Wednesday, 15 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 14

       ஆதூரசாலையின் பணிப்பெண்கள் பரபரப்புடன் வைத்தியர்கள் இருவரை நோக்கி ஓடி வந்தனர். அவர்களது வருகை வைத்தியர்கள் இருவருக்கும் பெரும் பயத்தை உண்டாக்கியது.

    " ஐயா,  ஐயா... பாடி காவல் அதிகாரி இளமாறன் கை கால்களை ஆட்டியதோடு அவரது உடல் படுக்கையை விட்டு தூக்கித் தூக்கி போடுகிறது" வைத்தியர்கள் அருகே வந்த ஆதூரசாலைப் பணிப்பெண்கள் கூறினர்.

     இளமாறன் இருந்த அறையை நோக்கி வைத்தியர் இருவரும் விரைந்து சென்றனர்.

       அவர்கள் உள்ளே வந்து பார்த்தபோது இளமாறன் உடல் படுக்கையை விட்டு தூக்கித் தூக்கி போட்டுக் கொண்டிருந்தது.   உடல் முழுவதும் வெப்பத்தின் காரணமாக  கொதித்துக் கொண்டிருப்பதை  அவனது உடலை தொட்டு பார்த்த வைத்தியர் இருளப்பமள்ளர் உணர்ந்து கொண்டதால்,   அங்கிருந்த பணி பெண்களிடம் சில மருந்துகளை எடுத்து வரச்செய்து அதனை  குவளையில் நீர் விட்டு கலந்து இளமாறனுக்கு மெதுவாக புகட்டத் தொடங்கினார். இதற்கிடையே வைத்தியர் குமாரமள்ளரும் பணிப்பெண்களும் அவனது உடலை அழுத்திப் பிடித்து இருந்தனர். அதையும் மீறி அவனது  உடலின் துடிப்பு திமிறி கொண்டு எழுந்தது. இருப்பினும் பெரும் போராட்டத்தில் ஊடாக அழுத்திப் பிடித்தபடி இருந்தனர்.

     வைத்தியர் இருளப்பமள்ளர் கொடுத்த மருந்தின் காரணமாக அவனது உடல் துடிப்பு அடங்கி இருந்ததால், பணிப்பெண்களும் வைத்தியர் குமார மள்ளரும் அவனது உடலிருந்து கையை எடுத்திருந்தார்கள்.

     ஓரளவு பெரிய அறையாக இருந்தது. நோயாளி தாராளமாக படுக்கும் அளவிற்கு நீண்ட பெரிய கட்டிலும் அதன் மேல் வெண் பருத்தி துணியின் உள்ளே பருத்திப் பஞ்சுகள் திணித்து தைத்த  அளவான உயரத்துடன் கட்டில் முழுவதும் பரவிய படுக்கை விரிப்பு ஒன்றின்மேல்தான் இளமாறன் படுத்திருந்தான். அறையின் சாளரக் கதவுகள் சாத்தியிருந்ததால் உள்ளே ஒரே புழுக்கமாக இருந்தது. படுக்கையின் தலைப்பகுதியில் சிறிய மண்பானையில் நீரும் குவளையும் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே இருந்த சிறிய மர இருக்கையில் அழகான விளக்கு இரவு நேரத்தில் பயன்படுத்துவதற்கு தயாராக இருந்தது. நோயாளிகளுக்கு வேண்டிய மருந்துகள் வைப்பதற்கு சிறிய மரப்பெட்டியும் அதில் அவசர உதவிக்கு தேவையான அடிப்படை மருந்து குளிகைகளும் தயாராக இருந்தன.

      "குழந்தாய்.  சாளரக் கதவுகளை திறந்து விடு, காற்று உள்ளே வரட்டும் " அங்கிருந்த  பணிப்பெண்களைப் பார்த்து கூறினார் வைத்தியர் இருளப்ப மள்ளர்.

     அங்கிருந்த இரு பணிப்பெண்களில் ஒரு பெண் சற்று உயரமாகவும் மற்றொருவர் அவரைவிட சற்று குறைவான உயரத்திலும் இருந்தார்கள். அவர்களில் உயரமான பணிப்பெண் விரைந்து சென்று சாளரத்தின் கதவினை திறந்து வைத்தார். குணக்கடலிலிருந்து கிளம்பிய குளுமையான காற்று சாளரத்தை கடந்து உள்ளே வந்ததும் அறையின் வெப்பம் சற்றுத் தணிந்தது.

     மூலிகை மருந்தின் செயல்பாடும் அறைக்குள் வந்த குளுமையான காற்றின் தழுவலும் சேர்ந்து இளமாறனின் உடல் சூட்டை வெகுவாக குறைத்து இருந்தது. முன்பு போல் உடல் துடிக்காமல் தணிந்து காணப்பட்டது.

     சில கணங்கள் மௌனமாக கடந்து சென்றன.

     அறையில் ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. அப்பொழுது மெதுவாக தனது விழிகளைத் திறக்க முயன்றான் இளமாறன். நீண்ட நேரம் மயக்கத்திலும் வேதனையிலும் கிடந்ததால் உடல் முழுவதும் சோர்வும் வலியும் சேர்ந்து அவனை வதைத்திருக்க வேண்டும். அவனது விழிகள் வெளிச்சத்தை எதிர்கொள்ள முடியாமல் எரிச்சல் பரவியதால் விழிகளை திறக்க முடியாமல் சிரமப்பட்டான். மிகுந்த போராட்டத்திற்கு பின்பு, ஒரு வழியாக விழிகளை திறந்து பார்த்தான். ஆனால் தொடர்ந்து பார்க்க இயலவில்லை. மீண்டும் மயக்கமாக வந்ததால் விழிகளை மூடி உறங்க தலைப்பட்டான்.

      இளமாறனது செயல்களை அங்கிருந்த அனைவரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏதும் பேசிக்கொள்ளாமல் தங்களது விழிகளாலே மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

       அனைவரும் வெளியே வரும்படி வைத்தியர் இருளப்பமள்ளர் விழிகளால் சைகை செய்தார். அவரைத் தொடர்ந்து அனைவரும் வெளியே வந்து சேர்ந்தனர். பணிப்பெண்கள் இருவரையும் அருகில் அழைத்த வைத்தியர் இருளப்பமள்ளர். இளமாறனுக்கு அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், எத்தகைய மருந்துகளை எத்தனை கால இடைவெளியில் தர வேண்டும், போன்ற உத்தரவுகளை மடமடவென அவர்களுக்கு பிறப்பித்து விட்டு தனது தோழன் வைத்தியர் குமார மள்ளரை அழைத்துக்கொண்டு தனது அறைக்கு சென்றார்.

     தமது அறையில் இருந்த மண் பானையில் இருந்து குவளை நிறைய நீரை எடுத்து மடமடவென பருகினார். மீண்டும் ஒரு குவளை நிறைய நீரை எடுத்து தனது தோழன் குமாரமள்ளருக்கு தந்து பருகும்படி செய்தார். அங்கிருந்த மர ஆசனத்தில் தனது தோழனை அமரச் செய்தவர் தானும் அவரது அருகில் அமர்ந்து கொண்டு அவரது கரங்கள் இரண்டையும் பற்றிக் கொண்டு பேசத் தயாரானார்.

      " இளமாறன் பிழைப்பது அத்தனை எளிதல்ல... ஏனெனில் அவனுக்கு வெறும் வெட்டுக்காயமாக மட்டும் இருந்தால் திங்கள் ஒன்றில் பிழைத்து விடுவான். ஆனால் வயிற்றை கீறியதால் அவனது குடல் வெளியே வந்துள்ளது. அதனை அவன் அவசரத்தில் உள்ளே கண்டபடி திணித்து விட்டான் போலும். அவனது சூழல் அங்கு எப்படியோ, அவனை குறை சொல்லி பயனில்லை. அதன் பின்பு வயிற்றை மேல் ஆடையால் இறுகக் கட்டிக்கொண்டு நீண்ட தூரம் பயணித்து இங்கு வந்ததால், அநேக குருதி வெளியேறிவிட்டது. இதனால் அவனுக்கு கடுமையான காய்ச்சல் உள்ளது. அது விட்டு விட்டு வரத்தான் செய்யும், நான் அவனது காயத்தை சுத்தம் செய்து பழையபடி ஒழுங்கு படுத்தி மருந்துகள் வைத்து தையலிட்டு கட்டு கட்டி உள்ளேன். அவனுக்குத் தொடர்ந்து ஒவ்வொரு நாழிகைக்கும் குளிகை மருந்துகளை நீரில் கரைத்து அவனுக்கு புகட்டும் படி பணிப்பெண்களுக்கு கூறியுள்ளேன். அதன்படி தொடர்ந்து அவர்கள் பணிகளை செய்வதற்கும்,  அவர்கள் பணி முடித்து  ஓய்வுக்கு செல்லும்போது மாற்றுப் பணியாளர்களை அந்தப் பணிகளை தொடர்ந்து செய்வதற்கு தேவையான அத்தனை உத்தரவுகளையும் பிறப்பித்து விட்டு தான் வந்து உள்ளேன்.  நம்மால் அவ்வளவு தான் செய்ய இயலும். ஒரு வைத்தியரான உனக்கும் இவை நன்கு தெரியும். இருப்பினும் தந்தையான உனது துயரத்தின் வலியை என்னால் உணர முடிகிறது.  நாம் வணங்கும் எல்லாம் வல்ல  தென்னாடுடைய சிவன் பாதத்தில்  நமது வேண்டுதலை சமர்ப்பித்து விட்டு காத்திருப்போம்."  தனது தோழனைப் பார்த்து கூறினார்.

     "இவற்றை, நீ சொல்லித்தான் தெரிய வேண்டுமா?,   உன்னை விட அவனது நலனில் அக்கறை கொண்டவர் யார் உள்ளார்? அன்று முதல் இன்று வரை எங்களுக்காகவே திருமணம் கூட செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறாய். உனது அன்பிற்கும் தியாகத்திற்கும் நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோம்? உன்னை உற்ற நண்பனாக பெற்றது நான் செய்த  பாக்கியம்!"  தனது தோழன் வைத்தியர் இருளப்ப மள்ளரின் கரங்களை பற்றிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்.

    " நீ சிறிது நேரம் இங்கு படுத்து உறங்கு. நான் மற்ற நோயாளிகளை பார்த்து விட்டு வருகிறேன்" 

    " எனக்கு எப்படி? உறக்கம் வரும்..."

    "சரி. அப்படி எனில், ஆதூரசாலைக்கு வெளியே சென்று சிறிது உலாவி விட்டு வா... சுத்தமான காற்று உனக்கு கொஞ்சம் தெம்பை தரும்"

    " நீ,  சொல்வதும் சரிதான். நீ,  சென்று நோயாளிகளை பார்!  நான் வெளியில் சென்று உலாவி விட்டு வருகிறேன்".

    "உணவருந்தும் நேரம் கடந்து விட்டது. நீ, சென்று தரும சாலையில் உணவு அருந்துகிறாயா?  இல்லை...  இங்கு உனக்கு வேண்டிய உணவுகளை வர வைக்கட்டுமா?"

   " எனக்கு பசிக்கவில்லை. முதலில் நீ, சொன்னது போல் காலாற வெளியே நடந்து விட்டு வருகிறேன். அதன்பின் எனக்கு  தேவைப்படின் தர்ம சாலையில் உணவு பெற்று உண்டு கொண்டு கொள்கிறேன்." என்றவர் அறையை விட்டு வெளியே வந்தார்.

    கனத்த துயரத்துடன் ஆதூரசாலையின் வாயிலைக் கடந்து செல்லும், தனது தோழன் குமாரமள்ளரை பார்த்துக் கொண்டிருந்த வைத்தியர் இருளப்ப மள்ளர் நோயாளிகளை காண உள்ளே சென்றார். 

    வெண் பஞ்சு மேகப் பொதிகளில் தவழ்ந்து நீந்திக் கொண்டிருந்தான் ஆதவன். தவழ்ந்தது போதும் என அவனை  விரட்டி விரவிக் கொண்டிருந்த செந்நாரைகள் தங்கள் கூரிய அலகால் முத்தமிட எண்ணிய போது அந்தியின் குங்குமச்சிவப்பு வண்ண சித்திரத்தை மேற்கு வானில் எழுப்பி நீயா? நானா? போட்டியில் இறங்கி இருந்தன. ஆதவன் சத்தம் இல்லாமல் அவ்வழகில் தன்னை புதைத்துக் இருந்தான்.

     ஆதூரசாலைக்கு அடுத்து இரண்டு வீதிகள் தள்ளி அமைந்திருந்தது  அழகான    ஒரு சிவபெருமான் ஆலயம். தாமரைகள் நிறைந்த சிறிய குளம் ஒன்று அந்த ஆலயத்தின் எதிரே இருந்தது. குளம் நிறைய நீரைப் பெற்று கரையை தொட்டு தழும்பி கொண்டிருந்தது. ஆழமற்ற அக்குளத்தின் படித்துறையில் இறங்கிய முதிய பெண்களும் இளம் நங்கைகளும் ஒரு காலை படித்துறையிலும் மற்றொரு காலை நீரிலுமாக மாற்றி மாற்றி வைத்து  குளத்தின் நீரால் காலை சுத்தம் செய்து கொண்டவர்கள் ஆலயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். அவர்களது கையில் இருந்த சிறிய மூங்கில் கூடையில் தேங்காய், வாழைப்பழம், வில்வ இலைகள், கதம்ப மாலைகளால் நிறைந்து காணப்பட்டது. ஆலய வாசலுக்கு அருகிலேயே வழிபாட்டுக்குரிய மலர்கள் தேங்காய், வாழைப்பழம், வில்வ இலைகள்  ஆகியவற்றை கொண்ட சிறியதொரு கடையினை வயதான மூதாட்டி ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார். அந்த தள்ளாத வயதிலும் அவரை அணுகி கேட்டவர்களுக்கு வேண்டிய பொருள்களை விரைவாக மூங்கில் கூடைகளில் நிரப்பி கொடுத்து கொண்டிருந்தார்.

     கனத்த மெளனத்தோடு சென்று கொண்டிருந்த வைத்தியர் குமார மள்ளரின் சிந்தனையை சிவாலயத்தில் இருந்து எழுந்த மணியோசை, அவரை புற உலகிற்கு இழுத்து வந்திருந்தது. சிறிய அந்த சிவாலயத்தின் கோபுர அழகு அவரை இழுத்ததோ அல்லது ஆலயத்தின் உள்ளே  மதுரமான குரலில் ஒலித்த தேவார பதிகத்தின் பாடல் இழுத்ததோ நாம் அறியோம். 

     ஆலய வாசலைக் கடந்து உள்ளே வந்த அவரை வரவேற்கும் முகமாக அழகிய சிறிய நந்தி அங்கு அமைந்திருந்தது. அதைக் கடந்து சென்ற போது சிவலிங்கமாய் எழுந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார் இறைவன். மல்லிகை மற்றும் கதம்ப மலர்களால்  செய்திருந்த அலங்காரம் இறைவனுக்கு திவ்யமாக இருந்தது.ஆலயத்தில் கூடியிருந்த மக்கள் பக்தி வெள்ளத்தில் உச்சத்தில் "தென்னாடுடைய சிவனே போற்றி! எந் நாட்டவருக்கும் இறைவா போற்றி!" என அவர்கள் எழுப்பிய முழக்கம் ஆலய முழுவதும் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. அவரை மனம் உருகி வேண்டிக் கொண்டிருந்த கூட்டத்திற்கு முன்பாக இறைவனை நோக்கி கரம் கூப்பியபடி ஐம்பது  வயதினைக் கடந்திருந்த பெண் ஒருவர் தனது மதுரமான குரலால் தேவாரப் பதிகத்தை பாடிக் கொண்டிருந்தார். அவரது மதுர குரலால் ஈர்க்கப்பட்ட மக்கள் கூட்டம் துளியும் சத்தம் இன்றி மனம் உருகி லயித்துக்கு கிடந்தனர்.  அவர்களில் வைத்தியர் குமார மள்ளரும் ஒருவர்.

     ஆலயத்தில் இறைவன் தந்த பதில் வேறு....
(தொடரும்.... அத்தியாயம் 15ல்)


    



    





     

No comments:

Post a Comment