🐾இராஜ மோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 35 🌾ஆபத்தில் சிக்கிக்கொண்ட
அழகன்🌾
இரண்டாவது அறையிலுள்ள சாளரத்தின் வழியாக ஏதேனும் தெரிகிறதா எனப் பார்ப்பதிலேயே தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த அழகன் தனக்கு பின்னால் உருவாகியிருந்த ஆபத்தை உணராமல் போய்விட்டான்.
சத்தமில்லாமல் பின்னால் வந்து, அழகன் பின்னந்தலையில் உருட்டுக்கட்டையால் படீரெனத் தாக்கி விட்டான் முரடன் ஒருவன். இரண்டாவது அறைக்கதவை எப்போது திறந்தான் எனத் தெரியவில்லை, ஆனால் உள்ளேயிருந்து உயரமான முரடன் வெளியே வந்து அழகனைத் தாக்கியிருந்தான். மூர்ச்சித்து கீழே சரிந்த அழகனை முரடன் தாங்கிப் பிடித்தபோது மற்றொரு முரடன் அறையிலிருந்து வெளியேறி வந்து அழகனை அங்கிருந்து அகற்ற உதவினான்.
அறைக்குள் நுழைந்த முரடர்கள் கதவை சாத்திவிட்ட பிறகு அங்கிருந்த விளக்கை ஏற்றினார்கள் . "உன்னைப் பின்தொடர்ந்து வந்தவனாக இருப்பானோ?"என்றான் உயரமான முரடன்.
சிறிது நேரம் யோசனைக்கு பின்பு "இல்லையே, நான் யாரும் என்னைக் கவனிக்கிறார்களா? என பார்த்துக் கொண்டுதானே வந்தேன்." என்றான் பதுங்கி உள்ளே வந்தவன்.
"அப்படி என்றால் இவன் எங்கிருந்து முளைத்தான்?"
"அதுதான் தெரியவில்லை"
"மிகச் சரியாக, நீ வந்த பின்பு அவனும் தொடர்ந்து வந்து விட்டான். வந்தவன் நமது அறையின் சாளரத்தை நோட்டமிட்டு கொண்டிருந்தான். அப்படியெனில் இவன் கண்டிப்பாக நம்மைப் பற்றி எதையோ அறிந்திருப்பான் போலும்" எனக் கூறிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
அறையின் உள்ளே மூர்ச்சித்து படுத்து கிடந்த அழகன் அருகே வந்த உயரமானவன் "இவன் யார் என தெரியவில்லையே?"என்றான்.
"நானும் இவனை இதற்கு முன்பு பார்த்ததில்லை"
"நம்மைப் பற்றி கண்டறிவதற்காக, புதிதாக அதிகாரிகள் யாரேனும் ஒற்றர்களை நியமித்து உள்ளார்களோ?"
"எனக்குத் தெரிந்தவரையில் நாகையின் பாடி காவல் அதிகாரியாக இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளான். அவனைத் தவிர்த்து வேறு யாரும் நியமிக்கப்பட்டதாக தெரியவில்லை"
"இரகசிய ஒற்றனாக இருக்கலாம். இருந்தாலும் இவனுக்கு இங்கு என்ன வேலை?, அதுவும் குறிப்பாக நமது அறையில் அப்படி என்ன தேடிக் கொண்டிருந்தான்?"
"அதுதான் ஒன்றும் புரியவில்லை"
"சரி அது கிடக்கட்டும். நீ சென்ற காரியம் என்னவாயிற்று?" பதுங்கி வந்தவனைப் பார்த்து உயரமானவன் கேட்டான்.
"அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்தேறி விட்டது."
"நீ நமது திட்டப்படி கடைசியில் இருந்த வண்டியைத்தானே தீயிட்டு எரித்தாய்?"
"ஆமாம் அவ்வாறு தான் செய்தேன். நாம் நினைத்தவாரே வணிக சாத்துக்களின் பாதுகாவலர்கள் அதிகமான குளிரின் காரணமாக தீமூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களும் எத்தனை நேரம் தான் இந்த குளிரில் பணி செய்வார்கள். மூன்றாம் சாமத்தில் அவர்கள் சற்று அயர்ந்து இருப்பார்கள் என நாம் எண்ணியபடி தான் நடந்து கொண்டார்கள். சூழல் நமக்கு சாதகமாக இருந்தது அதனால் காரியமும் நினைத்து போல் நடத்த முடிந்தது."
"நீ, தீ வைத்த பின்பு வணிகர் சாத்துகளில் இருந்த பாதுகாவலர்களும் பணியாளர்களும் கடைசி வண்டி நோக்கி செல்வதை பார்த்தாயா?"
"நான் பற்ற வைத்த மாட்டு வண்டி முழுவதும் பட்டாடைகள் இருந்தன. அதனால் தீயின் நாக்குகள் வெகு விரைவாக பரவத் தொடங்கி விட்டன. அதன் பின்னர் தான் அங்கிருந்து அனைவரும் வண்டியை நோக்கி ஓடி வர தொடங்கி விட்டார்கள். அவர்கள் வருவதை உறுதி செய்து கொண்டு, அதன் பின் தான் அங்கிருந்து இங்கு வந்தடைந்தேன்"
"உனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து விட்டாய். இவை மட்டும் நடைபெறாமல் போயிருந்தால் நமது அடுத்த திட்டம் நிறைவேறுவது சாத்தியமில்லாமல் போயிருக்கும். நமது நண்பர்கள் இந்நேரம் தங்கள் காரியத்தை நிறைவேற்றி இருப்பார்கள் " எனக் கூறிய உயரமானவனின் முகத்தில் வெற்றி களிப்பு பரவி இருந்தது.
"அவர்கள் இந்நேரம் வந்திருக்க வேண்டுமே. ஏன் தாமதம்?"
"உனது பணி தீ வைப்பது மட்டும்தான். ஆனால் மற்றவர்களுக்கோ அப்படி அல்ல. அவை என்ன அத்தனை எளிதான காரியம் எனறு நினைக்கிறாயா? கொஞ்சம் பிசகினாலும் நமது திட்டம் தோல்வியடையதோடு நாம் அனைவரும் கூண்டோடு மாட்டிக் கொள்வோம். எதையும் எடுத்தும் கவிழ்த்தோம் என்று செய்துவிட முடியாது"
"நீ சொல்வதும் சரிதான்" எனக் கூறியபடி வெளியே எதுவும் சத்தம் கேட்கிறதா என காதுகளை தீட்டிக்கொண்டு வாசல் பகுதியையே பார்த்துக் கொண்டிருந்தான் பதுங்கி வந்தவன்.
முதல் அடுக்கில் இரண்டாவதாக இருந்த அறை அப்படி ஒன்றும் பெரிதில்லை. நான்கிலிருந்து ஐந்துபேர் வேண்டுமானால் அங்கு தங்கிக் கொள்ளலாம். ஒரே ஒரு மரக்கட்டில் இருந்தது . அதன் மீது சிறிய மெத்தையும் தலைக்கு வைக்க ஒரு தலையணையும் மட்டுமே இருந்தன. அறையின் வாசலுக்கும் கட்டிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் தரையில் கிடத்தப்பட்டிருந்தான் அழகன். அரை வாசலின் வலது பக்கத்தில் சிறிய மர ஆசனத்தில் மண்பானை நிறைய தண்ணீரும் ஒரு குவளையும் வைக்கப்பட்டிருந்தது. அறையின் இடது பக்க மூலையில் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் ஒளி அறை முழுவதும் சன்னமாக பரவி இருந்தது. இத்தனை நேரம் அறையில் உள்ளே இருந்த இருவரும் அழகன் காலடியில் நின்ற வண்ணம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது படியில் யாரோ சத்தம் இல்லாமல் ஏறி வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்கள் இரண்டாவது அறையின் வாசலில் நின்று கொண்டு கதவினை மெல்ல ஒரு முறை தட்டினார்கள். அதுவரை சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்த இருவரில் உயரமானவன் அறையின் வாசலுக்கு சென்று கதவை மெல்ல திறந்தான்.
வாசலில் இருந்த மூவரும் அறைக்குள் வந்தவுடன் உயரமானவன் கதவை மெதுவாக சாத்தினான்.
உயரமானவன் அம்முவரையும் ஒரு கணம் பார்த்துவிட்டு "காரியம் வெற்றிகரமாக முடிந்து விட்டதா?" என்றான்.
புதிதாக வந்த மூவரில் நடுவில் இருந்தவன் "முடிந்தது" எனக் கூறிவிட்டு மற்ற இருவரை பார்த்தான்.
"அவர்களை ஏன் பார்க்கிறாய்? ஏதேனும் பிரச்சனையா?" என்றான் உயரமானவன்.
மூவரில் இடது பக்கம் இருந்தவன் "அனைத்தும் நமது திட்டப்படி தான் நடந்தது. ஆனால் பக்கத்து அறையில் இருந்தவர்கள் தான் நாங்கள் வெளியே வரும்போது பார்த்து விட்டார்கள்" என படபடப்புடன் கூறினான்.
மூவரையும் கோபத்தோடு பார்த்துவிட்டு "பிறகு என்ன செய்தீர்கள்?" என்றான்.
"வேறு வழியின்றி அவர்களையும் தாக்க வேண்டியதாய் போய்விட்டது" என்றான் இடப்பக்கம் நின்றவன்.
"என்ன அவர்களை அங்கேயே தாக்கிவிட்டு வந்து விட்டீர்களா?" என்றான் உயரமானவன்.
"முடிந்தவரை சத்தம் இல்லாமல் அவர்களை தாக்கி அவர்களது அறையில் போட்டு அடைத்து விட்டு வந்துள்ளோம்" என்றான் நடுவில் இருந்தவன்.
"உங்களை வேறு யாரேனும் பார்த்தார்களா?"
"இல்லை. அங்கு வேறு யாரும் இல்லை"என்றான் இடது புறம் இருந்தவன்.
"நமது திட்டப்படி அனைத்தும் முடிந்து விட்டது" என்றான் நடுவில் இருந்தவன்.
"சரி நாம் உடனே இங்கிருந்து வெளியேறியாக வேண்டும். தாமதித்தால நாம் அனைவரும் மாட்டிக்கொள்வோம்" என்றான் உயரமானவன்.
"இங்குதான் பாதுகாவலர்கள் யாரும் இல்லையே. அனைவரும் கடைசியில் எரிந்து கொண்டிருக்கும் மாட்டு வண்டியை நோக்கி சென்று விட்டார்கள்" என்றான் பதுங்கி வந்தவன்.
"அவர்கள் நீண்ட நேரம் அங்கு இருக்க மாட்டார்கள். இந்நேரம் அங்கு எரிந்து கொண்டிருக்கும் தீயை யார் வைத்திருப்பார்கள் எனத் தேடத் தொடங்கி இருப்பார்கள். எனவே நாம் உடனடியாக வெளியேறியாக வேண்டும்" என்றான் உயரமானவன்.
"இங்கு வந்து மட்டும் என்ன செய்யப் போகிறார்கள். இங்கு நாம் அரங்கேற்றி வைத்திருக்கும் செயலால் ஒட்டுமொத்த சோழதேசமும் பதறிப் போய்விடும். பிறகு எங்கிருந்து நம்மைப் பற்றி யோசிக்கப் போகிறார்கள்" என்றான் பதுங்கி வந்தவன்.
"இங்கு உள்ள நிலவரத்தை பார்த்ததும், அவர்களுக்கு கண்டிப்பாக இதற்கான காரணத்தைத் தேடி கண்டறிய முயல்வார்கள். இது கூட உனக்கு புரியவில்லையா ? அவர்கள் அத்தனை எளிதில் இதனை விட்டு விட மாட்டார்கள்" என்றான் உயரமானவன்.
கீழே கிடந்த அழகனைப் பார்த்து"இவனை என்ன செய்வது?" என்றான் பதுங்கி வந்தவன்.
"இவன் உயிருடன் உள்ளானா? இல்லை இறந்து விட்டானா?" என்றான் நடுவில் உள்ளவன்.
"இல்லை. மூர்ச்சித்து உள்ளான்"என்றான் உயரமானவன்.
"இவனை என்ன செய்வது?" என மீண்டும் கேட்டான் பதுங்கி வந்தவன்.
"அவனை விட்டுத் தள்ளுங்கள். இவன் யார் என்று தெரியவில்லை. யாரோ ஒரு அப்பாவி, நம்மிடம் வந்து அகப்பட்டுக் கொண்டான்" எனக்கு கூறிச் சிரித்தான் இடது பக்கம் நின்றவன்.
"போதும் போதும் நிறுத்துங்கள். பிறகு பேசிக் கொள்ளலாம். முதலில் இங்கிருந்து நாம் பாதுகாப்பாக வெளியேற வேண்டும். இங்கு எதனையும் விட்டுவிட வேண்டாம். முடிந்தவரை அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்" என அங்கிருந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தான் உயரமானவன்.
அறையில் இருந்து அவர்களது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார்கள். "சப்தமின்றி ஒருவர் பின் ஒருவராக வெளியேறிச் செல்லுங்கள்"என்றான் உயரமானவன். அதனைத் தொடர்ந்து அறை வாசலைக் கடந்து வெளியேறி கொண்டிருந்தார்கள். இறுதியாக உயரமானவன் அழகனை உள்ளே வைத்து கதவினைச் சாத்திவிட்டு வெளியில் யாரேனும் உள்ளார்களா என விழிகளை சுழல விட்டு பார்த்தான். அங்கு யாரும் இல்லை. ஏற்கனவே அறைய விட்டு வெளியேறி இருந்தவர்கள் வெகு தூரம் சென்று இருந்தார்கள். சத்தம் இன்றி மெதுவாக படிகளில் இறங்கி சத்திரத்திற்கு எதிரே இருந்த காட்டிற்குள் சென்று விட்டிருந்தான்.
சத்திரத்தில் தங்கியிருந்த வணிகர்கள் எவருக்கும் அங்கு நடந்த கலவரம் பற்றி தெரிந்திருக்கவில்லை. அவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். மனதில் கலக்கத்துடன் இருந்தவர்களும் அறைக்கு வந்தவுடன் சிறிது நேரம் அங்கு இங்குமாக அறையில் உலாவி விட்டு அசதியின் மிகுதியால் கட்டிலில் படுத்து உறங்கி விட்டார்கள். அவ்வாறு உறங்க முயன்று தோற்றுப்போன வணிகர்கள் இருவர் தான் முரடர்களால் தாக்கப்பட்டு அவர்களது அறையில் அடைபட்டு கிடந்தார்கள்.
சத்திரத்தில் நடந்து முடிந்திருந்த விபரீதம் ஏதும் அறியாத இளம்வழுதி கடைசி வண்டிக்கு தீ வைத்தது யாராக இருக்கும் என்ற தேடலில் இறங்கி இருந்தான். நீண்ட நெடிய வணிக சாத்துகள் என்பதால் அவனால் விரைவாக சோதிக்க முடியவில்லை. ஒவ்வொன்றையும் கவனமாக பார்த்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த வண்டியை நோக்கித்தான் அனைவரும் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு சில பாதுகாவலர்கள் மட்டுமே இருக்கும் மற்ற வண்டியைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது விழிகளும் எங்கே மற்ற வண்டிகளுக்கும் ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்ற கலக்கத்தில் இருந்தார்கள்.
(தொடரும்... அத்தியாயம் 36ல்)
No comments:
Post a Comment