🐾இராஜமோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 37 🌾செயல் ஒன்று; விளைவு இரண்டு🌾
நான்காவது அறைக்குள் நுழைந்த இளம்வழுதியும் அழகனும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஏற்கனவே அங்கு இருந்த சத்திர அதிகாரி பேசும் நிலையைக் கடந்து விட்டிருந்தார். அவர்கள் உள்ளே வந்த பின்பும் என்ன பேசுவது என்று தெரியாமல் பதட்டத்தில் இருந்தார் . அவரது விழிகள் கட்டிலை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. சத்திரத்தில் பணி செய்து வந்த இத்தனை காலத்தில் இதுவரை இப்படி ஒரு நிகழ்வை அவர் சந்தித்தது கிடையாது. இதனை எப்படி எதிர்கொள்வது என்ற பதற்றம் உள்ளூர ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பயம் அதிகமான போது தான் வேறு வழியின்றி இளம்வழுதியை கத்திக் கூப்பிட்டு இருப்பார் போலும்.
நடந்த நிகழ்வுகளின் விபரீதத்தினை எப்படி எதிர்கொள்வது என்ற பதட்டம் அங்கிருந்த அனைவருக்கும் இருந்தது. அதனால் மௌனத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள். அறை முழுவதும் குருதியின் வாடை பரவிக் கிடந்தது.
சாளரத்துக்கு அருகே இலவம் பஞ்சு வைத்து தைக்கப்பட்ட மெத்தையை கொண்ட கட்டிலின் மேலே, ஐம்பது வயதினை கடந்து விட்டிருந்த தஞ்சையின் பெரும் வணிகரின் விழிகள், மேற்கூறையை வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்தன. ஆறடிக்கு மேல் உயரத்துடன் சீன பட்டாடை அணிந்த கம்பீரமான, அந்த உடலிலிருந்து தலை துண்டாக வெட்டப்பட்டு தலையணையில் கிடந்தது. வெட்டப்பட்ட இடத்திலிருந்து பெருக்கெடுத்த குருதி தலையணையை நனைத்ததோடு கட்டிலின் கீழே வழிந்தோடி அறையில் பரவி விட்டிருந்தது.
அவ்வறையில் சூழ்ந்திருந்த மௌனத்தை கிழித்துக்கொண்டு "இத்தகைய கொடூரத்தை செய்ய எப்படித்தான் அவர்களால் முடிந்ததோ?" என்றான் அழகன்.
"நான் இதுவரை இப்படி ஒரு சம்பவத்தை என் ஆயுளில் பார்த்ததே கிடையாது. இவ்வாறு நடக்கும் என்று கனவிலும் கூட நினைத்ததில்லை " துக்கம் தொண்டையை அடைத்ததால் குரல் கம்மிக்கொண்டு பேசினார் சத்திர அதிகாரி.
வெட்டப்பட்ட வணிகரின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்த இளம்வழுதி "எங்களை மீறி, நீ என்ன செய்து விட முடியும். அப்படி நினைத்தால், அதற்கான பதில் இதுதான் என செயலில் காட்டி உள்ளார்கள் சதிகாரர்கள்" என்றான் இளம்வழுதி.
இளம்வழுதியின் அருகில் வந்த சத்திர அதிகாரி "தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு தானே வணிக சாத்துகள் புறப்பட்டு வந்திருந்தன. அப்படி இருக்கையில் இவை எவ்வாறு நடந்தது?" என்றார்.
"உங்களுக்கு சத்திரத்தில் நடந்துவிட்ட இந்த சம்பவம் மட்டும்தான் தெரியும். வெளியே நடந்த விபரீதத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்" என சத்திர அதிகாரி பார்த்து கூறினான் இளம்வழுதி.
"என்னைத்தான் அவர்கள் கை கால்களை கட்டிப் பிணைத்து விட்டார்களே. பிறகு எப்படி தெரியும்."
"அவர்கள் திட்டமிட்டு தான் காரியங்களை செயலாற்றி உள்ளார்கள்"
"வேறு என்ன செய்தார்கள்?"
"சிறிது யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே அனைத்தும் புரியும். முதலில் என்ன நடந்தது?"என்றான் இளம்வழுதி.
"வணிக சாத்துகளின் கடைசியில் இருந்த மாட்டு வண்டி, தீப்பிடித்து எறிந்ததாக கூறினீர்கள்?" என்றான் அழகன்.
"பிறகு?"
"தடையாக இருந்த என்னையும், சத்திர அதிகாரியையும் முடக்கி போட்டு விட்டார்கள்"
"அதன் பின்னால்?"
"சத்திரத்தில் தங்கியிருந்த பெரும் வணிகர் ஒருவரை கொலை செய்து விட்டார்கள்"
"தடுப்பதற்கு யாரும் இல்லாததால் அவர்களது காரியம் சுலபமாக நிறைவேறிவிட்டது. அதுமட்டுமின்றி அவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து செயலாற்றி இருக்க வேண்டும். முதல் அணி வண்டியை தீ வைக்க சென்றிருக்க வேண்டும். அங்கு தீப்பிடித்து எறிந்ததும் அனைவரும் கவனமும் அதை நோக்கி நகர்ந்த போது இரண்டாவது அணி சத்திர அதிகாரியை முடக்கி போட்டுவிட்டு வணிகர் அறைக்குள் புகுந்து அவரை கொலை செய்திருக்க வேண்டும் " என்றான் இளம்வழுதி.
"அப்படி என்றால் என்னை தாக்கியது யார்?"என்றான் அழகன்.
"நீ கேட்பதும் நியாயமாகத்தான் உள்ளது. அப்படி என்றால் மூன்றாவது அணி முதல் அடுக்கில் உள்ள இரண்டாவது அறையில் இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்தக் கூட்டத்தை இயக்கியவன் அந்த அறையில் தான் இருந்து அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். " என்றான் இளம்வழதி.
"காரியம் முடிந்ததும் அனைவரும் கிளம்பி போய் இருப்பார்கள்" என்றான் அழகன்.
"நீ என்ன கூறினாய்?" என்றான் இளம்வழுதி.
தயக்கத்துடன் "காரியம் முடிந்ததும் அனைவரும் கிளம்பி போய் இருப்பார்கள் என்றேன்" எனக் கூறினான் அழகன்.
திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை "அழகா! நீ இங்கேயே இரு!" என்றவன் சத்திர அதிகாரியைப் பார்த்து "வாருங்கள் ஐயா! மற்ற வணிகர்களின் நிலை என்னவென்று பார்ப்போம்" என கூறிக்கொண்டே அறையை விட்டு வெளியேறி அடுத்து இருந்த அறை வாசலுக்கு சென்றான். அறையின் கதவு வெளியே தாளிடப்பட்டிருந்தது. தயக்கத்துடன் கதவினை திறந்து பார்த்தான் இளம்வழுதி.
அவன் பின்னால் வந்த சத்திர அதிகாரி கையில் இருந்த விளக்கின் ஒளியில் அறைக்குள் இருவர் கட்டப்பட்டு கீழே கிடந்தது தெரிந்தது. விடு விடுவென அங்குகிடந்த வணிகர்களின் கட்டுக்களை அவிழ்த்தெடுத்து அவர்கள் சுய உணர்வு பெறுவதற்கு உதவி செய்து கொண்டிருந்தான். சத்திர அதிகாரியும் விளக்கினை அங்கிருந்த மர ஆசனத்தில் வைத்துவிட்டு வணிகர்கள் எழுந்து நிற்க உதவி செய்தார். நீண்ட நேரமாக இருளில் கிடந்ததால் அவர்களது விழிகளுக்கு எதுவும் தெரியவில்லை. வெகு சிரமத்திற்கு பிறகு தங்களது சுய உணர்வுக்கு வந்தார்கள் வணிகர்கள்.
"யாரோ தெரியவில்லை திடீரென எங்கள் மீது பாய்ந்து தாக்கி விட்டார்கள். அவ்வளவு தான் தெரியும்."என்றார் அவ்விரு வணிகரில் வயதானவர்.
"ஐயா நீங்கள் இவர்களிடம் பேசிக் கொண்டிருங்கள். நான் மற்ற அறைகளில் உள்ள வணிகர்களை பார்த்துவிட்டு வருகிறேன்" என சத்திர அதிகாரி அடுத்திருந்த அறையினைச் சோதிக்கச் சென்று விட்டார்.
"நாங்கள் பார்க்கும் போது சதிகாரர்கள் அந்த அறையில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்" என கொலை செய்யப்பட்ட வணிகரின் உடல் கிடந்த அறையைக் காண்பித்தார்கள் அவ்விரு வணிகரும்.
மீண்டும் கொலை செய்யப்பட்ட அறைக்குள் நுழைந்த இளம்வழுதியிடம் "இதன் காரணமாக பெரும் பிரச்சனைகள் உருவாகிவிடும். அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?" என அவனிடம் கேட்டாள் அழகன்.
"உண்மையில் சதிகாரர்கள் இங்கு செய்திருக்கும் கொலை ஒன்றல்ல, இரண்டு" என அழகனைப் பார்த்துக் கூறினான் இளம்வழுதி.
"இங்கு ஒன்றுதானே உள்ளது ஐயா. வேறு அறைகளில் யாரேனும் கொலை செய்யப் பட்டுள்ளார்களா ?" எனப் பதட்டத்தில் கேட்டான்.
"நடந்திருப்பது ஒரு கொலை தான் இதுவரை. ஆனால் விளைவுகள் இரண்டு"
"அப்படி என்ன நடந்து விடப் போகிறது இதனால்?" என்றான் புரியாமல் குழப்பத்தில் அழகன்.
"வணிகர் ஒருவரை கொலை செய்திருப்பதன் மூலம் எனது பாதுகாப்பின் மீது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளார்கள். இதனால் என் மீதான நம்பிக்கையை வணிகர்களிடம் இழந்துவிட்டேன். அதனால் வணிகர்கள் தங்களது சேவைகளை தொடர போவதில்லை. இதனால் சோழ தேசத்தின் ஒட்டுமொத்த வணிகமும் சீர்குலைந்து போகும் பேராபத்தை உருவாக்கி விட்டார்கள். செயல் ஒன்று விளைவு இரண்டு. இப்போது புரிகிறதல்லவா?" என அழகனைப் பார்த்து கூறினான் இளம்வழுதி.
"இப்போது நன்றாக புரிகிறது ஐயா. இத்தனை பெரிய அபாயத்தில் நானும் உங்களை இழுத்து விட்டேன். என்னை மன்னியுங்கள். நீங்கள் வரும் வரை நான் காத்திருந்து இருக்க வேண்டும்" எனத் துயரத்துடன் கூறினான் அழகன்.
"உண்மையை கூறுவது எனறால், நீ இதனில் தலையிட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் கண்டிப்பாக தங்கள் காரியத்தை செய்திருப்பார்கள். அதனால் நீ ஒன்றும் வருத்தம் கொள்ள வேண்டாம். அவர்களது இலக்கு என்னை வீழ்த்துவதன் மூலம் சோழத்தை சாய்ப்பது தான். அதனை ஏறக்குறைய நிறைவேற்றும் முயற்சியில் இப்போது அவர்கள் வெற்றி பெற்று இருக்கலாம். இவை நிலையானது அல்ல. மாற்றத்தை உண்டாக்க நாம் தயாராக வேண்டும். இனியும் பொறுத்திருந்தால் ஆகப் போவது ஒன்றும் இல்லை" என மனதிற்குள் உண்டான தெளிவுடன் அழகனைப் பார்த்துக் கூறினான்.
" தாங்கள் கூறும் பணியைச் செய்யக் காத்திருக்கிறேன் ஐயா" என்றான் அழகன் முனைப்புடன்.
"முதலில் சத்திர அதிகாரி வரட்டும். மற்ற அறைகளில் என்ன நிலவரம் என்று முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதன்பின் தான் மற்றவற்றைப் பார்க்க வேண்டும்"
கொலை நடந்த அறைக்கு வெளியே உள்ள நடைபாதையில் தடதடவென அனேகம் பேர் வரும் பாத குருடுகளின் ஓசை எழும்பியது. ஓசைகளின் தீவிரம் அதிகரித்து இருந்தபோது எல்லோரும் அந்த அறைக்குள் திபு திபு வென உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அவர்களது விழிகளில் அத்தனை தீவிரமான கோபம் உருவாகி பெரும் நெருப்பை கொட்டும் எரிமலையாக மாறிக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது தாமதித்தால் அவர்கள் நிலை கட்டுக்குள் அடங்காமல் போய்விடும் சூழல் உருவாவதைக் கண்டுகொண்ட இளம்வழுதி "அனேகம் பேர் வேண்டாம். முக்கிய நபர்கள் மட்டும் உள்ளே இருங்கள், மற்ற அனைவரும் வெளியேறுங்கள்" எனக் கூறி அவர்களை வெளியேற்ற முயன்றான்.
அவர்களது விழிகளில் தெரிந்த கோபக்னியால் அவனை எரித்து விடுவது போல் பார்த்தனர். எல்லை மீறி செல்லும் அபாயமும் அவ்விழிகளில் தெரிந்தது. அதனைக் கண்டு கொண்ட சத்திர அதிகாரி "பாடி காவல அதிகாரி கூடியபடி ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளியில் நில்லுங்கள்" எனக்கூறி அவர்களை வெளியேற்ற முயன்றார். அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.
அங்கு கூடிவிட்ட வணிகர்கள் யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் இல்லை. "எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? எங்களுக்கு என்ன நடந்தது என்று தெரிந்தாக வேண்டும்?" என அனைவரும் கூட்டமாக கத்தத் தொடங்கி விட்டார்கள்.
"நடந்தவற்றை முழுவதுமாக தெரிய வேண்டுமானால் அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை. முதலில் அனைவரும் அறையை விட்டு வெளியேறி வெளியே காத்திருங்கள். அப்போதுதான் அனைத்திற்கும் தீர்வு காண முடியும்" என்றான் இளம்வழுதி.
"உமக்கென்ன ஐயா? இழப்பு எங்களுக்கல்லவா?, நீங்கள் எளிதாக எதனையும் எடுத்துக் கொள்ள முடியும். எங்களால் இயலாது?" என அவர்களில் சிலர் ஆக்ரோசத்துடன் கத்தத் தொடங்கி விட்டார்கள்.
உருவாகி இருந்த புயலுக்கு வெவ்வேறான பெயர்களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்த வணிகர்கள். அப்போது எரியும் தீயில் எண்ணை வார்த்தது போல் புதிய புயல் ஒன்று அங்கு மையம் கொண்டது. அதனை அறிந்தபோது இளம்வழுதி செய்வது அறியாமல் திகைத்துப் போய் நின்றான்.
(தொடரும்...... அத்தியாயம் 38ல்)
No comments:
Post a Comment