தாள்.
(தொடரும்.... அத்தியாயம் 06ல்)
No comments:
Post a Comment