🐾இராஜமோகினி 🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 21🌾 குடும்புகளின் தலைவர் மருதப்பகுடும்பர்🐠
குணக்கடலில் குதித்தெழுந்த ஆதவன் தனது பொற்கரங்களை இளம் முகில்கள் மீது உரசியதும் தான் தாமதம் அவை விழுந்து அடித்து வெருண்டோடி விட்டன. அதுவரை மரங்களின் கூடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த புள்ளினங்கள் பட படவென சிறகை அடித்துக் கண்டு கூட்டை விட்டு காலை நேர பூபாலத்தை வாசிக்கத் தொடங்கி விட்டன. ஆங்காங்கே கிளைகளிலும் மரப் பொந்துகளிலும் கூடடைந்திருந்த குருவிகளும் புறாக்களும் தன் பங்கிற்கு சத்தமிட்டபடி இன்னிசை எழுப்பிக் கொண்டிருந்தன. மரங்களின் இலைகள் மீது இரவு முழுதும் பொழிந்திருந்த பனித்துளிகள் ஆதவன் கரம் பட்டதும் காணாமல் போய் விட்டிருந்தன .
ஏர் பிடிக்கும் உழவர்கள் தோளில் கலப்பை தாங்கிக்கொண்டு காளை மாடுகளை வயல்களை நோக்கி "த்தே... த்தே " என ஒட்டிக்கொண்டு சென்றார்கள். இரவு நீண்ட தூரம் கடலில் பயணித்து காத்திருந்து பிடித்து வந்த மீன்களை அவர்களது மனைவிகளும், தங்கைகளும், தாய்களும் தெருவில் "மீனு வேணுமா மீனு " என சத்தமிட்டபடி வீதிகளில் வளம் வந்தார்கள். இளம் நங்கைகள் தயிர் பானைகளை தலையில் வைத்துக் கொண்டு "தயிர் வாங்கலையோ, அம்மா, அய்யா தயிறு வாங்கலையோ " எனக் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். நாளங்காடி கடைவீதிகள் திறந்து வைத்து தங்கள் வழக்கமான பணியை ஆற்றிக் கொண்டிருந்தார்கள் வணிகர்கள்.
அடிக்கடி பெய்த மழையின் காரணமாக நீர்நிலை பொங்கி வழிந்து கொண்டிருந்த குளம் களிலும், வாய்க்கால்களிலும் , அந்த அதிகாலை நேரத்தில் கரையில் இருந்து 'தொபுக்கெனத்' தண்ணீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். இவை யாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு தனது புரவி மருதனை மெல்ல விட்டுக்கொண்டு எதிரே தெரிந்த முடிகொண்டான் ஆற்றின் கிளை வாய்க்கால் அருகே வந்து நின்றான் இளவளதி.
வாய்க்கால் நிறைய தண்ணீர் ததும்பியபடி ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரையோரம் செழித்து வளர்ந்திருந்த புளிய மரத்தின் தாழ்வான கிளைகள் வாய்க்காலை நோக்கி இருந்தது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டுப் போக்கில் ஒருவரை ஒருவர் துரத்தி பிடித்து விளையாடி கொண்டிருந்தார்கள். அவர்களில் இரண்டொரு சிறுவர்கள் வாய்க்காலை நோக்கி தாழ்ந்திருந்த புளிய மரத்தின் கிளைகளில் இருந்து வாய்க்காலுக்குள் 'தொபுக்கென ' குதித்தார்கள். அதனைத் தொடர்ந்து மற்றொரு சிறுவனும் குதித்தான். இவ்வாறாக அந்த விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது. தண்ணீரில் குதித்தவர்கள் கரை ஏறுவதற்கு கரையோரங்களில் செழித்து வளர்ந்து கிடந்த நாணல்களை பிடித்துக் கொண்டு, ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். வாய்க்காலில் ததும்பிக் கொண்டிருந்த நீரோட்டத்தின் காரணமாக வயதானவர்கள் அங்கிருந்த படித்துறையில் அமர்ந்து கொண்டு நீரினை கொண்டு வந்திருந்த குவளையில் நிரப்பி குளித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில இளைஞர்கள் வாய்க்காலின் அக்கரைக்கும் இக்கரைக்கும் நீந்தியபடி அங்கிருந்த இளம் குமரிகள் முன்பு தங்கள் வீரத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தார்கள். இளம் குமரிகளும் தமது பங்கிற்கு வாய்க்காலின் கரையோரமாக முங்கி குளித்தபடியே அவ்வபோது காளையர்களை நோக்கி கடைக்கண் பார்வையை வீசிக்கொண்டும், அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தை கேலி செய்து சிரித்து கும்மாளம் இட்ட படியும் குளித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு சிலர் படித்துறையில் மஞ்சளை தேய்த்து முகத்தில் பூசிக்கொண்டு தண்ணீரில் விழுந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில நடுத்தர வயதினர் தங்கள் காளை மாடுகளை ஆழமற்ற இடத்தில் இறக்கி குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். வாய்க்காலின் கரையில் இருந்து தூரத்தில் அமைந்திருந்த வயல்களில் நெல்லின் ஊடாக வளர்ந்து கிடந்த கலைகளை, பறித்துக்கொண்டு இருந்த பெண்கள் தங்களின் களைப்பின் சோர்வை போக்குவதற்காக தங்களுக்குத் தெரிந்த வயல்வெளி பாடல்களை ராகத்தோடு பாடிக் கொண்டிருந்தார்கள். அங்கு வேலை செய்த குடும்பர் குலப் பெண்கள் மதுரமான குரலில் மயங்கி வேலை செய்வதை அவ்வப்போது நிறுத்தியவர்கள், மீண்டும் தங்கள் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறான பல்வகையான காட்சிகளை ரசித்துப் புரவின் மீது அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் இளவழுதி.
வாய்க்காலை விட்டு வெளியேறி மக்கள் குடியிருப்பு உண்டாக்கி வாழ்ந்துவரும், மேட்டுப்பகுதி குடியிருப்பு நிலமான நத்தத்தை நோக்கி , மெல்ல குதிரையை விட்டுக் கொண்டு வந்து சேர்ந்திருந்தான் இளவழுதி.
குடியிருப்புகளை நோக்கி செல்லும் பாதையில் பனங்காய்களால் வண்டி செய்து ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள் சில சிறுவர்கள். அங்கிருந்த இல்லங்களின் முற்றங்களில் வாழை மரமும் கொல்லையில் மா மரமும், அரை நெல்லி மரமும் காணப்பட்டன. ஒரு சில வீடுகளின் கொள்ளையில் புன்னை மரங்களும் இருந்தன. கொல்லையில் இருந்த மாமரத்தின் மாங்காய்களை கல்லால் அடித்து கொண்டிருந்தார்கள் இளம் வயதை நெருங்கிக் கொண்டிருந்த சிறுவர்கள். அப்படி அடித்து விழுந்திருந்த மாங்காய்களை எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து நறுக்கி, உப்பு வைத்து சுவைத்து உச்சிக்கொட்டி சாப்பிட்டார்கள். மாங்காயை கடித்தபோது உண்டான அதன் புளிப்பு சுவையால், அவர்கள் முகம் போன போக்கை காண்பித்து வம்பு இழுத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் சில சிறுவர்கள். இல்லங்களின் வாசலில் அவிழ்த்து வைத்திருந்த நெல்லை காய வைத்துக் கொண்டிருந்தார்கள் வயதான மூதாட்டிகள். ஒரு சில இல்லத்தின் முற்றங்களில் வயதான பெரியவர்கள் அமர்ந்து கொண்டு ஊர் வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில இல்லங்களின் வாசலில் அழகழகாய் மாக்கோலம் இட்டு வீட்டிற்கு இன்னும் அழகு சேர்த்துக் விட்டிருந்தார்கள். அங்கிருந்த ஒரு சில இல்லங்களில் சமையல் செய்வதால் உண்டான புகை வெளியேறிக் கொண்டிருந்தது. குடியிருப்பில் நுழைந்ததும் புரவிலிருந்து கீழே இறங்கி நடந்தபடி உள்ளே சென்றான்.
திடீரென குடியிருப்பு பகுதியில் புரவியுடன் இளைஞன் ஒருவன் அதிகாலை நேரத்தில் வருவதைக் கண்டு அங்குள்ளவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அவர்களில் ஒரு சிலர் அவனது புரவியையும் அவனையும் ஒப்பிட்டு ஏதோ பேசிக் கொண்டார்கள். அங்கிருந்த இளம் குமரிகள் இளவழுதியின் கம்பீரமான நடையையும் அவன் இடையில் எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்கும் வாளையும் பார்த்து அவனைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். இன்னும் சில குமரிகள் அவன் முக வதனத்தையும் உடல் அமைப்பையும் தங்களுக்குள் சொல்லிச் சொல்லி பூரித்துக் கொண்டிருந்தார்கள்.
குடியிருப்பின் மையப் பகுதிக்கு வந்த பொழுது அவனது பின்னாலேயே வந்த சிறுவர்கள் புரவியைத் தொட்டுப் பார்த்து விளையாடிக் கொண்டு வந்த வண்ணம் இருந்தார்கள். இத்தனை தூரம் வரை அவன் பின்னால் வந்தவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, அதன் பிறகு அவர்கள் தங்கள் வீட்டை நோக்கி ஓடி விட்டிருந்தார்கள். அதனைக் கண்டும் காணாமலும் எதிரே தெரிந்த இல்லங்களை கவனித்தபடி நடந்து கொண்டிருந்தான் இளவழுதி. அந்த குடியிருப்பில் ஒரே ஒரு மாளிகை மட்டும் நன்கு பெரியதாக கட்டப்பட்டு பல்வேறு அலங்காரத்துடன் கம்பீரமான தோற்றத்தில் இருந்தது. அதனை நோக்கி புரவியை நடத்திச் சென்றவனை அவ்வீட்டின் முகப்பு வாசலில் நிரம்பிக் கிடந்த வாழைகளும் அதன் அருகே அகன்ற கிளை பரப்பிக் கொண்டு எண்ணற்ற மாங்காய் கொத்துகளை தன் மேனியில் தொங்கவிட்டுக்கொண்டு இருந்த அழகிய மாமரம் வரவேற்கும் முகமாக தங்கள் இலைகளை அசைத்து நடனமாடி கொண்டிருந்தன. அந்த மாளிகையின் முகப்பு வாசலை அடைந்தபோது உள்ளே இருந்து ஐம்பது வயதைக் கடந்த பெரியவர் ஒருவர் வெளியே வந்தார். அவர் அணிந்திருந்த காஞ்சிபுரத்தின் பட்டாடைகளின் மினுமினுப்பையும் தாண்டி அவரது நெஞ்சில் ரத்தின கல் பதித்த மாலை ஒன்று ஒளிர்ந்து கொண்டிருந்தது. நல்ல உயரமும் அதற்கேற்ற உருவமைப்பும் கொண்டு கம்பீரமாக இருந்தார். அந்த வயதிலும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்ததிலிருந்து தேகப் பயிற்சியை தினமும் செய்து வருபவர் எனச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது .அவரது ஒளி மிகுந்த கண்கள் எதனையும் கவனிக்க வல்லவை என்பதையும், அகன்ற நெற்றியில் பரவி இருந்த திருநீர் பூச்சு இறைவன் மீதான பற்றை எடுத்துக்காட்டியது. அவரைப் பார்க்கும்போது குளிர்ந்த முகமாக தோன்றினாலும் தேவைப்படும்போது கடுமை காட்ட தவற மாட்டார் என அவரை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து கொண்டு மாளிகையின் வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தான் இளவழுதி.
"வாருங்கள் தம்பி. உங்களுக்காக தான் காத்திருக்கிறேன்" எனக் கூறியபடி இளவழுதியை வரவேற்றார் நாகை குடும்பு களின் தலைவர் மருதப்பக் குடும்பர்.
"வணக்கம் ஐயா" என முகம் மலர்ந்து கூறியபடி அங்கிருந்த தளை ஒன்றில் தன் புரவி மருதனை பிணைத்துவிட்டு அவரை நோக்கி நகர்ந்தான் .
மருதப்பக் குடும்பரின் மாளிகையை வெளியில் இருந்து பார்க்கும் பொழுது அத்தனை பெரிதாக தெரியவில்லை. உள்ளே நுழைந்த போது அதன் பிரம்மாண்டம் வாய் பிளக்கும்படி செய்தது. மாளிகையின் கதவுகள் அனைத்தும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டு இருந்தன. வாசலை தாண்டி உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த மரத்தால் செய்யப்பட்ட ஆடம்பரமான நான்கைந்து இருக்கைகளும், அவற்றின் எதிரே உள்ள மர ஆசனத்தில் வேலைப்பாடு மிகுந்த கண்ணாடி குவளைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தன. அவற்றின் அருகே பெரிய தட்டு ஒன்றில் பழங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. மாளிகை முழுவதும் ஆங்காங்கே இருந்த விளக்குகள் தேவைப்படும் பொழுது ஏற்றுவதற்கு தயார் நிலையில் இருந்தன. அங்கிருந்த பல்வேறு அறைகள் விதமான அலங்காரங்களும் ஒப்பனைகளும் செய்து பார்ப்பதற்கு வண்ணமயமாக காட்சி அளித்தன. மாளிகையின் இடது புறத்தில் திறந்து கிடந்த அறை ஒன்றில் நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டு இருந்தன. அதற்கு அடுத்து இருந்த அறைகளில் பல்வேறு தானியங்கள் மூட்டைகளில் அடைக்கப்பட்டு இருந்தன.
தன் மாளிகையை அணு அணுவாகப் பார்த்துக் கொண்டிருந்த இளவழியை நோக்கி "என்ன தம்பி அப்படி பார்க்கிறாய் ?"
"ஒன்றுமில்லை ஐயா ."
"இவைஅத்தனையும் காலம் காலமாக உழைத்த உழைப்பில் உருவானவை. தலைமுறை தலைமுறையாக ஏர் பிடித்து உழைத்து ஏற்றம் பெற்ற வாழ்வு இது. அடுத்தவனை அடித்து பிழைக்கும் துரோகிகளின் ஏற்றத்தைப்போல் இவை உருவானது அல்ல" அவனது மனதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதனை அடியோடு அகற்றும் நோக்கில் பேசினார் மருதப்ப குடும்பர்.
"அவ்வாறு நான் எண்ணவில்லை ஐயா. உழைப்பு ஒன்று தான் உயர்வைத் தரும், என்பதை நான் அறிவேன். எத்தர்கள் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கை எளிதாக இருந்தாலும், அத்தனை விரைவாக அவை அழிந்து விடும் என அறிவேன் ".
"நல்லது தம்பி. உன்னைப்பற்றியும் உனது குடும்பத்தை பற்றியும் இருளப்பமள்ளர் ஏற்கனவே என்னிடம் கூறியுள்ளார். உனது சகோதரரரும் பாடிகாவல் அதிகாரிமான இளமாறன் என்னை சந்திக்க விரும்புவதாக கூறியிருந்தார். அதற்குள்ளாக அவருக்கு ஏற்பட்ட பேராபத்து ஏற்பட்டதாக அறிந்தேன். இப்பொழுது அவரது உடல்நிலை எவ்வாறு உள்ளது ?".
"திங்கள் பல உருண்டோடி விட்டன. அவரது உடல்நிலை பெரிதாக மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை ."
"எல்லாம் நல்லபடியாக நடக்கும் இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு நம் கடமையை செய்வோம்'"
"நாங்களும் அவ்வாறு தான் எண்ணிக்கொண்டு இருக்கிறோம்" என்றவன் தொடர்ந்து "எனது சகோதரன் தங்களை சந்திப்பதற்காக ஓலை ஒன்றை உங்களுக்கு அனுப்பி இருந்தார் ஞாபகம் உள்ளதா ஐயா"
"ஆமாம். நான் அவர் கூறியபடி வாரியங்களின் கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன் அதற்குள் தான் அவருக்கு ஏற்பட்ட இன்னல் குறித்து தகவல் அறிந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் நிறுத்திவிட்டேன்"
"நாங்களும் அவருக்கு உண்டான இன்னலுக்கான காரணத்தை தேடி வருகிறோம் இதுவரை சரியான காரணம் கிடைக்கவில்லை உங்களை சந்தித்தால் ஏதேனும் தகவல் கிடைக்கும் என்றுதான் இங்கு வந்தேன்"
"இளமாறன் வாரியங்களின் கூட்டத்திற்கு தயார் செய்யும் படி தான் கூறி இருந்தார் அதற்கான காரணங்களை ஏதும் கோளையில் குறிப்பிடவில்லை. எனவே அவை குறித்து எனக்கு ஏதும் தெரியாது."
"தொடர்ந்து நாகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் குறித்து தாங்கள் அறிவீர்கள் தானே ஐயா"
"நானும் அவற்றைப் பற்றி கேள்விப்பட்டு கொண்டு தன் உள்ளேன் இருப்பினும் அவை குறித்து சரியான முடிவு எடுக்கும் அதிகாரம் பாடி காவல் அதிகாரியான உனது சகோதரருக்கு தான் முழு அதிகாரமும் உள்ளது."
"அவர்தான் தற்போது செயலாற்றும் நிலையில் இல்லையே அது மட்டும் இன்றி நாகையில் நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பதாக அறிகிறேன்"
"சூரிய வர்மாரின் மறைவு குறித்து குறிப்பிடுகிறாயா தம்பி"
"ஆமாம் ஐயா. இந்த பிரச்சனை உருவாகத் தொடங்கிய போது அதனை களைவதற்கு பெரும் முயற்சி எடுத்தவர் அவர்தான் அவருக்கு துணையாக இருந்து செயலாற்றியவர்தான் வைத்தியர் இருளப்பமல்லர். இப்பொழுது சூரியவர்மர் மறைவால் சோழ தேசம் பெரும் இன்னலில் உள்ளது. அதுமட்டுமின்றி நாகையின் வணிகப் போக்குவரத்து இன்னும் சில நாட்களில் முடங்கிவிடும் போல் உள்ளது. "
"நீ கூறுவது அனைத்தும் எனக்கு புரிகிறது தம்பி. அனைத்துமே சத்தியமான உண்மை. சூரிய வர்மர் மறைவு குறித்து மட்டுமின்றி தங்கள் சகோதரர் குறித்தும் அல்லது என்னால் ஆகக்கூடிய ஏதேனும் இருப்பின் தயங்காமல் கூறுங்கள் உங்களுக்கு வேண்டிய உதவி செய்ய எப்பொழுதும் காத்திருக்கிறேன்."
"மிகுந்த நன்றி ஐயா. தங்களைக் கண்டிப்பாக தொடர்பு கொள்வேன். ஏதேனும் தகவல் கிடைத்தால் எனக்கு உடனே ஓலையை அனுப்பி வையுங்கள் ஐயா"
"கண்டிப்பாக செய்கிறேன் தம்பி"
மருதப்ப மள்ளரிடம் விடைபெற்று கொண்டு புறப்பட தயாரானான் இளவழுதி. "தம்பி உணவருந்தி விட்டுச் செல்லுங்கள். " என அன்போடு அவனை அழைத்தார். அவரது அன்பிற்கு இணங்கி காலை உணவை அங்கேயே உண்டு முடித்துவிட்டு தனது புரவினின் மீதேறி நாகை நோக்கி புறப்பட்டான்.
(தொடரும்..... அத்தியாயம் 22ல்)
No comments:
Post a Comment