Thursday, 9 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 09

       🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 09 🌾அன்னை வடிவு 🌾


     கண்ணபுரநாயகியின் ஆலயத் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. தொலைதூரத்திலிருந்து வந்த மக்கள் திரளால் ஒரே அமளி துமளியாக திருவிழா நடந்து கொண்டிருந்தது. ஆலயத்தில்  அமைந்துள்ள தீர்த்த குளத்தில் பெரும் மரப்பீப்பாய்களை ஒன்றாக இணைத்து கட்டிய சப்பரத்தில் பெருமாள் தனது இணை கண்ணபுரநாயகி தாயுடன் பூரண அலங்காரத்தில் மலர்மாலையோடு திவ்யமாக பக்தர்களுக்கு காட்சி தந்தார். நாயணம் ஒலிக்க மேளதாள வாத்தியத்தில் எண் சதை கொட்டிலிருந்து  வானை பிளந்துகொண்டு இருந்தது இசை வெள்ளம். மற்றொரு புறம் திவ்ய பாசுரங்களை அமுத காணத்தில் பாடியதை பரவசமுடன் கேட்டு கொண்டாடி கொண்டு இருந்தனர் மக்கள் வெள்ளம். இன்னொரு புறம் நாட்டுப்புற நடன இசையும், வாளைக் குமரிகளின் கும்மியும் கோலாட்டமும் கும்மாளமாக கண்ணபுரமே ஏகாந்தத்தில் மிதந்து கொண்டிருந்தது.


     அப்பொழுதுதான் அந்த விபரீதம் அரங்கேறியது. எல்லோருடைய கவனமும் முரடனால் பெரும் இன்னலுக்கு உள்ளான இளம் நங்கையை காப்பாற்றிய வடிவு அவர்களின் வீரத்தை கொண்டாடி மகிழ்ந்து கொண்டுருந்தது. அப்பொழுதுதான் தன் முழு சக்தியையும் ஒன்று திரட்டி எழுந்த முரடன் தனது குளுவாளை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் பின்புறமாக வந்து வடிவு அவர்களின் சங்கை அறுத்து விட்டான். குபுகுபுவென குருதிவெள்ளம் பெருக்கெடுக்க நிலத்தில் சரிந்தார் வடிவு. "அய்யோ.... ஆஆஆ " வென கூட்டத்தில் அனைவரும் சத்தமிட்டபடி கதிகலங்கி வெருண்டோடினர். கூட்டநெரிசலில் அகப்பட்ட முரடன் யானையின் காலில் அகப்பட்ட சிற்றெறும்பு போல் சிதைந்து போனான். அவனை ஒரு பொருட்டாக எண்ணாமல் ஏறி மிதித்து சென்ற வண்ணமிருந்தனர் மக்கள் திரள். எப்போதோ அவனது உயிர் காற்றில் கலந்திருந்தது.


     அன்னை வடிவு அவர்களை சுற்றி கூட்டம் கூடியது. முரடனால் காப்பாற்ற பட்ட இடம் நங்கை அன்னை வடிவு அருகே அமர்ந்து பெரும் சத்தமோடு அழத் தொடங்கினாள். 


      கண்ணபுரநாயகியின் ஆலயமே அன்னை வடிவின் வீரத்தையும் அதனை தொடர்ந்து நடந்த விபரீதத்தையும் துக்கமும் துயரமுமாக அரற்றத் தொடங்கி இருந்தார்கள். நடந்தேறிய விபரீதம் எப்படியோ பிரும்மாறாயன் குமாரமள்ளரின் செவிக்கு எட்டியிருந்தது. அவரும் அவரது மகன் இளமாறன், பிரும்மாறாயன் இருளப்பமள்ளர் வந்து சேர்ந்ததோடு அன்னை வடிவு அவர்கள் அருகே அமர்ந்து தேம்பி தேம்பி அழுது புரண்டார்கள்.


     அன்னை வடிவு எப்பொழுதோ கண்ணபுரநாயகியின் திருவடியை தழுவிருந்தார். கூட்டு வண்டி ஒன்றில் குமாரமள்ளரின் மடியில் அன்னை வடிவு அவர்களை கிடத்தி இல்லத்தை நோக்கி வண்டியை செலுத்தி கொண்டிருந்தார் பிரும்மாறாயர் இருளப்பமள்ளர். அவரது அருகே அமர்ந்திருந்த வாலிபன் இளமாறன் சோகமே வடிவாய் கண்கள் குளமாக அழுது கொண்டுருந்தான். கூட்டு வண்டியை தொடர்ந்து எண்ணற்ற மாட்டு வண்டிகளில் ஆண்களும் பெண்களுமாக பின்தொடர்ந்தனர். 


     கண்ணபுரநாயகியின் ஆலய திருவிழாவிற்கு வந்திருந்த பெரும்பகுதி மக்கள் பிரும்மாறாயர் குமாரமள்ளரின் இல்லத்தில் திரண்டிருந்தது.  நேரத்தை சிறிதும் வீணாக்காமல் இல்லத்தின் முற்றத்தில் தென்னம் ஓலைகளால் பந்தல் அமைத்து இருந்தார் பிரும்மாறாயர் இருளப்பமள்ளர்.   அன்னை வடிவு  பெரிய தொரு மர இருக்கையில் அமர வைத்து சம்மங்கி, முல்லை, இருவாட்சி, செவ்வந்தி கொண்டு தொடுத்த மலர்மாலைகளை அவர்மேல் சூட்டி பூமிக்கு வந்த அம்மனாக காட்சியளித்தார் அன்னை வடிவு. அவரது அருகே பெரிய மரக்கால் நிறைய நெல் வைத்திருந்தனர்.


     பிரும்மாறாயர் குமாரமள்ளரின் இல்லதின் முகப்பருகே எண் சதை கொட்டுமேளமும் நாயனமும் இசை ஆட்சியில் திளைக்க திளைக்க செய்து கொண்டிருந்தனர். அன்னை வடிவின் போர்க்குணத்தையும் நற்பண்பையும் ஏற்றியும் போற்றியும் கும்மியடித்து கொண்டாடி கொண்டிருந்தனர் முதிய பெண்கள். அவர்களது அடியொற்றி இளம்பெண்கள் பாடத் தொடங்கினர்.


     அந்த நள்ளிரவுப்பொழுதிலும் கூட்டம் அலைஅலையாக அன்னை வடிவு அவர்களின் இறுதி அஞ்சலிக்கு வந்த வண்ணமிருந்தனர். இரவினில் உலாவரும் இரவாடிகள் கீச்சு மொழியால் அன்னைக்கு அஞ்சலி செய்தனர்.


     இரவின் இருளை புரட்டி எடுத்துக்கொண்டிருந்த எண் சதை மேளத்தில் கரைந்து கரைந்து புலரிப் பண் பாடும் புள்ளினங்களின் ஒலியால் குணக்கடலில் குதித்தெழுந்த ஆதவனின் பொன்னொளி பரவியபோது, பிரும்மாறாயர் குமாரமள்ளரின் இல்லத்தில் அன்னை வடிவு அவர்களை  பச்சை மூங்கிலால் செய்த பெரிய கப்பல் தேரில் அமர்ந்த கோலத்தில் மலர்மாலைகளையின் நடுவே காட்சி தந்தார்.


      இறுதி யாத்திரைக்கு வேண்டிய சடங்குகள் துரிதமாக நடந்தேறின. உற்றார் உறவினர்களிலுள்ள ஆண்கள் புடைசூழ முடிகொண்டான் ஆற்றை நோக்கி சென்றார்கள். ஆற்றில் இறங்கி குழித்து இடையில் பருத்தி ஆடைமட்டும் கட்டிக்கொண்டு நீர்மாலையணிந்து கையில் சிறிய மண்குவளையில் ஆற்று நீரை எடுத்துக்கொண்டு இல்லம் நோக்கிவந்தனர்.


     அலங்கரித்து வைத்திருந்த அன்னை வடிவு அவர்கள்  வீற்றிருந்த மூங்கிலால் செய்த கப்பல் தேரை வலம் வந்தனர். அதனைத்தொடர்ந்து எண்சதை கொட்டுமேளம் முழங்க இறுதி ஊர்வலம் தொடங்கியது. அன்னை வடிவு அவர்களின் கப்பல் தேரின் அருகே பிரும்மாறாயர் குமாரமள்ளர்  மற்றும் பிரும்மாறாயர் இருளப்பமள்ளர் சென்று கொண்டிருந்தார்கள். இளமாறன் கையில் கொள்ளிப்பானை யோடு முன்னத்தி நபராக சென்று கொண்டிருந்தான். 


     முடிகொண்டான் ஆற்றின் கரையை ஒட்டி  அமைந்த பிரும்மாறாயர் குமாரமள்ளரின் வயலில் அன்னை வடிவு அவர்களுக்கு பிடித்த அரநெல்லி மரமருகே தகனத்திற்கு ஏற்பாடு நடந்தேறியது. ஒன்றன்பின் ஒன்றாக நடந்தேறிய சடங்கிற்கு பின் ஒருவழியாக அன்னை வடிவு அவர்களுக்கு நெருப்பு வைக்க இளமாறன் தீப்பந்தம் ஏந்தி வந்தவன் அன்னையை வணங்கி வழி அனுப்பி வைத்தான்.


      தூரத்தில் எங்கிருந்தோ கிளம்பிய மைனா, சிட்டுக்குருவி, காகங்கள் வலசையாக அன்னையின் தகனத்திற்கு அஞ்சலி செய்தபடி கடந்து சென்றன. 


     புள்ளினங்களின் பூபால ராகத்தில் புலர்காலை பொழுதுகள் திங்கள் பல கடந்து போயின. பிரும்மராயர்களின் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் வந்து வந்து போயின. 


       வசந்தத்தின் இடிமுழக்கம்  தொடங்கிய நாட்களில் ஒருநாள். 


       புகலூரில் அமைந்துள்ள குமாரமள்ளரின் ஆதூரசாலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நாகையின் பாடிகாவல் அதிகாரியாக இளமாறன் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான். தனது பணிக்கே உரித்தான பொறுப்போடு பணியாற்றி வந்தான். அன்று வழமைபோல் பணிக்கு புறப்பட்டவன் தனது தந்தையார் பிரும்மாறாயர் குமார மள்ளரிடம் ஆசிபெற்று தனது வெண்புரவி மேல் ஆரோகணித்தபடி நாகை நோக்கி புறப்பட்டான்.


    பச்சை மரகதப்பாய்விரித்த நெற் சோலையை ரசித்தபடி  வயலில் நீண்டு செழித்து வளர்ந்திருந்த புன்னை மர பூங்குயில்கள் இசைத்த ஏகாந்த ராகங்களை எண்ணி எண்ணி லயித்தபடி புரவியைச் செலுத்தி கொண்டு நாகை வந்து சேர்ந்தான்.


     பாடிகாவல் அதிகாரியின் அலுவலகம் வழமைபோல்  இயங்கிக்கொண்டிருந்தது. அலுவலகம் வந்த இளமாறன் பணிகளில் செயலாற்றிக் கொண்டிருந்தபோது வாசலில் ஏற்பட்ட பரபரப்பு கேட்டு வெளியே வந்தான்.


      "இங்கு ஏன் இத்தனை குழப்பம்" என்றான் இளமாறன்.


     "இதை பாருங்கள் தம்பி " என முதியவர் கையில் இருந்த நாணயத்தை காட்டினார்.


    " சோழ நாராயணன் நாணயம் அல்லவா..., இவை தற்சமயம் புழக்கத்தில் இல்லையே. இவை எப்படி கிடைத்தது அய்யா" 


      "தெரியவில்லை தம்பி. நெல்லுக்கடை வீதியில் முரடன் ஒருவன் இந்த நாணயத்தை காட்டி நெல் மூட்டை கேட்டுள்ளான். அங்குள்ள சோழத்தின் பாதுகாவலர் முரடனிடமிருந்து நாணயத்தையும் அவனையும் பிடித்து வந்துள்ளார்." என்றார் அந்த முதியவர்.


     " இது மிகப்பெரிய குழப்பத்தை விளைவிக்கும் பேராபத்து. மாமன்னர் முதலாம் இராஜராஜர் முதன் முதலில் வெளியிட்ட வெள்ளி நாணயம் தான் சோழ நாராயணன். அவை இன்று புழக்கத்தில் இல்லை. இதனை உடனே தடுக்கவேண்டும் அய்யா"


     "வாருங்கள் தம்பி. முரடனை போய் பார்ப்போம். " முரடன் இருந்த இடத்தை நோக்கி இளமாறானும் முதியவரும்  அவன் அருகே போய் பார்த்தனர்.


     முரடனது கைகள் பிணைக்கப்பட்டு கீழே அமர்ந்திருந்தான். இளமாறான் அவனிடம் எத்தனை விசாரித்தபோதும் அவன் வாய் திறக்கவே இல்லை. தான் பயின்ற வர்ம கலை ஒன்றை அவன் வலது கால் மீது பயன்படுத்தினான் சிறுதுநேரத்தில் வலது கால் இழுத்துக்கொண்டு கீழே விழுந்து புரண்டு கத்த ஆரம்பித்தான். "இப்பொழுது உண்மை சொல்லாவிடில் எனது அடுத்த தாக்குதலில் பயங்கரமான முறையில் உனக்கு மரணம் சம்பவிக்கும் "என மிரட்டினான் இளமாறன்.


      கையெடுத்து கும்பிட்டு உண்மையை கூறுவதாக ஒத்துக்கொண்டான் முரடன். முரடனின் வலதுகாலை சரிபடுத்தி அமரவைத்து முரடனுக்கு தண்ணீர் புகட்டினான் இளமாறன்.


     "இப்பொழுது கூறு, உனக்கு எவ்வாறு சோழ நாராயணன் காசு கிடைத்தது. உண்மையை கூறு" 


     "சொல்லிவிடுகிறேன் அய்யா. எனக்கு இருட்டுப்பள்ளத்தில் உள்ள மாடன் தான் தந்தான். எனக்கு வேறு எதுவும் தெரியாது" எனக் கூறியவன் காலில் விழுந்து கதறினான் முரடன்.


    "இனிமேல் இவனிடம் எத்தனை கேட்டாலும் பதில் வராது "என எண்ணியபடி வெளியே வந்து சோழ வீரர்களை அழைத்தவன் "இவனை கொண்டுபோய் காரகிரகத்தில் அடைத்து வைத்து கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள், இந்த விவகாரம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது இது எனது ஆணை" என்றவன் ஓலை ஒன்றை எடுத்து அதில் முரடணை காரகிரகத்தில் அடைக்க உத்தரவு இட்டு தனது பாடிகாவல் அதிகாரிக்கு உரிய கைச்சாத்தினை இட்டு சோழ வீரர்கள் வசம் ஒப்படைத்தான். பாடிகாவல் அதிகாரி இளமாறனிடம் ஓலையைப்பெற்றதோடு முரடனை பாதுகாப்பாக காரகிரகத்தை நோக்கி அழைத்துச்சென்றனர்.


     தனது அறையில் உள்ள அழைப்பு மணியை பாடிகாவல் அதிகாரி இளமாறன் ஒலித்ததும் உள்ளே வந்து வணங்கி நின்றார்  சோழ வீரர் ஒருவர்."உடனடியாக நீர் சென்று பொன்வாரியத்தலைவரை கையோடு அழைத்துவாரும் "என்றான். 


   "ஆகட்டும் அய்யா" என வணங்கி விடைபெற்றார் சோழ வீரர்.


     "இப்படியொரு செயல் நாகையில் நடந்துள்ளது. ஆனால் இதுவரை அக்கசாலை அதிகாரியும் சரி பொன்வாரியத் தலைவரும் எந்த தகவலும் தரவில்லையே. ஒருவேளை அவர்களுக்கு தெரியவில்லையா? பொன்வாரியத்தலைவர் வரட்டும் விவரம் தெரிந்து விடும். " என எண்ணியபடி அறையில் உலவிக்கொண்டிருந்தான் இளமாறன்.


     ஒருநாழிகை கடந்து விட்டிருந்தது. இடைப்பட்ட நேரத்தில் காலை ஆகாரத்தை வரவழைத்து. உண்டு முடித்திருந்தான் இளமாறன்.


     குட்டையாகவும் கட்டையாகவும் பொன்வாரியத்தலைவர் என்ற பதவிக்கு ஏற்றார் போல் சீனப்பட்டாடையும் அதற்கு இணையான கீழ் சராயும் நெற்றியில் பெருமாளின் அடையாளத்தை இட்டும் வாயில் கும்பகோணம் கொளுந்து  வெற்றிலையை ஒரு கைப்பிடியை வாயில் போட்டு மென்றபடி ஆடி அசைந்து வந்து சேர்ந்தார். பிராயம் ஐம்பது கடந்திருந்தாலும் தனது பணியைபற்றி அனைத்தும் தெரியுமென்ற கர்வம் அவர்முகத்தில் எழுதி ஒட்டி இருந்தது. அவரது சுபாவம் நன்கு தெரிந்தவன் ஆகையால் வீண் கதை பேசாமல் நேரடியாக நடந்த விபரம் குறித்து கேட்க தொடங்கினான் பாடிகாவல் அதிகாரி இளமாறன். "இந்த நாணயத்தை பாருங்கள்"என பொன்வாரியத்தலைவர் கையில் கொடுத்தான்

      நாணயத்தை வாங்கியவர் அதனை  முன்பின் திருப்பி பார்த்தபடி ஏதோ அந்த நாணயத்தை புதிதாக பார்ப்பது போல் பார்த்துவிட்டு "இது சோழநாரயணயன் காசு" என யாருக்கும் தெரியாத ஒன்றை தான் கண்டுபிடித்த பெருமிதம் அவர் முகத்தில் வரவளைத்துக்கொண்டார்.


     "என் கேள்வி அவை அல்ல, இந்த நாணயம் தற்சமயம் புழக்கத்தில் இல்லை."என கூறிவிட்டு பொன்வாரியத்தலைவர் முகத்தை பார்த்தான் பாடிகாவல் அதிகாரி இளமாறன்.


     "ஆமாம். தற்சமயம் புழக்கத்தில் இல்லை."அவன் கூறியதை ஆமோதித்தார்.


    "இவை இன்று நெல்லுக்கடைவீதியில் இதனை ஒருவன் புழக்கத்திற்கு கொண்டு வந்துள்ளான்."என்றவன் தொடர்ந்து "இவை உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது ?" பொன்வாரியத்தலைவரை பார்த்து கேட்டான்.


    "இவற்றிற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். குற்றங்களை கண்டறிந்து களைவது தங்கள் பணி "என்றவர் எனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதுபோல் முகபாவனை காட்டினார்.


     பாடிகாவல் அதிகாரி அடுத்தடுத்து கேட்ட கேள்வியால் பொன்வாரியத்தலைவர் விழிகள் பிதுங்கி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து விபரீதத்திற்கு வித்திட்டது.


(தொடரும்..... அத்தியாயம் 10ல்)


No comments:

Post a Comment