Monday, 20 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 23

    🐾இராஜமோகினி 🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 23 🌾ஊர்குடும்பில் உண்டான புரட்சி🌾

       நத்தம் குடியிருப்பில் உண்டாகிய இருந்த பெரும் பரபரப்பால் ஊர் முழுவதும் அது குறித்த பேச்சாகக்கிடந்தது. காலை நேரத்தில் அவரவர் பணிகளை கைவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது  அங்குள்ள சிலநபர்களுக்கு பெருத்த ஆச்சார்யத்தை உண்டாக்கி இருந்தது. இந்நேரம் வயலில் ஆண்களாக இருந்தால் உழுது கொண்டோ, கழனி திருத்திக் கொண்டோ, சுற்று வரப்பெடுத்துக்கொண்டோ, வயலிற்கு நீர்பாய்ச்சிக்கொண்டோ இருந்திருப்பார்கள், அதுவே பெண்களாயின் நாத்து நட்டுக்கொண்டோ, களை பறித்துக் கொண்டோ, கழனி திருத்திக் கொண்டோ அல்லது இன்னும் பிற வேலைகள் செய்து கொண்டிருப்பார்கள். அவை யாவற்றையும் விட்டுவிட்டு அத்தனை பேரும் இங்கு என்ன செய்கிறார்கள் என எண்ணிக்கொண்டே கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் வந்தபோது, பெரிய வேப்பமரமொன்றில் பெரியவர் ஒருவரை அடித்து துவைத்திருந்தவர்கள் கவனம் அடுத்ததாக அங்கிருந்த இளைஞனை நோக்கி திரும்பியது.

     அப்போது அங்கு முன்னால் வந்தவர்களில் ஒருவரான செங்கமலம் "இது நமக்கு உதவி செய்த இளம்வழுதி போல் அல்லவா உள்ளது" என எண்ணியவர் இன்னும் முன்னால் வந்து பார்த்தவர் "அடடே, அந்தத் தம்பிதான். இவர்கள் அந்த இளைஞனை ஒருவழி பண்ணி விடுவார்கள் போல் இருக்கே " என எண்ணியவர் "அடேய்...! நிறுத்துங்கள்" என்றார்.

     வயதானாலும் கணீரென்று ஒலித்த வெண்கலக் குரலால் ஈர்க்கப்பட்டு இளம்வழுதியை நோக்கி பாய்ந்தவர்கள் அப்படியே நின்று விட்டார்கள். அவர்கள் விழிகளில் கடும் ஆவேசம் தெரிந்தது.

     "இப்போது, எங்களை ஏன் தடுத்தீர்கள்? வயதான காலத்தில் இங்கு வந்து வேண்டாத காரியங்களில் தலையை நுழைத்துக் கொண்டு..." என்றான் இளைஞன்.

     "யாருடா அது. முருகனோட மகன் தானே?, முளைச்சு மூனு இலவிடலெ அதுக்குள்ள நாட்டாமை பண்ண கெளம்பிட்டியா?"

      "முருகனோட மகன்தான் அதுக்கென்ன இப்ப, எங்களுக்கும் எல்லாம் தெரியும். சும்மா தேவையில்லாத வார்த்தையை விட வேண்டாம்."

    "அப்படியா சாமி. அது இந்த கூறுகெட்ட சிறுக்கிக்கு தெரியாமப் போய்விட்டது. உன்னோட அப்பா இப்போது பார்த்தாலும் அவ்வளவு மரியாதையா பேசுவாரு. நீ என்னாடாவென்றால் மட்டு மரியாதை இல்லாம பேசுறெ.  முதலில் யார்கிட்ட என்ன பேசனும்னு என்பதை கத்துக்க. அப்புறம் நாட்டாமை பண்ணலாம். இப்ப என்ன காரணத்திற்கு இந்த தம்பியை எல்லோரும் சேர்ந்து கொண்டு மிரட்டிக்கிட்டு இருக்கிறீங்க.?"

        "இன்று காலையிலிருந்து இவனோட சேர்த்து ரெண்டு பேரு அரசாங்க அதிகாரி பேர சொல்லிக்கிட்டு வந்து நம்ம ஊர்குடும்புக்குள்ள வந்து மிரட்டிக்கிட்டு இருக்காங்க. நீங்க என்னடா வென்றால் அதை தட்டிக்கேட்கும் எங்களை மிரட்டிக்கிட்டு இருக்கிங்க." குட்டையன் ஆதங்கத்தில் மூதாட்டி செங்கமலத்திடம் கூறினான்.

    "எனக்கு இந்த தம்பியைத்  தெரியும்.நீங்கள் நினைப்பதுபோல் தவறான நபர் கிடையாது" 

     "எப்படி அவ்வளவு உறுதியாக உங்களால் கூறமுடிகிறது?" என்றான் இளைஞன்.

     "இந்தத் தம்பி யார் எனத் தெரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள், உண்மை தெரிந்தால் வருத்தப்படுவீர்கள்."

      "அப்படிப்பட்ட அரும்பெரும் உண்மைகளைக் கூறுங்கள்."என்றான் குட்டையன்.

     இளம்வழுதியும் தாமும் முதன்முதலில் சந்தித்த விவரங்களை எடுத்துக் கூறியவர் "இவர் வேறு யாருமல்ல புகலூரில் ஆதூரசாலையை நடத்தி வந்த குமாரமள்ளரின் மகன் ஆவார்".

     "இவர் கூறுவது உண்மையா.....? " என்றான் குட்டையன்.

    "ஆமாம் " என்றான் இளம்வழுதி.

     "அது மட்டுமல்ல, சோழ அரசின் உபதளபதிகளில் ஒருவர்." என்றார் செங்கமலம்.

    "இவன் முன்பே அப்படித்தான் கூறினான்" என நம்பிக்கையின்றி கூறினான் குட்டையன்.

     தன் இடைக்கச்சையில் வைத்திருந்த புலிச் சின்னம் பொறித்த கணையாழி ஒன்றை எடுத்து அவர்கள் முன்பு காட்டினான் இளம்வழுதி.

      கணையாழியை பார்த்ததும்  கூட்டத்தில் இருந்த  அனைவரும் மரியாதை நிமித்தமாக தலைவணங்கி நிமிர்ந்தார்கள். 

      "நடந்த தவறுக்கு வருந்துகிறோம்." சத்தமாக அனைவரும் கூறினார்கள்.

      "நான்தான் அப்போதே கூறினேன். நீங்கள் யாரும் கேட்கவில்லை." என்றார் செங்கமலம்.

     மூதாட்டி செங்கமலம் அருகே சென்ற இளம்வழுதி "தங்கள் மகள் இப்பொழுது நலமாக உள்ளாரா?" என்றான்.

     "பூரண நலமாக தாயும் சேயும் உள்ளார்கள். தங்கள் சகோதரன் எவ்வாறு உள்ளார்?"

       "பெரிய மாற்றம் ஒன்றுமில்லை அம்மா" என்றவன் தொடர்ந்து இங்குள்ள பிரச்சினை என்னவென்று பார்க்கவேண்டும். தங்களை பிறகு பார்க்கிறேன்"என அவரிடம் கூறிவிட்டு "அங்குள்ள பெரியவர் என்ன செய்தார் என யாராவது ஒருவர் கூறுங்கள்" என்றான்.

      "இவன் யாரோ தெரியவில்லை. தன்னை கருமம் ஆராயும் அதிகாரி என கூறிக் கொள்கிறான். அதுமட்டுமல்ல இதுவரை இல்லாத புதிய விதிகளை கூறி மிரட்டுகிறான்" என்றான் குட்டையன்.

     "சோழ அரசரது ஆணைப்படி அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஆராயும் அதிகாரம் பெற்ற அதிகாரி தான் கருமம் ஆராயும் அதிகாரி. அவரை இவ்வாறு செய்திருப்பது மிகப்பெரிய தண்டணைக்குரியது. முதலில் அவரை அவிழ்த்து நீர் அருந்தச் செய்து அழைத்து வாருங்கள்."என்றான் இளம்வழுதி.

       குட்டையனும் தலைப்பாகை கட்டியவனும் விரைந்து சென்று பெரியவரின் தட்டுக்களை அவிழ்த்து அவர் தெளிவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்து அழைத்து வந்தார்கள்.

      "வணக்கம் ஐயா. தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன். தாங்கள் இவர்கள் கோபம் அடையும் படியாக அப்படி என்ன கூறினீர்கள்?" என்றான் இளம்வழுதி.

    "என்னிடம் உள்ள வரிபொத்தகக் கணக்கின்படி இவ்வூர் மக்கள் நிறைய வரி நிலுவையில் வைத்துள்ளனர்." என்றார் பெரியவர்.

      "வரி நிலுவையில் உள்ளது உண்மைதான். ஆனால் விளைச்சல் உள்ளபோது தானே வரி கட்டவேண்டும். விளைச்சல் இல்லாத காலத்தில் வரி கட்டும் வழக்கம் நடைமுறையில்  இல்லையே"என்றான் குட்டையன்.

    "எனக்கு தெரியாது. என்னிடம் உள்ள கணக்கின்படி மூன்று ஆண்டுகள் வரி பாக்கி எனத் தெரிகிறது" என்றவர் தனது கையிலிருந்த ஓலையை காண்பித்தார்.

    "சென்ற ஆண்டு மழையில்லாத காரணத்தால் வயலில் எவ்வித பயிரும் வெளையவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி வரி கட்ட முடியும்" என்றான் குட்டையன்.

     "இவர்கள் கூறுவதும் ஞாயமாகத்தானே இருக்கு. பிறகு ஏன் கட்டவேண்டும்?" என்றான் இளம்வழுதி.

    "மூன்றாண்டுகள் ஆகிவிட்டனவே, அதன்படி நிலுவையை கட்டத்தானே வேண்டும்" என்றார் மறுபடியும் பெரியவர்.

     "பார்த்தீர்களா..... இதையேதான். மீண்டும். மீண்டும். கிளிப்பிள்ளை போல் கூறுகின்றார் " என்றான் கோபத்தில் குட்டையன்.

    "விதிமுறையின் படி இரண்டு ஆண்டுகளுக்கு வரியை நிலுவை வைத்துக்கட்ட அவர்களுக்கு உரிமை உண்டுதானே. இடையில் விளைச்சல் இல்லாத காலங்களுக்கு வரியை நீக்கும் வழக்கமும் நடைமுறையில் உள்ளவைதானே, அதனை குறித்துக் கொள்ளுங்கள்." என்றான் இளம்வழுதி.

     "அப்படியெல்லாம் செய்ய முடியாது அய்யா. ஒன்று இவர்கள் வரியை கட்ட சம்மதிக்க வேண்டும் இல்லையேல்....."என முடிக்காமல் விட்டார் பெரியவர்.

      "இல்லையென்றால் என்ன கூறுங்கள்?" என்றான் இளம்வழுதி.

      "இந்த ஊரை கைப்பற்றி, விற்று, வரியை கட்டச் செய்வது தான் வழமை"என்றார் பெரியவர்.

     "பார்த்தீர்களா.... இப்படித்தான் அப்பொழுது இருந்து கூறி வருகிறான். இதுநாள்வரை இப்படி ஒரு அநீதி எங்காவது நடந்துள்ளதா என்ன? அதுவும் வரி பாக்கி நிலுவையில் இல்லாதபோது , இல்லாத சட்டத்தை இருப்பதாக சொல்லி ஏமாற்றும் வேலையன்றி வேறு என்ன?" என்றான் குட்டையன்.

      "பெரியவர் கூறியதிலும் உண்மை உள்ளது, நீங்கள் கூறுவதிலும் உண்மை உள்ளது. " என்றான் இளம்வழுதி.

     "நீங்கள் என்ன புதிதாக குழப்புகிறீர்கள்.ஒன்றும் புரியவில்லை."கூடியிருந்த மக்கள் இவர்கள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

      "பெரியவர் கூறியபடி வரி பாக்கி நிலுவையில் உள்ள ஊரைக் கைப்பற்றி விற்று வரியை கட்டும் சட்டம் உள்ளது உண்மை. அதேபோல் இரண்டாண்டுகள் நிலுவை வைத்து வரி கட்டுவதும் நடை உள்ளதும் சட்டமாக உள்ளது அதுவும் உண்மை. அதேபோல் விளைச்சல் இல்லாத காலத்தில் வரி கட்டத் தேவையில்லை என்பதும் சட்டமாக உள்ளது இதுவும் உண்மை." 

      "நீங்கள் சொல்வதை உண்மையாக ஏற்றுக் கொண்டாலும் வரி பாக்கி உள்ள ஊரைத் தானே விற்று கட்டச் சொல்லும் சட்டம்  உள்ளதாக கூறினீர்கள். நாங்கள் தான் வரி பாக்கி வைக்கவில்லையே. பிறகு ஏன்  கட்ட வேண்டும்?" என்றான் குட்டையன்.
     
       "ஆமாம் அய்யா. நீங்கள் வரி கட்ட வேண்டிய தில்லை. " என்றான் குட்டையன்.
     
   வேண்டா வெருப்பாக  "நீங்கள் சொல்வதை குறித்துக் கொள்கிறேன். ஆனால்..." என்றார் பெரியவர்.

    ஊர் குடும்பில் கூடியிருந்த அனைவரும் மிக ஆவலாக அவர் என்ன கூறப்போகிறார் என தெரிந்து கொள்வதற்காக பெரியவரையே பார்த்தார்கள் .

     "இக்குடியிருப்பில் வசித்து வரும் அனைவரும் நீண்ட காலமாக 'வால மஞ்சாடி எனும் வீட்டு மனை வரி' கட்டாமல் உள்ளார்கள். இதற்காகவே இவர்கள் வாழும் ஊரினை விற்று, வரிப்பாக்கியை கட்டச் செய்ய முடியும்"என்றார் பெரியவர். 

     "பார்த்தீர்களா இந்தக் கிழவனுக்கு உள்ள தைரியத்தை. எங்காவது நத்தம் குடியிருப்பில் வாழும் மக்களின் மீது வால மஞ்சாடி வசூலிக்கும் நடைமுறை உண்டா என்ன? இதுவரை இல்லாத சட்டமாகவும் அல்லவா உள்ளது.  இதற்காகத்தானே இவனைக் கட்டி வைத்து உரித்தோம்" என்றான் குட்டையன். 

     "ஆமாம்! ஆமாம்! இந்த கிழவனுக்கு வாங்கியது போதவில்லை. பிடித்து கட்டுங்கள் மறுபடியும் அந்த மரத்தில்"என பெரியவரை நோக்கி ஆவேசமாக மக்கள் கொதித்து எழுந்தார்கள் .

      "சிறிது பொறுத்துக் கொள்ளுங்கள்" என மக்களை அமைதிப்படுத்தி விட்டு பெரியவரை நோக்கி"ஐயா , தாங்கள் தெரிந்து தான் சொல்கிறீர்களா?"என்றான் இளம்வழுதி.

      "வால மஞ்சாடி  கட்டாமல் இருப்பது மிகப்பெரிய அரச குற்றம். அதனை இவர்கள் நீண்ட காலமா செய்து வருகிறார்கள் அதைத்தான் குறிப்பிட்டேன். இதில் என்ன குற்றத்தை நான் செய்தேன்?"என்றார் பெரியவர்.

    "வால மஞ்சாடி கட்ட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதே வேளையில் நத்தம் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அவ்வரியை கட்ட வேண்டியது இல்லை. ஏனெனில் வரிவிலக்கு பெற்றவற்றறுள் இக்குடியிருப்பும்  ஒன்று. இது தாங்கள் அறியாததா?" என்றான் இளம்வழுதி. 

     அடுத்து பெரியவர் கூறியதைக்கேட்டு ஊர்குடும்பில் உள்ள அனைவரும் கொதித்து எழுந்து விட்டார்கள். விட்டால் அவரை அடித்தே கொலை செய்திருப்பார்கள்.

(தொடரும்...... அத்தியாயம் 24ல்)


No comments:

Post a Comment