🌾48. அக்க சாலை 🌾
நாகையின் நெல்லுக்கடை வீதியைக் கடந்து நான்காவது வீதியாக அமைந்திருந்தது நாணயக்கார வீதி. அவ்வீதியின் கடைக்கோடிதனில் அமைந்திருந்த அக்க சாலையில் பரபரப்பிற்கு எப்போதும் பஞ்சம் இல்லை. பணியாளர்கள் ஏதேனும் ஒரு வேலையை செய்து கொண்டே இருந்தார்கள். ஒரு புறம் பெரும் பெரும் உலைகளுக்கு நெருப்பு வைத்து எரித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு புறம் வெகு தொலைவிலிருந்து கொண்டு வந்திருந்த பிரித்தெடுக்கப்படாத தங்கக் கட்டிகளை பெரும் சுத்தியல் வைத்து உடைத்துக் கொண்டிருந்தார்கள். உடைத்தவற்றை இன்னும் சிலர் பொடி பொடியாக நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். நொறுக்கியவற்றை எடுத்துச் சென்று அவற்றிலிருந்து தங்கத் துகள்களை பிரித்தெடுத்து அவற்றைப் பெரும் பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். தங்கத் துகள்களை எடுத்துச் சென்று அதற்கென வைக்கப்பட்டுள்ள உலைகளில் போட்டு அவற்றை உருக்கி, அதற்காக தயார் செய்து வைத்துள்ள நாணயங்களுக்கான அச்சுகளில் கொண்டு போய் சிலர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு சிலர் கவனமாக உருக்கிய திரவங்களின் மேல் புழக்கத்தில் உள்ள முத்திரைகளை பதித்த வண்ணம் இருந்தார்கள். இப்படியாக பல்வேறு படிநிலைகளுக்கு பிறகு தேவையான நாணயங்களாக அவை பரிமாணம் பெற்றன. இறுதி வடிவம் பெற்ற நாணயங்களின் தரத்தையும் அளவினையும் அக்கசாலையின் பொறுப்பு அதிகாரி நாகப்பன் அவற்றைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்.
உருக்கப்படும் தங்கத் துகள்கள் அனைத்தும் செம்பொன் எனப்படும் ஒரு கழஞ்சு எடை கொண்ட இராஜராஜ மாடை, இராஜேந்திர மாடை, பிருதமாடை, நச்சிமாடை, சாமரமாடை, உத்தமகண்ட மாடை நாணயங்களாக வடித்துக் கொண்டிருந்தார்கள். அவற்றின் தரத்தையும் அளவையும் சரியானபடி உள்ளனவானயென அதனை சோதனை செய்யும் அதிகாரிகள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மாடை என்னும் பொன் நாணயங்கள் மட்டுமின்றி அக்கம், திரமம், கச்சாணம் போன்ற நாணயங்களும் அச்சடித்துக் கொண்டிருந்தார்கள். உலோகங்களை உருக்குவதற்கு மிகுதியான மரங்கள் தேவைப்பட்டதால் சில சமயங்களில் வெகு தொலைவில் இருந்தும் பெரும் வண்டிகளில் மரங்கள் கொண்டு வந்து அம்பரமாய் குவிக்கப்பட்டு கொண்டிருந்தன.
பெரிய பெரிய வண்டிகளில் மரங்களை ஏற்றிக்கொண்டு வந்தவர்கள் அவற்றை இறக்கிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே வந்து இறக்கிய வண்டிகள் சென்று கொண்டிருந்தன. இறக்கிய பெரும் மரங்களை கோடாரியால் துண்டாக்கிக் கொண்டிருந்தனர் சில பேர். வெட்டப்பட்ட விறகுகளைக் கட்டு கட்டாகக் கட்டி உள்ளே எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள் நிறையப் பணியாளர்கள். இன்னும் சிலரோ தயாரான நாணயங்களை பெரும் மரப்பெட்டிகளில் அவற்றை முறையாக எண்ணி அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.
செம்பொன்னால் செய்யப்பட்ட மாடை என்னும் பொற்காசுகள் அங்கிருந்த விளக்கின் ஒளியில் தகதகவென மின்னிக் கொண்டிருந்தன. இராஜராஜர் மாடையில் அவரது பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. அதனைக் கையில் எடுத்து எண்ணிக் கொண்டிருந்த பணியாளரின் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம் குடி கொண்டிருந்தது.
"ஏன் மீண்டும் மீண்டும் இராஜராஜர் மாடையை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?' அவரது அருகில், மற்றொரு பெட்டியில் மாடைகளை அடுக்கிக் கொண்டிருந்தவர் கேட்டார்.
"இந்த அக்க சாலையில் இதுவரை எவ்வளவோ நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இராஜராஜர் மாடையை கையில் ஏந்தும் போது அப்படி ஒரு பெருமிதம் வந்து விடுகிறது"
"இதில் அப்படி என்ன வியப்பை கண்டாய்?"
"வியப்பு நாணயத்தை பார்த்து மட்டுமல்ல. அவரது காலத்தில் எத்தனை மாற்றங்களை செய்து விட்டு சென்றுள்ளார். அவர் புகழுக்கு மகுடமாய் இன்றும் விளங்கும் தஞ்சை பெரிய கோயில் ஒன்று போதாதா?"
"ஆமாம்! ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்"
"தஞ்சை கோயிலில் தனது பெயரை மட்டும் அல்ல கோயிலைக் கட்டிய பெரும் சிற்பியும் கட்டிடக்கலை வல்லுநருமான குஞ்சர மல்லரின் பெயரோடு சேர்த்து, அந்தக் கோயிலுக்காக கொடை கொடுத்தவர்களின் அத்தனை பெயர்களையும் மட்டுமின்றி, அதற்காக உழைத்த அத்தனை நல்லவர்களின் பெயர்களையும், ஒன்று விடாமல் பதிவு செய்துவிட்டு சென்றுள்ளார். தனக்கு பின்னால் வரும் சந்ததிகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரண வீரனாகவும் மனிதனாகவும் வாழ்ந்தவர் அவர்"
"இதனை யார் மறுக்க முடியும்?"
"காலத்தின் கோலத்தை பார்த்தாயா? இத்தனை செய்த அவருக்கு அவமரியாதை உண்டாக்கும் விதமாக அவர் வெளியிட்ட எத்தனையோ நாணயங்களில் ஒன்றான சோழ நாராயணன் நாணயம் இன்று புழக்கத்தில் இல்லை. அதனை யாரோ சதிகாரர்கள் வேண்டுமென்று நமது நாகையில் உள்ள நெல்லுக்கடை வீதியில் பயன்படுத்தி உள்ளார்கள். ஒரு நல்ல அரசன் வெளியிட்ட நாணயத்தை வைத்துக்கொண்டு நாட்டில் நயவஞ்க சதித் திட்டத்தை அரங்கேற்ற முயல்கிறார்கள் சில கயவர்கள். அவர்களுக்கு இவர் வெளியிட்ட நாணயம் பயன்படுகிறதே என்ற ஆதங்கம் தான் என்னுள் குடிகொண்டு உள்ளது"
"சோழநாராயணன் நாணயம் பற்றியும் அதனால் உண்டாக்க முயற்சி செய்த கலவரம் பற்றியும் நான் அறிவேன். எனக்கும் அதை கேட்டதில் இருந்து ஒரே வருத்தமாகத்தான் இருந்தது. நாம் என்ன செய்து விட முடியும்? அதை தடுக்கும் சக்தி நம்மிடம் ஏது?"
"இப்படி அனைவரும் நினைத்துக் கொண்டால் தேசத்தை யார் காப்பாற்றுவது?"
"சரி! இதில் நீ மட்டும் என்ன செய்துவிடப் போகிறாய்? நீ ஒரு சாதாரண பணியாளன் தானே. அதனை மறந்து விட்டாயா? "
"நான் எதையும் மறக்கவில்லை. அதற்காக நடக்கும் குற்றங்களை பார்த்துக் கொண்டு இருக்க என்னால் ஆகாது?"
"அப்படி என்ன குற்றத்தைக் கண்டாய்? இப்படி கொதித்துக் கொண்டிருக்கிறாய்?"
"என்ன குற்றம் என்றா கேட்கிறாய்? கூறுகிறேன், கவனி!" என விரிவாக எடுத்துரைக்க தொடங்கினார். "நெல்லுக்கடை வீதியில் கலவரத்தை உண்டாக்கியவர்கள் அனைவரையும் முன்பிருந்த பாடிகாவல் அதிகாரி இளமாறன் அங்கேயே ஒழித்துக் கட்டினார் அல்லவா?"
"ஆமாம் தெரியும்! அதற்கென்ன?"
"பொறு! அதற்குள் அவசரப்படாதே! அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த சதிகாரர்கள் தொடர்ச்சியாக நாடெங்கும் பல்வேறு கலவரங்களை உண்டாக்கி வருவதாக ஒரு பேச்சு ஊருக்குள் நிலவுகிறது"
"ஊர் என்றால் ஆயிரம் பேசுவார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளலாமா? நம் மக்கள்தான் ஒன்று கிடைத்தால் ஊதிப் பெருக்கி பல நூறாக மாற்றிவிடும் தந்திரம் தெரிந்தவர்கள் தானே. அவர்கள் கூறுவது எல்லாம் பெரிதாக எண்ணிக் கொள்ளலாமா?"
"அப்படி எல்லாம் எல்லாவற்றையும் விட்டுவிட முடியாது. நெருப்பில்லாமல் புகையாது என்பார்களே! உனக்குத் தெரியாதா?"
"முடிவாக நீ என்னதான் கூற வருகிறாய்? சீக்கிரம் அதனைக் கூறு! நிறைய வேலைகள் உள்ளன. சரியான சமயத்தில் அதனை செய்து முடிக்காவிட்டால் அதிகாரி வந்து கடுகடுவென திட்டத் தொடங்கி விடுவார்"
"சரி! சரி! நான் கூறுவதை கவனி! நமது நாணயக்கார வீதியின் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத ஒரு பாழடைந்த வீடு ஒன்று உள்ளது தெரியுமா?"
"ஆமாம்! முன்பு யாரோ ஒரு வணிகர் ஒருவருக்கு அந்த வீடு சொந்தமாக இருந்தது. அவர் தூர தேசங்களுக்கு வணிக நிமித்தம் சென்றவர் நீண்ட காலமாக இதுவரை திரும்பவில்லை. அதனை யாரும் பயன்படுத்தாததால் அப்படியே பாழடைந்து கிடக்கிறது. அதற்கென்ன இப்போது?"
"இந்த வீட்டில் தான் இப்போதெல்லாம் இரவு நேரங்களில் யார் யாரோ வந்து செல்கிறார்கள்"
"ஒருவேளை அந்த வீட்டை வேறு யாரும் வாங்கி பயன்படுத்துவார்களோ என்னவோ?"
"வீட்டின் உரிமையாளர் நேர்மையானவராக இருந்தால் ஏன் ஊர் அடங்கிய பின்பு அதுவும் இரவு நேரங்களில் மட்டும் யாருக்கும் தெரியாமல் வந்து போக வேண்டும். சரி அப்படித்தான் வந்து போகிறார் என எடுத்துக் கொண்டாலும் அங்கு ஏன் பெரிதாக விளக்கு எரியவில்லை?அந்த வீட்டை இன்னும் ஏன் பாழடைந்து கிடக்கச் செய்து உள்ளார்கள்? இதையெல்லாம் யோசிக்க மாட்டாயா?"
"நீ கேட்பதிலும் நியாயமாகத்தான் உள்ளது. சரி! இதில் நீ என்ன அதிசயத்தை கண்டாய்?"
"எனக்கு என்னவோ அந்த வீட்டில் இன்னும் நிறைய பேர் இருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது"
"சரி! அப்படி இருந்தால் நீ என்ன செய்ய முடியும்?"
"அங்கு என்ன நடக்கிறது என கண்டறிந்து பாடிகாவல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது"
"சரியான ஆதாரம் ஏதும் இல்லாமல் நாம் சொல்வதை யார் நம்புவார்கள்? எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்து விடாதே. பின்னால் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளப் போகிறாய். யாராவது எதையாவது செய்து தொலைத்தால், அதை கண்காணிப்பதற்கும் தடுப்பதற்கும் தான் பாடி கவல் அதிகாரி மட்டுமின்றி இன்னும் நிறைய சோழப் பாதுகாவலர்கள் உள்ளார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் நமது வேலையை ஒழுங்காக செய்யலாம்"
"என்னதான் நீ கூறினாலும் என் மனம் என்னவோ ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அப்படி சாதாரணமாக இதனை எடுத்துக் கொள்ள முடியவில்லை. நான் தொடர்ந்து கண்காணிக்க போகிறேன்"
"நான் கூறுவதை கூறிவிட்டேன் அதன்பின் உனது பிரச்சனை. இதில் நான் கூற என்ன இருக்கிறது"
வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த அக்கசாலை அதிகாரி நாகப்பன் இவர்கள் உரையாடலை ஈர்க்கப்பட்டவர், அவர்களிடம் நேரடியாக "இருவரும் எதைப்பற்றியோ காரசாரமாக பேசிக் கொண்டிருந்தீர்களே. என்ன அது?" அறியும் நோக்கத்தில் கேட்டார்.
"அது ஒன்றும் இல்லை ஐயா. வழக்கமாக செய்து வரும் பணிகள் குறித்து தான் பேசினோம்" பிரச்சனைகளிலிருந்து விலகிப் போக என்னும் நபர் கூறினார்.
"இல்லையே! ஏதோ பாழடைந்த வீடு... பாடிகாவல் அதிகாரி.... நெல்லுக்கடை வீதி... சதிகாரர்கள்.... ம்ம்ம்... அப்புறம்... வேறு என்னவோ பேசினீர்களே....! ஞாபகம் வந்துவிட்டது! சோழநாராயணன் நாணயம்..... என பேசிக் கொண்டிருந்தீர்கள்" அவர்கள் வதனங்களை பார்த்துக் கொண்டே கேட்டார்.
பிரச்சனைகள் இருந்து தவிர்க்க எண்ணியவர் தனது விழிகளால் எதுவும் கூற வேண்டாமென பாழடைந்த வீட்டைப் பற்றி கூறியவரிடம் சைகை செய்து கொண்டிருந்தார்.
"என்ன பதிலையே காணோம்? உங்களிடம் தானே கேட்டேன்? உண்மையை கூறுங்கள்?"அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு கேட்டார்.
"நான் கூறுகிறேன் ஐயா' பாழடைந்த வீட்டை பார்த்தவர் தான் பார்த்தவற்றை விரிவாக அக்க சாலை அதிகாரி நாகப்பனிடம் எடுத்துக் கூறினார்.
"எவ்வளவு பெரிய சம்பவம் நடந்துள்ளது. நமக்குத் தெரியவில்லையே" என மனதிற்குள் கூறிக் கொண்டவர் "சரி இருக்கட்டும் இவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் வேறு யாரிடமும் இதைப் பற்றி கூற வேண்டாம். உங்கள் பணிகளைக் கவனியுங்கள்" அவர்களிடம் கூறிவிட்டு வாசலை நோக்கி நகர்ந்தார்.
(தொடரும்..... அத்தியாயம் 49ல்)
No comments:
Post a Comment