🐾இராஜமோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 🌾38. இருதலைக்கொல்லி எறும்பாய் இளம்வழுதி🌾
சத்திரத்தில் தங்கியிருந்த வணிகர்களின் கோபம் எல்லையைக் கடந்து விட்டிருந்தது. ஒன்றில் தொடங்கிய இன்னொன்றாக அவர்களுக்குள் பரிணாமம் பெற்று, பெரும் விபரீதத்திற்கு அவர்கள் மாறிக் கொண்டிருந்தார்கள். எத்தனை தான் எடுத்துக் கூறினாலும் அவர்கள் கேட்கும் மனநிலையில் இல்லை.
"நீங்கள் கொடுத்த அழைப்பிலும் நம்பிக்கையிலும் தானே இந்த வணிக சாத்தினை மேற்கொண்டோம். அதன் காரணமாக உண்டான பலன் எங்களில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதற்கு என்ன கூறுகிறீர்கள்?' என்றார் அங்கிருந்த வணிகரில் ஒருவர்.
"நீங்கள் கொடுத்த வீண் நம்பிக்கை பெரும் விபரீதத்தில் கொண்டுபோய் எங்களைத் தள்ளி விட்டது"என்றார் அவர்களின் ஒருவர்.
" நம்மை பாதுகாக்க இவர் என்ன செய்து உள்ளார்?"என்றார் மற்றொரு வணிகர்.
"அது குறித்து எதுவும் வினவாமல் இவரை நம்பி வந்தோமே, நம்மைச் சொல்ல வேண்டும்" என்றார் மற்றொருவர்.
"நம்மையெல்லாம் பாதுகாத்து வந்த சூரியவர்மர் எங்கு போனார், என்ற வினாவிற்கு இதுவரை விடையில்லை. அப்படி இருக்கும் போது நாம் இவரை நம்பி வந்திருக்கக் கூடாது. இது நாம் செய்த பெரும் தவறு" என்றார் இன்னும் ஒரு வணிகர்.
அங்கிருந்த வணிகர்களை விலக்கிக் கொண்டு முன்னாள் வந்த அழகன் "நீங்கள் எல்லாம் என்ன பேசுகிறீர்கள் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா?, யாரோ முகம் தெரியாத சதிகாரர்களுக்கு பயந்து கொண்டு இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே காலம் தள்ளப் போகிறீர்கள். இத்தனை காலமாக உங்களையும் உங்கள் வணிக சாத்துகளையும் காத்து வந்தது யார் என்பதை மறந்து விட்டீர்களா?, நமக்குள் பிரிவினையை உண்டாக்கி, அதன் உள்ளே புகுந்து நமது தேசத்தைச் சீர்குலைக்க என்னும் சதிகாரர்களுக்கு இன்னும் கொண்டாட்டமாக அல்லவா போய்விடும். நமக்குள் உள்ள பிரச்சினையை நாம் தான் சரியானபடி பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்" என்றான்.
அறைக்குள்ளும் வெளியேயும் நின்று கொண்டிருந்த வணிகர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள் .
"உங்கள் அனைவரிடமும் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். சிறிது நேரம் அமைதியாக நான் கூறுவதைக் கேளுங்கள். முதலில் அனைவரும் அறையை விட்டு வெளியேறி வெளியே உள்ள திறந்த வெளிக்குச் செல்லுங்கள்" என பணிவுடன் இளம்வழுதி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறினான்.
என்னதான் அவன் கூறப் போகிறான் எனக் கேட்டு விடுவோமே என்று எண்ணிக் கொண்டார்களோ என்னவோ அறையை விட்டு வெளியேறிச் சத்திரத்தின் முன்பிருந்த திறந்தவெளியை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக வணிகர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் வெளியற்றத்தைக் கண்டதும் சத்திர அதிகாரி பணியாளர்களை அழைத்து அங்கு விளக்குகளை ஏற்றும் படி உத்தரவிட்டார்.
ஒரு வழியாக அனைவரும் திறந்த வெளியில் கூடி நின்று கொண்டு இளம்வழுதி என்ன கூறப் போகிறான் எனப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வணிகரை நோக்கி வந்த இளம்வழுதி "நடந்த நிகழ்வுகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு என் பேரில் உள்ள கோபம் நியாயமானது தான். உங்களுக்கு போதிய பாதுகாப்பு தராதது எனது குற்றமே. நடந்துவிட்ட நிகழ்வுகளுக்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் அதற்கு ஈடு ஆகாது என்பதை நான் அறிவேன். இங்கு நாம் முதலில் செய்ய வேண்டியது அந்த அறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கும் அந்த வணிகருக்கு உரிய மரியாதையை நாம் செய்ய வேண்டும். அதற்கு அவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள் கூறுங்கள்"என்றான் அவர்களைப் பார்த்து இளம்வழுதி.
"நீங்கள் கூறும் சமாதானம் எங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது. இத்தனை பெரிய முயற்சி எடுக்கும்போது அதன் பலா பலன்களை ஆராய்ந்து இருக்க வேண்டியது உங்கள் கடமை. மேலும் பாடி காவல் அதிகாரியான நீங்கள் வணிகர்களைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவறி விட்டீர்கள்" என கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார் கூட்டத்தில் உள்ள வணிகர் ஒருவர்.
"நீங்கள் கூறுவது அனைத்தும் சரிதான். யாரும் மறுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அதையே கூறிக்கொண்டு இருப்பதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. பாடி காவல் அதிகாரி கூறியது போல் கொலை செய்யப்பட்டவருக்கு உரிய மரியாதை நாம் கொடுத்தாக வேண்டும். விவரம் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறுங்கள்" என வணிகர்களைப் பார்த்து கூறினார் சத்திர அதிகாரி.
அங்கிருந்த வணிகர்களின் கூட்டத்திலிருந்து வெளியே வந்த வயதான வணிகர் ஒருவர் " தஞ்சையின் பெரும் வணிகர் செங்காணர் என்பது அவரது பெயர். சூரியவர்மரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.நீண்ட நெடுங்காலமாக தஞ்சை பெருவழியின் வணிக சாத்துகளை மேற்கொண்டு வந்தார். அவரது இழப்பு என்பது யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று"என இளம்வழுதியை பார்த்துக் கூறினார்.
"தங்களுக்கு மிகுந்த நன்றி ஐயா" என அவரைப் பார்த்துக் கூறிவிட்டு சத்திர அதிகாரியின் பக்கம் திரும்பினான், "தஞ்சையின் பெரும் வணிகர் செங்காணர் அவர்களின் இறுதி அஞ்சலி பெரும் வீரருக்கு உரிய மரியாதையோடு நடைபெற வேண்டும். அதற்கு ஆவன உடனே மேற்கொள்ளுங்கள்" என சத்திர அதிகாரியைப் பார்த்து உத்தரவிட்டான்.
அங்கிருந்த சத்திரப்பணியாளர்களை அழைத்து ஓலையும் எழுத்தாணியும் எடுத்து வரும்படி கூறினான். ஓலை வந்ததும் அவற்றில் கிடுகிடுவென ஏதோ எழுதி தனது கைச்சாத்தினை இட்டு ஒரு குழலில் அடைத்தான். விழிகளால் அழகனை பார்த்து தன்னைப் தொடர்ந்து வரும்படி சைகை செய்தான். அழகனும் அவனை பின்தொடர்ந்து சென்றான்.
சத்திரத்துக்கு பின்னால் இருந்த புளியமரம் அருகே இளம்வழுதி நின்று கொண்டான்.
அழகன் அருகில் வந்ததும் "நான் கூறுவதை கவனமாக கேட்டுக் கொள். உன்னிடம் முக்கியமான ஓலைகளை கொடுத்து அனுப்பப் போகிறேன். அவற்றை கவனமாக எடுத்துச் சென்று நான் கூறும் நபரிடம் சேர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவை வேறு யாரிடமும் கிடைக்கும் படியான சூழல் எதனையும் நீ உருவாக்கி விடக்கூடாது" என்றவன் கையில் இருந்த ஓலைக் குழலை கொடுத்து"இந்த ஓலையை சேனாதிபதி கருணாகர தொண்டைமான் அவர்களிடம் மட்டும் தான் ஒப்படைக்க வேண்டும். தப்பித்தவறி வேறு யாரிடமும் இவற்றை சேர்த்து விடக் கூடாது " என்றவன் மற்றொரு ஓலை எடுத்து "அத்தோடு இந்த ஓலையை தஞ்சை போகும் வழியில் அமைந்துள்ள படைவீட்டில் இந்த ஓலையை கொடுத்து விடு. படைவீட்டில் கொடுக்க வேண்டிய ஓலையை கொடுத்துவிட்டு அதன்பின் நீ தஞ்சை நோக்கி செல்ல வேண்டும். தற்சமயம் நமது சேனாதிபதி தஞ்சையில் இருப்பதாக தகவல். விரைந்து நீ இந்த காரியத்தை ஆற்ற வேண்டும். தாமதமானால் நீ அவரை தேடி கங்கைகொண்ட சோழபுரம் தான் செல்ல வேண்டி இருக்கும். அம்மாதிரியான சூழலை எக்காரணம் கொண்டும் உருவாக்கி விடாதே. நான் சொல்வது உனக்கு புரிகிறதல்லவா?" என அழகன் இடம் அவன் செய்ய வேண்டிய பணி குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினான் இளம்வழுதி.
"என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்து உள்ளீர்கள் அதற்கு நான் என்றென்றும் நன்றியோடு இருப்பேன் ஐயா" என உணர்ச்சி மிகுதியால் பேசினான் அழகன்.
"சேனாதிபதி கருணாகர தொண்டைமானிடம் ஓலையை ஒப்படைத்த பின்பு உனக்கு மற்றும் ஒரு பணி உள்ளது. உமது ஊர் நத்தத்தில் பெரும் கலகத்தை உண்டாக்கிய நபர் கூறியபடி தஞ்சை புறம்பாடியில் சதிகாரர்கள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் அதனை கவனமாக கண்டறிந்து செயலாற்ற வேண்டும். இத்தனை பெரிய பொறுப்பு உன்னை நம்பி கொடுக்கின்றேன். கவனமாக இரு" எனக்கூறி அவனது கையில் ஓலைகளை ஒப்படைத்தான் இளம்வழுதி.
"நீங்கள் கூறியபடியே செய்து விடுகிறேன் ஐயா. நான் எப்பொழுது புறப்பட வேண்டும்?"
"நமக்கு மிகுந்த நேரமில்லை. ஆகவே உடனடியாக நீ புறப்பட்டுச் சென்று காரியத்தை நிறைவேற்ற வேண்டும். நானும் உன்னுடன் வருவதாக தான் இருந்தேன். இங்கு நடந்தேறிய பல்வேறு சம்பவங்களால் என்னால் உன்னுடன் வர இயலாதபடி செய்துவிட்டது. எனவே கண்ணும் கருத்துமாக இருந்து காரியத்தை செயலாற்ற வேண்டும் நீ" என அழகனிடம் கூறினான் இளம்வழுதி.
"ஆகட்டும் ஐயா. நான் விடை பெற்றுக் கொள்கிறேன்"எனக் கூறிவிட்டு குதிரைகளின் கொட்டடி நோக்கி சென்று கொண்டிருந்தான் அழகன்.
அழகனிடம் வேண்டிய விவரங்களை கூறிவிட்டு வணிகர்களை நோக்கி சென்றபோது எரியும் தீயில் என்னை வார்த்தது போல் வணிகர்களின் கோபம் மேலும் உச்சத்தை தொட்டிருந்தது.
"அதோ வருகிறார் பாடிகாமல் அதிகாரி. அவரிடமே கேட்டு விடுவோம்" என முரடர் போல் பெரும் கோபத்தோடு ஒரு வணிகர் வந்தார்.
"கூறுங்கள் ஐயா. ஏன் கோபமாக உள்ளீர்கள்?"என்றான் இளம்வழுதி.
"என்ன இப்படி கூறுகிறீர்கள்? இங்கு நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் நாங்கள் அனைவரும் பெரிய விருந்து ஒன்றை நடத்தி தட புடலாக நடத்தி கொண்டாடி தீர்த்திருக்க வேண்டும் போலும்" என்றார் கோபத்தில்.
"என்னவென்று கூறினால் தானே தெரியும்"
"ஆகா. தங்களுக்கு ஒன்றும் தெரியாது போல் அல்லவா உள்ளது தங்கள் பேச்சு"என கூத்தலாக பேசினார்.
"கொலை செய்யப்பட்ட தஞ்சையின் பெரும் வணிகர் செங்காணரின் பெரும் விலை மதிப்பிலான பட்டாடையில் நிரம்பிய மாட்டு வண்டியை முழுவதுமாக தீ வைத்து கொளுத்தியது, தங்களுக்கு தெரியாது என்று கூறுகிறீர்களா?" என்றார் அவருடன் இருந்த வணிகர்.
"வணிகச் சாத்துகள் இங்கே வந்து ஓய்வெடுக்க தொடங்கியதும் அவற்றின் நிலை வெற்றி அறிந்து கொள்வதற்காக நான் அவற்றைப் பார்க்க சென்ற போது தான், கடைசியில் பொருட்களோடு இருந்த மாட்டு வண்டியை யாரோ தீ வைத்து கொளுத்தியதால் எரிந்து கொண்டிருந்தது. நானும் என்னால் முடிந்தவரை விரைவாக சென்றபோதும் தீயின் நாக்குகள் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கி விட்டது. எனவே என்னால் அதனை தடுக்க முடியவில்லை. அவ்வேளையில் தான் தீ வைத்தவனை தேடிக் கொண்டு சத்திரம் வந்தபோது இங்கு நடந்த நிகழ்வுகள் பற்றி என்னால் அறிய முடிந்தது"என வணிகர்களிடம் விளக்கமாக எடுத்து கூறினான் இளம்வழுதி.
"தங்கள் பேச்சைக் கேட்டு நம்பி வந்ததற்கு பெரும் பலனை கைமேல் கொடுத்து விட்டீர்கள். பெரும் வணிகர் செங்காணரை கொடூரமாக கொலை செய்ததோடு அவரது பொருட்கள் அனைத்தும் தீயில் நாசமாகிவிட்டது. இவை யாவற்றையும் நடைபெறாமல் தடுத்து காப்பாற்றி இருக்க வேண்டியது தங்களுடைய கடமை" என்றார் மிகுந்த கோபத்தில்.
"தாங்கள் கூறுவதை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். நடந்த தவறுக்கு மீண்டும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு காரணமானவர்களைக் கண்டிப்பாக கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை உறுதியாக வழங்குவேன். இது சத்தியம் " என்றான் இளம்வழதி.
(தொடரும்.... அத்தியாயம் 39ல்)
No comments:
Post a Comment