Thursday, 16 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 15

     🐾இராஜமோகினி 🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 15 🌾துயரத்தில் வைத்தியர் குமாரமள்ளர்🌾

       வைத்தியர் குமார மள்ளர் உள்ளே இருந்த சிவாலயத்தின் மணியோசை மீண்டும் கடகடவென ஒலித்தது. வழிபாட்டைத் தொடர்ந்து ஒலித்த மதுரமான  தேவார பாடலால் ஈர்த்து கிடந்த மக்கள் திரல் மெல்ல ஆலயத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் ஆங்காங்கே ஆலயத்தின் பிரகாரங்களில் அமர்ந்து மௌனமாக இறைவனை நோக்கி தியானத்தில் இருந்தனர்.

     எம்பெருமான் சிவனை கரம் குவித்து மனம் உருக வேண்டிக்கொண்டிருந்தார் வைத்தியர் குமாரமள்ளர். இறைவனுக்கு தீப ஆராதனை காட்டி விட்டு வெளியே வந்த அர்ச்சகர் தனது தட்டில் இருந்து திருநீறை அள்ளி அவர் கையில் தந்தார். அதனை வாங்கி  பட்டையாக நெற்றியில் தீட்டிக்கொண்டு  பிரகாரத்தில் அமர்ந்து கொண்டார்.

    ஆலயத்திற்கு வந்து இறைவனை வணங்கிய பிறகு அவரது மனத்தின் கனம் குறைந்திருப்பது உணர முடிந்தது. மதுரகீதத்தில் ஒலித்த தேவாரப்பதிகம் கேட்டபின்பு இன்னும் கூடுதலாக பாரத்தை அவரிடமிருந்து கரைத்து விட்டிருக்கவேண்டும். அப்படியே விழிகளை மூடி ஆழ்ந்த தியானத்தில் இறங்கி விட்டார்.

     ஒல்லியாக சதைப்பிடிப்பற்று நெட்டையான அர்ச்சகரது நெற்றி, கை, நெஞ்சு ஆகியவற்றில் திருநீறைக் குழைத்து பட்டையாக தீட்டியிருந்தார். அவருக்கு வயது அறுபது கடந்திருந்தாலும் சுறுசுறுப்பாக ஓடி ஆடி தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். மாலை நேர வழிபாட்டுக்கு வந்த பக்தர்களுக்கு அன்றைய மடப்பள்ளியில் செய்த சர்க்கரை பொங்கலை தொன்னையில் வைத்து வழங்கிக் கொண்டிருந்தார். வெல்லம், பச்சரிசி, பருப்பு,  ஏலக்காய் இவற்றோடு ததும்பத் ததும்ப நெய் விட்டு செய்த பொங்கலின் வாசனை அவர்களை இழுத்ததோ என்னவோ அங்கிருந்த சிறுவர்கள் சிலர் மீண்டும் மீண்டும் பொங்கலைக் கேட்டு வாங்கிக் உண்டனர்

     அங்கிருந்த கூட்டத்தில் சிலர் "அடடா... என்ன தித்திப்பு.  பொங்கலை வாயில் போட்டதும் வழுக்கிக் கொண்டு, போன இடமே தெரியவில்லை. அத்தனையும் தேவாமிர்தமாக இனிக்கிறது". ரசித்து சுவைத்து உண்டனர்.

     "ஆமாம். ஆமாம்... சிவனின் பிரசாதம் அல்லவா...! சொல்லவா.... வேண்டும்." என சிலாகித்து உண்டவர்கள் முகம் அத்தனை பொலிவாக இருந்தது.

      அந்தியை தொடர்ந்து  விரவி வந்த இருளை கிழித்தபடி எழுந்த முழுமதியாளின் வெண்ணிற ஒளியில் ஆலயம் முழுவதும் பிரகாசத்துக் கொண்டிருந்தது.

      தியானத்திலிருந்து தனது விழிகளை திறந்து முழுமதியின் பூரண ஆட்சியை ஒரு கணம் பார்த்தார். பிறகு விடு விடு என பிரசாதம் கொடுக்கும் இடத்திற்கு சென்று, தன் பங்கிற்கு தொண்ணையில் சர்க்கரைப் பொங்கலை வாங்கியவர், ஆதூரசாலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

      ஆதூரசாலை, பெரும் பரபரப்பில் இயங்கிக் கொண்டுருந்தது. புறநோயாளிகளின் ஒருபுறம் வந்தபடியும் ஏற்கனவே வந்தவர்கள் சிகிச்சை பெற்று பூரண நலமடைந்தவர்கள் வைத்தியர் இருளப்பமள்ளரிடம் வேண்டிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு தங்கள் இல்லங்களை நோக்கி மகிழ்ச்சி புன்னகையோடு போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர்  ஆதூரசாலையின் முகப்பிற்கும் மூலிகைத் தோட்டத்திற்குமான இடைவெளியில் காலாற நடந்து கொண்டுருந்தார்கள்.

      வாயதான நோயாளிகளுக்குத் துணையாக வந்திருந்த மகன்களும்,மகள்களும் நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொண்டிருந்தனர். 

      ஆதூரசாலையில் இருந்த மாமரத்தின் கீழே அமர்ந்திருந்தார் ஒரு வயதான மூதாட்டி. அவர் அருகே அமர்ந்து கொண்டு தர்மசாலையில் வாங்கி வந்த உணவை அவருக்கு ஊட்டிக் கொண்டு இருந்தார் மூதாட்டியின் மகள்.

     "யேன் தாயி... வயலில் களை நிறைய இருக்கு. அத பறிக்கணுமின்னு சொன்னியே...."

     " எங்கம்மா... அதுக்குள்ள, உம் பேரனுக்கு முடியாமப் போச்சு. அவன நம்ம ஊரு வைத்தியர் முருகனிடம் கூட்டிட்டுப்போய் மருந்து வாங்கி கொடுத்து அவன பார்த்துக்கெவே நேரம் பத்தலெ...."

      " பெசாம, இங்க கூட்டியாந்திருக்கலாமில்லெ.... நீ தேன் இங்க வாரேனு தெரியுமிலெ..."

     " அவசரத்துக்கு கூட்டிட்டுப்போனேன். வேற, என்ன பண்றது. வைத்தியர் முருகனும் நல்லாத்தான் வைத்தியம் பார்ப்பார்.தம்பிதான் இங்க இருக்கானே, அவன் பார்த்துக்குவான்னு நெனச்சேன். அதுவும்மில்லாம, நேத்து நம்ம ஊர்ல மழெ, ஒரே அடியா கொட்டித் தீர்த்துருச்சு. வயக்காடேல்லாம் தண்ணி தேங்கி கரை தட்டிப்போச்சு. வாய்க்கா வரப்பு பூரம் ஒரே தண்ணியாக் கெடக்கு. என்ன செய்யச் சொல்றே. அதான் ஒரு எட்டு உன்னப் பாத்திட்டு போலாம்னு வந்தேன்."

    "எம் பேரனக் இங்க கூட்டியாந்தா நானும் அவன் முகத்த பார்த்திருப்பேன்" எனச் சொல்லியபடி அழுதார்.

    "ஏம்மா... அழுறே. அதான் வைத்தியர் இருளப்பமள்ளர் எல்லாம் சரியாப் போயிரும்னு சொல்லி இருக்காருலே, அப்புறம் என்ன?" தாயின் விழிகளை தன் புடவை முந்தானையால் துடைத்தாள். அவளது விழியும் கண்ணீரைப் பெருக்கியது.

      "தாயி.... அழாதப்பா..... எனக்கு ஒன்னுமில்லெ..... நான் நல்லாத்தேன் இருக்கேன். என்ன நல்லபடியா இங்க  பாத்துக்கிறாக.... கவலைப்படாதெ..."

      "அப்ப, யேன் அழுத....?, உனக்கு வேற எதுவும் செய்யுதா....? மறைக்காமச் சொல்லு. உன்ன விட்டா எங்களுக்கு வேற கதி? , யாரு இருக்கா....?, நீ ஒருத்தி இருக்கிற நெனப்புலெ தான நானும் தம்பியும் இருக்கோம். நீயும் எங்களவிட்டுப் போயிட்டா, நாங்க நாதி அத்துப் போயிருவோம்கிற நெனப்ப, எப்பவும் நெஞ்சுல வச்சுக்க.... உன்ன நம்பித்தான் நாங்க இருக்கோம்...." தேம்பித் தேம்பி அழுதாள் அந்த இளம்பெண்.

       "யேன் ஆத்தா... அழாதே... யேன் ராசாத்தி. எனக்கு ஒன்னுமில்லெ. ஆத்தா... கருப்பாயி... இங்க... என்னப்பாரு..." மகளின் முகத்தை கையில் ஏந்தி தனது முந்தானையால் மகளின் கண்ணீரை  துடைத்தவர், மகளை இறுக அணைத்துக் கொண்டார் மூதாட்டி வள்ளியம்மை. அவரே தொடர்ந்து "பக்கத்து வீட்டு காளியம்மாவோட பசு மாடு கன்னு குட்டி போட்டுருச்சா?"

    " ஆமாம் அம்மா. செவலை நிறத்தில நல்லா மூக்கும் முழியுமா பொட்டக்கண்ணு பெறந்திருக்கு. அந்த ஆத்தாவோட முகத்தை பார்க்கணுமே, அம்புட்டு பவுசா இருந்துச்சு. காணாததைக் கண்ட காட்டுச் சிரிக்கின்றதெ உண்மையிலே நிரூபிச்சிட்டா, என ஊர் மக்கள் எல்லாம் அந்த ஆத்தாவை பத்தி தான், ஒரே பேச்சா கிடந்துச்சு..."

     "அவ பாவம்டி  கல்யாணம் கட்டின கொஞ்ச நாளிலே வீட்டுக்காரன் தவறிட்டான். ஒத்தையில கடந்து அவ புள்ளைங்கெ  ரெண்டையும் ஆளாக்க அவ பட்ட பாடு சொல்லி மாளாது.  கடவுள் இப்பவாச்சும் அவளுக்கு நல்ல வழியை காட்டட்டும்..."

      " நீயும் அப்படித்தானே. அப்பா காலமான பிறகு வயலையும் பார்த்துக்கிட்டு, எங்களையும் வளர்க்க நீ பட்ட பாடு, எங்களுக்கு தானே தெரியும்."

       ஆதூரசாலையின் வாசலைக் கடந்து உள்ளே வந்திருந்த வைத்தியர் குமார மள்ளர், அங்கு உள்ள அனைவரின் செயல்களையும் பார்த்துக்கொண்டு சென்றவர், மூதாட்டி வள்ளியம்மை அவரது மகள் கருப்பாயி ஆகியோரின் உரையாடலால் ஈர்க்கப்பட்டு, அவர்களுக்கு எதிரே இருந்த புன்னை மரத்தருகே நின்று அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தார். 

      " அம்மா எழுந்திரு உணவுக்கு பெறகு, சாப்பிட  வேண்டிய மருந்தெ சாப்பிடணும்" தன் தாயை கைத் தாங்கலாக தூக்கி விட்டாள் கருப்பாயி.

     ஆமை போல் அசைந்து அசைந்து இருவரும் நடந்து வைத்தியர் குமாரமள்ளர் இருந்த புன்னை மரம் அருகே வந்து விட்டிருந்தனர். "அம்மா. அம்மா.... வைத்தியர் குமாரமள்ளர்". அவரை நோக்கி கையை நீட்டி காண்பித்தாள் கருப்பாயி.

    " ஐயா... நலமாக உள்ளீர்களா?" என்றார் மூதாட்டி வள்ளியம்மை.

     " அம்மா... அவர் மகன் இளமாறன,அவரை யாரோ வயித்துல ஆழமா வெட்டிட்டாங்க. அதனால ரொம்ப முடியாம, இங்கதான் வைத்தியம் பாக்குறாங்க" தன் தாயின் காதருகே கிசு கிசு தாள்  கருப்பாயி.

     " புள்ளைக்கு, இப்ப, எப்படி இருக்குதுங்க ஐயா?"

     " வைத்தியம் நடக்குது. இப்போதைக்கு அவ்வளவுதான். எல்லாம் இறைவன் கருணையில் தான் உள்ளது. அது இருக்கட்டும். உங்கள் உடல்நிலை இப்போது பரவாயில்லையா அம்மா"

    " உங்கள் நண்பரின் சீரிய கவனிப்புல இப்ப பரவாயில்லெ, சீக்கிரமே உங்க பையன் சுகமாயி எந்திரிச்சிடுவான் பாருங்களேன்."

    " உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் தாயே!, இந்தாருங்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் பெற்று வந்த சர்க்கரை பொங்கல் எடுத்துக் கொள்ளுங்கள்" தனது கையில் வைத்திருந்த சர்க்கரைப் பொங்கலை அப்படியே மூதாட்டி இடம் கொடுத்தார்.

     " அப்படியே, முழுவதையும் எங்களுக்கு கொடுத்துட்டீங்க, நீங்க சாப்பிடலையா? " 

      மூதாட்டி  கையில் உள்ள தொன்னையிலிருந்து சர்க்கரைப் பொங்கலில் ஒரு துளி மட்டும் எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டார். "இதுவே எனக்கு போதும் தாயே, நீங்கள் உண்ணுங்கள்".

    தாயும் மகளும் மகிழ்வுடன் ஆதூரசாலை நோக்கி செல்வதை பார்த்த வண்ணம், அவரும் தனது மகன் இளமாறன் இருந்த அறையை நோக்கி நகர்ந்தார்.

     இளமாறானது அறைக் கதவு திறந்து கிடந்தது. உள்ளே படுக்கையில் உறங்கியபடி இருந்தான். அவனுக்கு எதிரே கண்ணும் கருத்துமாக கவனித்து, உரிய நேரத்தில் மூலிகை மருந்துகளை கொடுத்துக் கொண்டிருந்த, ஆதூரசாலையின் பணிப்பெண் வேம்பு அங்கிருந்த மர ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

     அறைக்குள் நுழைந்து இளமாறனை அணு அணுவாக அலசி ஆராய்ந்து படி இருந்தார் வைத்தியர் குமார மள்ளர்.

     வைத்தியர் அருகே வந்த பணிப்பெண் வேம்பு "இப்பொழுது பரவாயில்லை ஐயா" என்றாள்.

     " இப்பொழுதும் காய்ச்சல் உள்ளதா?"

    " ஆமாம். ஐயா, விட்டு விட்டு வருகிறது"

     நோயாளிகள், இரவு நேர மருந்தை அனைவரும் சரியாக எடுத்துக் கொண்டார்களா, என்பதனை ஒவ்வொரு நபராக கேட்டு தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏதேனும் மாற்று மருந்து தர வேண்டி இருந்தால் அதனையும் அங்கு உள்ள பணிப்பெண்கள் இடம் விவரமாக எடுத்துக் கூறிவிட்டு, அப்போதுதான் இளமாறன் அறைக்குள் நுழைந்தவர், அங்கு ஏற்கனவே இருந்த தனது தோழனை பார்த்தவர்,  அவர் அருகில் சென்று, அவரது தோள் மீது ஆதரவாக தன் கையை வைத்து தட்டிக் கொடுத்தார் வைத்தியர் இருளப்பமள்ளர்.

    பணிப்பெண் வேம்புவை பார்த்து "நான் சொன்ன முறையில் தானே மருந்துகளை இளமாறனுக்கு கொடுத்து வருகிறாய்?"

    "ஆமாம் ஐயா."

   இளமாறன் கையை எடுத்து நாடியைப் பிடித்து சோதனை செய்தார், சில வினாடிகள் கடந்து விட்டிருந்தன.

    "ஏற்கனவே, நான் சொல்லிய மருந்துகளோடு, இப்பொழுது நான் சொல்லும் மருந்துகளை கூடுதலாக சேர்த்து கொடு குழந்தாய். ஏதேனும் விரும்பத்தகாத மாற்றங்கள் இருப்பின் உடனே என்னிடம் தெரிவி." என்றவர் பணிப்பெண்ணிடம் ஓலை ஒன்றில் கிடுகிடுவென மருந்துகளின் பெயர்களும், அளவுகளும் குறித்துக் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்ட பணிப்பெண், இளமாறனது பக்கத்தில் இருந்த மூலிகைகள் வைக்கும் பெட்டியில் இருந்து வைத்தியர் குறித்துக் கொடுத்திருந்த மூலிகைகளை வரிசைக் கிரமமாக அடுக்கி வைத்தார்.

    தனது தோழனை அழைத்துக் கொண்டு, தனது அறைக்கு சென்றார் வைத்தியர் இருளப்ப மள்ளர்.

அடுத்து நடந்தது அந்த மர்மான சம்பவம்.

(தொடரும்.... அத்தியாயம் 16ல்)


No comments:

Post a Comment