Friday, 7 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 49

🌾49. சதிகாரர்களும் பாழடைந்த வீடும்🌾


      அக்க சாலை அமைந்திருந்த நாணயக்கார வீதி, நன்கு நீண்டு அகன்ற அமைப்பைக் கொண்டு விளங்கியது. நாகையின் பெரும் வணிகர்களின் வீடுகள் அங்கே அமைந்திருந்தன. பல்வேறு அடுக்குகளைக் கொண்ட பெரும் மாளிகைகள் பல்வேறு ஆடம்பரமான வேலைபாடுடன் பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்தோடு விளங்கின.‌ அவை வணிகர்களின் வசதியையும் தரத்தையும் படம் வரைந்து ஓவியம்போல் காட்டிக்கொண்டிருந்தன. இயல்பாகவே மற்ற வீதிகளில் உள்ள பாதுகாப்பை விட மிகக் கடுமையான சட்ட திட்டங்களுடன் சோழ வீரர்கள் பணி செய்து  கொண்டிருந்தார்கள்.‌ 


        முழுமதியாளின் வெண்ணொளியின் ஆக்கிரமிப்பில் நாணயக்கார வீதியில் ஏற்றப்பட்டிருந்த பெரும் விளக்குகளின்  சுடரொளியை புறம் தள்ளியிருந்தாள். ஒரு சில வீடுகளில் ஏற்றப்பட்டிருந்த சிறு விளக்குகள் வானில் மின்னிடும் நட்சத்திரங்கள் போல் அந்த வீதிக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. வீடுகளின் முற்றங்களில் செழித்து வளர்ந்து கிளை பரப்பி நின்று கொண்டிருந்த மரங்களின் அடர்த்தியால், முழுமதியாளின் மோகனப்  புன்னகை தழுவ முடியாத குறையினை, உப்பரிகையில் நின்று கொண்டிருந்த இளம் குமரிகளின் எழில் வதனத்தை கண்டவள், வெருட்டெனக் கிளம்பி ஓடி இருள் மேகத்தை அள்ளி தன்மீது போர்த்திக் கொண்டாள்.


     தலைவனைப் பிரிந்து தவித்துக் கொண்டிருந்த, குமரிகளின் மோக பெருமூச்சு, அனல் வீச்சாய் மாறி நாசியைக் கடந்து வீசிய தணலைத் தாள முடியாமல் ஓடியிருந்தாள் போலும் வெண்மதி !


      பெரும் வண்டிகளில் மாடைகள் நிரம்பிய பெட்டிகளை அக்க சாலையின் பணியாளர்கள் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவற்றின் எண்ணிக்கையை கையில் இருந்த ஓலையில் கவனமாக குறித்துக் கொண்டிருந்தார் அக்க சாலையின் பொறுப்பதிகாரி நாகப்பன்.‌ அவரது விழிகள் வண்டியை பார்த்துக்கொண்டே அந்த வீதியில் இருந்த பாழடைந்த வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்தன. ஏதேனும் மாறுபாடாய் தோன்றுகிறதா என ஒவ்வொரு கணமும் கவனித்துக் கொண்டிருந்தார்.‌ 


     மாடைகளை ஏற்றிச் செல்லும் சோழப் பாதுகாவலர்கள் பெரும் வண்டிகளைச் சுற்றி கையில் வேலும் இடையில் வாளும் கொண்டு விழிப்போடு தங்கள் பணியை மேற்கொண்டு இருந்தார்கள்.‌ அவர்களுக்குள் ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள்.


    மாடைகளை எடுத்துச் செல்லும் பாதுகாவலர் குழுவின் தலைவன் அக்கசாலை அதிகாரி நாகப்பன் அருகே வந்து "வழக்கமான நடைமுறை தானே ஐயா" என ஐயத்துடன்  கேட்டான்.


     "ஏனையா இப்படி கேட்கிறீர்கள்?"


     "வெகு நாட்களாக இல்லாத சம்பவங்கள் எல்லாம் இப்பொழுது நடைபெறுகிறதே அதனால் கேட்டேன்'


     "நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்?"


      "சமீபத்தில் தஞ்சைப் பெருவழியில் பயணத்தை மேற்கொண்ட வணிகச் சாத்துகள் பெரும் இன்னலுக்கு உள்ளானதே, அதைத்தான் குறிப்பிடுகிறேன்"


      காவல் தலைவனின் சந்தேகத்தால் ஒரு கணம் ஆடிப்போன அக்க சாலையின் அதிகாரி நாகப்பன் "தாங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அம்மாதிரியான நிகழ்வுகள் ஏதும் நடைபெறாது. தாங்கள் செல்லும் வழித்தடத்தில் தங்களுக்காக எப்போதும் சிறப்பு பாதுகாப்பு உங்களுக்கு உண்டு தானே?"


    "ஆமாம் ஐயா! வணிகச்சாத்துக்கள் தங்களுக்கென தனி பாதுகாப்பு படைகளை வைத்திருந்தார்கள். அப்படி இருந்தும் அவர்களது பெரும் மதிப்பிலான மாட்டு வண்டியில் இருந்த பொருட்கள் முழுவதுமாக தீ வைத்து எரிக்கப்பட்டது. அத்தோடு இல்லாமல் தஞ்சையின் பெரும் வணிகர் செங்காணர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இத்தனைக்கு பிறகும்  நாம் செம்பொன்னால் செய்யப்பட்ட  மாடைகள் கொண்ட இவ்வண்டிகளை எவ்வாறு பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்போமோ என்ற ஐயம் உருவாவது இயல்பு தானே?" கவலையோடு கூறினார் பாதுகாவலர்களின் தலைவன். 


     "தங்கள் அச்சத்தில் தவறு ஒன்றும் இல்லை! இருப்பினும் தங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதற்கு அனைத்து வசதிகளும் இப்போது உள்ள பாடிகாமல் அதிகாரி இளம்வழுதி செய்து கொடுத்துள்ளார். அதனால் தாங்கள் கவலையின்றி இம்மாடைகளை எடுத்துச் செல்லலாம்" பாதுகாவலர் தலைவனுக்கு தைரியத்தை கொடுத்துக் கொண்டிருந்தார் அக்க சாலையின் பொறுப்பதிகாரி நாகப்பன். 


     "நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் வணிகச் சாத்துக்களின் பாதுகாவலர்களோடு அன்றைய தினம் பாடி காவல் அதிகாரி இளம்வழுதியும் உடன் சென்றிருந்தார் தானே!? பிறகு எப்படி அங்கு பெரும் அசம்பாவிதம் உண்டானது? "


     "தங்கள் கூற்று நியாயமானது தான். அந்த நிகழ்வுக்கு பின்பு நாகையில் பாதுகாப்பு குறித்து பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவை முறையாக பின்பற்றப்பட்டு  வருகின்றன.‌அதனால் தான் கூறுகிறேன். கவலை கொள்ள வேண்டாம்"


     "எப்படி ஐயா கவலை கொள்ளாமல் இருப்பது? இதுவரையில் தஞ்சையின் பெரும் வணிகர் செங்காணரை கொடூரமாக கொன்றவர்களில் ஒருவரைக் கூட பிடித்து தண்டிக்கவில்லையே! அப்படி எனில் அந்த சதிகாரர்கள் இன்னும் சுதந்திரமாக தேசத்தில் உலாவிக் கொண்டு தானே உள்ளார்கள்.‌ அவர்கள் இம்முறையும் வந்து கைவரிசை காட்ட மாட்டார்கள் என எப்படி உங்களால் நம்ப முடிகிறது?"


     "ஆபத்து மிகுந்த இந்தப் பணியை அதற்காக செய்யாமல் விட்டு விட முடியுமா? யாருக்காகவும் எதற்காகவும் தேசத்தின் பொருளாதார நடவடிக்கை தீர்மானிக்கும் இந்த மாடைகளின் பயன்பாடு மிக முக்கியம். இதனை தாங்கள் அறியாதவர் ஒன்றுமில்லையே! கயவர்களுக்காக ஆற்ற வேண்டிய காரியங்களை என்றுமே பின் வாங்கப் போவதில்லை. தேசத்தின் நலனில் அக்கறையும் பொறுப்பும் கொண்ட நபர்களின் ஒருவரான தாங்கள் இவ்வாறு கூறுவது தங்களது குணத்திற்கு அழகல்ல"


      "அறிவேன் ஐயா. இருப்பினும் உள்ளுக்குள் உருவான கலக்கத்தையும் கவலையையும் யாரிடமாவது கூறத்தானே வேண்டும். தங்களிடம் கூறிய பின்பு தான் என்னுள் உருவான கவலை நீங்கி ஒரு தெம்பு என்னிடம் உருவாகி உள்ளது. நல்ல வேளையாக எனக்கு சரியான புத்தி மதியைக் கூறி வழியினைக் காட்டியதற்கு மிகுந்த நன்றி ஐயா! வருபவை எவை யாயினும் எதிர்கொள்ள  நானும் எனது காவலர்களும் தயார் " மனதில் உண்டான ஐயத்தினை விரட்டிய மகிழ்வு அவரது வதனத்தில் ஒளிர்ந்தது. 


      " தாங்கள் கூறிய விவரத்தையும் உங்களது ஐயத்தையும் பாடி காவல் அதிகாரி இளம் வழுதியிடம் கண்டிப்பாக தெரிவித்து தங்களுக்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்க செய்கிறேன்" என பாதுகாவலர் தலைவனிடம் அக்கசாலையின் பொறுப்பு அதிகாரி நாகப்பன் கூறினார். 


      மாடைகள் ஏற்றப்பட்ட அப்பெரும் வண்டி நீண்ட முகத்தடியுடன் ஆறு பெரும் காளைகள் சேர்ந்து அவ்வண்டியை இழுத்துச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தன. மொத்தம் ஐந்து பெரும் வண்டிகளல் மாடைகள் ஏற்றப்பட்டு இருந்தன. வண்டியை ஓட்டி செல்வதற்கு ஒவ்வொரு வண்டிகளிலும் இரண்டு வண்டி ஓட்டிகள் இருந்தார்கள்.  இவ் வண்டிகளுக்கு பாதுகாப்பாக நூற்றிற்கும் மேலான சோழப் பாதுகாவலர்கள் தங்கள் குதிரைகளில் அவ் வண்டியினைச் சுற்றி ஒரு வளையம் போல்  முன்னும் பின்னும் ‌இருந்து பாதுகாத்துச் செல்லத் தயாரானார்கள்.


     "அனைத்து பெட்டிகளும் ஏற்றப்பட்டு விட்டனவா?' பாதுகாவலர் தலைவன் கேட்டான். 


    "மிகச் சரியாக ஏற்றப்பட்டு உள்ளது" அதுவரை மாடைகள் நிரம்பிய பெட்டியை கணக்கெடுத்துக் கொண்டிருந்த அக்க சாலையின் பொறுப்பதிகாரி நாகப்பன் கூறினார். 


     "நன்றி ஐயா! நாங்கள் புறப்படுகிறோம்!" வண்டிகளை புறப்படுவதற்கான சைகையை கொடுத்து தொடங்கி வைத்தான் பாதுகாவலர் தலைவன். 


     ஒவ்வொரு வண்டிகளும் முன்னும் பின்னும் பாதுகாவலர்களை அரணாகக் கொண்டு  நாணயக்கார வீதியிலிருந்து புறப்பட்டன.


     மாடைகள் ஏற்றப்பட்ட வண்டிகளை தொடர்ந்து அக்க சாலையின் பொறுப்பதிகாரி நாகப்பன் நாணயக்கார வீதியில் நடந்து கொண்டிருந்தார். எப்போதும் இல்லாமல் புதிதாக அக்க சாலை அதிகாரி நாகப்பன் பின் தொடர்வதை பார்த்து பாதுகாவலர் தலைவன் புன்னகைத்தபடி சென்றான்.


     ஒரே சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த மாடைகள் ஏற்றப்பட்ட வண்டிகள் நாணயக்கார வீதியை கடந்து சென்றன. அவற்றின் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த அக்கசாலை பொறுப்பு அதிகாரி நாகப்பன் சிறிது தொலைவிற்கு பின்பு வண்டியின் வேகத்திற்கு இணையாக செல்ல முடியாமல் பின்தங்கியிருந்தார். 


       மாடைகள் ஏற்றப்பட்ட வண்டிகளைப் பின் தொடர்வதை ஒரு வாய்ப்பாக எண்ணினாரேயன்றி, அவரது விழிகள் முழுமையாக பாழடைந்த வீட்டையே சுற்றி வட்டமிட்டன.‌ ஒரு வழியாக அந்த வீதியின் பாதி தூரத்தைக் கடந்து விட்டிருந்தார்.‌ 


     அப்போது பாழடைந்த வீட்டின் முதல் அடுக்கில் ஓர் அறையில் விளக்கு ஒன்று எரியத் தொடங்கின. திடீரென அவ் வீட்டின் விளக்கின் ஒளியைக் கண்ட நாகப்பன் தனது நடையை தளர்த்தினார். பாழடைந்த வீட்டின் விளக்கெரிந்த அறையினில் யாரோ நால்வர் அங்கும் இங்கும் நடப்பது தெரிந்தது. உடனே நாகப்பன் பாழடைந்த வீட்டினை கண்காணிக்க எண்ணியவர் நாணயக்கார வீதியில் ஆட்களின் நடமாட்டம் குறையும் வரை மெதுவாக நடந்து கொண்டிருந்தார். வீதியில் நடமாட்டம் குறைந்ததை கண்ட உடனே தன்னை யாரும் கவனிக்கிறார்களா என ஒரு கணம் விழியை சுழல விட்டு பார்த்தவர் அப்படி யாரும் இல்லாததை அறிந்து கொண்டதும்  அங்கிருந்த பெரும் மாமரம் ஒன்றின் மேல் ஏறி அமர்ந்து கொண்டார். 


     மாமரத்தில் இருந்து பாழடைந்த வீட்டினை பார்ப்பதற்கு இலகுவாக இருந்தது. பாழடைந்த வீட்டின் முழு பரிணாமும் தெள்ளத் தெளிவாக அவரால் பார்க்க முடிந்தது. "இந்த வீட்டில் இன்று என்ன தான் நடக்கிறது என பார்த்து விட வேண்டியது தான். இத்தனை காலமாக இதன் வழியே பயணம் செய்திருக்கிறோம் ஆனால் என்றுமே இந்த வீட்டினை மட்டும் கவனிக்கத் தோன்றவில்லை. காரணம் இந்த வீட்டில் அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை. ஆள் அரவமில்லாத வீட்டில் யார் இருக்கப் போகிறார்கள்.‌ அதுவும் இந்த வீடோ மிகவும் பாழடைந்துபோய் காணப்படுகிறது. அதனால் இதன் பேரில் யாருக்கும் பெரிதாக ஈர்ப்பு கிடையாது. ஆகையால்தான் எனது கவனத்தை இந்த வீடு பெறவில்லையோ? இருக்கட்டுமே இன்று என்ன நடக்கிறதென்று பார்த்து விட வேண்டியது தான். நமது பணியாளர்கள் கூறியது மட்டும் உண்மையாக இருந்தால்....... அப்பப்பா.... நினைக்கவே நெஞ்ச நடுங்குகிறது" பலவாறாக தனக்குள் பேசிக்கொண்டார் நாகப்பன்.‌ 


        திடீரென பாழடைந்த வீட்டின் முதல் அடுக்கில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்து விட்டன. அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த அமைதி மறுபடியும் அங்கு உருவாகி இருந்தது. பாழடைந்த வீட்டில் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த நாகப்பன் விழிகளை அங்கிருந்து அகற்றாமல் மாமரத்தின் மேல் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார். அரை நாழிகை கடந்த பின்பும் ஒருவித சலனமும் பாழடைந்த வீட்டில் கேட்கவில்லை. "இன்று என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல் இங்கிருந்து அகலப் போவதில்லை. மாடைகளின் பாதுகாவலர் தலைவன் வேறு பெரும் கலக்கத்தில் தனது பயணத்தை தொடங்கி உள்ளான். அவனுக்கு என்னதான் போதிய தன்னம்பிக்கையும் ஆறுதலையும் கூறி இருந்தாலும் ஏனோ இந்த பாழடைந்த வீட்டில் நடக்கும் சம்பவம் பெரும் புதிராக இருப்பதால் உள்ளுக்குள் ஒரு விதமான கலக்கம் உருவாகிறது. இதுபோல் ஒரு நாளும் தோன்றியது இல்லை. அங்கிருப்பவர்கள் உள்ளே என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமே புரியவில்லையே! பெரும் இருட்டாக கிடக்கிறது.‌ நாணயக் கார வீதி முழுவதும் உள்ள வீடுகளில் விளக்குகள் இரவு நேரத்தில் ஒரு நாளும் அனணந்ததில்லை. போதும் போததற்கு வெண்ணிலவின் வெளிச்சம் வேறு பகலைப் போல் வீதி முழுவதும் விழுந்து கிடந்தாலும் பாழடைந்த வீட்டில் உள்ள பெரும் மரங்களின் ஆதிக்கத்தால் அவ்வீட்டின் வாசல் எப்போதும் இருளடித்து காணப்படுகிறது. அங்குள்ள இருளை மேலும் இவை அதிகரிக்கிறதேயன்றி குறைத்த பாடில்லையே "  என எண்ணிக்கொண்டே பாழடைந்த வீட்டினை பார்த்துக் கொண்டிருந்தார் நாகப்பன்.

(தொடரும்...... அத்தியாயம் 50ல்)

      


No comments:

Post a Comment