Saturday, 1 February 2025

இராஜமோகினி -யாழிசைசெல்வா அத்தியாயம் 39

      

      பொழுது புலர்ந்து புலரிப் பண் பாடும் பூபாள வேளைதனில்.....
     சத்திரத்தின் திறந்த வெளியின் ஓரிடத்தில் தஞ்சைப் பெரு வணிகர் செங்காணரின் இறுதி அஞ்சலி பூரண அரசு மரியாதையுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவரது உடல் எரியூட்டி தகனம் செய்யப்பட்டது. அங்கு கூடியிருந்த வணிகச் சாத்துகளின் வணிகர்கள் பெரும் துயரத்தில் அங்கிருந்த ஒவ்வொருவர் வதனத்திலும் தங்கள் நிலை என்ன ஆகுமோ என்ற கேள்வி ஓடிக் கொண்டிருந்தது ஒவ்வொரு வணிகரின் வதனத்திலும் அத்தனை வெறுப்பும் பயமும் ஒருசேர குடி கொண்டிருந்தது.‌‌ வணிகச் சாத்துகளை தொடர்ந்து தஞ்சை பெருவழியில் நடத்திச் செல்வதா அல்லது மீண்டும் நாகை நோக்கி திரும்பி விடுவதா என்ற ஐயம் அவர்களுக்குள் இருந்திருக்க வேண்டும். அதனை இறுதி அஞ்சலி முடிந்து சத்திரம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த வணிகர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு வந்தார்கள். 

      நடந்து முடிந்திருந்த பெரும் கலவரத்தின் காரணமாக வணிகச் சாத்துக்களின் பாதுகாவலர்கள் சிலர் கையில் வாளும் வேலும் தாங்கிக்கொண்டு வணிகச் சாத்துகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் அங்கிருந்த வண்டிகளை சோதனை செய்து  கொண்டும் அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தங்களுக்குள் முறை வைத்துக் கொண்டு இருவர் இணைந்து ஓர் அணிகளாக மாறி  தத்தமது காவல் பணிகளை மேற்கொண்டிந்தார்கள். 

     "பன் நெடுங்காலமாக தஞ்சை பெருவழியில் வணிகச் சாத்துகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். இது போன்ற அசம்பாவிதம் ஒரு நாளும் நடந்ததே இல்லை" என வணிகச் சாத்துகளை காவல் காத்துக் கொண்டிருந்த  காவலர்கள் இருவரில் ஒருவர் கூறினார். 

      "ஒரே இரவில் எத்தனை பெரிய அசம்பாவிதம் நடந்து விட்டது. நம்மை நம்பி வணிகச் சாத்துகளை தொடர்ந்த வணிகர்கள் நம் மீது வைத்திருந்த நம்பிக்கை நாம் அடியோடு இழந்து விட்டோம்" என்றார் அவருடன் இருந்த மற்றொரு காவலர். 

        "இனி எந்த நம்பிக்கையில் அவர்கள் நம்மை காவல் பணியில் வைத்திருப்பார்களோ என்ற அச்சம் இங்குள்ள அனைவரிடத்திலும் உருவாகிவிட்டது"

      "அவ்வாறான எண்ணம் அவர்கள் இடத்தில் தோன்றுவது இயல்பு தானே"

       "எத்தனையோ ஆயிரம் முறை தஞ்சை பெருவழியில் வணிகச் சாத்துகளின் காவலர்களாக பணி செய்து வந்துள்ளோம். அவற்றுள் ஒரு நாளும் ஒரு தவறும் நடந்ததில்லை. ஆனால் இன்று நடந்த தவறு, நமது பணியில் பெரும் பின்னடைவு" 

      "இப்போது உள்ள பிரச்சனை வணிகச் சாத்துகளின் வண்டிகள் தீவைத்து எரிக்கப்பட்டது மட்டுமல்லாமல், பெரும் வணிகர் செங்காணரின் படுகொலை தான் அவர்களுக்குள் பேரச்சத்தை உருவாக்கியுள்ளது"

     "ஆமாம் அவர்கள் எண்ணுவதும் தவறு ஒன்றும் இல்லையே. பொருட்கள் போனால் வேறு பொருள் வாங்கிக் கொள்ளலாம்.‌ ஆனால் உயிர் போனால் கிடைக்குமா?, பெரும் வணிகரான அவருக்கே அந்த நிலை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் என எண்ணத்தானே செய்வார்கள் மற்ற வணிகர்கள்"

     "இங்கு எத்தனையோ வணிகர்கள் இருக்கும் பொழுது அவர்கள் ஏன் பெரும் வணிகர் செங்காணரைக் குறி வைக்க வேண்டும்?"

   "நீ கேட்கும் கேள்வி நியாயமாகத்தான் உள்ளது"

    "இதில் ஏதோ வேறு சூட்சுமம் உள்ளது"

     "உமக்குத் தெரியாதா என்ன? இன்று தேசம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் பல்வேறு கலவரங்கள், மோதல்கள், இன்னும் பல்வேறு பிரச்சனைகள் எல்லாம் சேர்ந்து சோழ தேசத்தை பெரும் குழியில் தள்ளிக் கொண்டிருக்கிறது.‌ அதனால்தான் சோழ தேசத்தின் மாதாண்ட நாயகர் கருணாகர தொண்டைமானின் உப தளபதி இளம்வழுதியை நாகை நோக்கி அனுப்பி உள்ளார்கள்"

      "அதுதானே மாதண்ட நாயகரின் உப தளபதிக்கு நாகையில் என்ன வேலை என நானும் எண்ணி உள்ளேன். நீ கூறிய பின்பு தான், எனக்கு புரிகிறது. அவர்களுக்குள்ள பல பணிகளை விட்டுவிட்டு, இங்கு வந்து காவல் பணி செய்ய வேண்டிய அவசியம் என்ன?"

     "நடப்பவையும் நடந்து கொண்டிருப்பவையும் எதனையும் வெளிப்படையாக பேசும் நிலையில் இன்றைய தேசம் இல்லை. அவர்களும் எத்தனையோ முயற்சிகளை எடுத்து தேசத்தின் சீர்குலைவை தடுக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அவை அத்தனையும் சதிகாரர்களின் சதி செயல் முன்னால் காணாமல் போய்விடுகிறது"

     "இப்போது இங்கு உள்ள பாடி காவல் அதிகாரி இளம்வழுதியின் சகோதரன் இளம் மாறனும், சதிகாரர்களால் பெரும் அபாயத்தில் சிக்கி அவரது உயிர் நாகையில் உள்ள இராஜராஜர் ஆதுர சாலையில், ஊசலாடிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்"

       "அது மட்டுமல்ல அவரது தந்தை வைத்தியர் குமாரமள்ளரும் அவரது தாய் அன்னை வடிவும் சதிகாரர்களால் கொலை செய்யப்பட்டார்கள் என்றும் நான் கேள்விப்பட்டேன்'

     "எத்தனை பெரிய கொடுமை பார்த்தீர்களா?, ஒரே குடும்பத்தில் அத்தனை நபர்களையும் குறி வைத்து கொன்றிருப்பார்கள் போலிருக்கே. அதன் பிறகும் கூட கொஞ்சம் அஞ்சாமல் தனது உயிரைத் துச்சமாக எண்ணிக்கொண்டு தனது பணியைச் தொடர்ந்து வருகிறார் நமது பாடி காவல் அதிகாரி"

     "இங்குள்ள வணிகர்கள் அவரது குடும்பத்தின் தியாகத்தை கண்டு கொள்ளவே இல்லை. தங்களுக்கு ஒரு பிரச்சனை வந்ததும் அத்தனை மறந்து விட்டார்கள்"

     "நன்றி கெட்ட உலகமாக அல்லவா உள்ளது. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை,  தூற்றாமல் இருக்கலாமே"

     "நீ என்ன புரியாமல் பேசுகிறாய். நடந்ததை மறப்பதுதானே மனித இயல்பு. அதற்கு மாறாக இவர்களிடத்தில் எண்ணுவது பெரும் தவறு"

     "பாடி காவல் அதிகாரியின் தந்தையும் வைத்தியருமான குமாரமள்ளர் ஒரு காலத்தில் சோழ சைன்யத்தின் படைப்பிரிவில் சேர்ந்து பணியாற்றியவராமே"

     "ஆமாம் ஐயா. அவர் மட்டுமல்ல அவரது ஆத்ம நண்பரும்  இராஜ ராஜர் ஆதுரசாலையின் தற்போதைய வைத்தியருமான இருளப்ப மள்ளரும் சேர்ந்துதான் சோழ சைன்யத்தில் பணியாற்றினார்கள். அவர்கள் செய்த வீர சாகசங்களுக்காக மாமன்னர் ‌ இராஜேந்திர சோழர் அவர்களது திருக்கரங்களால் 'பிரம்மாராயன்' என்ற விருது பெயரினையும் 'ஒரு மா" நிலத்தை 'சீவிதமாக' பெற்றுள்ளார்கள். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அவர்களது பேரும் புகழையும்"

     "அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நமது பாடி காவல் அதிகாரியை இங்குள்ள வணிகர்கள் இரவு நிற்க வைத்துக் கேள்வி கேட்டதாக நமது காவலர்கள் கூறினார்கள்"

   "ஆமாம் நானும் அறிந்தேன். வணிகர் இடத்தில் மீண்டும் மீண்டும் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார்கள்"

    "இப்போது வரை வணிகர்களின் கோபம் கொஞ்சம் கூட குறையவில்லையே"

     "இப்போது வரை அவர்களது கோபம் பாடி காவல் அதிகாரி மீதுதான் உள்ளது. அவை எப்போது வேண்டுமானாலும் நம் மீது திரும்பலாம்"

    "அப்படி திரும்பினால் நமது நிலை என்ன?"

     "இது என்ன கேள்வி? நம்மில் சிலரையோ அல்லது நாம் அனைவரையும் வணிகச் சாத்துகளின் காவல் பணிகளில் இருந்து கூண்டோடு ஒழித்துக் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை"

     "அப்படியானால் நமது வாழ்வாதாரம் என்ன ஆவது?"

     "எனக்கும் இதே கேள்விதான் இரவிலிருந்து ஒலித்துக் கொண்டு உள்ளது"

    "இதற்கெல்லாம் ஒரே தீர்வு. நடந்த பெரும் விபரீதத்தை அரங்கேற்றியவர்கள் யார் என கண்டறிந்து அதற்கான தண்டனையை கொடுத்தால் மட்டும்தான்,  அத்தனை பிரச்சினைகளுக்கும் விடிவு கிடைக்கும். அது வரையில் இதற்கு தீர்வே கிடையாது"

    "பாடி காவல் அதிகாரி சதிகாரர்களை கண்டறிந்து பெரும் தண்டனை அளிக்கப் போவதாக சத்தியம் செய்ததாக நமது காவலர்கள் கூறினார்கள்"

    "நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். அவை சீக்கிரம் நடந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது"

       "பொழுது புலர்ந்து இத்தனை நேரம் ஆகிவிட்டது. இன்னும் உணவு உண்ணவில்லை. நமக்கு உணவு ஏதேனும் தயாரித்து உள்ளார்களா?"

     "சமைப்பது போல் தெரியவில்லை. பெரும் வணிகர் செங்காணரின் இறுதி அஞ்சலி முடித்து வந்த வணிகர்கள் எரிந்து கிடக்கும் மாட்டு வண்டியையும் அதில் சாம்பலாய் கிடக்கும் பட்டாடைகளையும் காட்டி காட்டி அவற்றின் மதிப்பை பேசிக்கொண்டு உள்ளார்கள். அவர்களது எண்ணம் முழுவதும் தங்களது பொருட்களை பாதுகாப்பாக எவ்வாறு கொண்டு சேர்ப்பது, அந்தப் பணியில் தமது உயிருக்கு ஏதேனும் பேராபத்து வந்துவிடுமோ என்ற அச்சம்தான் முழுமையாக உள்ளது. நம்மைப் பற்றி யாரும் எண்ணவில்லை"

      "நமது காவலர்களும் நடந்த விபரீதம் குறித்தும் அதனால் நமது பணிக்கு ஏதேனும் குந்தகம் வந்து விடுமோ என்ற கவலையின் மிகுதியால் ஒருவரும் உணவு பற்றி வாய் திறக்கவே இல்லை"

     "நடந்த நிகழ்வுகளை யாராலும் மாற்ற இயலாது. அதற்கான பரிகாரத்தைத் தான் தேட வேண்டும். அதற்காக அப்படியே இருந்தால், அனைத்தும் சரியாகி விடாது. உணவு உண்ணாமல் கிடந்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?"

    "இந்தச் சூழலில் போய் எவ்வாறு அவர்களிடத்தில் உணவைப் பற்றி பேசுவது என்ற தயக்கம் எல்லோரிடத்திலும் உள்ளது"

      " சரி நடப்பது நடக்கட்டும். ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு நமது பணியினை தொடர வேண்டியது தான்'

     " எனது தம்பியும் இந்த காவல் பணியில் சேர்வதற்கு கேட்டுக் கொண்டிருந்தான். நானும் வணிகர் இடத்தில் கேட்டுவிட்டு சொல்வதாக இருந்தேன். இப்போது உள்ள சூழ்நிலையில் அவரிடத்தில் எவ்வாறு நான் போய் கேட்பது"

    "ஏன் அவன் வேறு ஏதேனும் பணியை செய்யலாமே?'
     
     "அவனுக்கு காவல் பணி செய்வது தன் பிடித்திருக்கிறது"

     "இன்று உள்ள சூழ்நிலையில் நமது நிலையே கேள்விக்குறியாக உள்ளது, பிறிதொரு  சமயத்தில் வேண்டுமானால் கேட்டுப் பார்க்கலாம்"

     "அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று மணமகள் பார்த்துக் கொண்டு உள்ளார்கள். அதற்குள் அவனுக்கு ஒரு நல்லதொரு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும்"

     "சோழ சைன்யத்தில் சேர்த்து விடுவது தானே?"

     "அதில் சேர்த்து விடலாம். அதில் சேர்ந்தால் நிலையாக ஓரிடத்தில் இல்லாமல் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு மாறிக்கொண்டே இருப்பான். அதனால் தான் அதில் சேர வேண்டாம் என்று நான் கூறினேன்"

      "நீ கூறுவதும் நல்ல யோசனை தான்"

     அப்பொழுது தஞ்சை பெருவழிச் சாலையில் பெரும் தூசிப்புகை ஒன்று உருவாகி வான்நோக்கி எழுந்து கொண்டிருந்தது.

(தொடரும்...... அத்தியாயம் 40ல்)


No comments:

Post a Comment