🐾இராஜமோகினி 🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 20 🌾காட்டில் சதி ஆலோசனை 🌾
அடர்ந்த வனமாக இருந்ததால் மானை தூக்கிக்கொண்டு நடந்த அவ்விருவருக்கும் ஆதவனின் வெம்மை தெரியவில்லை. உள்ளுக்கு ஒரு விதமான பயம் நிரம்பி வழிந்தது. சற்று முன்பு நடந்த ஓநாய்களின் தாக்குதலால் எத்தனை விரைவாக குடிசை நோக்கி செல்ல முடியுமோ, அதற்கான முனைப்புடன் ஓட்டமும் நடையுமாக இருந்தார்கள். இருவருக்கும் வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதனை அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணிக் கொள்ளவில்லை.
எதிரே தெரிந்த குடிசை பார்த்த பின்பு தான் அவர்களுக்கு போன உயிர் திரும்பி இருந்தது. எத்தனையோ முறை வேட்டைக்கு போய் வந்திருந்தனர். அப்போதெல்லாம் இல்லாத அனுபவம் இந்த முறை கிடைத்ததால் உண்டான மாற்றம் தான்.
குடிசை முன்பாக இருந்த வெட்டுக் கட்டை மேல் புள்ளி மானை வைத்தார்கள். சத்தம் கேட்டு குடிசைக்குள் உணவு சமைத்துக் கொண்டிருந்த கருப்பன் வெளியே வந்தான்.
ஏன் ? இத்தனை தாமதம்? சொல்லிக்கொண்டே மாதையன் அருகே சென்றவன் "இது என்ன காயம்? மான் வேட்டையில் இது எப்படி நடந்தது ?".
கருப்பன் போட்ட சத்தத்தால் குடிசைக்குள் இருந்தும் எதிரே இருந்த மரத்தின் அடியில் அமர்ந்து பேசிக் பேசிக் கொண்டிருந்தவர்களும் மாதையன் அருகே வந்து விட்டிருந்தனர் .
"இத்தனை பெரிய காயம் எப்படி வந்தது?" பதற்றத்துடன் கேட்டான் கோடியக்கரை மூர்க்கன் .
"இந்த மானை வேட்டையாடிக் கொண்டு வரும்போது, பெரியதொரு ஓநாய் கூட்டம் எங்களை சுற்றி வளைத்து விட்டது "என்றான் கார்கோடகன் .
"பிறகு ?"என்றான் கார்மேகம்.
"எங்களை சுற்றி வளைத்த ஓநாய் கூட்டத்தை எதிர்கொண்டு ஒளித்துக் கட்டும் போது தான் , அந்த ஓநாய் ஓநாய் கூட்டத்தில் இருந்த ஒரு ஓநாய் மாதையன் கையை கடித்து விட்டது" என்றான் கார்கோடகன்.
"முதலில் அவனுக்கு சரியான வைத்தியம் பார்க்க வேண்டும் " என்றவன் கார்மேகத்தை பார்த்து "மாதையன் காயத்தை குணப்படுத்த வேண்டியது உனது பொறுப்பு, உனக்கு வேறு எந்த பணிகளும் கிடையாது, இவனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்" என்றான் கோடியக்கரை மூர்க்கன் .
மாதையனை குடிசைக்குள்அழைத்துக் கொண்டு போய் அவன் கையில் கட்டி இருந்த மேல் ஆடையை அவிழ்த்துவிட்டு, குடிசையிலிருந்த மரப்பெட்டியில் இருந்து மூலிகை மருந்துகளை எடுத்துக் கொண்டு வந்தான். மூன்று மூலிகை உருண்டைகளை குவளையில் போட்டு நீர் ஊற்றி கலக்கி மாதையனை குடிக்கச் செய்தான். அதன்பின் பெட்டியில் இருந்து சில மருந்துகளை எடுத்துக் கொண்டு வந்து மாதையனின் காயத்தை சுத்தம் செய்து மூலிகை வைத்து கட்டு கட்டி விட்டான்." நான் கொடுத்துள்ள மருந்தால் உனக்கு தூக்கம் வரும், எனவே சிறிது கஞ்சியை கரைத்து தருகிறேன் குடித்துவிட்டு தூங்கி எழுந்திரு" எனக் கூறிவிட்டு அவனுக்கு மண் சட்டியில் கஞ்சிய அள்ளி போட்டு கரைத்துக் கொண்டு வந்து கொடுத்தான். அதனை வாங்கி மடமடவென குடித்தவன் குவளையில் இருந்த நீரை எடுத்துக் குடித்துவிட்டு அங்கு இருந்த கோரை பாயில் படுத்துக்கொண்டான். சிறிது நேரம் அவன் அருகே இருந்த கார்மேகம் மாதையன் உறங்கத் தொடங்கியதும் குடிசையை விட்டு வெளியே வந்தான்.
"மாதையன் என்ன செய்கிறான் ?"என்றான் கோடியக்கரை மூர்க்கன் .
"மாதையன் காயத்தை சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டி உள்ளேன். சிறிது கஞ்சியை கரைத்துக் கொடுத்தேன், அதை வாங்கி குடித்துவிட்டு உறங்கி விட்டான் . அவன் சிறிது நேரம் உறங்கட்டும் அப்பொழுதுதான் மருந்து வேலை செய்யும் " என்றான் கார்மேகம் .
"காட்டில் தனியாக ஒற்றையானை யிடம் மாட்டிக் கொள்வதை விட பேராபத்து தான் நரி மற்றும் ஓநாயிடம் அகப்பட்டுக் கொள்வது, உண்மையிலே நீங்கள் இருவரும் பெரிய சாமர்த்திய சாலிதான். ஓநாயிடமிருந்து இந்த மட்டிலும் தப்பித்து வந்தது, உண்மையிலேயே பாராட்ட வேண்டியதுதான்" என்றான் கோடியக்கரை மூர்க்கன் .
"ஆமாம் தலைவரே, நானும் கேள்விப்பட்டு உள்ளேன், நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே" என்றான் கருப்பன் .
"இத்தனை காலமாக நாம் இங்கு வசித்து வருகிறோம். இது நாள் வரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. இது நமக்கு மிகப்பெரிய ஒரு பாடம்தான்" என்றான் கார்மேகம் .
"நமக்கு நடந்த இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு ஆதுரசாலையை தேடிச் செல்வது என்பது இயலாத காரியம். நல்லவேளை நம் கூட்டத்தில் வைத்தியம் தெரிந்த கார்மேகம் இருப்பது, நமக்கெல்லாம் பெரிய நன்மை, இல்லையென்றால் நம் பாடு பெரிய திண்டாட்டமாக போய்விடும் "என்றான் கோடியக்கரை மூர்க்கன் .
அனைவரும் கார்கோடகனை நன்றி பெருக்கோடு பார்த்தனர் .
"அப்படி ஒன்றும் நான் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. எனக்குத் தெரிந்த வைத்தியத்தை பார்க்கிறேன். மற்றபடி இதில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை" என்றான் கார்மேகம் .
அவர்கள் அனைவரும் கார்மேகத்தை கட்டி தழுவிக் கொண்டனர் .
"பசிக்கிறது என்று சொன்னீர்கள் . இப்படியே இருந்தால் எப்படி? மானை உரித்து கரியை நறுக்கி தாருங்கள்" என்றான் கருப்பன் .
"பார்த்தீர்களா, அவன் காரியத்தில் கண்ணாக இருக்கிறான். ஒரு தாயின் கருணையோடு நமக்கு உணவு படைப்பதில் , கருப்பனுக்கு இணை இங்கு யாரும் இல்லை. சரி ,வாருங்கள் அவன் சொன்னது போல் மானை உரித்து கறியை நறுக்கலாம் ".
அங்கு தாழ்வாக இருந்த கிளை ஒன்றில் மானை கட்டி தொங்கவிட்டு அதன் தோலை உரித்தவர்கள். படிப்படியாக கறியை நறுக்கி கொண்டிருந்தார்கள் .
இரண்டு நாளிகைகளுக்கு பிறகு...
ஆகா, இத்தனை சுவையான உணவு இப்படி உண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது "என்றான் உறங்கி எழுந்திருந்த மாதையன்.
"அதுவும் மானின் துண்டு கறி உணவு மிகப் பிரமாதம்" என்றான் கார்மேகம் .
சிறிது நேரம் உணவைப் பற்றி சிலாகித்து பேசிவிட்டு, கூட்டமாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள் .
"நான் ஒன்றைக் கேட்க மறந்து விட்டேன்? என்றான் கோடியக்கரை மூர்க்கன் .
"என்னவென்று கூறுங்கள் தலைவரே ?"என்றான் கார்மேகம் .
" சூரிய வர்மனின் மாளிகையில் நடந்த தாக்குதலில் உங்களை தாக்கியது யார் ? அது பற்றி நீங்கள் எதுவும் என்னிடத்தில் கூறவில்லையே ?" கார்மேகத்தை பார்த்து கேட்டான் கோடியக்கரை மூர்க்கன் .
"சூரிய வர்மரை தேடி நாகைக்கு புதிதாக வந்திருந்தவன் தான், எங்களை சூரியவர்மரின் மாளிகையில் தாக்கினான்" என்றான் கார்மேகம் .
"புதிதாக வந்தவன், குறிப்பாக சூரியவர்மனை ஏன் பார்க்க வேண்டும் ?".
"நான் அறிந்த வரையில், அவன் சோழ அரசின் பிரதான படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமானின் உப தளபதியாக இருப்பான் போலும் ".
"என்ன கூறுகிறாய். நீ ,சொல்வது உண்மைதானா ?"
"ஆமாம் தலைவரே. அப்படித்தான் எனக்கு தகவல கிடைத்தது ".
"அடேய் முட்டாள். இதையல்லவா நீ முதலில் கூறி இருக்க வேண்டும் ".
"ஏன் தலைவரே? அவன் ஒரு சாதாரண உப தளபதி தானே ?".
"உனக்கு இன்னுமா புரியவில்லை. இங்கு நடக்கும் விவரங்களை சோழ அரசின் கவனத்திற்கு யாரோ கொண்டு சென்று உள்ளார்கள் . அதன் காரணமாகத்தான் கருணாகரத் தொண்டைமான் தனது உப தளபதியை இங்கு அனுப்பி வைத்திருக்கிறான். இப்பொழுது புரிகிறதா ?".
"புரிந்தது போலவும் உள்ளது, புரியாதது போலவும் உள்ளது, கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் ."
"நான் சொல்வதை அனைவரும் கவனமாக கேளுங்கள்." கோடியக்கரை மூர்க்கன் கூறியதும் அனைவரும் தமது காதுகளை தீட்டிக்கொண்டு கேட்கலாயனர்.
"இது நாள் வரையில் நாம் மேற்கொண்ட முயற்சிகளை இங்கு உள்ள குமாரமள்ளனும் அவனது குடும்பத்தார்களும் மட்டுமே நம்மை எதிர்த்தார்கள். ஆனால் இன்று சோழ அரசின் கவனத்திற்கு அவை சென்று விட்டது, என்பதற்கான அத்தாச்சி தான் அவர்களது உப தளபதி நாகை வந்திருப்பது. மேலும் இனி நாம் செய்யும் காரியங்கள் வெகு கவனமாக இருக்க வேண்டும். நாம் செய்யும் சிறு தவறு கூட நமக்கு பேராபத்தை உண்டாக்கி விடும் ."
"தாங்கள் கூறியபடியே இனி செயலாற்றுவோம், தலைவரே ."
"எனக்கு, என்னவோ இங்கு வந்திருக்கும் உபதளபதியை வரவழைத்து இருப்பதே சூரியவர்மன் தான் என நினைக்கிறேன் ".
"நீங்கள் அவ்வாறு கூறுவதற்கு காரணம்?" என்றான் கார்மேகம் .
"உனது மர மண்டைக்கு இன்னுமா புரியவில்லை?, வந்தவன் நேரடியாக வேறெங்கும் செல்லாமல் சூரியவர்மனை தேடி அவனது மாளிகைக்கே வந்துவிட்டான். வந்ததோடு நின்றானா? அங்கிருந்த உங்கள் அனைவரையும் கூண்டோடு கைலாசம் அனுப்பி வட்டான்."
"ஆமாம் தலைவரே. அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தான் நான் ஓடி வந்து விட்டேன் ".
"அடேய் முட்டாளே. தப்பி வந்ததை பெருமையாக வேறு சொல்லிக் கொள்கிறாயா? உனக்கு வெக்கமா இல்லை?".
"மன்னித்து விடுங்கள் தலைவரே. அவன் சூரியவர்மர் மாளிகைக்குள் உள்ளே வந்ததும் விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டோம். அதே நேரத்தில் நம் ஆட்கள் அவனை சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கினர், அப்படி இருந்தும் அங்கிருந்த இருளை கண்டு அஞ்சாமல் நாம் நாட்கள் அனைவரையும் கூண்டோடு அழித்து விட்டான், புதிதாக வந்தவன்..."
"நான் சொன்னது இப்பொழுது புரிகிறதா?, நம்மை சூழ்ந்துள்ள பேராபத்து இப்பொழுது உங்களுக்கு புரிகிறது தானே ?"
"சத்தியமாக புரிகிறது தலைவரே."
"சரி. அது போகட்டும், சூரியவர்மனை எங்கு வைத்து உள்ளீர்கள் ?"
"அவனை நாகையில் உள்ள, நாணயக்கார வீதியில் இருக்கும் பாழடைந்த ஒரு இல்லத்தில் அடைத்து வைத்துள்ளோம் ".
"இவையாவது ஒழுங்காக செய்து உள்ளீர்களா? அல்லது அதிலும் கோட்டை விட்டு உளளீர்களா?"
"இல்லை தலைவரே மிகச் சரியாக செய்துள்ளோம் ".
"மீண்டும் கூறுகிறேன். கவனமாக இருங்கள் நாம் பிடித்து வைத்துள்ள சூரியவர்மன் எத்தகையவன் என்பது உங்களுக்கு நன்கு தெரியும் தானே ?"
"நாகையின் தவிர்க்க முடியாத மணி கிராமத்தார் பதவி வகிக்கும் முக்கிய அதிகாரி அவன் என்பது நாங்கள் அறிவோம் தலைவரே ". ஏதோ அரியதொரு ரகசியத்தை கண்டுபிடித்த பெருமிதத்தில் கூறினான் கார்மேகம்.
அவன் கூறியதை சட்டை பண்ணாமல் "அதனால்தான் கூறுகிறேன், அவனது திடீர் மறைவு மற்றும் அவனது மாளிகையில் நடந்த தாக்குதல் இவை எல்லாம் சேர்ந்து புதிதாக வந்திருக்கும் உப தளபதியின் கவனத்தை ஈர்த்திருக்கும், எனவே எச்சரிக்கையாக செயல்படுங்கள் ."
"இனி கவனமாக இருப்போம், தலைவரே ".
"சூரியவர்மனை அடைத்து வைத்துள்ள இடத்தில் யார் அதனை கண்காணித்து வருவது யார்?"
"நமது காளையன் தான் தலைவரே"
"கெட்டிக்காரன் தான் இனி கவலைப்பட தேவையில்லை" என்றவன் தொடர்ந்து "சூரியவர்மனை நாம் கடத்திய பிறகு, நாகையின் வணிகப் போக்குவரத்து எப்படி உள்ளது ?"
"முன்பு போல் இல்லை. அங்காடிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. பெரிய அளவில் வணிகம் நடைபெறுவதாக தெரியவில்லை. நாளங்காடி மட்டும் கூட்டமாக இருக்கிறது. அல்லங்காடியில் எனக்குத் தெரிந்து பெரிதாக வணிகம் ஏதும் நடைபெற்றதாக தெரியவில்லை. மொத்தத்தில் நாகை இயல்பாக இல்லை ".
"நமக்கு நடைபெற்ற எத்தனையோ தோல்விகளிலும், இப்பொழுது கேள்விப்படும் இந்த விவரம் தான் மகிழ்வை தருகிறது. இதுபோல் சோழம் முழுவதும் மாறினால் தான் நாம் கொண்ட நோக்கம் வெற்றி அடையும், அதற்கான பணிகளை தொடர்ந்து செயலாற்ற வேண்டும்."
(தொடரும்...... அத்தியாயம் 21ல்)
No comments:
Post a Comment