🐾இராஜ மோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 27 🌾கயல்விழியால் தீட்டிய காவியம்🌾
இளம்வழுதியின் இதயம் படபடவென சிறகடிக்கத்து கொண்டிருந்தது. இளம் நங்கைகளின் குறும்பு அவன் மனதில் ஏதேதோ நினைவுகளை எழுதிக் கொண்டிருந்ததோடு, நினைவுப் பேழையின் முகவரியை மயிலிறகால் வருடி விட்டுச் சென்று இருந்தனர். முன் எப்போதும் இல்லாத கவித்துவம் உள்ளே கனன்று கொண்டிருக்கவேண்டும். முகத்தில் அத்தனை பொலிவும் மொத்தமாய் வந்து ஒட்டிக்கொண்ட குதூகலத்தில் ததும்பிக் கிடந்தது. உள்ளுக்குள் உருவான புயல் ஒன்று கரை தேடி அலைந்து கொண்டிருந்ததோ என்னவோ இராஜராஜர் ஆதுரசாலையில் நுழைந்திருந்தான்.
நீண்டு கிடந்த வானத்தை ஒரே மூச்சில் நீந்தி, அதன் நீள அகலங்களை பார்த்து விடும் பரபரப்பில், அலை அலையாய் தண்ணொளியை பரப்பியவள், ஆதவனை துரத்தி அடித்து விட்டு ஆட்சியைப் பிடித்திருந்தாள் முழுமதி. பகல் முழுதும் போதாகி, இரவில் மலரும் அள்ளி மலராய் காத்திருந்தவள், கனிந்து மலர் தொடுக்கும் மாறனாய் மாறியதாலோ என்னவோ, இதயக் கதவும் திறக்கும், பண்ணிசைப் பாடகனும் வன்னிசையை வாசித்த குற்றமாய், பூசித்தவள் நேசித்ததனால் சொன்னாள்.
"ஏனடி, இருந்தாலும் இத்தனை அழுத்தம் கூடாதடி"
"ஏனம்மா அப்படி கூறுகிறீர்கள்?"
"இம்மென்றால் எட்டி விடும் தூரம் தான், இருந்தும் ஏனடி? இத்தனை தாமதம்?"
"தூரம் துதிப்பவருக்கு இல்லை. பாரம் நேசிப்பவர்களுக்கு இல்லை. தங்களுக்கு தெரியாதா?"
"இருந்தும், ஏனடி இந்த வேதனை?"
"அட்டி இன்றி பெறுவதற்கும், அலர் தூற்றாமல் இருப்பதற்குமான காரணமாகத்தான் இருக்கும்."
"சித்திரங்கள் எழுதிய பின் இந்த விசித்திரங்கள் ஏனடி?"
" கற்பனையால் உண்டான காவியங்கள் அனைத்தும் காலத்தின் நினைவுகளை மட்டும் தான் பேசும். ஒப்பனையே இல்லாததால் கற்பனைகள் தூரம் போனது போலும்"
"பார்த்துத் தான் எழுத நினைக்கிறது, இந்தப் பாவி மனம்"
"மனம் கோர்த்து மாலையாகி விட்ட பின்பு சினம் கோர்த்து சித்திரம் எழுதுவது ஏனம்மா?"
"போடி, என்னைப் பற்றி தெரிந்த பின்பும் பொல்லாத கோட்டிக்காரியாய் பேசுவது ஏன்?"
"அன்பிற்கு அவரும், பண்பிற்கு நீங்களுமாய் இருக்கையில் ஏன் இந்த வேதனையம்மா?"
"முகம் காண முகவரி தேடுகிறது."
"விடையாய் வருவார் பாருங்கள்"
"கேள்வியைத் தேடாதபோது, விடை எங்கிருந்து வரும்?"
"பொறுமையாய் காத்திருங்கள், கவிதையாய் வருவார்."
மூலிகைத் தோட்டத்தின் அருகில் முகிழ்ந்திருந்த செவ்வந்தி, முல்லை, இருவாச்சி, மரமல்லி மலர்களின் நடுவே பொய்கையில் மலர்ந்த தாமரையாய் மனம் வீசிக்கொண்டிருந்தாள் சாளுக்கிய இளவரசி மதிமோகினி. தும்பைப் பூவாய் அவளருகில் அவள் தோழி குழலி.
முழுமதி தீட்டிக் கொண்டிருக்கும் மோகன ஓவியத்திற்கு இணையாக யாழிசைத்துக் கொண்டிருந்தாள், கவிதையே தன்னை எழுதிக் கொள்ளச் செய்யும் கட்டழகி . அன்று காலை அரும்பாகி மாலை மலர்ந்திருந்த மைதடங்கன்னியின் வதனம் வாடிக்கிடந்தது. அவள் அருந்தோழி குழலி எத்தனைதான் இதமாய் சொன்னாலும் பண்ணிசைக்கும் கவிதை மொழியாள் ஏற்றுக்கொள்ளும் நிலை கடந்திருந்தாள்.
வானக் கடலை நீந்தி கடக்க முயன்று சோர்ந்து விட்ட முழுமதியால் அயர்வின் மிகுதியால் ஆதூரசாலையை எட்டிப் பார்த்தவள் மிரண்டு போனாள் "இது என்ன? பூமியில் ஒரு பூரண நிலவு ஒளிர்கிறது" என எண்ணினாள் போலும். விழுந்தடித்துக் கொண்டு விருட்டன மேகப் பொதிக்குள் மூழ்கத் துடித்தவளே 'மினுக் மினுக்கு' என ஒளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திர தேவதைகளின் நகைப் பொலியால் மேகத்தைப் போர்த்திக் கொண்டாள் முழுமதியாள்.
வானின் நிலா, வையகத்தில் உலா வந்து, தளிர் கரங்களால் யாழினை மீட்டிக் கொண்டிருந்தாள். அலை அலையாய் கிளம்பி, தழும்பித் தாலாட்டிக் கொண்டிருந்தது யாழின் நாதம். அடியில் தொடங்கி மத்திமத்தில் கலந்து உச்சத்தை அடைந்த மோகன ராகம் கட்டி இழுத்து வந்திருந்தது கவிதையின் முகவரியை. ஆம். கன்னியின் வதனத்தை மொய்க்கும் வண்டாய் மாறி இருந்தான் இளம்வழுதி. ஏதேதோ நினைவுகளில் ஏகாந்தத்தில் லயத்து இருந்தவள் எதிரே வந்த முகவரியால் விக்கித்துப் போய் கயல் விழிகள் இமைக்க மறந்து தவித்த போது, இதயக்குதிரை படபடவென சிறகடித்து கொண்டிருந்தது.
"இடையில் நமக்கு என்ன வேலை?" என எப்போதோ நகர்ந்திருந்தாள் குழலி.
சிறகடித்த இதயத்தை சிறைபிடித்த துணிவில் "ஏது புதிதாய் இருக்கிறது? உபதளபதி அவர்களுக்கு ஏழையின் ஞாபகம் எல்லாம் இருக்கிறதோ?"
இதழ் பிரித்து மலர்ந்த கமலத்தை இதயத்தில் சேர்த்து விட்ட குளிர்ச்சியில் "ஏழைக்கு அத்தனை துணிவேது தேவி"
"தங்கள் துணிவு தான் நாடே அறியுமே. "
"எதைக் கூறுகிறீர்கள் தேவி?"
"ஆகா. ஏதும் தெரியாதவர் போல் எத்தனை சாதுரியமான பேச்சு. உப தளபதி அல்லவா, சொல்லவா வேண்டும்"
"மன்னிக்க வேண்டும் தேவி. தாங்கள் உண்மையில் எதைக் கூற வருகிறீர்கள் எனக்கு புரியவில்லை."
"தெரிந்திருந்தும் என்னை சோதிக்க எண்ணுகிறீர்கள் போலும்"
"இல்லை தேவி. புரியாமல் தான் கேட்கிறேன்".
"சூரியவர்மரின் மாளிகையில் நடந்த சாகசம் ஒன்று போதாதா, உங்கள் புகழைப் பாட."
"அதில் அப்படி என்ன பிரமாதமாய் நடந்து விட்டது தேவி."
"ஏன் உங்களுக்கு அதனால் ஒன்றும் கிடைக்கவில்லையா...." கோவை பல அதரந்தனில் கிள்ளை மொழி பேசினாள்.
'களுக், களுக்'கென அப்படியும் இப்படியும் தாவிய, கயல்விழியின் கவிதை மொழியால் கட்டுண்டு கிடந்த இளம்வழுதி " என்ன சொன்னீர்கள் தேவி" என்றதும், அவன் விழி எழுதிய ஓவியத்தால் நாணமடைந்தாள் இராஜமோகினி.
"தேவி! தாங்கள் ஏதோ கூறினீர்கள்."
"ம்ம்ம்" என்ற சத்தம் மட்டும் சிறகடித்தது.
அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
பூமியின் பூரண நிலவின் குளிர்ச்சியால், மேகத்தை துடைத்து விட்டு வானத்தில் மீண்டும் தனது ஆட்சியை தொடங்கியிருந்தால் வான்மதி.
குணக்கடலிலிருந்து கிளம்பிய குளுமையான காற்று, பொன் வண்டுகளின் ரீங்காரம், இருளைக் கிழிக்கும் மின்மினி பூச்சிகளின் ஒளியால், ஒப்பனை பூசாத சித்திரங்களை தோற்கடிக்கும், மெல்லிய புன்னகையை இதழில் தவழ விட்டபடி கயல்விழி உயர்த்தினாள் இராஜமோகினி.
இதுவரை இதழ்கள் பேசிய மொழிகளை தோற்கடிக்கும் வேகத்தில் விழிகள் நான்கும் பேசிக் கொண்டன.
மௌனத்தின் கதவை உடைத்த இளம்வழுதி "தேவி" என்றான்.
"ம்ம்ம், கேட்கிறது. கூறுங்கள்"
"தாங்கள் இப்போது பூரண நலம் தானே" எப்படி தொடங்குவது என தெரியாமல், இப்படி ஆரம்பித்தான்.
"ஏன். அதற்குள் இப்படி ஒரு கேள்வி?"
"தங்கள் இடையில் பலத்த காயம். அதனால் கேட்டேன்?"
"ஓ.... அப்படியா. அதனால் தான் தாங்கள் அடிக்கடி வந்து ....." என முடிக்காமல் விட்டாள்.
"இல்லை தேவி. " என்றவன் அவனே தொடர்ந்து"தங்கள் நலம் பற்றி நேரில் வினவ ஆசைதான். இருப்பினும் ஊரார் என்ன பேசுவார்களோ என்பதால் தவிர்த்து விட்டேன்."
"ஏன். அந்த ஊரார் இப்பொழுது எங்கே போனார்கள்?"
"அது வந்து....."
" உப தளபதிக்கு எத்தனையோ பணிகள் இருக்கும். எமது நலன் அதில் எம்மாத்திரம்...."
" அப்படி நான் என்றுமே எண்ணியதில்லை தேவி" என கூறியவன் தவிப்பதை ஓரவிழியால் பார்த்து ரசித்துக் கொண்டாள்.
"இருக்கட்டும், இருக்கட்டும். தாங்கள் பதற வேண்டாம்" என்றாள் பொங்கி வந்த தனது சிரிப்பை ஒரு வழியாய் அடக்கி இருந்தாள்.
"தேவி"
"கூறுங்கள் உபதளபதியாரே!"
"இன்று நாகையில் நடப்பது எல்லாம், தாங்கள் அறிவீர்கள் தானே?"
"ம்ம்ம். அதற்கென்ன இப்போது?"
"சதிகாரர்களின் சாதுரியமான சாகசத்தால், ஒட்டுமொத்த தேசமும், பெரும் பயத்தில் உள்ளது."
"அதனால் என்ன?, அதனை சரி செய்யத்தான் தாங்கள் உள்ளீர்களே."
"இல்லை தேவி. தாங்கள் இங்கு சூரிய வர்மரை என்ன காரணத்தால் சந்திக்க வந்தீர்கள்?"
"அவை தான் ஏற்கனவே குழலி கூறி இருப்பாளே!"
"ஆமாம் தேவி. இருப்பினும் அவர் அறியாத வேறு ரகசியங்கள் ஏதும் உள்ளதா? அதற்காகவே கேட்டேன்"
"அவள் அறியாத ரகசியம் ஏதும் என்னிடத்தில் இல்லை. என் உயிரில் பாதி அவள்." என்றவள் அவனை நோக்கினாள்.
"அப்படியானால் நல்லது தேவி"
"சூரியவர்மர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்ததா?"
"இதுவரை இல்லை தேவி. நான் தேடி வருகிறேன்."
"நீங்கள் ஏன் நெல்லுக்கடை வீதி, இருட்டு பள்ளம் போன்ற இடங்களில் தேடிப் பார்க்கக் கூடாது"
"நானும் அவ்வாறான முடிவினில் தான் முதலில் நெல்லுக்கடையை நோக்கி சென்று கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அங்குள்ள முத்து மாலை அங்காடியில் தங்களைப் போல் இரு இளம் நங்கைகளின் உரையாடலால், உங்களது நினைவு என்னுள் எழுந்தது. அதன் பிறகு இங்கு வந்தபோது யாழின் மோகன இசை தங்களை நோக்கி இழுத்து வந்து விட்டது." தனது விழிகளை அவளது கயல் விழியில் சுழல விட்டபடி கூறினான்.
"அத்தனை இனிமையாக வா இருந்தது? எனது யாழிசை?"
"இசை கேட்பது என்றாலே இன்பம் தானே. அதிலும் தாங்கள் இசைத்தால் கேட்கவா வேண்டும்?"
"அப்படி என்றால் கேட்க மாட்டீர்களா?" என்றாள் குறும்பாக.
"தேவி, இந்த ஏழைக்காக , ஒரே ஒரு பண்ணிணை இசையுங்களேன் "
கயல் விழிகளை உருட்டியபடி அவளது தளிர் கரங்களில் தவழ்ந்த யாழை மீட்டியபோது, யாழின் இசை யுக யுகமாய் கடந்து சேர்த்து வைத்த கவிதைகளின் கானமாய் பொலிந்து கொண்டிருந்தது. இருவருக்குமான தூரத்தை இசை கடந்திருந்தது. அவள் விழி தீட்டிய ஓவியத்தை, விரல் மீட்டி காவியம் ஆக்கியிருந்தது. காலத்தை கடந்திருந்த அவர்கள், நேரத்தை எப்போதோ நீந்தி கடந்து விட்டிருந்தார்கள். இருவரும் இதம் தரும் சுகம் தரும் பண்ணினை ரசித்து லயித்திருந்தனர்.
(தொடரும்..... அத்தியாயம் 28ல்)
No comments:
Post a Comment