🐾இராஜமோகினி 🐾
🌹யாழிசைசெல்வா 🌹
அத்தியாயம் 17 🌾கோடியக்கரை மூர்க்கன்🌾
புலர் காலைப் பொழுது புள்ளினங்கள் தமது சிறகுகளை பட படவென அடித்துக் கொண்டு கடலை நோக்கி இறை தேடி புறப்பட்டன. ஆழமற்ற அந்தக் கடல் எப்போதும் ஆரவாரம் இன்றி தனது அலைகளை கரையை முத்தமிட்டு, அழகாய் சத்தமிட்டு கொண்டிருந்தன. அலை கொண்டு வந்த மணல்களை கடலின் கரையெங்கும் சரிவாக மணல் துகள்கள பரப்பி இருந்தன. கரையைத் தாண்டி வெகு தூரத்திற்கு வெகு தூரம் அடர்ந்த பெரும் மரக் கூட்டங்கள் நீண்டு பரவி கடந்தன. அவ்வளவாக அங்கு மனிதர்கள் யாரும் புலங்கும் இடமில்லையாதளால் எப்போதும் மௌனத்தின் ஒலி நிரந்தரமாக கொண்ட பெரு நிலப்பரப்பு தான் கோடியக்கரை.
நீண்ட தூரத்திலிருந்து பயணம் செய்து வரும் பெருங்கப்பல், நாவாய் முதலியவை கரையை நெருங்க விடாமல் தூரத்திலேயே அதனை நிறுத்துவதற்காக உண்டானது தான் கோடியக்கரை கலங்கரை விளக்கம். ஆழமற்றது அந்தப்பகுதி கடல். கப்பல் கரையை நெருங்கினால் அங்குள்ள வெண்மணல் பரப்பில் சிக்கித் தவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அதனை அறவே தடுப்பதற்காக முதல் பரந்தகச் சோழன் காலகட்டத்தில் கட்டி எழுப்பப்பட்ட ஒன்றுதான் இக்கலங்கரை விளக்கம். அதன் உச்சியில் இரவு நேரங்களில் விறகுகளால் தீமூட்டி யாரும் கரையை நெருங்க வேண்டாம் என்ற அறிவிப்பை சொல்வதற்கு பயன்படுத்தினார்கள். இன்றளவும் கலங்கரை விளக்கத்தின் பயன்பாடு செயல்பாட்டில் உள்ளது.
கோடியக்கரையில் இருந்து ஈழத்திற்கு செல்வது வெகு எளிது. அதற்காகவே சிறிய சிறிய படகுகளும் தோனிகளும் அக்காலத்தில் பயன்படுத்தி வந்தார்கள். இவ்விடத்தினை அறிந்த பலர் நேர்வழிகளுக்கு பயன்படுத்தியதை விட தவறான வழிகளுக்கு ஆயத்தப்படுத்தியவர்கள் தான் அதிகம். அந்நாளில் சோழர்களின் கடற்கரை கப்பல் போக்குவரத்தில் செழித்து கிடந்த பகுதிகளில் கோடியக்கரையும் ஒன்று. முதலாம் ராஜராஜ சோழர் அவரது மைந்தன் முதலாம் ராஜேந்திர சோழர் ஆகியோர் ஈழத்தை நோக்கிய படையெடுப்பில் இங்கிருந்தும் எண்ணற்ற நாவாய்களை அனுப்பி வைத்திருந்தனர். இப்பேரரசர்களுக்கு பிறகு ஆட்சி பொறுப் பேற்றவர்கள் இப்பகுதியினை பெரிதாக பயன்படுத்தாமல் இருந்தனர். அதனால் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் சிறிதளவு குறைந்து தான் இருந்தது.
அங்குள்ள குழகர் கோயில் அத்தனை பிரசித்தம். இச் சிவாலயம் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்திருந்தது. நீண்டு உயர்ந்திருந்த அதன் கோபுரம் கடலில் பயணிப்பவர்களுக்கு இறைவனின் ஆசியை வழங்கி கொண்டு இருந்தது. இங்குள்ள இறைவனை காண வந்த சுந்தரமூர்த்தி நாயனார் "இத்தகைய அடர்ந்த வனத்திலும், எல்லையிலும் யாருமற்ற கடற்கரையின் ஓரமாக தனித்தேன் இருக்கிறாய் இறைவா" எனும் பொருளில் இறைவன் மீது அவர் பாடல் பாடினார்.அவ்வாறு அவர் பாடலால் புகழ்பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கொன்னை, சுரபுன்னை போன்ற மரங்கள் மிகுதியாக விரவிக் காணப்பட்டன. அதன் அடர்த்தியின் செழுமையும் சேர்ந்து உள்பகுதிகள் முழுவதும் இருளின் கொடி உயரத்தில் பறந்தன. வனத்தில் உள்ளே புகுந்தவர்கள் சரியான வழி தெரியாமல் சிக்கி தவித்த கதையும் உண்டு. வழி தெரிந்தவர்கள் மட்டும்தான் அவற்றின் உள்ளே சென்று பயணிக்க முடியும். அது அத்தனை எளிதல்ல. அங்குள்ள குழகர் ஆலயத்தில் பணி செய்து வரும் அர்ச்சகரும், கலங்கரை விளக்கத்தில் தீமூட்டும் காவலாளியும் வசிப்பதற்காக அங்கு சில குடிசைகள் எழுப்பப்பட்டு இருந்தன. அங்குள்ள அவர்களும் தங்கள் பணி நிமித்தம் மட்டுமே வெளியேறுவார்கள். மற்ற நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியில் தலை காட்ட மாட்டார்கள். இத்தகைய இருண்ட சூழல் அப்பகுதியை இன்று வரை மிரட்டி கொண்டிருந்தது.
புலர் காலை பொழுதில் குழகர் கோயிலிருந்து பெற்று வந்த சர்க்கரைப் பொங்கலை மண் பானையில் வாங்கிக் கொண்டு சடுதியாய் விரைந்து கொண்டிருந்தான் ஒருவன். அவன் வளைந்து வளைந்து மரங்களின் ஊடாக புகுந்து மண் மேடையும் புதர்காடுகளையும் கடந்து நடந்து கொண்டிருந்தான். அவனது வேகத்தில் இருந்தே நன்கு வெளிப்படுகிறது அவன் அப்பகுதிக்கு புதியவன் அல்ல எனும் செய்தி. நீண்ட தூரம் நடந்திருந்ததால் அந்த காலை நேரத்திலும் அவனது உடல் முழுவதும் வியர்வைத் துளிகள் அருவியாய் பெருக்கெடுத்து கொட்டிக் கொண்டிருந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாக நடந்து கொண்டிருந்தான். திடீரென காட்டுக்குள் நுழைந்த அவனது வருகையால் மரங்களில் அமர்ந்திருந்த புள்ளினங்கள் பட படவென சிறகடித்து பறக்கத் தொடங்கின. இவை எதையும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருந்தான். வெகு தூரத்தில் அடர்ந்த வனத்தின் ஊடாக சிறிய குடிசை ஒன்று அமைந்திருந்தது. அங்கு சில பேர் காலைநேர உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து குடிசைக்குள் நுழைந்தவன் அங்கு மூளையில் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கல் பானையை வைத்தான். அதன்பிறகு அங்கு வைத்திருந்த மண்பானையில் இருந்து குவளை நிறைய நீரை எடுத்து மடமடவென பருகத் தொடங்கினான்.
"இந்த பொங்கலை வாங்கி வர இத்தனை நேரமா" உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு உள்ளே வந்த அவர்களின் தலைவன் கோடியக்கரை மூர்க்கன்.
"கோயில் அர்ச்சகன் சர்க்கரை பொங்கல் முழுவதையும் தர மறுத்து விட்டான்".
"ஏன் அவனுக்கு என்னவாம். அங்கு என்ன? அத்தனை கூட்டமா? என்றும் இல்லாத திருநாளாய் இன்று வந்துவிட்டது?"
"அப்படி யாரும் வரவில்லை".
"பிறகு என்ன, பொங்கலைத் தருவதற்கு அவனுக்கு என்ன சிரமம்."
"வேண்டும் மட்டும் இங்கே வாங்கி உண்டு விட்டு போ என்றான்."
"நீ என்ன.... இன்றா, நேற்றா, அவனிடம் பொங்கல் பெற்று வருகிறாய். நீண்ட காலமாக நாமும் இங்கு வாழ்ந்து வருகிறோம். அப்படி இருந்தும் அவனுக்கு என்ன பிரச்சனை?"
"தெரியவில்லை தலைவரே. பொங்கலை அங்கேயே வைத்து உண்டு முடித்துவிட்டு போ என்று தான் கூறினான்".
"யாருமற்ற இந்த ஆலயத்திற்கு, நம்மை விட்டால் வேறு நாதி கிடையாது. அப்படி இருக்க, எங்கு வைத்து உண்டால் அவனுக்கு என்ன?"
"அதனை விட்டுத் தள்ளுங்கள் தலைவரே".
"நீ சொல்வதும் சரிதான். சரி அந்த பொங்கலை எடுத்து அனைவருக்கும் கொடு, இதற்காக வெகு நேரமாக காத்துக் கொண்டுள்ளனர்".
"சர்க்கரைப் பொங்கல் உள்ள மண்பானையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். அங்கிருந்த அனைவருக்கும் அவர்களது கரங்களில் பொங்கலை எடுத்து வழங்கத் தொடங்கினான். அனைவருக்கும் கொடுத்துவிட்டு அவனும் சிறிது எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். ஒரு வழியாக அனைவரும் உண்டு முடித்து விட்டிருந்தார்கள்.
கோடியக்கரை மூர்க்கன் தலைமையில் அங்கு மொத்தம் ஆறு பேர் இருந்தார்கள். அவர்கள் சற்று வயதான தோற்றம் உடையன் கருப்பன், அவன் அருகே குட்டையாகவும் கட்டையாகவும் இருப்பவன் மாதையன், அவனுக்கு அடுத்து ஒல்லியாக இருப்பவன் கார்மேகம், அவனுக்கு அடுத்து இருப்பவன் காத்தவராயன், அவர்கள் கடைசியாக இருப்பவன் கார்கோடன், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு உரிய பணிகளைப் பிரித்து ஏற்கனவே வழங்கி இருந்தான் கோடியக்கரை மூர்க்கன்.
அவர்களுக்குள் உண்டாகும் சந்தேகங்களை ஒன்றாக சந்தித்து அடுத்த கட்டமாக என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்று ஆலோசனை செய்து கொள்வார்கள். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றுதான் இப்பொழுது அங்கு கூடியிருப்பதும்.
"அனைவரும் இங்கு வாருங்கள்" தன்னுடைய கூட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்தான் கோடியக்கரை மூர்க்கன்.
"அவன் அருகே வந்து நின்றனர் மற்ற ஐவரும்".
"நாம் மேற்கொண்டு வரும் எந்த முயற்சியும் இதுவரை வெற்றியை தரவில்லை, அனைத்தும் தோல்வி முகம் தான்" என்றான் கோடியக்கரை மூர்க்கன்.
"அப்படி சொல்ல முடியாது கண்ணபுரத்தில் வேண்டுமானால் முயற்சி தோற்று இருக்கலாம். ஆனால் நாகையின் நெல்லுக்கடையில் வெற்றி நம் பக்கம் தான்" என்றான் கருப்பன்.
"நெல்லுக்கடையில் நடந்தவற்றில் எதை வெற்றி என்கிறாய் " என்றான் அவர்களின் தலைவன் கோடியக்கரை மூர்க்கன்".
"நெல்லுக்கடையில் புழக்கத்தில் விட்ட சோழநாராயணன், அதனைத் தொடர்ந்து நெல்லுக்கடையை எரித்தது, இன்று நாகையில் பெரும் பயத்தையும் மக்கள் மத்தியில் சோழர்களின் நிர்வாகத்தின் மீதான வெறுப்பையும் இவை விதைத்துள்ளது, இது நமக்கு கிடைத்த வெற்றி தானே" என்றான் கருப்பன்.
"அது மட்டுமல்ல இருட்டுப் பள்ளம் மாடன் நாகை பாடி காவல் அதிகாரி இளமாறனுடைய வயிற்றில் ஆழமாக வெட்டியதால், அவனது உயிர் இப்போதோ அப்போதோ என்று ஆதூரசாலையில் இழுத்துக் கொண்டு கிடக்கிறது. இது நமக்கு கிடைத்த பெரிய வெற்றி தான்" என்றான் கார்கோடன்.
"நம்மையும், நமது முயற்சியையும் எதிர்க்க நினைத்த, குடும்பத்தின் அனைவரையும் ஒரு வழியாக ஒளித்து கட்டியது நமது முயற்சியின் பெரும் வெற்றியாகும். அதற்காக, நாம் கொடுத்த விலை வேண்டுமானால் அதிகமாக இருக்கும். இதனை நீங்கள் மறுக்க முடியாத தலைவரே" என்றான் கருப்பன்.
"நீங்கள் சொல்வது அனைத்தும் பொதுவாக பார்த்தால் நமக்கு வெற்றியாக தெரியலாம், ஆனால் அனைத்திலும் நமக்கு கிடைத்தது தோல்விதான்."
"அது எப்படி தலைவரே? எனக்கு புரியவில்லை? விலகி கூறுங்கள் ?"என்றான் கார்மேகம்.
"அடேய்... கூறுகெட்ட பயலே... கண்ணபுரத்தில் கலகத்தை உண்டாக்க நினைத்த மாரப்பன் அன்னை வடிவால் அடித்து கொல்லப்பட்டான். நெல்லுக்கடையில் சோழநாராயணனை புழக்கத்தில் விட்டவன் இன்று காராகிரகத்தில் அடைக்கப்பெற்றுள்ளான். நெல்லுக்கடையில் கலகத்தை உண்டாக்க நினைத்த அத்தனை பேரும் சிவலோக பதவி அடைந்து விட்டனர். அதற்கு அடுத்து இருட்டு பள்ளத்தில் மாடன் தலைமையில் இருந்த அனைவரும் பரலோகம் எப்போதோ போய்விட்டனர். சூரியவர்மர் மாளிகை கைப்பற்றி வைத்திருந்த அத்தனை பேரும் அப்போதே இறைவனடி சேர்ந்து விட்டனர். அவர்களில் உயிருடன் மீண்டும் வந்தது கார்கோடன் மட்டும் தான். இவை அனைத்தையும் மறந்து விட்டீர்களா? இப்போது கூறுங்கள் நமக்கு கிடைத்திருப்பது வெற்றியா? தோல்வியா? "
அங்கிருந்த அனைவரிடத்திலும் சொல்வதற்கு யாதொரு பதிலும் இல்லை. ஆதலால் வாய்மூடி மௌனமாக இருந்தார்கள்.
"நம்மில் பலரை இழந்து விட்டோம். இந்த இழப்பிற்கு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும். அதுதான் நமது நண்பர்களுக்கு நாம் செய்யும் கைமாறாக இருக்கும். அதற்காக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனிமேல் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிக கவனமாக இருக்க வேண்டும். இனி இழப்பு என்பது எதிரிகளுக்கு தான் இருக்க வேண்டும் நமக்கு அல்ல இதை கவனத்தில் கொண்டு அனைவரும் செயலாற்ற வேண்டும்." அடுத்து அவர்கள் செய்ய வேண்டிய விவரங்களை எடுத்து கூறினான் அவர்களின் தலைவன் கோடியக்கரை மூர்க்கன். அவனது திட்டத்தைக் கேட்ட அவர்கள் உற்சாகம் மிகுதியால் "இவை கண்டிப்பாக நமக்கு வெற்றியைத் தரும்" என்றார்கள்.
(தொடரும்.... அத்தியாயம் 18ல்)
No comments:
Post a Comment