மலர்விழி நன்கு படித்த நவநாகரிக உலகில் தான் உண்டு தன் வேலையுண்டு என சராசரியான வாழ்க்கைவாழும் பெண்களில் ஒருத்தியாக வாழ எண்ணாமல் இயன்றதைசெய்வோம் இல்லாதவர்க்கு என்பதில் அவளுக்கு இணைஅவளே.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை உதவியாளராக பணிபுரிந்து வருகிறாள். தினம்தோறும் பூவைத்தேடி அலையும் வண்டுகளாய் தீர்வுகளை தேடி வரும் எத்தனை மனிதர்கள், அவர்களுக்குத்தான் எத்தனை பிரச்சினைகள். கடந்து பழகினால் நடந்துவந்த பாதையும் பழக்கமென எண்ணிக்கொள்வாள்.
அன்றும் அப்படித்தான் வழமைபோல் பணிமுடித்து வந்தவள் உடலிலிருந்து உயிரை உறிஞ்சிவிட்டு சக்கையை மட்டும் இருக்கையில் யாரோ எறிந்துவிட்டுபோன இடிவிழுந்த மரமாய் அமர்ந்திருந்தாள் மலர்விழி.
"அக்கா.... அக்கா...." வென அழைத்துக்கொண்டே வெளியே வந்தாள் குழலி. அவளைக்கண்டதும் பதறியபடி வந்தாள் மலர்விழியின் ஒரே தங்கை குழலி.
குழலி அருகில் வந்தும் எந்தவிதமான உணர்ச்சியும் அற்று எனக்கென்ன என்பதுபோல் இருந்தாள். பச்சை வண்ண ஆடை எப்போதுமே அவளுக்கு மிகவும் பிடிக்கும். மரகதப்பாய் விரிக்கும் நெல்வயல், நீண்டு கிளைபரப்பி செழித்து குலைதள்ளியிருக்கும் வாழை, அழகான அருகம்புல் சோலை என அவள் விரும்புவதும் பசுமைதான், அதனால் தான் அவள் அணியும் ஆடை பெரும்பாலும் பச்சை வண்ணத்தில் இருக்கும். அன்றும் அதே ஆடைதான் அணிந்திருந்தாள் ஆனால் மகிழ்ச்சி தான் மறந்து போய் விட்டாள். இல்லை இல்லை மறந்து போய் அல்ல அதை அடியோடு புதைத்து விட்ட மெளனத்தில் உறைந்துவிட்டாள் மலர்விழி.
"அக்கா.... அக்கா.... ஏனடி இந்த வேதனை? , சொல்லு...... இது நீதானா.....?? என்னால் நம்பமுடியவில்லையே. நீ பார்க்காத துயரமா.....??? " என்றாள் ஆதங்கத்தில் குழலி.
இருளில் புதைந்துகிடந்த தன் தலையை உயர்த்தி விழிகளால் தன்னருகே வரும்படி குழலியை அழைத்தாள். இருக்கையில் வேதனையின் வலியாய் அமர்ந்திருந்த மலர்விழியை இறுகத்தழுவி அணைத்துக்கொண்டாள் குழலி.
"யேனக்கா..... என்னிடம் சொல்லக்கூடாத துயரமா.....?" என்றாள் மலர்விழியின் விழிகளில் தன் விழிகளை சுழலவிட்டபடி குழலி.
"தங்காய்.... உன்னிடம் சொல்லாமல் யாரிடம் சொல்லப்போகிறேன்."
"அப்படியானால் சொல்லுக்கா...." என்றாள் வாஞ்சையாக.
"ஏன் வாழ்க்கையிலெ இருந்த ஒரே ஆச, லட்சியம் எல்லாம் நீ தான். உன்ன நல்லபடியா பார்த்துக்கிறத விட வேற எதுவும் எனக்கு இல்ல தங்காய். ஆனால் அது இப்ப கானல் நீராப் போச்சு...." என்றவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
"எல்லாம் அந்த மாணிக்கம் செஞ்ச வேல தானா..... எனக்குத்தெரியும் அவன் திருந்தவே மாட்டான்...."என்றாள் கோபமாக குழலி.
" கல்யாணமான கொஞ்சநாளிலிருந்தே அவன் புத்தி மிருகமா மாறிப்போச்சு, சரி , இவன் நமக்கு தோதுபடமாட்டான் என முடிவுபண்ணி சட்டப்படி விடுதலை பத்திரம் கொடுத்ததோட எல்லாம் முடிஞ்சு போச்சுனு நெனச்சப்ப நான் வேல பாக்குற இடத்துலயும் வந்து தேவையில்லாம பெரும் தொந்தரவு செய்யுறத பொறுத்துக்கிட்டேன். அதுமட்டுமில்லாம நான் தேடித்தேடி குருவிபோல சேர்த்து வச்ச அத்தனையும் அபகரிச்சுக்கிட்டான். சரி போனா போகுதுனு விட்டா ஆசையாய் நான் நான் பார்த்துப்பார்த்து உனக்காக தேர்வு பண்ணி வச்சிருந்த மாப்பிள்ளையை எப்படியோ சதிபண்ணி கலச்சுவிட்டுட்டான்" என்றாள் தேம்பியபடி மலர்விழி.
"நான்தான் அப்பவே சொன்னேனே..... அவன் ஒரு மாதிரி இருக்கான். இவன் வேணாம்னு சொன்னேன், நீ கேட்கவே இல்ல. அதுமட்டுமா அவன்கூட வாழ்ந்த மூணு வருசத்திலெ எத்தனை தடவ உன்ன அடிச்சிருப்பான், அத்தனையும் பொருத்துக்கிட்ட , ஒருநாளாவது அத வெளிகாட்டி இருப்பியா.... அதோட விட்டானா..... மிருகமா மாறி உன்னோட வலதுகைய திருக்கி ஒடிச்சு விட்டுட்டான். அப்பவே அவன நீ ஒரு கை பார்த்து இருக்கனும். நீ அவன் பன்றதுக்கெல்லாம் மன்னிச்சு விட்டதால வந்த வினை. இன்னிக்கு நீ எவ்வளவு தெளிவா இருக்க நீ கத்துக்கிட்ட பாடம் அதிகம். அதுலெ இருந்து நீ மீண்டு வர நீ பட்டபாடு இருக்கே அப்பப்பா..... சொல்லி மாளாது . அத்தனையும் கடந்து வந்த உனக்கு ஏனடி இந்த வேதனை? விட்டு தள்ளு.... அதுக்கு மின்னால இதெல்லாம் ரெம்ப சுளுவா கடந்திருவெ அக்கா ." என்றவள் "இந்த மாப்பிள்ளை போன வேற மாப்பிள்ளை இதுக்கு போய் இப்படி வருந்தலாமா...நீ....??"
"உனக்கு பார்த்த பையன் அவ்வளவு அழகா, நல்ல பொருத்தமா இருப்பான்டி தங்காய். ஆளு கருப்பா இருந்தாலும் நல்ல பையன். யென்னோட வாழ்க்கை தான் வீணாப்போச்சு உனக்காவது நல்லபடியா அமையட்டுமேனு நெனச்சேன். எல்லாம் அந்த மாணிக்கம் பைய செஞ்ச வேலயால அத்தனையும் குடி முழுகிப்போச்சு. எனக்கொரு குழந்தை இல்லாத கொடுமைய தீர்க்க வந்த சாமியா உன்ன பார்த்தேன். அதுக்கொரு வழிய அந்த ஆண்டவன் காட்டலியே."என்றாள் துக்கத்தில்.
"யேனக்கா....வருத்தப்படுறே....? நான்தான் உன்னோட புள்ள இல்லையா....??" என்றாள் ஏக்கமாக மலர்விழியின் முகமலரை நோக்கி.
"அடியே ..... யேன் ராசாத்தி..... "குழலியை இறுக அணைத்தவள் "நம்ம தாயும் தகப்பனும் போனபின்ன நீ மட்டும்தான்டி எனக்கு வாழ்க்கையில் இருந்த ஒரேபிடிப்பு. உனக்காகத்தேன் நான் வாழ்றதே...... எப்படியும் நீ கொஞ்ச நாளுல வேற வீட்டுக்கு வாழப்போயிருவேங்கிற நெனப்புலெ நெருப்ப அள்ளிக்கொட்டிட்டான்டி அந்த மாணிக்கம். யென்னமாதிரி உனக்கும் குழந்தை பாக்கியம் இல்லனு ஒரு பொய்ய மாப்பிள்ளை வீட்டுல சொல்லி உன்னோட வாழ்க்கையை நாசம்பண்ணிட்டான் அந்தப்பய, என்னாலதான் உனக்கு நல்ல வழி காட்டமுடியலியே தங்காய்.... பெண்ணாக பிறந்ந நமக்குனு எழுதிவச்ச சாபக்கேடு இது. ஒரு சொல்லு ஆள மெல்லும் ஒரு சொல்லு கொல்லும்பாங்க ஆனா பொம்பளிங்க புள்ள சுமக்கிற வரம் வாங்கியது வரமா தெரியல, அதுதான் பொம்பளிங்களுக்கு பெரிய சாபமா போயிருச்சு. இந்த நூற்றாண்டுலெயும் இத நம்புற மக்க இருக்கிற வரைக்கும் இது மாறப்போறதில்ல. அதனாலதான... மாணிக்கம் மாதிரி பையக ஆடுறானுக..... பேசாம கருப்பைய பிடிங்கி தலையசுத்தி ஊர் முச்சந்தியில வீசிப்புட்டு போங்கடா உங்களாலெ முடிஞ்சா புள்ளய பெத்துக்கோங்கனு திமிரெடுத்த ஆம்பள பையக மூஞ்சியில காரி துப்பிட்டு வரலாம் போலிருக்கு. நமக்குனு நல்லது கெட்டது பார்த்துச்சொல்ல நாதியத்துப்போனோம்." என்றவள் குழலியின் நெத்தியில் ஆதுரமாய் முத்தமிட்டு , இருளெனும் மேகப்பொதியின் மேலேறி ஒளிர்ந்து கொண்டியிருந்தாள் வெண்மதியாய் மலர்விழி.
No comments:
Post a Comment