Wednesday, 8 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 08

      🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 08 🌾 மாசிமகமும் கண்ணபுர நாயகியும்🌾


     குழலி கூறியவை வெறும் வார்த்தைகளாக மட்டும் இருந்துவிடக்கூடாதா என்ற ஏக்கம் இளவழுதி வைத்தியர் இருவருக்கும் இருந்ததை அவர்களது வெளிறிப்போன முகமே காட்டிக்கொடுத்தது.

      ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டார்கள் இருவரும். "குழந்தாய் நீ கூறுவது உண்மைதானா....?" என ஏக்கமுடன் கேட்டார் வைத்தியர் இருளப்பமள்ளர்.

      "ஆமாம் அய்யா. நான் கூறியது முற்றிலும் உண்மை. நாங்களும் இதனை கேட்டபோது திடுக்கிட்டுத்தான் போனோம்." என்றாள் குழலி.

      "அம்மணி தாங்கள் கூறியது மட்டும் வெளியே தெரிந்தால் நாடே பெரும் களேபரத்தில் மூழ்கிவிடும் அதுவும் இன்றைய சூழல் ஏழாம் பொருத்தமாகிவிடும்." என்றான் இளவழுதி.

     "அதிராஜேந்திரரை வேண்டுமென்றே சதி செய்து கொலை செய்துவிட்டு தான் இன்றைய சோழ வேந்தர் அபயன் எனும் குலோத்துங்கர் ஆட்சிக்கட்டில்  ஏறினார் என சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அரச கவிஞர் பில்கணர் தாம் எழுதிவரும் விக்கிரமங்க தேவ சரிதமெனும் காவியத்தில் இதனை  வலிந்து புனைந்து பாடியுள்ளார் இதனை சோழ இளவரசி மலர்விழி தேவியாரே எமது இளவரசியிடம் கூறினார்." என்றாள் குழலி.

    " குழந்தாய் இவை நாளைய வரலாற்றில் எவ்வளவு பெரிய அவப்பெயரை உண்டாக்கும். ஏற்கனவே உள்நாட்டு கலவரத்தில் நாடே கதிகலங்கிப் போயியுள்ளது. இந்த நேரத்தில் இப்படியொரு சதிவலையை அரங்கேற்றி நாட்டில் சாளுக்கியன் உலவ விட்டால் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகாதா..??"

      "ஆமாம் அய்யா. இதனை தடுதாட்கொள்ளத்தான் வேண்டும். " என்றான் இளவழுதி.

     " சோழத்தின் வாரிசு இன்றி நிர்கதியாக தவித்தபோது அம்மங்கை தேவியாரின் புதல்வரான ராஜேந்திரரை சோழதேசத்தின் காவலர்கள் அனைவரும் வேண்டிக்கொண்டதிற்கு ஏற்ப குலோத்துங்கர் என்ற விருதுபெயரில் அரசு கட்டில் ஏறினார். உண்மை இவ்வாறு இருக்க சாளுக்கிய விக்கிரமாதித்தன் நரித்தந்திரமாக கொள்ளைப் புறவழியில் குறுக்கே புகுந்து ஊடு சால் ஓட்டி சோழ தேசத்தை சிதைக்க முயலுகிறான். அவனது சதிவலையில் என்று நாம் சிக்கினோமோ அன்றுமுதல் சோழ தேசத்தின் நிலை அபாயத்தில் தத்தளிக்கிறது. நல்லவர்கள் அனைவரும் ஒன்றாக ஓர் அணியில் இணையவேண்டிய காலம் இது"  என்றார் வைத்தியர் இருளப்பமள்ளர்.

       "தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அய்யா. " என்ற இளவழுதி தொடர்ந்து "அதிராஜேந்திரரின் உடல்நலம்பெற ஏதோ ஒரு வேண்டுதல் நடந்ததாக கேள்வி அய்யா".

     "ஆமாம் தம்பி, தஞ்சைக்கருகே உள்ள கூகூரில் அமைந்துள்ள சிவன்கோவிலில் அதிராஜேந்திரர் நலம்பெறுவதற்காக நாள்தோறும் விளக்கெரித்ததோடு தேவாரப்பாடல்கள் இருவேளை பாடப்பட்டது. இதனை முறைப்படுத்தி அந்தக்கோவிலில் கல்வெட்டு ஒன்றை வெட்டி வைத்ததோடு தினப்படி வேண்டுதல் கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணிக்கவும் ஏற்பாடு நடந்தது. இருப்பினும் அவர் நோயின் கொடூரத்தால் நம்மைவிட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்தார். அவரது பிரிவு சோழ தேசத்தை பெரும் சோகத்தில் தள்ளியது. இது உள்நாட்டில் குழப்பத்தை உண்டாக்க துடித்த கயவர்களுக்கு தோதாகப் போய்விட்டது. இதன் நீட்சிதான் குழந்தாய் பில்கணன் செய்யும் சதிவேலை பற்றி நீ கூறியது" .

     "ஆக உண்மையை திரித்து புறம்பேசும் கயவரின் நோக்கம் சோழத்தை சிதைத்து தனது கைப்பாவையாக்கிக் கொள்வது. அதற்கு நாம் இடம் தருதல் கூடாது அய்யா. இன்று சோழ குலவல்லிப்பட்டினத்தின் நிலை என்ன? அதனை கொஞ்சம் விளக்குங்கள்."

     "புதிதாக ஒன்றுமில்லை தம்பி. மொத்த சோழத்தின் நிலை என்னவோ அதுதான் சோழ குலவல்லிப்பட்டினத்தின் நிலையும். ஆனால் சிற்சில புதிர்களை உண்டாக்கி அதன் வழியே நாட்டில் பெரும் குழப்பத்தை தூண்டி வருகின்றனர் நயவஞ்சகர்கள்."

     "நான் நாகைக்குள்ளே வந்ததிலிருந்து பார்க்கிறேன் இயல்பான தொரு சூழல் இங்கே இல்லை. அதனை என்னால் உணர முடிந்தது. தேசத்தின் கடல் கடந்த வணிகத்தின் முக்கிய துறைமுக மட்டுமின்றி சோழத்தின் கடல்படையெடுப்பிற்கு பலமுறை முன்நின்று வெற்றிக்கனியை பறித்து பறைசாற்றியவர்கள் இந்நாகையின் பெருவீரர்கள் அல்லவா. அத்தகைய வீரம் விளைந்த நிலம் இன்று நம்மை நம்பி வந்த நங்கைகளை பாதுகாக்க முடியாமல் தத்தளிப்பது நமக்கு பெரும் அவமானம் அல்லவா."

    "நீ சொல்வது முற்றிலும் உண்மை தம்பி. பெரும் வீரர்கள் பிறந்த மண் தான் இது. பகையென்று வந்தால் தோள்தட்டி முன் நின்று களமாடும் வீரம் செறிந்த காவிரி அன்னையின் களங்கமில்லா வீரர்கள் உறையும் பூமியில்தான் கயவர்களும் தங்கள் சதி என்னும் சதுரங்க விளையாட்டை நடத்தி வருகின்றனர்."

     "பாடிகாவல் அதிகாரி எனும் நாடு காவல் அதிகாரி இங்குள்ளார் தானே, அவர் என்ன செய்கிறார்?"

      "அப்படியொருவர் இருந்தார். ஆனால் இன்று இல்லை." என்றவர் விழிகள் குளமாயின.

     வைத்தியர் அருகினில் வந்தவன் "ஏனய்யா பாடிகாவல் அதிகாரிக்கு என்னவாயிற்று? அவருக்கும் தங்களுக்கும் என்ன தொடர்பு" என்றான் இளவழுதி.

     "தம்பி ஏற்கனவே நான் உனக்கும் சோழகுலவல்லிப்பட்டினத்திற்கும் தொடர்பு உள்ளது என்றேன் ஞாபகம் உள்ளதா....?"

     "ஆமாம் அய்யா. தாங்கள் தான் பிற்பாடு கூறுவதாக சொன்னீர்கள். ஏன் அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு அய்யா?"

     " நீண்ட தொடர்பு உள்ளது தம்பி. நீ நினைப்பது போல், நீ யாருமற்ற அனாதை அல்ல,  எனது தோழன் குமாரமள்ளரின் இரண்டாவது மைந்தன்  நீ." என்றவர் பெருகிவந்த கண்ணீரை பச்சைவண்ண துண்டால் துடைத்து கொண்டார்.

     "திருப்புகலூரின் ஆதூரசாலை வைத்தியர் குமாரமள்ளரையா கூறுகிறீர்கள்."

      " ஆமாம் தம்பி அவரேதான் தம்பி. அவரை முன்பே தெரியுமா?"

      "இல்லை அய்யா. நான் வரும்போது உதவிசெய்த நிறைசூலியின் தாயார் செங்கமலம் தான் திருப்புகலூரில் உள்ள ஆதூரசாலை பற்றியும் அதன் வைத்தியர் குமாரமள்ளரைப் பற்றியும் கூறினார்."
 
     "அதே குமாரமள்ளர் தான். பாண்டிய தேசத்தின் மாநகர் மதுரைக்கு அருகே உள்ள அவனியாபுரம் தான் எமது  சொந்த ஊர். எனது தோழன் குமாரமள்ளரும் நானும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். முதலாம் இராஜேந்திர சோழரின் காலத்தில் சோழப்படையில் சேர்ந்து ஈழத்தின் மீதான படையெடுப்பில் கலந்து கொண்டு எங்கள் வீரத்தை பறைசாற்றி விருது பல வென்றோம். முதலாம் இராஜேந்திரர் கடாரத்திற்கு சென்று வரும் வணிகக் கப்பல்களுக்கும் வணிகர்களுக்கும் பெரும் இன்னல்களை தந்த கடார கொள்ளையர்களையும் அவர்களுக்கு துணைபுரியும் கடார மன்னனுக்கும் தகுந்த பாடம் கற்பிக்க எண்ணினார். அதன் விளைவு கடாரப்போர் தொடங்கியது. போரில் சோழப்படை வெற்றி மேல் வெற்றியை குவித்ததோடு கடார மன்னனை தோற்கடித்து பெரும்புகழோடும் செல்வத்தோடும் சோழப்படை வந்தது. போர்க்களத்தில் நாங்கள் செய்த வீரச்செயலைப் பாராட்டி சோழ வேந்தர் முதலாம் இராஜேந்திரர் திருக்கரங்களால் "பிரும்மாராயன்" என்ற பட்டம் எங்கள் இருவருக்கும் வழங்கினார் அத்தோடு ஒரு மா நிலமும் வழங்கிக் கெளரவித்தார். அன்றுமுதல் எங்கள் பெயரோடு அந்தப்பட்டம் ஒட்டிக் கொண்டது.  சோழப்படையில் பணியாற்றிமையால்   கிடைத்த நிலங்களை கொண்டு நாகையில் வளமோடு வாழ்ந்து வந்தோம்.  அப்போதுதான் ஒருநாள் வயலில் வேலைக்கு வந்த  உனது அன்னையை முதன் முதலாக சந்தித்தான். நட்பு தொடர்ந்தது,  மருகலில் உள்ள இரத்தினகிரீசுவரர் கோவிலில் கோலகாலமாக அவர்களது திருமணம்  நடந்தது. உனது அன்னை வடிவு கடும் உழைப்பாளி அவரது அயராத உழைப்பால் வயலில் விளைச்சல் அமோகமாக விளைந்தது. கடாரப் போருக்கு பின்பு நாங்கள் இருவரும் இங்கேயே தங்கி விட்டோம். வெகு காலமாக எனது தோழனுக்கு குழந்தைகள் இல்லை. அதன்பின் உனது அண்ணன் இளமாறன் பிறந்தான். நாட்கள் உருண்டோடின. உனது அண்ணன் இளமாறன் வளர்ந்து கொண்டிருந்தான். உனது அண்ணன் இளமாறனுக்கு பின் பத்தாண்டு இடைவெளியில் நீ பிறந்தாய். திங்கள்கள் வந்து வந்து சென்றன.ஒருநாள் எங்கள் ஊர் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஐயன் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தபோது அங்கு எனது தங்கையின் வேண்டுதலுக்கு ஏற்ப உன்னை அவளிடம் ஒப்படைத்துவிட்டு நாகை வந்து சேர்ந்தோம். அதன்பின் தான்  அந்த விபரீதம் ஏற்பட்டது." என்றார் வைத்தியர் இருளப்பமள்ளர்.

    "என்ற விபரீதம் அய்யா?" 
    
     "சொல்கிறேன் தம்பி." என்றவர் தொடர்ந்தார்.

   வழமையாய் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகத்திருவிழாவில்  ஒருநாள். கண்ணபுரநாயகியின் ஆலயம் வண்ண விளக்கொளியில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

     திருவிழாவிற்கு ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் பெரியவர்களுமாக ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் திளைத்து கொண்டிருந்தனர். ஒருபுறம் விதவிதமான பலகாரங்களை மூங்கில் கூடைகளில் சுட்டு விற்கும் கடைகள், வனிதையர்களின் வளைகரங்களை கொஞ்சும் சங்கு வளையல், விதவிதமான கண்ணாடி வளையல்கள் கொண்ட கடைகள் ஒருபுறம் என்றால், ஆலயத்தின் வாசலை பார்த்துள்ள வீதிகளில் இளநங்கைகளை கவரும்  எண்ணற்ற பூக்கடைகள் முளைத்திருந்தன. சம்பங்கி, முல்லை, இருவாட்சி, மனோரஞ்சிதம் என பெரும் கூடைகளில் குவிந்து கிடந்தது. பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இளம் பூஞ்சிட்டுகளாய் சிறகுவிரித்து தேனெடுக்கும் லாவகத்தில் வானவில்லாய் ஒளிர்ந்தபடி பூக்களை குழலில் சூடி கூட்டத்தில் அலைகடலென மிதந்து கொண்டிருந்தனர் இளம் நங்கைகள்.

     திருவிழாவிற்கென்று போடப்பட்ட உணவு கடைகளில் எண்ணையில் செய்த பலகாரம், கருப்பட்டி பலகாரம், நெய் பலகாரம், கம்பஞ்சோறு, சோளச்சோறு, அரிசி கஞ்சியில் மோர்கலந்த பழைய சோறு, அதற்கு சுவையூட்டும் மாங்காப்பத்து, நெத்திலிக்கருவாடு பொரியல் என விதவிதமான உணவுகளை மக்கள் கூட்டம் கூட்டமாக வாங்கி சுவைத்து உண்டுகளித்து கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் திருவிழாவிற்கு வரும் மக்களுக்கு இஞ்சி கலந்த மோரை தாகத்திற்கு பெரும் அண்டாக்களில் கலந்து வைத்துக்கொண்டு வழங்கிக்கொண்டிருந்தனர். இவையெல்லாம் வழமையாய் நடைபெற்றுக்கொள்ளும் வழக்கம்தான். 

     அப்பொழுது திருவிழாவிற்கு வந்த கூட்டத்தில் திடீரென மக்கள் பதறி ஓடத்தொடங்கினர். 

     மிதமிஞ்சிய கள்ளை குடித்த போதையின் உச்சத்தில் இருந்த கயவன் ஒருவன் வனிதையரின் வளையல் கடையில் வளையல்களை பார்த்துக்கொண்டிருந்த இளம்நங்கையின் இடையை பிடித்திழுத்து நாகரிகமற்ற நடத்தையில் இறங்கியதால் கூடியிருந்த நங்கையர்களின் கூச்சலால் அவன் மேலும் வெறிபிடித்து கையில் குறுவாளை எடுத்து அருகில் வந்தவர்களை மிரட்டிக்கொண்டிருந்தான்.
      
      பூக்கடையில் மனோரஞ்சிதமலர்களை பார்த்துக்கொண்டிருந்த வடிவு கூச்சல் கேட்டதும் சற்றும் தாமதிக்காமல் முரடனை நோக்கி போகும் போதே ஆலய வழிபாட்டின் விற்பனைக்காக  வைத்திருந்த தேங்காய் ஒன்றை எடுத்து வலது கையிலிருந்து துண்டில் சுற்றிக் கொண்டவர் சட்டென பாய்ந்து பட்டென முரடனின் மண்டையில் அடித்ததும் அவனது மண்டை உடைந்து குருதி பெருக்கெடுக்க கீழே சாய்ந்தான். இதற்கிடையே அவன் கையிலிருந்த நங்கை இடது கரத்தால் இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்திருந்தார். கணநேரத்தில் நடந்த களேபரத்தால் கயவனின் கையில் சிக்கிய நங்கையின் இதயம் படபடவென அடித்ததோடு அதற்கு இணையாக விழிகளும் குளமாகியிருந்தன. நங்கையை அருகில் இருந்த பூக்கூடை மேல் அமரச்செய்தவர் அவளது தலையை வருடி ஆசுவாசப்படுத்தினார் வடிவு.  திருவிழாவிற்கு வந்த கூட்டம் நடந்தவற்றை பற்றி கதையை தங்களுக்கு தோதான வகையில் கதைத்துக்கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே குருதிப்பெருக்கோடு கீழே சாய்ந்த கயவனை எல்லோரும் மறந்து விட்டிருந்தனர். அப்பொழுது அரங்கேறியது அந்த விபரீதம்....


(தொடரும்...... அத்தியாயம் 09ல்)



No comments:

Post a Comment