🐾இராஜமோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 33 🌾சத்திரத்தில் நிரூபணமான சந்தேகம்🌾
சத்திரத்தின் முன்பாக இருந்த பெரிய திறந்த வெளியில் வணிகர்கள் தங்களது வண்டிகளை வட்ட வடிவத்தில் நிறுத்தி இருந்தார்கள். வட்டத்தின் மையத்தில் வணிகர்கள் ஒரு சிலர் அமர்ந்து கொண்டு பொருட்களின் பாதுகாப்பு பற்றி காவலர்களுக்கு எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறாக பல்வேறு குழுக்கள் தங்கள் வணிகப் பொருட்களின் பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்து விட்டு அங்கிருந்த சத்திரத்திற்குள் நுழைந்திருந்தார்கள் வணிகர்கள்.
வணிக சாத்துகளின் வரவை அறிந்ததும் சத்திர அதிகாரி வருபவர்களுக்கு தேவையான அறைகளை ஒழித்துக் கொடுத்ததோடு வரும் வணிகர்களை வரவேற்று, முகமன் கூறிக் கொண்டிருந்தார். தலையில் தலைப்பாகையோடு துரு துருவென அங்கும் இங்கும் சென்று கொண்டு வரும் வணிகர்களை வரவேற்று அவர்களின் தேவைக்கு தகுந்த உபசரிப்பை கொடுத்துக் கொண்டிருந்தார். ஐம்பது வயதை கடந்து விட்டிருந்த சத்திர அதிகாரி தனது அனுபவத்தின் பாடத்தை செயலில் காட்டி அவர்களுக்கு வேண்டிய உபசரிப்பை சுணங்காமல் கொடுத்துக் கொண்டிருந்தார். தேவைப்படும் பணியாட்களை கொண்டு துரிதமாக காரியத்தை செயலாற்றிக் கொண்டிருந்தார். எத்தனை தான் அவர் கவனமாக செயல்பட்ட போதும் ஒரு சில வணிகர்களின் எதிர்பார்ப்பை அவரால் நிறைவேற்ற முடியாத போதும் அவர்களுக்கு வேண்டிய சமாதானத்தைக் கூறி சரி கட்டிக் கொண்டிருந்தார்.
வணிக சாத்துகள் வரும் வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்த விளக்குகள் வண்டிகளின் சத்தத்தை கேட்டதும் சத்திரத்து அதிகாரியின் உத்தரவின் காரணமாக நள்ளிரவிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு, பகல் போல் ஒளிர்ந்து கொண்டு இருந்தன.
அறைக்குள் வந்த வணிகர்கள் பயணக் களைப்பு தீர ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். இலவம் பஞ்சால் செய்த மெத்தைகளில் படுத்து புரண்டு கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது அங்கிருந்த பணியாளர்களை அழைப்பதற்கு மணியை ஒலித்து வேண்டும் உபசரிப்புகளை பெற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு சில அறைகளில் வணிகர்கள் சிலர் படுத்து உறங்கி விட்டார்கள். இன்னும் சிலரோ பசியின் காரணமாக உணவு வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
வந்திருந்த வணிகர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து விட்டு சத்திர அதிகாரி முகப்பு வாசலை வந்தடைந்த போது அங்கு இரண்டு வணிகர்கள் இருந்தார்கள்.
"சொல்லுங்கள் ஐயா. தங்களுக்கு வேறு ஏதேனும் வசதிகள் செய்ய வேண்டியது உள்ளதா?" என்றார் சத்திர அதிகாரி.
"நான் சென்ற முறை வந்தபோது சுவையான புளியோதரை கிடைத்தது. அது இப்பொழுது கிடைக்குமா?"என்றார் அவ்விரு வணிகர்களில் ஒருவர்.
"நேரம் கடந்து விட்டதால் உணவின் கையிருப்பு எவ்வளவு உள்ளது என தெரியவில்லை?, எதற்கும் நான் விசாரித்து பார்த்துவிட்டு கூறுகிறேனே?"
"எங்கள் இருவருக்கும் மட்டும் வேண்டும். " என்றார் மற்றொரு வணிகர்.
"சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். உடனே நான் விசாரித்ததோடு, இருந்தால் கையோடு எடுத்து வருகிறேன்" என்றவர் உணவு தயாரிக்கும் இடத்தை நோக்கி விரைந்து நடந்து கொண்டிருந்தார்.
உணவு தயாரிக்கும் அறைக்குள் நுழைந்தவர் "சாத்தா! புளியோதரை உணவு எவ்வளவு உள்ளது?"
உணவுகளை பெரும் அண்டாக்களில் இருந்து எடுத்து பரிமாறுவதற்கு தயார் செய்து கொண்டிருந்த சாத்தன், சத்திர அதிகாரியின் அழைப்பினை ஏற்று அவர் அருகில் வந்தார்.
"கூறுங்கள் ஐயா?"
"புளியோதரை நமது கையிருப்பில் எவ்வளவு உள்ளது?"
"பெரிதாக ஒன்றும் இல்லை. சிறிய அளவே உள்ளது என நினைக்கிறேன்"
"சரி என்னோடு வா!" என்றவர் உணவு இருந்த இடத்தை நோக்கி சென்று புளியோதரை இருந்த அண்டாவை பார்த்தார் சத்திர அதிகாரி.
"சரி பரவாயில்லை. இந்த உணவுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்"
அண்டாவில் இருந்த புளியோதரையை ஒரு சிறிய பாத்திரத்தில் அள்ளி வைத்துக் கொண்டு சத்திர அதிகாரியை பின் தொடர்ந்தார் சாத்தன்.
சத்திர அதிகாரியுடன் வரும் நபர் கையில் பாத்திரத்தை கொண்டு வருவதை பார்த்ததும் வணிகர்கள் இருவரது வதனமும் மகிழ்ச்சியில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
"நீங்கள் எதிர்பார்த்தபடி புளியோதரை உள்ளது. ஆனால் அதிகமாக இல்லை"எனக் கூறியவர் பாத்திரத்தில் உள்ள புளியோதரையை காண்பித்தார்.
"எங்கே இல்லை என்று சொல்லி விடுவீர்களோ, என பயந்து கொண்டே இருந்தோம். இது எங்களுக்கு போதும்"என்றார் முதலில் புளியோதரையை கேட்ட வணிகர்.
"இவர்கள் அறைக்கு எடுத்து போய் உணவை பரிமாறி விட்டு வா " என சாத்தனை பார்த்து கூறினார் சத்திர அதிகாரி.
வணிகர்கள் சென்ற பின்பு வந்திருக்கும் வணிகர்களின் எண்ணிக்கையும் அவர்கள் பற்றிய விவரங்களையும் ஓலையில் கவனமாக குறித்து வைத்துக் கொண்டிருந்தார் சத்திர அதிகாரி.
முகப்பு வாசலுக்கு அருகில் உள்ள அறையிலிருந்து வெளியேறிய இளம்வழுதியும் அழகனும் சத்திர அதிகாரியை நெருங்கினார்கள். "ஐயா, வணிகர்கள் அனைவரும் தங்கள் அறைகளுக்கு சென்று விட்டார்களா?"
"வாருங்கள் ஐயா. ஆமாம், அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று விட்டார்கள்"
"அவர்கள் வேறு ஏதேனும் கூறினார்களா?"
"இல்லை ஐயா. தங்களுக்கு வேண்டிய வசதிகளை மட்டுமே கேட்டு பெற்றார்கள். வேறு ஒன்றும் கேட்கவில்லை"
"அவர்களது நடவடிக்கை பற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறது?"
"பெரும்பாலான வணிகர்கள் இயல்பாகத்தான் உள்ளார்கள். ஒரு சிலர் மட்டும்தான் உள்ளே கலக்கத்தையும் வெளியே அதனை காட்டிக் கொள்ளாத படி நடந்து கொண்டார்கள்"
"அப்படியெனில் அவர்களுக்கு உள்ளூர ஒரு விதமான பயம் இருப்பது போல் உள்ளதே ஐயா"என்றான் அழகன்.
"இருக்கத்தானே செய்யும், அத்தனை எளிதில் அவர்கள் இயல்புக்கு திரும்பி இருப்பார்கள் என எண்ணுவது கூட நமது தவறுதான்"
"நீங்கள் கூறுவதும் சரிதான் ஐயா" என்றான் அழகன்.
"நான் ஏற்கனவே கூறியபடி அவர்களது பாதுகாப்பை சந்தேகம் ஏற்படாத வண்ணம் நாம் கண்காணித்து வர வேண்டும்"
"நீங்கள் கூறியபடியே செய்து விடலாம் ஐயா"
"சத்திரத்தில் வேறு யாரேனும் சந்தேகப்படும்படியாக நடந்து கொள்கிறார்களா?" என சத்திர அதிகாரியிடம் கேட்டான் இளம்வழுதி.
"இன்று காலையில் சிலர் வந்து அறையில் தங்கி விட்டு, சிறிது நேரத்திலேயே வெளியேறி விட்டார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் மாலையில் வந்து தங்கள் அறையில் தங்கி உள்ளார்கள். அவர்கள் மீதுதான் எனக்கு சந்தேகம் உள்ளது."
"அவர்கள் எங்கு தங்கி உள்ளார்கள்?"
"முதல் அடுக்கில் உள்ள இரண்டாவது அறையில் தான் தங்கி உள்ளார்கள்."
சிறிது நேரம் யோசனைகளில் இருந்த இளம்வழுதி "அவர்களது அறைக்கு பக்கத்தில் ஏதேனும் அறைகள் காலியாக உள்ளனவா?"என்றான்.
"இல்லை ஐயா. இன்று அனைத்து அறைகளும் நிரம்பி வழிகின்றது"
"நன்றாக யோசித்துப் பாருங்கள் ஐயா"
"இப்போதுதான் தோன்றுகிறது. அவர்கள் அறைக்கு அடுத்து உள்ள அறையில் ஒரு வயதான நபர் ஒருவர் தங்கியுள்ளார். இங்குள்ள சிவ தலங்களை சுற்றி பார்க்க வந்திருப்பதாக கூறினார்"
"அப்படியா?"
"இதுவரை அவரது நடவடிக்கை எவ்வாறு உள்ளது?"
"அவரால் எந்தவிதமான இடையூறும் உண்டாகவில்லை. உணவு நேரத்தில் மட்டும் மணியை அடித்து உணவு வரவழைத்து சாப்பிடுவார். மற்ற நேரத்தில் அவரது அறை சாத்தியபடி தான் இருக்கும்"
"எதற்கும் கவனமாக இருங்கள். ஏதேனும் சந்தேகப்படும்படியான நிகழ்வு உண்டானால் எனக்கு உடனே தெரியப்படுத்துங்கள்" என சத்திர அதிகாரியிடம் கூறிவிட்டு அழகனை அழைத்துக் கொண்டு சத்திரத்தை விட்டு வெளியேறி தங்கள் குதிரைகள் நிறுத்தி இருந்த கொட்டடியை நோக்கி சென்றார்கள்.
நீண்ட பெரிய குதிரை கொட்டடியை கொண்டிருந்தது அந்த சத்திரம். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான குதிரைகள் நிறுத்தி வைக்க முடியும். குதிரைகளுக்கு வேண்டிய தீவனங்களை அங்குள்ள பணியாளர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் குதிரைகளை ஆசுவாசப்படுத்திக் கொண்டும் அவை வெளியேற்றிய கழிவுகளை உடனுக்குடன் அகற்றிக் கொண்டும் இருந்தார்கள். அந்தக் குதிரைக் கொட்டடி தேவையான அளவு வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
குதிரை கொட்டடியில் நுழைந்திருந்த இளம்வழுதியும் அழகனும் தங்கள் குதிரைகள் நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி வந்திருந்தார்கள். அவர்களைக் கண்டதும் குதிரைகள் தங்கள் உடல்களை சிலுப்பிக்கொண்டு உற்சாகத்தில் துள்ளின. தத்தமது குதிரைகளை அணுகி அவற்றின் உடல்களை பிடித்து விட்டு அவற்றோடு சிறிது நேரம் செலவிட்டு கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே சத்திர அதிகாரி இவ்விருவரை பற்றியும் கூறி இருந்ததால் குதிரை கொட்டடியில் பணியாற்றிய பணியாளர்கள் இவர்கள் செயல்களை கண்டு கொள்ளாமல் தங்கள் பணிகளை முடித்துவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
மூன்றாம் சாமத்தை தொட்டுவிட்டு இருந்த அந்த இரவு வேளையில் சத்திரத்தை தாண்டி தொலைவில் எங்கோ ஒரு மரத்தில் இருந்த கோட்டான் ஒன்று அலறும் சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ஏற்கனவே கேட்ட அலறலை போல் சத்திரத்தின் முதல் அடுக்கில் இருந்து கோட்டான் ஒன்று அலறும் சத்தம் ஒலித்தது.
திடீரென முதல் அடிக்கிலிருந்து கோட்டான் அலறும் சத்தம் கேட்டதும் தனது குதிரையை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த இளம்வழுதியின் விழிகள் முதல் அடுக்கை நோக்கி பார்த்தன.
குதிரையின் கொட்டடியில் இருந்து சத்திரம் முழுவதையும் பார்க்க முடியும். சத்திரத்திற்கும் குதிரை கொட்டடிக்கும் இடையே சில மரங்கள் மட்டுமே இருந்தன. அப்படி ஒன்றும் அவை பெரிய மரமாக இல்லாததால் அவர்களால் சத்திரத்தை எளிதாக பார்க்க முடிந்தது. இளம்வழுதியை தொடர்ந்து அழகனும் கோட்டானின் அலறலை கவனித்து விட்டியிருந்தான் போலும் அவனது விழியும் சத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.
முதல் அடுக்கின் இரண்டாவது அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் திடீரென அணைந்தன. சில கணங்கள் கடந்த பின்பு அவை மீண்டும் எரியத் தொடங்கின. மறுபடியும் அணைந்தன. சில கணங்களுக்குப் பின்பு மீண்டும் எரியத் தொடங்கின
அணைந்து அணைந்து எரியும் விளக்குகளின் செயல்களால் ஈர்க்கப்பட்ட இளம்வழுதியும் அழகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். "அணைந்து எரியும் விளக்குகள் ஏதோ ஒரு செய்தியை சொல்கின்றன?"என்றான் அழகன்.
"அவை மட்டும் அல்ல. இது யாருக்கோ செய்தி அனுப்பும் சமிக்ஞை கூட இருக்கலாம்"
"அப்படியெனில் தாங்கள் எதிர்பார்த்த விபரீதம் ஏதேனும் நடக்கும் சாத்தியம் உள்ளது போலும்"
"அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்."
"ஏனையா இவ்வாறு கூறுகிறீர்கள்?"
"ஒருவேளை விளக்கு ஏதேச்சையாக அணைந்து மீண்டும் எரிந்து இருந்தால் என்ன செய்வது?, எதற்கும் நாம் ஆயத்தமாக தான் இருக்க வேண்டும்"
"தாங்கள் கூறுவதும் சரிதான் ஐயா"
"எதற்கும் அந்த அறையின் மீது நீ ஒரு கண் வைத்துக்கொள்"
"அப்படியானில் தாங்கள் எங்கு செல்ல போகிறீர்கள்?"
"நான் எதற்கும் வணிக சாத்துகளை பார்த்துவிட்டு வருகிறேன். நீ சந்தேகம் வராதபடி அந்த அறையினை கண்காணித்துக் கொண்டிரு" என்றவன் அங்கிருந்து வெளியேறி வணிக சாத்துகள் இருந்த இடத்தை நோக்கி நகர்ந்து இருந்தான்.
(தொடரும்.... அத்தியாயம் 34ல்)
No comments:
Post a Comment