🌾82. சதிகாரர்களுக்கிடையே வாக்குவாதம்🌾
பேசிப் பேசியே கலைத்துப் போயிருந்த சதிகாரர்கள் சுவையான அயிரை மீன் கருவாட்டு குழம்பு ருசித்து சாப்பிட்டு விட்டிருந்தார்கள்!
"அடடே என்ன ருசி! அயிரை மீன் கருவாட்டுக் குழம்பின் ருசியே தனி தான்!"என்றான் காத்தவராயன்!
"ஆமாம் நீ கூறுவது சரிதான்! இப்படிப்பட்ட குழம்பைச் சாப்பிட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது! இன்று எல்லோரும் மிக திருப்தியாக சாப்பிட்டார்கள்!"என்றான் சூரன்!
அப்போது காத்தவராயன் விழிகளில் நீர் தழும்பிக் கொண்டிருந்தது!
"என்னவாயிற்று காத்தவராயா? ஏன் அழுகிறாய்?" என கூறிக்கொண்டே காத்தவராயன் அருகே சென்றான் சூரன்! அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் அங்கு வந்து சூழ்ந்து கொண்டார்கள்!
"என் அம்மாவின் கை பக்குவம் எனது ஞாபகத்திற்கு வந்துவிட்டது! மண்பானையில் அத்தனை சுவையாக அயிரை மீன் கருவாட்டுக் குழம்பு வைத்து கொடுப்பார்! அவரது மறைவுக்கு பின்பு இப்படி ஒரு குழம்பை சாப்பிட்டு வெகு நாளாகவிட்டது!" தனது விழிகளை துடைத்துக் கொண்டு இருந்தான் காத்தவராயன்!
"சரி விடு காத்தவராயா! இங்கு உள்ள ஒவ்வொருவருக்கும் இதேபோல் பல்வேறு நினைவுகள் உள்ளன! அதைப்பற்றிய ஞாபகத்தை கிளறி விட்டாய்! இங்கு உள்ள அனைவரும் அதில் இப்போதே மூழ்கி விட்டார்கள்! " என்றான் சூரன்!
"அதற்கேன் இத்தனை சலிப்பாக பேசுகிறாய்! எல்லோருக்கும் இத்தகைய உணர்வு ஏற்படுவது இயல்பு தானே! நாம் என்ன உயிரற்ற பொருளா என்ன? அத்தனையும் எளிதாக மறந்து விடுவதற்கு? கடமை முக்கியம் தான், அதற்காக அனைத்தையும் துடைத்தெரிந்து விட முடியாது! இங்கு இத்தனை தூரம் சிரமப்படுவதற்கு காரணமே அங்கு தூரத்தில் நமக்காக காத்திருக்கும் குடும்பத்திற்காகத்தான் என்பதை நீ மறந்து விடக்கூடாது! அவர்கள் இல்லையேல் இந்த பணியை எதற்காக? யாருக்காக செய்ய வேண்டும்? என எங்களுக்குள் கேள்வி எழுகிறது?"என மிக ஆவேசத்துடன் பேசினான் மாணிக்கம்!
"அடடே! நான் அப்படி என்ன கூறிவிட்டேன்! தேவையில்லாமல் உணர்ச்சி வசப்படக் கூடாது என்று கூறியது குற்றமா? அப்படி குற்றமாக இருந்தால் இருந்துவிட்டு போகட்டும்! எனக்கு தேவையெல்லாம் கடமையில் கண்ணாயிருக்க வேண்டும்! அதுதான் மிக மிக முக்கியம்! அதற்காக யார் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை!"என எடுத்தெறிந்து பேசினான் சூரன்!
"சூரா.... நீ இவ்வாறு பேசுவது சரியில்லை! இப்படியே தொடர்ந்து நீ பேசிக் கொண்டிருந்தால் நமக்குள் கருத்து வேறுபாடு உருவாகிவிடும். எனவே தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது உனக்கு நல்லது! நாங்கள் யாரும் தேசத்திற்காக பாடுபட வரவில்லை! நாங்கள் ஈட்டும் பொருள் அனைத்தும் எங்கள் வாழ்விற்கும், எங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் பயன்பெடுமே என்ற எண்ணத்தில் தான் இங்கு வந்து இத்தனை சிரமப்படுகிறோம்! இதனைத் தவிர்த்து வேறு எந்தக் காரணத்திற்காகவும் நாங்கள் வந்து இங்கு பணியாற்ற வில்லை! இனி இதுபோல் தேவையின்றி பேசிக் கொண்டிருப்பது நல்லதாகப் படவில்லை!" என ஒவ்வொரு வார்த்தையிலும் அனல் பறக்க பேசிக் கொண்டிருந்தான் மாணிக்கம்!
"சரி சரி! உங்களது விருப்பம் அதுவானால் இருந்துவிட்டு போகட்டும்! அதற்காக தேவை இல்லாமல் குதிக்க வேண்டாம்! எனக்கு தேவை காரியம் நடந்தால் போதும்! நீங்கள் என்னவோ செய்து கொள்ளுங்கள்! அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை" என வேண்டா வெறுப்பாக கூறினான் சூரன்!
"நன்றாக இருக்கிறது உனது பேச்சு! இப்பொழுதுதான் உனது சுயரூபம் எங்களுக்கு நன்கு தெரிகிறது! இத்தனை காலமாக உன்னுடன் பணியாற்றியதை யெண்ணி வெட்கமாகத்தான் உள்ளது! என்ன செய்வது பாழாய்ப் போன சத்தியத்தைச் செய்து விட்டோம்! இனி இவற்றிலிருந்து பின்வாங்குதல் என்பது இயலாத காரியம்! அதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்!"எனக் கூறினான் மாணிக்கம்!
சதிகாரர்கள் பேசிக் கொண்டிருந்ததை விழிகளை மூடி மரத்தில் சாய்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்த இளம்வழுதி இனியும் பொறுமை காக்க வேண்டாம்! இப்பொழுது சதிகாரர்கள் முன்பு தோன்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைத்தான் போலும்! விழிகளை மெல்ல திறந்தவன் கை கால்களை உதறிக்கொண்டு எழுந்து உடலில் சோர்வினை போக்கிக் கொண்டான் இளம்வழுதி!
அதுவரையில் மருத மரத்தில் மயக்கத்தில் சாய்ந்து கிடந்தவன் திடீரென எழுந்ததும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்த சதிகாரர்கள் அவனை நோக்கி தங்கள் விழிகளைத் திருப்பி இருந்தார்கள்!
"அடடே! ஒரு வழியாக விழித்துக் கொண்டாயா? எங்கே அப்படியே முழிக்காமல் சிவலோகப் பதவி அடைந்து விடுவாயோ என்று நினைத்து விட்டோம்?"என நக்கலாக கூறிச் சிரித்தான் சூரன்!
"நானும் கூட அப்படித்தான் நினைத்தேன்! ஒரு வழியாக ஒழித்து கட்டி விட்டோம்! நமக்கு இருந்த தொல்லை ஒழிந்தது! இனி நமது வேலையைப் பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்! என்னடா வென்றால் திடீரென விழிகளை திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்! உனக்கு போகாத காலம் தான்!" என்றான் காத்தவராயன்!
"உறக்கத்திலேயே உயிரை விட்டிருந்தால் வலியில்லாமல் போயிருக்கும்! இப்படி அநியாயமாக முழித்துக் கொண்டு எங்கள் கரத்தால் மடியப்போகிறாய் என நினைக்கும் பொழுது தான் உன்னை எண்ணி பாவமாக உள்ளது!"என இளம் வழுதியை பார்த்து கூறினான் சூரன்!
"அவனிடம் என்ன வெட்டிக்கதை பேச வேண்டி இருக்கிறது? அவனிடம் வேண்டிய தகவலை பெற்று விட்டு அவன் கதையை முடிப்பதை விட்டு வீணாக ஏன் கதைத்துக் கொண்டு உள்ளீர்கள்? ஆக வேண்டியதை பாருங்கள்! நேரத்தை வீணாக்காமல் விரைந்து செயலாற்றுங்கள்!"என தனது நண்பர்களை பார்த்து கூறினான் காத்தவராயன்!
"அடேய்! நீ எதற்காக கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறாய்! மரியாதையாக அத்தனை உண்மைகளையும் மள மளவென்று ஒப்பித்துவிடு பார்ப்போம்! அதுதான் உனக்கு மிகவும் நல்லது!"என இளம்வொழுதியைப் பார்த்து மிரட்டலோடு கூறினான் சூரன்!
சதிகாரர்கள் கூறிய எதனையும் காதில் போட்டுக் கொள்ளாமல் மௌன சாமியாராய் இருந்தான் இளம்வழுதி! அவனது விழிகள் சதிகாரர்களின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தன! மேலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவாறாக யோசித்து விட்டிருந்தான்! அதனை செயல்படுத்த வேண்டிய வேளைக்காக காத்துக் கொண்டிருந்தான் போலும்!
"அடேய்! மௌனச் சாமியாராய் இன்னும் எத்தனை காலத்திற்கு நடிக்கப் போகிறாய்? நீ யார் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்? அதனால் தேவையற்ற நடிப்பை கைவிட்டு அத்தனை உண்மைகளையும் மரியாதையாக கூறிவிடு! அதுதான் உனக்கு நன்மை பயக்கும்!" என மீண்டும் இளம்வழுதியை மிரட்டிக் கேட்டான் சூரன்!
"இவனிடம் இப்படி எல்லாம் கேட்டால் பதில் வராது! அவனைப் பிடித்து அங்குள்ள மருத மரத்தில் பிணைத்து விடுங்கள்! அதன் பின் சாட்டையால் நாலு அடி கொடுத்தால் அத்தனையும் தானாகவே கக்கி விடப் போகிறான்! அதை விடுத்து தேவையில்லாமல் அவனிடம் ஏன் நேரத்தை விரயமாக்குகிறீர்கள்?" என தனது நண்பர்களைப் பார்த்துக் கூறினான் காத்தவராயன்!
"பிறகென்ன? அதன்படியே செய்து விடுவோம்! அதுதான் எனக்கும் சரி எனப்படுகிறது! இவனைப் பார்த்தால் அத்தனை எளிதில் எதற்கும் பணிந்து போகும் ஆள் போல் தெரியவில்லை! நமது கைவரிசையைக் காட்டினால் தான் நமக்கு வேண்டிய தகவல் கிடைக்கும்! அதற்காக நாம் எந்த எல்லைக்கும் போவோம் என்ற உண்மை பாவம் இவனுக்கு தெரியாது போலும்! நம்மிடம் வந்து வகையாக மாட்டிக் கொண்டான்! இவனுக்கு வேண்டிய மட்டிலும் புத்தி புகட்ட வேண்டியது நமது கடமை! அதனை இங்கு சிறப்பாக செய்து விட வேண்டியதுதான்! அதற்காகத்தான் காத்துக் கொண்டுள்ளான் போலும்! ம்ம்ம் ஆகட்டும்"என தனது நண்பர்களை பார்த்து உறுமினான் சூரன்!
சதிகாரர்கள் ஐந்து பேர் இளம்வழுதியை நோக்கி நகர்ந்து விட்டிருந்தார்கள்! அதுவரையில் சதிகாரர்கள் பேசிக் கொண்டிருந்த அத்தனையும் காதில் வாங்கிக் கொண்டாலும் அடுத்தடுத்து தான் செய்ய வேண்டியவற்றை ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததால் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவர்களை எதிர்கொள்ள தயாரானான் இளம்வழுதி!
ஏதோ காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளை பிடிப்பதற்காக செல்லும் நபர்கள் போல் சதிகாரர்கள் இளம்வழுதியை நோக்கி வெறும் கையோடு அவனை சுற்றி வளைத்து இருந்தார்கள்! அவர்கள் மொத்தமாக அவன் மீது விழுந்து அமுக்கிவிட எண்ணினார்கள் போலும்! அவர்களது செயலை முன்பே கணித்து விட்டிருந்த இளம்வழுதி தனது இடது பக்கம் வந்த இரண்டு சதிகாரர்களை பிடித்து குண்டு கட்டாக தூக்கி எரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது வீசி இருந்தான்! நெருப்பில் விழுந்த சதிகாரர்கள் அய்யோ அய்யோ என துடித்துக் கொண்டு நெருப்பிலிருந்து குதித்து எழுந்து அங்கிருந்த மணலில் புரண்டு கொண்டிருந்தார்கள்! இதற்கிடையே இளம்வழுதிக்கு முன்பாக ஒருவனும், அவனுக்கு பின்னால் இருவரும் சேர்ந்து மொத்தமாக ஒரே நேரத்தில் பாய்ந்து சாய்த்து விட முயன்றிருந்தார்கள் சதிகாரர்கள்! பின்னால் பாய்ந்து அமுக்க துடித்த இரண்டு கயவர்களையும் தனது வலிமையான கரத்தால் தூக்கி எதிரே பாய முற்பட்ட சதிகாரன் மீது இருவரையும் வீசி இருந்தான்! திடீரென இரண்டு மலை தன் மீது விழுந்து விட்டதோ என கீழே விழுந்து கடந்த சதிகாரன் நினைத்துக் கொண்டிருந்தான்! கண நேரத்தில் நடந்து முடிந்துவிட்ட தாக்குதலால் மிகவும் வெறுத்துப்போன சூரன் தனது நண்பர்களை பார்த்து விழிகளில் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தான்!
இனியும் வெறும் கையோடு செல்வது பயனை தராது என எண்ணினார்களோ என்னவோ தங்களது வாள்களை உருவிக்கொண்டு இளம்வழுதியை சுற்றி வளைத்து விட்டிருந்தார்கள் அங்கிருந்த மற்ற சதிகாரர்கள்!
சதிகாரர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கணித்துக் கொண்டு அதற்கு ஏற்ப தனது திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கி விட்டிருந்தான் இளம்வழுதி!
"இந்த ஒருவனைப் பிடிப்பதற்கு உங்களால் முடியவில்லையா? இன்னும் எத்தனை நேரம் காத்துக்கொண்டிருப்பது? விரைந்து செயலாற்றுங்கள்?"தனது நண்பர்களை கடிந்து கொண்டான் சூரன்!
மிகுந்த ஆவேசத்துடன் சதிகாரர்கள் இளம்வழுதியைச் சுற்றி வளைத்து விட்டிருந்தார்கள்! அவர்கள் விழிகளில் அங்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பை தோற்கடிக்கும் ஆவேசம் இருந்தது! தவறான திசையில் தூண்டப்பட்டு இருந்த அந்த கோப நெருப்பை எப்படி தன் பக்கம் திருப்பி காரியத்தைச் செயலாற்றுவது என்ற பெரும் யோசனையில் இறங்கி விட்டிருந்தான் இளம்வழுதி! அதனை செயல்படுத்தவும் தொடங்கி விட்டான்!
அதன் பின்னால் நடந்தது அந்த விபரீதம்.....?
(தொடரும்..... அத்தியாயம் 83இல்)
No comments:
Post a Comment