🐾இராஜமோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 31 🌾 மீண்டும் வணிகச்சாத்துகள் 🌾
அங்குள்ள வீடுகள் அனைத்தும் நாகையின் பெரும் வணிகர்களான குதிரை செட்டிகள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்று . தங்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையிலே அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருந்த அரபு நாட்டு குதிரைகளை பராமரித்து வந்தார்கள். பெரும்பாலும் சோழ தேசத்திற்கு வேண்டிய குதிரைகள் தருவித்து தரும் அரும்பெரும் பணியினை காலம் காலமாக அவர்கள் செய்து வந்தார்கள். குதிரை வணிகத்தை மேற்கொண்டு வந்ததன் காரணமாக அவர்கள் குதிரைச் செட்டிகள் என அழைக்கப்பட்டார்கள். அந்தக் குடியிருப்பின் உள்ளே தான் இளம்வழுதியும் அழகனும் நுழைந்து இருந்தார்கள்.
இரவின் இரண்டாம் சாமம் தொடங்கியிருந்த அந்த நேரத்திலும் குதிரை வணிகம் அங்கே நடந்து கொண்டிருந்தது. குதிரைகளை வாங்கும் போது அவற்றின் சுழிகள் வைத்து அதன் தரத்தை மதிப்பிடுவதும் குதிரையின் பற்களை எண்ணி அதன் வயதினை கணக்கிடுவதும் காலம் காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கையாக இருந்தது. அதன் மூலமாக குதிரையின் விலையும் தீர்மானிக்கப்பட்டது.
பெரிய வீட்டின் பின்பகுதியில் அமைந்திருந்த குதிரை கொட்டடிக்கு இருவரும் வந்து சேர்ந்திருந்தார்கள் அங்கு நூற்றுக்கணக்கான குதிரைகள் இருந்தன. கரிய, சாம்பல், வெள்ளை வண்ணக் குதிரைகள் என அங்கிருந்தன. அவற்றை பராமரிக்கவும் பாதுகாக்கவும் நிறைய ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். சிறிய வட்டமான மர உருளையில் கொள்ளினை நிரப்பி ஊழியர்கள் நிரப்பி வைத்ததும் குதிரைகள் புசு புசுவென மூச்சுவிட்டபடி தின்று கொண்டிருந்தன. கொட்டடியின் ஒரு பகுதியில் குதிரையின் கழிவுகளை சுத்தம் செய்து கொண்டு சில பணியாளர்கள் இருந்தார்கள் வேறு சிலரோ அதன் கை கால்களை உருவி விட்டு குதிரைகளை திடப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் சில குதிரைகளை அங்குள்ள திறந்த வெளியில் அவிழ்த்து ஓட விட்டு பின் அழைத்து வந்து கொட்டடியில் கட்டிக் கொண்டிருந்தார்கள். இவை யாவற்றையும் கண்காணித்துக் கொண்டிருந்த பெரிய மனிதர் கொட்டடியை நோக்கி யாரோ இருவர் வருவதை பார்த்து விட்டிருந்தார். அவர்களை நோக்கி வந்தவர்"தாங்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாவல் அதிகாரி இளம்வழுதி தானே" என்றார்.
தம்மைப் பற்றி அதற்குள் செய்தி இத்தனை வேகத்தில் பரவி விட்டதா என எண்ணி கொண்டவன்"ஆமாம் ஐயா!"என்றான்.
"மிக்க மகிழ்ச்சி. எங்கள் வணிகத்தின் பாதுகாப்பு தங்களை நம்பித்தான் உள்ளது. "
"கவலைப்பட வேண்டாம் ஐயா. தங்கள் பாதுகாப்பிற்கு எந்த விதமான இடையூறும் வராமல் பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு".
"தங்களைப் பற்றி அனைத்து விவரங்களையும் அறிவேன் ஐயா. தங்கள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது."
"தங்களது நம்பிக்கையை கண்டிப்பாக காப்பாற்றுவேன்."
"தங்களுக்கு எவ்வகையில் உதவி செய்ய வேண்டும் கூறுங்கள்?"
"எமக்கு ஒரு குதிரை வேண்டும்"
"எவ்வகையிலான குதிரை ஐயா?"
"ஏன் அவ்வாறு வினவுகிறீர்கள்?"
"தங்களது நோக்கத்தை அறிந்தால், அதற்கு ஏற்றார் போல் குதிரைகளை வழங்குவதற்கு வசதியாக இருக்கும். குதிரைகளை பல்வேறு வகைகளாக பிரித்து ஒவ்வொருவரின் பயன்பாட்டுக்கு ஏற்ப அதனை பயிற்சி அளித்து தயார் செய்து வைத்துள்ளோம். சில வகையான குதிரைகள் பயணத்திற்கு பயன்படும், இன்னும் சில வகையான குதிரைகள் பாரம் இழக்க பயன்படும், சில குதிரைகளோ பெயருக்கு அலங்காரத்திற்காக வைத்துக் கொள்ள பயன்படும், இன்னும் சில அபூர்வ குதிரைகளின் மீது பயணிப்பதே ஒரு கௌரவத்தை கொடுக்கும். போர் வீரர்களுக்கு என சில குதிரைகள் உண்டு. ஆகையினால் தான் கேட்கிறேன். தங்களுக்கு எவ்வகையான குதிரை வேண்டும்.
"பயணம் செய்வதற்கும் தேவைப்படின், வாள் வீரன் ஒருவன் பயன்படுத்தக்கூடிய தன்மையிலும் அமைந்த ஒரு குதிரை வேண்டும் ஐயா"
"வழக்கமாக சோழ படைகளுக்கு வேண்டிய குதிரைகளை அனுப்பி வைப்போம். அவற்றுள் சிலவற்றை தயார் சய்து வைத்துள்ளோம். அவற்றைப் பாருங்கள் அவற்றுள் தங்களுக்கு பிடித்த குதிரையை சொல்லுங்கள் தருகிறேன்."
தேர்வு செய்து அவர் காட்டிய குதிரைகளை இளம்வழுதியும் அழகனும் சேர்ந்து பார்த்துக் கொண்டே சென்றார்கள். திடீரென ஒரு குதிரை இருவரும் ஒரே நேரத்தில் சுட்டிக்காட்டினார்கள். "உங்கள் இருவருக்கும் ஒரே சிந்தனை. நீங்கள் தேர்வு செய்துள்ள வெள்ளை குதிரை இங்குள்ள குதிரைகளில் சிறந்தது. இதனை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்." என வணிகர் மகிழ்ச்சியோடு கூறினார்.
வெள்ளைக் குதிரையை அழைத்துக் கொண்டு அவ் இருவரும் புறப்பட தயாரானார்கள். "இதற்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் ஐயா"என இளமொழுதியை பார்த்து அழகன் கேட்டான். அவன் கேட்டது வணிகரின் காதில் விழுந்து விட்டது "நீங்கள் எதுவும் தர வேண்டியதில்லை. வழக்கம்போல் சோழப் படைகளுக்கு குதிரைகள் அனுப்பும் கணக்கில் எழுதிக் கொள்கிறேன். " என அவர் கூறியதை கேட்ட பின்பு இருவரும் அங்கிருந்து வெளியேறினார்கள்.
அழகன் தன் கையில் உள்ள குதிரையின் கடிவாளத்தை பிடித்தபடி மனதுக்குள் ஒரு வகையான ஆனந்தத்தில் நடந்து கொண்டிருந்தான். என்ன நினைத்துக் கொண்டானோ அடிக்கடி தனது குதிரையை பார்த்து கொண்டவன், தனக்குள் ஏதோ பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தான்.
"உனது குதிரை எப்படி உள்ளது அழகா?"
"உண்மையிலேயே அற்புதமாக உள்ளது"
"உனக்கு பிடித்திருந்தால் சரிதான்."
"இருவரும் ஒரே நேரத்தில் இந்த குதிரையை சுட்டிக்காட்டியது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. நமக்குள் ஒரே புரிதல் இருப்பதை இது காட்டுகிறது"
இருவரும் பேசிக்கொண்டே குதிரைகளை முடுக்கி விட்டிருந்தார்கள். விரைந்து ஓடிக்கொண்டிருந்த குதிரைகள் நாகையை விட்டு வெளியேறி அந்த இரவு நேரத்தில் வணிகத்தின் பொருட்டு செல்பவர்களும் பயணத்தின் பொருட்டு செல்பவர்களும் தமது கூட்டு வண்டிகளிலும் மாட்டு வண்டிகளிலும் பொருள்களை ஏற்றிக்கொண்டு வணிக சாத்துகளாக நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் இணைந்து பயணம் செய்பவர்களும் தமது வண்டிகளில் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளவர்கள் தங்களின் பாதுகாப்பின் பொருட்டு இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்வது காலங்காலமாக நடந்து வரும் வழக்கமாய் இருந்தது.
நீண்டதொரு இடைவெளிக்கு பின்பு வணிகச் சாத்துகள் பயன்பாட்டுக்கு வந்திருப்பதை கவனித்த இளம்வழுதியின் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.
"நீண்ட நேரமாக வணிக சாத்துகள் செல்லும் வணிகர் கூட்டத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?"
"நான் நாகை வந்த பின் இவ்வளவு பெரிய வணிககூட்டத்தை இப்பொழுது தன் பார்க்கிறேன்"
"இவை எப்பொழுதும் நடைமுறையில் இருக்கும் வழக்கம் தானே ஐயா?"
"முன்பு இருந்தது உண்மைதான் அழகா!, ஆனால் சமீப காலமாக அவை நடைமுறையில் இல்லாமல் இருந்தது."
"இங்கு நடந்த பல்வேறு குழப்பங்கள் தான் காரணமாய் இருக்க முடியும். அதைத்தானே சரி செய்ய தாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்."
"ஆமாம்! ஆனால் அவற்றில் பெரியதொரு வெற்றி இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. அதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது."
"கண்டிப்பாக நமக்கு வெற்றி கிடைக்கும் ஐயா"
"வா அழகா! நாமும் அவர்களோடு சிறிது தூரம் பயணம் செய்து விட்டு வருவோம்" எனக் கூறியபடி வணிக சாத்துகளின் பின்னால் தனது குதிரையை முடுக்கி விட்டிருந்தான் இளம்வழுதி.
ஒரு கணம் தாமதித்துவிட்டு தனது வெண்புறவியை இளம்வழுதியின் பின்னால் தொடர்ந்தான் அழகன்.
கூட்டு வண்டிகள் அனைத்தும் ஒரு வரிசையாகவும் மாட்டு வண்டிகள் மற்றொரு வரிசையாகவும் இணைந்த பயணத்தை தொடர்ந்தன. அவ் வண்டிகளின் பின்னால் பயணத்தை மேற்கொண்டு இருந்த பயணிகள் தமது குதிரைகளிலும் மாட்டு வண்டிகளிலும் அவர்களை பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். வணிகர் சாத்து வண்டிகள் ஒரே தாள லயத்துடன் ஆடி அசைந்து சென்று கொண்டிருந்தன.
ஒவ்வொரு ஒவ்வொரு வண்டிகளிலும் இரவு நேரத்தில் பயணத்துக்கு உதவியாக சுளுந்துகளை வண்டியின் இருபுறமும் செருகி வைத்திருந்தார்கள். சுளுந்துகளின் ஒளி வெள்ளத்தில் தஞ்சை பெருவழி செல்லும் அப்பாதை தெளிவாகத் தெரிந்தன. இவ் வண்டிகளின் பாதுகாப்பிற்கு ஆங்காங்கே வணிகர்கள் ஏற்பாடு செய்திருந்த காவலர்கள் குதிரைகளில் உடன் சென்று கொண்டிருந்தார்கள். இவ்வாறான நீண்ட பயணத்தில் பொருட்களை கண்ணும் கருத்துமாக காவல் காத்து உரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் வரை அவர்களுக்கு சரியான ஊன் உறக்கமின்றி தொடர்ந்து பயணம் செய்வது அப்பாதுகாவலர்களுக்கு பழகி விட்டிருந்தது. நீண்ட தூரப் பயணத்தில் வணிகர்கள் ஆங்காங்கே பாதுகாப்பானதொரு இடத்தில் தங்கும் போது அவர்களுக்கு வேண்டிய உணவுகளை அவர்கள் சமைத்து உண்பார்கள். அவ்வேளைகளில் பாதுகாவலர்களுக்கும் உணவு கிடைக்கும். சில நேரங்களில் அவை கிடைக்காமல் போவதும் உண்டு. இவ்வாறான பயணம் அவர்களுக்கு பழக்கமாய் இருந்ததால் கிடைத்ததை உண்டு தங்கள் பணிகளை செவ்வனே செய்து வந்தார்கள். அக்காவலர்கள் எப்பொழுதும் தமது இடையில் நீண்ட வாளும், கையில் குத்தீட்டி ஒன்றும் எப்பொழுதும் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் எல்லா வகையான சண்டைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாகவே இருப்பார்கள். திடீரென வழிப்பறி கொள்ளையர்களாளோ அல்லது தீயவர்களாலோ துன்பம் ஏதேனும் நேரிட்டால் அதனை எதிர்கொள்ளும் திறன் அவர்களுக்கு இருந்தது. அத்தகைய நபர்களையே பெரும்பாலும் வணிகர்கள் தேர்வு செய்து தங்கள் வழி துணையாக அழைத்துச் செல்லும் வழக்கம் இருந்தது. அப்படியான பயணம் தான் அங்கு தொடர்ந்து கொண்டிருந்ததன.
அப்போது வணிக சாத்துகள் பாதுகாவலர்கள் இருவர் தங்கள் குதிரைகளை அருகருகே விட்டபடி பேசிக் கொண்டு பயணத்தை தொடர்ந்தார்கள்.
"நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பொழுது தான் வணிக சாத்துகள் வணிகர்கள் தொடங்கியுள்ளார்கள்." என்றான் அவர்களில் ஒருவன்.
" எத்தனை காலம் தான் அவர்களும் பொறுத்திருப்பார்கள். வாங்கிய பொருட்களை காலாகாலத்தில் விற்பனை செய்தால் தானே அவர்களுக்கும் இலாபம் கிடைக்கும்." என்றான் அவன் அருகே பயணம் செய்யும் மற்றொருவன்.
"ஆமாம். அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட இதுவரை எந்த பணியும் கிடைக்கவில்லை. இவர்களை நம்பித் தானே நமது வாழ்வாதாரமும் உள்ளது."
"நீ சொல்வது முற்றிலும் உண்மை. எத்தனை காலம் தான் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது."
"நாலு காசு சம்பாதித்தால் தான் வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகளும் மதிப்பார்கள்."
"ஆமாம் ஆமாம். அதனை வீட்டில் இருந்த சில நாட்களிலேயே நான் தெரிந்து கொண்டேன்."
"அடடா! நீ புதிதாக கல்யாணம் செய்து கொண்டவன் தானே? உனக்கு அதற்குள் வாழ்க்கை அழுது விட்டதா?"
" இதில் புதிதென்ன? பழைய தென்ன? வாழ்க்கையில் அனைவருக்கும் நடப்பது தானே. என்ன உங்களுக்கு தெரிந்துவிட்டது. எனக்கு சற்று தாமதம் அவ்வளவுதான்."
"நல்ல ஆளப்பா நீ. நன்றாகவும் பேசுகிறாய்"
"ஏன் இத்தனை நாட்களாக வணிகச் சாத்துகளை வணிகர்கள் செய்யாமல் இருந்தார்கள்?"
"தேசத்தில் ஆங்காங்கே மூண்டு வரும் கலகங்களும் புரட்சிகளும் சேர்ந்து அவர்களை பயமுறுத்தி இருக்க வேண்டும்"
அடுத்து தன் அருகில் வந்தவன் கூறியதை கேட்டதும் வியப்பில் ஆழ்ந்து போனான் புதிதாக கல்யாணமானவன்.
(தொடரும்.... அத்தியாயம் 32ல்)
No comments:
Post a Comment