🐾இராஜமோகினி 🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 16 🌾"யார் அந்த சூரியவர்மர்?"🌾
காலச்சக்கரத்தில் பின்னோக்கி சென்ற வைத்தியர், கடந்த காலத்தின் இரணமும் நிணமும் கலந்த தனது தோழனின் கதையை இளமதியிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் வைத்தியர் இருளப்பமள்ளர்.
" பிறகு, என்ன நடந்தது ஐயா? எனது சகோதரன் இளமாறன் நிலை என்ன?".
" திங்கள்கள் பல உருண்டோடிக் கொண்டுதான் இருந்தன. இளமாறன் உடலில் அப்படி ஒன்றும் பெரிய மாறுதல் வந்துவிடவில்லை. நீண்ட மயக்கத்திலேயே எப்பொழுதும் இருந்தான். அதனால் அவனுக்கு மருந்தோடு கலந்தே உணவினை கரைத்துக் கொடுக்க வேண்டியது ஆயிற்று. இதனால் உனது தந்தை மிகுந்த வருத்தத்தில் இருந்தார். ஒரு கட்டத்தில் நடப்பது நடக்கட்டும், எல்லாம் ஆண்டவன் விட்ட வழி என்று எண்ணியவர், புகலூர் திரும்பி வழக்கம் போல் தனது ஆதூரசாலைப் பணியினை தொடர்ந்தார். அதன் பின் இன்றுவரை இளமாறனுக்கு வைத்தியம் இங்கு நடைபெறுகிறது."
"எனது தந்தையின் மறைவிலும் ஏதேனும் சந்தேகம் உள்ளதா அய்யா?"
"உனக்கேன் அப்படித் தோன்றியது தம்பி?"
"ஏனெனில் என் தாய், அதன் பின் எனது சகோதரன் எனத் தொடர்ந்து குறிவைத்தவர்கள், கண்டிப்பாக எனது தந்தையையும் ஏதேனும் செய்ய வாய்ப்பு உண்டு எனத் தோன்றுவது இயல்பு தானே?"
" நீ, சொல்வது சத்தியமான உண்மை. உண்மையில் அதுதான் நடந்தது. வழமை போல் தனது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் எனது தோழன் குமாரமள்ளர்.அங்கு வைத்தியத்திற்கு வந்த கயவன் ஒருவன் அவர் உண்ணும் உணவில் கொடிய நஞ்சு ஒன்றைக் கலந்து கொடுத்து விட்டான். அவரும் வழக்கமாக உண்ணும் உணவு தானே என்று எண்ணிக்கொண்டு உணவினை உண்டு படுத்து உறங்கி விட்டார். எப்பொழுதும் அதிகாலையில் எழுந்து தினந்தோறும் செய்யும் கடமைகளை முடித்துவிட்டு தனது ஆதூரசாலையில் உள்ள நோயாளிகளை கவனிக்க வந்து விடும் வைத்தியர் குமாரமள்ளர் புலர்ந்து வெகு நேரம் ஆகியும் அவரது அறை வாசல் திறக்காமல் அடைத்தே கிடந்தது. ஏன் இன்னும் வரவில்லை என்று அவரைத் தேடிக் கொண்டு ஆதூரசாலையின் பணிப்பெண், கதவினை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால். அங்குள்ள காவலர்களை அழைத்து பெரும் போராட்டத்திற்கு பின்பு கதவினை திறந்தார்கள். கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. எனவே அவர்களால் திறக்க முடியவில்லை. அவர்கள் பார்க்கும் போது படுக்கையில் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்.இத்தனை நேரம் உறங்கும் வழக்கமில்லையே என்ற சந்தேகம் வந்த பணிப்பெண் அவரது நாடியை பிடித்து பார்க்கும் பொழுது துடிப்பு நின்று வெகு நேரமாகிவிட்டது. அதன் பிறகு தான் எனக்கு தகவலை அனுப்பி வைத்திருந்தனர். நான் சென்று அவரது உடலை சோதித்துப் பார்த்தபோது என்ன நடந்து இருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பின் அவரது விருப்பப்படி உன் தாயாருக்கு செய்த அதே முழு மரியாதையோடு கொண்டு சென்று உன் தாயாரின் நினைவிடத்தின் அருகிலேயே அவரது உடலை தகனம் செய்து விட்டேன். புகலூரில் உள்ள மக்கள் சிறிது நாட்கள் உனது தந்தையாரை பற்றியும், உன் தாயைப் பற்றியும் உனது சகோதரன் நிலை பற்றியும், பேசிக்கொண்டார்கள். அதன்பின் அவற்றின் மேல் யாரும் பெரிதாக கவனம் செலுத்தவில்லை."
"இத்தனை நிகழ்வுகளுக்கு நடந்த பின்பும் சரி முன்பும்சரி ஏன்? எனக்கு எந்தவிதமான தகவலும் யாரும் எனக்கு தரவில்லை அய்யா.?"
"ஏனெனில் உன்னை, எனது குழந்தை அற்ற தங்கைக்கு உன்னை தத்து கொடுத்து இருந்தார்கள்."
" அங்கு நான் யாருமற்ற அனாதை போல் தானே இருந்தேன்"
" எனது தங்கையின் விருப்பப்படி உன்னை அவரிடம் ஒப்படைத்து விட்டு வந்து விட்டோம். உனது தாயும் தந்தையும் அதன் பின் எதுவும் கேட்கவில்லை. உன்னை எனது தங்கைக்கு தத்து கொடுத்ததற்கு உண்மையான காரணம், என் தங்கை திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாத காரணத்தால் அவளது கணவன் அவளை விட்டுப் பிரிந்து சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டான். குழந்தை பேறு இல்லாமையால் எனது தங்கை பிச்சி போல் வாழத் தொடங்கி விட்டாள். அவளது இந்த நிலைக்கு காரணம் குழந்தை தான் என்பதை நன்றாக உணர்ந்ததால் நான் என் தோழன் குமாரமள்ளனிடம் வேண்டி கேட்டுக் கொண்டதற்கு இணங்க உன்னை அவளுக்கு தத்து கொடுத்து இருந்தனர். நான் அதன் பிறகு எனது தங்கை உன்னை எவ்வாறு பார்த்துக் கொள்கிறாள் என அடிக்கடி தகவல் அனுப்பி தெரிந்து கொண்டு தான் இருந்தேன். இடையில் சிறிது காலம் அவரிடமிருந்து எந்த விதமான தகவலும் இல்லை. நானும் இங்கு பல்வேறு பணிகளால் உன்னைப் பற்றி அறிய முடியாமல் இருந்து விட்டேன். அதற்கு இடையில் தான் உன் தாயின் எதிர்பாராத மறைவு எங்களை பெரும் துயரத்தில் தள்ளி விட்டது. அதன் பின்பு எனதுதங்கையை தொடர்பு கொள்ள முயன்ற போது தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஒரு நாள் நானே நேரில் சென்று பார்த்தபோது நீண்ட நாட்களுக்கு முன்பாக வைகை ஆற்றில் குளிக்க சென்றவள் ஆற்றோடு போய்விட்டாள். சிறுவனான உன்னை எனது ஊரின் நண்பர்கள் அழைத்து வந்து பார்த்துக் கொண்டனர் என்ற விவரம் அங்கு சென்ற பிறகுதான் எனக்கு கிடைத்தது. இந்த தகவலை உன் தந்தையாரிடம் நான் தெரிவித்தேன். ஏற்கனவே நாகையில் உன் தாய்க்கு ஏற்பட்ட துயரத்திற்கு பிறகு நீயாவது அங்கு பாதுகாப்பாக இருக்கட்டும் என நினைத்தார். ஏனெனில் சிறு வயதிலேயே உன்னை என் தங்கைக்கு தத்து கொடுத்து இருந்ததால் உன்னைப் பற்றிய விவரம் அநேகம் பேருக்கு இங்கு தெரியாது. அது அப்படியே தொடரட்டும் என்று விரும்பினார். நானும் அதனை ஏற்றுக் கொண்டேன். இருப்பினும் அவ்வபோது அங்கு நடைபெறும் நிகழ்வுகளை கேட்டு அறிந்து கொள்வேன். அத்தோடு உன்னை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள நீ வேலை செய்த அங்காடியின் உரிமையாளரிடம் தகவல் தந்து விட்டு தான் நான் வந்திருந்தேன். உன் குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த பல்வேறு நிகழ்வுகளால் சோழத்தின் பிரதான படைத்தலைவர் கருணாகர தொண்டைமான் மிகவும் வருத்தம் அடைந்தார். சோழத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் செய்த அர்ப்பணிப்பை முழுமனதோடு ஏற்றுக் கொண்ட அவர், உன்னை உயர்ந்த பதவியில் அமர்த்தும் நோக்கில் தான் அவனியாபுரம் வந்து வியாபாரி போல் உன்னிடம் உரையாடினார். அதன் பிறகு நடந்தது தான் உனக்கு தெரியுமே".
"என்னைத்தேடி வந்து பேராபத்தில் அல்லவா சிக்கிக் கொண்டார்."
" அங்கு கயவன் ஒருவன் திடீரென வந்து அவரை தாக்க முயன்றது, அவர் உண்மையில் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவகையில் உனது வீரத்தை அவர் நேரில் காண்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. எல்லாம் நன்மைக்குத்தான் "
"இந்த விவரங்களை, அவர் என்னிடம் நேரில் கூறியிருந்தால் எனக்கும் கூடுதல் பொறுப்பு உள்ளதை உணர்ந்து செயலாற்றி இருப்பேன்."
"என்னதான் நீ அவரிடம் போதுமான பயிற்சி பெற்றுருந்தாலும், யதார்த்த வாழ்வை எதிர்கொள்ளும் பக்குவம் என்பது நேரில் அனுபவத்தில் தான் கிடைக்கும். அதனை அறியாதவரா என்ன?, அதுமட்டுமல்ல இங்கு வந்த பின்பு என்னை கண்டிப்பாக சந்திப்பாய் எனத் தெரியும். ஏனெனில் உன்னை இங்கு வரவழைத்ததே நானும் எனது நண்பர் சூரியவர்மரும்தான், என ஏற்கனவே உன்னிடம் கூறியுள்ளேன். அது மட்டுமின்றி அன்று ஆதூரசாலையில் முதன்முதலாக உன்னை சந்தித்தபோதே நான் உன்னிடம் தனியே பேச வேண்டும் என்றேன் ஞாபகம் உள்ளதா?"
"நன்றாக உள்ளது. தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. என் தவறை உணர்ந்து கொண்டேன் . தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள்"
"மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும் என்பது உனது வாழ்வில் நிறுபணம் ஆகிவிட்டது பார்த்தாயா....?"
"இனி அந்தத்தவறை வாழ்வினில் ஒரு போதும் இனி செய்ய மாட்டேன்" அவரது தால் பணிந்தான் இளவழுதி.
இளவழுதியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.
" சூரியவர்மர் இதில் எப்படி வந்து சிக்கிக் கொண்டார் அதனைப் பற்றி நீங்கள் கூறவில்லையே?"
"கடற்கரை பட்டினமான நாகையில் நடைபெறும் வணிகத்தின் செயல்பாடுகளை, தலைமை ஏற்று செயலாற்றும் மணி கிராமத்தார் எனும் உயர்ந்த பதவியில் இருப்பவர்தான் சூரியவர்மர். அவருக்குத் தெரியாமல் நாகையில் எந்தவிதமான வணிக செயல்பாடுகளும் நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லை. அப்படிப்பட்ட அவர் நாகையின் வணிகத்தை மேன்மேலும் வளர்க்க விரும்பி நானாவித தேசங்களோடு பல்வேறு வகையான வணி போக்குவரத்தினை திறமையோடு செயலாற்றி வந்தார். அதன் காரணமாக பல்வேறு தேசங்களில் இருந்து விதவிதமான பொருட்கள் நாகையின் அங்காடிகளில் குவிந்தது. இறக்குமதியான பொருட்களின் வரவால் நாளங்காடியும் அல்லங்காடியும் எந்நேரமும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக உல்கு வரி எனும் சுங்கவரி பன்மடங்கு பெருகி, நாகையின் பொருளாதாரம் மட்டுமின்றி சோழத்தின் வணிகமும் பன்மடங்காக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் நமது தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விலையும் பொருட்களை பல்வேறு சிரமங்களுக்கு இடையில், அதனை பாதுகாப்பாக கொண்டுவரச்செய்து பெரும் பெரும் பாய்மரக் கப்பல்களில் அதனை ஏற்றி, ஏற்றுமதி வணிகத்தையும் சிறப்பாக நாகையில் கொடி கட்டி பறக்க விட்டார். இதன் காரணமாக சோழத்தின் தவிர்க்க முடியாத நபராக உருவாகி இருந்தார் சூரியவர்மர். இவ் வளர்ச்சி அவருக்கு பல்வேறு எதிரிகளை சம்பாதித்துக் கொடுத்திருந்தது. அப்படி நடைபெறாமல் இருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும். அதற்காக அவர் என்றுமே சளைத்ததில்லை. சோழத்தின் மேன்மைக்காக அயராது பாடுபட்டு வந்தார். இந்த பணிகளின் ஊடாக பல்வேறு தேசங்களோடு நேரடியான தொடர்பினை மேற்கொண்டு வந்தார். தொலைதூர நாடுகளில் ஏதேனும் பிரச்சனை உண்டானால் சில நேரங்களில் அவரை நேரில் சென்று அதனை கலைந்து அகற்றுவதும் உண்டு. அப்படியான பயணத்தில் ஒரு முறை சென்று வரும்போது கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். அதன் காரணமாக இந்த ஆதூரசாலையில் இரு திங்கள் சிகிச்சை பெற்று தேறினார். அப்போதுதான் எனக்கும் அவருக்குமான நீண்ட நட்பு உருவானது. அதன் பிறகு உனது குடும்பத்தில் நடைபெற்ற அனைத்து துயரங்களையும் கேள்வி உற்று மிகுந்த வருத்தமுற்றார். உண்மையை கூறுவதெனில் சோழத்தின் பிரதான தளபதி கருணாகர தொண்டைமான் அவர்களிடம் நேரில் சென்று சோழத்தின் ஏற்றத்திற்காக உமது குடும்பத்தின் தியாகத்தை விலக்கிக் கூறி இருந்தார். அதன் பின்பு தான் கருணாகரத்தொண்டைமான் உன்னை சந்தித்தார்".
"நம்முன் பல கேள்விகள் உள்ளன. அவை அத்தனையும் பொதுவாக இணைக்கும் நபர்தான் சூரியவர்மர். அவர் எங்கு சென்றார்? என்ற கேள்வியை கண்டறிந்து விட்டால் பல வினாக்களுக்கு விடை தானாகவே தெரியும் "இளவழுதியின் அர்த்தம் மிகுந்த வினாவினை பார்த்து புன்னகை உதிர்த்தார் வைத்தியர் இருளப்ப மள்ளர்.
(தொடரும்.... அத்தியாயம் 17ல்)
No comments:
Post a Comment