🐾இராஜமோகினி 🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 24🌾 யார் அந்த துரோகி?🌾
ஊர் குடும்பில் உள்ள மக்கள் அனைவரும் பெரியவரின் பேச்சால் கொதித்தெழுந்து விட்டார்கள். அவர் கூறும் ஒவ்வொன்றும் நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தது. எத்தனை விளக்கி கூறியும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதைப் போல் பிடிவாதமாக அவர் கூறியதையே கூறிக் கொண்டிருந்தார். அதனால் அங்கிருந்த மக்கள் அவரை அடித்து கொலை செய்யும் அளவிற்கு சென்று விட்டிருந்தார்கள். நல்லவேளை இளம்வழுதி அதனை தடுத்து நிறுத்தி இருந்தான்.
"நீங்கள் கூறியது போல் விளைச்சல் இல்லாத காலங்களில் வரி விதிக்க கூடாது என்பதை வேண்டுமானால் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் இவர்கள் செலுத்த வேண்டிய பிற வரிகளை கட்டாயம் பாக்கி இல்லாமல் கட்டித்தான் ஆக வேண்டும்"என்றார் பெரியவர்.
"அப்படி இவர்கள் கட்டாமல் வைத்திருக்கும் வரிகள் என்னென்னவென்று விளக்கமாகக் கூறுங்கள்"என்றான் இளம்வழுதி.
"அப்படி கேளுங்கள்." என்றவர் ஓலையில் உள்ள விவரங்களை படிக்கத் தொடங்கினார் "வால மஞ்சாடி, புறவு வரி யெனும் நிலவரி, சுடுகாட்டுகுப் போகும் வழி மீதான வரி, ஊர் நிலத்து ஊடறுத்துப்போன வாய்க்கால் பயன்பாட்டு வரி, நந்தவனம் வரி, கடைத்தெரு வரி, உவர் நிலம் வரி என பல வரிகள் பாக்கி வைத்துள்ளார்கள். இவை யாவும் நீண்ட காலம் இவர்கள் கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வந்து உள்ளார்கள். இதற்காகவே இவர்கள் கிராமத்தை விற்று, வரியை கட்ட செய்யும் அதிகாரம் எமக்கு உள்ளது" என்றார் பெரியவர்.
"அடேய் உன்னை இன்று அடித்து கொல்லாமல் விடமாட்டேன்" எனத் துள்ளி குதித்து, பெரியவரை நோக்கி பாய்ந்து இருந்தான். அவனுக்குத் துணையாக வந்த தலைப்பாகை கட்டியவனும் வெறி பிடித்துப் போய் பெரியவரை நோக்கி பாய்ந்திருந்தான். இடையில் புகுந்து அவ்விரு வரையும் தடுத்து நிறுத்தி இருந்தான் இளம்வழுதி.
"என்னை சிறிது நேரம் விடுங்கள். அவனை நைய்ய புடைத்தால் தான் என் ஆத்திரம் அடங்கும்."என கூறியபடி இளம்வழுதியிடம் இருந்து திமிறிக் கொண்டிருந்தான் குட்டையன்.
"உண்மையில் இவன், கருமம் ஆராயும் அதிகாரி தானா என்ற சந்தேகம் உள்ளது?" என்றான் இளைஞன்.
"ஆமாம்! நீ கூறுவதும் சரிதான். இதுவரை இல்லாத சட்டத்தை அல்லவா இவன் கூறுகிறான். இவன் வாயில் இருந்து வந்த அனைத்தும் வடிகட்டின பொய்யாகத் தான் இருக்க வேண்டும்" என்றான் தலைப்பாகை கட்டியவன்.
"சிறிது நேரம் பொறுமையாக இருங்கள். " என்றான் இளம்வழுதி.
"எத்தனை நேரம் இவன் பேசுவது கேட்டுக் கொண்டிருப்பது. நீங்கள் மட்டும் வராமல் இருந்தால், இவனை வெட்டி அங்குள்ள வேப்ப மரத்துக்கு அடியில் புதைத்திருப்பேன். அவன் பேசியதை கேட்டீர்கள் அல்லவா. அவற்றில் ஒன்றாவது நியாயப்படி இருந்ததா என்ன? அத்தனையும் வடிகட்டின பொய்" என்றான் குட்டையன்.
"நீங்கள் கூறுவது அனைத்தும் சத்தியமான உண்மை ஐயா. வால மஞ்சாடி, புறவு வரி யெனும் நிலவரி, சுடுகாட்டுகுப் போகும் வழி மீதான வரி, ஊர் நிலத்து ஊடறுத்துப்போன வாய்க்கால் பயன்பாட்டு வரி, நந்தவனம் வரி, கடைத்தெரு வரி, உவர் நிலம் வரி என எந்த வரியும் தாங்கள் கட்டத் தேவையில்லை. ஏனெனில் இவை அனைத்தும் காலம் காலமாக வரி விலக்கு பெற்ற உங்கள் உரிமைகள். அதனைப் பறிக்க யாராலும் முடியாது. அப்படி ஒரு உத்தரவை இதுவரை யாரும் பிறப்பித்ததும் கிடையாது. அப்படி இருந்தும் பெரியவர் இவ்வாறு கூறுவது நீங்கள் கூறுவது போல் இவர் நடத்தையின் மீது சந்தேகம் எழுகின்றது." என இளம்வழுதி அவர்களிடம் கூறிக் கொண்டிருக்கும் போது பெரியவர் தமக்கு நேர விருந்த பேராபத்தை எண்ணி கூட்டத்தை விட்டு நழுவ தொடங்கினார்.
"அங்கே பாருங்கள்! அந்த அயோக்கியன் நம்மிடமிருந்து தப்பித்து ஓட பார்க்கிறான். விடாதீர்கள் அவனைப் பிடியுங்கள்"என்றான் இளைஞன்.
ஊர் நத்தத்தை விட்டு ஓட்டம் பிடித்த பெரியவரை அங்கிருந்த மக்கள் சுற்றி வளைத்து பிடித்து, குண்டு கட்டாக தூக்கி வந்து, மீண்டும் பழையபடி வேப்ப மரம் அருகே நிறுத்தி விட்டார்கள்.
"உண்மையானவன் என்றால் ஏன் ஓட்டம் பிடிக்கிறான்.?"என்றான் தலைப்பாகை கட்டியவன்.
"அதுதானே. இவன் ஏமாற்றுக்காரன்."என்றான் குட்டையன்.
"இத்தனை நேரம் பொறுத்துக் கொண்டீர்கள். இன்னும் சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள்."எனக் கூறியவன் பெரியவரை நோக்கி சென்றான் இளம்வழுதி.
"தாங்கள் போட்ட நாடகம் இத்தோடு முடிவுக்கு வந்து விட்டது. உண்மையை ஒத்துக் கொண்டால் இந்த மக்களிடம் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் சிறிய அளவிலான தண்டனையோடு. இல்லையெனில், இவர்கள் உங்களை அடித்து கொன்று விடுவார்கள். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறது அல்லவா?"என்றான் இளம்வழுதி பெரியவரிடம்.
தன்னை சூழ்ந்து இருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து உண்மையில் அவருக்கு உள்ளுக்குள் பெரும் பயம் உண்டாயிருந்தது. அதை அவரின் வியர்த்துப்போன முகமே காட்டி கொடுத்தது.
"இன்னும் என்ன தயக்கம். யார்? என்ற உண்மையை கூறி விடுங்கள்"என்றான் இளம்வழுதி.
அங்கிருந்த மக்களை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு தயங்கி தயங்கி பேசத் தொடங்கினார் "நான் ஒரு சாதாரண திருடன் ஐயா. என் வயிற்றுப் பசிக்காக அவ்வபோது சிறிய சிறிய திருட்டை செய்து பிழைத்து வந்தேன். என்னிடம் ஒருவன் வந்து கருமம் ஆராயும் அதிகாரியாகச் சென்று பல்வேறு இடங்களில் நடைமுறையில் இல்லாத வரிகளை கூறி மக்கள் அவற்றைக் கட்ட வேண்டும். இல்லையேல் அவ்வூரை நான் விற்றுத்தான் கட்ட வேண்டும் என வற்புறுத்தி செய்யும்படி தூண்டினான். நான் அவ்வாறு செய்தால் எனக்கு ஒரு மா நிலம் எழுதி வைப்பதாக சத்தியம் செய்தான்....." என பெரியவர் கூறிக் கொண்டிருக்கும் பொழுது, "என்னது இதுபோன்ற அநியாயங்களை செய்தால் ஒரு மா நிலம் கிடைக்கும் என்று கூறினானா....? நீயும் அதற்கு ஆசைப்பட்டு இங்கு வந்து விட்டாய்?"என்றான் கடும் கோபத்தில் குட்டையன்.
"ஏன் அய்யா, யார் வேண்டுமானாலும் வந்து எதை வேண்டுமானாலும் கூறினால் நீங்கள் யோசிக்காமல் செய்து விடுவீர்களா? அதன் பலா பலன்களை எண்ணிப் பார்க்கவில்லையா? "என்றான் இளம்வழுதி.
"இன்னும் எத்தனை காலம்தான் இப்படியாக வாழ்வது. தானாக தேடி வந்த செல்வத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும். எனத் தோன்றியது. அப்படி செய்துவட்டேன்". என்றார் பெரியவர்.
"நீங்கள் செய்த காரியத்தால் உங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை பார்த்தீர்கள் அல்லவா. உயிரோடு இருந்தால் தானே அவன் தருவதாக சொன்ன நிலம் உங்களுக்கு கிடைக்கும். நீங்களே இல்லாவிடில் அதனைப் பெற்று என்ன பயன்?" என்றான் இளம்வழுதி.
"இதையெல்லாம் நான் யோசிக்கவில்லை." என்றார் பெரியவர்.
"கருமம் ஆராயும் அதிகாரி இப்பதவியில் உள்ளவர் சோழ மன்னரால் நேரடியாக ஆணை பெற்று வரக்கூடியவர். அப்படியான ஆணை எதுவும் உங்களிடம் உள்ளதா? இவ்வாறு யாரேனும் கேட்டால் என்ன செய்திருப்பீர்கள்." என்றான் இளம்வழுதி.
தன் இடையில் இருந்து, ஓலை ஒன்றை எடுத்து இளம்வழுதியின் கையில் கொடுத்தார். அதில் சோழ மன்னரின் முத்திரையும் இடம்பெற்று இருந்தது. அதைப் பார்த்த இளம்வழுதிக்கு சிறிது நேரம் பேச்சு வரவில்லை.
"ஏன் தம்பி. ஓலையை பார்த்ததும் பேச்சற்று காணப்படுகிறீர்கள். அப்படி அதில் என்ன தான் உள்ளது" என்றான் குட்டையன்.
"கூறுகிறேன் ஐயா. இவ் ஓலையில் உள்ள முத்திரையின் மேல் உள்ள கைச்சாத்து காலம் சென்ற சோழ மன்னர் வீர ராஜேந்திரர் அவர்களுடையது."என்றான் இளம்வழுதி.
"பார்த்தீர்களா. இறந்து போன மன்னரின் பேரில் போலியான ஓலை ஒன்றை தயாரித்து, அதில் அவரின் கைச்சாத்தை இட்டு எப்படிப்பட்ட நயவஞ்சகமான வேலையை செய்துள்ளார்கள் பார்த்தீர்களா."என்றான் குட்டையன்.
" இதைப் பார்க்கும் யாரும் வீர ராஜேந்திரர் மீது அவதூறான குற்றச்சாட்டு அல்லவா எழும். இது எத்தனையோ பேராபத்தை உண்டாக்கக்கூடிய ஒன்று. இதன் மூலம் நாட்டில் பெரும் கலகம் உண்டாகும். அதனால் நாடே வெறும் சண்டை காடாக மாறி அமைதியற்று போய்விடும். அப்புறம் எதிரிகளுக்கு கொண்டாட்டம்தான். "என்றான் இளம்வழுதி.
" ஆமாம் தம்பி! நீ கூறிய அத்தனையும் சத்தியமாக நடந்தே தீரும். இப்பொழுது கூறுங்கள் இவனை சும்மா விடலாமா?"என்றான் தலைப்பாகை கட்டியவன்.
"இவர் வெறும் அம்புதான். எய்தவன் வேறெங்கோ உள்ளான். அதனைக் கண்டறிய வேண்டும்." என்றவன் "தங்களுக்கு தெரிந்த மற்ற விவரங்களையும் கூறுங்கள்" என்றான் இளம்வழுதி.
"எனக்கு வேறு ஒன்றும் தெரியாது . அவர்கள் கூறியதை செய்தேன். அவ்வளவுதான்."என்றார் பெரியவர்.
"தங்களிடம் இக்காரியத்தை செய்யச் சொன்ன அந்த நபரின் பெயர் என்ன?, அவனை எங்கு சந்தித்தீர்கள்? காரியம் கைகூடினால் உங்களை எங்கு சந்திப்பதாக கூறினான்"என பெரியவரிடம் வினவினான் இளம்வழுதி.
"தஞ்சை புறம்பாடியில் தான் அவனை சந்தித்தேன். முதலில் நான் இதனை செய்ய ஒத்துக் கொள்ளவில்லை. அவன் மீண்டும் மீண்டும் என்னிடம் வந்து செய்யக் கூறினான். முதல் கட்டமாக இருபது மாடை கொண்ட பையை என்னிடம் கொடுத்தான். காரியம் நிறைவேறினால் ஒரு 'மா ' நிலம் எழுதித் தருவதாகவும் சத்தியம் செய்தான். நானும் வேறு வழி இன்றி ஒத்துக்கொண்டேன். இந்த காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என விளக்கி கூறினான். அதன்படி தான் நான் செய்தேன். காரியம் முடிந்ததும் என்னை தஞ்சை புறம்பாடியில் உள்ள....." என கூறிக் கொண்டிருந்த பெரியவர் நெஞ்சில் எங்கிருந்தோ இருந்து பாய்ந்திருந்த கொடிய நஞ்சு தடவிய அம்பு தைத்திருந்தது.
கூடியிருந்த மக்கள் அனைவரும் அம்பு வந்த திசையை நோக்கி பார்த்த போது கரிய குதிரையின் மீது முகமூடி அணிந்த ஒருத்தன் காற்றினும் கடிதாய் பாய்ந்தோடிக் கொண்டிருந்தான்.
"அடடே. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே."என்றான் குட்டையன்.
"இப்பொழுதுதான் உண்மைகளை கூறத் தொடங்கி இருந்தான். அதற்குள்ளாக இப்படி ஆகிவிட்டது."என்றான் தலைப்பாகை கட்டியவன்.
"எதிரிகள் மிகவும் தெளிவாக உள்ளார்கள். அவர்கள் எந்தவிதமான ஆதாரத்தையும் விட்டு வைப்பதில்லை. இவைதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் அவர்கள் எப்படியாவது தப்பி விடுகிறார்கள்."என்றான் இளம்வழுதி.
"என்ன கூறுகிறாய் தம்பி. இவர்களை முன்பே அறிவாயா?" என்றான் குட்டையன்.
"ஆமாம் ஐயா. இவர்களால் எனது மொத்த குடும்பமும் இன்று அழிந்து விட்டது." என துக்கம் தொண்டையை அடைத்ததால் அவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
"கவலைப்படாதீர்கள் தம்பி. எல்லாம் சரியாகிவிடும். பல நாள் திருடன் ஒருநள் அகப்படுவான். "என்றான் தலைப்பாகை கட்டியவன்.
"சதிகாரர்களின் சதி செயல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக பெருகிக்கொண்டே தான் உள்ளது அதனை தடுக்கும் காரியத்தை விரைந்து செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளது. ஆகவே நான் விடைபெறுகிறேன். " என்றவன் பெரியவரின் அருகே சென்று பார்த்தபோது அவர் உயிர் எப்போதோ பிரிந்து விட்டிருந்தது. அவர் உடையை சோதனை செய்து வேறு ஏதேனும் ஆதாரம் கிடைக்குமா என்று பார்த்தான். போலியான பல்வேறு ஓலைகள் மட்டுமே இருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டவன் "இவரின் உடலை அடக்கம் செய்து விடுங்கள்"எனக் கூறிவட்டு அங்கிருந்து புறப்பட்டான் இளம்வழுதி.
(தொடரும்... அத்தியாயம் 25ல்)
No comments:
Post a Comment