🌾68. சதிகாரர்களின் கொடூரத் திட்டம்!🌾
தஞ்சைப் புறம்பாடியின் குடியிருப்புகளுக்கு ஊடாக இருள் சூழ்ந்த அடர்ந்த வனத்தில், பாழடைந்த அன்னை காளியின் கோவிலொன்று இருந்தது. அதன் முன்பாக தீயினை மூட்டிக்கொண்டு மாமிசத்தை அதில் வாட்டிச் எடுத்து சதிகாரர்கள் காளையனும் கார்மேகமும் உண்டு கொண்டிருந்தார்கள். இருவரும் சாப்பிட்டுக் கொண்டே காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களது பேச்சு ஒரு கட்டத்தில் வரம்பு மீறிப் போய் ஒருவரை ஒருவர் தடித்த வார்த்தைகளை பேசிக்கொண்டு சண்டையிட தொடங்கி விட்டார்கள்! அங்கிருந்த பெரும் மரமொன்றில் இதனை அமர்ந்தபடி சதிகாரர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் அழகன்!
"நன்றாக நான் கூறுவதை காதுகளை தீட்டிக்கொண்டு கவனி! அப்போதுதான் நான் என்ன சொல்ல வருகிறேன் என்ற விபரம் உனக்கு முழுமையாக தெரியும! நீ நினைப்பது போல் நான் ஒன்றும் அங்கு வந்த இரண்டு இளம் பெண்களை கண்டு பாழடைந்த மாளிகையில் போய் பதுங்கிக் கொள்ளவில்லை! அவர்கள் யார் என்று விவரம் உனக்கு தெரிந்திருந்தால் இவ்வாறெல்லாம் பேச மாட்டாய்!"என்றான் காளையன்!
"நீ இத்தனை தூரம் அவர்களைப் பற்றி அழுத்திக் கூறுவதில் இருந்து யாரோ முக்கியமானவர்கள் என்ற விவரம் மட்டும் தெரிகிறது! நீ முழு உண்மையை கூறினால் மட்டும்தான் அவற்றின் உண்மை என்னவென்று எனக்கு தெரியும்! அதுவரையில் எனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் பேச்சுக்கு இடம் கிடையாது!"என அவனைப் பார்த்து மீண்டும் கருவிக் கொண்டான் கார்மேகம்!
"உனது எண்ணத்தை மாற்றுவது ஒன்றும் எனது நோக்கம் அல்ல! நடந்த உண்மைகளை கூறுகிறேன்! அவற்றை நம்புவதும் நம்பாமல் போவதும் உனது விருப்பம்! சூரிய வர்மர் மாளிகைக்கு அவரை தேடிக் கொண்டு வந்தவர்கள் வேறு யாரும் அல்ல! சாளுக்கிய நாட்டு இளவரசியும் அவரது தோழியும் சேர்ந்து தான் அங்கு வந்திருந்தார்கள்! இப்போது புரிகிறதா நான் ஏன் அவர்கள் விழிகளில் அகப்படாமல் சூரிய வர்மரை பாழடைந்த மாளிகைக்கு விரைந்து கொண்டு சென்றதன் முக்கியத்துவம் உனக்கு புரிந்திருக்குமே!"
"சாளுக்கிய இளவரசி என்றால் நீ யாரை குறிப்பிடுகிறாய்? சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தன் மகளையா குறிப்பிடுகிறாய்? "
"இல்லை! சூரிய வர்மரை தேடிக்கொண்டுக் கொண்டு அவரது மாளிகைக்கு வந்தது சாளுக்கிய மன்னர் சோமேசுவரன் மகளும் இளவரசியுமான மதி மோகினியும் அவரது தோழி குழலியும் சேர்ந்து வந்திருந்தார்கள்!"
"சாளுக்கிய இளவரசிக்கு சோழ தேசத்தில் என்ன வேளை? அப்படியே வந்திருந்தாலும் அவர்கள் ஏன் சூரிய வர்மரை பார்க்க வேண்டும்? நீ சொல்வதின் அர்த்தம் ஒன்றும் புரியவில்லையே! நீ ஏதோ புதிதாக ஒன்றைக் கூறி என்னைக் குழப்ப முற்படுகிறாய்! அது மட்டும் எனக்கு தெளிவாக தெரிகிறது! கூறுவதில் எள்ளளவும் உண்மை இருப்பதாக எனக்கு தெரியவில்லை!"என அவ நம்பிக்கையாக காளையனை பார்த்து கூறினான் கார்மேகம்!
"உனக்கு அரசியலின் அடிப்படை அறிவு கூட இல்லை என்பது இதிலிருந்து நன்றாக தெரிகிறது! சாளுக்கிய மன்னர் சோமேசுவரனும் நாகையின் மணிக்கிராமத்தார் சூரியவர்மரும் இருவரும் நண்பர்கள். சூரிய வர்மர் அடிக்கடி சாளுக்கிய தேசம் சென்று பல்வேறு வகையான வணிகத்தொடர்புகளை மேற்கொண்டிருந்தார்! அதன் வழியாக அவர்களுக்கு நீண்டதொரு நட்பு உருவாகி இருந்தது! அதன் காரணமாக கூட சூரிய வர்மரை அவர் பார்க்க வந்திருக்கலாம்! "
"நீ கூறியபடியே ஏற்றுக் கொண்டாலும் சாளுக்கிய இளவரசியை கண்டு ஏன் பயப்பட வேண்டும்? அதுதான் எனக்குப் புரியவில்லை?"
"அடே மூடா! உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று எனக்கு தெரியவில்லை! சில அடிப்படை உண்மைகளை நீ புரிந்து கொள்! சாளுக்கிய தேசம் இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொண்டு சகோதரர்களான சோமேசுவரனும் விக்ரமாதித்தனும் ஆளுக்கு ஒரு பகுதிகளாக ஆட்சி புரிந்து வருகின்றனர்! இவ்விருவரும் ஒருவர் ஒருவர் மற்றவரின் பகுதிகளை தாக்கி கைப்பற்றும் எண்ணம் அவர்களுக்கு எப்போதும் உண்டு! அதனால் அவர்களுக்கிடையே அறிவிக்கப்படாத பெரும் பகை உள்ளது! அதுமட்டுமின்றி சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தன் சோழ மன்னர் வீர ராஜேந்திரர் அவர்களின் மகள் மலர்வழி தேவியாரை மணந்ததன் மூலமாக இரண்டு தேசங்களுக்கு இடையே நட்பு ஒன்று உருவாகி இருந்தது! இதன் காரணமாக சகோதரர்களுக்கிடையே வெறுப்பு ஒன்றும் உருவாகி உள்ளது! நாளடைவில் சோழ மன்னர் வீர ராஜேந்திரர் திடீரென இறந்து போய்விட்டதால் சோழ அரியணை வாரிசு இன்றி தவித்துக் கிடந்தது! அப்போதுதான் கீழைச்சாளுக்கிய இளவரசனும் இன்றைய சோழ தேசத்தின் மன்னருமான குலோத்துங்கர் ஆட்சிக்கு வந்து உள்ளார்! இப்படியான சந்தர்ப்பத்தில் சாளுக்கிய இளவரசி சூரிய வர்மரை நாகைக்கு பார்க்க வந்திருப்பது எனக்கென்னவோ பெரியதொரு அரசியல் காரணங்களின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் எனத் தோன்றுகிறது! மேலும் சூரிய வர்மரை கடத்திச் செல்லும் பணியில் யாரும் பார்த்து விடக்கூடாது என நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் கூறி இருந்தார்! அதன்படி தான் நான் நடந்து கொண்டேன்! இப்பொழுது உனக்கு தெளிவாக விளங்குகிறது அல்லவா! இதற்கு மேல் இதனை விளக்கிக் கூற ஒன்றும் இல்லை!"என கார்மேகத்தை பார்த்து கூறினான் காளையன்!
"பெரும் அரசியல் சதிராட்டத்தில் நாம் இப்பொழுது வசமாக சிக்கிக் கொண்டோம் போலும்! இவற்றிலிருந்து எப்படி வெளியேறப் போகிறோம் எனத் தெரியவில்லை!"
"நாம் நமது பணியை சரிவர செய்து விட்டாலே போதும்! மற்றவை எல்லாம் தானாக சரியாகிவிடும்! "
"நாம்தான் தொடர்ந்து நமது இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டுதான் இருக்கிறோமே! பிறகு இதில் கவலைப்பட என்ன இருக்கிறது! அதெல்லாம் சரி நீ தஞ்சைப் புறம்பாடி வந்த கதையை இன்னும் கூறவில்லையே?" என்றான் கார்மேகம்!
"பாழடைந்த மாளிகையில் எனது பணி ஏறக்குறைய முடியும் தருவாயில் தான் நான் அங்கிருந்து வெளியேற்றி தஞ்சை புறம்பாடிக்கு உன்னிடம் அனுப்பி வைக்கப்பட்டேன்! முக்கியமான காரணம் சூரிய வர்மர் கடத்தப்பட்டு நீண்ட நாட்கள் கடந்துவிட்ட பின்பும் பெரியதொரு சலசலப்பு தேசத்தின் உண்டாகிவிடவில்லை! வணிகத்தின் செயல்பாடுகள் முடங்கி கிடந்தாலும் பெரியதொரு அரசியல் குழப்பம் ஏதும் உண்டாகி விடவில்லை! அவனைத் தடுப்பதற்காக சோழ சையனியத்தின் உப தளபதி இளம்வழுதி எப்பொழுது நாகைக்கு வந்து பாடி காவல் அதிகாரியாக பொறுப்பேற்றானோ அதன் பின்பு நிலவரம் ஒரு கட்டுக்குள் வந்துவிடும் சூழல் தொடங்கிவிட்டது! அதனை அப்படியே தொடரவிடுவது தலைவர் கோடியக்கரை மூர்க்கனுக்கு பிடிக்கவில்லை! அதன் காரணமாக அதிரடியான முடிவுகளை அவர் எடுக்கத் தொடங்கி விட்டார்! அதன்படி தான் நான் தஞ்சை புறம்பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்! "
"சரி! நீ இங்கு வந்து விட்டாய்! அங்கு சூரியவர்மர் என்னவானார்? விடுவித்து விட்டார்களா? அதைப்பற்றி உனக்கு ஏதேனும் தகவல் கிடைத்ததா?"
"சூரிய வர்மர் அனேகமாக இந்நேரம் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பார்! அதுதான் தலைவரின் உத்தரவு!"எனக்கூறி பெரிதாக சத்தமிட்டு சிரித்தான் காளையன்!
"நீ என்ன கூறுகிறாய்? சூரிய வர்மரை கொலை செய்து விடவே கூறிவிட்டாரா? இதன் விளைவுகளை நீ அறிவாயா? நீ நினைப்பது போல் சூரிய வர்மர் ஒன்றும் சாதாரண மனிதர் அல்ல! அவருக்கு இத்தகைய துன்பம் நேர்ந்தால் அதன் விளைவு மிகக் கடுமையாக தான் இருக்கும்! அதனை மறந்து விட்டாயா?"என பெரும் பதட்டத்துடன் கூறினான் கார்மேகம்!
"அதையெல்லாம் தலைவர் அறியாமலாய் இருப்பார்! அவரது திட்டமே சோழ தேசத்தில் பெரும் கலவரத்தை உண்டாக்குவது தான்! அதில் அவர் தெளிவாக உள்ளார்! அதற்காக அவர் எதனையும் செய்துவிடும் துணிவில் உள்ளார்! அதன் ஒரு பகுதி தான் என்னை தஞ்சை புறம்பாடிக்கு அனுப்பி வைத்தது! இதனை நீ நன்றாக புரிந்து கொள்!"
"இருந்தாலும் எனக்கு என்னவோ, நாம் தெரிந்து பெரியதோர் ஆபத்தில் சிக்கிவிட்டதாக தெரிகிறது!"
"நாம் எப்பொழுது இந்தப் பணியில் நுழைந்தோமோ அப்போதே நமக்கு உண்டாகும் விளைவுகள் குறித்து ஏற்கனவே நம்மிடம் தலைவர் அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்! கொண்ட கொள்கைக்காக நமது உயிரையும் கொடுப்பதுதான் நமது லட்சியம்! ஏற்றுக்கொண்ட இலக்கை அடையும்வரை அதற்காக எத்தனை இடையூறு வந்தாலும் எதிர்கொள்வோம்! இறுதியில் வெற்றி பெறுவோம்! என நாம் அனைவரும் சத்தியம் செய்து உள்ளதை மறந்து விட்டாயா?"
"இதனை நீ கூறித்தான் எனக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை! அனைத்தும் ஞாபகம் உள்ளது! இருப்பினும் நாம் அவசரப்படுகிறோமோ என்றுதான் தோன்றுகிறது!"
"ஒரு காரியத்தில் இறங்கிய பின்பு இப்படி எல்லாம் யோசிப்பது மிகவும் தவறு! இந்த யோசனை எல்லாம் சத்தியம் செய்வதற்கு முன்பாக இருந்திருக்க வேண்டும்! இப்போது என்ன புதிதாக ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாய்! இவை மட்டும் தலைவருக்கு தெரிந்தால் உனது நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பார்" என காளையன் கார்மேகத்திடம் பயம் உண்டாக்கும் வண்ணம் பேசினான்!
சதிகாரர்கள் காளையனும் கார்மேகமும் பேசியதை அங்கிருந்த பெரும் மரம் ஒன்றில் அமர்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்த அழகனுக்கு இருப்பு கொள்ளவில்லை! "அடேய் அயோக்கியர்களா! எத்தனை துணிவிருந்தால் இப்படி ஒரு காரியத்தை செய்ய துணிவீர்கள்! நாகையின் மணி கிராமத்தார் சூரிய வர்மரை கொடூரமாக கொல்வதற்கு திட்டம் தீட்டியதை கேட்டதே உங்களை கண்டதுண்டமாக வெட்டி எரியும் ஆத்திரம் வருகிறது எனக்கு? மேற்கொண்டு நீங்கள் என்னவெல்லாம் திட்டம் தீட்டி உள்ளீர்கள் என அறியும் ஆவல்தான் உங்களை உயிரோடு இங்கு விட்டு வைத்துள்ளது! எதனையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிடக் கூடாது என உள் மனம் எச்சரிக்கிறது! ஆனால் நீங்கள் பேசுவதை கேட்கும் பொழுது என்னால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் தான் தலை தூக்குகிறது! உடனடியாக சூரிய வர்மர் குறித்து தகவலை பாடி காவல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமே! அவருக்கு எப்படி தகவல் அனுப்பி வைப்பது! முதலில் இந்த சதிகாரர்கள் மேற்கொண்டு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இவர்களை ஒரு வழி பண்ண வேண்டும்! " என எண்ணிக்கொண்டே சதிகாரர்கள் என்ன செய்கிறார்கள் என பார்வையிட்டான் அழகன்!
அதுவரை அன்னை காளியின் முன்பாக இருந்த தீயின் அருகே அமர்ந்து கொண்டு மாமிசத்தை உண்டபடி பேசிக் கொண்டிருந்த சதிகாரர்கள் அப்போது அங்கே காணவில்லை! அங்கிருந்த தீயும் அணைந்து போய் இருளடித்து காணப்பட்டது! தீ மூட்டி இடத்தில் இருந்து சிறிய புகை மட்டும் வெளியேறி வான் நோக்கிச் சென்று கொண்டிருந்தது!
சதிகாரர்கள் எங்கே போனார்கள் என அழகன் மரத்தில் இருந்தபடியே தேடிக் கொண்டிருந்தான்!
(தொடரும்..... அத்தியாயம் 69ல்)
No comments:
Post a Comment