🐾இராஜமோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 11 🌾கயவனைத் தேடி🌾
நாகையின் நெல்லுக்கடை வீதியில் முகமூடி முரடர்களுடன் பாடிகாவல் அதிகாரி இளமாறன் நடத்திய மோதலில் வீதியெங்கும் குருதி பெருக்கு வழிந்தோடியது. நண்பகல் நேரத்தில் நடந்த திடீர் தாக்குலை கண்டு வெருண்டோடிய மக்கள் மெல்ல நெல்லுக்கடையினுள் எட்டிப்பார்த்தபோது தலையற்றுக்கிடந்த முண்டங்களையும் , அம்முண்டங்களில் சில வற்றில் கைகாலின்றி கிடந்த அலங்கோலங்களை கண்டு மிரண்டு போனார்கள்.
முகமூடி முரடர்களின் தலைவனின் நெஞ்சில் நீண்ட சர்ப்பம் போன்ற வாளைப் பாய்ச்சி இளமாறன் இழுத்ததும் வேரற்ற மரமாக கீழே சரிந்தான். ஒருகணம் தன்னை சுற்றி பார்த்தவன் இனி இவர்களால் ஆவதும் ஒன்றுமில்லை என உணர்ந்ததால் அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்கினான் இளமாறன்.
அப்போதுதான் நெல்லுக்கடை வீதியில் கடைக்கோடியில் இருந்த கடை ஒன்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மெல்ல பற்றிப் பரவத் தொடங்கிய நெருப்பானது தனது கரங்களை நீட்டி அருகில் இருந்த கடைகளுக்கும் பரப்பி இருந்தது. சிறிது நேரத்திற்குள் தீயின் நாக்குகள் தனது கொடுங்க கரங்களை பாரபட்சம் இன்றி அனைத்துத்து திக்குகளிலும் வீசிப் பற்றத் தொடங்கியது.
அதைப் பார்த்த நெல்லுக்கடை வணிகர்களும் மக்களும் என்ன செய்வதென்று அறியாமல் ஒரு புறம் கூச்சலும் பரிதவிப்பும் அவர்களிடையே பரவத் தொடங்கியது. "திடீரென எப்படி நெருப்பு பற்றியது, இதுவரை இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததில்லையே. யாரோ இந்த வேலையை செய்திருக்க வேண்டும்" என யோசித்தபடி அங்கு வந்த பாடி காவல் அதிகாரி இளமாறனை கண்டதும், அதுவரை கூட்டத்தில் மறைந்திருந்த கயவன் ஒருவன் கூட்டத்தை விளக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான். அவனைத் அவனை துரத்திக் கொண்டு இளமாறனும் பின்னால் சென்றான். முன்னால் ஓடிய கயவன் பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான். நெல்லு கடை வீதிக்கு அடுத்து இருந்த வீதியில் நுழைந்தவன் அங்கு தயாராக நிறுத்தி வைத்திருந்த புரவியின் மீதேறி சிட்டாக பறக்கத் தொடங்கினான்.
திடீரென கயவன் புரவியின் மீதேறி ஓடத் தொடங்கியதும் தனது வெண்புறவி வரவழைக்க எண்ணியவன் சீழ்க்கை ஒலி எழுப்பினான். பிடரியை சிலுப்பிக்கொண்டு கூட்டத்தின் ஊடாக கடந்து வந்த தனது உறவின் மீதேறி கயவனை துரத்த தொடங்கினான். அந்த நண்பகல் நேரத்தில் ஆதவனின் தீவிழி பார்வையின் வெம்மையினாலோ என்னவோ நாகையின் வீதிகளில் அவ்வளவாக மக்கள் திரள் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மக்களும் முரட்டுத்தனமாக பாய்ந்து ஓடிய கயவனின் புரவியால் வெருண்டோடி விலகி நின்று அவன் போகும் திசையை பார்த்துக் கொண்டிருந்தனர். இது கயவனை துரத்தி வந்த பாடி காவல் அதிகாரி இளமாறனுக்கு உதவியாக இருந்தது.
தடதடவென்று பாய்ந்து சென்ற கயவனின் புரவி எழுப்பிய குளம்பொலி சத்தம் நாகையின் பிரதான வீதிகளை கடந்து புறப்பகுதியை நோக்கி சொல்வதை உணர்த்தியது. அதுவரை நிதானமாக தனது வெண்புரவியை செலுத்தி வந்த இளமாறன் கயவன் செல்லும் பாதையை நோக்கி தனது புரவியை முடுக்கினான்.
நாகையின் புறப்பகுதியை பல்வேறு சாலைகள் பிரித்தன. அவற்றில் பிரதானமானது தஞ்சை பெருவழிசாலை. பெரும்பாலும் வணிக சாத்துகள் பின் தொடரும் தஞ்சை பெருவழியானது எப்போதும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும் ஆனால் புறப்பகுதியை நோக்கி செல்லும் இரண்டு சாலைகள் இருந்தன. தஞ்சை பெருவழியை ஒட்டி இடது புறமாக செம்பியன் மாதேவி செல்லும் சாலை அவற்றில் ஒன்று.
செம்பியன் மாதேவி செல்லும் சாலை அவ்வளவாக பயன்பாட்டில் இருப்பது இல்லை, அவை சாமானிய மக்களின் பயன்பாட்டுக்கு உரியவை. அதில் அத்தனை மக்கள் திரள் இருப்பதில்லை. எனவே அந்த சாலையில் தனக்கு முன்பாக பாய்ந்தோடி கொண்டிருந்த கயவனை துரத்துவது இளமாறனுக்கு வெகு எளிதாக இருந்தது. சாலையின் இரு பகுதிகளும் இருந்த மா மரங்களும் புளிய மரங்களும் அதன் ஊடாக வாதநாராயணனும் அடர்ந்து நீண்ட தன் கரங்களைப் பரப்பி இருந்ததால் அந்த நண்பகல் வேலையிலும் அவ்வளவாக ஆதவனின் கரங்கள் நில மகளை தழுவ முடியவில்லை. மரங்களின் அடிப்பகுதியில் முற் செடிகள் புதற்காடுகளாய் விரவிக் கிடந்தன.
நாகையில் வீதிகளை கடந்து புறப்பகுதியில் நுழையும் வரை அவ்வப்போது பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே சென்ற கயவன் செம்பியன் மாதேவி செல்லும் சாலையில் எப்போது நுழைந்தானோ அதன் பின் அந்தப் பணியை மேற்கொள்ளவில்லை. புரவியை முடுக்கிக்கொண்டு அடுத்தடுத்த வளைவுகளில் பெரும் வேகமாக சென்று கொண்டிருந்தான். இளமாறனும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக அவனை பின் தொடர்ந்தான்.
" அடடே அவன் இருட்டு பள்ளத்தை நோக்கி அல்லவா செல்கிறான் இப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. நெல்லுக்கடை வீதியில் அகப்பட்டுக் கொண்ட முரடன் இருட்டு பள்ளம் மாடனிடம் தான் சோழநாராயணன் காசை பெற்றதாக கூறினான். ஒருவேளை முன்னால் செல்லும் கயவனை தொடர்ந்து சென்றால் இருட்டு பள்ளம் மாடன் இருக்கும் இடம் ஒரு வேளை தெரியலாம் அதன் மூலம் சோழ நாராயணன் காசு பற்றிய மர்மத்திற்கும் விடை கிடைக்கலாம்" என்று எண்ணிக்கொண்டே கயவனைத் தொடர்ந்தான்.
நாகையை விட்டு வெளியேறி முழுதாக நான்கு நாழிகை கடந்து விட்டிருந்தது. நீண்டு செல்லும் அந்த சாலை வர வர இருளின் ஆதிக்கம் அதிகரித்தது. செம்பியன் மாதேவியை விட்டு விலகி இருட்டு பள்ளம் நோக்கி செல்லும் அந்த குறுகிய சாலை இருளை மட்டும் அல்ல பல்வேறு மர்மமான நிகழ்வுகளுக்கும் பெரும் தொடர்பு இருப்பதை ஏற்கனவே பல்வேறு நிகழ்வுகளின் வழியே அறிந்திருந்தான் இளமாறன். இதுவரை சரியான ஆதாரம் எதுவும் அவனுக்கு கிட்ட வில்லை அது அவனது மனதை நீண்ட நாட்களாக வெறும் வேதனையில் தள்ளி இருந்தது. அதற்கு இன்று தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் அவனது உடலுக்கு புதுவித உத்வேகத்தை அளித்திருந்தது. பணிக்கு வந்த இத்தனை காலங்களில் எத்தனையோ பணிகளை வெற்றிகரமாக கடந்து விட்டிருந்தான். அவற்றில் பேரும் புகழும் அவனுக்கு வந்து சேர்ந்திருந்தன. ஆனால், அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது பணியை ஆற்றுவதை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தான் இளமாறன். ஆனால் இன்று சோழ தேசத்தின் வணிக சூழலை சிதைக்கும் இந்த முயற்சி அவனது முயற்சிக்கு விட்ட சவாலாகவே பார்த்தான்.
தமது பெயருக்கு ஏற்றார் போல் பெரும் பெரும் காட்டு மரங்களாலும் முட்புதர் காடுகளாலும் கொண்டு அடர்ந்த இருள் சூழ்ந்த வனத்தின் மையத்தில் ஆங்காங்கே ஒரு சில குடிசை வீடுகள் மட்டும் கொண்டதாக இருந்தது இருட்டு பள்ளம். அவற்றின் தோற்றமும் அமைப்பும் பார்க்கும் போதே ஒரு விதமான பயத்தை உள்ளுக்குள் பரவச் செய்து கொண்டிருந்தது. சட்டென பார்க்கும் யாருக்கும் மிரட்டும் தொனி அவற்றில் கலந்திருந்தது தெரியும். முன்னால் சென்ற கயவன் இப்பொழுது தென்படவில்லை. குடிசை வீடுகளை கண்டதும் தனது புரவியை மெதுவாக செலுத்திக் கொண்டு வந்த இளமாறன் கயவன் எங்கு சென்று இருப்பான் என ஒரு புறம் தேடியபடி குடிசை வீடுகளை பார்த்துக் கொண்டு புரவியில் இருந்து கீழே இறங்கினான்.
இருட்டு பள்ளத்தில் கடைக்கோடியில் இருந்த குடிசை வீட்டின் முன்பாக கயவனின் புரவி நின்றிருந்தது. அதை நோக்கி இளமாறன் நகர்ந்தான். அப்பொழுது " அடடா பரவாயில்லையே பாடி காவல் அதிகாரி இளமாறனுக்கு இருட்டு பள்ளத்திற்குள் வரும் அளவிற்கு துணிவு வந்து விட்டதா?" என்றபடி கரு கருவென நீண்ட ஆகிருதியாய் இடுப்புக்கு கீழே நீண்ட கால்சராயும் இடையில் பட்டையாக அகன்ற பெரும் வாள் ஒன்றை செருகியபடி கயவனின் புறவி நின்ற வீட்டிலிருந்து வெளியே வந்தான் இருட்டு பள்ளம் மாடன். உருண்டு திரண்ட தனது பெரு விழியால் இளமாறனை பார்த்தான்.
" எனது கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் தாம் தான் இருட்டு பள்ளம் மாடனாக இருக்க வேண்டும்"
" நீ கூறுவது சரிதான், உனக்காக விரித்த வலையில் நீயாக வந்து மாட்டி கொண்டாய்" எனக்கு கூறி நக்கலாக சிரித்தான் இருட்டு பள்ளம் மாடன்.
" முடிவில் தெரியும் யார் யாருக்காக பின்னிய வலை இது என்று"
" பரவாயில்லை பாடிகாவல் அதிகாரி இளமாறனுக்கு துணிச்சல் அதிகம் தான். எனது இடத்திற்கு வந்தபின்னும் அது குறையாமல் இருப்பது ஆச்சரியம் தான்"
" இருளை அகற்ற ஒளி வந்துதானே ஆக வேண்டும்"
" பாடி காவல் அதிகாரிக்கு நன்கு பேசவும் தெரிகிறது வீரம் பேச்சில் மட்டும் தானா?" என்றான் குத்தலாக.
" போர்க்களமான நெல்லுக்கடை சொல்லும் என் வீரத்தை பற்றி , மேலும் அதனை நேரில் பார்த்த கயவன் தற்சமயம் உமது கட்டுப்பாட்டில் இருக்கிறானே அவனிடம் கேட்டுப் பாரும்"
"நீ சொல்வது உண்மையாகவே இருந்தாலும் நீ இப்பொழுது இருப்பது இருட்டு பள்ளம், அதன் சரித்திரம் பேசும் ஆயிரம் கதைகள்" என்றான் மிரட்டும் தொணியில் இருட்டு பள்ளம் மாடன்.
" கடந்த கதைகளை இனி நடக்கும் சரித்திரம் மாற்றியமைக்கும்" என்றான் கம்பீரமாக பாடிகாவல் அதிகாரி இளமாறன்.
"ம்ம்ம்... ஆகட்டும்" என இருட்டு பள்ளம் மாடன் கூறியதும் தான் தாமதம் குடிசை வீடுகளில் இருந்து பெரும் பெரும் பட்டையான வாள்களை உருவிக்கொண்டு தடி தடியான முரடர்கள் பாடிகாவல் அதிகாரி இளம்மாறனை சுற்றி வளைத்துக் கொண்டு "ம்ம்ம் ஆ ஊ, ம்ம்ம் ஆ ஊ' வென பெரும் காட்டுக் கூச்சலை எழுப்பியபடி ஆலவட்டம்மிட்டனர். ஒவ்வொரு முறை சுற்றி வந்ததும் தமது வாளைக் கொண்டு அருகிலுள்ள மற்றொரு முரடனின் வாளை 'படீரென' தட்டியபடி நான்கு முறை இளமாறனை வட்டமிட்டனர். அவர்களது செய்கையை கூர்ந்து கவனித்தபடி இருந்த இளமாறன் தனது நீண்ட சர்ப்பம் போன்ற வாளை உருவி இடது கையில் ஏந்தி கொண்டு யுத்தத்திற்கு தயாரானான்.
" இப்பொழுதும் ஒன்றும் குறைந்து விடவில்லை. நெல்லுக்கடையில் கைது செய்து நாகை காராகிரகத்தில் அடைத்து வைத்துள்ள இருளனை விடுவித்துவிட்டு எங்கள் செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருந்து விடு. உன்னை மன்னித்து உயிருடன் விட்டு விடுகிறோம். இது உனக்கு அளிக்கும் கடைசி வாய்ப்பு" என்றான் இருட்டு பள்ளம் மாடன்.
" நீ எப்பொழுது புழக்கத்தில் இல்லாத சோழ நாராயணன் நாணயத்தை எனது கட்டுப்பாட்டில் உள்ள நாகையில் விட்டாயோ அப்போதே உனக்கான முடிவு எழுதப்பட்டு விட்டது"
" உனக்கு இன்னும் பல விவரங்கள் தெரியவில்லை. சோழ தேசம் என்றோ அதன் கட்டுப்பாட்டை இயக்கும் சாதனத்தை இழந்து விட்டது. அது தெரியாமல் நீ ஏதேதோ பிதற்றுகிறாய், ஏதும் அறியாத குழந்தை போல் உள்ளது உனது பேச்சு" எனச் உரக்கச் சொல்லி சிரித்தான் இருட்டு பள்ளம் மாடன். அவனைத் தொடர்ந்து இளமாறனை சூழ்ந்திருந்த கயவர்களும் சிரிக்கலாயினர்.
அடுத்து நடந்தேறியவை பெரும் விபரீதத்திற்கு வித்திட்டன.
(தொடரும்..... அத்தியாயம்12ல்)
No comments:
Post a Comment