புள்ளினங்கள் சீரகசித்துக் கொண்டிருக்கும் பின் மாலைப்பொழுது. பச்சை வண்ண மரகதப் பாய் விரித்த வயல்வெலிகளுக்கு அருகே அமைந்திருந்தது மாஞ்சோலை கிராமம். நன்கு படித்து தேர்ச்சி பெற்று அக்கிராமத்தின் அரசு பள்ளி ஒன்றின் சமூக அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாள் பொற்கொடி. பகலில் பணிபுரிந்த நேரம் போக மாலை வேலைகளில் கிராமத்தின் சிறுவர்களுக்கு மாலை நேரத்தில் சொல்லித் தருவதை ஒரு சேவையாகவே செய்து வந்தாள். "ஏன் இப்படி மாடாய் கிடந்து உழைக்கிறாய்?" என்பவர்களிடம், "ஆசிரியைப் பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி" எனப் படித்தால் மட்டும் போதாது என்பாள்.
குளித்து வந்து அலை அலையாய் நீண்டு பரவி இருந்த கருங்கூந்தலை, உலர்த்திக்கொண்டு இருந்தாள் பொற்கொடி. அவளது மாந்தளிர் மேனிக்கு எடுப்பாக மஞ்சள் நிற சேலையும் நீல வண்ண மேலாடையும் அணிந்து இருந்தாள். மாறனை முதன்முதலாக சந்தித்தபோது இவ் ஆடையினைத்தான் அணிந்திருந்தாள். மனதிற்குள் அவன் நினைவு தோன்றும் போதெல்லாம் இதனை அணிந்து கொள்வாள். பிறை போன்ற நெற்றியில் அவள் வைத்திருந்த பொட்டு அழகிய வதனத்தை இன்னும் அழகு சேர்த்திருந்தது. கடந்து செல்பவர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் பேரழகு அவள்.
ஆற்றங்கரை ஓரமாக நீண்டு உயர்ந்து அகன்று கிளை பரப்பி இருந்த பெரிய மரத்தின் அருகே தான் வளமையாய் மாறனும் பொற்கொடியும் சந்தித்துக் கொள்வார்கள. மரத்தின் கீழே வெண்ணிற மலர்களும் மஞ்சள் நிற மலர்களும் எப்போதும் பூத்து ரம்மியமாக இருக்கும். இன்றும் அங்கு செல்வதற்காக தான் ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.
சென்ற வருடத்தின் இதே நாளில் தான் மாறனை கடைசியாக ஆற்றங்கரை மரம் அருகே சந்தித்து இருந்தாள். அன்று அவன் அடிமரத்தில் அமர்ந்து கொண்டு பொற்கொடியை நெஞ்சோடு சாய்த்து இருந்தான்.
நீல வானின் நீல அகலங்களை நீந்தி கடந்து விட்ட பெரும் மகிழ்வில் தன்னொளியை பொழிந்து கொண்டிருந்த முழுமதியை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது" பொற்கொடி" என்றான்.
"கூறுங்கள் "
"தளிர் கரங்களைக் கொண்ட இப்பூங்கரந்தான் எத்தனை வேலை செய்கின்றது?" என்றவன் வண்டாய் மாறி அவள் வதனத்தை மொய்த்திருந்தான்.
" சிறு வயது முதலே அம்மையப்பனின்றி பாட்டியின் பேரன்பில் வளர்ந்தவள். எனக்கு இருந்த ஒரே ஆதரவு அவர் மட்டும்தான், அதனால் எனக்கு பழகிவிட்டது".
"பகல் நேரத்தில் பள்ளியில் பணி செய்கிறாய், மாலையில் சிறுவர்களுக்கு சொல்லித் தரும் சமூகப் பணியென, சலிக்காமல் செய்கிறாயே....!"
" நீங்கள் மட்டும் என்னவாம். சாலை விபத்து ஒன்றில் இறந்து போன உங்கள் சகோதரனின் இரண்டு பெண் குழந்தைகளையும் நீங்கள் தானே அம்மையப்பனாக இருந்து வளர்த்து வருகிறீர்கள். எத்தனை பேருக்கு இந்த பேரன்பு உள்ளது".
"இதனால், உனக்கு ஏதும் வருத்தம் இல்லையே ?"
"என்ன இப்படி கூறி வட்டீர்கள்? பெற்றால்தான் பிள்ளையா? உங்கள் ஆசையும் விருப்பமும் தான் எனக்கு பெரிது. அதைப் பற்றிய கவலையை விடுங்கள்" என்றவள் அவனது விழிகளில் தனது விழியை சுழல விட்டாள்.
"பொற்கொடி" தயங்கிக் கொண்டே அவளை அழைத்தான்.
"என்னிடம் ஏன் இந்த தயக்கம்?, கூறுங்கள்"
"ராணுவத்தில் பணி செய்வதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வாகியுள்ளேன்."
"மிக்க மகிழ்ச்சி" என்றவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
குங்குமமாக சிவந்திருந்த அவளது குழிவிழுந்த கன்னத்தில் முத்தமிட்டான்.
"இதனால் உனக்கு வருத்தம் இல்லையே? "
"எனக்கு பூரண மகிழ்ச்சி தான். தேசத்திற்கு சேவை எத்தனை பெரும் பாக்கியம் இது. இதனை மறுப்பேனா? அதுவும் தங்களுக்குப் பிடித்தமான பணி இது"
"அது இல்லை பொற்கொடி. பணி நிமித்தமாக உன்னை பிரிந்து செல்ல வேண்டி உள்ளது. அதுமட்டுமின்றி குழந்தைகளும் வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய கடமையை செய்வதற்கு என்னிடம் உருப்படியாய் ஒரு வேலை வேண்டும். "
"கவலையின்றி சென்று வாருங்கள். அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் ."
அவளது தளிர் கரங்களை பற்றிக் கொண்டு நெத்தியில் முத்தமிட்டு விடை பெற்றான் மாறன்.
நினைவு அலைகளில் நீந்தியபடி ஆற்றங் கரையில் இருந்த பெரும் மரத்தின் அருகில், அன்று அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு, வானில் உலா வரும் வெண்மதியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடந்து விட்டிருந்த ஓராண்டுகளில் அவனிடமிருந்து எந்த விதமான தகவலும் வரவில்லை. அவனது நினைவு தோன்றும் நாளெல்லாம் இங்கு வந்து விடுவாள். "காலமெல்லாம் உனக்காக காத்திருப்பேன் கண்ணாளா! "அவளைச் சுற்றியிருந்த வெண்நிற மலர்களும் மஞ்சள் மலர்களும் அவளது நினைவுகளைப் போற்றி மனம் வீசி, வாழ்த்தி கொண்டிருந்தன.
No comments:
Post a Comment