🐾இராஜமோகினி 🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 34 🌾சத்திரத்தில் நடந்தது விபத்தா?🌾
மாட்டு வண்டிகளையும் கூட்டு வண்டிகளையும், தனித்தனியாக வட்ட வடிவில் நிறுத்தி இருந்தார்கள் வணிகர்கள். ஆங்காங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் ஒளி அதனை தெளிவாக எடுத்துக்காட்டின. வணிக சாத்துகளின் பாதுகாவலர்கள் வண்டிகளைக் கண்காணித்தபடி அங்கும் இங்குமாக, முறை வைத்துக் கொண்டு உலாவிக் கொண்டிருந்தார்கள்.
வண்டிகளின் காளைகளை அதன் நுகத்தடியிலேயே பிணைத்து வைத்திருந்தார்கள். மாடுகளுக்கு தேவையான தீவனங்களை அள்ளிக் கொண்டு வந்து பணியாளர்கள் அதற்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வைக்கோல் தீவனத்தை மென்று அசை போட்டுக்கொண்டபடி காளை மாடுகள் இருந்தன. பணியாளர்கள் தங்களுக்கு தேவையான உணவினை தாமே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பாதுகாவலர்களும் தங்களது பணிகளுக்கு இடையே, கிடைக்கும் இடைவெளியில் உணவினை உண்டு முடித்து கொண்டிருந்தார்கள்.
விரவி வந்த குளிரும் பெய்து கொண்டிருந்த பனியும் சேர்ந்து கொண்டு உடலை ஊடுருவி குளிர்ச்சியை பரப்பிக் கொண்டிருந்தது. குளிரின் மிகுதியால் ஆங்காங்கே மரக்கட்டைகளை கொண்டு தீமூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சுற்று முடித்துவிட்டு வண்டிகளை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவ்வபோது தீயின் அருகே வந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள்.
வண்டியில் இருந்த பணியாளர்கள் கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அங்கேயே உறங்கி விட்டார்கள். ஒரு சிலர் உறக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தார்கள்.
ஒவ்வொரு வணிக குழுவாக பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான் இளம்வழுதி. கொள்ளிவாய் பிசாசுகளைப் போல் ஆங்காங்கே குளிருக்கு மூட்டிய நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. "இன்னும் இரண்டு ஒரு குழுவைப் பார்த்து விட்டால் திரும்பி விடலாம் " என நினைத்துக் கொண்டு நடந்தவனை கடைசி பகுதியில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு அவனது கவனத்தை ஈர்த்தது.
அங்கு காவல் பணியில் இருக்க வேண்டிய பாதுகாவலர்கள் ஒருத்தரையும் காணவில்லை. அவர்கள் எங்கே உள்ளார்கள் என துழாவி தேடிக் கொண்டிருந்தபோது, தொலைவில் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். "கடைசிப் பகுதியில் நெருப்பு எரியும் பொழுது, இவர்கள் ஏன் இத்தனை தொலைவில் வந்து குளிர் காய்கிறார்கள்?" என நினைத்தபடி கடைசி பகுதியை நோக்கி ஓடத் தொடங்கினான்.
தொலைவில் பார்க்கும் யாருக்கும் குளிருக்கு மூட்டப்பட்ட நெருப்பு போல் தெரிந்தது. ஆனால் அங்கு குளிருக்கு மூட்டப்பட்ட நெருப்பால் தீ எரியவில்லை. மாறாக மாட்டு வண்டியில் இருந்த பொருள்களுக்கு யாரோ தீ வைத்திருந்தார்கள். தீயின் நாக்குகள் சுடர் விட்டு பரவிக் கொண்டிருந்தது. வீசும் இளம் காற்றின் துணையோடு வெகு வேகமாக பரவிக் கொண்டிருந்தது. வானத்தை நோக்கி உயர்ந்திருந்த தீயின் நாக்குகளால் ஈர்க்கப்பட்ட பாதுகாவலர்கள் துடித்துக் கொண்டு ஓடி வந்திருந்தார்கள். அதே சமயம் இளம்வழுதியும் அங்கு வந்து சேர்ந்திருந்தான். தீயின் பரிமாணம் அணைக்கும் நிலையை தாண்டி விட்டிருந்தது. பாதுகாவலர்கள் என்ன செய்வதென்று அறியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பீதியுடன் நின்றிருந்தார்கள்.
"ஏன் மரம் போல் நிற்கிறீர்கள்?, சீக்கிரம் மற்ற வண்டிகளை இடம் மாற்றி அப்புறப்படுத்துங்கள். இல்லையேல் தீயின் நாக்குகள் அதனையும் பற்றிக்கொள்ளும்" என்றான் இளம்வழுதி.
அங்கிருந்த பாதுகாவலர்களும் பணியாளர்களும் காளை மாடுகளை வண்டியில் பூட்டி முடிந்த மட்டும் வெகு தொலைவிற்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
"இது எப்படி நடந்தது?, சிறிது நேரம் முன்பு வரை இங்கு எல்லாம் சரியாக தானே இருந்தது" என்றார் பாதுகாவலர் ஒருவர்.
"ஆமாம், நானும் உணவருந்த செல்லும் முன் பார்த்து விட்டு தன் சென்றேன். எல்லாம் சரியாகத்தான் இருந்தது" என்றார் மற்றொருவர்.
"வண்டியில் இருந்த அனைத்து பொருள்களும் நாசமாகிவிட்டது" என்றார் இன்னொருவர்.
"எரிந்தவை அனைத்தும் சீன தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டாடைகள்"என்றார் கூட்டத்தில் ஒருவர்.
"அப்படி என்றால் இழப்பு பெரிய அளவில் தான் இருக்கும்" என்றார் பாதுகாவலரில் மற்றொருவர்.
"இவை எந்த வணிகரின் பொருட்கள்?"என்றார் கூட்டத்தில் இருந்த குள்ளமான மனிதர்.
"தஞ்சை பகுதியைச் சேர்ந்த பெரும் வணிகருக்கு சொந்தமானது" என்றார் அவ் வண்டியின் பாதுகாவலர்.
" யாரோ நம் கவனம் திசை திரும்பும் வரை காத்திருந்து இதை செய்திருக்க வேண்டும். இல்லையெனில் இது நடந்திருக்க சாத்தியம் கிடையாது" என்றார் குள்ள மனிதர்.
"ஆமாம், கண்டிப்பாக இதை செய்தவன் வெகு தரம் சென்றிருக்க முடியாது" என்றார் வண்டியின் பாதுகாவலர்.
அங்கு பேசிக் கொண்டிருந்த அனைவரது முகத்தையும் கவனித்துக் கொண்டு வேறு யாரேனும் சந்தேகப்படும்படியான நபர்கள் உள்ளார்களா என விழிகளால் தேடிக் கொண்டிருந்த இளம்வழுதி அங்கிருந்து நகர்ந்து மற்ற வண்டிகளை பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற வணிக சாத்து வண்டிகள் எவ்வித குழப்பம் இன்றி இயல்பாகவே இருந்தன. இங்கு நடந்த சம்பவம் அதற்குள் மற்ற வண்டிகளில் இருந்தவர்களின் காதுகளுக்கு எப்படியோ பரவி விட்டிருந்தது. அங்கிருந்து வண்டியை நோக்கி பணியாளர்களும் பாதுகாவலர்களும் சாரை சாரையாக வந்து கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய அனைவரும் தமது இடத்தை விட்டு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வண்டியை நோக்கி வந்திருந்தார்கள்.
மலைக்கோவிலில் ஏற்றப்பட்ட பெரும் தீபம் போல் கடைசியில் எரிந்து கொண்டிருந்த வண்டியின் நெருப்பு நீண்டு பரவிக் கொண்டிருந்தது. அதுவரை இதமான குளிர் காற்றாக பரவி இருந்தது மாறி, விசையோடு வீசத் தொடங்கியது. அங்கிருந்த மரங்களும் அவற்றின் போக்கிற்கு ஏற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தன. காற்றின் மிகுதியால் வண்டியில் இருந்த பட்டாடைகள் 'படீர் படீரென' வெடித்து கொண்டு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன.
இளம்வழுதி அங்கிருந்து அகன்றதும் முதல் அடுக்கில் இருந்த இரண்டாவது அறையை நோக்கி தனது விழிகளை வீசி இருந்தான் அழகன்.அவனது விழிகள் எப்போதும் அங்கேயே தவமாய் கிடந்தன. அவன் வெண்புரவி என்ன நினைத்ததோ தெரியவில்லை அவன் மேல் உரசிக்கொண்டு இருந்தது. திடீரென தனது புரவியின் கரிசனத்தால் ஈர்க்கப்பட்டவன் அதன் அருகே சென்று அதனை தடவி கொடுத்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது வணிக சாத்து வண்டிகளை கடந்து ஒருவன் பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருந்தான். அவன் நடையில் ஒரு விதமான பதட்டம் தெரிந்தது. அவனது கவனம் முழுவதும் எப்படியாவது சத்திரத்திற்குள் நுழைந்து விட துடிப்பதை அழகன் உணர்ந்து கொண்டான் போலும். அவனை பார்ப்பதை தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக புரவியின் பின்னால் மறைவாக நின்று கொண்டான் அழகன். "நல்ல வேலை நமது புரவி நம் மீது உரசியதும் நல்லதாய் போனது. இல்லையென்றால் அவன் நம்மை பார்த்திருப்பான். காரியம் கெட்டு இருக்கும். இவன் எதற்காக இப்படி பதுங்கி பதுங்கி வருகிறான், நல்ல நோக்கம் கொண்ட எவனும் இப்படி வர மாட்டானே? இவனது செயல் முறையாக தெரியவில்லை. பாடிகாவல் அதிகாரி சந்தேகப்பட்டது சரிதான் போலும். கவனமாக அவனைக் கண்காணிக்க வேண்டும்" என எண்ணிக்கொண்ட அழகன், பதுங்கிச் செல்பவனைக் கண்காணித்தபடி இருந்தான் .
ஏற்கனவே வணிக சாத்துகளில் கூடியிருந்தவர்கள் திடீரென கடைசி பகுதியை நோக்கி சாரை சாரையாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். அதனால் பதுங்கிச் செல்பவனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதற்காக காத்திருந்தவன் போல் விடுவிடு வென சத்திரத்தை நோக்கி நகர்ந்து விட்டிருந்தான். முகப்பு வாசலில் இருந்த சத்திர அதிகாரியும் அங்கு காணவில்லை. பதுங்கியவனுக்கு அது நல்ல வாய்ப்பாக போய்விட்டது. சிறிதும் தாமதிக்காமல் வேகமாக எட்டு வைத்து முதல் அடுக்கு நோக்கி நகர்ந்து விட்டிருந்தான். அவனைக் பின்தொடர்ந்து கொண்டிருந்த அழகன் சத்திரத்தின் எதிரே இருந்த மாமரத்தின் பின்னால் மறைந்து கொண்டு பதுங்கிச் செல்பவன் எங்கு போகிறான் என பார்த்துக் கொண்டிருந்தான். முதல் அடுக்கிற்கு வந்தவன் இரண்டாவது அறையின் கதவை தொட்டதும் திறந்து கொண்டது. உள்ளே சென்று சத்தம் இன்றி கதவைச் சாத்தி விட்டான். மரத்தின் பின்னால் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அழகனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டுமென்ற யோசனையில் மூழ்கி இருந்தான் .
"இப்போது என்ன செய்வது? நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கச் சொன்னார்? இங்கேயே இருந்து தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கலாமா? அல்லது அந்த அறையில் என்ன நடக்கிறது என்று அருகில் சென்று பார்க்கலாமா?, என்ன இது ஒரே குழப்பமாக உள்ளது?, நாம் முயன்று தான் பார்க்கலாமா?, அது பாடி காவல் அதிகாரியின் உத்தரவை மீறியது போல் ஆகாதா? ஆம் கண்டிப்பாக மீறியது போல் தான் ஆகும். ஒருவேளை அறையில் இருப்பவர்கள் திடீரென வெளியேறி சென்று விட்டால் என்ன செய்வது?, அறைக்குள் எத்தனை பேர் இருப்பார்கள் என தெரியவில்லை. நாமாக ஏதாவது செய்யப் போய் , தானாக சென்று தலையை கொடுத்த கதையாகி விடப் போகிறது. இந்த நேரம் பார்த்து பாடி காவல் அதிகாரி சென்றுவிட்டாரே. அவர் இருந்தால் நன்றாக இருக்கும். சரி இப்படி எத்தனை காலத்திற்கு நாம் இருப்பது?, இப்படி யோசித்தால் என்ன?, இந்த இடத்தில் பாடி காவல் அதிகாரி இருந்தால் என்ன செய்திருப்பார்?, என யோசித்துப் பார், உனக்கு ஒரு வழி கிடைக்கும். கண்டிப்பாக அவர் அறையில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என கண்டறிய முயற்சி செய்திருப்பார். அது மட்டுமின்றி அவர்களை பிடிக்கவும் முயற்சி செய்திருப்பார். நாம் ஏன் அந்த வேலையை செய்யக்கூடாது? " என தன் மனதிற்குள் பலவாறாக யோசித்தபடி இருந்தான் அழகன். அவன் மனம் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைத்தது போலும் கிடைக்காதது போலும் இருந்திருக்க வேண்டும் ஒரு விதமான குழப்பத்தில் இருப்பதை அவன் முகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மாற்றங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
"அறையில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்து விடலாம்" என்ற முடிவுக்கு வந்த அழகன், சுற்று முற்றும் பார்த்துவிட்டு சத்திரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான் .
சத்திரத்துக்குள் நுழைந்திருந்த அழகன், பதுங்கியவனைப் போல் அல்லாமல் கம்பீரமாக நடந்து கொண்டிருந்தான். விடு விடு வென முதல் அடுக்கு நோக்கி நகர்ந்து விட்டிருந்தான். படிகளில் ஏறியவன் இரண்டாவது அறையில் ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதா என பார்த்தபடி மேலேறிச் சென்றிருந்தான். இரண்டாவது அறையின் வாசலில் நின்று உள்ளே ஏதேனும் சத்தம் கேட்கிறதா என காதுகளை தீட்டிக்கொண்டு கவனிக்க தொடங்கினான். ஒரே நிசப்தமாக கிடந்தது. "என்ன இது? இந்த அறைக்குள் தானே புகுந்தான். அதற்குள்ளாகவா உறங்கி விட்டான்? நம்ப முடியவில்லையே" என யோசித்தபடி இரண்டாவது அறையின் சாளரத்தை நோக்கி நகர்ந்து உள்ளே ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தான். அறை முழுவதும் இருள் பரவிக் கிடந்ததால் ஒன்றும் தெரியவில்லை.
தனக்கு நேர விருந்த ஆபத்தை அவன் உணராமல் பார்த்துக் கொண்டிருந்தான் அழகன்.
(தொடரும்.... அத்தியாயம் 35ல்)
No comments:
Post a Comment