🐾இராஜமோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 🌾யார் இந்த நங்கை.....?🌾
இரவின் இரண்டாம் சாமத்தின் மெளனத்தை சுமந்த மென்காற்று திறந்து வைத்த சாளரத்தை கடந்து தவழ்ந்து வந்து தாலாட்டியது. எங்கோ தூரத்தில் செம்போத்து ஒன்று இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு சத்தமிட்டது. இருள்சூழ்ந்த சூரியவர்மரின் மாளிகையில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஓரே சிறுவிளக்கின் ஒளியால் ஓரளவு வெளிச்சம் பட்டு இருளை துடைத்து கொண்டு இருந்தது.
சிறிது நேரத்திற்கு முன்பு நடந்து முடிந்த யுத்ததால் உண்டான குருதிவாடை அறைமுழுவதும் பரவிக்கொண்டுருந்தது. இதற்கிடையே மேற்கு பக்க அறை ஒன்றில் இடைப்பகுதியில் குருதிபெருக்கோடு அறைவாசலை பார்த்தவண்ணம் கிடந்தாள், சொப்பனத்திலும் கண்டிராத பேரழகு மங்கை. அவளை பார்த்த உடனே மயங்கி விழுந்தாள் உடன் வந்த இளம்பெண். இவை யாவற்றையும் மறந்துவிட்டு அவர்களுக்கு அடுத்து செய்ய வேண்டிய உதவியை கூட செய்யாமல் உறைந்த சிலையாக நின்றிருந்தான் இளவழுதி.
முதன் முதலாக இத்தனை அருகாமையில் அழகின் மொத்த இலக்கணம் இவள்தான் என்பதுபோல் ஒருத்தியை நேரில் காண்போம் என கனவிலும் நினைத்தானில்லை. காண்பதென்ன கனவா? என்ற எண்ணம் அவனுக்கு உண்டானதில் தவறொன்றுமில்லை.
முன்னாள் பிறந்த காளிதாசனும் பின்னால் வரப்போகும் கம்பனும் இவளை ஒருவேளை பார்த்திருந்தால் அவர்களின் கவிதைமழையில் குளித்திருப்பாள் இந்நங்கை. ஓராயிரம் காவியம் படைத்திருப்பார்களோ என்னவோ. என்ன செய்ய காலம் செய்த பிழை நம்முன் தோன்றிவிட்டால். இப்பொழுது என்ன செய்வது, இவளுக்கு எப்படி வைத்தியம் பார்ப்பது. அடடே... உடன் வந்த இளம்பெண்ணும் மயங்கி விட்டாளே, என்னசெய்ய.....? என்ற பலமான யோசனையோடு சிறிது நேரம் அப்படி இப்படி உலாத்தியவன் ஆபத்திற்கு பாவமில்லை என்ற முடிவுக்கு வந்தான் போலும். பேரழகு பெட்டகத்தை நோக்கி நகர்ந்து அவளது எள்ளுப்பூ போன்ற நாசியருகே விரல்களை வைத்து பார்த்தபோது மூச்சு இருந்தது, நன்றி ஆண்டவா என மனதிற்குள் வேண்டியவன் அவள் உடலை மெல்ல திருப்பி கிடத்தினான். சிறுவிளக்கின் ஒளியில் அவளது முகம் பூரண நிலவாக ஒளிர்ந்தது. இடையொன்று உள்ளதா என்ற கேள்விக்கு விடையாக அவள் அணிந்திருந்த வெண்பட்டு குருதிபெருக்கில் மொத்தமாக நனைந்து இதுதான் என பதில் தந்தது. அவளருகே அமர்ந்து அவளது இடையில் உண்டான காயத்தை ஆராய்ந்தான். காயம் பெரிதாக இருந்தது, இருப்பினும் நல்ல வைத்தியரிடம் சிகிச்சை பெற்றால் ஒரு திங்களில் பூரண நலம் பெறலாம். முதலில் குருதியை நிறுத்தவேண்டும் என்று எண்ணியவன் மாளிகையில் எங்கிருந்தோ தேடிப்பிடித்து ஒரு குவளை நிறைய நீரும் வெண்பருத்தி துணியொன்றையும் எடுத்து வந்தான். அவளது இடையிலிருந்த காயத்தை சுத்தம் செய்து வெண்பருத்தி துணியால் காயத்திற்கு கட்டு கட்டியபின் அவளருகே அமர்ந்து அவளது தலையை எடுத்து தனது மடிமேல் கிடத்தினான். கோவைப்பழத்தை நறுக்கி வைத்தது போன்ற அவளது அதரத்தை மெல்ல விளக்கி, கொண்டு வந்திருந்த குவளை நீரை மெல்ல புகட்டினான். தேனூறும் அதரத்தில் மெல்ல நீர் கடந்து அழகான வலம்புரி வெண்சங்கு கழுத்தின் உள்ளே உருண்டோடியது. அவளை மீண்டும் தரையில் கிடத்திவிட்டு மாளிகையின் வாயிலை கடந்து வெளியேறினான். சூரியவர்மரின் மாளிகையின் பின் பக்கம் சென்றவன் அங்கிருந்த கூட்டு வண்டியை கண்டுபிடித்து இழுத்துவந்து வாசலின் முன்பக்கம் நிறுத்தினான். வாயில் விரல் வைத்து சீழ்க்கையொலி எழுப்பியதும், அவனது ஒலிக்காகவே காத்திருந்த மருதன் கணைத்துக்கொண்டு முன்னால் வந்ததான். மருதனை கூட்டுவண்டியின் தளையில் பிணைத்துவிட்டு மீண்டும் மாளிகையின் உள்ளே சென்றான். மயங்கி கிடந்த இளம்பெண் எழுந்து தன் தலைவியின் தலையை மடியில் ஏந்தி கண்ணீர் அருவியில் நனைத்து கொண்டுருந்தாள்.
அவர்கள் அருகே சென்ற இளவழுதி "இப்போது தான் மயக்கம் தெளிந்து எழுந்தீர்களா...?" என்றான். அவனது கேள்விக்கு தலையை ஆட்டி ஆமோதித்தாள். "சரி, வாருங்கள். இவரை ஆதூரசாலைக்கு அழைத்துச் செல்லவேண்டும். ஏற்கெனவே நிறைய குருதி வீணாகிவிட்டது" என கூறியபடி பேரழகு மங்கையை கையில் தூக்கிக்கொண்டு வாசலை நோக்கி நகர்ந்தான். வாசல் வெறும் பத்து தப்படி தூரம் தான் ஆனால் அதற்குள் அவனது மனது வானத்தில் உலவும் மேகக்கூட்டத்தின் பிடியிலிருந்து வெண்மதியை மீட்டு இருக்க வேண்டும். வெண்மதியின் ஒளியழகா? இல்லை இளவழுதியின் கையில் உறையும் பேரழகின் வதனமழகா? என்ற போட்டியில் வெண்மதி வெருண்டோடி மேகப்பொதிக்குள் தன்னை புதைத்து இருந்தாள். அதனை ஆமோதிக்கும் வண்ணமாக வானத்தில் "மினுக் மினுக்" மென ஒளி உமிழ்ந்து கொண்டுருந்தது நட்சத்திர கூட்டம்.
பிறைபோன்ற அழகிய நெற்றியில் இரண்டு கருங்குழல்கள் அவளது அழகிற்கு கூடுதல் பொழிவை ஊட்டினதென்றால் இளவழுதியின் கரங்களை கடந்து அவனது பாதம்வரை நீண்டு பரவிய அலைஅலையான கார்கூந்தல் அவனது பாதத்தை தொட்டு குறுகுறுப்பை உண்டாக்கின. மாளிகையின் வாசலை கடந்து கூட்டு வண்டியை நோக்கி அவன் நடந்தபோது குளுமையான இளங்காற்று மங்கையின் இடையை தழுவியிருந்த வெண்பட்டை நீக்கியது. இளமையின் வெகுமதி அவனை பார்த்து முறைத்ததோ என்னவோ அதுவரை காத்து வந்த மானம் காற்றில் பறந்தது போலும். அவனது உடல்முழுவதும் நடுக்கம் பரவி எங்கே அவளை கீழே போட்டுவிடுவோமோ என்ற பயத்தை உண்டாக்கியது. பகைவர் நூறுபேரை தனியே எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவன்தான் ஆனால் இங்கு நிலை சொல்லும் தரத்தில் இல்லாமல் இதயத்தின் வேகம் பட பட வென அடித்துக் கொண்டுருந்தது.
உள்ளுக்குள் உண்டான உதறல் உடல் முழுதும் பரவி தர்ம சங்கடத்தில் தள்ளியது. இளவழுதியை கடந்து சென்று கூட்டு வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள் இளம்பெண். மங்கையை இளம்பெண்ணின் மடியில் கிடத்தியவன் விரைந்து வண்டியின் முன்பக்கம் ஏறி அமர்ந்து இராஜராஜர் ஆதுரசாலையை நோக்கி வண்டியை விரட்டினான். அவ்வப்போது பின்னால் திரும்பி மங்கையை பார்த்துக்கொண்டே வண்டியை செலுத்தினான்.
"யாரிவள்?, இவள் எதற்காக சூரியவர்மர் மாளிகைக்கு வந்தாள்?, மர்மநபர் ஏன் இவளை கொலை செய்ய முயல வேண்டும்?, சூரியவர்மர் மாளிகையின் நடந்த நிகழ்வுகளுக்கும் சோழ தேசத்தின் குழப்பங்களுக்கும் சம்மந்தம் ஏதேனும் உள்ளதா....?, சூரியவர்மர் என்ன ஆனார்?, அவரின் திடீர் மறைவு உணர்த்தும் செய்தி என்ன?, இல்லை அவரது உயிருக்கு ஏதேனும் குந்தகம் ஏற்பட்டுள்ளதா?, இந்த நங்கை அப்படி ஒன்றும் சாதாரணமான பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை, இவளுக்கும் சோழ தேச அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா.....? ஒன்றும் புரியவில்லை. இவள் கண்விழித்தால் தான் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அதுவரை பொறுமை காக்க வேண்டியதுதான். என பலவாறாக தன்னை தானே வினவிக்கொண்டவன் ஆதூரசாலைக்குள் வந்து சேர்ந்திருந்தான்.
பரபரப்பாக வந்து நிற்கும் கூட்டுவண்டியை நோக்கி ஆதூரசாலையின் பணிப்பெண்கள் வந்து சேர்ந்தனர். வண்டியினுள்ளே இருந்த இளம்பெண்ணையும் அவளது மடியில் கிடந்த பேரழகு நங்கையையும் கண்டதும் என்ன செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தனர் ஆதூரசாலை பணிப்பெண்கள். அழகு நங்கையை கவனமாக ஆதூரசாலைக்குள் எடுத்துச் சென்றனர். இளம்பெண்ணும் இளவழுதியும் ஆதூரசாலை பணிப்பெண்களை பின்தொடர்ந்து சென்றனர். அதற்குள் தகவல் அறிந்திருந்த வைத்தியர் இருளப்பமள்ளர் சிகிச்சை அறைக்குள் விடுவிடுவென நுழைந்து செய்ய வேண்டிய வைத்தியத்தை தொடரலானார்.
ஆதூரசாலை முகப்பு வாசலுக்கும் வைத்தியம் நடைபெறும் அறைவாசலுக்குமாக இடைவிடாது நடந்து கொண்டுருந்த இளவழுதியின் இதயம் எல்லைக்கோட்டை அடையும் புரவியின் பாய்ச்சலில் துடித்து கொண்டுருந்தது. அவனது துடிப்பையும் வைத்தியம் நடைபெறும் அறைவாசலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே மலங்க மலங்க விழித்தபடி நின்றாள் இளம்பெண்.
முழுதாய் இருநாழிகை உருண்டோடியிருந்தது....
ஆதூரசாலையின் வைத்தியர் இருளப்பமள்ளர் விடுவிடுவென அறைக்கதவினை திறந்து கொண்டு வெளியே வந்தார். இளவழுதி அவரது விழிகளை பார்த்த வண்ணமிருந்தான். "அபாய கட்டத்தை தாண்டிவிட்டாள், ஒரு திங்கள் பூரண ஓய்வு தேவை. " என்றார் இருளப்பமள்ளர்.
"ஒரு திங்களா.....என்ன சொல்கிறீர்கள் அய்யா." என்றாள் இளம்பெண்.
"ஆமாம். ஏன் ஒரு திங்களில் ஏதேனும் பிரச்சினையா உங்களுக்கு.?"
"அய்யா. அது வந்து...."என இழுத்தாள்.
"குழந்தாய், நீயும் அந்த பெண்ணும் ஏதோ சொல்லமுடியாத துயரத்தில் இருப்பது தெரிகிறது. மேலும்...." என்றவர் இளம்பெண்ணின் முகத்தை பார்த்து உங்கள் இரகசியம் எனக்குத்தெரியும் என்ற தொனியில் இருந்தது அவரது பேச்சு.
"மேலும். என்னவென்று சொல்லுங்களேன்...." என்றாள் இளம்பெண்.
"குழந்தாய், என்னிடமே விளையாட்டு காட்ட என்னாதே..... உங்கள் இரகசியம் அறிவேன்."என்றார் பொருள் பொதிந்த பார்வையோடு.
வைத்தியர் இருளப்பமள்ளரின் தீர்க்கமான பார்வையின் சூட்டை இளம்பெண்ணால் தாளமுடியவில்லை. அவளது விழிகளில் நீர்திவளை உருண்டோடியது. ஏதும் அவள் பேசவில்லை.
இளம்பெண், இளவழுதி இருவரையும் தன்னை பின்தொடரும்படி சைகை செய்துவிட்டு தனது அறைநோக்கி நகர்ந்தார்வைத்தியர்இருளப்பமள்ளர். ஒருகணம் இருவரும் மாரி மாரி பார்த்துக்கொண்டனர் பின் எதுவும் பேசிக்கொள்ளாமல் வைத்தியர் இருளப்பமள்ளர் அறையை நோக்கி சென்றனர்.
அப்படியொன்றும் பெரிய அறையாக இல்லாவிடினும் சுத்தமாக, அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. சிறிய கயிற்றுக்கட்டிலும் அதன் மேல் இளவம் பஞ்சால் செய்த சிறிய மெத்தையுடன் கூடிய விரிப்பும் சிறிய தலையனையும், கட்டிலின் தலைப்பகுதியில் சிறியதொரு மரத்தால் செய்த இருக்கையில் பல்வேறு கட்டுகளாக கட்டப்பட்டு முறையாக அடுக்கிவைக்கப்பட்ட ஓலைச்சுவடிகளும் அதனருகே சிறிய மண்பானை நிறைய தண்ணீரும் அதன் மேல் சிறுகுவளையும் இருந்தது. கட்டிலின் எதிர்பக்கம் ஓரளவு பெரிய மரத்தால் செய்த ஆசனமும் இருந்தது. தன்னை தேடி வருபவர்களுக்கு உபசரிக்கவும் தேவைப்பாட்டால் அங்கு அவசர சிகிச்சைக்கு தேவையான அனைத்தும் கொண்டு விளங்கின. அந்த அறையின் மூலையில் சிறிய பாவைவிளக்கு ஒன்று இருந்தது. அதன் ஒளிவெள்ளம் அந்த அறை முழுவதும் நிறைந்து காணப்பட்டது. அந்த அறையின் கிழக்கு பக்கத்தில் அமைந்த சாளரத்திலிருந்து குளுமையான இளங்காற்று உள்ளே நுழைந்து கூடுதல் பொழிவைத் தந்திருக்கவேண்டும். அந்த அறைக்குள் நுழைந்ததிலிருந்து ஒவ்வொன்றாக கவனித்து வந்த இளவழுதி "வைத்தியர் பெரும் ரசனைக்கு சொந்தகாரராக இளவயதில் இருந்திருக்கவேண்டும். எதையும் சட்டென கவனித்து அதன் சூட்சுமத்தை அறிந்துகொள்ளும் திறன் பெற்றவர்தான், அதனால்தான் முன்பு வந்தபோது நம்மிடம் தனித்து உரையாட விரும்பினார், நான்தான் அதனை உதறிச்சென்று பெரும் சோதனையில் அல்லவா மாட்டிக்கொண்டோம். நடக்கும் யாவும் தலையும் புரியாமல், வாழும் புரியாமல் அல்லவா உள்ளது. சென்றமுறை போல் அல்லாமல் அவர் சொல்கேட்டு இங்கு வந்துள்ளோம் இப்போதாவது தெளிவு பிறக்குமாவெனத் தெரியவில்லையே. அப்படி என்ன இரகசியத்தை நங்கையிடம் இருந்து கண்டறிந்து இருப்பார்.? என்னவாக இருக்கும்? எப்படியும் சிறிதுநேரத்தில் தெறிந்துவிடப் போகிறது.பொறுத்தது பொறுத்தோம், சிறிது நேரத்தில் அப்படி என்ன நடந்துவிடும். அதையும் பார்த்து விட வேண்டியதுதான்" என தனக்குள்ளே யோசித்துக்கொண்டான்.
உள்ளே நுழைந்த இருவரில் இளம்பெண் ஏதும் பேசாமல் இருளடித்து காணப்படுவதும் ஆனால் உடன் வந்த வாலிபன் இளவழுதி அறைமுழுவதையும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்வதையும் மேலும் தனது பூர்வாசிரங்களை கண்டறிய முயல்வதையும் அதைக்கொண்டு தனது குணத்தையும் இன்னபிறவற்றை ஆராயும் அவனது போக்கையும் தெறிந்து கொண்டதோடு தனது முரட்டு இதழ்களில் புன்னகை ஒன்றை தவலவிட்டபடி அவ்விருவரையும் நோக்கினார் வைத்தியர் இருளப்பமள்ளர்.
"குழந்தாய்.... சாளுக்கிய தேசத்து இளவரசி அவர்களுக்கு சோழ தேசத்தில் ஆற்றவேண்டிய அந்த அற்புதப்பணியென்ன.....?" என இளம்பெண்ணை நோக்கி சொல் அம்பொன்றை எய்தார். அதுவரை மெளனத்தின் பிரதிபிம்பமாக விளங்கிய இளம்பெண் சுக்குநூறாக வெடித்து சிதறிப்போனாள்.
(தொடரும் .....அத்தியாயம் 07ல்)
No comments:
Post a Comment