🐾இராஜமோகினி 🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 22🌾 இளம்வழுதிக்கு ஏற்பட்ட இன்னல்🌾
காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முடிகொண்டான் ஆறு பொங்கும் நுரையுமாக குதித்துக் கொண்டு ஓடியது. இரு கரைகளிலும் செழித்து வளர்ந்திருந்த நாணல் புதர்களும் அதற்கு மேல் அகன்று பெருத்து கிளை பரப்பி இருந்த பெரும் மரங்கள் சிலவற்றின் கிளைகளும் நதியினை தழுவி நன்றியை காட்டியதோ என்னவோ? மரங்களின் கிளைகள் நதியை நோக்கியே நீண்டிருந்தன.
பெரியதொரு எதிர்பார்ப்போடு குடும்பு வாரியங்களின் தலைவர் மருதப்பகுடும்பரை சந்திக்க சென்றிருந்தவன், ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக எடுத்துக்கொண்டு, நத்தம் குடியிருப்பில் இருந்து வெளியேறி நாகை நோக்கி புரவியில் சென்று கொண்டிருந்த அவனது மனம் விடை தெரியாத பல்வேறு கேள்விகளால் மனம் குழப்பிக் கிடந்தது.
வெகு தூரத்திற்கு அப்பால் கிளம்பி வயல் வெளிகளைக் தழுவி முடிகொண்டன் ஆற்றின் கரையில் இருந்த பெரும் மரங்களின் ஊடாக புகுந்து வந்த குளுமையான காற்று அவனை முத்தமிட்டதும் விழித்துக் கொண்டான் இளம்வழுதி. "சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் இந்நதிக்காவது கடலைத் தேடி அடைந்து தழுவ போகிறோம், என்ற திருப்தியில் சுழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு முன்னால் கேள்வி மட்டும் தான் உள்ளது. விடை தான் என்று தெரியுமோ புரியவில்லை. முகவரி அற்று இருந்த போதும் அனாதையாகத் தான் இருந்தேன், முகவரி தெரிந்த பின்பும் அனாதையாகத் தான் உள்ளேன். என் வாழ்வில் என்ன நடக்கிறது? எனப் புதிராகவே உள்ளது. எனக்கென்று உள்ள இந்த அடையாளத்தை சரியானபடி மீட்டெடுக்கும் பெரும் பொறுப்பு என் கையில் உள்ளது. அதற்கான தைரியத்தையும் பொறுப்பையும் நீதான் வழங்க வேண்டும் இறைவா" என எண்ணிக் கொண்டவன் புரவியை முடுக்கிக் கொண்டு தடதடவென சென்றான்.
தொலைவில் தெரிந்த ஊரை நோக்கி குதிரையை முடுக்கி விட்டிருந்தான். வயல்வெளிகளுக்கு நடுவே மேட்டுப்பகுதியில் நிறைய குடியிருப்புகள் அமைந்திருந்தன. அந்த குடியிருப்புகள் சுற்றியும் வயல்வெளிகளுக்கு அருகாமையிலும் பலவிதமான மரங்களைக் கொண்டு இயற்கையோடு அமைந்த எழில்மிகு தோற்றத்தை கொண்டிருந்தது. குடியிருப்பினை நோக்கி விரைந்து சென்றவன் அங்கிருந்த கூட்டத்தில் இருந்து பெரும் கூச்சல்களும் சத்தமும் அவனது கவனத்தை ஈர்க்கவே புரவியை மெதுவாக விட்டுக்கொண்டு அவர்கள் அருகே சென்றான் இளம்வழுதி.
குடியிருப்பின் நடுவே இருந்த வேப்பமரம் ஒன்றில் வயதான பெரியவர் ஒருவரைக் கட்டி வைத்து அக்கூட்டத்தில் இருந்த சில பேர் அவரை மாறி மாறி அடித்து துவைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் 'விடாதே! அடித்து நொறுக்கு!' என்றும் 'அவன் முகத்தை உடை!' எனவும் 'அவன் தொப்பை வயிற்றிலேயே நன்றாக குத்து' எனவும் 'விடாதே அவனை நன்றாக அடித்து நொறுக்கு' என்று எல்லைத் தாண்டிய கோபத்தில் கத்திக் கொண்டிருந்தனர். அவர்களது அடாவடியை தடுக்க முயன்ற ஒரு சிலரும் போராடிப் பார்த்து முடியாமல் சோர்ந்து போய் விட்டிருந்தார்கள்.
அங்கிருந்த கூட்டத்தில் சேர்ந்து கொண்டு என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் இளம்வழுதி.
"இவனைப் போன்றவர்களுக்கு நம்மை பார்த்தால் எத்தனை இளப்பம் பார்த்தீர்களா ?" என்றான் பெரிய துண்டு ஒன்றை தலையில் தலைப்பாகை போல் கட்டிக்கொண்டு அந்தப் பெரியவரை அடித்து துவைத்தவர்களில் ஒருவன்.
"ஆமாம். ஆமாம். இன்னும் நன்றாக அடிக்க வேண்டும்" அவர்களுள் நடுத்தர வயதை கடந்து விட்டிருந்த மற்றொருவன் கூறினான் .
"இருக்கட்டுமே, அதற்கென்று ஒரு முறை உள்ளது அல்லவா?" என்றான் அவர்களின் குட்டையாக இருந்த ஒருவன்.
"இத்தனை காலமாக இல்லாத அநீதியாக இருக்கிறது. இவையெல்லாம் கேட்பதற்கு நாதியற்ற போய் விட்டோமா என்ன?" என்றான் தலைப்பாகை கட்டியவன் .
"இங்கு மட்டுமா, சோழ தேசம் முழுவதுமே இவ்வாறு தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது, பிறகு நமக்கு மட்டும் என்ன விதிவிலக்கா என்ன?" என்றான் குட்டையன் .
"நீ சொல்வதும் சரிதான்" என்றான் நடுத்தர வயதினன்.
"சும்மாவா சொன்னார்கள் நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கெடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம், அதுதான் இங்கு நடக்கிறது" என்றான் குட்டையன் .
"சரியாகச் சொன்னீர்கள். நமது பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளதல்லவா?" என்றான் தலைப்பாகை கட்டியவன் .
"எளியவர்கள் என்றால் ஏமாளிகள் என நினைத்து விட்டார்கள் போலும்?" என்றான் குட்டையன் .
"காவிரி அன்னையின் பொங்கிய புது வெள்ளம் போல் , அனைத்தையும் அடித்து துவைத்து வெளுத்தால் தெரியும் நமது பலம்" என்றான் தலைப்பாகை கட்டியவன்.
"பெயருக்கு ஒரு சட்டத்தை இயற்றிவிட்டு, ஆளுக்கு ஒரு நீதி அல்லவா, இவர்கள் காட்டுவது" என்றான் குட்டையன் .
"ஆள்வோர் போடும் சட்டத்திற்கு ஆமாம் என சுமை தூக்கும் கழுதைகள் இருக்கும் வரை, இவை மாறப்போவதில்லை" என்றான் தலைப்பாகை கட்டியவன் .
"பொறுத்தது போதுமென பொங்கி எழுந்தால், எத்தர்களின் வாழ்வில் மிஞ்சுவது, ஏமாற்றம் மட்டும்தான்" என்றான் குட்டையன்.
"சுமை தூக்கும் கழுதைகள் எல்லாம் சேர்ந்து நம்மை சுமைதாங்கிகளாக மாற்றி விட்டார்கள், அதனால் வந்த வினை தான் இவை" என்றான் தலைப்பாகை கட்டியவன் .
"அந்தக் கழுதைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஒரு நாள் இவர்களை உதைக்கும் என பாவம், இவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது" என்றான் குட்டையன் .
"ஆமாம். ஆமாம். இன்னும் ரெண்டு போடுங்கள் அவனுக்கு" என்றான் நடுத்தர வயதினன்.
"எத்தனை தைரியம் இருந்தால், ஊர் குடும்புக்குள் வந்து இதை செய்யும் துணிவு இருக்கும்" அதுவரை கூட்டத்தில் மௌனமாக இருந்தவன், அப்போதுதான் அரும்பி இருந்த இளம் மீசையை நீவியபடி வந்தான் இளைஞன் ஒருவன்.
"நமக்காக வகுக்கப்பட்ட நீதிகள் இருக்கும் பொழுது, அதை உடைக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது இவர்களுக்கு?" என்றான் குட்டையன் .
"காடு கரைகளை திருத்தி கழனி பெருக்கி வாழ்வாங்கு வாழ்ந்த முன்னோர்கள் இயற்றி வைத்த சட்டம் இது, இடையில் வந்த எத்தன், இவன் யார் மாற்ற?" என்றான் இளைஞன்.
கணத்திற்கு கணம் அங்கிருந்தவர்களின் கோபம் நெருப்பாய் கொதித்துக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரம் போனால் அவர்களிடம் அகப்பட்ட அந்த பெரியவரை அந்த நெருப்பில் போட்டு எரித்து இருப்பார்கள் என எண்ணினானோ என்னவோ கூட்டத்தை விளக்கிக் கொண்டு அங்கிருந்தவர்கள் முன்பு வந்த இளம்வழுதி "இங்கு என்ன நடக்கிறது யாராவது கூறுங்களேன்?"என்றான்.
இவன் யாரோ புதிதாக உள்ளே வந்து ஏதோ கேட்கிறானே என்று ஆதங்கத்தில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"யாரப்பா நீ? புதிதாக இருக்கிறாயே....? ஒருவேளை அங்குள்ளவனோடு சேர்ந்து வந்தவனா நீ?" வேப்ப மரத்தில் கட்டி இருந்த பெரியவரை காட்டி கூறினான் குட்டையன்.
"இல்லை. யாரோ பெரியவர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அவரை துன்புறுத்திக் கொண்டிருக்கிறீர்களே என வினவினேன்" என்றான் இளம்வழுதி .
"அப்படியானால் உன் வேலையை பார்த்துக் கொண்டு போய்விடு" என்றான் தலைப்பாகை கட்டியவன்.
"ஒரு அநீதி நடக்கும் பொழுது அதனைப் பார்த்து கண்டும் காணாமல் என்னால் செல்ல இயலாது"
"ஓ, அப்படியா... நீ என்ன அத்தனை பெரிய சூரப்புலியா? " இளம்வழுதியை பார்த்து கேட்டான் குட்டையன் .
"நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். "
"அப்படி என்ன அநியாயத்தை கண்டு விட்டாய்?" என்றான் குட்டையன் .
"ஒரு பெரியவர் ஒருவரை கட்டி வைத்து தண்டிப்பது தவறல்லவா ?"
"அவன் செய்த காரியம், உனக்கு தெரியுமா?" என்றான் குட்டையன் .
"அதெல்லாம் தெரிந்தால், நம்மிடம் இவ்வாறு பேச மாட்டான்." என்றான் தலைப்பாகை கட்டியவன் .
"அதற்கு முதலில் என்ன நடந்தது என்று எனக்கு விளக்குங்கள் ".
"ஓ.... இதுவரை என்னவென்று தெரியாமலெ, எங்களிடம் வாதம் செய்தாயா? "என்றான் குட்டையன்.
"பலே. ஆளப்பா நீ "என்றான் தலைப்பாகை கட்டியவன்.
"அதற்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை. நீ உன் வழியை பார்த்துக் கொண்டு போய்விடு." என்றான் குட்டையன்.
"அப்படி எல்லாம் போக முடியாது ஐயா. நடந்தவை என்னவென்று எனக்குத் தெரிந்தாக வேண்டும்".
"என்ன தம்பி.... பேச்சு வேறு மாதிரி உள்ளது?" என்றான் குட்டையன்.
"எங்கு வந்து என்ன பேசுகிறோம் என்று தெரிந்து தான் பேசுகிறாயா? "என்றான் குட்டையன்.
"நத்தம் குடியிருப்பில் உள்ள ஊர்க்குடும்புப் பகுதியில் உள்ளேன் என அறிவேன். இங்கு நடைபெறும் நிகழ்வு உங்கள் வழமை அல்லவே ".
"நீ கூறுவதெல்லாம் சரிதான். எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?" என்றான் குட்டையன்.
"அதெல்லாம் இருக்கட்டும் முதலில் நீ யார் என்று கூறு ?"என்றான் தலைப்பாகை கட்டியவன்.
" எனது பெயர் இளம்வழுதி, சோழத்தின் பிரதான படைத்தலைவர் கருணாகர தொண்டைமானின் உப தளபதி. "
"ஓகோ. அப்படியா செய்தி. இப்போது எல்லாம் யார் வேண்டுமானாலும், எதையாவது ஒரு பதவியை சொல்லி ஏமாற்றுவது வாடிக்கையாகி வட்டது போலும்" எனக்கூறி இளப்பமாய் சிரித்தான் குட்டையன் .
"ஆமாம். ஆமாம். நாம்தான் இங்கு கண்ணார காண்கிறோமே" என்றான் தலைப்பாகை கட்டியவன் .
"நீங்கள் வேறு, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்கரனாகி விட்டான், இவனும் அவர்களின் சேர்த்தி போலும்" எனக்கூறி சிரித்தான் குட்டையன்.
"இருக்கலாம். இருக்கலாம் .... நாதியற்ற தேசம் தானே யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு நாயகம் செய்யலாம் நினைத்து விட்டார்கள் போலும்"என்றான் தலைப்பாகை கட்டியவன் .
"அவையெல்லாம் நம்மிடம் நடக்குமா?"என்றான் இளைஞன்.
"எதற்கும் இவனையும் பிடித்து அந்த மரத்தில் கட்டி வையுங்கள், இன்னும் யாரெல்லாம் இது போல் சொல்லிக் கண்டு வருகிறார்களோ, அவர்கள் அனைவரையும் என்று ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்" என்றான் குட்டையன்.
"அதுவும் சரிதான் இவனோடு சேர்த்து நமது ஊருக்கு இதுவரை இருவர் வந்து விட்டார்கள்."என்றான் தலைப்பாகை கட்டியவன்.
"எத்தனை பேர் வேண்டுமானாலும் வரட்டும். அவர்களுக்கு நாம் நல்லதொரு பாடத்தை கற்பிக்க வேண்டியது நமது கடமை"என்றான் குட்டையன்.
"சரி, சரி. பேசியது போதும் இவனை பிடித்து அங்குள்ளவனோடு சேர்த்து கட்டி விடுங்கள். பிறகு ஓடிவிடப் போகிறான்"என்றான் தலைப்பாகை கட்டியவன்.
"அது எப்படி முடியும்? நமது எல்லையை விட்டு அனால் தாண்டி விட முடியுமா?"என்றான் குட்டையன்.
" ஏன் முடியாது. இவன் குதிரையில் வந்துள்ளான், அதனால் வாய்ப்பு கிடைத்தால் ஓடிவிடுவான்"என்றான் இளைஞன்.
"அப்படியானால் இவன் பெரிய திருடன் போலும்"என்றான் தலைப்பாகை கட்டியவன்.
"இருவரும் சேர்ந்து தான் வந்திருப்பார்கள். நீ முன்னால போய் காரியத்தை பார். நான் பின்னால் வருகிறேன் என அவர்களுக்குள் திட்டம் ஏதும் இருக்கும்"என்றான் குட்டையன்.
"நீ சொல்வதும் சரிதான் அப்படித்தான் இருக்க வேண்டும்." என்றான் தலைப்பாகை கட்டியவன்.
" முதலில் அவனைப் பிடித்துக் காட்டுங்கள்" எனக் கூறியபடி இளவழுதியை நெருங்கினான குட்டையன். அவனைத் தொடர்ந்து கூட்டத்தின் சில பேர் அவனைச் சுற்றி வளைக்க தலைப்பட்டார்கள்.
(தொடரும்..... அத்தியாயம் 23ல்)
No comments:
Post a Comment