🌾73. குழகர் கோவிலும் அர்ச்சகர் தவிப்பும்🌾
குழகர் கோயில் கோபுரம் ஆதவனின் பொன்னிற ஒளியில் பிரகாசமாகத் தெரிந்தது!
வேகத்தோடு கரையை தழுவிக் கொண்டிருந்த அலைகளின் கூச்சல் நெடும் தூரம் வரை எதிரொலித்துக் கொண்டிருந்தது!
ஆள் அரவமற்று தனித்திருந்தது குழகர் கோயில்! எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் அலைகள்! கரை நெடுக நின்றபடி தாலாட்டிக் கொண்டிருக்கும் சுரை புன்னை மரங்கள்! அகன்றுகிளை பரப்பி ஆதவனை உள்ளே விட மறுக்கும் அடர்ந்த காடு! எப்போதுமே இசைத்துக் கொண்டிருக்கும் குயில்களின் பாட்டு! தினமும் தவறாமல் ஆலயத்துக்கு வந்து போகும் அர்ச்சகர்! இதனால் தகித்திருந்தவரை தனித்து கொண்டிருந்தது கோடியக்கரை கடலில் எழுந்த குளிர்ந்த காற்று!
குழகர் கோயில் கோபுரத்தை பார்த்ததும் கோடியக்கரை நெருங்கிவிட்ட மகிழ்வில் புழுதி பறக்க குதிரைகளில் பாய்ந்தோடி வந்து கொண்டிருந்தார்கள் இளம்வழுதியும் அழகனும்! திடும் பிரவேசமாய் தடதடவென்று கோவிலை நோக்கி குதிரைகளின் குளம்போலிச் சத்தம் கேட்டதும் கோவிலின் உள்ளே அமர்ந்திருந்த அர்ச்சகர் பதறிக்கொண்டு வெளியே வந்து பார்த்தபோது குதிரைகளிலிருந்து இளம்வழுதியும் அழகனும் இறங்கி விட்டிருந்தார்கள்!
வயதான அர்ச்சகர் தனது கையை புருவத்திற்கு மேலே வைத்து கோவிலை நோக்கி யாரோ இருவர் வருகிறார்களே எனக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்!
இதுவரை பார்த்திராத புதிய மனிதர்கள் என்பதால் அவரது விழிகள் வியப்பில் விரிந்தன!
"காலை நேரத்தில் திடீரென இவர்கள் எங்கிருந்து முளைத்தார்கள்? வந்திருப்பவர்களின் தோரணைகளைப் பார்த்தால் அரசு அதிகாரிகள் போல் தெரிகிறதே! இதுவரையில் இங்கு யாரும் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே தகவல் அனுப்பி இருப்பார்களே! இவர்கள் என்ன திடீரென முளைத்து உள்ளார்கள்! என்ன காரணமாக இருக்கும்? ஒன்றும் புரியவில்லை! இதோ அவர்களே அருகில் வந்து விட்டார்கள்! அவர்களிடத்தே கேட்டுவிட்டால் போயிற்று" என மனதிற்குள் நினைத்துக் கொண்டே அர்ச்சகர் இளம்வழுதியையும் அழகனையும் எதிர்கொள்ள தன்னை தயார்ப் படுத்திக் கொண்டார்!
"வரவேண்டும் வரவேண்டும்! உங்களைப் பார்த்தால் அரசு அதிகாரிகள் போல் தெரிகிறது? இதுவரையில் நான் உங்களைப் பார்த்ததில்லை! ஏதேனும் அவசர நிமித்தமாக வருவதாக இருந்தால் முன்கூட்டியே எனக்கு தகவல் அளித்துவிட்டு தான் எப்போதும் வருவார்கள்! ஆனால் நீங்கள் திடீரென வந்து நிற்கிறீர்கள்? என்ன காரணமோ?" என அவர்களை பார்த்து மனதில் குமைந்த எண்ணத்தை கொட்டித் தீர்த்தார் அர்ச்சகர்!
"எனது பெயர் இளம்வழுதி! நான் நாகையின் பாடி காவல் அதிகாரி! என்னுடன் வந்திருக்கும் இவர் எனது உதவியாளர் அழகன்! நாங்கள் முக்கிய வேலை நிமித்தமாக இங்கு வந்து உள்ளோம்! எங்களுக்கு ஒரு சில தகவல்கள் தேவைப்படுகிறது! உங்களது பணி முடிந்து விட்டால் அது குறித்து உங்களோடு பேசலாமா?"என அர்ச்சகரிடம் கேட்டான் இளம்வழுதி!
"என்னை மன்னிக்க வேண்டும்! தாங்கள் யார் என தெரியாமல் ஏதேதோ பேசி விட்டேன்! வாருங்கள்! முதலில் ஆண்டவனை தரிசித்து விட்டு வருவோம்! அதன் பிறகு மற்றவற்றைப் பேசிக் கொள்ளலாம்!" என அவர்களை அழைத்துக் கொண்டு சென்றார் அர்ச்சகர்!
தென்னாடுடைய சிவனை இளம்வழுதியும் அழகனும் வழிபாடு செய்துவிட்டு வந்திருந்தார்கள்! அதன்பின் அவர்களை அங்கிருந்த மரம் ஆசனங்களில் அர்ச்சகர் அமரச் செய்ததோடு, அன்று இறைவனுக்கு படைத்திருந்த பொங்கலை எடுத்து வந்து தொன்னையில் வைத்து அவர்களிடம் கொடுத்தார்! நெய், வெல்லம் கலந்து சமைத்த சுவையான பொங்கலை உண்டு முடித்தவர்கள், மீண்டும் சிறிது அர்ச்சகரிடம் கேட்டு வாங்கி இருவரும் உண்டார்கள்!
இருவருக்கும் பொங்கலை பரிமாறி விட்டு, அவர்கள் உண்டு முடிப்பதற்குள் கோவிலில் தனது பணியினை முடித்துவிட்டு அங்கிருந்த மற்றொரு மர ஆசனத்தில் அமர்ந்து கொண்டார் அர்ச்சகர்!
"இப்பொழுது கூறுங்கள்! தங்களுக்கு என்ன தெரிய வேண்டும்?"என அவர்களைப் பார்த்து வினவினார் அர்ச்சகர்!
"இந்தப் பகுதியில் நீங்கள் சந்தேகப்படும் படியாக யாரேனும் உலவுகிறார்களா?"என சுற்றி வளைக்காமல் நேரடியாக தான் கேட்க வேண்டியதை அர்ச்சகர் இடம் கேட்டு வைத்தான் இளம்வழுதி!
"தங்களுக்கு கோடியக் கரை பற்றி நன்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்! எப்பொழுதும் இந்தப் பகுதியில் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இராது! எப்போதேனும் யாராவது ஒரு சிலர் ஆண்டவனை வேண்டுதல் நிமித்தம் பார்க்க வருவார்கள்! அவ்வளவுதான் மற்றபடி இங்கு யாரும் அதிகமாக வருவதில்லை! அடியேன் ஒருவன் மட்டும்தான் தினமும் இங்கு வந்து போகிறேன்!" என தனது நிலையை எண்ணி நொந்தபடி கூறிக் கொண்டிருந்தார் அர்ச்சகர்!
"இங்குள்ள நிலவரம் ஓரளவிற்கு எனக்கு தெரியும்! நான் தெரிந்துகொள்ள நினைப்பதெல்லாம் உங்களுக்கு சந்தேகப்படும் படியாக யாரேனும் இங்கு உள்ளார்களா என்பதை பற்றி மட்டுமே!"என தான் முன்பு கூறியதை நினைவுபடுத்தும் விதமாக அர்ச்சகரிடம் கேட்டான் இளம்வழுதி!
"நீங்கள் கூறுவது எனக்கு புரியாமலில்லை! நான் ஒன்றும் அத்தனை முட்டாள் அல்ல! எனக்குத் தெரிந்தவரையில் அப்படி யாரும் இங்கு இல்லை!"என்றார் அர்ச்சகர். அவரது முகத்தில் கோபத்தின் ரேகைகள் முழுவதையும் படர விட்டுக் கொண்டிருந்தார்!
"சரி அதனை விடுங்கள்! நீங்கள் ஒருவர் மட்டும் தானே இங்கு உள்ளீர்கள்? அப்படி இருக்க பானை நிறைய இருக்கும் இவ்வளவு பொங்கலை என்ன செய்வீர்கள்?"என அர்ச்சகரை பார்த்து கேட்டான் இளம்வழுதி!
"அது வந்து..... ! "என வார்த்தைகள் என்னும் தூண்டிலில் மாட்டிக் கொண்ட மீனினைப் போல் தத்தளித்துக் கொண்டிருந்தார்!
"கூறுங்கள்! எதற்காக இவ்வளவு பொங்கல்? யார் இவ்வளவு பொங்கலையும் உண்பது? இங்குதான் உங்களைத் தவிர வேறு யாருமே இல்லையே? அப்படி இருக்க இதனை என்ன செய்வீர்கள்? "என அடுக்கடுக்காய் அர்ச்சகரை பார்த்து கேள்விகளை தொடுத்துக் கொண்டிருந்தான் இளம்வழுதி!
"ஆண்டவனுக்கு படைத்தது போக மீதியை இங்கு இருக்கும் மற்ற உயிரினங்களான காகம், குருவி, மைனா, பருந்து, கிளி, காட்டு முயல் என எத்தனையோ உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன அவற்றிற்கு படைத்து விட்டுச் செல்வேன்!" என ஏதோ கூற வேண்டுமே என்பதற்காக கூறினார் அர்ச்சகர்!
"தாங்கள் கூறுவது நம்பும் படியாக இல்லையே! வழக்கமாய் எப்பொழுது நடையைச் சாத்துவீர்கள்?"என அர்ச்சகரைப் பார்த்துக் கேட்டான் இளம்வழுதி!
"ஆதவன் நன்கு மேலே ஏறியதும் கோயிலின் நடையை சாத்திவிட்டு, வீட்டை நோக்கி புறப்பட்டு சென்று விடுவேன் இதுதான் இங்கு தினந்தோறும் நடந்து வரும் பழக்கம்" என்றார் அர்ச்சகர்!
"அப்படி என்றால் இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட்டு விடுவீர்கள் அப்படித்தானே?ஆனால் இதுவரை இங்கு உள்ள பொங்கலை நீங்கள் கூறியபடி மற்ற உயிர்களுக்கு படைக்கவில்லையே ஏன்?"எனக் கூறியவன் அர்ச்சகரின் முகத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் இளம்வழுதி!
அர்ச்சகர் என்ன கூறுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டிருந்தார்!
"நீங்கள் அமர்ந்து கொண்டே கூறலாம்! நீங்கள் தான் எந்தத் தவறையும் செய்யவில்லையே! அப்படி இருக்க உங்கள் கால்கள் ஏன் இத்தனை நடுக்கத்தில் உள்ளது!இது இயல்பான செயல் போல் தெரியவில்லையே? நான் வரும்போது நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ளவில்லையே? தங்களுக்கு என்னவாயிற்று? எதுவாயினும் மறைக்காமல் உண்மையை கூறுங்கள்?"என அர்ச்சகரின் முகத்தை கூர்ந்து கவனித்தபடி கேட்டான் இளம்வழுதி!
"அது வந்து.....! " என்றவர் தொண்டையில் சிக்கிக்கொண்டு வெளியே கூற முடியாமல் வார்த்தைகளை மென்று விழுங்கிக் கொண்டிருந்தார்! பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை தொண்டையை கனைத்துக் கொண்டு ஒரு வழியாக பேசத் தொடங்கினார்; "எப்போதும் வழக்கமாக காலை நேர வழிபாட்டுக்கு பின்பு இங்கு வரும் யாரேனும் ஒருவர் பொங்கலை வாங்கிக் கொண்டு செல்வார்கள்! அப்படித்தான் ஒரு நாள் புதிதாக ஒருவன் வந்து பொங்கலை வாங்கி உண்டு விட்டு, பொங்கல் சுவையாக உள்ளது! எனக்குத் தெரிந்தவரையில் இங்கு யாரும் வரப்போவதில்லை! எனவே முழுப் பொங்கலையும் எனக்கே கொடுத்து விடுங்கள்! என அவன் கூறியதால் நானும் போனால் போகிறது என்று அவன் வரும் போதெல்லாம் கொடுத்து அனுப்பி வைப்பேன்! இப்படியாக நாட்கள் உருண்டோடி கொண்டிருந்தன! அதன்பின் ஒரு நாள் கோவிலுக்கு வந்தவன் வைத்திருந்த முழுப் பொங்கலை, பானையுடன் தூக்கிச் செல்ல முற்பட்டான்! வேண்டுமானால் மற்றொரு பாத்திரத்தை கொண்டு வந்து பொங்கலை எடுத்துச் செல்! பானையோடு தூக்கிச் செல்லாதே! எனக்கூறி அவனை தடுத்து விட்டேன்! அவன் அதன்பின் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவன் என்னை கடுமையான வார்த்தைகளால் திட்டி விட்டுச் சென்று விட்டான்! அப்பாடா தொல்லை ஒழிந்தது! என நினைத்துக் கொண்டே வழக்கம் போல் அடுத்த நாள் வழிபாட்டினை முடித்துவிட்டு வந்த போது திடீரென இரண்டு முரடர்கள் என் கழுத்தில் கத்தியை வைத்து, முழு பொங்கலையும் பானையுடன் கேட்டால் கொடுக்க வேண்டியது தானே கிழவா? உனக்கு என்ன அத்தனை கொழுப்பா? இனி தினந்தோறும் எங்களில் யாராவது ஒருவர் இங்கு வருவோம். மரியாதையாக பானையுடன் பொங்கலை கொடுத்து விட வேண்டும்! மறுத்தாயென்றால் இங்குள்ள சுரபுண்ணை காடுகளில் உன்னை வெட்டிப் புதைத்து விடுவோம்! ஆள் ஆரவமற்ற இந்தக் காட்டில் உன்னை தேடுவார் யாரும் கிடையாது! அதனால் வீணாக உயிரை விடாமல், மரியாதையாக நாங்கள் கூறுவது போல் நடந்து கொள்! அப்போதுதான் உன் உடலில் உயிர் மிஞ்சும்! நான் கூறுவதை உன் காதில் நன்றாக வாங்கிக்கொள்! இந்த நடைமுறையில் ஏதேனும் மாற்றத்தை செய்ய நினைத்தால் நான் பேசமாட்டேன் என் கத்தி தான் பேசும்! என என்னை மிரட்டி சென்றார்கள்! நானும் அதன் பின்பு அவர்களிடத்தில் எந்தவிதமான சச்சரவும் வைத்துக் கொள்ளவில்லை! இதுதான் நடந்தது! இந்தக் காட்டில் தனியாக வசித்து வரும் யாரும் மற்ற அனாதை நான்! குழகர் கோயிலில் பணி செய்து என் வயிற்றை கழுவி வருகிறேன்! இந்த வயதான காலத்தில் எனக்கு வேறு வழியில்லை!" என அர்ச்சகர் விழிகளில் கண்ணீரை தாரைதாரையாக வழிய விட்டுக் கொண்டபடி கூறினார்!
"கவலை வேண்டாம் ஐயா! தாங்கள் பயப்படும் படி எந்த இன்னலும் உங்களுக்கு ஏற்படாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்!" என அவரது தோள்களை ஆதரவோடு தழுவிக் கொண்டு கூறினான் இளம்வழுதி!
அதுவரையில் அர்ச்சகர் கூறியதை கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அழகன்: "அந்த முரடர்கள் ஏன் இன்னும் வரவில்லை?"
"அவர்கள் என்னை மிரட்டி சென்ற பின்பு இப்போதெல்லாம் தாமதமாகத்தான் வருகிறார்கள்! ஆனால் கண்டிப்பாக வந்து விடுவார்கள்!"
அதன்பின் யாரோ இருவர் தொலைவில் வரும் காலடி ஓசை கேட்கத் தொடங்கி இருந்தது!
(தொடரும்..... அத்தியாயம் 74ல்)
No comments:
Post a Comment