🐾இராஜமோகினி 🐾
🌹யாழிசைசெல்வா 🌹
அத்தியாயம் 🌾36. சத்திரத்தில் என்ன நடக்கிறது?🌾
ஏறக்குறைய சத்திரத்தை நெருங்கி விட்டிருந்தான் இளம்வழுதி. மனதிற்குள் ஒருவிதமான கலக்கம் உருவாகி இருந்தது அவனுக்கு. "இதுவரை யாரும் காணவில்லையே. தீ வைத்தவன் எங்கு சென்றான் என தெரியவில்லை. அங்கு அழகன் என்ன செய்து கொண்டிருக்கிறானோ அதுவும் புரியவில்லை" என எண்ணியபடியே சத்திரம் அருகே வந்து இருந்தான்.
சத்திரம் முழுவதும் ஒரே நிசபத்தமாக இருந்தது. வெளியே ஒருவரும் காணவில்லை. சத்திரத்தில் ஆங்காங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகள் சரியாக எண்ணெய் வார்க்கப்படாமல் இப்போதோ அப்போதோ என அணையும் தருவாயில் இருந்தன.
"அழகன் எங்கே போனான்?, ஆளைக் காணவில்லையே... இங்குதான் எங்கோ இருப்பான் போலும். சத்திரத்திலும் யாரும் இல்லை, அனைவரும் உறங்கி விட்டார்களோ?, சத்திர அதிகாரியாவது கேட்கலாம் என்றால் அவரையும் காணவில்லை. முதல் அடுக்கில் இருந்த இரண்டாவது அறையும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சரி எதற்கும் சத்திர அதிகாரியின் அறைக்கு சென்று அவரிடம் கேட்டுப் பார்ப்போம்" என எண்ணியவன் முகப்பு பகுதியை கடந்து அவரது அறையை நோக்கி சென்றான்.
சத்திர அதிகாரியின் அறை மூடிக் கிடந்தது. அறையின் விளக்கும் அணைக்கப்பட்டு இருந்தது. அகால வேளையாக உள்ளது. இந்நேரத்தில் அவரை தொந்தரவு செய்தால் எதுவும் நினைத்துக் கொள்வாரோ என்னவோ? என எண்ணியவன் அறையின் வாசல் முன்பாக நின்று யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு சில கணம் யோசித்தவன், வேறு வழியில்லை. அவரிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன், கதவினை தட்டும் நோக்கத்தில் கதவு மேல் கை வைத்தான். கதவு உள்ளே சாத்தப்படாமல் இருந்ததால் அவன் கை வைத்ததும் திறந்து கொண்டது. அறை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. உள்ளே ஒன்றும் தெரியவில்லை.
"ஐயா! ஐயா! எங்கு உள்ளீர்கள்? "என அழைத்தபடி அறைக்குள் நுழைந்தான் இளம்வழுதி.
இளம்வழுதி அழைத்ததும் அறைக்குள்ளிருந்து சத்தம் கேட்டது. யாரோ எதையோ உதைப்பது போன்ற சத்தமாக அது இருந்தது. சத்தம் எந்த பக்கம் வருகிறது என அறியும் நோக்கத்தில் நாலாபுரமும் விழிகளை சுழல விட்டான். அங்கிருந்த கட்டிலுக்கு அடியில் இருந்து மீண்டும் உதைக்கும் சத்தம் கேட்டது. கட்டிலுக்கு கீழே எட்டிப் பார்த்த இளம்வழுதி ஒன்றும் தெரியாததால் அறையை விட்டு வெளியேறினான். வெளியே நடைபாதையில் எரிந்து கொண்டிருந்த விளக்கு ஒன்றை எடுத்து திரியை தூண்டி எண்ணெயை வார்த்தான். தீபத்தின் நாக்குகள் சுடர் விட்டு எறியத் தொடங்கின. விளக்கினை எடுத்துக்கொண்டு சத்திர அதிகாரியின் அறைக்குள் நுழைந்தவன் கட்டிலுக்கு கீழே விளக்கை வைத்து விட்டு, கட்டிலுக்கு அடியில் பார்த்தான். சத்திர அதிகாரியின் கை கால் கட்டப்பட்டு கீழே உருட்டப்பட்டு இருந்தார். சத்தம் எழுப்பாமல் இருப்பதற்காக அவரது வாயில் துணி திணிக்கப்பட்டிருந்தன. சத்திர அதிகாரியை வெளியே இழுத்து அவரது கட்டுக்களை அவிழ்த்து விட்டான் இளம்வழுதி.
நீண்ட நேரமாக கை கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் குருதி ஓட்டமின்றி உடல் மரத்துப் போய் காணப்பட்டு இருக்கும் போலும். அதனால் கை கால்களை உதறிக் கொண்டு தட்டு தடுமாறி எழுந்து நின்றார் சத்திர அதிகாரி. அறையின் மூலையில் இருந்த மண்பானையில் இருந்து குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான். தண்ணீரை வாங்கி மடமடவென முழுவதையும் குடித்துவிட்டு மீண்டும் கை கால்களை உதறிக் கொண்டார். ஐம்பது வயதினை கடந்து விட்டிருந்த அவரால் உடலின் வலியை பொறுக்க முடியாமல் தவித்தார். அவரது நிலையை எண்ணி வருத்தம் அடைந்தான் இளம்வழுதி.
"இந்நேரத்தில் தங்களிடம் இதனை கேட்பதற்கு வருத்தம் கொள்ள வேண்டாம். நடந்ததை அறிவதற்கு வேறு வழி இல்லை. என்ன நடந்தது என்று கூறுங்கள்?"என்றான் இளம்வழுதி.
தள்ளாடியபடி அங்கிருந்த கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டார் சத்திர அதிகாரி. தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவர் "யார் எனத் தெரியவில்லை. திடீரென இரண்டு பேர் எனது அறைக்குள் புகுந்தார்கள். அவர்களிடம் என்ன ஏது என்று கேட்பதற்குள் இருவரும் சேர்ந்து என்னை வாயில் துணியை திணித்துவிட்டு கைகால்களை கட்டி விட்டார்கள். நான் எவ்வளவு முயன்றும் அவர்கள் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. இருப்பினும் நானும் முடிந்தவரை முயற்சி செய்து பார்த்தேன். பலன் இல்லை. அதன் பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை என்னைத் தாக்கி மூர்ச்சை அடையச் செய்தார்கள். அதன்பின் என்ன நடந்து என்று எனக்குத் தெரியவில்லை. வெகு நேரம் கழித்து நான் கண்விழித்துப் பார்க்கும் பொழுது அறை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. நான் எங்கு இருக்கிறேன் என ஒரு வழியாக முட்டி மோதி பார்த்தபோது எனது அறையின் கட்டிலுக்கு அடியில் இருப்பதை உணர்ந்து கொண்டேன். அங்கிருந்து வெளியேற நான் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சரி எப்படியும் யாராவது வருவார்கள் என காத்துக் கிடந்தேன். நீண்ட நேரமாக யாரும் வரவில்லை. வெளியில் என்ன நடக்கிறது என்றும் எனக்கு தெரியவில்லை. ஒரே குழப்பத்தில் நான் இருந்தேன். அப்போதுதான் நீங்கள் உள்ளே வந்தீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் , வந்திருப்பது நீங்கள்தான் என்று கூட எனக்கு தெரியாது. என்னை கட்டி போட்டவர்கள் எங்கே மீண்டும் வந்து விட்டார்களோ என்ற பயம் எனக்குள் இருந்தது. நல்ல வேளையாக நீங்கள் விளக்கு ஒன்றை எடுத்த வந்த பின்பு தான் எனக்கு உயிர் திரும்ப வந்தது" என தனக்கு நேர்ந்த விவரங்களை முடிந்த மட்டும் எடுத்துக் கூற முயற்சி செய்து கொண்டிருந்தார் சத்திர அதிகாரி.
"உங்களைத் தாக்கிக் கட்டி போட்டதில் இருந்தே தெரிகிறது ஏதோ விபரீதமான திட்டத்தோடு தான் விரோதிகள் சத்திரத்திற்குள் புகுந்துள்ளார்கள் என்பது. முதலில் அதனை கண்டறிய வேண்டும். வாருங்கள் ஐயா. மற்றவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பார்ப்போம்" கூறியவன் அறையை விட்டு வெளியேறி மற்ற அறைகளை நோக்கி சென்றான்.
சத்திர அதிகாரியும் அவன் பின்னால் முடிந்த மட்டும் வேகமாக பின் தொடர்ந்தார். "ஐயா நான் கீழே உள்ள அறைகளை பார்க்கிறேன். நீங்கள் முதல் அடுக்கில் உள்ள அறைகளை பாருங்கள்" என அவர் கூறியதும் படிகளில் ஏறி முதலடுக்கை அடைந்திருந்தான். முதல் அறையின் கதவினை தட்டினான். உள்ளே இருந்து எந்த விதமான சத்தமும் எழவில்லை. மறுபடியும் தட்டினான். இம்முறை உள்ளே இருந்து யாரோ எழுந்து வரும் ஓசை கேட்டது. கதவைத் திறந்த வயதான வணிகர் ஒருவர் வெளியே வந்தார். "ஏனையா? இந்த நேரத்தில் கதவினைத் தட்டுகிறீர்கள்? நான் வெகு நேரமாக உறக்கம் இன்றித் தவித்துக் கிடந்தேன். இப்பொழுதுதான் சிறிது நேரத்துக்கு முன்பாக கண்ணயர்ந்தேன். அதற்குள் வந்து என்னை எழுப்பி விட்டீர்களே" என கோபத்தில் கத்தத் தொடங்கி விட்டார் அந்த வணிகர்.
வணிகரின் கோபத்தால்"ஒன்றுமில்லை ஐயா. தவறுதலாக அறையை மாற்றித் தட்டி விட்டேன். நீங்கள் சென்று உறங்குங்கள்"என அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு இரண்டாவது அறையை நோக்கிச் சென்றான். அந்த அறை வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அது அவனுக்கு சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தி இருக்க வேண்டும். கதவினை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். கையில் வைத்திருந்த சிறு விளக்கின் ஒளியில் அறையின் நடுவே மூர்ச்சித்து கிடந்த அழகன் தெரிந்தான். விளக்கை கீழே வைத்துவிட்டு அவன் அருகே சென்று அவனது சுவாசத்தில் கை வைத்துப் பார்த்தான். சுவாசம் சீராக இருந்தது. பிறகு மண்பானையில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து அவன் முகத்தில் தெளித்து அவனை தெளிவடைய செய்யும் முயற்சியில் இறங்கியிருந்தான் இளம்வழுதி.
ஒரு வழியாக விழிகளைத் திறந்து பார்த்த அழகன் தன் அருகே இளம்வழுதி நிற்பதை பார்த்ததும்"நீங்கள் எப்போது ஐயா வந்தீர்கள்?" என்றான் குழப்பமான எண்ணத்தில்.
"அது இருக்கட்டும். இந்த அறையில் நீ எப்படி வந்தாய்?"
"நீங்கள் போன பின்பு வெகு நேரமாக இந்த அறையில் விளக்கு எரியவில்லை. சரி இங்கு தேவையில்லாமல் கண்காணித்துக் கொண்டிருக்கிறோமோ என எண்ணிக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து வணிக சாத்துகளைக் கடந்து ஒருவன் பதுங்கிப் பதுங்கி சத்திரத்தை நோக்கி வர முயன்றான். அவனது செயல் என்னை ஈர்த்தது. அவன் என்னதான் செய்கிறான் என தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தேன். பதுங்கிப் பதுங்கி வந்தவன் தன்னை யாரும் பின் தொடரவில்லை என தெரிந்து கொண்டவன் முதல் அடுக்கில் இருந்த இரண்டாவது அறைக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டான். நானும் அவனைத் தொடர்ந்து என்ன செய்கிறான் என அறிய விரும்பி மேலே வந்து பார்த்தபோது, இந்த அறை இருள் சூழ்ந்து காணப்பட்டது. உள்ளே என்ன நடக்கிறது என்று சாளரத்தின் வழியாக பார்க்க முயன்ற போது யாரோ ஒருவன் என்னை பின்னாலிருந்து தாக்கி விட்டான். நான் மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டேன். அவ்வளவுதான் எனக்கு நினைவில் உள்ளது. பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நீங்கள் எப்போது வந்தீர்கள் ஐயா?"என்றான் அழகன்.
"வணிக சாத்துக்களின் கடைசி வண்டியை யாரோ தீ வைத்து எரித்து விட்டார்கள். யார் எனத் தெரியவில்லை. நான் தீ வைத்தவனை தேடிக் கொண்டு வந்த போது , சத்திரம் முழுவதும் நிசப்தமாக காணப்பட்டது. சத்திர அதிகாரி முகப்பு வாசலில் இல்லை. அவரைத் தேடிக் கொண்டு அவர் அறைக்கு சென்ற போது அவர் கட்டிலுக்கு அடியில் கை கால் கட்டப்பட்டு கீழே உருட்டப்பட்டு கிடந்தார். அவரை விடுவித்து விட்டு மற்றவர்களுக்கு என்ன ஆயிற்று என பார்க்க வந்த போது தான் இந்த அறையில் நீ கீழே மயங்கி கிடந்தாய்."என விளக்கிக் கூறினான் இளம்வழுதி.
"இத்தனை பாதுகாப்பு இருந்தும் வண்டியை யார் தீ வைத்திருப்பார்கள் ஐயா?"
"இதுவரை யாரும் அகப்படவில்லை. இனியும் அகப்படுவான் என்றும் தோன்றவில்லை. ஆனால் சத்திரத்தில் உனக்கும் சத்திர அதிகாரிக்கும் ஏற்பட்டிருக்கும் இன்னலை பார்க்கும் பொழுது சதிகாரர்களின் சதி வேலை இத்தோடு நின்று இருக்கும் எனத் தோன்றவில்லை" என இளம்வழுதி கூறிக் கொண்டிருக்கும் பொழுது கீழே இருந்து சத்திர அதிகாரி "ஐயா! ஐயா! இங்கே உடனே வாருங்கள்...." பெரும் கூப்பாடு போடத் தொடங்கி விட்டார்.
சத்திர அதிகாரி போட்ட அலறலால் இரண்டாவது அறையை விட்டு வேகமாக படிகளில் இறங்கி கீழே வந்தார்கள் இளம்வழுதியும் அழகனும்.
கீழே இருந்த நாலாவது அறை திறந்து கிடந்தது. அங்கிருந்த விளக்கின் ஒளி அறையைத் தாண்டி வாசலில் விழுந்து கிடந்தது. சத்தம் அங்கிருந்து தன் வந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருவரும் அந்த அறையை நோக்கி ஓடினார்கள். அந்த அறையின் உள்ளே இருந்த சத்திர அதிகாரி பெரும் பயத்தில் உறைந்து கிடந்தார். அவரது விழிகள் அங்கு இருந்த கட்டிலையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தன.
(தொடரும்.... அத்தியாயம் 37ல்)
No comments:
Post a Comment