🐾இராஜமோகினி 🐾
🌹யாழிசைசெல்வா 🌹
அத்தியாயம் 18 🌾மான் வேட்டை 🌾
நீண்ட நேரமாக தங்களுக்குள் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி விவாதம் மேற்கொண்டு இருந்தார்கள், கோடியக்கரையில் அடர்ந்த காட்டுக்குள் கூடியிருந்த கோடியக்கரை மூர்க்கன் கூட்டத்தினர். சிறிதும் அலுப்பு தட்டாமல் அவர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கு சலிக்காமல் பதிலளித்துக் கொண்டிருந்தான். தங்கள் நோக்கம் நிறைவேற எத்தனை வழிகளில் அணுக முடியுமோ, அவற்றைப் பற்றி படிப்படியாக தான் அனுபவத்தில் கற்று இருந்த படிப்பினைகள் மூலம் அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். இத்தனைக்கும் அவர்கள் நீண்ட கால நண்பர்கள், ஒருவரை பற்றி ஒருவர் நன்கு அறிவார்கள். எத்தனையோ காரியங்களில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றி இருந்ததால், அவர்களுக்குள் எப்போதும் பேதம் இருந்ததில்லை. அவ்வபோது சிற்சில கருத்து முரண்கள் தோன்றி இருந்தாலும், அதனை எப்பொழுதும் பெரிதாக வளர்த்துக் கொண்டதில்லை. தங்களுக்குள் பணிகளைப் பிரித்துக் கொள்வதில் அதிக நாட்டம் காட்டுவார்கள். அதனால் அங்கு பெரிதாக முரண்கள் உருவாவதற்கு உண்டான சாத்தியங்கள் இருந்ததில்லை. அப்படி இருந்தும் அவர்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பெரும் தோல்வியை தழுவி இருந்தது. அதுதான் அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை தந்திருக்க வேண்டும். அவர்கள் மனதில் தோன்றியது எல்லாம் தாங்கள் மேற்கொள்ளும் காரியம் பூரண வெற்றியை பெற வேண்டும், அவை இன்றி வேறு எந்த ஒரு நினைவுகளும் அவர்களுக்கு தோன்றியிருக்கவில்லை.
புலர்காலையில் குழகர் ஆலயத்தில் பெற்று வந்திருந்த, சர்க்கரை பொங்கலை மட்டும் உண்டு விட்டு தொடங்கிய அந்த விவாதம், நான்கு நாழிகைகள் கடந்த பின்பும் தொடர்ந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் கடந்திருந்ததால் அவர்கள் வயிறு உணவு வேண்டி பெரும் கூப்பாடு போடத் தொடங்கிவிட்டது.' அடடே நீண்ட நேரம் ஆகிவிட்டது ' என தோன்றியிருக்கும் போலும் கூட்டத்தை முடித்துக் கொண்டு எழுந்தவர்கள், கை கால்களை உதறி கொண்டார்கள்.
"தலைவரே மதியநேர உணவு சமைக்க வேண்டும், அதற்கு தயார் செய்யட்டுமா?" என்றான் அக்கூட்டத்தில் அவர்களை விட சற்று வயது முதிர்ந்த கருப்பன்.
" இதைக் கேட்கவும் வேண்டுமா, நீ சமைக்கும் சுவையான உணவை எண்ணி இப்போதே நாக்கில் நீர் சுரக்கிறது. அதோடு சேர்ந்து கொண்டு வயிறும் தன் கூப்பாட்டை அதிகப்படுத்தி விட்டது" என சிரித்தபடி கூறினான் கூட்டத்தின் தலைவன் கோடியக்கரை மூர்க்கன்.
" ஆமாம். ஆமாம். உன்னை விட்டால் எங்களுக்கு சுவையான உணவு சமைத்து போட வேற ஆள் கிடையாது" என்றான் கார்மேகம்.
" சமைக்கிறதுன்னு முடிவாயிருச்சு. அதனால இன்னைக்கு நல்ல அசைவ சோறா போடுங்க அண்ணே" என்றான் காத்தவராயன்.
" எப்ப பார்த்தாலும் பொங்கலும், புளியோதரையும், சாம்பார் சாதமும், தயிர் சாதமும், அதை விட்டா உப்பு கருவாட்டுக் குழம்பு மாகத் தின்னு தின்னு அலுத்து போச்சு, அதனால இன்னைக்கு சுவையான சோறு சாப்பிடணும்" என்றான் அவர்களின் கட்டையாகும் குட்டையாகவும் இருந்த மாதையன்.
கருப்பன் தான் காலையில் குழவர் ஆலயத்திலிருந்து சர்க்கரை பொங்கலை பெற்று வந்தவன். பெரும்பாலும் உணவு தயாரிக்கும் பணிகளில் அவன் தான் ஈடுபடுவான். மற்றவர்களும் அவனுக்கு உறுதுணையாக இருப்பார்கள் .சில நேரங்களில் அவர்கள் சமைக்கவும் செய்வார்கள். ஆனால் அவற்றில் இருக்கும் சுவை கருப்பன் சமைப்பது போல் இல்லை என்று அவர்களுக்குள்ளாக எப்போதும் ஒரு பேச்சு இருந்தது. ஆகவே எப்படியும் நாம் தலையில் தான் கட்டி விடப் போகிறார்கள், அதற்கு நாமாகவே சமையல் பணியை தொடங்கி விட்டால் நல்லது. எத்தனை பேருக்கு சுவையாக சமைக்க தெரிகிறது, அப்படி சமைத்தாலும், யார் அவர்களுக்கு உரிய மரியாதை தருகிறார்கள், எனது நண்பர்கள் என்னை கொண்டாடி தீர்க்கிறார்களே, இந்த ஆனந்தமும் சுகமாகத்தான் இருக்கிறது என நினைத்துக் கொண்டான் போலும்.
"சரி, அசைவம்னு முடிவாயிருச்சு, அதுக்கான வேலையை பாருங்க" என்றான் அவர்களின் தலைவன் கோடியக்கரை மூர்க்கன்.
கார்க்கோடகனும் மாதையனும் முன்னாள் வந்து, நாங்க ரெண்டு பேரும் போய், ஏதாவது நாம சாப்பிடற மாதிரி விலங்கு கிடைக்குதான்னு பார்த்து வேட்டையாடிக் கொண்டு வருகிறோம்" என்றவர்கள் அங்கிருந்த குடிசை விட்டு கிளம்பினார்கள்.
"காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போயிட வேண்டாம். சீக்கிரமா பார்த்து எதையாவது வேட்டையாடி கொண்டு வாங்க. கவனமா போயிட்டு வாங்க." என்றான் கருப்பன்.
"சரி அண்ணே. அப்ப நாங்க போயிட்டு வருகிறோம்" என கூறிவிட்டு காட்டுக்குள் நுழைந்திருந்தார்கள் அவர்கள் இருவரும்.
பெரிய பெரிய மரங்கள் கொண்ட அடர்ந்த வனமாக இருந்தது கோடியக்கரை. உயர்ந்த மரங்களின் கீழே அடர்ந்த புதர்களும் முட்செடிகளும் செழித்து காணப்பட்டன. இயற்கையில் தானாகவே தழைத்து, செழித்து வளர்ந்த மரங்கள், தன் கிளைகளை பரப்பி வைத்திருந்தது. அந்த மரங்களை தமது வாழ்விடமாக கொண்டு பல்வேறு வகையான புள்ளினங்கள் வாழ்ந்து வந்தன. ஆழமற்ற கடலில் இருந்து வீசும் கடற்காற்று வெண் மணல் துகள்களை அள்ளி அள்ளி கரையோரங்களில் மட்டும் இன்றி, அவற்றின் வெகு தூரம் வரை வீசுகியதால், ஆங்காங்கே பெரும் மணல் திட்டுகளும், அவற்றில் செழித்து வளர்ந்திருந்த பல்வேறு வகையான குட்டையான மரங்களும் காணப்பட்டன. அந்தக் காட்டின் பெரும் பகுதி மேடாகவும் பள்ளமாகவும் மாறி மாறி அமைந்திருந்தது. ஆண்டின் பெரும் பகுதி நாட்கள் எப்போதும் மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருப்பதால் ஆங்காங்கே குட்டைகளும் நீரோடைகளும் நீர் தழும்பி காணப்பட்டன. அந்நீர் நிலைகளை தேடி காட்டினுள் வசிக்கும் மான், மயில், ஓநாய், நரி, கழுதைப்புலி, சிறுத்தை, வேங்கை புலி, யானை கூட்டம் ஆகியவை கூட்டமாகவும் சில நேரங்களில் தனியாகவும் வந்து நீர் அருந்தி செல்வதுண்டு. அவ்வாறான காட்சிகள் எல்லாம் வெகு சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன. இதன் காரணமாக தான் அங்கு வசிக்கும் ஒரு சில குடும்பம், காட்டின் உள்ளே செல்வதை தவிர்த்து இருந்தார்கள் போலும். அவர்களது பயம் தான் கோடியக்கரை மூர்க்கன் கூட்டத்திற்கு பெரும் வசதியாக போய்விட்டது. அவர்கள் நினைத்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் காட்டிற்குள் சென்று வந்தார்கள். இன்னும் பல பல பகுதிகளுக்கும் அவர்கள் செல்ல தயங்கியதில்லை. இங்கு நம்மை யார் தட்டிக் கேட்பார்கள் என்ற ஒரு வகையான ஆணவம் கூடவே சேர்ந்து அவர்களது இந்த நிலையை அதிகப்படுத்தி இருக்க வேண்டுமோ என்னவோ நாம் அறியோம்.
புன்னை மரங்களின் ஊடாக கடந்து சென்றவர்கள் எதிரே தெரிந்த பெரிய மேட்டின் மீது ஏறினார்கள். அதன் கீழ் சரிவின் வழியாக இறங்கி மீண்டும், இன்னொரு மேட்டின் மீது ஏறி இறங்கி, எதிரே தெரிந்த மரக் கூட்டத்தின் வழியாக நடக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு ஏதோ நீண்ட தூரம் கடந்துவிட்ட உணர்வு தோன்றியிருக்க வேண்டும், பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே முன்னோக்கி நடந்தார்கள். தூரத்தில் எங்கோ நீர்நிலை ஒன்று இருக்கும் அறிகுறி அவர்களுக்கு தோன்றி இருந்தது. அந்த நீர் நிலையைத் தேடி ஒற்றை மான் ஒன்று செல்லும் ஓசை அவர்களை ஈர்த்திருந்தது. இருவரும் தங்களுக்குள் விழிகளாலே பேசிக்கொண்டார்கள், சத்தம் வந்த திசையை நோக்கி கூர்ந்து கவனித்தபடியே மெதுவாக நடந்தார்கள். அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் ஓசை இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். ஏற்கனவே வரும் வழியில் நீண்ட குச்சி ஒன்றை எடுத்து அதனை , அவர்கள் எப்போதும் இடையில் வைத்திருக்கும் குருவாளால் கூர்மையாக ஈட்டி போல் செதுக்கி வைத்திருந்தார்கள். அதனை இருவரும் தமது கையில் வைத்துக் கொண்டு நீர்நிலை இருக்கும் திசை நோக்கி நடந்தார்கள்.
"இங்குதான் எங்கோ நீர்நிலை உள்ளது." அதிக சத்தம் இன்றி தன் பின்னால் வந்த கார்கோடகத்திடம் சொன்னான் மருதையன்.
"புரிகிறது, அப்படியே மெதுவாக போ".
"சரி, நீயும், என் பின்னாலே வா".
அவர்களின் எதிரே அழகான சிற்றோடை நீர் தழும்பி வழிந்தோடி கொண்டிருந்தது. அப்படி ஒன்றும் அவை ஆழமாக தெரியவில்லை. பரவலாக இருந்தாலும் ஒரே சீரான வேகத்தில் நீர் சென்று கொண்டிருந்தது. எதிர்ப்புறம் இருந்து வரும் காட்டு விலங்குகள் வழக்கமாக நீர் அருந்தி கடந்து செல்லும் நீரோடை அது என்பதை அங்கு விரைவி கிடந்த பல்வேறு விலங்குகளின் காலடித்தடங்கள் சொல்லிக் கொண்டிருந்தது.
தெளிந்த நீரோடையில் எதிர்பக்கம் இருந்த மரங்கள் கண்ணாடி போல் நீரின் மேலே காட்சியளித்து கொண்டிருந்தது. காட்டிற்கு உள்ளே இருந்து அப்போதுதான் தாகத்தின் காரணமாக நீரோடை நோக்கி வந்திருந்த மான் நீரின் மீது வாய் வைத்து தண்ணீரை அருந்திக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாக தண்ணீர் இன்றி தவித்துக் கிடந்த மான் போலும் நீரை சுவைத்து சுவைத்து குடித்துக் கொண்டிருந்தது. தனக்கு நிகழவிருக்கும் பேராபத்து குறித்து அறியாமல் நீரை அறிந்து கொண்டிருந்தது அந்த மான்.
உடல் முழுவதும் வட்ட வட்டமான புள்ளிகளோடு அழகான நீண்ட விழிகளை பெற்று அருகம்புல்லையும் காட்டில் செழித்து வளர்ந்த இலைகளையும், தலைகளையும் உண்டதாலோ என்னவோ நல்ல சதை பிடிப்புடன் கூடிய கலையான மானாக விளங்கியது. நீரோடையில் நீர் அருந்தும் போது நீரின் மீது தெரியும் தனது உருவத்தை பார்த்துக் கொண்டே தண்ணீரை பருகிக் கொண்டிருந்தது. அதற்கு அதில் ஒரு அலாதி சுகம் இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறை நீரின் மீது வாய் வைக்கும் போது நீரில் தெரியும் தனது உருவத்தை பார்த்துக்கொண்டே நீரினை பருகியது. அந்த வேடிக்கை விளையாட்டை குதூகலத்தோடு ரசித்து செய்து கொண்டிருந்தது.
நீரோடையில் நீர் அருந்திக் கொண்டிருந்த மானிற்கு பின்னால் சிறிது தொலைவில் இருந்த பெரிய மரம் ஒன்றின் மறைவில் இருவரும் வந்து நின்று கொண்டு மானையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"நீ, மெதுவாக கடந்து அந்தப் பக்கமாக சென்று விடு, அங்கிருந்து நீ மானை வீழ்த்தப் பார், நான் இங்கிருந்து குறி வைக்கிறேன். இருவரில் யாராவது ஒருவர் காரியத்தை சரியாக நிறைவேற்ற வேண்டும். அங்கு நமக்காக காத்திருப்பார்கள்" என்றான் கார்கோடகம்.
"நீ, சொல்வதும் சரிதான் அப்படியே செய்து விடுவோம்" கூறிவிட்டு ஓசை எழுப்பாமல் விலகி அந்தப் பக்கமாக சென்றான் மருதையன்.
இருவரும் மானை நோக்கி தங்கள் கையில் இருந்த ஈட்டி போன்ற நீண்ட மரக்குச்சியை எடுத்து குறி வைத்தார்கள்.
அப்பொழுது எங்கிருந்தோ பறந்து வந்த சிட்டுக்குருவிகள் படபடவென சிறகடித்துக் கொண்டு கூட்டமாக, நீர் அருந்தும் மானின் எதிர்கரையில் நீருக்கு அருகாமையில் அமர்ந்து அமைதியாக வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் நீரினை குடிக்க தொடங்கின.
சிட்டுக்குருவிகள் எழுப்பிய ஒலியால் நீரை விட்டு புள்ளிமான் தலையை உயர்த்திய போது அதற்காகவே காத்திருந்த, மருதையன் கையில் இருந்து புறப்பட்ட ஈட்டி போன்ற நீண்ட குச்சி சரக்கென சென்று மானின் வயிற்றை துளைத்து அதன் எதிர்பக்கம் வெளியேறி இருந்தபோது "அம்மா "எனும் பெறும் சத்தமுடன் நீரோடையின் கரையில் குருதிப் பெருக்கோடு உருண்டு விழுந்தது அந்த புள்ளிமான்.
பெரும் வலியோடு மான் எழுப்பிய சத்தத்தால் சிட்டுக்குருவிகள் படபடவென்று சிறகடித்து பறந்தோடி விட்டிருந்தன.
மருதையனும் கார்க்கோடகனும் துள்ளி குதித்தோடி மானின் அருகே சென்றபோது துடிதுடித்து காலையும் கையையும் உதறிக்கொண்டு மரணத்தின் விளிம்பில் இருந்தது அந்த ஆண் புள்ளிமான். மரண வலியால் அதன் விழிகளிருந்து கண்ணீர் அருவியாக பெருக்கெடுத்து வழிந்தோடி கொண்டிருந்தது.
"இன்று நல்ல வேட்டை" என்றான் கார்கோடகன்.
"நீண்ட நாட்களுக்குப் பிறகு, சுவையான இளம் மான் கறி சுவைக்கப் போகிறோம், என்ற நினைப்பே அத்தனை சுகமாக உள்ளது" என்றான் மருதையன்.
"சரி, சரி நேரமாகிறது. சீக்கிரம் ஆகட்டும்" என்றான் கார்கோடகன்.
அந்த ஆண் புள்ளிமானின் வயிற்றில் பாய்ந்திருந்த ஈட்டி போன்ற குச்சியை சடக்கென மருதையன் உருவியதும் "அம்மா " என பெருத்த அலரலோடு மானின் உயிர் பிரிந்தது.
மானின் வயிற்றில் இருந்து உருவி எடுத்த தனது ஈட்டி போன்ற குச்சியை, நீரோடையில் தேய்த்து கழுவி விட்டு, நீரை அள்ளி அள்ளி வயிறு மூட்ட பருகினான் மருதையன்.
மருதையனை தொடர்ந்து கார்க்கோடகனும், நீரோடையின் நீரை அள்ளி வேண்டிய மட்டும் குடித்துவிட்டு மானின் காயத்திலிருந்து வழிந்து கொண்டிருந்த குருதியை நீரோடையின் நீரை அள்ளி வீசி சுத்தம் செய்துவிட்டு, தோளில் மானை தூக்கி வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் மருதையன். அவனைத் தொடர்ந்து கார்கோடகனும் ஈட்டி போன்ற அவர்களது இரண்டு குச்சிகளை கையில் எடுத்துக்கொண்டு தொடர்ந்தான்.
எதிர்பக்கம் சென்றபோது காத்திருந்தது அவர்கள் எதிர்பாராத ஆபத்து.
(தொடரும்.... அத்தியாயம் 19ல்)
No comments:
Post a Comment